இயற்கையை நோக்கியிருத்தல்

This entry is part 6 of 19 in the series கவிதாயினி

இற்றைதிங்கள் அந்நிலவில் 6

கழார்க்கீரன் எயிற்றியார் சங்ககாலக்கவிஞர். இவரின் பாடல்கள் அகநானூறு, நற்றிணை,குறுந்தொகை பொன்ற சங்கஇலக்கிய தொகை நூல்களில் உள்ளன. 

இவர் காவிரிபூம்பட்டிணத்திற்கு அருகில் உள்ள கழார் என்னும் ஊரில் பிறந்தவர். கீரன் என்பரை மணந்தார். எயிற்றியார் என்பது குறிஞ்சி நிலப்பெண்ணை குறிக்கும் பெயர்.

ஒக்கூர் மாசாத்தியாரின் பாடல்களில் ‘முல்லை எயிறு என நகைக்கும் கார்காலம்’ முழுவதும் முல்லை மலர் அனைத்துப் பாடல்களிலும் மலர்ந்து கொண்டிருந்தது.

கழார்கீரன் எயிற்றியாரின்  பாடல்களில் பல நிறங்களில் பலவிதமான மலர்கள் மலரும் கார்காலத்தின் இறுதிநாட்களின்  சித்திரம் உள்ளது. தோன்றிப்பூ அகல் ஔியை போல சுடர்ந்தன என்று ஒரு பாடலில் வருகிறது. கார்த்திகை மாதமான இதே காலத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பாடலை இன்று வாசிக்கிறோம்.

விண் அதிர்பு தலைஇய,விரவு மலர் குழைய

தண் மழை பொழிந்த தாழ்பெயற் கடைநாள் [அகம்: 163]

இடிகள் முழங்கி மலர்கள் உதிர குளிர்ந்த மழை பெய்து முடிக்கும் காலம். எதிர்பார்ப்பின் மகிழ்ச்சி, கோபம் என அனைத்து உணர்வுநிலைகளும் குறைந்துவிட்ட காலம்.

அயிர்இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிழ

கொடியார் சென்ற தேயத்து மடியாது

இனையே ஆகிச் செல் மதி

மழைகாலத்தின் இறுதிநாட்களில் நின்று கொண்டு தலைவி அவன் சென்ற அன்றே மனமும் சென்று விட்டது என்கிறாள். மழைகாலத்தின் முதல் வெள்ளத்தை செந்தண்ணீர் என்பார்கள். மண்ணையும் தன்னுடன் கலக்கி எடுத்துச்செல்லும் நீர். 

நீடு கழைக்கரும்பின் கணைக்கால் வான் பூக்

கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர

பாசிலை பொதுளிய புதல்தொறும் பகன்றை

நீல் உண் பச்சை மறைத்து அடைச்சிய

தோல் எறி பாண்டிலின் வாலிய மலர

கோழிலை அவரைக் கொழு முகை அவிழ

ஊழ் உறு தோன்றி ஒண்பூத்த தளை விட…[ அகம் 217]

என்று தலைவி தான் காணும் நிலமெங்கும் மலர்ந்துள்ள மலர்களைக் காட்டி இத்தனை மலர்கள் மலர்கின்றன என்று சொல்கிறாள். கரும்புப்பூவில் இருந்து பகன்றை ,அவரை ,தோன்றி, முசுண்டை, கருவிளை ,முளரி என்று பலவித மலர்கள் மலரும் காலம் அது. மழைநின்று தூவானமாகிறது. தலைவன் இன்னும் வரவில்லை. நிலம் இத்தனை பூக்களை கொண்டு தன்னை அழகுபடுத்திக்கொள்ளும் காலத்தில், அணிகளை துறந்து தலைவி காத்திருக்கும் காலமாக இருக்கிறது.

 துணிதுவைக்கும் பெண் கஞ்சிப்பசையிட்டு முறுக்கி வைத்த துணி போல செடியில் பகன்றை மொட்டு விட்டிருப்பதை தலைவி பார்க்கிறாள்.

நலந்தகை புலைத்தீ பசைதோய்த் தெடுத்துத்

தலைப்புடைப் போக்கி தண்கயத்திட்ட

நீரில் பிரியாப் பரூஉத்திரி கடுக்கும்

பேரிலைப் பகன்றைப் பொதியவிழ் வான்பூ

இன்கடுங் கள்ளின் மணமில கமழும்

புன்கண் மாலையும் புலம்பும்

இன்றுகொல் தோழியவர் சென்ற நாட்டே [குறுந்தொகை 330]

நீரிலிட்ட முறுக்கிய துணி அவிழ்வதைப்போல பகன்றை மலர்ந்தது என்கிறாள். மெல்ல முறுக்கவிழ்க்கும் மனம் ஒன்று இந்தப்பாடலில் உள்ளது.

வாடையொடு நிவந்த  ஆய்இதழ்த் தோன்றி

சுடர்கொள் அகலின் சுருங்குபிணி அவிழச்

சுரிமுகில் முசுண்டைப் பொதிஅவிழ் வான்பூ

 விசும்பு அணிமீனின் பசும்புதல் அணியக்

களவன் மண்அளைச் செறிய,அகல்வயல்

கிளைவிரி கரும்பின் கணைக்கால் வான்பூ

அகலில் சுடர் எழும்புவதைப் செங்காந்தள் மலர்கிறது. இந்தப்பாடலில் மழை நின்ற இறுதிநாட்களின் வெளிச்சம் உள்ளது. முசுண்டை மலர்கள் பஞ்சு போல மலர்கின்றன. நிமிர்ந்தால் இரவின் கருத்த வானில் விண்மீன்கள் மலர்ந்துள்ளன. முசுண்டை மலர்களுக்கு powder puff flower என்ற பெயரும் உண்டு. அப்படி மென்மையாக மலரும் அவள் மனப்பூவின் ஈரத்தை, பொருளில் மனம் சேர்த்துள்ள தலைவன் நினைப்பானா? என்று தலைவி புலம்புகிறாள்.

தொல் நலம் சிதையச் சாஅய்

என்னள் கொல் அளியல்? என்னாதோரே

மழைக்காலமும் நிறைவடையப் போகிறது.  இயற்கையும் இத்தனை நிறங்களில் இதழ் விரிக்கிறது. தலைவன் இன்னும் வரவில்லை என்ற மனநிலையில் எழுதப்பட்ட பாடல். துயர் என்று கூட இந்தப்பாடல்களின் மனநிலையை சொல்லமுடியாது. இனியதுயர் கொண்ட ஒரு மனநிலை. 

இந்தப்பாடல்களின் கண்ணீர் இல்லை. இயற்கை மலர மலர அவள் மனமும் மலர்கிறது. ஒரு நெகிழ்வான மனநிலையின் ஈரம் உள்ள பாடல்கள் என்று இந்தப்பாடல்களை சொல்லலாம்.

போதவிழ் வான் பூ என்ற வரியை அடைமழைக்குப் பிறகு வானம் பூக்கும் வெளிச்சம் என்ற பொருளில் எடுத்துக்கொள்கிறேன். மண்ணும் விண்ணும் மலரும் காலம். காத்திருக்கும்  தலைவியின் மனமும் கண்களும் மலரும் காலம். 

மலர்தல் என்ற நிகழ்வை எத்தனை விதமாக சொல்லியும் கழார்கீரன் எயிற்றியாருக்கு தீரவில்லை. மீண்டும்…

புள்ளி நுண் துவலை பூவகம் நிறைய

காதலர்ப் பிரிந்த கையறு மகளிர்

நீர்வார் கண்ணின் கருவிளை மலர

[அகம்: 294]  என்கிறார்.

பூவகம் என்பது அவளின் மனஅகமே தான்.

நுண்ணுறை யழிதுளி தலைஇய

தண்வரல் வாடையும் பிரிந்திசினோக் கழலே [குறுந்தொகை 35]

தலைவியின் அத்தகைய மனம் கனலாகும்படி திரும்பி வராமல் இருக்கிறான்.

தலைவி பார்க்கும் நிலமெங்கும் பல நிறங்களில் மலர்களாக மலர்வது எது? தளிரையும் மலராக்கும் அது.  அதுவே அவளை மலர்விக்கிறது. 

இயற்கையில் மலர் என்பது ஒரு அழைப்பு. கழார்கீரன் எயிற்றியார் அத்தனைப்பாடல்களிலும் வித விதமான சொற்களிலும் அதையே சொல்கிறார் . இயற்கையை நோக்கியிருக்கும் மனம், தான் காணும் இயற்கையின் மொழியை தன் மொழியில் மாற்றிப்பார்க்கிறது. 

அகநானூற்று பாடல்களில் காத்திருப்பு மலர்களாக விரியும் போது குறுந்தொகை நற்றிணை பாடல்களில் பிரிவின் துயராக மலர்கிறது.

பழமழை பொழிந்தெனப் பதனழிந் துருகிய

சிதட்டுக்கா யெண்ணின் சில்பெயர் கடைநாள் [குறுந்தொகை 2]

காலம் தப்பிப்பெய்த மழையால் உள்ளீடு அற்று காய்க்கும் எள் செடி போல கார்காலத்தில் வராது போன தலைவனால் தலைவி மனமும் வெறுமை கொள்கிறது.

………….என் கண்

துஞ்சா வாழி தோழி! காவலர்

கணக்குஆய் வகையின் வருந்தி,என்

நெஞ்சுபுண் உற்ற விழுமத் தானே [குறுந்தொகை: 261]

அவன் வராததால் ஒரு கணமும் கண்களை மூடாத நாழிகை கணக்கனை போல நானும் மாறினேன் என்கிறாள் தலைவி.

துஞ்சாம் ஆகலும் அறிவோர்

அன்பிலர் தோழி நம் காதலோரே [நற்றிணை :281]

இத்தனையும் அறிந்து என்னை பிரிந்துதிருக்கும் தலைவர் அன்பிலாதவர் என்று தோழியிடம் சொல்கிறாள். 

வா என்று எத்தனை மொழிதல்கள், வரவில்லை என்று எத்தனை பழித்தல்கள் என்று பாடல்களை வாசிக்கும் போது தோன்றியது.

‘பெருநசை உள்ளமொடு வருநசை நோக்கி’ என்கிறாள் தலைவி. நசை என்பதற்கு ஆசை,அன்பு,நம்பிக்கை,ஈரம் என்று பலபொருள் உள்ளது. இந்தப்பாடல்களில் நான்கு சொற்களுமே ஒன்றாக உள்ளது. பெருநசை உள்ளம் [பேரன்பு மிக்க உள்ளம்] என்ற சொல்லே, இந்தப்பாடல்களில் இத்தனை நிறங்களில் பூக்கிறது. 

அன்பு என்பது ஒரு பார்வையில் நம்பிக்கை, இன்னொரு பார்வையில் காயாத ஈரம். அகமும் புறமும் பெய்யக்கூடிய அந்த மழை பூப்பித்த மலர்களுக்கு ஆயிரம் இதழ்கள்.

ஊரில் மாரியம்மன் திருவிழாவிற்கு ஒலிப்பெருக்கியில் பாடல்கள் ஒலிக்க விடுவார்கள். கம்பீரமான குரலில் ஒலிக்கும்  தேவி துதிகள். திருவிழாவின் கும்பல், கூச்சல்களுக்கு நடுவில் வீட்டு வேலைகளின் சலிப்புகளுக்கு இடையில் தலைக்கு மேல் எங்கோ  ஒலித்துக் கொண்டிருக்கும்.

‘ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப்பூ எங்கள் தேவி முகம்’

கேட்கும்போது சில சமயம் புல்லரிக்கும். [பக்தியால் இல்லை]. காதல், பக்தி இலக்கியங்களில் தான் ஆகச்சிறந்த மனஉணர்வுகளின் ஆழத்துக்குள் இருந்து சொல்லெடுத்து வைக்கப்பட்டிருக்கிறது. கழார்கீரன் இயற்றியாரின்  இந்தப்பாடல்களை வாசிக்கும் போது தேவி முகம் மட்டுமல்ல, தேவியின் மனமும் அப்படிதான் என்று தோன்றியது. எத்தனை  நிறங்களில் நான் மலர்ந்து காட்டுவேன்? எத்தனை சொற்களில் சொல்லிகாட்டுவேன்? என்று கழார் கீரன் எயிற்றியாரின் தலைவி சொல்கிறாள்.

நிஷாகந்தி

செல்லும் வழி எல்லாம்

விழி துளிர்த்துக்கொண்டே செல்கிறேன்

நிலவில் அவை நிஷாகந்தி

மலர்களைப்போல

உனக்கு மட்டுமாய் ஔிரட்டும்

பின்னூடே வந்துவிடு

என் சமரனே

                       கவிஞர் ப்ரிம்யா கிராஸ்வின்

கவிதாயினி

காத்திருப்பின் கனல் தீரத்தின் ஔி

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.