- இற்றைத் திங்கள் அந்நிலவில் -1
- சங்கப்பெண்கவிகள்
- மொழியென்னும் ஆடி
- காட்டாற்று வெள்ளம்
- காத்திருப்பின் கனல்
- இயற்கையை நோக்கியிருத்தல்
- தீரத்தின் ஔி
- வினோதத்து மென்மையும் செறுவகத்து கடுமையும்
- சந்தனம் வாடும் பெருங்காடு
- மறம் பாடுதல்
- சிறுகோட்டுப் பெருங்குளம்
- பொன்கழங்குகள்
- மலை தெய்வம்
- வேந்தர்களைப் பாடுதல்
- காவிரி சூழ் நாடன்
- தளிர் பெருமரம்
- நீர்த்துறை படியும் பெருங்களிறு
- பெருமழை காலத்துக் குன்றம்
- உள்ளம் தாங்கா வெள்ளம்
ஔவையார் குறுந்தொகையில் பதினைந்து படல்கள் பாடியுள்ளார்.
தலைவி தலைவனின் பிரிவால் உடல் நலம் குன்றும் போது அன்னை குறிசொல்லும் கட்டுவிச்சியை அழைத்து குறி கேட்கிறாள். தலைவி தன் காதலை அன்னைக்கு அறிவிக்க கட்டுவிச்சியிடம் தன் தலைவனின் குன்று பற்றிய பாடலை பாடக் கேட்கிறாள்.
அகவன் மகளே அகவன் மகளே
குறுந்தாகை 23
மனவுக் கோப்பு ஆன்ன நல்நெடுங்கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே

ஆலமரத்தினடியில் அமர்ந்து சங்குகள் முழங்க பறைகள் ஒலிக்க உண்மையை மட்டும் பேசும் கோசர்களின் சொற்களை போல திருமணத்தால் தலைவன் தலைவியின் காதல் உறுதிபட்டது என்கிறாள் செவிலித்தாய்.
பறைபட பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
குறுந்தொகை 15
தொல்மூ தாலத்துப் பொதியில் தோன்றிய
நாள்ஊர்க் கோசர் நன்மொழி போல
இன்னொரு பாலைத் நிலத்தலைவி தான் பிரிவின் துயர் தாளாமல் காற்று அசைத்து கலைக்கும் மரம் போல தூங்காமல் இருக்கிறேன். என் துயர் அறியாமல் இந்த ஊர் அமைதியாக தூங்குகிறது. இந்த ஊரை தாக்குவேன், முட்டுவேன், கத்தி எழுப்புவேன் என்கிறாள். இவள் பதின்வயது சிறு பெண்ணாக இருக்கக்கூடும் என்று இந்த பாடலை வாசிக்கும் தோறும் தோன்றும். இந்த ஊரை முட்டுவேன் தாக்குவேன் என்று சொல்பவள் சிறு பெண் தானே.
முட்டு வேன்கொல் தாக்குவேன் கொல்
குறுந்தொகை 28
ஒரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல் எனக் கூவு வேன் கொல்
வாகையின் முற்றிய காய்கள் காய்ந்து மரத்தில் தொங்கும். மரம் முழுவதும் காய்ந்த நெற்றுக்காய்கள் நிறைந்திருக்கும்.செல்லும் வழி நெடுகிலும் அவை காற்றில் அசைந்து சத்தமிடும். அந்த பாதையில் தலைவன் சென்றுள்ளான். வழி நெடுக கேட்கும் நெற்றுகளின் சத்தமாக இருப்பது தலைவனின் மனஓட்டங்களாக இருக்கக்கூடும்.
தலைவன் பிரிந்து செல்லமாட்டான் என்று பிரிவை பற்றி கேட்காது தலைவியும், தான் பிரிந்து செல்வதை பற்றி கேட்காத தலைவியிடம் பி்ரந்துசெல்வதை சொல்லாமல் தலைவனும் மனதிற்குள்ளேயே ஊடல் வளர்க்கிறார்கள். பிரிந்து செல்லும் காலம் வருகிறது. சட்டென்று பாம்பு கொத்தியதை போல மனம் கலங்க அந்தப்பிரிவும் வந்தது என்கிறாள் தலைவி.
நல்அராக் கதுவியாங்கு என
குறுந்தொகை: 43
அல்லல் நெஞ்சம் அலமலக் குறுமே
ஆம்பல் மலர் சூடி தலைவனுடன் புனலாட செல்லும் பரத்தை தலைவிக்கு சொல்லியனுப்புகிறாள். நான் புனலாட செல்கிறேன். எதிரிநாட்டு அரசன் ஆநிரையை கவர்ந்து சென்ற போது தன் படையுடன் சென்று பசுக்களை மீட்டு அவற்றை காத்துக்கொண்ட எழினி போல முடிந்தால் தலைவி தலைவனை காத்து கொள்க என்கிறாள்.
நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி
குறுந்தொகை: 80
முனை ஆன் பெருநிரை போல
கிளையொடும் காக்கதன் கொழுநன் மார்பே
நிறைந்த கிணறு போல இருந்த காதல் பொருளீட்ட சென்றதால் படிப்படியாக வற்றிப் போவதை உணரும் தலைவன் இதை நினைக்க நினைக்க வாழ்வின் இயல்பு அச்சத்தை தருகிறது என்கிறான்.
நீடிய மராஅத்த கோடுதோய் மலிர்நிறை
குறுந்தொகை 99
இறைத்து உணச் சென்று அற்றாங்கு
அனைப்பெருங் காமம் ஈண்டுகடைக் கொளவே
தலைவி தன்னுள்ளே புலம்புகிறாள். நினைத்தால் உள்ளம் வேகும். நினைக்காவிட்டால் வானம் வரை உயர்ந்து நிற்கும் இநத காதலின் இயல்பு தான் என்ன? என்கிறாள்.
உள்ளின் உள்ளம் வேகும்; உள்ளாது
குறுந்தொகை:102
இருப்பின் எம் அளவைத்து அன்றே; வருத்தி
வான்தோய் வற்றே காமம்
நீண்ட மலைத்தொடரில் பாம்புகள் சாகும்படி இடிஇடித்து விடாது மழை பெய்வது போல இந்த காதல் வந்தது என்கிறாள் இன்னொரு தலைவி.
இங்கு மரம்நிறைய காயாம்பூ பூத்து விட்டது. அது பூத்திருப்பதை பார்ப்பதற்கு மரத்தில் அமர்ந்திருக்கு மயிலின் கழுத்து மட்டும் தெரிவதை போல உள்ளது. தலைவன் சென்ற வழியில் கொன்றை பூத்திருப்பதை பார்த்திருப்பான் தானே. ஏன் இன்னும் வர வில்லை என்று தலைவி கேட்கிறாள்.
தன்னுடைய குறுந்தொகை பாடல்களில் ஔவை பிரிவால் உண்டாகும் உணர்வுகளை இடிஇடித்துப்பெய்யும் கனமழையாகவும்,சட்டென்று கொத்தும் பாம்பாகவும் சொல்கிறார்.
இதற்கெல்லாம் உச்சமாக இந்த அனைத்து உணர்வுகளையும் இந்தப்பாடலில் வைத்துவிடுகிறார். தலைவியை பிரிந்திருக்கும் தலைவன் தோழியிடம் தன் காதலை பற்றி இவ்வாறு கூறுகிறான்.
பச்சை மண்ணால் செய்யப்பட்ட சுடாத கலம் ஒன்று கனத்த மழையில் நனைவதை போல நானிருக்கிறேன். காதலின் பிரிவையும் ,காதலையும் உள்ளம் தாங்காத வெள்ளம் என்கிறான். பசும்கலம் மெல்ல மெல்ல மழையில் கரைவதைப்போல அவன் உள்ளத்தை காதல் கரைக்கிறது.
பெயல்நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல
குறுந்தொகை 29
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி
அரிது அவாவுற்றனை நெஞ்சே
இது போன்று சங்கப்பாடல்களில் பெண் கவிகளின் உவமைகளும் உணர்வு நிலைகளும் மனம் சார்ந்தவை. ஒரு பாடல் எழுதிய கவியிலிருந்து அதிகமான பாடல்கள் எழுதிய ஒவையார் வரை இந்தப்பாடல்களில் அகத்துறையில் பிரிவு சார்ந்த துயர் தீவிரமாக எழுதப்பட்டுள்ளது. உவமைகள் அந்த தீவிரத்தை உணர்த்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. மலர்களும் பருவகாலங்களும் மனதை உணர்த்த கையாளப்படுகின்றன.இந்தப்பாடல்களில் ஒருசில பாடல்களைத் தவிர பெரும்பான்மை பாடல்கள் தலைவி தோழி கூற்றாக வருபவை. இல்லத்திற்குள் இருந்து பாடும் பாடல்கள். சங்கப்பாடல்கள் நிகழ்த்து கலைக்காக எழுதப்பட்ட பாடல்கள் என்ற கருத்தும் உண்டு. எப்படியெனினும் வாழ்வின் சாரத்தை கைக்கொண்ட பாடல்கள். கோழி நிலத்தை கொத்திக்கொண்டிருக்கும் நண்பகலில் பாலை நிலத்தில் ஒரு தலைவி,’ அவன் இருந்தால் இந்த ஊரில் திருவிழா..அவன் இல்லாததால் ஆள்அரவமின்றி கிடக்கிறது’ என்று சொல்வது தன் மனதையே. சாறு கொள்விழா என்று சொல்வாள். வாழ்வின் சாரமாக அவர்கள் உணந்த காதலையும்,போர் மற்றும் அரசனின் வீரத்தையும் பற்றிய பாடல்கள் இவை. இரண்டுமே என்றுமுள்ளவை. நம் வாழ்வுடன் பிணைந்தவை . சங்கப்பாடல்களில் உள்ள பெண்மொழி, பெண்உணர்வு சார்ந்து தான் இந்த சங்கப்பெண்கவிகளின் பாடல்களில் திரிந்தேன்.குறிப்பாக அவர்களின் புறப்பாடல்களை பற்றி ஆர்வம் அதிகமாக இருந்தது. கவி மொழியில் அப்படி ஒன்றும் ஆண் பெண் பேதமில்லை என்று தோன்றுகிறது. அகப்பாடல்களை ஒரு தலைவன் தலைவியாக மாறி எழுதப்பட்டிக்கின்றன. புறப்பாடல்கள் அன்றைய வாழ்வை ,போரை, அரசை கவனித்து எழுதப்பட்டிருக்கிறன. அறம் சார்ந்த பாடல்கள் மனதை கவர்பவை. உதாரணத்திற்கு ஔவையின் புறநானூற்று பாடல்களை சொல்லலாம். மனிதன் சமூகமாக வாழத்தொடங்கி தன் மனதை,தான் வாழும் நிலத்தை,தன் மதிப்பீடுகளை உருவாக்கிக் கொண்டப்பின் எழுதிய பாடல்கள் இவை. இந்த பெண்கவிகளின் பாடல்கள் மனதை சார்ந்து ஆழமாக இருப்பதை உணர முடிகிறது. மழையில் வைக்கப்பட்ட பசுங்கலம் என்று ஒரு உவமையை ஔவை சொல்கிறார். இந்தப்பாடல்களையும் அவ்வாறு ஒரு கலமாக நாம் கருதலாம். கலத்தால் கரையாத மொழியின் கலம் இந்தப்பாடல்கள். இன்று அகழ்வாய்வில் கிடைக்கும் முதுமக்களுக்கான தாழி புறஅடையாளம். இந்தப்பாடல்கள் அகத்தின் அடையாளங்கள். எந்த காலத்திலும் மனிதன் தன் அடையாளங்களை இங்கு விட்டு செல்வதையே ஆகப்பெரிய கனவாக கொண்டிருக்கிறான். ஆனால் இந்தப்பாடல்களில் உள்ள கனவின் சிறகானது இந்தப்பாடல்களை ஒரு தொல் அடையாளமாக்காமல் இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. அந்த உயிர்ப்பே இலக்கியம். தொல் வாழ்விலிருநது இன்றும் உயிர்ப்புடன் இருப்பது அவர்கள் வரைந்த ஓவியங்களும் கவிதைகளுமே. அந்த உயிர்ப்பை உணரும் வாய்ப்பாக இந்த பாடல்கள் இருக்கின்றன.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
