எம்புட்டு நேரம்தான் குச்சிய வாய்க்குள்ளயே வச்சிருப்பீரு

This entry is part 24 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

தெய்வநல்லூர் கதைகள் – 24

சில விஷயங்கள் ஏன் அப்படி நடக்கின்றன என்பதை விளக்க முடியாத நிலை ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் உண்டு. எவ்வளவு காலம் கழிந்த பின்னரும்,  நாம் யோசித்துப் பார்த்தால் இப்படி நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்றாலும் எப்படி சில விஷயங்கள் நடந்தன என்பதை நம்மால் புரிந்து கொள்ளவோ, விளக்கவோ முடியாமலாகும் சூழலை நாம் ஒவ்வொருவரும் அனுபவித்திருப்போம் அல்லது இனி அனுபவிக்க இருக்கிறோம்.  இந்த விஷயங்கள் நம் ஒவ்வொருவருக்கும் வேறுவேறாக இருக்கும். ஆனால் எங்கள் “மகாத்மா அணியின்” பழைய உறுப்பினர் நண்பர்கள் அனைவருக்கும் விளக்க முடியாத சிலவற்றுள் இந்த ஒரு விஷயம் மட்டும் பொதுவானதாக இருக்கிறது. பிரேமுக்கும், எம் எஸ் சி சாருக்குமான முதல் சந்திப்பு தான் அப்படியான ஒரு விஷயம்.  

மாணவர்கள் ஒழுக்க விஷயத்தில், குறிப்பாக, பெண்பிள்ளைகளை சீண்டும் விஷயத்தில்  எம் எஸ் சி சார் மிகக் கண்டிப்புடன் இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். அந்த திங்கட்கிழமை காலை எம் எஸ் சி சார் சற்று முன்னதாகவே பள்ளிக்கு வந்திருக்கவும் வேண்டாம். வந்தவர் கருத்தபாண்டியார் தேநீர் விடுதி ஓய்வறைக்கு சென்றிருக்கவும் வேண்டாம். அதே நேரத்தில் கருத்தபாண்டியாரின் மச்சான் முறை கொண்டவர் வந்து முந்தைய நாளில் நிகழ்ந்த அவர் ஊர் திருவிழாவைக் குறித்து பேசியிருக்கவும் வேண்டாம். திருவிழாவின் முக்கிய அம்சமே இரவில் 9:30 மணிக்கு “கரண்ட் லைன்” மாற்றி விட்டதும் ஆரம்பிக்கும் கரகாட்டம் தான். பத்து, பத்தரை  மணி வரை நையாண்டி மேளமும், நாதஸ்வரமுமாக இடி மழை பொழிந்து தள்ளி இடைவெளி விடும் நேரத்தில் முதல் ஆட்டக்காரி களமிறங்குவார். கூடவே அன்று ஆடவிருக்கும் (இருவர் அல்லது மூவர்) ஆட்டக்காரிகளும், கோமாளியும் இறங்கி அரங்கை அடி வைத்து சுற்றி வணங்கி “சாமிப் பாட்டுக்கு” நின்ற இடத்திலேயே அலுங்காமல் ஆடி முடித்து, அடுத்த நையாண்டி வரிசை அடிக்கு கரகம் எடுத்து தலையில் தாங்கி அம்மனை வணங்கி வழக்கமான அடவுகளை அபிநயித்து சிறு இடைவெளி விடுவார்கள். மணி 11:30, 12:00 ஐ நெருங்கியிருக்கும். அதன் பின் கோமாளி அரங்கிற்குள் புகும்போது ஆண் பார்வையாளர்கள் பல் மருத்துவர் சோதிக்கும்போது வாயை வைத்திருப்பதுபோன்ற “அளகில்” தயாராவார்கள். பெண் பார்வையாளர்கள் அனைவரின் கன்னங்களும் புகையிலை அடைத்த வாய் போல வயது வேறுபாடின்றி சிரிப்பை உள்ளடக்கி சிவந்து இருக்கும். 

கோமாளியார் வந்து நாதஸ்வரத்துக்கு ஓய்வு கொடுத்து விட்டு (நாயனக்காரரே! எம்புட்டு நேரம்தான் குச்சிய வாய்க்குள்ளயே வச்சிருப்பீரு? குச்சிலருந்து தண்ணீயே வடிஞ்சிருச்சே . யே , பாவி! –  இனி வரப்போகும் கிளு கிளு வசனங்களுக்கு முதல் தொடக்கம்) கூட்டத்தைப் பார்த்து “சில பல” சைகைகளைக் காட்ட பார்வையாளர்கள் கெக்கலிப்பு அடுத்த ஊர் வரை கேட்கும். அதன் பின் உலகில் இருக்கும் அனைத்தையும் பாலியல் ரீதியிலான குறியீட்டுக்கு உட்படுத்தி சில பாடல்களை மேளக்காரர் துணையுடன் கோமாளி பாடுவார் ( ஏறாத மலை மேல எளங்கொய்யா ரெண்டு கனிஞ்சிருக்கு, ரெண்டு கொய்யா வாகா கனிஞ்சிருக்கு, அணிலு அது கொறிக்குமுன்னே அத்தான் வந்து அமுக்கட்டுமா?, (மாடு) மேயாத மலை மேல எளமாங்கா ரெண்டு கனிஞ்சிருக்கு, ரெண்டு மாங்கா வாகா கனிஞ்சிருக்கு, மந்தி வந்து பறிக்குமுன்னே மாமன் வந்து ருசிக்கட்டுமா? – என்பது போன்ற “கவித்துவக் கேள்விகளை” வைரமாய் கோமாளி வீச பார்வையாளர்கள் “மறைபொருளை” உணர்ந்து அறியாத சிறார்க்கு சொல்லி மகிழ…… இப்போது ஆட்டக்காரிகள் இறங்குவார்கள். சீழ்க்கை, கைதட்டு, ஊளையொலிகள் உறங்கும் தெருநாய்களைக் கூட எழுப்பி விடும். ஆட்டக்காரிகள் முத்தாய் எதிர்பாட்டு பாட பெண் பார்வையாளர்கள் தரப்பு சிரிப்பை எதிரொலிக்கும் ( வாழை ஏறி வழுக்கி விழுந்த மாமா, மலை ஏறி மாங்கா பறிக்க வாரீகளா? பாம்பு ஏறும் பொந்துக்குள்ள பல்லி வந்து பாயலாமா? தென்னைக்கு எடுத்த குழியில தண்டுக்கீரை நடலாமா?). இந்த “மறைபொருள் விவாதம்” அரங்க பார்வையாளர்களின் ஆதரவுக்கேற்ப (உரக்கடை பூதத்தான் அவர்கள் சார்பில் ஆட்டக்காரி அமுதாவிற்கு 5 ரூபாய், டெய்லர் காசியண்ணன் சார்பில் கோமாளிக்கு மேல்துண்டு…….) நீண்டு செல்ல அதன்பின் மீண்டும் அனைவரும் களமிறங்கி நாயனம், மேளம் முழங்க உச்ச வேகத்தில் நடனம். இந்த இடத்தில் பார்வையாளர்களும் தன்னிலை மறந்து ஆட்டத்தில் ஆங்காங்கே ஈடுபடுவார்கள். குறிப்பாக பெண் பார்வையாளர்கள் பார்வை படும் இடங்களில் நின்று ஆட கடும் போட்டி இருக்கும். இந்த இடத்தில் நடந்த சம்பவங்களைத்தான் கருத்தபாண்டியாரின் மச்சான் சொல்லிக் கொண்டிருக்கையில்    எம் எஸ் சி சார் கேட்க நேர்ந்தது. 

“மாமா, நேத்து நம்ம பயலுவ ஆடுன ஆட்டத்தப் பாத்தா ஆட்டக்காரிகளே தோத்தாளுவ போங்க… பயலுவ யாருங்கீக? இந்தா இங்கன படிக்க பயலுவ. ஓம்பதாப்பு , பத்தாப்பு தான் படிக்காணுவ. சாரத்த தூக்கிக் கட்டிக்கிட்டு உள் டவுசர் போடாம குஞ்சாமணி கழண்டு விழுத மாரில்லா ஆடுதானுவ? அதுவும் பொம்பளப் புள்ளைகள் இருக்க லக்குலயே போயி ஆடுதானுவ பாருங்க.. பேதீல போவாணுவ, பள்ளிக்கூடத்துல வாத்தியாருக பாடஞ்சொல்லிக் கொடுக்காங்களா, பாட்டுக்கு ஆடச் சொல்லிக் கொடுக்காங்களான்னு தெரியலையே “ – கருத்தபாண்டியார் மச்சானின் பேச்சு விவகாரமாகப் போவதை உணர்ந்து இடைமறித்து வேறு பேச்சை மாற்றினார். ஓரக்கண்ணால் உள்ளே மச்சானுக்கு கண்காட்ட மச்சான் தான் பேசியதில் எதுவோ சரியில்லை என உணர்ந்தார். அதே நேரம் எம் எஸ் சி சார் உள் ஓய்வறையிலிருந்து  வெளியே வந்தார். மச்சானை உற்றுப் பார்த்து விட்டு விடுவிடுவென சாலையைக் கடந்து பள்ளிக்குள் நுழைந்தார்.   

பிரார்த்தனை நேரத்தில் வழக்கமாய் பின்கட்டாக இருக்கும் கைகளுக்குள் அமர்ந்து முதுகு மறைப்பில் ஒளிந்து வரும் எம் எஸ் சி சார் கைப் பிரம்பு அன்று நம்பியார் முன் சுழலும் எம் ஜி ஆரின் கைவாள் போல காற்றில் அளைந்து தசைகளைத் தேடியபடியே இருந்தது. பிரார்த்தனைக்கு தாமதமாக வந்தவர்களை நிறுத்தியவர் திருவிழாவில் ஆட்டம் பார்க்கப் போனவர்கள் யாரெல்லாம் எனக் கேட்டார். எவருமே தாம் போனதாக ஒப்புக் கொள்ளவில்லை. நிற்பவர்கள் மீது கண்களை ஓடவிட்ட சார் சரியாக சிங்கியைப் பிடித்தார். திருவிழாவுக்கு போனதால்தானே தாமதம் எனக் கேட்டு கைப்பிரம்பை ஒருமுறை மட்டுமே சுழட்ட  பதட்டத்திலும், பயத்திலும் சாரை  மிகச் சரியாக மடைமாற்றினார் சிங்கியார் – சார், சார், சார்… ஸ் ஸ் ஸ் ஸ், யப்பா, சார், நான் திருழாக்கெல்லாம் போகல சார், ஆட்டம்லா பாக்கல சார், பாத்திருந்தா கண்ணு செவந்துருக்கும்லா. பாருங்க சார்” என பீதியில் விரிந்த கண்களை மேலும் விரித்துக் காட்டினார்.   எம் எஸ் சி சார் குற்றவாளிகளைப் பிடிக்க “எவிடென்ஸ்” கிட்டிய காவல்துறை அதிகாரியின் உளநிலையை அடைந்தார். ஆனாலும் எச்சரிக்கை மாறாமல் சிங்கியை தனியே இழுத்துப் போய் திருவிழா நடந்த  ஊரின் பையன்கள் எந்தெந்த வகுப்புகளில் படிக்கிறார்கள் என்ற தகவலை கேட்டறிந்தார். சிங்கியை ஆசிரியர் ஓய்வறையில் தன் மேஜைக்கு கீழே உட்காரச் செய்தார். தான் வரும்வரை அவ்விடம் விட்டு நகரக் கூடாது என சிங்கி எச்சரிக்கப்பட்டார் (சிங்கி நண்பர்களுக்கு முன்பே தகவல் சொல்லி அவர்களை உஷார்படுத்தி விடாமல் இருக்க எம் எஸ் சி சார் கையாண்ட விசாரணை முறை இது என அறிக). 

இவ்வளவும் நடந்து முடிய முதல் பீரியடில் பாதி முடிந்திருந்தது. பத்தாம் வகுப்பிலிருந்து தனது தேடுதல் வேட்டையை துவக்கிய எம் எஸ் சி சார் ஒவ்வொரு பிரிவிலும் அந்த ஊர் பையன்களை எழுப்பி விசாரித்தார். பலரும் அன்று பள்ளிக்கு வரவில்லை, வந்தவர்களும் தெளிந்த பளிங்குக் கண்களோடு இருந்ததால் அவர் வசம் ஒருவர் கூட சிக்கவில்லை. எங்களுக்கு இரண்டாம்  பீரியட் கணித வகுப்பு. ஆனால் அக்காக்களுக்கு ஆசிரியப் பயிற்சி வகுப்பு இருந்ததால் அன்றைய மதிய நேர விளையாட்டுப் பீரியடில் கணித வகுப்பு என மாற்றப்பட்டு விட்டது. ஆகவே நாங்கள் ஆசிரியர்கள் இல்லாமல் வெறுமே பேசிக் கொண்டிருந்தோம். டச்சிங் தான் பிரேமிடம் வந்து பிரேமின் கண்கள் மிகச் சிவந்து இருப்பதாகவும் சற்று நேரம் உறங்கும்படியும் சொன்னார். நாங்களும் வற்புறுத்தினோம். அதுவரை காலைப் பிரார்த்தனை நடந்த விதத்தால் கவரப்பட்டிருந்த பிரேம் எம் எஸ் சி சாரை புகழ்ந்து கொண்டிருந்தார் ( இல்லடா நயினார், ஆம்பளங்கள ஹேண்ட்ஸம்னு சொல்லணும், பியூட்டிஃபுல் ங்கறது கேர்ள்சுக்கு சொல்லணும். எம் எஸ் சி சார் நெஜமாவே ஹேண்ட்ஸம்மா இருக்கார்டா). எங்கள் வற்புறுத்துதலால் கடைசி பெஞ்சுக்கு போன பிரேம் டெஸ்க்கில் தலை கவிழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தார் (துரை கோஷ்டியார் அன்று வகுப்புக்கு வரவில்லை. திருவிழா அவர்கள் ஊரில் என்பதால் ஆடியவர்கள் யாரென உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும்). அப்போதுதான் பத்தாம் வகுப்பின் பிற பிரிவுகளை விசாரிக்கும் வரிசையில் எங்கள் வகுப்பிற்குள் முதல்முறையாக எம் எஸ் சி சார் நுழைந்தார்.  

நாங்கள் எந்த ஆசிரியரையும் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதால் எம் எஸ் சி சார் வகுப்பறையின் நான்கு படிக்கட்டுகளையும் ஒரே தாவில் ஏறி வகுப்பறைக்குள் நிழலை விட வேகமாக நுழைந்ததை உணரவே சற்று நேரம் பிடித்தது. பிறகு சட்டென அவருக்கு மரியாதை அளிக்கும் விதமாக எழுந்து நின்றோம். எம் எஸ் சி சார் எங்களை உட்காரும்படி சொல்லவில்லை. அவர் கண்கள் ஒவ்வொருவரையாக தொட்டுச் சென்றன. சிவாஜிக்கு  அப்போதுதான் கடைசி வரிசையில் உறங்கும்  பிரேம் நினைவு வந்தது. சிவாஜி லேசாகத் திரும்பி டச்சிங்கிடம் கண்களால் சைகை காட்ட, அதைக் கவனித்து விட்ட எம் எஸ் சி சார் பார்வையும் டச்சிங் கண்கள் சென்ற இடத்தை சென்று தொட்டது. டெஸ்க்கில் குப்புறப் படுத்து இரண்டாம் பீரியடே உறங்கும் ஒருவன்….    எம் எஸ் சி சார் கைகளில் பிரம்பு இறுகி நெறிபட்டது. சிவாஜி விபரீதத்தை உணர்ந்து பேசத் துவங்குமுன் எம் எஸ் சி சார் இரண்டே நீள எட்டு வைத்து பிரேமை நெருங்கியிருந்தார்.      

பிட்டுக்கு மண் சுமந்த சொக்கனுக்கு விழுந்த பிரம்படி மதுரையின் குடிகளுக்கெல்லாம்  விழுந்தது போல மொத்த வகுப்பும் வாயடைத்து கண்கள் பிதுங்க நின்றிருக்க பிரேமின் முதுகில் அந்த முதல் அடி விழுந்தது. எனக்கு ஒரு நொடி உலகையே நம்ப முடியவில்லை. பிரேமை ஒரு ஆசிரியர் பிரம்பால் அடிப்பதா? அதெப்படி சூரியன் மேற்கில் உதிக்க முடியும்?. ஆனால் அடுத்து நடந்தவற்றால் நாங்கள் மூச்சு திணறிப் போனோம். அடி விழுந்த நொடியில் பிரேம் சட்டென உடல் உதறி எழுந்து நின்றார். உறக்கமற்ற அலைச்சலால் சோர்ந்திருந்த உடல், சிறு உறக்கத்தால் செயலற்றிருந்த மனம் என அவரால் தானிருக்கும் நிலைமையை சரியாக உணர முடியவில்லை. தன் முன்னே நிற்பது தான் பேச விரும்பிய எம் எஸ் சி சார் என்பது உணர்வில் முதலில் பதிய பிரேம் இயல்பாக புன்னகைக்க முயன்று “குட்மார்னிங் சார்” என்றார். குட்மார்னிங்கை சொல்லி முடிப்பதற்குள் தான் அவரால் அடிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர பிரேமின் முகத்திலிருந்த புன்னகை கோணலாகியது. அதை எம் எஸ் சி சார் எப்படிப் புரிந்து கொள்ளக் கூடாதோ அப்படியே புரிந்து கொண்டு விட்டார். “நக்கல் சிரிப்பா ராஸ்கல் உனக்கு, பெரிய கலெக்டர் குட்மார்னிங்காம், குட்மார்னிங்கு” – ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு அடி பிரேமுக்கு விழுந்தது. வழக்கமாக கைகளை நீட்டச்சொல்லி அடி கொடுக்கும் எம் எஸ் சி சார் அன்று கை போன போக்கில் பிரம்பை வீசினார்.  பிரேம் உறைந்தது போல அப்படியே நின்றார். அவருக்கே இது கனவா என ஐயம் வந்ததாக பிறகு சொன்னார். “இந்த வயசுலயே ஆட்டம் கேக்குதோ ஐயாவுக்கு, திருட்டு ராஸ்கல்” என்ற எம் எஸ் சி சார் வார்த்தையால் பிரேம் உணர்வு மீண்டார். தான் வகுப்பில் உறங்கியதற்காகத்தான்   அடி என அதுவரை நினைத்திருந்த பிரேம் இது வேறு ஏதோ தவறான காரணம் என உணர்ந்ததும் சிலிர்த்து எழுந்தார். பெஞ்சிலிருந்து வெளியே வந்து எம் எஸ் சி சாரை ஒட்டி நின்றார். பிரேம் முகம் சிவந்து தணல் வீசும் உலை போல இருந்தது – “இப்ப எதுக்கு சார் என்னைய அடிச்சீங்க?” தன் கண்களை நேருக்கு நேராக பார்த்து இறுகிய முகத்துடன் ஒரு சிறுவன் கேள்வி கேட்டு நிற்பதை எம் எஸ் சி சாரால் நம்பவே முடியவில்லை. “காரணம் சொல்லிட்டு அடிங்க சார். என்ன தப்பு பண்னினேன் சார் நான்?”. எம் எஸ் சி சார் ஒரு நொடி உறைந்தார். அடிக்கு பயப்படும் மாணவர்கள் அல்லது தரையை முறைத்தபடி அடி ஒரு பொருட்டல்ல எனக்கு என  வாங்கிக் கொண்டு அமர்ந்து விடும் மாணவர்களை மட்டுமே பார்த்திருந்த அவருக்கு, தான் அடிப்பதற்கு காரணம் கேட்டு தன் கண்களை ஊடுருவும் பார்வை கொண்ட ஒரு மாணவனை பார்த்த அனுபவம் அதுவரை அவருக்கு  நிகழ்ந்திருக்கவில்லை. 

எம் எஸ் சி சாருக்குள் இருந்த வாத்தியார் சிலிர்த்தெழுந்தார் “ஓஹோ, ஐயா காரணம் தெரிஞ்சுதான் அடி வாங்குவீங்களோ? கொழுப்பு கூடிப்போச்சுன்னா அப்டித்தான் பொம்பளப் புள்ளைகளைப் பாத்து ஆடச் சொல்லும். பொம்பளப் புள்ளைகளைப் பாத்து டான்சா ஆடுத டான்ஸு” – வசதியாய் கைக்கு நேராக பிரேம் வந்து விட்டதால் அதுவரை தோள், முதுகு, மேற்கைகளில் விழுந்த அடி இப்போது ஆடை அணியாத தொடைகளிலும் ஆடுகால் தசைகளிலும் விழுந்தது. பிரேம் அடி விழுவதையே பொருட்படுத்தாதவர் போல “சார், நான் எப்ப சார் பொம்பளப் புள்ளைகளப் பாத்து டான்ஸ் ஆடுனேன்?” அவர் கண்கள் எம் எஸ் சி சார் கண்களைத் துளைத்தன. ஒரு நொடி சாருக்கு கை சோர்ந்த போது அவர் அருகில் இன்னொரு குரல் உரத்து ஒலித்தது – “சார், இவன் ஒண்ணும் அப்படியாப்பட்ட பையன் கிடையாது சார், அவனான்னு கேக்காம கொள்ளாம  இப்டி அடிக்காதீங்க சார்” – சிவாஜி எம் எஸ் சி சார் பிரம்பை ஒட்டி நின்றிருந்தார். என்னை அறியாமலேயே நானும் எழுந்து சிவாஜியுடன் நகர்ந்து வந்திருந்தேன். என்னை மீறி என் குரலும் எழுந்தது –“சார், அவன் உடம்பு சரியில்லன்னுதான் படுத்தான் சார், அதுவும் இப்ப எந்த வகுப்பும் கிடையாது. அவன் எப்ப சார் டான்ஸ் ஆடுனான்?”

“சார், அவன் ஒடம்பு சரியில்லாம இருந்தான்னு நான்தான் சார் கடைசி பெஞ்சுக்கு போய் படுக்கச் சொன்னேன். அவன் மாட்டேன்னுதான் சார் சொன்னான். மொதல்ல அவன் டான்ஸ் ஆட இங்க எங்க சார் பொம்பளப் புள்ளைக இருக்காங்க?” – நயினார் எழுந்து பேசிய வேகம் எங்களுக்கே வியப்பாக இருந்தது.

டச்சிங் எழுந்து பேசுவார் என எவருமே எதிர்பாரா நொடியில் எழுந்தார்-“சார், கண்ணுமண்ணு தெரியாம இப்டி அடிக்கீங்க. அதுவும் இவனப் போயி.. எந்தப் புள்ள சார் இவன் டான்ஸ் ஆடுனான்னு சொன்னிச்சு? நம்ம பள்ளியூடத்துல படிக்க ஒரு புள்ளையும் இவனச் சொல்லிருக்காது சார். விசாரிச்சுட்டு அடிங்க சார்” – டச்சிங் பார்வை முறைப்பாகவே இருந்தது. 

எம் எஸ் சி சார் செந்நாய்களால் சூழப்பட்ட சிறுத்தை போல தன்னை உணர்ந்தார். அவர் செயலைக் கண்டித்துப் பேசும் மாணவர்கள் ஒருவரைக் கூட இதுவரை அவர் பார்த்ததில்லை. இங்கே ஒரு பையனை அடித்தால் இத்தனை பேர் வந்து எதிர்ப்பது அவருக்கு திகைப்பை கொடுத்தது. ஆனாலும் இந்தப் பயகளுக்கு நாம என்ன பதில் சொல்றது என நினைத்தவரைப் போல மறுபடி பிரம்பை ஓங்கினார். அனைவரது பார்வையும் தன்னை வெறுப்புடன் பார்ப்பதை உணர்ந்த நொடி எம் எஸ் சி சார்  தன்னிலை இழந்தார் – “ என்னல, ஊர்க்காரனுவளா சேர்ந்துக்கிட்டு என்னையவே எதுத்துப் பேசுதீங்களா? ஊர்ல ஆட்டக்காரிக்கு சோடியா வேட்டிய தூக்கிக்காட்டி ஆடிட்டு இப்ப வந்து என்னல ஞாயம் பேசுத? பன்னிப் பயல…” இரண்டு அடிகள் முன்தொடையில் முத்திரை பதித்தன.  அதன்பின் அவரால் ஓங்கிய கையை இறக்க முடியவில்லை. டச்சிங் பாய்ந்து வந்து குறுக்கே நின்றார். நானும் சிவாஜியும் ஓடிச் சென்று டச்சிங் அருகே துணை அரண் போல நின்று கொண்டோம். நயினார் ஓடிச் சென்று லேசான உடல் நடுக்கத்துடன் இருந்த பிரேம் அருகில் தோளைப் பற்றிக் கொண்டு நின்றார். டச்சிங் முறைப்பு மாறாமல் “ சார், அவன் பிராமண குடிலருந்து வாற பையன். அவன் இப்டில்லாம் செஞ்சிருக்க மாட்டான் சார்” என்றார். 

எம் எஸ் சி சாரின் மூளையில் தவறான நரம்பை மிகச் சரியாக அந்த வரிகள் தொட்டன. அதுவரை நாங்கள் பார்த்திராத  எம் எஸ் சி சார் முகம் அப்போது வந்தது. கண்கள் இடுங்கி உள்ளே ஒடுங்கின. விரிந்த கண்கள் மேல் அடர்த்தியாக இருந்தபோது அழகாக இருந்த புருவங்கள் நெறிபட்டு சுருங்கும்போது வேறு மாதிரி மாறின. புன்னகை போன்ற மெல்லிய இளிப்பு ஒன்று உருவானது எம் எஸ் சி சார் முகத்தில் –“ஓஹோ, அம்பியா? அம்பின்னா  ஆட மாட்டாரோ ? நீங்கல்லாம் என்ன அம்பிக்கு தும்பிக்கையா? உரிச்சிருவேன் தோல”. எங்களைத் தாண்டி கைகளை நீட்டி குனிந்திருந்த பிரேமின் காதைப் பிடித்தார். பிரேமின் கண்கள் அவர் கண்களை சந்தித்த நொடியில் பிரேம் முகம் மாறியது. சட்டென அவர் கைகளைத் தட்டி விட்ட பிரேம் நாங்கள் யாருமே எதிர்பாராத விதமாக பெஞ்ச்சின் மேலேறி தாவி வகுப்பறை வாசலை அடைந்து விறுவிறுவென இறங்கி நடந்தார். செருப்பில்லாமல் வகுப்பறை தாண்டக்கூடாதென எங்களைக் கட்டுப்பாடாக வைத்திருந்த பிரேம் வெற்றுக்காலுடன் நடப்பதைப் பார்த்தோம். பிரேம் வெளியேறிய வேகத்தால் எம் எஸ் சி சார் குழப்பமானார். தப்பிக்கும் நோக்கமுள்ள பையன்கள் ஓடுவதைத்தான் அவர் பார்த்திருந்தார். ஆனால் உறுதியாக எடையைச் சுமந்து செல்வது போல கால்களை அழுந்த ஊன்றி நிமிர்ந்த முகத்துடன் நடந்து போகும் பையனை என்ன செய்வதென்று அவருக்கு முதலில் பிடிபடவில்லை. “டே, அவனப் போயி பாருங்க. எங்க போறான்னு பாருங்க” என்றார். இரு நொடிகள் கழிந்ததும்தான் எவருமே அவரவர் இடத்தை விட்டு நகரவில்லை என உணர்ந்தார். அவரால் சூழலை சகித்துக் கொள்ளவே முடியவில்லை. குரலை உயர்த்தினார்” ஏல, சொல்லுதேம்லா.. எவனாவது ரெண்டு பேரு போயி அவனப் பாக்கப் போறீங்களா இல்லையா? “ யாரும் அசையவில்லை. எம் எஸ் சி சார் முகம் இறுகியது. கண்களால் ஒவ்வொருவரையாக தழுவி நகர்ந்த பார்வை தெண்டிலிடம் சரியாக நின்றது-“போய் பாருடே நீனு” என்றார். கால் நொடி தயக்கத்துக்குப் பின் தெண்டில் தூது செல்லும் புறாவென வகுப்பிலிருந்து வெளியே பாய்ந்தார். 

வெளியே வந்த தெண்டிலுக்கு முதலில் பிரேம் வீட்டிற்குப் போயிருப்பார் என்று தோன்ற கேட்வாசலுக்கு ஓடிச் சென்று பார்த்தார். நீண்ட ரத வீதியில் எங்குமே பிரேம் தட்டுப்படவில்லை. ஓடினாலும் கூட  அவ்வளவு விரைவில்  ரத வீதியைத் தாண்டியிருக்க முடியாது என தெண்டிலுக்கு பட அவர் அடுத்த கட்டமாக கழிப்பறைப் பக்கம் சென்று பார்த்தார். பிரேம் இல்லை. தெண்டிலுக்கே சற்று பயமாக இருந்தது. ஆனால் பிரேம் எவருமே எதிர்பாராத, தெய்வநல்லூரே அதிர்ச்சி அடையும்படியாக ஒரு செயலை செய்யும் நோக்கில் பள்ளிக்கு உள்ளேயே இருந்தார். அடுத்த ஒரு மணி நேரம் தெய்வநல்லூர் மேல்நிலைப் பள்ளியின் வகுப்புகள் அனைத்தும் உறைந்து குசுகுசுப்பாக பேசிக் கொள்ளும் விதமாக செயல்கள் நடந்தன. அவற்றின் தொடக்கம் பிரேம். 

தொடரும்…

தெய்வநல்லூர் கதைகள்

தெய்வநல்லூர் கதைகள் 23 மொகரைல சவக்களை

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.