இற்றைத் திங்கள் அந்நிலவில் -1

This entry is part 1 of 11 in the series கவிதாயினி

பழந்தமிழ்ப் பாடல்களின் தொகுப்பான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் தமிழின் செவ்விலக்கிய நூல்கள் ஆகும். இவை சங்கஇலக்கியம் என்று அழைக்கப்படுகின்றன. 470 க்கும் மேற்பட்ட புலவர்களால் சங்கஇலக்கியத்தில் உள்ள பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. இதில் முப்பதைந்திற்கு மேற்பட்ட பெண்புலவர்களின் பாடல்கள் உள்ளன. இப்புலவர்களுள் ஔவையர் எண்ணிக்கையில் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். சங்கஇலக்கியம் பாடுபொருள் சார்ந்து அகப்பொருள், புறப்பொருள் என்று பகுக்கப்பட்டுள்ளது. இரண்டு துறைகளிலும் பெண்புலவர்கள் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள்.

பொதுவாக  பெண்புலவர்களில்  ஔவையாரும், காவற்பெண்டும்  பள்ளிப்பாடங்களில் நமக்கு அறிமுகமாகிறார்கள்.  காவற்பெண்டு பாடிய பாடலில் ‘புலி சேர்ந்து போகிய கல்லளை’  என்ற வரி தேர்வுகளில் கேள்விகளாக கேட்கப்படும். ‘புலி இருந்து சென்ற கல்குகை போன்று, அவன் இருந்த வயிறு இங்கே இருக்கிறது..  அவன் போருக்கு சென்றுள்ளான்’ என்று புறநானூற்று தலைவி சொல்கிறாள். இது போன்று சங்கப்பாடல்கள்  இளம்வயதில் அறிமுகமாகியிருந்தாலும்,சிறவயதில் அதை நாம் உள்வாங்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. சங்கப்பாடல்களை வாசிக்கும் போது அதில் எதாவது ஒருவரி மனதில் படிந்து தித்திக்கும்  அல்லது வெறுமையைப் படரவிடும். 

முதல் வாசிப்பில் சங்கப்பாடல்கள் மனதில் காட்சிகளாக விரியும். உதாரணமாக இந்தப்பாடலை வாசிக்கும் போது ஒரு பெண் கையில் காவல்காக்கும் கோலுடன் நின்று நெஞ்சில் கைவைத்து என்மகன் போருக்குச் சென்றுள்ளான் என்று உரக்கச் சொல்லும் காட்சி மனதில் தோன்றும். அடுத்த வாசிப்பில் கல்லளை உவமை புரியும். இப்படி அடுத்ததடுத்த வாசிப்பில் சங்கக்கவிதைகள் விரிந்து செல்வதை காணலாம். 

இந்த வாசிப்பு ஐவகை நிலங்கள் சார்ந்தும்,பெரும்பொழுதுகள்,சிறு பொழுதுகள் சார்ந்தும் நிறம் கொள்ளும். புறமே அகமாக, அகமே புறமாக மாறி மாறி வரும் இப்பாடல்கள் நமக்கு ஒரு அழகிய வாழ்க்கை தருணத்தை உணரசெய்யும். ஒரு தருணம் என்று சொல்ல முடியுமா, என்ற கேள்வி எனக்குண்டு. தனித்தனிப் பாடல்களாக இருந்தாலும் கூட வாசிக்கும் போது சங்கப்பாடல்கள் தனித்தனிப்பாடல்கள் என்ற உணர்வு ஏற்படுவதில்லை. தொடர்ந்து சங்கப்பாடல்களை வாசிக்கும் பொழுது  ஒரு பெரும் நாவலை வாசிக்கும் உணர்வே ஏற்படுகிறது. ஐந்துவகை நிலமும்,  தாவரங்களும் விலங்குகளும், பொழுதுகளும், காதலும் பிரிவும்,போருமாக வாழ்க்கை கொந்தளிக்கும் வெளியாக சங்கப்பாடல்கள் உள்ளன. அத்தனை புலவர்களும் இணைந்து எழுதிய ஒரு பெரும் நாவலை வாசித்துக்கொண்டிருக்கும் உணர்வு ஏற்படுகிறது. பக்கஅளவாக சொன்னால் குறைவாக இருக்கும்.  ஆனால் விரிந்த வாசிப்பனுபவத்தை தரக்கூடியது. 

ஒரு பாடலில் குறிஞ்சி  தினைப்புனத்தில் கண்ணீருடன் ஒரு தலைவி , அடுத்த பாடலில் பாலையின் தலைவி  ‘முட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்’ என்று பாடுகிறாள். இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்து நம் கைகளுக்கு வந்து சேர்ந்துள்ள இந்தக்கவிதைகளில் பெண்மனம் மொழியில் எப்படி வெளிப்பட்டிருக்கிறது என்று தேடும் முயற்சிதான் இந்த கட்டுரைத்தொடர்.    

அன்றையக் கவிதை இன்றைய வாசிப்பில் எத்தனை கவித்துவ தருணங்களைச் சாத்தியப்படுத்துகிறது அல்லது எப்படியான வாசிப்பனுபவத்தை தருகிறது என்று பார்க்கலாம்.

அஞ்சி அத்தை மகள் நாகையார்

இவர் அதியமான் அஞ்சியின்  அத்தை மகள். அதியமானை மணம் செய்த பின்பு தோழிக்கு உரைப்பதாக இந்தப்பாடலை எழுதியுள்ளார். பாடலை வைத்துப்பார்க்கும் பொழுது அதியமானுக்கும் நாகையாருக்கும் மூத்தவர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. திருமணத்திற்குப் பின் உள்ள காதலை கூறும் பாடல்.

வளைந்த பலாமரத்தின் குடம் போன்ற பழத்தை கையில் வைத்துக்கொண்டு ஆண்குரங்கு தன்சுற்றத்தை அழைக்கிறது. கடுவன் அந்தப்பழத்தை மயிலாடும் பாறையில் வைத்திருப்பது திருவிழாவில் முழவன் கைகளில் இருக்கும் முழவு போல் உள்ளதாம். அத்தகைய வளமான குன்றை உடைய நாடன் அவன்.

அன்பானவன், சேர்ந்தவரைப் பிரியாதவன், கொடுஞ்சொற்களை சொல்லாதவன் என்று திருமணத்திற்கு முன்  நீ சொல்லியது உண்மை தோழி. தொல்பாடலைப் பாடும் திறமையான பாணனின் பாட்டில், புதுமை கலந்து மேலும் அழகு கொள்வதைப்போல, திருமணநாளன்று இவன் கொண்ட அன்பை விட அடுத்தடுத்த நாட்களிலும் இனியவன் என்று தலைவி கூறுகிறாள்.

அகநானூறு : 352
முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும்பழம்
பல் கிளைத் தலைவன் கல்லாக் கடுவன்
பாடு இமிழ் அருவிப்பாறை மருங்கின்,
ஆடு மயில் முன்னது ஆக,கோடியர்
விழவு கொள் மூதூர் விறலி பின்றை
முழவன் போல அகப்படத் தழீஇ
இன் துணைப் பயிரும் குன்றநாடன்
குடிநான்கு உடையவன்; கூடுநர் பிரியலன்
கெடு நா மொழியலன் அன்பினன் என,நீ
வல்ல கூறி வாய்வதின் புணர்த்தோய்
நல்ல; காண் இனி காதல் அம் தோழீஇ!
கடும் பரிப் புரவி நெடுந்தேர் அஞ்சி
நல் இசை நிறுத்த நயம் வரு பனுவல்
தொல் இசை நறிஇய உரை சால் பாண்மகன்
எண்ணு முறை நிறுத்த பண்ணினுள்ளும்
புதுவது புனைந்த திறத்தினும்
வதுவை நாளினும் இனியனால் எமக்கே

இது குறிஞ்சித்திணை பாடல். பலாப்பழத்தின் இனிமை போல அவன் காதலும், அவனின் குணநலன்களும், அவன் மீதுள்ள என் காதலும் நாளும் வளர்வது என்று தலைவி சொல்கிறாள். பலாப்பழம் உண்ண உண்ணத் தித்திப்பது. [புலவரின் பெயரை சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். அகநானூறுக்கு ஏற்ற பெயர்தான். இன்னாரின் மகள் என்பதைப்போல,இந்தப்புலவர்  அஞ்சியின் அத்தை மகள்]

அணிலாடும் முன்றிலார்

மனிதர்கள் விலகிச் சென்ற பாலைநிலத்தின் ஊரில் ஒரு தனித்த இல்லத்தின் முற்றத்தில் அணில் விளையாடுகிறது. மக்கள் இல்லாத அந்த வீட்டை போல நான் தலைவன் அருகில் இல்லாது பொலிவிழந்து வருந்துகிறேன் என்று தலைவி  சொல்கிறாள்.

குறுந்தொகை 41 :
காதலர் உழையர் ஆகப்பெரிது உவந்து 
சாறுகொள் ஊரின் புகல்வேல் மன்ற
அத்தம் நண்ணிய அம்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில்
புலப்பில் போலப் புல்லென்று
அலப்பேன் தோழி அவர் அகன்ற ஞான்றே

இது பாலைத்திணை பாடல். இந்தப்பாடலில் திருவிழா நடக்கும் ஊராகவும் அணில் விளையாடும் தனித்த முற்றமாகவும் இருப்பது தலைவியின் மனம். அவன் அருகில் இருந்தால் மனத்திற்குள் திருவிழா. இல்லையெனில் அவன் நினைவுகள் விளையாடும் முற்றமாக அவள் மனம் இருக்கிறது.

‘சாறு கொள் ஊர்’ என்று சொல்கிறாள். சாறு என்றால் திருவிழா என்று பொருள்.  ஊரின் மகிழ்ச்சியாக திருவிழா இருக்கும் போது அவளின் கொண்டாட்டமாக அவனுடைய அருகாமை இருக்கிறது. அவன் இருந்தால் தான் இந்த ஊரே எனக்கு சுவை கொள்கிறது என்று அவள் கூறுவதாகவும் பொருள் கொள்ளமுடியும். [பழத்தின் சாறே அதன் சுவை அல்லவா]

நாகையார் பாட்டிலும் ‘விழவு கொள் மூதூர்’ வருகிறது. இந்தப்பாடலிலும் ‘சாறு கொள் ஊர்’ வருகிறது. இரண்டிற்கும் எவ்வளவு வேறுபாடு உள்ளது. 

கனிகளும் மரங்களும் செழித்த குறிஞ்சியின் மூதூர்,பால் பொட்டலான பாலை நிலத்து குரும்பூர் இரண்டும் தலைவி மனத்தின் புறவடிவங்கள். அது திருவிழா நடக்கும் ஊர் இது திருவிழா நிறைவுற்று  மக்கள் விடைபெற்ற ஊர்.

அவனுடைய அருகாமையும், அன்பும் மட்டுமே அவள் மனதை  குறிஞ்சி நிலமாகவோ, அனல் பறக்கும் வெட்டவெளி பாலையாகவோ மாற்ற போதுமானது.

இருட்டில் ஔிரும்
எனது மின்மினியல்லவா நீ
வீழும் எரிகல்லின்
துயரமும்,மோகனமுமல்லவா நீ..
பெருகியோடுகிற ஆற்றில்
சுழன்றலையும்
விண்மீனல்லவா நீ…
எடையற்ற சிறு இறகின்
மிதப்பல்லவா நீ
விழிக்க விடாதவொரு
மாயக் கனவல்லவா நீ…
கிளைகளுக்குள் தெரிகிற
நிலவல்லவா நீ..
எனது ஏகாந்த இரவின்
மனப்பிறழ்வல்லவா நீ
: கவிஞர் பொன்முகலி

பொன்முகலியின் இந்தக்கவிதை அஞ்சியின் அத்தை மகள் நாகையாரின் முழவு கொள் மூதூரையும் அணிலாடு முன்றிலாரின் தனித்த இல்லத்தையும் உள்ளடக்கி மேலும் விரிகிறதில்லையா? இன்று வரை காதலும், நிலமும், மனமும் சுழன்று சுழன்று சமைக்கும் தருணங்களின் உணர்வுகளை தன்னுள் அடைத்துக்காக்கிறது கவிதை என்னும் மொழிபிரபஞ்சம்.

-தொடரும்

Series Navigationசங்கப்பெண்கவிகள் >>

One Reply to “இற்றைத் திங்கள் அந்நிலவில் -1”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.