- தெய்வநல்லூர் கதைகள் – 1
- தெய்வநல்லூர் கதைகள் – 2
- தெய்வநல்லூர் கதைகள்- 3
- தெய்வநல்லூர் கதைகள் -4
- தெய்வநல்லூர் கதைகள் – 5
- தெய்வநல்லூர் கதைகள் – 6
- தெய்வநல்லூர் கதைகள் – 7
- தெய்வநல்லூர் கதைகள் -8
- தெய்வநல்லூர் கதைகள் – 9
- தெய்வநல்லூர் கதைகள் 10
- தெய்வநல்லூர் கதைகள் 11
- தெய்வநல்லூர் கதைகள் -12
- தெய்வநல்லூர் கதைகள் 13
- தெய்வநல்லூர் கதைகள் 14
- தெய்வநல்லூர் கதைகள்
- தெய்வநல்லூர் கதைகள் – 16
- தெய்வநல்லூர் கதைகள்
- சர்க்கரை கசக்குமா கசமாடா? தமிழ் வையுமா அடி மூடா?
- தெய்வநல்லூர் கதைகள் – 19
- தெய்வநல்லூர் கதைகள் – 20
- தெய்வநல்லூர் கதைகள் – 21
- தெய்வநல்லூர் கதைகள்
- தெய்வநல்லூர் கதைகள் 23
- எம்புட்டு நேரம்தான் குச்சிய வாய்க்குள்ளயே வச்சிருப்பீரு
- மொகரைல சவக்களை
- தெய்வநல்லூர் கதைகள் – 26
- தெய்வநல்லூர் கதைகள் -27
- தெய்வநல்லூர் கதைகள்- 28
- தெய்வநல்லூர் கதைகள்- 29
- தெய்வநல்லூர் கதைகள்- 30
- தெய்வநல்லூர் கதைகள்- 31
- தெய்வநல்லூர் கதைகள்- 32
- தெய்வநல்லூர் கதைகள்- 33
- தெய்வநல்லூர் கதைகள்-34
தெய்வநல்லூர் கதைகள் 25
ஒரு நாளின் காலையில் ஐந்து நிமிடங்களுக்குள் நாம் முற்றிலும் எதிர்பாராத நிலைக்கு ஆளாவோம் என்ற கற்பனையாவது நமக்கு வந்திருக்கிறதா? நிலை மாற்றம் என்பதை எங்கோ தொலைவில் வருங்காலத்தில் இருப்பதாகவே கற்பனை செய்து வைத்திருப்போம். ஆனால் மெய்யாக உணர்ந்தால் மாற்றம் என்பது எதிர்பாரா ஒரு நொடியில் நம்மை மீறி நம் மீது நிகழும் ஒன்றாகவே இருக்கிறது. அந்த திங்கட்கிழமை காலையின் மாற்றம் ஐந்து நிமிடங்களுக்குள் நிகழ்ந்து விட்டது. அதன் பாதிப்பு எங்களில் மட்டும் அல்ல, எம் எஸ் சி சாரிலும் நிகழ்ந்து விட்டது.
வெளியேறிய பிரேமை திரும்ப அழைத்து வர தெண்டில் போன பின்னர்தான் எம் எஸ் சி சாருக்குமே சற்று நிதானம் வந்தது. தெண்டில் வெளியே போவதை அவர் பார்த்திருந்த நொடியில் நாங்கள் சிவாஜியின் சைகையால் அவரவர் இடங்களுக்குத் திரும்பியிருந்தோம். வெளியில் பொழிந்த வெயிலின் ஒளியில் பார்வை நிலைத்திருந்த சார் கண்களைச் சுருக்கி அருகே பார்க்கும் நொடியில் அதுவரை அருகில் இருந்த நாங்கள் எவரும் இல்லை. எம் எஸ் சி சாருக்கு தான் திட்டமிடப்பட்டு முட்டாளாக்கப்படுகிறோம் என்ற எண்ணம் தோன்றியிருக்கக்கூடும் என இப்போது தோன்றுகிறது. ஆசிரியர் மேஜைக்கு முன்பாக வந்தவர் அவர் உயரம் காரணமாக இயல்பாக மேஜை மீது அமர்ந்தார். பிரம்பை அருகில் வைத்தார். விரல் சுட்டி எங்கள் ஒவ்வொருவரையும் எழுப்பினார். பெயர், ஊர் கேட்டார். அப்போதே அவருக்குத் தெரிந்து விட்டது, தான் தவறாக புரிந்து கொண்டிருக்கிறோம் என. ஆனால் அதை எங்கள் முன் ஒப்புக்கொள்ள மனமில்லை போல. அடுத்து “அவன் பேரு என்னடே ?” என இயல்பாக கேட்பது போல் கேட்டார். ஒரே நேரத்தில் வகுப்பில் இருந்த முக்கால்வாசி பேர் “பிரேம்குமார் சார்” என்றார்கள். அந்த கூட்டு ஒலியால் சற்று திடுக்கிட்டது போல ஆனார்- “ அவன் என்ன வகுப்புக்கு லீடராடே? எல்லாரும்லா அவன் பேர சொல்லுதீங்க?” என சிரிக்க முயன்றார். எங்கள் தரப்பிலிருந்து சிறு உதடு வளைவு கூட ஏற்படாதது அவருக்கு எரிச்சலூட்டியிருக்க வேண்டும். ஆனால் சற்று கவனமாகவே சூழலைக் கையாள தீர்மானித்திருந்தார். “ அவன் எங்கடே போறான்? யாருக்காச்சும் தெரியுமா?” . எவரும் பதில் சொல்லவில்லை. சற்று பொறுமை இழந்தவராக “அவன் ஆட்டம் பாக்கத்தானடே போனான் நேத்து”- அவர் குரல் எரிச்சல் பூசியிருந்தது. சிவாஜி எழுந்து “ சார்! அவன் நேத்துதான் …” என சொல்ல ஆரம்பிக்கும்போது வகுப்பறை வாயிலில் சிங்கி தோன்றினார்.
வகுப்பறையிலிருந்து ஏதோ ஒரு வேகத்தில் பிரேம் வெளியேறி விட்டிருந்தாலும் அவருக்கு அடுத்து என்ன செய்வதென்று முதலில் பிடிபடவில்லை (அவர் கண்ணைப் பாத்ததும்தான் எனக்கு பயமா வந்துச்சு. பயம்னு கூட இல்ல. ஒரு பதட்டம்னுதான் சொல்லணும். ஒரு ஆன்க்ஸைட்டி. ப்ரிடேட்டர் கிட்டருந்து தப்பிச்சு விலகி ஓட நினைக்கற ப்ரே யோட ஆன்க்ஸைட்டி. இவர் இத்தோட நிறுத்த மாட்டார்னு தோணுச்சு. ஐ ஜஸ்ட் வான்டட் டு அவாய்ட். என்ன செய்யறதுன்னு தெரியல. பட் ஐ ஆம் ஷ்யூர் ஐ ஃபெல்ட் ஹெல்ப்லெஸ், டோட்டலி லெஃப்ட் அலோன் – தன் குலதெய்வக் கோவிலில் மகனுக்கு முடி இறக்க அமெரிக்காவிலிருந்து வந்திருந்த போது மதுரையில் நிகழ்ந்த எங்கள் சந்திப்பில் அபூர்வமாக பிரேம் தன் உணர்வுகளை வெளிப்படுத்தியது). சற்று தூரம் நடந்ததும்தான் கங்காதரன் சார் ஆசிரியர் ஓய்வறைக்குள் நுழைவது பிரேம் பார்வையில் பட்டது. தன்னை அறியாமலேயே பிரேம் ஆசிரியர்கள் அறைக்குள் நுழைந்தார். நுழைந்த முதல் நொடியே அவர் கோலம் கண்டு முதலில் பதறி எழுந்தவர் மீசை சார்தான். “பிரேமு, என்னடே இது? என்னாச்சு? எந்தப் பயடே ஒன்னைய அடிச்சது ?” – மீசை சார் பதறியதில் அர்த்தமில்லாமல் இல்லை. கலைந்த தலை, சிவந்த கண்கள், கைகள் கால்களில் செவ்வரிகளாய் பதிந்து இளநீலமாக மாறத்தொடங்கியிருந்த பிரம்பு வீச்சுகள், வெறித்த பார்வை, தன்னியல்பாய் வழிந்து சட்டையை நனைத்திருந்த கண்ணீர். மீசை சார் பனியனுடன் பாய்ந்து எழுந்து பிரேம் அருகில் வந்தார். கங்காதரன் சார் மறுபுறமாய் வர இருவருமாய் பிரேம் தோளைப் பற்றினர். பிரேம் வெறித்த பார்வையும், நீர் வடியும் கண்களுமாய் நின்றார். அவ்வெறிப்பு இருவரையும் மேலும் பதட்டத்துக்குள்ளாக்கியது. கங்காதரன் சார் பிரேமை இழுத்து அங்கிருந்த பெஞ்சில் உட்கார வைத்தார். இங்லீஷ் ராஜசேகரன்சார் பானையிலிருந்து ஒரு க்ளாஸ் நீர் கொண்டு வந்து கொடுத்தார் – “இந்தாடே , மொத தண்ணிய குடி. ட்ரிங் தி வாட்டர்”. பூசப்பாண்டி சார் எழுந்து நின்று பார்த்து விட்டு சரியாக யூகித்து மேஜைக்கு பக்கமாக அமர்ந்திருந்த சிங்கி பக்கம் திரும்பினார். “என்னல இது? எவம்ல இவன அடிச்சது? ….வல் காரனுவளா? ..லனி பயலுவ இவன தொட மாட்டாங்களே? ஒனக்கு தெரியாம இருக்காது… சொல்லுல”.
அத்தனை அதிர்ச்சியிலும் தன்னிடம் கொடுக்கப்பட்ட தண்ணீர் கிளாசை அண்ணாந்து குடித்துக் கொண்டிருந்த பிரேம் மெல்ல சூழலை உணரும் நொடி அது. சிங்கி அனைவர் பார்வையும் தன்மீது பதிந்ததும் சற்று பெருமையாகவும், கூச்சமாகவும், பதட்டமாகவும் உணர்ந்து வெட்க புன்சிரிக்க முயன்று பார்வைகளின் தகிப்பால் உதடுகள் கோண முனகலாகச் சொன்னார் –“ தெரியல சார், ஆனா எம் எஸ் சி சார்தான் நேத்து ஆட்டம் பாக்கப் போனவங்கள கேட்டு கிளாசுக்கு போனாரு”. அறிந்தது போலவும், அறியாதது போலவும் சிங்கி சொல்கையில் எம் எஸ் சி சார் என்ற பெயர் ஒலித்ததும் பிரேம் தன்னிலை மீண்டார். இதுவரை எவருமே கேட்டறியாத திணறலும், தழுதழுப்புமான குரல் பிரேமிடமிருந்து வெளிப்பட்டது – “எம் எஸ் சி சார்தான் அடிச்சிட்டார். எதுக்குன்னே தெரியல”. தொண்டை அடைக்க பிரேம் கண்களைத் துடைத்துக் கொண்டார். எம் எஸ் சி சார் என்ற பெயரைக் கேட்டதும் சட்டென ஆசிரியர்கள் ஓய்வறையின் சூழல் மாறியது. எழுந்து நின்ற பூசைப்பாண்டி சார் மெல்ல உட்கார்ந்தார். ராஜசேகரன் சார் மீசை சாரையும், பூசைப்பாண்டி சாரையும் மாற்றி மாற்றி பார்த்தார்.
“அவர் அடிச்சசார்னு சொன்னா , அடிக்கற அளவுக்கு நீ என்னடே செஞ்சே?”- பூசப்பாண்டி சார் கேள்வி கேட்கும்போதே இருக்கையில் சாய்ந்து அமர்ந்தார்.
மீசை சார் பிரேமின் முகத்தைப் பார்த்தவர் திரும்பி பூசைப்பாண்டி சாரைப் பார்த்தார். பூசைப்பாண்டி சார் செயற்கையான தலை குலுக்கலுடன் சிங்கியை நோக்கி திரும்பினார். சிங்கி மறுபடியும் பதட்டத்துக்கு ஆளாகி “அது வந்து சார்.. இவன் நேத்து ஆட்டம் பாக்கப் போயி பொம்பளைகளப் பாத்து ஆடுனான்னு …” மீசை சார் நகர்ந்து வந்த வேகத்தில் சிங்கி “யப்பே” என்றலறி மேஜைக்கு கீழே ஒடுங்கினார். ஆனால் மீசை சார் திரும்பி தன் நாற்காலிக்கு பின்புறம் மாட்டியிருந்த சட்டையை எடுத்து போட்டுக் கொண்டே கேட்டார்-“பிரேமு, இதுக்குன்னு சொல்லியா எம் எஸ் சி சார் உன்ன அடிச்சாரு?”. பிரேம் சற்று தெளிவான முகத்துடன் “ஆமாம் சார், பொம்பள புள்ளைகளப் பாத்து ஆடுவியான்னு கேட்டு அடிச்சாரு. என்னை பேசவே விடலை சார்”. கங்காதரன் சார் ஏதோ பேசவர மீசை சார் அவரை கைகாட்டி தன்னுடன் வரும்படி சொல்லி விட்டு “பிரேமு, நீ வாடே” என்று பிரேம் தோளைப் பற்றி அழைத்துக் கொண்டு கிளம்பினார். பூசப்பாண்டி சாரும், ராஜசேகரன்சாரும் ஒருவரையொருவர் குழப்பமாக பார்த்துக் கொண்டனர். வாயிலை நெருங்கியதும் மீசை சார் திரும்பி “லே சரவணகுமார், இங்க வா” என்றார். பூசப்பாண்டி சாரை ஒருமுறை பார்த்து விட்டு சிங்கி ஓடிப் போய் மீசை சாருடன் படி இறங்கினார். அப்படி படி இறங்கிய இரண்டாம் நிமிட முடிவில்தான் எங்கள் வகுப்பறை வாயிலில் சிங்கியார் தோன்றியது.
சிங்கியார் வகுப்பறை வாயிலில் தோன்றியதுமே எம் எஸ் சி சார் முகம் இன்னும் சுருங்கியது. “லே, ஒன்ன ஸ்டாஃப் ரூம்ல தான இருக்கச் சொன்னேன்? இப்ப எங்கல வந்த? “ அவர் கை பிரம்பை நாடாமல் இருப்பதைப் பார்த்து துணிவு பெற்ற சிங்கி வாயிலிலிருந்து மூன்றடி நடந்து முன்னே வந்தார்- “சார், நானும் இந்த வகுப்புதான். கிருஷ்ணசாமி சார்தான் என்னைய வகுப்புக்கு போச்சொன்னது. ஓங்களையும் ஹெட்மாஸ்டர் ரூமுக்கு கூப்டாங்க” – கடைசி வரியை சற்று உம்மென்ற முகத்துடன் சொன்னார் சிங்கி. எம் எஸ் சி சாருக்கு ஏதோ பிசகு இருப்பது புரிந்தது. மேஜையிலிருந்து நழுவிய துணி போல வழிந்து இறங்கி நின்றார்- “யாருடே என்னைய வரச்சொன்னது?”. சிங்கி அவரது வழக்கமான அறியா முகபாவத்துக்கு மாறினார் – “கிருஷ்ணசாமி சாரும், கங்காதரன் சாரும் பிரேமைக் கூட்டிட்டு ஹெட்மாஸ்டர் ரூமுக்கு போறாங்க. போம்போது என்னய கிருஷ்ணசாமி சார் கூப்ட்டு உங்கள அங்க வரச் சொல்லி சொல்லச் சொன்னாங்க சார்” . சிங்கி முகம் மேலும் அறியா குழவி பாவத்துக்கு மாறியது. புருவங்கள் முடிச்சிட்டுக் கொள்ள எம் எஸ் சி சார் சூழலை அனுமானிக்க முயன்றார். அவர் அடுத்த கேள்வியை சிங்கியிடம் கேட்குமுன்பே பியூன் காளிமுத்து வந்து நின்றார். கையோடு எம் எஸ் சி சாரை அழைத்து வருமாறு பொறுப்புத் தலைமை ஆசிரியராகிய எம் ஏ என் சார் தன்னை அனுப்பியதாக சொன்னார். செல்லுமுன் திரும்பி ஒரு நொடி மட்டுமே எங்களை எம் எஸ் சி சார் பார்த்த பார்வையிலிருந்துதான் கண்களாலும் ஒருவருக்கு வெறுப்பை கக்கத் தெரியும் என்பதை நாங்கள் முதல் முதலாக உணர்ந்தோம்.
எம் எஸ் சி சார் தலைமை ஆசிரியர் அறைக்குள் நுழையும்போதே வேகநடையில் அவருடன் வந்து இணைந்து கொண்டார் பூசைப்பாண்டி சார். சற்று விசாலமான தலைமை ஆசிரியர் அறையில் மேஜைக்கு எதிர்புறமாக இரண்டு பெஞ்ச்சுகளும், பக்கவாட்டில் இருபுறமும் தலா இரண்டு என்ற அளவில் நான்கு நாற்காலிகளும் இருந்தன. இடப்பக்க இரு நாற்காலிகளில் மீசை சாரும், கங்காதரன் சாரும் அமர்ந்திருக்க வலப்பக்க வரிசையில் ஜெயராஜ் சாரும், சந்திரா டீச்சரும் இருந்தார்கள். எதிர்பெஞ்ச்சில் ஒரு ஓரமாக பிரேம் தலைகுனிந்தபடியே இருந்தார். மறுமுனையில் ராஜசேகரன்சார். நடுநாயகமாக எம் ஏ என் எனப்படும் எம் ஆவுடைநாயகம் எனும் பொறுப்பு தலைமை ஆசிரியர் சற்று வளைந்தவாக்கில் உட்கார்ந்திருந்தார். அவர் முகம் விக்கலுக்கு தண்ணீர் கிடைக்காதவன் முகம் போல இருந்தது. எம் எஸ் சி சாரும், பூசைப்பாண்டி சாரும் ஒன்றாகவே உள்ளே நுழைந்தார்கள். மீசை சார் எழுந்து வெளியே சென்று இரு நிமிடங்களில் திரும்பி வந்து அமர்ந்தார். வேறெவரும் பேச ஆரம்பிக்குமுன் எம் ஏ என் சார் முந்திக் கொண்டு ஆரம்பித்தார்-
“சார்வாள்! இப்டி இருங்க. பூச, நீயும் இரிடே. “ எம் எஸ் சி சார் தன் பின் பெஞ்சில் நெருங்கவும் பிரேம் உடல் விதிர்த்தது. அறுபட்ட ஆட்டின் குறுவால் துடிப்பு போன்ற விதிர்ப்புடன் தன்னையறியாமல் பிரேம் எழுந்து ஓரடி முன்னகர்ந்து நின்று கொண்டார். எம் எஸ் சி சார் முகத்தில் புன்னகைப்பது போன்ற உதட்டு வளைவு தோன்றி எவரும் கவனிப்பதற்குள் மறைந்தது. எழுந்த பிரேமை கங்காதரன் சார் மெல்ல இழுந்து தன்னருகே நிறுத்திக் கொண்டார்.
“சூரியசந்திரன் சார்! நீங்க வந்ததுலருந்து டிஷிப்பிளினுக்கு ரொம்ப முக்கியத்துவம் தாரீக. நானும் அதுக்கு சப்போர்ட் பண்ணி வாரேன். நீங்களும், நானும் சேந்து எடுத்த முயற்சிகளால பள்ளிக்கூட டிஷிப்ளின் சாஸ்தியாயிருக்கு. அத கொண்டுட்டு வாரதுக்கு நீங்க …“ எம் ஏ என் சாரை மேலே பேச விடாமல் ஜெயராஜ் சார் குறுக்கிட்டார் – “நாம பேச வேண்டிய விசயத்துக்கு வரலாம்லா. அடுத்தடுத்து வகுப்புகள் இருக்கு “
“அதத்தான் சார் சொல்லிட்ருக்கேன்.” சற்று சூடு பிடித்து குரல் எழும்பி வந்த வால்வு ரேடியோவை திருக்கி அணைத்த அப்பாவைப் பார்க்கும் பாவனை எம் ஏ என் சார் குரலில் இருந்தது. “சார், எம் எஸ் சி சார் டிஷிப்ளின் கொண்டாரதுக்காக கொஞ்சம் கண்டிப்போட இருக்காரு. அதுல கொஞ்சம் துளுத்துத் திரியுத பயலுவள கடுசா கண்டிக்க வேண்டியிருக்கும். அப்டி ஒரு சின்ன விஷயமா ..”
மீசை சார் குரல் சூடாக வந்தது.” சார், இந்தப் பையன இவ்வளவு கண்மூடித்தனமா அடிச்சத கேக்கதுக்குத்தான் இந்த மீட்டிங்கே. அதப் பேசுங்க”
பூசப்பாண்டி சார் குரல் அலுங்காமல் வந்தது – “இதுக்கு முன்னே பையன்கள வாத்தியார் அடிச்சதுக்கெல்லாம் மீட்டிங் போட்ருக்கோமா சார்வாள்?”
குறிப்பை உணர்ந்து கொண்ட ஒளி மின்னி மறைய எம் ஏ என் சார் மீசை சாரை எறிட்டார் – “சார்வாள், இது ஒண்ணும் மீட்டிங் கிடையாது. நீங்களும், கங்காதரன் சாரும் வந்து விசயத்த சொல்லவும் அவர் பக்க நியாயத்தையும் கேக்கலாம்ணுதான் கூப்டேன். இதொண்ணும் என்கொயரி இல்ல கேட்டேளா “
ஜெயராஜ் சார் மிக நிதானமாக ஆரம்பித்தார் – “இப்ப அந்த பையன் வீட்டுக்கு போயி பெரியவங்கட்ட சொல்லி அவங்க ஊர்க்காரங்க கூட்டமா வந்து பள்ளிக்கூட வாசல்ல நின்னா… நியூஸ் ஆகி டி ஈ ஓ ஆஃபிஸ்லருந்து ஆள் வந்தா மொதல்ல என்ன கேப்பாங்க? சம்பவம் நடந்ததும் பள்ளி தலைமை ஆசிரியர் என்ன செய்தார்னுதான? அப்ப நாம என்ன பதில் சொல்லுவோம்?”
பூசைப்பாண்டி சார் அழுத்தமான குரலில் “அவன் தெருக்காரங்கல்லாம் அப்டி கூட்டமா வந்துட்டாலும்…”- அவரும், எம் எஸ் சி சாரும் ஒருவரையொருவர் பார்த்து கண்களால் கை குலுக்கிக் கொண்டனர். ஜெயராஜ் சார் இன்னும் நிதானமானார்- “தெருக்காரங்கதான் வரணும்னு இல்ல, விஷயத்தைக் கேள்விப்பட்டு இயக்கங்களோ, அமைப்புகளோ கூட வரலாமில்லையா? எதுடா வாய்ப்புன்னு காத்திருக்காங்கங்கும்போது நாமதான் எச்சரிக்கையா இருக்கணும்”.
எம் ஏ என் சார் பழையபடி பதட்டமடைந்தார். அவரால் விஷயத்தை மேலே கையாள முடியாது என்பதை உணர்ந்த மீசை சார் திரும்பினார். பொதுவாகப் பார்த்தபடி – “சார், ஒரு பையனை ஒழுங்கீனமான விஷயத்துக்கு கண்டிச்சோம்னா அது தப்பு இல்லை. நாம எல்லாருமே அதைச் செய்ய வேண்டியவங்கதான். செஞ்சிட்டும் இருக்கோம். ஆனா நம்மளால தண்டிக்க முடியும்கறதாலயே ஒரு பையனை காரணமில்லாம தண்டிச்சிடலாமா? “
பூசப்பாண்டி சார் வேறு திக்கில் பார்த்தபடி சொன்னார் – “ஆட்டம் பாக்க நாம போனாலே ஊர்க்காரங்க அசிங்கமா பாப்பாங்க. இதுல வெடக்குஞ்சு வயசுல ஆட்டக்காரங்க மாதிரி பையன் ஆடுனத ஆசிரியர் கண்டிக்கக்கூடாதா? என்ன அவங்கிட்ட போயி கொஞ்சணுமா?”
கங்காதரன் சார் குரல் அதுவரை இல்லாத வேகத்தில் வந்தது – “இவன் ஆடுனான்னு யார் சார் பார்த்தது?” நேரே எம் எஸ் சி சாரைப் பார்த்து கேட்டார்- “நீங்க பாத்தீங்களா சார்? இல்ல, பாத்தவன் யாராச்சும் சொன்னாங்களா சார்? சொல்லுங்க?” அவர் பார்வை எம் எஸ் சி சார் முகத்தில் ஆணி அடித்திருந்தது. அதுவரை சுற்றி சுற்றி வந்த பேச்சு தன்மேல் நேரடியான கேள்வியாக மாறியதை எம் எஸ் சி சார் எதிர்பார்க்கவில்லை. தன் செயல்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய நிலையை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை என்பது அவரது குழப்பமான முகத்திலேயே தெரிந்தது. தன்னையறியாமலேயே எழுந்தார் – “இவன் வகுப்புல தூங்கிட்டிருந்தான். கண்ணு செவந்துருந்தது. ஆட்டம் பார்த்துட்டு வந்து தூங்கறானோன்னு விசாரிச்சேன். அதப்போயி இந்தப்பையன் ..” அவர் பேசுவதை கங்காதரன் சார் கேட்பது போலவே இல்லை.
கங்காதரன் சார் பிரேம் தோளைப் பற்றி சற்று திருப்பினார் “பாருங்க சார்! இதுவா விசாரிச்ச லட்சணம்? “. தன்னை நோக்கி திருப்பப்பட்ட பிரேமை அப்போதுதான் கவனித்தார் எம் ஏ என் சார். இளநீல நிறமும், செக்கர் நிறமும் கலந்த வரிகள் வெளிர் மஞ்சள் நிற உடம்பில் தனித்துத் தெரிந்தன. ஒரு கணம் எம் ஏ என் சாருமே பரிதாபமாக உணர்ந்தார். அதே வேகத்தில் தன்னை மீட்டுக் கொள்ளவும் செய்தார் – “சார், நாம இதுக்கு முன்னாடி தப்பு செய்த பசங்கள அடிச்சதுல்லையா? இப்ப மட்டும் என்ன?”
ஜெயராஜ் சார் அக்கேள்விக்காகவே காத்திருந்தார் என்பது போல ஆரம்பித்தார் – “அப்ப இவன் தப்பு பண்ணிருக்காண்ணுதான் சார்வாள் அடிச்சிருக்காரு? அப்டித்தான?”
அக்குரலிலிருந்த நிதானத்தை கேட்டு அவர் வழிக்கு வந்து விட்டதாக எம் ஏ என் சாரும், எம் எஸ் சி சாரும் நினைத்தபோது பூசப்பாண்டி சார் மட்டும் தம் தரப்பு எங்கோ தவறுவதை உணர்ந்தார். ஜெயராஜ் சார் கங்காதரன் சாரைப் பார்க்க அவர் தன் கையிலிருந்த நோட்டிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்தார் – “இவன் நேத்து வரை ஊர்லயே இல்ல. வெளியூர் போயிட்டான். லீவு லெட்டர் கொடுத்து அதுல நாம கையெழுத்து போடணும்னு நின்னு வாங்கிட்டு போயி நம்ம டேபிள்ள வைக்கற பையன் இவன். இவன் ஊருக்கு வந்ததே இன்னைக்கு காலைலதான். பெறவு எப்டி சார் நேத்து ராத்திரி இவன் ஆட்டம் பாக்கப் போயிருப்பான்?”- தன் முன்னே நீட்டப்பட்ட விடுமுறை விண்ணப்பத்தைப் பார்த்த எம் ஏ என் சாருக்கு கண்களுக்கு முன் பூச்சி பறந்தது. எம் எஸ் சி சார் நின்ற கோலத்திலேயே உறைந்தார். அளவுக்கு மீறியது மட்டுமல்ல, தவறான விதத்தில் மீறி விட்டிருக்கிறோம் என புரிந்தது. அவர் பேச முயற்சிக்கும் முன்னர் பூசைப்பாண்டி சார் குரல் குறுக்கிட்டது-“சரி சார், இவன் ஆட்டம் பாக்கவே போகலைன்னு வைச்சிப்போம். சார் அதை விசாரிக்கும்போது சொல்லலாம்ல. அப்ப ஏதாவது திமிரா பேசிருப்பான் போல…“ . எம் எஸ் சி சார் அந்த வரிகளில் தனக்கான குறிப்பு ஏதும் இருக்கிறதா என யோசித்துக் கொண்டிருக்கும்போதே மீசை சார் வாயிலை நோக்கி திரும்பி “டே கணேசா, உள்ள வாங்கடே எல்லாரும்” என்றார்.
சிவாஜி, நயினார், டச்சிங், நான் நால்வரும் உள்ளே நுழைந்தோம். இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. பூசைப்பாண்டி சார் சகிதமாக எம் எஸ் சி சார் உள்ளே நுழையும்போதே பேச்சு போகவிருக்கும் திசையை அனுமானித்து விட்ட கங்காதரன் சார் மீசை சார் காதைக் கடிக்க அவர் எழுந்து வந்து சிவாஜியை மட்டும் கூப்பிட்டு விட்டு என்ன எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்புணர்த்தி திரும்பினார். அவர் இரு நிமிடங்கள் எழுந்து போய் திரும்பிய ரகசியம் இதுதான். அவர் குரல் வரும்வரை நாங்கள் உள்ளே வராமல் வேறு யார் பார்வையிலும் படாமலும் நின்றிருந்தோம். உள்ளே நுழைந்ததும் சிவாஜி சொல்லியிருந்தபடி ஒரு பொதுவான வணக்கம் சொன்னோம். ராஜசேகரன்சார் மட்டும்தான் கண்கள் வியப்பில் மின்ன தலையசைத்தார். மீசை சார் எம் ஏ என் சார் பக்கம் திரும்பினார்-“சார், இவங்கதான் வகுப்புல கூட இருந்த பையங்க.என்ன நடந்ததுன்னு நீங்களே கேளுங்க”

எம் ஏ என் சார் கேட்பதற்குக் கூட காத்திராமல் நாங்கள் நடந்ததைச் சொன்னோம். முக்கியமாக எதையுமே கேட்காமல் நேரே போய் படுத்திருந்த பிரேமை அடித்து எழுப்பியதையும், பிரேமிடம் எதையும் கேட்காமலேயே தொடர்ந்து அடித்ததையும், நாங்கள் அவரை தடுக்க முயற்சித்ததையும் நால்வருமாக சொல்லி முடித்தோம். எம் எஸ் சி சார் முகத்தில் அதுவரை இருந்த “ஹேண்ட்ஸம்நெஸ்” மெல்ல வடிந்து ஜெயராஜ் சார் வகுப்பில் வைவதைப் போல “மொகரைல சவக்களை” வந்தமர்ந்தது. நீதிமன்றத்தில் சாட்சி சொல்லும் நுணுக்கத்திலும், விவரிப்பிலுமாக நாங்கள் சாட்சி சொல்ல வருவோம் என்பதை அவர் எதிர்பார்க்கவில்லை என்பதைத் தாண்டி அவரால் அப்படி ஒன்று நிகழ்வதை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை (எங்க சித்தப்பா மேல ஏழு கேஸ் இருக்கு சார், எதிர்க்கட்சிக்காரன் கூட கோர்ட் படியேறி சாட்சி சொல்ல வந்ததுல்ல. சாட்சி இல்லாம தப்பு செய்யறது கஷ்டம்டா , ஆனா சாட்சின்னு எவனும் வராம ஆக்கறது ஈசிடான்னு சொல்லுவாரு சார். இதப் போயி அவர்ட்ட சொன்னா என்னப் பாத்து கேவலமா சிரிப்பார் சார். என்னமோ கொலைக்கு சாட்சி சொல்லுத மாரில்லா இந்தப் பயலுவ அவனுக்கு ஏண்டுக்கிட்டு வந்து நிக்கானுவ – ( மீட்டிங் முடிந்த பின்னர் கருத்தபாண்டியார் கடை ஓய்வறையில் பூசைப்பாண்டி சாரிடம் எம் எஸ் சி சார் பேசியவற்றின் ஒரு பகுதி). நாங்கள் நடந்ததைச் சொல்லி முடித்ததும் பிரேமையும், எங்களையும் வகுப்பிற்கு போகுமாறு ஜெயராஜ் சார் சொன்னார். அதன்பின் விவாதங்கள் நடந்தன. ஆசிரியரால் மாணவன் கண்டிக்கப்படுவது குற்றமல்ல என பூசைப்பாண்டி சார் விளக்க, தவறிழைத்த மாணவரே தண்டிக்கப்பட வேண்டுமேயன்றி விசாரிக்காமல் நம் ஆணவத்துக்காக ஒருவரை தண்டிப்பது சரியல்ல என ஜெயராஜ் சார் விளக்க எம் ஏ என் சார் விழி பிதுங்கி நின்றார். இரு தரப்பு விவாதங்களில் எம் எஸ் சி சார் தரப்பு பலகீனமாக உணர்ந்த தருணத்தில் பூசைப்பாண்டி சார் ஒரு குருட்டடி அடித்தார் – “சார், இப்ப விசாரிக்காம ஒரு பையனை அடிச்சது தப்பா? இல்ல, இந்த பையனை அடிச்சது குத்தமா? …செவல் ஊர்ப்பயங்க வேற யாரையும் நம்ம சார்வாள் அடிச்சிருந்தா இப்டி மீட்ட்டடீங்கு போடுவீங்களா?”. எம் ஏ என் சார் முகம் மலர்வதை தடுக்க முடியாமல் “ஆமா, இந்தப் பயலை அடிச்சதுக்குத்தானா சார் நீங்கல்லாம் ஏண்டுக்கிட்டு வாறது?”என்றார்.
இம்முறையும் ஜெயராஜ் சார் நிதானமாக “சார், கொலைன்னு சொன்னா ஒரே குத்தம்தான். ஆனா நாலஞ்சு வருசமுன்ன இந்திரா காந்தியை சுட்டுக் கொன்னப்ப எதுக்கு தேசமே கேகேன்னு கெடந்து மாரடிச்சது? இதுவரை தப்பே பண்ணாத பையனை இப்டி போட்டு அடிச்சா நாளைக்கு தப்பு பண்ணக்கூடாதுன்னு நெனக்க பையங்க இருப்பாங்களா? “
கங்காதரன் சார் அந்தப் புள்ளியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் – “அவன் வந்து சேர்ந்து ஒண்ணேகால் வருசம்தான் ஆகுது. திருனவேலி டிஸ்ரிக்டுல எங்க பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, வினாடி வினா போட்டின்னாலும் அவம் போயி பரிசு வாங்காம வந்ததுல்ல. நம்ம ஹெச் எம் ஜெயசீலன் சார் (நாற்காலி கிரீச்சிடும் ஓசையில் எம் ஏ என் சார் நகர்ந்து அமர்ந்தார்)… அதான் நம்ம முன்னாள் ஹெச் எம், (எம் ஏ என் சார் நாடித்துடிப்பு இயல்பு நிலைக்கு திரும்பியது) டி இ ஓ ஆஃபீஸ் மீட்டிங் போகும்போதெல்லாம் மத்த ஸ்கூல் ஹெச் எம் சார்லாம் இந்தப் பையன சொல்லி நம்ம ஸ்கூலை பாராட்டியிருக்காங்க. இந்தோ, நம்ம பொறுப்பு ஹெச் எம் சார்வாள் ( நாடித்துடிப்பு மீண்டும் ஏறியது எம் ஏ என் சார் நாற்காலியின் கைப்பிடியை இறுக்கியதில் தெரிந்தது) போன வாரம் மீட்டிங் போனப்ப கூட சங்கரங்கோவில் எஸ் என் ஆர் ஸ்கூல் ஹெச் எம் பிரேம் பேரைச் சொல்லி நம்ம ஸ்கூலை பாராட்டினாருல்லா. அப்ப டி ஏ ஓ சாரே(டிஸ்ட்ரிக்ட் எஜுகேஷனல் ஆஃபிஸர்- மாவட்ட கல்வி அதிகாரி) கூப்புட்டு நம்ம பையன் பேரைச் சொல்லி பாராட்டுனது உண்டே. நானும் கூட இருந்தேன். என்ன ஹெச் எம் சார், உண்டானதுதான?”- எம் ஏ என் சார் அவஸ்தையாய் தலையாட்டி ஆமோதித்தார்.
கங்காதரன் வரைந்த வட்டம் நடுவே மீசை சார் சரியாக அம்பு விட்டார் – “நாளைக்கு இதுவே வெவகாரமாகி கம்ப்ளெயிண்ட் மேல போச்சுன்னு வைங்க, இந்தப் பையனையா இப்டிச் செஞ்சீங்க, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலைன்னு ஊர் சொல்ற மாதிரி பண்ணிட்டீங்களேன்னு டி இ ஓ கேக்க மாட்டாரா?” – பொறுப்பு தலைமை ஆசிரியர் என்பதிலிருந்து “பொறுப்பு துறப்பு” செய்து தலைமை ஆசிரியர் என்ற பதவியுடன் ஓய்வு பெறும் தன் லட்சிய கனவுக்கு குறுக்கே இந்த விவகாரம் வந்து விடுமோ என்ற பதட்டத்தில் எம் ஏ என் சாருக்கு தண்ணீர் குடித்தாக வேண்டும் என்பது போன்ற உணர்வும், உடனே சிறுநீர் கழிக்க வேண்டும் போல முட்டிக் கொண்டு வரும் உணர்வும் ஒரே நேரத்தில் வந்தன.
அதன்பின் அதிக நேரம் “மீட்டிங்க்கு” நடக்கவில்லை. இனி அந்தந்த வகுப்பாசிரியர் அனுமதியின்றி அந்த வகுப்பு மாணவர்களை எம் எஸ் சி சார் தண்டிக்கக்கூடாது, காலை பிரார்த்தனை நேர இரண்டாம் கட்ட தண்டனை கூடாது, தாமதமாக வருபவர்களை அந்தந்த வகுப்பாசிரியர்களே தண்டிக்க வேண்டும், அவர்களை வகுப்பு வாரியாகப் பிரித்து அந்தந்த வகுப்பாசிரியர்களிடம் கொண்டு சேர்க்கும் பணி உடற்கல்வி ஆசிரியரிடம் ஒப்படைக்கப்படும், பள்ளி ஒழுங்கு சம்பந்தமான எந்த மாற்றங்களும். திருத்தங்களும் ஆசிரியர்கள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு ஏற்கப்பட்ட பின்பே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் போன்ற பல விஷயங்களை மீசை சார் கோஷ்டி பேசியது. டி இ ஓ பெயர் வந்ததிலிருந்து எதுவும் பேசாமலிருந்த எம் ஏ என் சார் இவை எல்லாவற்றுக்கும் தலையாட்டினார். அதற்கெனவே காத்திருந்தது போல ஜெயராஜ் சார் “சந்திரா டீச்சர், நீங்க கூட்டக் குறிப்புகள் எழுதிட்டீங்கல்லா ?” என்றார். அதுவரை எதுவும் பேசாமலிருந்த சந்திரா டீச்சர் கடைசியாகப் பேசியவற்றை தெளிவாக 1,2 என பட்டியலிட்டு எழுதியிருந்தார். அதை வாங்கி மீசை சார், கங்காதரன் சார், ஜெயராஜ் சார் கையெழுத்திட்டு (சந்திரா டீச்சர் ஏற்கனவே கையெழுத்து போட்டிருந்தார்) எம் ஏ என் சாரிடம் நீட்ட மகுடிக்கு பாம்பு போல வாங்கி கையெழுத்திட்டதும் தான் தன் உடல் மேல் சிகரெட் நுனி போல சூடான பார்வை தீண்டுவதை உணர்ந்து நிமிர்ந்தார். எம் எஸ் சி சார் உடலுறைந்து கண்கள் மட்டும் பொறி பறக்க நின்றிருந்தார். கையெழுத்து போட குறுக்கே வந்த ராஜசேகரன்சார் எம் ஏ என் சார் மேற்கொண்டு எரியாமல் காத்தார். பூசைப்பாண்டி சாரும், எம் எஸ் சி சாரும் கையெழுத்திட யோசித்தபோது எம் ஏ என் சார் பூசைப்பாண்டி சாரிடம் கண்ணைக் காட்ட கையெழுத்துகள் இடப்பட்டன (ஏ பூச, நீயென்னடே முறுக்கிக்கிட்டு நிக்கே? அவனுவ வெவரமா முன்னக்கூட்டியே எழுதி வைச்சு எடுத்தாந்துருக்காங்க. இப்ப நாம கைஎழுத்து போட்டா பேப்பர் நம்மள்ட்டயே நின்னுரும். நாம மாட்டோம்னா சி இ ஓ (சர்க்கிள் எஜுகேஷனல் ஆஃபிஸர் – வட்டார கல்வி அதிகாரி), டி இ ஓ ன்னு பெட்டிஷன் போடுவாங்க. எதுக்கு அந்த வம்புன்னுதான் நம்ம டேபிளோட நிப்பாட்டிட்டேன் – எம் ஏ என் சார். அப்டி பெட்டிஷன் மேல போனா சூர்யா சார் சித்தப்பா பேரச் சொன்னாலே போதுமே?- பூச என்ற எஸ் பி பி சார் என்ற பூசைப்பாண்டி சார். டே, பேப்பர் மேல போனா மொதல்ல என்கொய்ரிம்பாங்க. நாம கட்சி ஆளோட போனா நாஞ்சொல்ற டிரான்ஸ்பர் போட்டுக் கொடுங்க சார்னு இளிப்பாங்க. அவனுகளுக்கு மொறவாசல் செய்யணும். எதுக்கு அந்த சீண்ட்ரம் புடிச்ச வேல தம்பி – எம் ஏ என் சாரின் அனுபவ அறிவுரை மொழி. இடம் கருத்தபாண்டியார் கடை ஓய்வறை ).
கையெழுத்து இட்டதும் தாளை மேஜையில் வைத்துவிட்டு ஒவ்வொருவராக வெளியேறினர். கடைசியாக வெளியேறுவதற்கு முன்னர் ராஜசேகரன் சார் மெல்ல எம் ஏ என் சாரிடம் நெருங்கிப் போய் குனிந்து “சார், ஒரு விஷயம். எல்லாரும் போகட்டும்னு இருந்தேன். அது டிஷிப்ளின் இல்ல சார், டிஸிப்ளின். இப்போ பசின்னு சொல்லும்போது சி யை எப்டி சொல்லுதோம். அந்த சி உச்சரிப்பு சார்”
எம் ஏ என் சார் சற்று முன் வாங்கிய சூட்டை அப்படியே ராஜசேகரன் சார் மீது கடத்தினார் – “அது ரொம்ப கண்டிப்போட இருந்தா டிஷிப்ளின்னு சொல்லலாம். போங்க சார், வகுப்பில போயி பாடம் நடத்துங்க. இங்க வந்துட்டு… ” . ஆங்கிலம் 1947 ஆகி ஒரே எட்டில் வெளியே பாய்ந்தது.
இந்த நிகழ்வோடு எம் எஸ் சி சார் பள்ளியின் நாயகனாக வலம் வந்த நிகழ்வுகள் முடிவு பெற்றன. காலை பிரார்த்தனை நேரங்களில் பிரம்பு இன்றி அவரும் பிற ஆசிரியர்களோடு கலந்து நின்று கலைந்து செல்ல ஆரம்பித்தார். ஆசிரியர் அறையில் பூசப்பாண்டி சார், கணேசமூர்த்தி சார் போன்ற வெகு சிலருடன் மட்டுமே உரையாடினார். பிறருடன் சம்பிரதாய சொல்லாடலுடன் நிறுத்திக் கொண்டார். இத்துடன் அவர் இயல்புக்கு வந்து விட்டதாக பலரும் நினைத்திருக்க அவர் பனஞ்சாறு நொதித்து கள்ளாகிக் கொண்டிருப்பது புரிய சில நாட்களாகின.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
