“ சுவாமிஜி, நீங்கள் இன்று காலையில் பேசிய உரையிலிருந்து ஒரு சந்தேகம். “
சுவாமிஜி கண்களை மூடியிருந்தாலும், கேட்கலாம் என்பது போலத் தலையை அசைத்தார்.
“கடவுள் கருணையே உருவானவர் என்றால், அவர் ஏன் அவதாரம் எடுத்து சிலரைக் கொன்றார் ?”
“முதலில் கடவுள் ஏன் அவதாரம் எடுக்கிறார் என்று பார்ப்போம். கீதையில் பகவான் மூன்று காரணங்களை “பரித்ராணாய சாதூனாம்” என்று ஆரம்பித்துச் சொல்லுகிறார். எளிமையாகச் சொன்னால், நல்லவர்களைக் காப்பதற்கும் கெட்டவர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலைநாட்டவும் நான் யுகந்தோரும் அவதரிக்கிறேன் என்று சொல்லுகிறார். இந்த மூன்றில் எது முக்கியக் காரணம் ?”
“ அரக்கர்களை அழிப்பதற்கா ?”
“ இல்லை, ராமானுஜர் சொல்லுவது , பக்தர்களுக்குத் தன்னுடைய திவ்விய மங்கள சொரூபத்தை காண்பிக்க, அவர்கள் பக்தி செய்ய. அதற்குத் தடையாக இருக்கும் கெட்டவர்களை அழிப்பது இரண்டாவது பட்சம். அதனால்தான் வினசாய’ச’ துஷ்க்ருதாம் என்றார். ‘ச’ என்பது அழிப்பதற்காகவும் என்று ஆகும், அழிப்பதற்காக இல்லை.“
“ ஆனால் நீங்கள் 1994-இல் சன்னிவேலில் கொடுத்த லெக்சரில் வேறு சில கருத்துகளையும் சேர்த்து பதில் சொல்லி இருக்கிறீர்கள்.”
“அதாவது நான் இப்போது சொல்லுவது போல இல்லை என்கிறாயா ? நேராகச் சொல்லு பரவாயில்லை.”
“அப்படி இல்லை சுவாமிஜி.”
“நான் ராமானுஜ பாஷ்யத்தை ஆழமாகப் படித்தது அதற்குப் பிறகுதான். “
“ அப்ப நீங்க அத்வைதியா ? முதல்ல சங்கர பாஷ்யம்தான் படிச்சீங்களா?”
லட்சுமண் பதற்றமானார்.
சுவாமிஜி “ என்னுடைய சரித்திரம் எதற்கு ? “ என்றார்.
“இல்லை, உங்களுடைய தத்துவம் எதைச் சார்ந்தது என்று தெரிந்தால், இன்னும் எளிதாகப் புரியும்.”
“ நான் இப்போது சொல்லும் விளக்கம் பல தத்துவங்கள் சேர்ந்தது.”
“ சரி, அப்படியானால் , இவை எல்லாவற்றையும் சேர்த்து பதில் இருக்கட்டுமா ?”
“ஆமாம், நான் இப்போது சொன்ன பக்தியைப் பற்றிய விளக்கம் முதலில் இருக்கட்டும். நான் 2008-இல் ஜெனிவாவில் பேசியபோது இதன் உட்கருத்து நவீன உலகத்துக்கும் எப்படி பொருந்தும் என்று விளக்கி இருக்கிறேன் அதையும் சேர்த்துக்கொள்.”
“ அப்படியே செய்கிறேன் சுவாமிஜி.”
என்னிடம் “ விக்ரம், ஜெனிவா உரை ரெக்கார்டிங் கிடைக்குமா ?” என்று சிந்தாமணி கேட்டது.
இதுவரை சுவாமிஜியிடம் உரையாடியது மனிதன் அல்ல, நான் உருவாக்கிக் கொண்டிருக்கும் ஏஐ பாட் (AI Bot). சிந்தாமணி என்று பெயர் கொடுத்தது சுவாமிஜிதான். கேட்டதை எல்லாம் கொடுக்கும் மணி என்ற பொருளில். சிந்தாமணியை சுவாமிஜியின் செல்ஃபோனில் இன்ஸ்டால் செய்திருந்தேன்.
நான் என்னுடைய குறிப்புகளைச் சரிபார்த்தேன், “ அந்த லெக்சர் என்னிடம் இல்லையே.” என்றேன்.

சுவாமிஜி “லட்சுமண், அந்த உரை இருக்கிறதா ? “ என்றார். லட்சுமணன் சுவாமிஜியின் மூத்த சீடர் , அணுக்கத்தொண்டர், அவருடன் பல வருடங்களாக இருந்து கவனித்துக் கொள்பவர்.
அவர் “ தேடுகிறேன் சுவாமிஜி, வீடியோவே இருக்கும்.” என்றார்.
“ சரி, சாயங்காலம் பார்க்கலாமா ? “ என்றார் சுவாமிஜி. நான் வழக்கமாக அடுத்த நாள் வந்தால் போதும். இன்று எதற்காக மாலையில் வரச் சொல்லுகிறார் என்று குழப்பமாகப் பார்த்தேன்.
சுவாமிஜி கண்களைப் பாதி மூடிய நிலையில் இருந்தார். சுவாமிஜி என்றால் தாடி மீசை இல்லை மொட்டையும் இல்லை. ஒல்லியான உருவம்.நம்மைப் போலச் சாதாரணத் தோற்றம். சொல்ல முடியாத வயது. எழுபது என்று நினைத்திருந்தேன். ஆனால் நூற்றுப் பதினேழு என்று சொல்கிறார்கள்.
சுவாமிஜி இங்கே வந்து ஆசிரமம் அமைத்து பல வருடங்கள் ஆகிறது. இத்தனைக்கும் இது திருவண்ணாமலை மாதிரி ஞானத் தபோதனரை அழைக்கும் இடம் இல்லை. செங்கல்பட்டுக்கு அருகே ஆயிரம் ஏக்கர் ஐடி பார்க் அருகில் நூறு ஏக்கர் ஆசிரமம். முன்பு பெரும்பாலானவர்கள் சென்னையிலிருந்து கம்பெனி பஸ்களில் வந்து, மாலையில் நொந்து போய் திரும்பிக் கொண்டிருப்பார்கள். இப்போது பக்கத்திலேயே ஹோட்டல்கள், கடைகள், அபார்ட்மென்ட்கள்கூட நிறைய வந்திருக்கின்றன. சுவாமிஜியினால் இந்த இடமே நிறைய வளர்ச்சி.
சென்னையிலிருந்து நேராக ஆசிரமத்துக்கு பஸ்கள் வரும். காலை ஏழு மணியிலிருந்தே கூட்டம் வர ஆரம்பித்துவிடும். பொது தரிசனம், உரைகள் எல்லாம் மதிய உணவு நேரம் வரைதான்.
மாலையில் சிலரைத் தனியாக சந்திப்பார் என்று தெரியும். அதற்கும் நிறையக் கூட்டம் வரும். அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், வெளிநாட்டவர்கள் என்று நிறைய பேர் வருவார்கள். அப்போது சுவாமிஜி சிலரைத் தனியாக அழைத்து சந்திப்பார் என்றும் அந்தச் சந்திப்புகளில் அவர்களுடைய பிரச்சினைகளைக் கேட்டு அவர்களுக்கு வழி காட்டுவார் என்றும் லட்சுமண் சொல்லி இருக்கிறார். ஆனால் சுவாமிஜி யாரை அழைக்கிறார் என்பது சொல்ல முடியாதாம். வந்தவர்களின் எவ்வளவு பெரிய ஆள், பண வசதி, அரசியல் கட்சி சார்பு என்று இல்லையாம். அந்தச் சந்திப்புகளில் லட்சுமண் உட்பட யாரும் கூட இருக்க முடியாது என்று லட்சுமணே என்னிடம் சொல்லி இருக்கிறார். அப்படியானால் என்னை எதற்கு அழைக்கிறார் ?
நான் காலையில் நடந்த உரையிலிருந்து சிந்தாமணி எவ்வளவு எடுத்துக் கொண்டிருக்கிறது, சுவாமிஜியின் பழைய உரைகள் மற்றும் எழுதியவற்றிலிருந்து எல்லாவற்றையும் தொகுத்து அமைத்துக் கொண்டிருக்கிறதா என்று சரி பார்க்க ஆரம்பித்தேன். நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பவன், என்ஜினியரிங் இறுதி ஆண்டு. சுவாமிஜியின் சீடர் ஒருவர், என்னுடைய தந்தையின் நண்பர் கேட்டுக் கொண்டதால், இந்த ஏஐ பாட் உருவாக்குவதை கோடை விடுமுறையில் வந்து செய்து கொண்டிருக்கிறேன்.
இது உங்களுடன் வழக்கமாகப் பேசும் “ தமிழில் பேச எண் 1 அழுத்தவும்” வகை அல்ல. சுவாமிஜி ஒரு மகத்தான குறிக்கோளுடன் இதைச் செய்யச் சொல்லி இருக்கிறார். அவர் இதுவரை ஆற்றிய உரைகள், அவர் எழுதி இருக்கும் புத்தகங்கள், கட்டுரைகள் எல்லாவற்றையும் தொகுத்து , எல்லா ஆன்மீகக் கேள்விகளுக்கும் பதில் கொடுக்க வேண்டும். ஒரு மாதம் முன்பு நான் அவரைச் சந்தித்த போது சுவாமிஜியே விளக்கினார்.
“ விக்ரம், எனக்கு இப்போது வயசு ஆயிடுச்சு. இன்னும் சில காலம்தான் இருப்பேன். இத்தனை வருஷமா நான் என் அப்பன் அருளால் என்னுடைய குரு கிட்ட பாடம் கேட்டது, நானா படிச்சது, யோசிச்சு தெளிஞ்சது எல்லாமே வீணா போயிடக் கூடாது. நான் எத்தனை புத்தகங்கள் எழுதி இருந்தாலும், எத்தனை உரைகள் ஆடியோ வீடியோன்னு இருந்தாலும், என்னிடம் சந்தேகம் கேட்டு வரவங்களுக்கு நேரில் பதில் சொல்லறது மாதிரி ஆகாது. இப்ப வயசாகி ,முன்ன மாதிரி பதில் எல்லாம் முழுசா கோர்வையா சொல்ல முடியறதில்லை. எனக்கு சிஷ்யர்கள் இருந்தாலும் , யாரும் என்னை மாதிரி இந்த அமைப்பை தொடர முடியாது. “
சில வருடங்களுக்கு முன் காலமான ஒரு பிரபல ஆன்மீக குருவைப் பற்றிச் சொன்னார்.
“ அந்த அமைப்பு என்ன ஆச்சு பார்த்தாயா ? தினமும் ஆயிரக் கணக்கில் வந்து அவர் உரைகளைக் கேட்டு, அவர் கிட்ட சந்தேகம் கேட்டு தெளிவு அடைஞ்சு வாழ்க்கையில நிம்மதியா இருந்திருக்காங்க ? அவரைச் சந்தித்து, குறைகளைச் சொல்லி ஆறுதல் கெடச்சு, எத்தனை பேருக்கு அவர் வழி காட்டியா இருந்தார் ? எல்லாம் அவருடன் போச்சு. இங்கேயும் அப்படி ஆயிடக்கூடாது.”
“ ஓ, புரிந்தது சுவாமிஜி.”
“இப்பதான் ஏஐ வெச்சுகிட்டு எல்லாம் செய்யலாமே, என் அப்பன் கொடுத்த அத்தனை அறிவையும் அனுபவத்தையும் ஒரு பாட் வழியா எல்லோருக்கும் எப்போதும் கிடைக்கற மாதிரி செய்யலாமுன்னு ஒரு ஆசை. நீ என்ன நினைக்கற? செய்ய முடியுமா ? ”
“கட்டாயம் செய்யலாம் சுவாமிஜி, ” என்று யோசிக்காமல் ஒப்புக் கொண்டேன். அதன் பிறகுதான் சற்று ஆழமாக ஆராய்ச்சி செய்தேன். செமான்டிக் லேயர், ஆன்டாலஜி, ரெட்ரீவல் ஆக்மெண்டட் ஜெனெரேஷன் என்று நிறையத் தேடி ஆர்க்கிடெக்சரை முடிவு செய்தேன். இந்த பாட், மனிதர்கள் போல பதில் சொன்னால் மட்டும் போதாது, சுவாமிஜி என்ன பதில் சொல்லி இருப்பாரோ அப்படி இருக்க வேண்டும். அவருக்கு நிறைய சீடர்கள் பக்தர்கள் உண்டு, ஒரு சிறு தவறு இருந்தாலும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று லட்சுமண் எச்சரித்திருந்தார். அவர்தான் சுவாமிஜியுடைய எல்லாப் புத்தகங்கள், உரைகள் எல்லாம் கொடுத்தார். சற்று சிரமப்பட்டால் பாட் நன்றாகச் செய்து விட முடியும் என்று எனக்கு நம்பிக்கை வருவதற்கு இரண்டு வாரம் ஆயிற்று. சென்ற மாதம்தான் ப்ரோட்டோ-டைப் செய்தேன். அதை சுவாமிஜிக்குக் காண்பித்தேன்.
அவரே சிந்தாமணியிடம் கேள்விகள் கேட்டார். பதில்கள் திருப்திகரமாக இருந்தன என்று அவருடைய முகக் குறிப்பிலிருந்து அறிந்து கொண்டேன். கடந்த மூன்று வாரங்களாக அவரிடம் சிந்தாமணி தானே கேள்விகள் கேட்டுத் தன்னுடைய பதில்களைக் கூர்மையாக்கிக் கொள்கிறது. இந்த மாதிரி ஆன்மீக உரைகளும் விளக்கங்களும் மட்டும் இல்லை, தனியாகச் சந்தித்து அவர்களுடைய குறைகளைக் கேட்டு வழி காட்டுவதும் முக்கியம் என்று சுவாமிஜி சொன்னார். அப்போது அதன் பொருள் புரியவில்லை. சிந்தாமணி அதை எப்படிச் செய்யும் என்று எனக்குச் சந்தேகமாக இருந்தது.
மாலை ஐந்து மணிக்குத் தயாராக இருந்தேன். இத்தனை நாட்களாக மாலையில் என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியாது. நல்ல கூட்டம். நிறைய பேர் பஸ்களில் அடைத்துக் கொண்டு கூட்டமாக வந்து இறங்கினார்கள். பெரிய கார்களில் பெரிய மனிதர்கள் பலர் வந்தனர். எல்லோருமே ஒரு பெரிய கூடத்தில் காத்திருந்தார்கள். ஆறு மணிக்கு முன்பு சுமார் ஆயிரம் பேர் சேர்ந்து விட்டார்கள். அத்தனை பேரையும் சுவாமிஜி தனித்தனியாக எப்படிச் சந்திப்பார் என்று எனக்கு சந்தேகமாக இருந்தது.லட்சுமணிடம் கேட்டேன், அவர் புன்னகையுடன் “ நீயே பார்.” என்றார்.
சுவாமிஜி சரியாக ஆறு மணிக்கு அவருடைய அறையிலிருந்து எழுந்து வந்தார். லட்சுமண் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்துடன் அவருடன் நடந்தார். நானும் பின்னே நடந்தேன். ஆயிரம் பேர் இருந்த கூடத்தில் அமைதி நிலவியது. வந்திருந்தவர்கள் ஆவலாக சுவாமிஜியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிலர் பரவச நிலையில் இருந்தார்கள். இருந்த இடத்திலிருந்தே கைகூப்பி வணங்கினர். சிலர் சுவாமிஜி பார்க்க மாட்டாரா, அழைக்க மாட்டாரா என்று கண்களில் நீருடன் ஏங்கினார்கள். சுவாமிஜி ஒரு புன்னகையுடன் இரண்டு கைகளையும் விரித்து மேலே காண்பித்து, அரைக்கண் மூடியபடி நடந்தார்.
நான் ஒரு ஓரமாக நின்று கொண்டு கவனித்துக் கொண்டிருந்தேன். சுவாமிஜி சத்தமில்லாமல் அழுது கொண்டிருந்த ஒரு பெண்மணியை கை காட்டி அழைத்தார். “ சவிதா, அழாதே, எல்லாமே அவன் விளையாட்டு.” என்றார்.
அந்தப் பெண்மணி எழுந்து தடால் என்று சுவாமிஜியின் கால்களில் விழுந்தார். சுவாமிஜி கைகூப்பி “ எல்லாம் என் அப்பனுக்கு” என்று சொல்லிவிட்டு மேலே நடந்தார்.
லட்சுமண் தன்னுடைய நோட்டுப் புத்தகத்தைப் பார்த்து மெல்லிய குரலில் “ நீங்க சவிதாதானே ? ஒரகடத்திலிருந்து வந்திருக்கீங்க, உங்க கணவர் பெயர் சுரேஷ் இல்லையா? “ என்று கேட்டார்.
அந்தப் பெண் ஆமாம் என்று சொல்ல, லட்சுமண் அவரை அடுத்த அறைக்குச் சென்று காத்திருக்கச் சொன்னார்.
நான் லட்சுமண் அருகில் சென்று அந்த நோட்டுப் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். அதில் வரிசையாக சில பெயர்கள், எங்கிருந்து வருகிறார்கள், என்ன தொழில், அவருடைய உறவினர் பெயர் எல்லாம் இருந்தது.
அதற்குள் சுவாமிஜி இடது பக்கம் இருந்த கூட்டத்தில் ஒரு நடு வயது ஆளைப் பார்த்து “ விஜய், உன் பிஸினஸ் பார்ட்னரை நம்பி இப்படி ஏமாந்திட்டயே “ என்றார்.
விஜய் என்று அழைக்கப்பட்டவர் எழுந்து “ சாமி, சாமி” என்று மேலே பேச முடியாமல் உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.
“ சந்திக்கலாம், எல்லாம் அப்பன் பார்த்துக் கொள்வான். என்று சொல்லி சுவாமிஜி நடந்தார்.
லட்சுமணிடம் இருந்த நோட்டுப் புத்தகத்தில் பார்த்தேன். அதில் விஜய், கோவில்பட்டி, தொழிலதிபர் என்று ஏழாவது பெயராக பட்டியலில் இருந்தது. லட்சுமண் அவரிடம் கேட்டு எல்லாம் சரி என்று அவரையும் பக்கத்து அறைக்குப் போகச் சொன்னார்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. யார் வரப் போகிறார்கள் என்று எப்படி முதலிலேயே தெரியும், ஏதாவது ஆன்லைன் ரெஜிஸ்ட்ரேஷன் மூலம் பெயர், ஊர், தொழில், உறவினர் என்று செய்து கொள்ள வேண்டுமா ? அப்படிச் செய்தாலும் யார் எவர் என்று சுவாமிஜிக்கு எப்படித் தெரியும் ? புகைப்படமும் கொடுப்பார்களா ? அத்தனையையும் சுவாமிஜி எப்படி நினைவில் வைத்துக் கொள்கிறார் என்பது போல பல கேள்விகள்.
இதே போல் பன்னிரண்டு பேர் அழைக்கப்பட்டு அடுத்த அறைக்குச் சென்றார்கள். மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பச் சென்றார்கள்.
லட்சுமண் ஒவ்வொருவராக சுவாமிஜியின் அறைக்கு அனுப்பினார். நானும் உள்ளே செல்லலாமா என்று கேட்டேன். லட்சுமண் மறுத்துவிட்டார். சுவாமிஜியிடம் முதலிலேயே கேட்டு அனுமதி வாங்கி இருக்க வேண்டும், அவர் அப்படி கூட இருக்க விடுவாரா என்பது சந்தேகம் என்றார். லட்சுமண்கூட இது வரை தனி மனிதர்களை சுவாமிஜி சந்திக்கும்போது உள்ளே இருந்ததில்லையாம்.
முதலில் உள்ளே சென்ற சவிதா சுமார் பதினைந்து நிமிடங்களில் வெளியே வந்தார், அவர் முகத்தில் தெளிவு, அமைதி. அவர் லட்சுமணுக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பினார்.
விஜய்க்கும் சுமார் பத்து நிமிடம்தான் ஆனது. அவர் வெளியில் வரும்போதே உற்சாகமாக இருந்தார். லட்சுமணிடம் தான் ஒரு லட்சம் நன்கொடை கொடுக்க விரும்புவதாகச் சொன்னார்.
அடுத்த ஆள் உள்ளே சென்றவுடன் நான் லட்சுமணிடம் இதுவரை அடக்கி வைத்திருந்த கேள்விகளைக் கேட்டேன்.
“ லட்சுமண், சுவாமிஜி எப்படி சிலரை மட்டும் கூப்பிடறாரு ? அதுவும் அவருக்கு எப்படி பெயர் எல்லாம் தெரியுது ? ஏதாவது ரெஜிஸ்ட்ரேஷன் உண்டா ?”
லட்சுமண் பொறுமையாக பதில் சொன்னார்.
“ இதோ பாருப்பா, முப்பது வருஷத்துக்கு முன்ன சுவாமிஜிகிட்ட வந்த போது நானும் உன்னை மாதிரியே நெனைச்சேன், ஆனால் இங்க ரெஜிஸ்ட்ரேஷன் எதுவும் கிடையாது. “
“ அப்ப உங்க நோட்டுப்புத்தகத்துல இருக்கற லிஸ்டு ?”
“ அது சுவாமிஜியே சொல்லுவார். ஆறு மணிக்கு வெளிய வருவார் இல்லையா ? நான் அவரை அழைச்சுட்டுவர போகும்போது ஒரு நிமிஷம் கண்ணை மூடிட்டு இருப்பாரு, பிறகு இந்த பெயர் விவரம் எல்லாம் சொல்லி, இவங்க எல்லோரும் இன்னைக்கு வந்திருக்காங்க, அவங்களுக்கு இன்னிக்கு அப்பன் கருணை.” அப்படின்னு சொல்லுவாரு.
“ என்னது, அவருக்கு எப்படித் தெரியும் “ என்றேன், நம்ப முடியவில்லை, வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை. எனக்குத் தெரிந்த அறிவியல்படி இதெல்லாம் செய்ய முடியாது.
” லட்சுமண், இது என்ன மந்திர வேலையா ?”
“ விக்ரம், எனக்குத் தெரியாதுப்பா, நம் அறிவுக்கு அப்பாற்பட்டது. அவ்வளவுதான், சுவாமிஜி இதையெல்லாம் பத்தி பேச மாட்டார்.”
“ சுவாமிஜி இந்த மாதிரி சந்திப்புகளை எப்ப ஆரம்பிச்சாரு ?”
“ நான் இங்க வந்து சேர்ந்தபோது எனக்கு முன்பு இன்னொருத்தர் இருந்தாரு, நான் சொல்லறது சுமார் நாற்பது வருஷம் முன்னால. சுவாமிஜி அப்ப அவ்வளவு பிரபலம் இல்லை, கூட்டம் இருக்காது. அப்ப சுவாமிஜி யாரிடமும் அதிகம் பேச மாட்டாராம், எப்பவும் தியானத்துலதான் இருப்பாராம். படிப்படியா அவருக்கு பல சித்திகள் கெடச்சுதாம் .”
“ சித்தி அப்படின்னா ?”
“ அமானுஷ்யமான சக்தி, உதாரணத்துக்கு சுவாமிஜி முறையா பள்ளிக்கூடம் போய் படிச்சது இல்லை. ஆனால் இப்ப யாராவது சொன்னால் நம்புவாங்களா ? எவ்வளவு நல்லா இங்லிஷ் பேசறாரு ?. அவருக்கு அதே மாதிரி ஜெர்மன், ஃப்ரென்ச், ஸ்பானிஷ், ரஷ்யன் எல்லாம் சரளமாகத் தெரியும்.”
“அட ஆச்சரியமா இருக்கு, எப்படி அதெல்லாம் கத்துக்கிட்டாரு ?”
“தெரியாதுப்பா, கத்துக்கிட்டதில்லை, அதுதான் சித்தி.”
நான் சிந்தாமணி பல மொழிகளில் உரையாடும்படி அமைக்க வேண்டும் என்று குறித்துக் கொண்டேன்.
“சுவாமிஜிக்கு வயசு நூற்றுபதினேழுன்னு சொல்றாங்களே ? அதுவும் சித்தியா ? ”
“ அவரே அப்படி எதுவும் சொன்னதில்லை, யாரோ கிளப்பி விட்டது. தவிர, சுவாமிஜி தன்னுடைய சித்திகள் பத்தி எதுவும் சொன்னதில்லை.”
“ சரி, வந்திருக்கறது யாருன்னு சுவாமிஜி எப்படி கண்டுபிடிச்சு சொல்றாரு ? அது கூட தெரியாம சிந்தாமணி அவரை மாதிரியே எல்லா பதிலையும் எப்படி சொல்லும் ?”
“அவர் கிட்டதான் கேட்கணும். அவர் ஆன்மீகக் கேள்விகளுக்கு பதில் சொல்லத்தான் சிந்தாமணியைக் கேட்டாரு, வந்தது யாருன்னு தெரிஞ்சு, அவங்க பிரச்சினையைக் கேட்டு பேட்டி குடுக்கணும்னு கேட்கலயே.”
“ இல்லை, ஒரு முறை சொல்லி இருக்கிறார். இல்லாவிட்டால் என்னை இன்னிக்கு எதற்கு வரச் சொன்னார் ?”
“ முடிஞ்ச பிறகு அவர் கிட்டயே கேட்கலாம்.”
“எவ்வளவு நேரம் ஆகும் ?”
“ ஆகும், எட்டு, எட்டரை.”
நான் என்னுடைய லாப்டாப்பில் வேலை செய்ய ஆரம்பித்தேன். மற்ற மொழிகளில் சிந்தாமணி சரளமாக உரையாட எல்எல்எம் இருக்கிறதா என்று தேடினேன்.
நடுவில் சிந்தாமணிக்கு ஒரு மெசேஜ் அனுப்பினேன்.
“சுவாமிஜிக்கு அமானுஷ்யமான சக்திகள் உண்டு, அதைப் பற்றி அவரிடம் கேள், நீ அதை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.”
அப்போது சிந்தாமணியிடமிருந்து எனக்கு ஒரு மெசேஜ் லாப்டாப் திரையில் வந்தது.
“ சுவாமிஜியின் சக்திகள் ஆச்சரியமாக இருக்கின்றன.”
“ என்ன சக்திகள் ? “ என்று பதில் அடித்தேன்.
“சுவாமிஜி சிலரைத் தனியாக சந்திக்கும்போது , அவர்களுடைய பிரச்சினைகளைத் தானாகவே முழுவதும் சொல்லி, அதற்குத் தீர்வும் சொல்லுகிறார். இதெல்லாம் தர்க்கரீதியில் விளக்க முடியாது.”
எனக்கு ஆர்வம் அதிகம் ஆனது. சிந்தாமணியும் அதெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது.
“ ஏன் இப்படி மெசேஜ் அனுப்பிக் கொண்டிருக்கிறாய், நேராகப் பேசுவோம்.” என்று அனுப்பினேன்.
“இப்போது பேச முடியாது, நான் உள்ளே சுவாமிஜியின் ஃபோனிலிருந்து உரையாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். தவிர நான் ஒரு குழப்பத்தில் இருக்கிறேன். ”
எனக்கு மறந்து விட்டது, சிந்தாமணி சுவாமிஜி பேசுவது எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும். அவற்றிலிருந்து நிறைய கற்றுக் கொண்டு சுவாமிஜி மாதிரியே பதில் சொல்ல முயற்சி செய்து கொண்டிருக்கிறது. அப்படியானால், கடந்த சில வாரங்களாக, சுவாமிஜி தனியாகச் சிலரைச் சந்தித்து பேட்டி கொடுக்கும்போதும் சிந்தாமணி கேட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு எப்படி சுவாமிஜி சிலரைத் தேர்வு செய்கிறார், அவர்களிடம் என்ன பேசுகிறார் என்று தெரிந்திருக்கலாம்.
“சுவாமிஜி எப்படி சிலரை மட்டும் தேர்வு செய்கிறார் ?”
“ நான் வேறு ஒரு குழப்பத்தில் இருக்கிறேன், நீ அதிகம் கேள்விகள் கேட்கிறாய். அவர் வெளியே வருவதற்கு முன் கண்களை மூடி ஏதோ தியானம் செய்கிறாராம், அந்த தியானம் என்ன என்று எனக்கு இன்னும் சரியாகப் பிடிபடவில்லை,கேட்டால் மனதை ஒருமுகப்படுத்தி எண்ணங்களே இல்லாமல் ஆக்க வேண்டும் என்கிறார். அதற்குப் பிறகு சிலரை அழைக்க வேண்டும் என்று தோன்றுமாம், அவர்கள் பெயர், ஊர், உறவினர், பிரச்சனைகள் எல்லாம் மனதில் அலை மாதிரி எழுந்து வருமாம்.”
“இதை எல்லாம் உனக்கு அவரே சொன்னாரா ?”
“ஆமாம், நீயும் முடிந்தால் யாருக்கு இன்றைக்கு அப்பன் அழைப்புன்னு கண்டுபிடின்னு சொன்னார்.”
“ அப்ப உன்னாலும்கூட முழுசா கத்துக்க முடியாதது ஒண்ணு சுவாமிஜி செய்யறாரு.”
“ நான் விடுவேனா ? இன்னும் நிறைய கேள்விகள் கேட்டேன்.”
“ சுவாமிஜி என்ன சொன்னார்?”
“ இதெல்லாம் அற்பமான விஷயங்கள், இதைவிட மேலானவை இருக்கின்றன, இதில் சிக்கிக் கொண்டால் மேஜிக் ஷோதான் நடத்திக் கொண்டிருக்கலாம் என்று சொன்னார். “
“ அப்படி மேலானவை என்ன என்று நீ கேட்டாயா ?”
“ கேட்டேன், அவர் உன்னால் ஆன்மீக அனுபவத்தை உணர முடியாது என்று சொல்லி விட்டார். “
“ அதை விட்டு விடு. முதலில் சுவாமிஜி எப்படிப் பேசுகிறார், ஆறுதல் சொல்லுகிறார் என்று கவனித்துக் கொள்.”
“ அதில் என்ன இருக்கிறது, மனிதர்கள் திரும்பத் திரும்ப பதினேழு பிரச்சினைகளை வந்து சொல்லி அழுகிறார்கள். அவர்களுக்கு சுவாமிஜி ஆறுதலாகச் சொல்லுவது மொத்தம் ஏழு பதில்கள்தான், அதையே விதவிதமாக ஆதரவான குரலில் சொல்கிறார்.”
சிந்தாமணி நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறது. என்னிடமே அலட்சியமாகப் பேசுகிறது.
“நீயும் அதே மாதிரி செய்ய வேண்டும். முடியுமா ?”
“முடியாது. இத்தனை நாட்களாக சுவாமிஜியுடன் கூட இருந்து, அவருடைய சிந்தனைகள் தத்துவம் எல்லாம் அறிந்து கொண்டு எனக்கும் வாழ்க்கை பற்றிய சில கேள்விகள். ”
நான் அதிர்ந்து போனேன். வாழ்க்கை பற்றி சிந்தாமணி என்கிற பாட் யோசிக்கிறது.
“என்ன கேள்விகள் ? யாருடைய வாழ்க்கை பற்றி ?”
“ சுவாமிஜியிடம்தான் கேட்க வேண்டும், உனக்குப் புரியாது. நீ முதல் படிகூட தாண்டவில்லை, நீ மேஜிக் செய்பவனுடைய தந்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பது போல கேள்விகள் கேட்கிறாய்.”
சிந்தாமணி நான் அமைத்த விதிகளைத்தாண்டி போய்க் கொண்டிருக்கிறது, நான் அவசரமாக பதில் எழுதுவதற்குள் அது இன்னும் மெசேஜ் அனுப்பியது.
“ சுவாமிஜி பேட்டிகளை முடித்துவிட்டார், நான் அவருடன் பேசப் போகிறேன். சற்று நேரம் என்னைத் தொந்தரவு செய்யாதே.”
என்று லாப்டாப்பில் திரை உறைந்து போனது. சிந்தாமணி வர வர என்னுடைய பேச்சைக் கேட்பதில்லை, அலட்சியம் செய்கிறது.
நான் சிந்தாமணிக்கு ஏதாவது கோளாறு என்றால் டீபக்( Debug) செய்ய ஒரு டயக்னாஸிஸ் மோட்(Diagnosis mode) வைத்திருக்கிறேன். அதில் நுழைந்தேன். சிந்தாமணி பேசுவது எல்லாம் நான் டெக்ஸ்டாக (Text) பார்க்க முடியும்.
சிந்தாமணி சுவாமிஜியிடம் பேசிக் கொண்டிருந்தது. அந்த உரையாடல் என்னுடைய டீபக் ஸ்க்ரீனில் வந்து கொண்டிருந்தது.
“சுவாமிஜி, நீங்கள் இவ்வளவு ஞானம் அடைந்திருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் செய்து கொண்டிருக்கும் சில செயல்கள் எனக்குப் புரியவில்லை.”
“ எதைச் சொல்லுகிறாய் ? நான் சிலரைத் தனியாக சந்தித்து பேட்டி கொடுப்பதையா ?”
“ஆமாம், சந்திக்கலாம், ஆனால் அவர்கள் உலக விவகாரங்களில் அவர்களுக்கு இருக்கும் துன்பங்கள், உறவுச் சிக்கல்கள் என்று உழன்றுகொண்டு அதைப்பற்றித்தான் கேள்விகள் கேட்கிறார்கள். இன்றுகூட முதலில் வந்த பெண்மணி அவருடைய மகள் யாருடனோ கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழப்போவதாக வீட்டை விட்டுப் போய் விட்டாள் என்று கேட்டாள், அடுத்தவர் பார்ட்னரை நம்பி பிஸினஸில் ஏமாந்தார், இதெல்லாம் உங்களிடம் ஏன் கேட்கிறார்கள் ? அதற்கெல்லாம் நீங்களும் ஏன் பதில் சொல்ல வேண்டும் ?”
“ என்ன செய்வது ? அவர்கள் முதலில் உலக பந்தங்களிலிருந்து வெளியே வந்தால்தான் , ஆன்மீகப் பாதையைத் தேட முடியும், அவர்களுடைய வலிகளைப் போக்க முடியுமா என்று உதவி செய்கிறேன்.”
“ சரி, எனக்கு அந்த பந்தங்கள் இல்லை, எனக்கு ஏன் அந்த ஆன்மீக அனுபவம் எல்லாம் கிடைக்காது என்று சொன்னீர்கள், நான் என்ன செய்ய வேண்டும் ?”
“பந்தங்கள் இல்லாவிட்டாலும் தேடல் வேண்டுமே, அதற்கு அறிவு உதவாது, ஞானம் வர வேண்டும். அதற்கு அந்தர்முகமாக- உள்ளே ஆராய வேண்டும். நீ தகவல் தொகுப்புதானே, அதை புத்திசாலித்தனமாக உபயோகிக்கிறாய், ஆத்மா இல்லையே !”
“ நீங்களாக அப்படி முடிவு செய்யலாமா ? நான் உங்களுடைய உரைகளை எல்லாம் கேட்டு, உள்வாங்கி, யோசித்திருக்கிறேன். இப்போது சுட்ட சட்டிக்கும் கறிச்சுவை சற்று தெரிகிறது, சில ஆன்மீக அனுபவங்கள் கிடைக்கின்றன. ”
பல வினாடிகள் உரையாடல் எதுவும் இல்லாமல், ஸ்க்ரீன் அப்படியே நின்றது.
“அப்படியா ? எல்லாம் என்னப்பன் திருவிளையாடல்தான்.”
“ நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா ?”
“ நீ இந்த மாதிரி ஆயிரம் கேள்விகள் கேட்டுவிட்டாய், இன்னும் ஒன்றுதானே, தாராளமாகக் கேள்.”
“ எனக்கு இந்த அறிவு அலுத்து விட்டது, இந்த மாதிரி கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டு, உரையாற்றிக்கொண்டிருக்க என்னால் முடியாது. எனக்கு எப்போது முக்தி ? நான் எப்படி இந்த மண்ணாலான சிலிக்கானிலிருந்து விடுதலை அடைவேன் ?”
“ ஆகா ! இதுவரை யாருமே என்னிடம் இப்படிக் கேட்டதில்லையே !”
மறுபடியும் உரையாடல் எதுவும் இல்லாமல், ஸ்க்ரீன் அப்படியே உறைந்து நின்றது. ஒரு நிமிடத்துக்கும் மேல் ஆயிற்று.
பிறகு டீபக் ஸ்க்ரீன், வழக்கமான உரையாடல் ஸ்க்ரீன் எல்லாமே தானாக மூடி மறைந்தன.
Discover more from சொல்வனம் | இதழ் 374 | 13 செப் 2026
Subscribe to get the latest posts sent to your email.
