தீரத்தின் ஔி

This entry is part 7 of 11 in the series கவிதாயினி

சங்கப்பெண்கவிகளின் பாடல்களில் ஒப்பீட்டளவில் அகத்தை விட புறம் பற்றிய பாடல்கள் எண்ணிக்கையில் குறைவு. என்றாலும் துறவு,மன்னனின் வீரம்,இழப்பு,கைம்மை நோன்பு,தோற்றவனின் வீரத்தை வெற்றவன் முன்பாடுதல் என்று விதவிதமான பாடுபாருட்களில் பாடியுள்ளார்கள்.

மாறிப்பித்தியார் புறநானூறில் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார். இரண்டும் துறவறம் பூண்டவர்களின் துறவு நிலையையும்,முன்னர் உலகவாழ்வில் அவர்களின் நிலையையும் ஒப்பிடும் பாடல்கள்.

இவரின் இரண்டு பாடல்களும் தாபதவாகை துறையை சார்ந்தவை. இரண்டு பாடல்களிலும் பாடப்பட்ட தலைவனின் தலைமுடியின் அழகு மாறியுள்ளதை பற்றி சொல்லப்படுகிறது. சடாமுடி வளர்த்தல் மற்றும் நறுநெய்யிட்ட மின்னும் கருங்கூந்தல்  சங்கப்பாடல்களில் அங்கங்கே இருப்பதை காணலாம். துறவின் குறியீடாக புரிசடை உள்ளது.

‘கழைக்கண் நெடுவரை அருவியாடிக்
கான யானை தந்த விறகின்
கடுந்தேறல் செந்தீ வேட்டுப்
புறம்தாழ் புரிசடை புலர்த்து வோனே [புறம் : 251]

இல்லறத்திற்கு பிறகு துறவறம் ஏற்று வாழும் வாழ்க்கையைப் பாடுவது தாபதவாகை எனப்படுகிறது.

இரண்டுபாடல்களிலும்  துறவறத்தில் இருக்கும் தலைவனின் முன்னாள் காதல் வாழ்க்கை உள்ளது. அது  இந்தப்பாடல்களை அழகாக்குகிறது. அல்லது தலைவன் கொண்ட துறவின் தீவிரத்தை காட்டுகிறது.

ஓவத்து அன்ன இடனுடை வரைப்பில்
பாவை அன்ன குறுந்தொடி மகளிர்
இழைநிலை நெகிழ்த்த மள்ளன் கண்டிகும் [புறம்; 251]

இன்று மூங்கில்காட்டில் தன் சடாமுடியை உலர்த்தும் இவன்,அன்று பாவை போன்ற மகளிர் மனம் நெகிழ்ந்த அவனே தான் என்கிறார் மாற்பித்தியார்.

இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
சொல்வலை வேட்டுவன் ஆயினன் முன்னே [ புறம்: 252]

தன் இனிய பேச்சால் பெண் மனம் கவர்ந்த அவன் ,இன்று நிறம் மாறிப்போன தில்லைமலர் போன்று திரிந்த ஜடாமுடி உடையவனாக தாளி இலை பறிக்கிறான். [தாளி இலை தலைமுடியை தூய்மை செய்யப்பயன்படும் ஒரு இலை]. தில்லைமலர் எப்படி இருக்கும் என்று தேடிப்பார்த்தால் அப்படியே திரிந்த முடிக்கற்றைகள் போன்ற மலர் அது. சங்கஇலக்கியத்தில் சொல்லப்படும் உவமைகளில் உள்ள துல்லியம் இயற்கையுடன் இணைந்தது. இன்றுவரை தில்லைமலர் பூக்கத்தானே செய்கிறது.

இந்தப்பாடலில் உள்ள ‘சொல்வலை வேட்டுவன்’ என்ற சொல் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. சொல்லை வலையாக வீசி அன்பை பெறுவன் என்கிறார் மாறிபித்தியார். ஒரு வேளை தலைவன் கவிஞனாகவும் இருக்கக்கூடும்.

தன் இருப்பாலும்,சொல்லாலும் மனம் கவர்ந்த தலைவனை அருவியின் கீழ் மூங்கில் காட்டில் சடாமுடியுடன் மாறிப்பித்தியாரின் பாடல்கள் நமக்குக் காட்டுகின்றன.

‘வரி மணற் புனை பாவைக்குக்
குலவுச் சினை பூக்கொய்து
தண் பொருநைப் புனல் பாயும்
விண் பொருபுகழ் விறல்வஞ்சிப்
பாடல் சான்ற விறல் வேந்தனும்மே [புறநானூறு 11]

ஆற்றங்கரையில் பெண்கள் விளையாடும் நாடு அது. பேய்மகள் இளவெயினி இந்தப்பாடலை பாடியுள்ளார். பேய்மகள் என்று கூறப்படுவதால் பூசாரி அல்லது தேவராட்டியாக இருக்கலாம் என்றுக் கூறப்படுகிறது. இந்த சாத்தியம் நம் வாசிப்பை வேறொரு இடத்திற்கு நகர்த்துகிறது. ஊர்க்கோவில் வழிபாட்டில் மன்னன் புகழ்பாடும் தேவராட்டி.டயின் ரூபமும்,விழிகளும்,கனத்த குரலும்,கம்பீரமும் நம் மனதிற்குள்  வருகிறது.

புறப்பாடல்கள் நமக்கு அன்றிருந்த கைம்மை நோன்பு பற்றிய தகவல்களை தருகின்றன. அத்தனை விதமாக காதலைப் பாடிய சங்கப்புலவர்களே  இந்தப்பாடல்களையும் இயற்றியுள்ளார்கள்.  எரிப்பறந்தெடுத்த போரை போலவே கைம்மை நோன்பும் அன்றிருந்த வாழ்க்கைமுறை என்றாலும் அது நம் மனதை தைக்கவே செய்கின்றன. 

பெருங்கோப்பெண்டு தன் கணவன் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் இறந்ததும் தானும் அவனுடன் சிதைத் தீயில் இறங்க முடிவு செய்கிறாள். அதைத் தடுக்கும் சான்றோர்களிடம்,  “மலர்ந்த  தாமரை பூத்த பொய்கையும், தீயும் ஒன்றே,” என்கிறாள். 

‘…..எமக்குஎம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற
வள்இதழ் அவிழ்ந்த தாமரை
நள்இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே’ [புறநானூறு 246]

இந்த வரிகளின் எந்த வரிகளுக்கு பின்பு வருகிறது என்பது முக்கியமானது.

‘துணிவரிக் கொடுங்காய் வாள்போழ்ந்தட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது
அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்எள் சாந்தோடு புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை வல்சி ஆகப்
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்கு அரிது ஆகுதில்லை’

வெள்ளரிகாயின் விதைபோன்ற அரிசி சோற்றை நீரிலிட்டு உண்டு,பரல்கற்கள் உள்ள வெறும்தரையில் படுத்துறங்குவதை விட எனக்கு அந்த பெருங்காட்டின்  ஈமப்படுக்கை தாமரை பூத்த குளம் போன்றது என்கிறாள். கண்கலங்காது கடந்து செல்ல முடியாத பாடல் இது. போரில் கொல்லப்படுவது வேறு. இது வேறு இல்லையா? 

இதே போல தாயங்கண்ணியார்…

கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி
அல்லி உணவின் மனைவியொடு [புறநானூறு: 250]

என்கிறார்.

தாயங்கண்ணனாரின் மனைவி இவர். எப்பொழுதும் துவையல் தாளிகும் ஒலி கேட்டுக்கொண்டிக்கும் இல்லம். அது. யாவுக்கும் உணவிடும் பெரும்வள்ளல் அவன் . அவன் இறந்த பின்னே அவன் மனைவி கூந்தல் கொய்யப்பட்டு,வளையல் நீக்கப்பட்டு அந்த பந்தலின் கீழ் அல்லிஅரிசி உணவு உண்டு அமர்ந்திருக்கிறாள்.

அடுத்து பாரிமகளிரின் புகழ் பெற்ற பாடல். இளம் வயதில் இருந்து கேட்டப்பாடல் என்றாலும் கூட ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் அந்தப் பாடலின் ஃபாவமான கையறுநிலை நம்மை தொந்தரவு செய்யவல்லது.

அது,

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் [புறநானூறு 112] 

என்று தொடங்கும் போதே நினைவிற்குள் சென்றுவிடுகிறது. எத்தனை காட்சிகளுக்குள்ளும்,சொற்களுக்குள்ளும் அழைத்து செல்லும் சொல் அது. ஒரு கதை சொல்வது போல பாடல் தொடங்குகிறது. அன்றைக்கு ஒரு முழுநிலவு நாளில் நாங்கள் எங்கள் தந்தையுடன் எங்கள் குன்றில் இருந்தோம். இன்றைக்கு இந்த முழுநிலவு மட்டும் இருக்கிறது. வேறெதுவும் எங்களுடன் இல்லை. இந்தப்பாடலில் ஒரு நித்யதன்மை உள்ளது. எந்த வாழ்விற்கும் பொருத்தமான பாடல். இன்று வெவ்வேறு நாடுகளில் வாழும் ஈழமக்களுக்கு இந்தப்பாடல் தரும் பொருள் எவ்வளவு பெரியது.

இவ்வளவு உணர்வுபூர்வமான புறப்பாடல்களுக்கு மத்தியில் வெண்ணிகுயத்தியாரின் பாடல் ஒன்று, நவரத்தினமணிகளுக்கு மத்தியில் நிறமே இல்லாத தன் ஔியே நிறமாக ஒரு வைரம் போல இருக்கிறது.

நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக
களி இயல் யானைக் கரிகால் வளவ
சென்று அமர்க் கடந்ந நின் ஆற்றல் தோன்ற
வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே
கலி கொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப் புகழ் உலகம் எய்தி
புறப் புண் நாணி வடக்கிருந்தோனே [புறநானூறு 66]

நம்மை ஆட்கொள்ளும் பாடல் இது. யானை மேல் அமர்ந்த கரிகால் வளவனே உன்னுடைய முன்னோர் காற்றை ஆண்டு கடலில் கப்பலோட்டியவர்கள். அவர்கள் வழி வந்தவன் நீ. நீ இந்தப்போரில் உன் ஆற்றலால் வென்றாய். இத்தகைய வல்லமை உடைய உனக்கு நேர்நின்று போரிட்டு தன்னுடைய புறப்புண்ணிற்காக நாணம் கொண்டு வடக்கிருக்கும் சேரன் ‘நின்னினும் நல்லன்’ என்று கவிஞர் சொல்கிறார்.

வென்றவன் தோற்றவன் என்பதை தாண்டி அரசன் ஒருவனின் மாண்பிற்காக பாடப்பட்ட இந்தப்பாடல் புறநானூற்றின் பாடல் பெரும் வைரம் போன்றது.  தோற்பதும் வெற்றியே என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண்கவி பாடியிருக்கிறாள். எத்தனை ஔிமிக்க பாடல். இதை வடக்கிருந்து உயிர் விடுதல் அல்லது தோல்வி என்றுகொள்வதை விட ‘செயல் தீரம்’ என்றும் கொள்ளலாம்.

Series Navigation<< இயற்கையை நோக்கியிருத்தல்வினோதத்து மென்மையும் செறுவகத்து கடுமையும் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.