வேந்தர்களைப் பாடுதல்

This entry is part 14 of 19 in the series கவிதாயினி

மாறோக்கத்து நப்பசலையார் நற்றிணையில் ஒரு பாடலும், புறநானூற்றில் ஏழு பாடல்களும் பாடியுள்ளார்.

அரசர்களின் நாட்டு வளம், போர்த்திறம்,கொடைப்பண்பு, அறம்,முன்னோர் பெருமை, இறப்பு போன்றவற்றை பாடும் பாடல்கள் இவை. பாடாண் திணை மற்றும்  கையறு நிலை துறையில் அமைந்த பாடல்களாக உள்ளன. 

புறநானூற்றுப் பாடல்கள் வழியே பாடல்கள் பாடப்பட்ட காலத்தைப் பற்றிய சில தகவல்களை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

பாடாண் திணை பாடல்களில் ஒரு அரசனின் படைத்திறன் பாடப்படும் போது மதில்கள் அகழிகள் பற்றிய செய்திகள் இடம்பெறும். 

கராஅம் கலித்த குண்டு கண் அகழி
இடம் கருங் குட்டத்து உடன் தொக்கு ஓடி
யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம்
கடு முரண் முதலைய நெடு நீர் இலஞ்சி
புறநானூறு 37

இந்தப் பாடல் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனின் போர்த்திறத்தைக் கூறும் பாடல். பகை நாட்டரசன் அரண் வலிமை உடையவன் என்றாலும் வளவன் அதை சிதைக்க வல்லவன் என்று நப்பசலையார் கூறுகிறார். 

இந்தப்பாடலில் பகை நாட்டரசனின் அரண் வலிமையை கூறும்போது அவன் கோட்டையைச் சுற்றியுள்ள அகழி பற்றி கூறுகிறார். கோட்டை  பாதுகாப்பு வீரர்களின் கையில் உள்ள தீப்பந்தத்தின் நிழல் அகழியில் விழுந்தால் கூட அதை கவ்விப்பிடிக்கப் பாயும் முதலைகள் உள்ள அகழி என்கிறார். இந்த ஒன்றைச் சொல்வதன் மூலம் அரண் வலிமையை அரசனுக்குச் சொல்லிவிடுகிறார். புறநானூற்றுப்பாடல்கள் சிலவற்றில் புலவர்கள் எச்சரிக்கிறார்களா, அல்லது வீரம் பாடுகிறார்களா என்ற மயக்கம் உண்டு.

புறவின் அல்லல் சொல்லிய கறை அடி
யானை வால் மருப்பு எறிந்த வெண் கடைக்
கோல் நிறை தூலாஅம் புக்கோன் மருக…
புறநானூறு 39

இந்தப்பாடல் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளனின் இயல்பையும் திறத்தையும் பாடும் பாடல். புறா தன் துன்பத்தை வந்து சொல்லிய முன்னோர்களின் வழி வந்தவன்  நீ. நீயும் அறத்திலிருந்து வழுவாதவன் என்கிறார் புலவர்.

இதே போல மலையமான் திருமுடிக்காரியை பற்றி ஒரு பாடல் பாடியுள்ளார்.

சினம் மிகு தானை வானவன் குட கடல்
பொலம் தரு நாவாய் ஓட்டிய அவ்வழிப்
பிற கலம் செல்கலாது…
புறநானூறு 126

இந்தப்பாடல் வென்றவர்களின் யானையின் பட்டத்திலிருந்த பொன்னைத் தாமரையாக்கி புலவர்களுக்கு அளித்துப் புகழ் பெற்றவர்கள் உனது முன்னோர்கள் என்று தொடங்கி நாட்டுவளம், நதிவளம், நில வளம் பற்றிப் பாடுகிறார். சேரஅரசர்கள் கலம் செலுத்தும் கடலில் வேறு எவரும் செலுத்த முடியுமா, அது போலவே எங்களின் நிலையும் உள்ளது. உன்னைக் கபிலர் பாடிய பின் நாங்கள்  என்ன பாட முடியும் என்று கேட்கிறார்.

மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணனின் தாதை இறந்துவிடுகிறார். அவன் முள்ளூருக்கு அரசனாகிறான். அந்த நிலையில் நப்பசலையார் மலையமானிடம் கூறுவதாக அமைந்த பாடல் இது.

அசுரர்கள் சூரியனை மறைக்க, திருமால் மீட்டு வந்து உலக இருளைப் போக்கினான். அதுபோல, போரில் தப்பித்த சோழன் முள்ளூரில் உதவி கேட்டு வந்த போது அவனுடன் சேர்ந்து போர் செய்து சோழனை அரசனாக்கினாய். உன் தந்தை இழந்த இந்தத் துன்பகாலத்தில் அவர் இடத்தில் அமர்ந்தாய். கோடையில் வந்த மழை போல தக்க நாளில் நாட்டிற்கு அரசனானாய் என்று வாழ்த்திப்பாடுகிறார்.

கல் கண் பொடியக் கானம் வெம்ப
மல்கு நீர் வரைப்பின் கயம் பல உணங்கக்
கோடை நீடிய பைது அறு காலை
இருநிலம் நெளிய ஈண்டி
உரும் உரறு கருவிய மழை பொழிந்தாங்கே ..
புறநானூறு 174

குளமுற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன் இறந்த பிறகு கையறுநிலையில் ஒரு பாடல் பாடியுள்ளார். உன் மீது சினம் கொண்டோ எதிர்த்து நின்றோ கலன் உயிரை பறித்திருக்க முடியாது. உன்னிடம் தானமாக உன் உயிரைப் பெற்று சென்றிருப்பான் என்று பாடுகிறார்.

செற்றன்று ஆயினும் செயிர்த்தன்று ஆயினும்
உற்றன்று ஆயினும் உய்வுஇன்று மாதோ
பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி
இரந்தன்றாகல் வேண்டும்_ பொலந் தார்
மண்டு அமர் கடக்கும் தானைத்
திண் தேர் வளவற் கொண்ட கூற்றே
புறநானூறு 226

அதே போல மற்றொரு பாடலில் மன்னன் இறந்த பிறகு நாட்டின் நிலையை பாடுகிறார். நகரில் ஏற்றி வைத்த விளக்குகள் இனிமேல் சுடராது. கண்கள் கெஞ்சும் வரை உறக்கம் கண்கூடாது. சகுனம் சொல்லும் முதுமகளும் முழுதாக எதையும் சொல்லத்தயங்குகிறாள். உன்னை இழந்த நாடு கைம்மை நோன்பு கொள்ளும் பெண் போல துன்பப்படுகிறது. இனி நாங்கள் என்ன செய்வோம்?

நெடு நகர் வரைப்பின் விளக்கும் நில்லா
துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்
அஞ்சுவரு குராஅல் குரலும் தூற் றும்
நெல் நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்
செம் முது பெண்டின் சொல்லும் நிரம்பா
துடிய பாண பாடுவல் விறலி
என்ஆகுவீர் கொல்?…
புறநானூறு 280

சேவல் குரல் எழுப்பும் புலரியில் அலியன் என்ற வள்ளலில் கடை வாயிலில் நின்று புலவர் பாடுவதாக அமைந்த பாடல்.

ஒண்பொறிச் சேவல் எடுப்ப ஏற்றெழுந்து
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர்
நுண் கோல் சிறு கிளை சிலம்ப ஒற்றி
நெடுங் கடை நின்று பகடு பல வாழ்த்தித்
தன் புகழ் ஏத்தினெனாக….
புறநானூறு 383

அவியனின் வள்ளல் தன்மையை கூறிய பின், அவியனிடம் வந்து சேர்ந்த பிறகு நான் வேறு எங்கும் செல்லவில்லை என்று பாடலின் இறுதியில் கூறுகிறார்.

மாறோகத்து நப்பசலையார் அகத்துறையில் ஒரு பாடல் பாடியுள்ளார்.

அணி நலம் சிதைக்குமார் பசலை அதனால்
அசுணம் கொல்பவர் கை போல் நன்றும்
இன்பமும் துன்பமும் உடை
தண் கமழ் நறுந்தார் விறலோன் மார்பே
நற்றிணை 304

அசுணம் என்ற பறவை இசை கேட்கும் திறன் உடையது. அதை  பிடிப்பதற்காக மெல்லிசையை இசைப்பார்கள். இசை கேட்டதும் அது எங்கிருந்தாலும் இசைக்கும் இடத்திற்கு வந்துவிடும். உடனே வேகமாக ஒலியை எழுப்பினால் அதைத் தாங்காமல் அது இறந்து விடும். இசை அதற்கு இன்பமாகவும் துன்பமாகவும் இருப்பதைப்போல தலைவனின் உறவும் பிரிவும் இருக்கிறது என்று தலைவி சொல்கிறாள்.

(தொடரும்)


கவிதாயினி

மலை தெய்வம் காவிரி சூழ் நாடன்

Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.