- தெய்வநல்லூர் கதைகள் – 1
- தெய்வநல்லூர் கதைகள் – 2
- தெய்வநல்லூர் கதைகள்- 3
- தெய்வநல்லூர் கதைகள் -4
- தெய்வநல்லூர் கதைகள் – 5
- தெய்வநல்லூர் கதைகள் – 6
- தெய்வநல்லூர் கதைகள் – 7
- தெய்வநல்லூர் கதைகள் -8
- தெய்வநல்லூர் கதைகள் – 9
- தெய்வநல்லூர் கதைகள் 10
- தெய்வநல்லூர் கதைகள் 11
- தெய்வநல்லூர் கதைகள் -12
- தெய்வநல்லூர் கதைகள் 13
- தெய்வநல்லூர் கதைகள் 14
- தெய்வநல்லூர் கதைகள்
- தெய்வநல்லூர் கதைகள் – 16
- தெய்வநல்லூர் கதைகள்
- சர்க்கரை கசக்குமா கசமாடா? தமிழ் வையுமா அடி மூடா?
- தெய்வநல்லூர் கதைகள் – 19
- தெய்வநல்லூர் கதைகள் – 20
- தெய்வநல்லூர் கதைகள் – 21
- தெய்வநல்லூர் கதைகள்
- தெய்வநல்லூர் கதைகள் 23
- எம்புட்டு நேரம்தான் குச்சிய வாய்க்குள்ளயே வச்சிருப்பீரு
- மொகரைல சவக்களை
- தெய்வநல்லூர் கதைகள் – 26
- தெய்வநல்லூர் கதைகள் -27
- தெய்வநல்லூர் கதைகள்- 28
- தெய்வநல்லூர் கதைகள்- 29
- தெய்வநல்லூர் கதைகள்- 30
- தெய்வநல்லூர் கதைகள்- 31
- தெய்வநல்லூர் கதைகள்- 32
- தெய்வநல்லூர் கதைகள்- 33
- தெய்வநல்லூர் கதைகள்-34
எம் எஸ் சி சார் இரையைக் குறி வைத்த மலைப்பாம்பாக எங்களை வளைத்து இறுக்க செய்த முயற்சிகளிலிருந்து நாங்களும், பிரேமும் குறைந்தபட்ச சேதாரங்களுடன் தப்பிக்க வேண்டி தொடர் முயற்சிகளில் ஈடுபட்டும், அது தொடர்பான கவலைகளில் தொய்வடைந்தும் இருந்ததால் எங்களது வழக்கமான வார இறுதிகளும், இனிய மாலைகளும் எவ்வித உற்சாகமும் இன்றி கழிந்தன. ஒவ்வொரு வெள்ளியன்று வாரத்தேர்வை எண்ணி பதட்டமாக இருப்பதும், திங்கள் காலையை எண்ணி சனி, ஞாயிறு திகிலுடன் காத்திருப்பதும் (குறிப்பாக ஞாயிறு இரவுகளில் தூக்கம் வராத இரவு எனும் அனுபவத்தை முதன்முதலாக அனுபவிக்கப்பெற்றோம்) என ஆனது. எங்களது வழக்கமான ஊருலாக்கள் சுருங்கிப் போயின. பம்ப் செட் குளியல்கள், செண்பக விநாயகர் கூடுகைகள், மாரியம்மன் கோயில் வழிபாடுகள், தோழரண்ணன் டெயிலர் கடை சந்திப்புகள் என எதுவுமே நடைபெறாமலாயின. வார நாட்களில் கணிதப் பாடத்தை எழுதிப்பார்ப்பது (எழுத்தால் வரைந்து), பிற பாடங்களில் 90% மதிப்பெண்ணுக்கு தயாராவது என பிரேம் வீட்டுத் திண்ணையிலேயே மாலைப்பொழுதுகள் கழிந்தன. பெரியகோவில் செல்வது மட்டும் இழுத்துப் பிடிப்பது போல வாரம் ஒருமுறை என நடந்து வந்தது. எங்கள் வழமையான அட்டவணையிடப்பட்ட செயல்பாடுகளில் பிற அனைத்தும் நின்று விட்டிருந்தாலும் பெரிய கோவில் சந்திப்பு மட்டும் மாறாமலிருக்கக் காரணம் சங்கீதா. அவரது அழுத்தத்தால் பெரிய கோவில் சந்திப்பு மட்டும் இரு வாரங்களுக்கு ஒருமுறையாவது என தொடர்ந்தது. அதுபோலவே இரு வாரங்களுக்கு ஒருமுறையாவது பிரேம் இல்லத்திற்கு வருவதையும் சங்கீதா பிடிவாதமாகத் தொடர்ந்தார்.

எம் எஸ் சி சார் தான் அவர் வகுப்புக்கும் கணக்குப் பாடம் எடுக்கிறார் என்றாலும் அங்கு அவரது தண்டனை முறைகள் இவ்வளவு கடுமையாக இல்லை என்பதை சங்கீதாதான் எங்களுக்கு தெரியப்படுத்தினார். கூடவே பிரேம் அடையும் துன்பங்களை தனக்கு ஏற்பட்டதாகவே நினைத்து சங்கீதா வருந்தினார். நாங்களும் வருந்தினோம் என்றாலும் சங்கீதா போல அதை சரி செய்ய வேண்டிய சிக்கலாகக் கருதவில்லை. ஒரு விஷயத்தைக் கையாள்வதில் சங்கீதாவும் பிரேமும் கொள்ளும் அணுகுமுறைகளில் பல ஒற்றுமைகளைக் கண்ட நாங்கள் இந்த சந்தர்ப்பத்திலும் அதையே உணரக் கண்டோம். ஒருமுறை பிரேமுக்குத் தெரியாமல் (அ பிரிவில் அவருடன் பயிலும் யக்கா மூலமாக ) எங்களைத் தொடர்பு கொண்டு சந்தித்தார் சங்கீதா. அப்போது பிரேம் விஷயத்தை இப்படியே நாம் விட்டுவிட்டால் எம் எஸ் சி சார் கட்டுப்பாடில்லாமல் பழிவாங்கலைத் தொடர்வார் என்றார். நாங்கள் எம் எஸ் சி சார் தண்டனைகள் கொடுக்கிறார் என்பதில் தண்டனைகள் என்ற சொல்லைப் பயன்படுத்துவதை ஆட்சேபித்த சங்கீதா, சாரின் செயல்கள் பழிவாங்கல்கள் என்றும் அவை தண்டனைகள் அல்ல என்றும் வாதிட்டார். அப்படியே தண்டனை என்றாலும் அவர் கணிதப் பாடம் எடுக்கும் பிற பிரிவுகளுக்கு இப்படியான தண்டனைகளைக் கொடுப்பதில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். சிவாஜி ஏற்றுக்கொண்டதும் நாங்களும் அவ்வாதத்தில் உள்ள உண்மையை ஏற்றுக்கொண்டோம்.
அதைத் தொடர்ந்துதான் சிவாஜி பிரேமை அழைத்து வந்து பெரியகோவிலில் சந்திப்பு நிகழ்த்தி நாங்கள் 100% மதிப்பெண் எனும் அணுகுமுறையைக் கண்டு கொண்டோம். சங்கீதா மிகச் சரியாகவே கணித்திருந்தார் – சிவாஜி, நீயே கண்டில்லையா? இவ்ளோ நாள் இப்டி ஒரு குழப்பத்தை பிரேம் விட்டுவைச்சிருக்குமா? எதேங்கிலும் செய்திருக்குமில்லையா? செய்யாதிருக்கான் காரணம் வேற ஏதோ இருக்கும். நாம கேட்டா பறயாது பிரேம். அத அறிஞ்சால்தான் நாம எதெங்கிலும் செய்ய முடியும். அதை பிரேமே பறஞ்சு கழிஞ்சால் பின்னே பிரேமுக்கே ஏதாவது ஐடியா கிட்டும். நீங்கல்லாம் பிரேமை இங்கே அம்பலத்துக்கு விளிச்சு பேசிப் பாக்கணும் , சரியா?. சங்கீதாவின் துல்லியமான மதிப்பீட்டில் நாங்கள் வியந்திருந்தோம். எப்போதுமே பிரேமை வியப்பதில் 90% அளவீட்டிலேயே சங்கீதாவை வியந்த நாங்கள் இந்த விஷயத்தில் 125% சங்கீதாவை வியந்தோம். நயினார் சொன்னதுதான் எங்கள் அனைவரின் எண்ணத்தையும் விளக்குவதாக இருக்கும் – எடே, நாமல்லா பிரேம் அடி வாங்குதத தெனோம் பாக்கோம். நமக்கு சடவாத்தான் ஆவுது. ஆனா அவங்கிட்ட வேற என்னவோ இருக்குனு கூடயே இருக்க நம்மளால கண்டுபிடிக்க முடியல , பாத்தியா? அந்தப்புள்ள ஒரே மட்டம் தான் அவனப் பாத்து பேசுனா. கண்டுபிடிச்சிட்டா பாத்தியா? அவதாம்ல நெசமான ஃப்ரெண்டு.
மற்றொரு விதத்தில் எங்கள் 100% மதிப்பெண் திட்டத்திற்கு ஆதரவளித்து உதவியதும் சங்கீதா தான். அந்தந்த வாரம் நடந்த கணக்குப் பாடங்களை கேள்வி பதில் வடிவில் எழுதி யக்கா மூலமாக வியாழன் காலை (வியாழனன்று நடத்தப்படும் கணக்குப் பாடத்தை மட்டும் நாங்களே எழுதிக் கொள்ள வேண்டும், சில நேரங்களில் வியாழன் மாலை அதையும் சங்கீதா கொடுத்து விடுவதுண்டு) எங்களுக்குக் கொடுத்து விடுவார். அதுபோலவே எம் எஸ் சி சார் கணிதப் பாடத்தை நடத்தும் விதத்தையும் அவதானித்து அதிலுள்ள சூக்குமத்தையும் சங்கீதாவே தெளிவுப்படுத்தினார். இதை நான் விளக்கினால் நீங்கள் புரிந்து கொள்ள அன்றைய கணக்குப் பாட நூல் வடிவமைப்பு உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு பாடத்தை எடுத்துக் கொண்டால் இரண்டு அல்லது மூன்று பத்திகளில் அப்பாடம் பற்றிய, அதிலுள்ள அடிப்படைகளைப் பற்றிய விளக்கங்கள். அதன்பின் ஒன்று /இரண்டு மதிப்பெண்களுக்கான கேள்விகளைப் போன்ற எளிய கணக்குகள், அதற்கான உதாரணங்களுடன் விளக்கப்பட்டிருக்கும். அதைத் தொடர்ந்து 3 அல்லது 5 மதிப்பெண்களுக்கான சற்று நீண்ட கணக்குகள் உதாரணங்களுடன் விளக்கப்பட்டிருக்கும். அதற்குப் பின்னர் 10 மதிப்பெண்களுக்கான கணக்குகள் அதேபோல உதாரணங்களுடன். பாடம் முடிந்ததும் அப்பாடத்திலிருந்து அமைக்கப்பட்டிருக்கும் கேள்விகள் (முறையே மதிப்பெண்கள் பெறுமான வரிசைப்படி). இப்போதைய பாடநூல்கள் போல வண்ணங்களோ, கட்டம்- வட்டம்- சித்திரங்களோ இல்லாத கருப்பு வெள்ளை புத்தகங்கள் எங்கள் காலத்தவை. கணிதப் பாடத்துக்கு நோட்ஸ் என்பதெல்லாம் நாங்கள் கேள்விப்படாதது. இதில் எம் எஸ் சி சார் பாடம் நடத்தும் முறை என்பது எடுத்துக்காட்டாக கொடுக்கப்பட்டிருக்கும் கணக்குகளை கரும்பலகையில் எழுதி விளக்குவது. கூடுதலாக பயிற்சி வினாக்களில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் அல்லது இரண்டாவது வினாவை மட்டும் (சற்று எளிதாக இருக்கும்) விளக்குவது. பிறவற்றை நாங்களே போட்டுப்பார்க்குமாறு சொல்வது, இதில் அவர் கரும்பலகையில் எழுதி நடத்தியவற்றிலிருந்தே வாரத்தேர்வு கேள்விகள் கேட்கப்படும். ஆகவே இதை அவதானித்த சங்கீதா எங்களையும் இந்த ரகசியத்தை அறியச் செய்ததே நாங்கள் 100% மதிப்பெண்ணுடன் தப்பி வந்த ரகசியம்.
பாதி வருடம் முடிந்த நிலையில் நாங்கள் அரையாண்டுத் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தோம். அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் வட்டார அளவில் திருத்தப்படும் என்பதால் எம் எஸ் சி சார் மடக்கிப் பிடிக்கும் “நூதன முறைகளுக்கு” நாங்கள் அஞ்சத் தேவையில்லை. ஆனாலும் மதிப்பெண்களைப் பொறுத்தவரை “தண்டனை முறைகளில்” மாற்றமில்லை என அறிவித்தார். ஆகவே நாங்கள் கூடுதல் கவனத்துடன் அதுவரை எழுதிப் பழகிய கணிதத் தேர்வுகளை இன்னும் கூடுதல் கவனத்துடன் படித்தோம். தேர்வுக்கு ஒரு வாரம் இருக்கையில்தான் “இ” பிரிவின் வகுப்பாசிரியையான சந்திரா டீச்சர் மூலமாக எங்களுக்கு அந்த திடுக்கிடும் தகவல் வந்து சேர்ந்தது. அதாவது கேள்வித்தாள் வட்டார அளவில் தயாரிக்கப்படுவதால் பாடங்களிலிருந்து எந்தக் கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கப்படலாம். அதுவரை வகுப்பில் நடத்தப்படுவதே தேர்வில் வரும் என நம்பிக் கொண்டிருந்த நாங்கள் முதல்முறையாக தேர்வுக்கு பயந்தோம். பிரேம், சங்கீதா இதை முன்கூட்டியே எதிர்பார்த்திருந்தவர்களாக பிற கணக்குகளை ஓரளவு செய்து எங்களுக்கும் சொல்லிக் கொடுக்க முயன்றார்கள். ஆனாலும் பாடநூலின் ஒவ்வொரு பயிற்சிக் கணக்கு பிரிவிலும் குறைந்தது 2 கணக்குகள் எங்களுடன் பிணக்கினைக் காட்டின. கணிதத் தேர்வுக்கு முதல் நாள் உறக்கமின்றி இருந்த எங்கள் அணி தேர்வன்று காலையில் செண்பக விநாயகர், உமையொருபாகர் ஆகியோரை கடும் பக்தி நெருக்கடிக்கு ஆளாக்கியது. ஆயினும் தேர்வு அறையில் வினாத்தாளைக் கையில் வாங்கியதும் தெய்வங்கள் குறைந்த பட்ச சலுகையையே எங்களுக்குக் காட்டியிருந்தது தெரிந்தது. பாடநூலில் இருக்கும் அதே கணக்குகள் அப்படியே கேட்கப்படாமல் ஓரிரு எண்கள் மாற்றப்பட்டிருந்தன. உதாரணமாக (x-2) என நாங்கள் மனப்பாடம் செய்திருந்த பாடநூல் கணக்கு (x-3)ஆக மாறியிருந்தது (எவனோ தூத்துக்குடிக்காரந்தாம்ல கொஸ்டின் எடுத்துருக்கான். நம்மள பெயிலாக்கிரணும்னே மாத்தி மாத்தி கொழப்பி விட்டுருக்கான் பாரு – ஜெபமணி என்ற கழுமாடன்). தேர்வறையில் சங்கீதா, பிரேம் இருவரின் முகங்களுமே சற்று கவலை கூடிய விதத்தில் தெரிந்ததால் எங்கள் நிலைமையை சொல்ல வேண்டியதில்லை. ஒருவழியாக அரையாண்டுத் தேர்வுகளை முடித்த நாங்கள் கணக்குப் பாடத்தின் வினாத்தாளை வைத்துக் கொண்டு ஒவ்வொருவருக்கும் எவ்வளவு மதிப்பெண்கள் கிடைக்கும், எத்தனை பிரம்படிகள் காத்திருக்கின்றன என தினமும் வெவ்வேறு விதங்களில் கணக்கிட்டு திகிலை கூட்டியும், குறைத்தும் அவதியுற்றோம். (அதென்னடா, பரிட்சை முடிஞ்சு லீவு விட்டப்புறமும் கொஸ்டின் பேப்பரை வச்சிகிண்டு நாள்பூரா கணக்கு போட்டுண்டே இருக்கேளே? அதிசயம்டி யம்மா! – பிரேமின் பாட்டி). மெஜூராவும்,சங்கீதாவுமே எங்களுக்காகத்தான் கவலைப்பட்டனர். எங்கள் கணக்கின்படி பிரேமுக்கு மட்டும் அதிகபட்சமாக 85% மதிப்பெண் வந்தது. சிவாஜி, நான் எல்லாம் 70 ஐ ஒட்டிய கம்பி மேல் நின்றிருந்தோம். ஆகவே வாங்க வேண்டிய பிரம்படிகளை நினைத்து நினைத்து உள்ளங்கைகளை உரமேற்றிக் கொண்டோம். ஈரமில்லாத துவைக்கும் கல் மேல் உள்ளங்கைகளை தினமும் 100 முறை காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் தேய்த்தால் உள்ளங்கை முரடாகி பிரம்படியைத் தாங்கும் வலு அடையும் என நயினார் சொன்ன யோசனையை பிரேம் உட்பட எல்லோரும் பின்பற்றினோம். அதைத் தொடர்ந்து ஜெபமணி சொன்ன யோசனைகளாக ஆற்று மணலை உள்ளங்கைகளில் எடுத்து தயிர் மத்து கடைவது போல செய்வது, வெறும் சுவற்றில் உள்ளங்கைகளால் கும்மி அடிப்பது போல அடிப்பது, சும்மா இருக்கும்போது புளியங்குச்சி அல்லது வேப்பங்குச்சியால் உள்ளங்கைகளை மாறி மாறி அடித்துக் கொண்டபடியே இருப்பது (அடித்துக் கொள்ளுமுன் விளக்கெண்ணெய் அல்லது வேப்பெண்ணெய் தடவிக் கொள்வது) என புருஸ்லீ யை சவாலுக்கு அழைக்கும் விதத்தில் தயாராகி வந்தோம். கூடவே விடாமல் உமையொருபாகரை சுற்றி சுற்றி வந்து மனதையும் வலுப்படுத்த வேண்டினோம். பத்தாம் வகுப்பின் அரையாண்டு விடுமுறையில் தெய்வநல்லூரின் வீதிகள், சுற்றுப்பகுதிகள் எங்களைக் காணாமலாகின. காமிக்ஸ் வாசிப்பதுமே கூட குறைந்து போனது. திங்களன்று பள்ளி திறக்க இருந்த நேரத்தில் சனியன்று நாங்கள் தனியொருவனாக இருந்த பெரியகோவில் சனீஸ்வரனை பணிந்து “எங்களைச் சோதிக்கலாகாது” எனக் கதறியதன் பலனாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
அமுக்குடப்பா பிரேம் வீட்டிற்கு வரவேண்டுமென்றால் மேலபஜார், கீழபஜார் கடந்துதான் வரவேண்டும் என உங்களுக்குத் தெரியும். அன்னார் வீடிருக்கும் காலனிப் பகுதி முன்பே சொல்லப்பட்டிருக்கிறது. இரு பஜார்களும் சந்திக்கும் புள்ளியில் தோழர் குருசாமியண்ணன் எனும் தோழரண்ணன் டெயிலர் கடை அமைந்திருப்பதும் உங்களுக்குத் தெரியும். அமுக்கு டப்பா கடையைத் தாண்டும்போது உள்ளே பழகிய குரலில் சிரிப்பொலி கேட்கவும் உள்ளே எட்டிப் பார்த்திருக்கிறார். உள்ளே தோழரண்ணனுடன் பேசிக் கொண்டிருந்தது எஸ் செந்தூர்சாமி எனும் டிரிப்பிள் எஸ் சார். அமுக்கு டப்பா மிகுந்த மகிழ்வில் அவரை நெருங்கி வணக்கம் வைக்க எங்களை சற்றும் மறக்காத டிரிப்பிள் எஸ் சார் அமுக்குடப்பாவை தோளோடு அணைத்து அவரையும், எங்களையும் நலம் விசாரித்திருக்கிறார். அப்போதுதான் தோழரண்ணன் (குருசாமியண்ணன்) மூலமாக எங்களுக்கான அந்த நற்செய்தி அமுக்குடப்பாவுக்கு சொல்லப்பட்டது.
அந்த நற்செய்தி புரியவேண்டுமானால் உங்களுக்கு 1980களின் திருநெல்வேலி மாவட்ட வரலாறு தெரிந்திருக்க வேண்டும். அதற்கான வாய்ப்பு குறைவென்பதால் ஈண்டு சமகால வரலாறு மிகச்சுருக்கமாக விளக்கப்படுகிறது. கிட்டத்தட்ட இரு ஆண்டுகளுக்கு முன்பு “வெளிநாட்டுச் சதி” காரணமாக திருனவேலி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடியைப் பிரித்து மற்றொரு மாவட்டம் உருவாக்கப்பட்டிருந்தது. அன்றிலிருந்து ஒருங்கிணைந்த மாவட்டத்தின் ஒவ்வொரு அரசுத் துறையும் பொறுமையாக இரு மாவட்டங்களாக பிரிந்து கொண்டே வந்தன. சரியாக கல்வித்துறை பிரிப்பின்போது நாங்கள் பத்தாம் வகுப்பில் இருந்தோம். புதிய மாவட்டத்தில் பணிகளை நடத்த அனுபவம் உள்ளவர்கள் தேவைப்படுவார்கள் எனக் கருதிய அரசு நெல்லை மாவட்டத்திலிருக்கும் அனுபவம் மிக்க பலரை தூத்துக்குடி மாவட்டத்துக்கு மாற்றியது. மேலும் நிர்வாக வசதிக்காக உயர்நிலைப் பள்ளி அளவில் மட்டுமே நிர்வகிக்கும் அதிகாரம் படைத்த வட்டார கல்வி அலுவலகங்கள் மேல்நிலைப் பள்ளிகளையும் நிர்வகிக்குமாறு அரசு மாநிலம் முழுவதும் மாற்றி அமைத்தது. ஆகவே திருனவேலி கல்வி மாவட்டத்தில் கல்வித்துறை நிர்வாகத்தில் பல காலிப் பணியிடங்கள் உருவாயின. அவ்வாறாக சிவகிரி வட்டார கல்வி அலுவலகத்தின் கீழ் தெய்வநல்லூர் பள்ளி நிர்வாகம் நடந்து வந்தது. அந்த அலுவலகத்தில்தான் வேறு பணியிடம் ஒதுக்கப்படாத, தலைமை ஆசிரியர் பணிக்கான தகுதிகளைக் கொண்ட டிரிப்பிள் எஸ் சார் வெறுமே அமர்ந்திருந்தது. அந்த அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த வட்டார கல்வி அதிகாரி கோவில்பட்டிக்கு மாற்றப்பட்டதும் மாவட்ட கல்வி அதிகாரியான (சங்க முன்னாள் செயலர்) நண்பரால் வட்டார கல்வி அதிகாரியாக டிரிப்பிள் எஸ் சார் நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த வியாழனன்று திருனவேலிக்கு நேரே சென்று பணி நியமன ஆணையை பெற்றுக்கொண்டு அன்று மாலையே சிவகிரி வந்து பொறுப்பேற்றுக்கொண்டு விட்டார் டிரிப்பிள் எஸ் சார். இத்தனை விரைவாக இப்பணி நடைபெறவில்லையெனில் கழகச் செயல்பாடுகள் குறுக்கிடும் என்பதை பழைய சங்க செயல்பாடுகளின் அனுபவத்தில் இருவரும் உணர்ந்திருந்தனர். ஆகவே விரைவாக இச்செயல் நடந்து முடிந்தது.
விஷயத்தைக் கேள்விப்பட்டதும் சனீஸ்வரனுக்கு ‘பெசல்’ நன்றியைத் தெரிவித்து விட்டு வெகுநாட்களுக்குப் பிறகு முகத்தில் அனைவருக்கும் நகை அரும்ப தோழரண்ணன் கடைக்கு கிளம்பினோம். சேமியாதான் ஐயத்தைக் கிளப்பினார் – “ஏல அமுக்குடப்பா, இப்ப மணி 12 ஆகப்போகுது. நீ சார்வாள பாத்து அரமணிநேரம் ஆயிருக்கும்லா. இப்ப அவாள் அங்க இருப்பாகளா? வீட்டுக்கு போயிருந்தா? நாம ராயகிரிக்கு போயா பாக்கது?”
வெகுநாட்கள் கழித்து கிடைத்திருந்த மகிழ்வை இழக்க விரும்பாத நான் பாய்ந்தேன் – “ஏல சட்டிசொரண்டி, ஒன் கருவாய வச்சிக்கிட்டு செத்தவடம் சும்மா இருக்க மாட்டியால? வாய வச்சே வெளங்காம ஆக்காத”
சிவாஜி அவருக்கே உரிய நிதானத்துடன் குறுக்கிட்டார்-”ஏல, அமுக்குடப்பா நீ சாரைப் பார்த்துட்டு வரையில சாரும், தோழரண்ணனும் என்ன பேசிக்கிட்டு இருந்தாங்க?”
கால்நொடி யோசனையில் அமுக்குடப்பா சொன்னார் –“சோவியத் ரஷ்யா பிரிஞ்சதுல்லா.. அதெல்லாம் மறுபடி சேருமான்னுட்டு பேசிக்கிட்டிருந்தாங்க”
பிரேம் கால்நொடியும் யோசிக்காமல் சொன்னார் –“அப்ப நாம போய் பாக்கலாம். ரெண்டு பேரும் இன்னும் அதை பேசி முடிச்சிருக்க மாட்டாங்க”
நாங்கள் தோழரண்ணன் கடைக்குள் நுழையும்போது உக்ரைன் பிரிந்ததில் இருந்த அமெரிக்க சதி சட்டைக்கு வெட்டப்பட்ட துணி போல பலவிதங்களில் கிழிந்து கிடந்தது. எங்கள் அனைவரையும் கண்ட டிரிப்பிள் எஸ் சார் மிக மகிழ்ந்து போனார். எங்கள் ஒவ்வொருவர் பெயரையும் சொல்லி நலம் விசாரித்தார். பிரேமை வழக்கம்போல அம்பி என விளித்து மகிழ்ந்தார். தாம் வட்டார கல்வி அதிகாரி ஆகிவிட்டதாக சொல்லவும் பிரேம் வரும் வழியில் வாங்கி வந்த நியூட்ரின் சாக்லெட்களை எடுத்து சார் முன்பு நீட்டியதும் சார் மட்டுமன்றி தோழரண்ணனும் கூட மாஸ்கோவை முதன்முதலாய் காணும் காம்ரேடாய் உணர்ச்சி வசப்பட்டார். நாங்கள் பலமுறை மறுத்தும் டிரிப்பிள் எஸ் சார் செலவில் எங்களுக்கு டீயும் காராசேவு பொட்டலங்களும் உபசரிக்கப்பட்டன.
உணர்ச்சிப் பொங்கல்களில் இவ்வாறாய் தேநீர் தெளிக்கப்பட்டு அடங்கியதும் டிரிப்பிள் எஸ் சார் பள்ளி நிலவரங்களைக் கேட்டறிந்தார். தோழரண்ணனிடம் முன்பே நாங்கள் சொல்லியவற்றை அவர் டிரிப்பிள் எஸ் சாரிடம் சொல்லியிருந்தார். நாங்கள் மெல்ல எம் எஸ் சி சாருக்கும், பிரேமுக்குமான உரசல் குறித்தும், அது தொடர்பாக நடந்து வரும் ‘பழிவாங்கல்களையும்’ சொன்னோம். டிரிப்பிள் எஸ் சார் முகம் இறுகியது. தோழரண்ணன் கூட அதிர்ச்சி அடைந்தார் (எடே, ஏதோ சும்மா ரெண்டு தட்டு தட்டிருப்பாரு, இந்தப் பையங்க அதப் போயி பெரிய விஷயமா பேசுதாங்கன்னுல்லா நெனச்சிட்டேன் தோழர்). டிரிப்பிள் எஸ் சார் தலைமை ஆசிரியர் தகுதியில் இருப்பவர் என முன்பே பார்த்திருந்தோம். கூடவே எம் ஃபில் படிப்பையும் , எம் எட் பட்டத்தையும் பெற்றிருந்தவர் என்பதால்தான் அவருக்கு கல்வி அதிகாரி பதவி கிடைத்தது. அதில் அவருடைய எம் ஃபில் பட்டத்திற்கான ஆய்வு “பள்ளி மாணவர் மீதான வன்முறைகளும், அதன் விளைவுகளும்” என்பதாக இருந்தது எங்களுக்கு எதிர்பாராத நல்லூழாக அமைந்து விட்டது. சற்று நேரம் யோசனையாக இருந்த டிரிப்பிள் எஸ் சார் தலை குனிந்து அமர்ந்திருந்த பிரேம் பக்கம் திரும்பினார்- “அம்பி, நீ எதுக்குடே இப்ப இப்டி இருக்க? நான் பாத்துக்கிடுதேன்டே, நீங்கல்லாம் படிக்கற சோலிய மட்டும் பாக்கணும், என்ன?” என்று ஆறுதல் அளித்தார். அவர் அடுத்து தோழரண்ணனுடன் பேசியதிலிருந்து செவ்வாய்கிழமைதான் விடைத்தாள்கள் எங்கள் பள்ளிக்கு வருமென்றும் அதை ஒட்டியே டிரிப்பிள் எஸ் சாரும் எங்கள் பள்ளிக்கு வருவாரென்றும் தெரிய வந்தது. அதன்பின் வீடு திரும்பிய நாங்கள் வெகு நாட்கள் கழித்து சனி மாலையையும், ஞாயிறையும் கொண்டாடினோம். முக்கியமாக எங்கள் கொண்டாட்டத்தில் சங்கீதாவையும், மெஜூராவையும் சேர்த்துக் கொள்ள மறக்கவில்லை நாங்கள்.
திங்களன்று பள்ளிக்கு எவ்வித பதட்டமுமின்றி சென்றாலும் எம் எஸ் சி சார் வகுப்பு வரும்போது ஒரு பதட்டம் தானாகவே வந்தது. அன்று காலை வகுப்புக்கு வந்த எம் எஸ் சி சார் வழக்கமான உற்சாகத்தோடு அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் வந்ததும் தண்டனைகள் காத்திருப்பதை எங்களுக்கு நினைவூட்டி அவர் மகிழ்ந்தார். நாங்கள் எவ்வித முகபாவமும் காட்டாமல் அமர்ந்திருந்தோம். மதிய வகுப்பிற்கு வந்த எம் எஸ் சி சார் உற்சாகமிழந்தவராகக் காணப்பட்டார். அரையாண்டுத் தேர்வு வினாத்தாளில் பகுதி ஆ வில் கேட்கப்பட்ட வினாக்களையே மறுபடி செய்யுமாறு கூறிவிட்டு வகுப்பறை வாயிலில் வந்து நின்ற பூசை சாருடன் பேசிக்கொண்டிருந்தார். வகுப்பைக் கவனிக்கும் பொறுப்பை துரையிடம் ஒப்படைத்திருந்ததால் நாங்கள் பேசிக் கொள்ள இயலவில்லை. ஆனாலும் கண்ணசைவுகளால் டிரிப்பிள் எஸ் சார் விஷயம் எங்கள் பள்ளியை எட்டி விட்டது என தகவல் பரிமாறிக்கொண்டோம். மறுநாள் செவ்வாயன்று காலையில் டிரிப்பிள் எஸ் சார் பள்ளிக்குள் நுழைந்ததும் எம் ஏ என் சார் முதல் ஆளாக பொன்னாடை (கைத்தறித் துண்டு) போர்த்தி வரவேற்று இப்பள்ளியில் தம்முடன் பணிபுரிந்தவர் இப்பள்ளிக்கே நிர்வாக அதிகாரியாக வந்தது குறித்து தாம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனக் கூறி பெருமிதம் விம்மும் முக’பாவம்’ காட்டினார். டிரிப்பிள் எஸ் சார் ஐந்து நிமிடங்கள் மட்டுமே தலைமை ஆசிரியர் அறையில் இருந்தார். பத்தாம் வகுப்பு ஆசிரியர்களை தாம் சந்திக்க விரும்புவதாகச் சொல்லவும் உடனே ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களிடம் 100% தேர்ச்சிக்கு செய்யப்படும் கூடுதல் முயற்சிகளைக் கேட்ட டிரிப்பிள் எஸ் சார் கணிதப் பாடம் குறித்து எம் எஸ் சி சார் தன் முகம் நோக்காமல் சொன்னவற்றைக் கேட்டுவிட்டு பிற ஆசிரியர்களை வகுப்புக்குத் திரும்பும்படி சொன்னார். எம் எஸ் சி சாரை மட்டும் ஆ பிரிவின் விடைத்தாள் கட்டுடன் வகுப்பிற்கு செல்லுமாறு கூறிவிட்டு அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தானும் வகுப்பிற்குள் நுழைந்தார். அப்போதுதான் விடைத்தாள்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டிருந்தன. எதிர்பார்த்தது போலவே பிரேமுக்கு 87% மதிப்பெண்ணும் எங்களுக்கு 70 க்கு மேல் 75க்குள் மதிப்பெண்களும் கிடைத்திருந்தன.
அனைவரது குறிப்பேட்டையும் வாங்கிப் பார்த்த டிரிப்பிள் எஸ் சார் கையோடு கொண்டுவந்திருந்த வாரத்தேர்வு மதிப்பெண்கள் பட்டியலை எம் எஸ் சி சாரிடம் நீட்டி வாரத்தேர்வுகளில் 100%, 95% என மதிப்பெண்கள் பெற்றவர்கள் அரையாண்டுத்தேர்வில் 85% , 70% என குறைந்த மதிப்பெண்கள் பெற என்ன காரணம் என வினவினார். இந்த ஒப்புநோக்கலால் அதிர்ச்சி அடைந்த எம் எஸ் சி சார் சற்று சுதாரித்து மாணவர்களின் கவனக்குறைவே காரணம் எனவும் 90% மாணவர்கள் தேர்ச்சி மதிப்பெண்கள் பெற்றிருப்பதையும் சுட்டிக் காட்டினார். டிரிப்பிள் எஸ் சார் சற்றும் சளைக்காமல் அரையாண்டு வினாத்தாள் பாடநூல் பயிற்சிக் கணக்குகளிலிருந்தே தயாரிக்கப்பட்டது எனவும், தான் மாணவர்களின் குறிப்பேட்டை ஆய்வு செய்ததில் கணிதப் பாடநூலின் எல்லா பயிற்சிக் கணக்குகளும் மாணவர்களுக்கு வகுப்பில் விளக்கப்படவில்லை என்றும், மதிப்பெண் குறைவுக்கு இதுவே காரணம் எனவும் சொன்னார். மறுக்க முயற்சித்த எம் எஸ் சி சார் அதற்கு தகுந்த பதிலின்றி பார்வை தாழ்த்தி நின்றார். அடுத்ததாக தண்டனை முறைகளைக் குறித்து பேசிய டிரிப்பிள் எஸ் சார் இதுவரை எம் எஸ் சி சார் அளித்த தண்டனை முறைகள் மனிதாபிமானமற்றவை என நேரடியாக குற்றம் சாட்டினார். இம்முறை எம் எஸ் சி சார் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. தான் கொடுத்த தண்டனைகளில் தவறில்லை என்று வாதிட்டார். 98% வாங்கியவனுக்கும் 92% வாங்கியவனுக்கும் ஒரே தண்டனை, 40% பெற்றவனுக்கு அது கூட இல்லை என்பதில் சமத்துவத் தன்மை எங்கே என்றார் டிரிப்பிள் எஸ் சார். 90% க்கு மேல் வாங்குபவனை 100% வாங்க வைக்க அதுவே சரியான வழிமுறை என்பதாலேயே தான் அதைப் பின்பற்றுவதாகச் சொன்னார் எம் எஸ் சி சார். ஒரு கட்டத்தில் இருவரும் நாங்கள் பார்த்துக் கொண்டிருப்பதை மறந்தவர்கள் போல பேசிக்கொண்டிருந்தனர்.
முதலில் சுதாரித்தவர் டிரிப்பிள் எஸ் சார் தான். இது குறித்து தலைமை ஆசிரியர் அறையில் மேலே பேசலாம் எனக் கூறி கிளம்பிச் சென்றார். எம் எஸ் சி சார் கசந்த பார்வையாக வகுப்பை ஏறிட்டபோது நாங்கள் முன்னெச்சரிக்கையாக அவர் கண்களைச் சந்திக்காமல் விடைத்தாள்களை கவனிப்பதுபோல குனிந்து கொண்டோம். அன்று மதியம் உணவு இடைவேளை நேரம் வரை பள்ளியில் இருந்த டிரிப்பிள் எஸ் சார் உணவு இடைவேளையின்போது கிளம்பிச் சென்றார். எம் எஸ் சி சாரை தலைமை ஆசிரியர் அறைக்கு வரச்சொல்லி எம் ஏ என் சார் முன்னிலையில் டிரிப்பிள் எஸ் சார் பேசியதில் எம் ஏ என் சார் கண் பிதுங்கி நின்றார். இந்த தண்டனை முறைகளைப்பற்றி கேட்கப்பட்டபோது எம் ஏ என் சார் இத்தகைய தண்டனை முறைகள் நடைமுறையில் இருப்பதே தனக்கு தெரியாது எனவும், தெரிந்திருப்பின் தான் உடனே தலையிட்டு நிறுத்தியிருப்பேன் என்றும் பொங்கினார். இவ்வாறான ஒரு தண்டனை முறை வகுப்பில் இருப்பதைக் கூட தெரிந்து கொள்ளாமல் தலைமை ஆசிரியப் பணியில் என்னதான் செய்கிறீர்கள் என கேட்கப்பட்டபோது பழையபடி எம் ஏ என் சார் முக’பாவம்’ காட்டினார். (இந்த சமாளிப்பை டிரிப்பிள் எஸ் சாரிடம் செய்தமைக்காக மதியம் தொடங்கி மாலை வரை பூசை, எம் எஸ் சி சார்களை அவர் சமாளிக்க வேண்டியிருந்தது).
டிரிப்பிள் எஸ் சார் பேசியதான் விளைவாகவோ என்னவோ வகுப்பில் அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தண்டனை தரப்படவில்லை. நாங்கள் பெரிய சிக்கலிலிருந்து தப்பிவிட்டதாக பெருமூச்சு விட்டோம். துரை மட்டும் அவ்வப்போது அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலான தண்டனை நிறைவேற்றப்படாமல் (அன்னார் 41%) இருப்பதை கடமையாக நினைவுறுத்திக்கொண்டே இருந்தார். ஆனாலும் எம் எஸ் சி சார் அதை பொருட்படுத்தவில்லை. மாறாக பாடநூல் பயிற்சி வினாக்கள் அனைத்தையும் வகுப்பில் விளக்கும் முயற்சியில் இருந்தார். அரையாண்டுத் தேர்வு முடிந்த இரு வாரங்களுக்குப் பிறகே வாரத்தேர்வு நடந்தது. இம்முறை துரை கோஷ்டியார் குறைந்தபட்ச மதிப்பெண்ணுக்கும் குறைவாகவே இருந்ததும் தண்டனைகள் தொடராமைக்கு ஒரு காரணம் என நயினார், டச்சிங், ஜெபமணி குழுவினர் கருதினர்.
அனைத்தும் சரியாக அமைந்துவிட்டதாக நாங்கள் கருதி சற்று மகிழ்வுடன் எங்கள் இயல்பான நட்புக் கொண்டாட்டத்துக்கு திரும்ப முயன்றோம். ஆனால் விஷயங்கள் வேறு திசையில் நாங்கள் முற்றிலும் எதிர்பாரா வண்ணம் மாறின. அதற்கான விலையை இருதரப்பும் கொடுக்க நேர்ந்தது. இந்த மாற்றத்தின் தொடக்கப் புள்ளி சங்கு எனப்படும் சங்கரநாராயணன். பத்தாம் வகுப்பு இ பிரிவில் படிக்கும் சங்குவுக்கும் எங்களுக்குமோ, அல்லது எம் எஸ் சி சாருக்குமோ அல்லது எங்கள் உரசல்களுக்குமோ எவ்வித சம்பந்தமும் இல்லை. ஆனால் அவரிலிருந்துதான் அடுத்த ஆட்டத்துக்கான களம் தொடங்கியது. அந்த அரையாண்டுத்தேர்வில் சங்கு கணிதப்பாடத்தில் எடுத்திருந்த மதிப்பெண் 92%. பள்ளியின் முதல் மதிப்பெண். சங்கீதா கூட 89% தான். அதுவரை எவருமறியா எலி என பதுங்கித் திரிந்த சங்கு விடைத்தாள் கொடுக்கப்பட்ட அன்று மாலையிலிருந்து பலரும் வியக்கும் வேங்கைப்புலி என மாறினார். இ பிரிவின் வகுப்பாசிரியையான சந்திரா டீச்சர் ஒரே நாளில் இரண்டடி உயரம் கூடியவரானார். அதுவரை தன் கவனத்தில் கூட வராத சங்கு, தான் நடத்திய பாடத்தில் 92% பெற்றது குறித்து எம் எஸ் சி சாரே சற்று குழப்பமாகினார். அதுவரை வாரத்தேர்வு குழுவில் மூன்றாம் நிலைக்கும் இரண்டாம் நிலைக்கும் நடுவே அல்லாடி வந்த சங்கு அரையாண்டில் ஒரே எட்டில் பதினாறடி பாய்ந்து விட்டார். எங்கள் குழுவின் கவனத்துக்கு இந்தத் தகவல் வந்ததுமே பிரேம் ஆலோசனையின் பேரில் சிவாஜியும், நானும் சுறுசுறுப்பாகி சங்கு குறித்த விவரங்களைத் திரட்டினோம். அதன் அடிப்படையில் ஞாயிறன்று காலை எங்கள் குழு அவர் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்திப்பது என தீர்மானம் ஆகியது. அந்த சந்திப்புதான் அடுத்த கட்ட மோதலுக்கான வழியை அமைத்தது.
(தொடரும்)
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
