தெய்வநல்லூர் கதைகள் -27

This entry is part 27 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்
சித்திரம் : வர்தமான்

அந்த திங்கள் கிழமையின் காலையிலிருந்து எங்கள் பள்ளி வாழ்க்கை மாறியது. மிகக் கவனமாக திட்டமிட்ட பின்னரே எம் எஸ் சி சார் எங்கள் வகுப்பை கைப்பற்றியிருக்கிறார் என்பது புரிந்தது. எல்லோரும் எதிர்பார்த்தது போல அவர் பிரேமை உடனடியாக அணுகவில்லை. ஆனால் இரையைக் கவ்விய மலைப்பாம்பின் சுருள் போல பிரேம் மற்றும் நாங்கள் அவரால் வளைத்து இறுக்கப்பட்டோம். 

முதல் கட்டமாக வகுப்பின் மாணவர்களை நான்கு குழுக்களாகப் பிரித்தார். நன்றாகப் படிப்பவர்கள் (75% க்கு கூடுதல் மதிப்பெண் பெறுபவர்கள்), நடுத்தரமாகப் படிப்பவர்கள்(50% லிருந்து 75% க்குள் மதிப்பெண் பெறுபவர்கள்), மோசமாகப் படிப்பவர்கள் (35% லிருந்து 50% க்குள் மதிப்பெண் பெறுபவர்கள்), மிக மோசமாகப் படிப்பவர்கள்(35% க்கும் கீழாக மதிப்பெண் பெறுபவர்கள்). ஒவ்வொரு வாரமும் தேர்வு எனும் நடைமுறையை அறிமுகப்படுத்தினார். அந்தந்த வாரம் நடத்தியவற்றிலிருந்து தேர்வு. ஒவ்வொரு வெள்ளியன்றும் கடைசி வகுப்பில் தேர்வு. திங்கள் காலை திருத்தப்பட்ட தேர்வு விடைத் தாள் தரப்படும். இதைப் படிக்கையில் இதில் என்ன சிக்கல் என உங்களுக்குத் தோன்றலாம். யார் கேட்டாலும் அப்படி நல்லவிதமாக தெரியும்படி செய்து ஆனால் அதற்குள் எங்களுக்கு கட்டம் கட்டியிருப்பது போன்ற ஒன்றை எம் எஸ் சி சார் செய்திருந்தார். தங்களுடன் பிணக்கு இருக்கும் ஆட்களையும், கடைகளையும் நேரடியாகத் தாக்காமல் “மறியல், தர்ணா, போராட்டம்” போன்ற “சனநாயக” வழிமுறைகளைக் கடைப்பிடித்து மொத்தத்தில் ஒன்றாக குறி வைத்து அடிக்கும் அரசியல் நுட்பத்தை இங்கு எம் எஸ் சி சார் பயன்படுத்தினார்.   வாரத்தேர்வு வரை கூட எங்களுக்குப் பிரச்சினையில்லை, ஆனால் தேர்வு முடிவுகளை அறிவித்து விடைத்தாள் கொடுக்கும்போது மிக நியாயமாகத் தோன்றும் அநியாயமான ஒரு தண்டனை முறையை அறிமுகப்படுத்தினார். 

நான்கு குழுக்களில் ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு விதமான குறைந்த பட்ச மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டது (முதல் குழுவுக்கு 100, இரண்டாம் குழுவுக்கு 75, மூன்றாம் குழுவுக்கு 60, நான்காம் குழுவுக்கு 40). இதன்படி ஒருவர் தான் இருக்கும் குழுவிற்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்ணை எவ்வளவு எண்ணிக்கையில் தவற விடுகிறாரோ அந்த எண்ணிக்கையில் சரிபாதி பிரம்படியாகக் கொடுக்கப்படும். உதாரணமாக, இரண்டாம் குழுவில் 75 மதிப்பெண் பெற வேண்டிய ஒருவர் 60 மதிப்பெண் பெற்றால் 15 மதிப்பெண் தவறவிட்டவராகிறார். 15 ல் பாதி 8 (7.5 என்பது அடுத்த உயர்ந்த பட்ச முழு எண்ணுடன் சேர்க்கப்பட வேண்டியது). ஆகவே அவர் திங்கள் காலை 8 பிரம்படிகளைப் பெற வேண்டும். அது போல மூன்றாம் குழுவுக்கு நிர்ணயிக்கப்பட்ட 60 மதிப்பெண்களுக்கு 50 மதிப்பெண் பெற்றவர் 5 பிரம்படிகள் வாங்க வேண்டும். இதில் மெய்யாகவே பதற்றமடைந்த அணி முதல் அணி. 100 க்கு குறைவான எந்த மதிப்பெண்ணும் பிரம்படியைப் பெற்றுக் கொடுக்கும். நாங்கள் நால்வரும், கூடவே தெண்டிலு மற்றும் ஒரு சிலருமாக இந்த முதல் குழுவில் இடம் பெற்றோம். முதல் குழுவில் கூடுதல் நெருக்கடியாக 95 மதிப்பெண் வரை பெறுபவருக்கு அவர் தவற விட்ட மதிப்பெண்களில் பாதி எண்ணிக்கையில் அடி. ஆனால் 95ஐ தொட்டோ அதற்கு மேலாகவோ எடுத்து 100 ஐத் தொடவில்லை எனில் 100க்கு குறையும் ஒவ்வொரு மதிப்பெண்ணுக்கும் இரண்டு அடிகள். இப்படிப் பார்த்தால் 98 எடுத்தவரும், 92 எடுத்தவரும் 4 பிரம்படிகள் வாங்கியாக வேண்டும். ஆக எங்களைக் குறி வைத்தே இந்தப் பொறி அமைக்கப்பட்டிருப்பதை எங்களால் உணர முடிந்தது ( நல்லாப் படிக்க பயலுகன்னுதான எல்லா சார்வாளும் இவனுக்கு ஏண்டுகிட்டு வந்தாங்க, இப்ப அதே படிப்புதான் வெனை இவனுகளுக்கு… எனக்குல்லாம் 40 மார்க்கு கெடச்சாலே போதும்பா, ரொம்ப படிச்சா இப்டித்தான் அடி வாங்கணும் – நாங்கள் அனைவரும் அடி வாங்க ஆரம்பித்த நாளில் துரை சிங்கியிடம் மகிழ்ந்து சொன்னது).      

இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டதும் இதிலுள்ள பாதகங்களை ஜெயராஜ் சார், மீசை சார், சந்திரா டீச்சர் ஆகியோர் அடங்கிய குழு எம் ஏ என் சாரிடம் விவாதித்தது. கணக்கு தவிர பிற பாடங்களில் எவ்வாறு 100 எடுக்க முடியும் என தர்க்கபூர்வமாகக் கேட்ட கேள்விக்குக் கூட எம் ஏ என் சார் பதிலளிக்கவில்லை. (1980 களில், ஏன் 1990 களிலும் கூட கணிதம் தவிர பிற பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் கொடுப்பது வழக்கத்தில் இருந்ததில்லை என இன்றைய தலைமுறை வாசகர் அறிவதாக). சற்றும் பிடி கொடுக்காமல் இருந்த எம் ஏ என் சார், இது குறித்து எவராவது வட்டார கல்வி அதிகாரிக்கோ, மாவட்ட கல்வி அதிகாரிக்கோ “மொட்ட பெட்டிசன்” போட வாய்ப்பிருப்பதாக ஜெயராஜ் சார் முணுமுணுத்ததும் உஷாரானார். எம் எஸ் சி சார், பூசை சாருடன் விவாதித்து கணிதம் தவிர பிற பாடங்களில் இந்த குறைந்த பட்ச மதிப்பெண் 90%க்கு (அதுவும் முதல் குழுவினருக்கு மட்டுமே) கொண்டுவரப்பட்டது. தண்டனை அளிக்கும் அதிகாரம் அந்தந்த வகுப்பாசிரியாருக்கே எனும் முந்தைய முடிவு அமுலில் இருந்ததால் பத்தாம் வகுப்பின் பிற பிரிவுகள், எம் எஸ் சி சார் வகுப்பாசிரியராக இருக்கும் ஆ பிரிவாகிய எங்கள் அளவுக்கு தண்டனை பெறவில்லை. ராஜசேகரன்  சார் வகுப்பாசிரியராக இருக்கும் பத்தாம் வகுப்பின் அ பிரிவில் எவ்வளவு மதிப்பெண் குறைகிறதோ அத்தனை தோப்புக்கரணம் என்ற அளவில்தான் தண்டனை இருந்தது.   இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்- ஒட்டுமொத்தமாக நல்ல திட்டம் போல கொண்டுவரப்பட்டிருக்கும் இத்திட்டத்தின் மெய்யான நோக்கம் எங்களை “விஞ்ஞான முறைப்படி” தாக்குவதே ( மதுரை உயர்நீதி மன்ற வழக்கறிஞராக இப்போது இருக்கும் அமுக்குடப்பாவின் சட்ட அறிவின்படி “ஆமாம்ல, அவரு செஞ்சது ப்ரீ ப்ளாண்டு அஸ்ஸால்ட் ப்ளான் பட் லெஜிடிமேட்லி எக்ஸிக்யூட்டட், தாயோளி, இப்ப மட்டும் எவனாவது அப்புடி நம்ம மேல கை வச்சா கேஸப் போட்டு கொறஞ்சது 7 வருஷம் ரிகரஸ் இம்ப்ரிசன்ட்மெண்ட் வாங்கிக் கொடுத்துருவேன்” – “டுபுங்குவ, அப் பவாயமூடி ருந்தேல்லா, இப்பவரு வந்துநிப்பா  ருபாரு உம்முன்ன” டொம்ப்ளி பதிலடி. தற்போது ஹைதராபாத்தில் பணியில் இருக்கும் சிவாஜி சென்னையில் பணி செய்த போது பிரேமின் ஆலோசனைப்படி டொம்ப்ளியை அழைத்துச் சென்று 3 மாத காலம் தன்னுடன் தங்க வைத்து ஸ்பீச் தெரபிக்கு அனுப்பி டொம்ப்ளியின் மொழியழகை மாற்றியருளினார். டொம்ப்ளியின் மொழி இப்போது பெருமளவு இயல்பாகி விட்டது என்றாலும் எங்களுடன் பேசுகையில் அவரறியாது அவரது மொழி வெளிப்பட்டு விடும். எங்களுக்கும் டொம்ப்ளியின் மொழி பழகி விட்டபடியால் எங்களுடன் மட்டும் இன்னும் டொம்ப்ளி அதே போலதான் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்).  

முதல் வாரத் தேர்வு முடிவுகள் வெளிவந்த திங்களன்றே பிரேமுக்கும், எம் எஸ் சி சாருக்கும் உரசல் எழுந்தது. கணிதத் தேர்வில் தன்னுடைய கணக்கு சரியாக இருந்தும் 2 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டிருப்பதாக பிரேம் எம் எஸ் சி சாரிடம் முறையிட்டார் (சார், நீங்க சொல்லிக் கொடுத்தபடிதான் சார் இந்தக்கணக்கை போட்ருக்கேன். ஏழு ஸ்டெப்தான சார் மொத்தம், ஏழும் சரியாத்தான போட்ருக்கேன். ஆனா 5 க்கு மூணு மார்க்தான் சார் போட்ருக்கீங்க- விடைத்தாளை நீட்டியபடி).  எம் எஸ் சி சார் சிறிதும் அலுங்காமல் பிரம்பை கையில் எடுத்தபடியே துரையை அழைத்து அவர் விடைத்தாளை வாங்கி பிரேம் முகத்தின் முன் நீட்டினார் – “விடையை ஒரு கட்டம் வரைஞ்சி அதுக்குள்ளதான எழுதிப் போட்டேன், இந்தோ , இவன் அப்டியே எழுதிருக்கானே, பப்ளிக் எக்ஸாம்ல பேப்பர் அழகாருக்கணுமா இல்லையா? நாமதான் அழகு, நாமதான் சுத்தம்னு நெனப்பும், திமிரும் மட்டும் இருந்தா போதுமா? செயல்ல வரணுமில்ல?”. கடைசி வரிகளுக்கு பிரேம் முகம் இருண்டு நிற்க எம் எஸ் சி சார் முகத்தில் புன்னகை போன்ற வளைவு உருவாகி வந்தது. 2 மதிப்பெண்கள் குறைந்ததற்கு 4 அடிகளும், ஒழுக்கக்குறைவாக ஆசிரியரை எதிர்த்துப் பேசி கேள்வி கேட்டதற்கு 1 அடியும் என ஐந்து அடிகள் பிரேமுக்குக் கிடைத்தன. 

அன்று தொடங்கி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு காரணமாய் பிரேம் குறைந்தபட்ச மதிப்பெண்ணான 100ஐத் தொட முடியாமல் குறைந்த பட்ச அடியாக 5 பிரம்படிகள் வாங்குவது வழக்கமானது. 

“ஒரு கணக்கு முடிஞ்சா பென்சிலால ரெட்டைக் கோடு போடணும்னு தெரியாதா? இதெல்லாம் தப்பா சார், ஒத்தக் கோடு போட்ருக்கேன்னு ஒய்யாரமா கேக்கயே? இந்த கணக்குலயும் எக்ஸ் மைனஸ் 5 வருது, அடுத்த கணக்குலயும் அதே எக்ஸ் மைனஸ் 5 வருது. திருத்தறவனுக்கு ரெண்டு கணக்குக்கும் வித்தியாசம் தெரியணுமா இல்லையா? அதுக்குதான் ரெண்டு மார்க் கொறைச்சேன்…    (5 பிரம்படிகள்).

“ரைட் சைடு மார்ஜினுக்குள்ள வகுத்தல், பெருக்கலை ஏன் போடலை ? … இருக்கட்டும்டே, 5X10 ன்னா 50ன்னு எல்லாருக்கும் தெரியும், ஒனக்கு தெரியுமான்னுதான பரிட்ச வைக்கறது? நீ மனப்பாடமா பெருக்கினியா, மத்தவனப் பாத்து எழுதினியான்னு பேப்பர் திருத்தறவன் கண்டானா? உங்களுக்கெல்லாம் அறிவு ஜாஸ்தின்னு நீங்களாவே நெனச்சுப்பீங்க, அத நாங்க புரிஞ்சுக்கிட்டு மார்க்கப் போடணுமா?” … (5 பிரம்படிகள்).

“அதென்னடே பாதி ஆன்சர் மைப்பேனால இருக்கு, மீதி ஆன்சர் பால்பாயிண்ட் பேனால இருக்கு? பப்ளிக்ல பேப்பர் திருத்தறவன் ரெண்டு பேர் ஒரே ஆன்சர் பேப்பர்ல எழுதிருக்கான்னு நெனக்க மாட்டானா? நமக்கு வசதி இருக்குனு நாலு பேனா வச்சி எழுதி பவுசு காட்ட இதென்ன கோவில் மண்டபமா?”… (5 பிரம்படிகள்).

ஒரு கட்டத்தில் விடைத்தாளை உற்று உற்று கவனித்து எழுத முயற்சித்து கணக்கில் தவறவிடுமளவு போய் கூடுதல் அடிகளை பிரேம் பெற வேண்டி வந்தது. தாங்க இயலாமல் போன ஒரு நாளில் நாங்கள் மட்டும் பெரிய கோவிலில் கூடினோம். சிவாஜியின் வழக்கத்துக்கு மாறான நீண்ட உரையின் சாராம்சம் இதுதான் – பிரேம் செய்யாத தவறுக்காக அடி வாங்குவது கூட பொறுக்கக் கூடியது. ஆனால் பிரேம் அடி வாங்குவது வழக்கமான ஒன்றாக ஆகிப்போனதை நாம் ஏற்றுக் கொள்வதுதான் தவறு. ஆகவே பிரேமின் நலன் கருதி இவ்விஷயத்தை பிரேம் வீட்டாருக்கு தெரியப்படுத்துவது அவசியமாகிறது. 

சிவாஜியின் பேச்சுக்கு நாங்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்தோம். ஏனென்றால் பிரேம் அளவே அல்லது அதை விட கூடுதலான பிரம்படிகளை நாங்களும் பெற்றுக் கொண்டிருந்தோம், சிவாஜி உட்பட. அடிமுறை இது-இடது கையை நீட்டச் சொல்லி உள்ளங்கையை பிரம்பு வருடும்போது “நான் – மார்க் குறைஞ்சிட்டேன். அடுத்த முறை முழு மார்க் எடுப்பேன்” என சொல்ல வேண்டும். ஒவ்வொரு அடிக்கும் ஒரு வருடல், அதே ஒப்புதல் வாக்குமூலம். அடிகளுக்கு நடுவே யாராவது அழுகைக் குரலில் மழலைக் குளறலில் வாக்குமூலம் சொன்னால் கூடுதல் அடி கிடைக்கும்.  கண்களில் நீர் விளிம்பு கட்டி  அது கரை கடந்து விடாமல் மொத்த உடலும் அதீத இறுக்கத்துடன் உறைந்திருக்க  நீட்டிய இடது கையை சற்றும் தளர விடாமல் விடைத்து அடங்கும் மூக்கு நுனிகளும், கவனித்தால் மட்டுமே தெரியும் உதட்டுத்துடிப்புகளுமாக ஒவ்வொரு திங்களன்றும் அடி வாங்கி குரலை ஒன்று திரட்டி வாக்குமூலம் கொடுத்தபடி பிரேம் நிற்கும் காட்சியை எங்களால் தாள முடியவில்லை. பிரேம் கண்களில் கண்ணீர் விளிம்பு கட்டும்போதும், உள்ளங்கைகளை அடிப்பதற்கு முன் வருடும்போதும், பிரேம் உதட்டுத்துடிப்பை அடக்கியபடி வாக்குமூல உறுதிமொழி அளிக்கும்போதும் எம் எஸ் சி சார் முகத்தில், குறிப்பாக வாயில், புன்னகை போலவே தோன்றும் ஒரு தலைகீழ் லாட வடிவ வளைவு உருவாகி வரும். புன்னகையை அடக்கிக் குதப்பும் பாவனை அதில் இருக்கும். 

வெவ்வேறு முறைகளும் எங்களால் யோசிக்கப்பட்டு அவை அனைத்துமே பயனற்றுப் போயின. உதாரணமாக, நயினார் ஆலோசனைப்படி அவர் தலையில் “குளுக்க” வைக்கப்பட்டிருக்கும் எண்ணையில் உள்ளங்கையை தேய்த்துக் கொண்டு போனால் வலி சற்று குறையும். ஆனால் பிரம்பு வருடலில் எண்ணெய் பூச்சை உணர்ந்த எம் எஸ் சி சார் கரும்பலகை விளிம்பில் இருக்கும் சாக்பீஸ் தூளை எடுத்து கைகளில் தேய்க்கச் சொல்லி  குறிப்பேட்டுத் தாளால் துடைக்கச் சொல்லி பிறகு அடித்தார். தண்டனையிலிருந்து தப்பிக்க குறுக்கு வழியைக் கையாண்டமைக்காக கூடுதல் 4 அடிகளை பிரேமும், நயினாரும் பகிர்ந்துகொள்ள வேண்டி வந்தது. அடி வாங்கியதும் தன் இடத்தில் வந்தமரும் பிரேம் மதியம் வரை அந்த உறை நிலையிலிருந்து மீள்வதில்லை. எப்போதெல்லாம் கணித வகுப்பு வருமோ அப்போதெல்லாம் பிரேம் அந்த உறைநிலைக்கு போக ஆரம்பித்தார். அடுத்த இரு வகுப்புகளுக்குப் பிறகே சற்றேனும் சகஜ நிலைக்கு அவரால் மீள முடிந்தது.

இந்த அளவு நிலைமை ஆனதும்தான் சிவாஜி பிரேமின் வீட்டாருக்கு சூழ்நிலையை தெரியப்படுத்த வேண்டும் என சொன்னது. ஆனால் பிரேம் அந்த யோசனையை கடுமையாக மறுத்தார். அதற்கான காரணத்தைக் கூறுமாறு சிவாஜி வற்புறுத்தவே சற்று தயக்கத்துடன் தலை குனிந்து குரலடைக்க பிரேம் பத்து நாட்களுக்கு முன்னர் எங்களுக்குத் தெரியாமல் நடந்த சம்பவத்தைச் சொன்னார். தொடர்ந்து நான்கு திங்கள்கிழமைகளில் அடி வாங்கிய பிரேம் இந்தத் திட்டமே தன்னைக் குறி வைத்துதான் என்பதை உணர்ந்தவராக அவருடைய வழிமுறையில் எங்களிடம் கூட எதுவும் சொல்லாமல்  எம் எஸ் சி சாரை அவர் ஓய்வறையில் தனித்திருந்த சமயத்தில் சென்று சந்தித்திருக்கிறார். தான் தவறாக நடந்து கொண்டிருப்பின் மன்னிக்குமாறும், இனி தான் கீழ்படிந்து நடப்பதாகவும்,  தண்டனை முறைகளின் கடுமையை குறைத்துக் கொள்ளுமாறும் வேண்டியிருக்கிறார். கூடுதலாக பிற பத்தாம் வகுப்புப் பிரிவுகளில் தண்டனைகள் இத்தனை கடுமையாக இல்லாததையும் சுட்டிக் காட்டியிருக்கிறார். எந்த முகபாவனையும் காட்டாத எம் எஸ் சி சார் தான் எவரையும் பழி வாங்குவதற்காக இதைச் செய்யவில்லை என்றும், தான் எப்படி வகுப்புகளை நடத்துவது என்பதை பிற வகுப்புகளைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும், அதைச் சொல்ல பிரேம் ஒன்றும் பெரிய மனிதராகி விடவில்லை என்றும், மரபாக வந்த “நெய்த்திமிர்” பிரேமை அவ்வாறு பேச வைப்பதாகவும், இவ்வளவு வாங்கியும் அந்தத் திமிர் கொஞ்சமும் குறையவில்லை எனவும் பதிலளித்திருக்கிறார். தனது பணிவு பயனற்றுப் போனதை உணர்ந்த  பிரேம் அடுத்த கட்டமாக தான் இவ்வளவு வாங்குமளவு செய்த தவறென்ன என கேட்டிருக்கிறார். கூடுதலாக, 98 மதிப்பெண்கள் வாங்கியும் தான் பிரம்படிகள் பெற நேர்ந்து, 40 மதிப்பெண்கள் மட்டுமே பெறும் துரை எந்தத் தண்டனையும் பெறாமலிருப்பதன் அபத்தத்தையும் சுட்டிக் காட்டி தன் கேள்விக்கு ஆதார வலு சேர்த்திருக்கிறார். புருவம் சுருங்க முகம் சற்று சிவந்த எம் எஸ் சி சார் அனைத்து ஆசிரியர்களாலும், தலைமை ஆசிரியராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஏற்பாட்டை கேள்வி கேட்க பிரேமுக்கு அதிகாரம் இல்லையென்றும், அது கூடவே பிறந்த அதிகப்பிரசங்கித்தனம் எனவும், காலங்காலமாக படித்து முன்னேறுபவர்களுக்கு புதிதாய் படிக்க வந்தவர்கள் எடுக்கும் குறைந்த பட்ச மதிப்பெண்ணும் ஏன் உறுத்த வேண்டும் எனக் கேட்டிருக்கிறார். தன்னிலை இழந்த பிரேம் தொடர்ந்து தன்னை படிப்பைத் தாண்டியும் எம் எஸ் சி சார் சீண்டிப் பேசுவதைக் குறித்து கேட்டிருக்கிறார். லாட வளைவை முகத்தில் கொண்டுவந்த எம் எஸ் சி சார் தான் தவறாக எதுவும் சொல்லவில்லை எனவும், தான் சொல்வது உறுத்தினால் அதற்கு பிரேமின் குற்ற உணர்வே காரணம் என்றும் கூடுதல் அறிவு பெற பிரேம் மூன்றெழுத்துப் பெரியவரின் புத்தகங்களை வாசிக்கும்படியும் சொல்லியிருக்கிறார். வரலாற்றுத் தவறுகளுக்காக தன் மீது சிலுவை ஏறுவதை அரைகுறையாகப் புரிந்து கொண்ட பிரேம் தன் தரப்பை விளக்க தன் அண்ணனை அழைத்து வருவதாக சொல்லியிருக்கிறார். 

இந்த இடத்தில்தான் பிரேம் இனி ஒருபோதும் சமாதானத்துக்கு இறங்கி வராத வகையில் எம் எஸ் சி சார் ஒரு காரியத்தை செய்தார். வகுப்பாசிரியர் எனும் முறையில் பெற்றோரில் ஒருவரோ அல்லது இருவருமாகவோ வந்து பேசுவதை மட்டுமே தான் அனுமதிப்பேன் என்றும், தலைமை ஆசிரியரிடமே போனாலும் இதில் மாற்றமில்லை என்றும் உரத்த குரலில் கூறிவிட்டு அடிக்குரலில் முடிந்தால் உன் அம்மாவை வரச்சொல் என கோளாறான ஒரு குரலசைவில் சொன்னார் (அதென்னடே அண்ணன், நொன்னன்னு ? யாரந்த அண்ணன்? உங்கப்பா ஊர்ல இல்லாதப்ப உங்கப்பா செய்யற வேலையெல்லாம் அவர்தான் செய்வாரோ? … அப்டி மொறச்சுப் பாத்தா என்னடே அர்த்தம்? நீதான அப்பாக்கு பதிலா அண்ணனக் கூட்டு வாறேன்னு சொன்னவன்? சரி, அப்பா ஊர்ல இல்ல, உங்கம்மாக்கு என்ன? தெருவத்தாண்டி வர மாட்டாங்களோ? ஏதும் பேசணும்னா, உங்கம்மாள என்கிட்ட வரச்சொல்லு.. போ, சும்மா வந்து பெரியமனுசத்தனம் காட்டிட்டு… அடி வாங்கி தேஞ்சிருவீரோ ஐயா அந்தாக்ல?  போ போ”). இதில் உங்கம்மா எனும் உச்சரிப்புகளில் ககரம்  வரவேண்டிய இடங்களில்  கொகரம் இட்டு எம் எஸ் சி சார் பேசியதுதான் பிரேமை மொத்தமாகவே நிலையிழக்கச் செய்து விட்டது. தன் சார்பில் எவருமே வந்து பேச இயலாத வண்ணம் தான் சிக்கிக்கொண்ட விதம் அவரை தளர்ந்து போக வைத்தது. 

வகுப்புக்கு வெளியிலோ, பள்ளிக்கு வெளியிலோ தான் எந்த முயற்சி எடுத்தாலும் தன் அம்மாவை பள்ளிக்கு வர வைப்பதற்கு அதையே எம் எஸ் சி சார் சாதகமாக்கிக்கொள்வார் என்பதை பிரேம் புரிந்து கொண்டது போலவே நாங்களும் புரிந்து கொண்டபோது கோவில் இருளில் மூழ்கியிருந்தது.  மின்சாரம் இல்லாமல் போயிருந்த அந்த நேரத்தில் நாங்கள் ஒருவருக்கொருவர் முகம் பார்க்க முடியாமலும், எங்களில் எவருமே பிரேமின் முகத்தைப் பார்க்க முடியாமலும் வெறுமே அமர்ந்திருந்தோம். யக்கா தான் முதலில் சுதாரித்தவராக பேச ஆரம்பித்தார். சுனா கானா வழியே இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் யோசனையை முன்வைத்தார். அடுத்த நொடியே வெளி உதவி இப்பிரச்சினையை இன்னும் சிக்கலாக்கும் என அவரே உணர்ந்து தன் யோசனையை திரும்பப் பெற்றார். பிரேம் வெகுவேகமாக தன்னை தண்டிப்பதற்கே எம் எஸ் சி சார் குறி வைப்பதும், அதில் மாற்றுக்கருத்துக்கே இடமின்றி அவர் களமாடுவதும்  உறுதியாகி விட்டபடியால் நாங்கள் அனைவரும் அவரிடமிருந்து விலகி நிற்கவேண்டும் எனவும், தன்னுடன் இருந்தால் எங்களுக்கும் எம் எஸ் சி சார் தரும்  தண்டனை கூடுதலாகக் கிடைக்கும் எனவும் சொன்னார். தன் பொருட்டு தன் நண்பர்களும் அடிவாங்குவதை தன்னால் ஏற்க முடியவில்லை என நீர்த்திரையிட்ட கண்களுடன் சொன்ன பிரேமை இன்றைய பக்குவமிருந்தால் நாங்கள் கட்டியணைத்துக் கொண்டிருப்போம். அன்று அதெல்லாம் சினிமாவில் மட்டுமே செய்வார்கள் என நம்பியபடியால் வார்த்தைகளால் விளையாடினோம் – “அதென்னடே அப்டி சொல்லிட்ட? 3 வருசமா எத்தன சார், டீச்சர பாத்துட்டோம்? யாருக்கிட்டயும் நாங்கல்லாம் அடி வாங்காம இருந்ததோட நல்ல பையன்கன்னு பேர் வாங்கவும் நீதானடே காரணம்? இப்ப நீ அடி வாங்கும்போது நாங்க ஓடிரணுமா? சும்மா, சினிமா மாதிரி பேசாத என்ன? சரி, அப்டியே நாங்க தள்ளிப் போனா மட்டும் எங்கள சும்மா விட்டுருவார்னா நெனக்க? ஒன்னய மொதல்ல அடிச்சதுக்கு சாச்சி சொன்னோம்லா? எங்களயும் சேத்துதான் குறி வைக்காரு. அடி வாங்குனா சேந்தே வாங்குவோம். என்னடே சொல்லுதீங்க நீங்கல்லாம்?.”. சிவாஜி பிரேமை விட கூடுதல் ஒலியளவில் பேசிய மிகச்சில தருணங்களில்  ஒன்றாக இப்பேச்சு தெய்வநல்லூர் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. 

நாங்கள் மயிர்க்கூச்செறிய உயிரையும் நட்புக்காக கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் இனியொரு முறை பிரேம் எங்களை விட்டு விலகுவதைப் பற்றி யோசிக்கக்கூடாது எனவும் வேண்டினோம். பெருமையும், துக்கமுமான பார்வையுடன் எங்களைப் பார்த்த பிரேமை அமுக்கு டப்பாதான் முதன்முறையாக நெருங்கிச் சென்று தோளைத் தொட்டு அழுத்தினார். நாங்களும் அவரைப் போலவே செய்தோம். அன்று எடுத்த உறுதிப்பாடு இந்த நாள் வரை எங்கள் நட்பில் தொடர்கிறது. மெளனமாகக் கரைந்த அடுத்த இரு நிமிடங்களின் முடிவில் தடைப்பட்டிருந்த மின்சாரம் வந்தது.  

சட்டென மின்சாரம் வந்து ஒளி நிரம்பிய நொடியில் பிரேம் தன் இயல்புக்குத் திரும்பி ஒரு யோசனையைச் சொன்னார். அதன்படி எம் எஸ் சி சார் எங்களைத் தண்டிப்பதற்கு இருக்கும் ஒரே வழி வாரத்தேர்வில் கணிதத் தேர்வு மட்டுமே. (ஏனெனில் பிற தேர்வுகளில் அந்தந்த பாட ஆசிரியரே தண்டனையை முடிவு செய்வார். எம் எஸ் சி சார் தவிர எவருமே இவ்வளவு கடுமையான தண்டனைகளை விதிக்கவில்லை)   அதில் எந்தெந்த விதத்திலெல்லாம் குறை காண முடியுமென அவர் இதுவரை காட்டி விட்டதால் இனி அவர் வழியிலேயே போய் அதைக் கையாளலாம் என்றார். அந்த யோசனை அந்த செவ்வாயிலிருந்தே நடைமுறைக்கு வந்தது. அந்த வாரம் நடைபெற்ற கணிதப் பாடங்களை அன்றன்று மாலையே பிரேம் வீட்டில் நாங்கள் எழுதிப் பயின்றோம். சற்று குழப்பமான கணக்குகளில் அவரிடம் வகுப்பில் ஐயம் கேட்க முடியாததால் (சும்மா சும்மா கையத் தூக்கி சந்தேகம் கேட்டா நீ பெரிய படிப்பாளியாடே? நல்லா படிக்கவனுக்கு சந்தேகம் சும்மா சும்மா வருமா? சொல்லுதத ஒழுங்கா கவனிக்கவனுக்கு சந்தேகம் வருமாடே? சும்மா க்ளாசை டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு – எம் எஸ் சி சார்) பிரேம் வேறோர் வழிமுறையைக் கையாண்டார்; டச்சிங்கை படம் வரைவது போல கரும்பலகையில் எம் எஸ் சி சார் எழுதுவதை குறிப்பேட்டில் எழுத வைத்து அதை அப்படியே மனப்பாடமாக திருப்பி எழுதுவது. ஆம், கணக்குகளில் பலவற்றையும் நாங்கள் மனப்பாடமாகவே பயின்றோம். மிக ஆச்சரியமாக அந்த திங்களன்று எங்களுக்கு 100 மதிப்பெண்கள் வந்திருந்தன. எம் எஸ் சி சாருக்கு இம்முறை புருவங்களில் லாட வடிவம் வந்து போனது. தொடர்ந்த ஒரு மாத காலத்தில் நாங்கள் வாரத்தேர்வுகளில் கணிதப்பாடத்தில் 100% என்பதைக் கண்டு   எம் எஸ் சி சார் நிலையிழக்க ஆரம்பித்தார். எப்படிப் பார்த்தாலும் அவரால் மதிப்பெண் குறைக்க முடியாத அளவு நாங்கள் எழுதினோம். எழுதினோம் என்பதை விட விடைத்தாளை உருவாக்கினோம் என்றுதான் சொல்ல வேண்டும். 

இந்த நிலையில்தான் அரையாண்டுத் தேர்வுகள் நெருங்கின. எம் எஸ் சி சார் எங்களை மடக்க மற்றொரு திட்டத்துடன் அணுகியதும், எங்களுக்கு சார்பாக நாங்களே எதிர்பாரா வண்ணம் மற்றொரு உதவி கிடைத்ததும் நடந்தது.  ஆனால் இவற்றால் சிக்கல் தீராமல் வேறொன்றாகப் போய் முடிந்தது.

தெய்வநல்லூர் கதைகள்

தெய்வநல்லூர் கதைகள் – 26 தெய்வநல்லூர் கதைகள்- 28

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.