காலம் என்றே ஒரு நினைவும், காட்சியென்றே பல நினைவும்

காலம், வெளி, வெளிவளைவு, சார்பியல் கோட்பாடுகள், துகள்களின் தொலைதூரப் பிணைப்பாற்றல், துகள், அலை, காண்பவரின் கோணம் என்று இயற்பியல், அது மரபானதோ, குவாண்டம் போன்ற வளர்ந்து வரும் ஒன்றோ என்று தன் பரப்பை அதிகரித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில் வெளிவந்துள்ள குறிப்புச் சட்டகங்களும்/ சார்புச் சட்டகங்களும்,(Reference Frames) ஈர்ப்பு விசையும் (Gravity) என்பதைப் பற்றிய உரத்த சிந்தனையை சிறிது பார்க்கலாம் .

Visual search query image
The quantum nature of reference frames can even affect the perceived order of events.
Michele Sclafani for Quanta Magazine

மேலுள்ள படம், நாம், காணும் தோற்றத்தை, குவாண்ட குறிப்புச் சட்டகத்தின் இயல்பானது எவ்விதம் வடிவமைக்கிறது எனத் தெளிவாகக் காட்டுகிறது.

துணை அணுத்துகளின் அலைப் பண்பை கணிதமாக விளக்குவது குவாண்ட இயற்பியல். அந்தப் பண்பு, கால நேரங்களில் எவ்விதம் புலனாகிறது என்று அளவீடு செய்கிறார்கள். ஆனால், இது, அந்தத் துகளின் மற்ற அம்சங்களை, உதாரணத்திற்கு, அதன் நிலையைக் காட்டுவதில்லை. எனவே, நாம் அதன் நிலையை அறிய வேண்டுமென்றால், இடம், காலம் கொண்டு அந்த அலைச் செயல்பாட்டின் மதிப்பின் மூலம், துகளின் சாத்தியங்களுள்ள நிலையை அறிகிறோம்.

நாம் பார்க்கும் முன்னரே, அலைப் பண்பு பரவி விடுகிறது; பல்வேறு சாத்தியங்கள், பல்வேறு நிலைகள் என்ற முடிவு காணப்படுகிறது. அந்தத் துகளானது ஒரே சமயத்தில், பல இடங்களில் குவாண்ட சூபர் பொசிஷனில் இருக்கிறது. இந்த நிலைகள் பல்வேறு பண்புகளைக் குறிக்கலாம்- துகள் சுழற்சி போன்றவை.

குவாண்ட இயங்கியலில் பலவிதமான அணுகு முறைகளும், விளைவைப் பற்றிய பல விவாதங்களும் எப்போதுமே நிலவி வந்துள்ளன. அலையை அளவிடுகையில், அதற்கு என்ன நேர்கிறது என்பது சுவையான அடிப்படை. ஒரு துகளின் நிலையை எடுத்துக் கொள்வோம், அளப்பதற்கு முன்.  இது தென்படக்கூடிய பல இடங்களைப் பற்றிய சாத்தியங்கள் இருக்கும். அளக்கையில் ஒரு குறிப்பிட்ட இடம் ஏற்படுகிறது. கோபன்ஹேகன் இயற்பியலாளர்கள் சொல்வது: “அளவீடு செய்வது, இந்த அலைத் தன்மையைத் தகர்த்து விடும்; இந்தத் தகர்ப்பிற்கு முன்னதான, துகளின் நிலையைப் பற்றி பேச ஒன்றுமில்லை.” அளப்பதற்கு முன்பு தென்படும் குண அம்சங்கள் உண்மையில்லை என்று இக்கூற்று சொல்வதாக சில அறிவியல்வாதிகள் கருதுகிறார்கள்.

‘இந்த உண்மையற்ற நிலை’ என்பது ஐன்ஸ்டெய்ன் மற்றும் சில இன்றைய குவாண்ட இயற்பியலாளர்களுக்கு உவப்பாக இல்லை. அதைப் போலவே, அளவீடு செய்வதால், அலைப்பண்பு சரிகிறது என்பதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. முக்கியமாக, எதை ‘அளவீடு’ என்று சொல்வீர்கள் நண்பர்களே என்று கேட்கிறது இந்தக் குழு.

   .

இணை உலகங்களைப் பற்றி பேசும் அறிவியலாளர்கள், அலைப்பண்பின் உருவாக்கத்தை அதன் மதிப்பிலேயே ஏற்று, அது தகர்வதில்லை என்று சொல்கிறார்கள். 

நீங்கள் ஒரு நடைமேடையில் நின்று கொண்டிருக்கிறீர்கள். ஒரு வண்டியில் (ட்ராலி) அமர்ந்துள்ள ஒரு சிறு பெண், பந்தை, வண்டித் தளத்தில் போட்டு விளையாடுவதை நீங்கள் பார்க்கிறீர்கள். அவளுக்கு அது நேராகத் தளத்தில் விழுவது போலத் தெரிகிறது; ஆனால், உங்களுக்கோ, பந்து வளைந்து தரை நோக்கிச் செல்வது போல் தோன்றுகிறது. செயல் ஒன்றுதான், காட்சிப்படுதல் வேறாகத் தெரிகிறது. இதை குறிப்புச் சட்டகத்தின் குவாண்ட இயல்பு என்று இயற்பியலாளர்கள் சொல்கிறார்கள்.

குவாண்டம் இயற்பியல் இந்தச் சட்டகத்தை பெரும்பாலும் கண்டுகொள்ளாமல் தான் இருந்தது. அவர்களின் பரிசோதனைகளில் இரு கற்பனை நபர்கள், ஆலிஸ், பாப் இடம் பெறுவார்கள். இந்த இருவரும் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும், இருவருக்குமான, பொதுவான, குறிப்புச் சட்டகத்தைத் தான் அடிப்படையாகக் கொண்டு இவர்களின் கணக்கீடுகள் நடை பெற்று வந்தன. மேலே நாம் பார்த்த வண்டி, நடைமேடை, பந்து, சிறுமி, நீங்கள் எல்லாவற்றையும் சிந்தித்தால், ஒரே நேரத்தில் பல்வேறு சாத்தியங்களுள்ள நிலைகள் புலப்படும்.

பார்வை, பார்க்கப்படும் கோணம், பார்ப்பவர்கள், அவரவர் நிலைகள் என்பது பல திறப்புக்களுக்கு வழி செய்கிறது. இயக்கம் என்பதை அறிவதற்கு மரபு அறிவியல் வாதியான ந்யூட்டன், கலீலியோ, ஐன்ஸ்டெய்ன் ஆகியோர், குறிப்பிட்ட இடம் சார்ந்த சட்டகங்களைப் பயன்படுத்தினார்கள். குறிப்புச் சட்டகம் என்பது ஒருங்கிணைப்பட்ட அமைப்பு எனப் புரிந்து கொள்ளலாம். நேரத்தையும், நிலையையும், ஒரு பூஜ்ய புள்ளியாகவோ, தொடக்கமாகவோ கொண்டு இயங்கு விசை, ஈர்ப்பு விசை போன்ற பலவற்றை மரபார்ந்த இயற்பியல்வாதிகள் கணக்கீட்டில் கொண்டு வந்தார்கள். என்ஸ்டெய்னின் சார்பியல் கோட்பாடுகள் சிறப்பான ஒன்றைச் சொல்லியது- அது, வெளி அல்லது இடம் மற்றும் காலம் நெகிழ்வுத் தன்மை கொண்டது, இவை நீளும், விரியும், கோணலாகும் அல்லது வளையும் தன்மையுடன் உள்ளன. ஐன்ஸ்டெய்ன் சொன்னதன் படி, ஈர்ப்பு விசை என்பது, மிகப் பொருண்மையான பொருள், கால-இடம் எனும் துணியில் உண்டாக்கும் வளைவு என்பதே. இந்தக் கூற்றிலிருந்து ஒரு கிளைச் சிந்தனை எழுந்தது. அது குவாண்ட குறிப்புச் சட்டகத்தைப் பற்றிய ஒன்று. 1984லில் இது சொல்லப்பட்டாலும், 2019ல் தான் ஒரு கருதுகோளாகக் கவனிக்கப்பட்டது.. 

குவாண்டத்தின் மிகச் சிறந்தவைகளாக இரண்டைச் சொல்வோம். அந்த இரண்டும் என்ன? ஒன்று சூபர் பொஸிஷன், மற்றது என்டேங்கில்மென்ட். (Super position and Entanglement)

சூபர் பொஸிஷன் என்பதைத் தமிழாக்கத்தில் மேல் நிலை எனக் குறிப்பிடுவது பற்றி எனக்கு ஐயம் உண்டு. ஒரே சமயத்தில், சாத்தியங்களுள்ள பல நிலைகளில் ஒரு பொருள் இருப்பதைக் குறிக்கும் நிலை அது. குவாண்டப் பிணைப்பு என்ற என்டேங்கில்மென்ட், வெகு தொலைவில் இருந்தாலும், இரு துகள்கள் ஒரே குவாண்ட நிலையில் இருப்பதாகும். அதாவது, இங்கிருக்கும் ஒரு துகளை நாம் அளவிடுகையில், எங்கோ தொலைவில் இருக்கும் துகளின் நிலையும் துல்லியமாகப் புலனாகிறது.

Visual search query image

லுகா அபாடுலா, ஆன் கேத்ரின் டெலா ஹேமெட், விக்டோரியா காபெல்- வியன்னா பல்கலை, குவாண்டம் ஆப்டிக்ஸ், குவாண்டம் இன்ஃபார்மேஷன் துறை- (Luca Apadula, Anne- Catherine de la Hamette, Viktoria Kabel -Physicists at Vienna Univ,Quantum Optics and Quanatum Information)

குறிப்புச் சட்டகத்தின் தேர்வே, எந்த அமைப்பு, சூபர் பொசிஷனில் அல்லது பிணைப்பில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது என்று இவர்கள் சொல்கிறார்கள்.

அது எப்படி என்று பார்ப்போமா? நம் ஆலீசையும், பாபையும் மீண்டும் அழைப்போம். ஆலீஸின் கவனம், பல்வேறு இடங்களில் இருக்கக்கூடிய சாத்தியமுள்ள ஒரு குவாண்டப் பொருளில் இருக்கிறது. பாபின் கோணத்திலிருந்து ‘ஆ’ இருக்கும் இடம் ஒரு குறிப்பிட்ட பரப்பிற்குள் உள்ளது. ஆனால் ‘ஆ’பார்வையில் ‘பா’ இருக்கும் இடம் குறிப்பிட்ட பரப்பில் தென்படவில்லை. ‘பா’ தான் சூபர் பொசிஷனில் இருப்பதாகத் தோன்றுகிறது.

இன்னும் சற்று உள்ளே போகலாமா? ‘பா’ இரண்டு இடங்களிலும் சூபர் பொசிஷனில் இருக்கும் ஒரு குவாண்டப் பொருளுடன் இருந்தால்? ‘பா’வின் சாத்தியமான இடத்தைப் பொறுத்து, ‘ஆ’ வின் குவாண்ட நிலை இரு மாறுபாடுகள் கொண்டதாகப் புலப்படுகிறது. ஏனெனில், ‘பா’வின் குவாண்ட நிலையைத் தீர்மானித்தால், ‘ஆ’வின் நிலையும் புலனாகிறது. அவை இரண்டும் பிணைப்பில் உள்ளன. இந்தக் கருத்தைச் சொல்லி ஆன் எழுதுகிறார் “முழுமையானதும், முக்கியம் எனவும் நாம் கருதும் குணங்கள், ஒன்றுக்கொன்று சார்புடையவை. குவாண்ட குறிப்புச் சட்டகங்கள், நிகழ்வுகளின் ஒழுங்கமைப்பைக் கூட பாதிக்கும் வண்ணம் இருக்கும்.  குறிப்புச் சட்டகம் ஒன்றில் நாம் ஒரு குறிப்பிட்ட நேரம் ஒரு சிறு மணி ஒலிப்பைக் கேட்டு கவனிக்கிறோம் என வைத்துக் கொள்வோம். ஆனால், மற்றொரு குறிப்புச் சட்டகத்தில், ஏதோ ஒரு நிகழ்வின் முன்னரோ, பின்னரோ இது சூபர் பொசிஷனில் அமையும். குறிப்பிட்ட நேரத்திலா அல்லது பல நிகழ்வுகளின் முன் பின்னாக அமையும் சூபர் பொசிஷனிலா என்பதை குறிப்புச் சட்டகம் நிர்ணயிக்கிறது.

குவாண்ட உலகில், இந்த குறிப்புச் சட்டகம் தனக்குண்டான இடத்தைப் பெற வேண்டும் என்று ஸ்விஸ் ஃபெடெரல் இன்ஸ்டிடுயூட் ஆஃப் டெக்னாலஜி, ஜூரிச்சில் (Swiss Federal Institute of Technology, Zurich) கோட்பாடு இயற்பியலாளராகப் (Theoretical Physicist) பணிபுரியும் ரினாடோ ரென்னர் (Renato Renner) சொல்கிறார். எந்தக் குறிப்பிட்ட சட்டகத்திலிருந்து இதை நாம் கவனிக்கிறோமோ, அதுவும் இயக்கத்தில் உள்ளது என்பதே நாம் நினைவில் கொள்ள வேண்டியது.

Renato Renner

காஸ்லாவ் ப்ருக்ஞர் (Caslav Brukner) என்ற அறிவியலாளர், பல காலங்களாக நாம் சூபர் பொசிஷன், குவாண்டச் சிக்கல் இவற்றைப் பற்றி பேசி வந்திருந்தாலும், குவாண்டக் குறிப்பு சட்டகம், இவற்றைத் தெளிவாக்க உதவும் என்று சொல்வதை ரென்னர் ஏற்றுக் கொள்கிறார். குவாண்ட சிந்தனை பரிசோதனைகளில் நாம் எதிர் கொள்ளும் முரண்பாடுகளுக்குத் தீர்வு காண முடியும் எனவும் சொல்கிறார்.

Časlav Brukner | Perimeter Institute

காஸ்லாவ் ப்ரூக்ஞர்

குவாண்ட குறிப்புச் சட்டகங்கள் காட்டும் தர்க்கத்தின் வழியே, குவாண்ட ஈர்ப்பு என்பதைப் பற்றி சிறப்பாகப் புரிந்து கொள்ளலாம், உலகின் அடிப்படை விசைகளின் வரிசையில் இந்த ஈர்ப்பு விசையையும் புரிந்து கொள்ள முடிந்தால், அது இயற்பியலில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தும் என்று காஸ்லாவ் மற்றும் அவரது சக பணியாளர்கள் கருதுகிறார்கள். பெரும் ப்ரும்மாண்டத்தின் தொடக்கத்தில் இருப்பதாக ரென்னர் வியக்கிறார்.

ஐன்ஸ்டெய்ன் சொன்னதன் படி, ஈர்ப்பு விசை என்பது, மிகப் பொருண்மையான பொருள், கால-இடம் எனும் துணியில் உண்டாக்கும் வளைவு என்பதே. இரண்டு இடங்களில் சூபர் பொசிஷனில் ஒரு பொருள் இருக்குமெனில், இடம்- காலம் அதை எப்படி வளைக்கும்? நாம் இதுவரை அறிந்துள்ள குவாண்ட இயற்பியல், ஈர்ப்பு விசை, இவற்றைக் கொண்டு இக்கேள்விக்கு பதில் சொல்ல முடியாது என்று காபெல் சொல்கிறார். குறிப்புச் சட்டகத்தின் நிலை ஒரு சூபர் பொசிஷனில் இருந்தாலும், அந்தப் பொருண்மைப் பொருளை ஒரு தீர்மானமான இடத்தில் வைத்து, ஈர்ப்புப் புலத்தைக் கணக்கிடலாம் என்று அவர் சொல்கிறார். பொருத்தமான, வசதியான குறிப்புச் சட்டகம், கடினமான இயற்பியல் முரண்பாடுகளுக்கு நமக்குத்  தெளிவான விடைகளைத் தரலாம்.

குவாண்ட குறிப்புச் சட்டகங்களும், ஈர்ப்புப் புலனும் என்ற இந்தப் புதிய எண்ணம், மிகமிக் குறைந்த எடையுள்ள பொருட்களை, சூபர் பொசிஷனில் வைத்து ஆராய்ச்சி செய்வதற்கு உதவலாம். ஒன்றுடன் ஒன்று சூபர் பொசிஷனில் இருக்கும் இரு பொருட்களை இரு வேறு இடங்களில் வைத்து அவற்றின் ஈர்ப்புப் புலத்தை அளவிடும் முயற்சியில் சியாரா மார்லெட்டோ, (Chiara Marletto) வ்லாட்கொ வீடல் (Vlatko Vedral) ஈடுபாடு காட்டுகிறார்கள். வளர்ந்து வரும் இந்தத் துறையானது, குவாண்டம், ஈர்ப்பு இவற்றிற்கிடையேயான உட்செயல்களையும், குவாண்ட ஈர்ப்பு என்ற புது அறிதலையும் கொண்டு வரும் என ஆர்வம் எழுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் ரென்னரும் அவரது இணைப் பணியாளருமாகிய Daniela Frauchiger செய்த ஒரு குவாண்ட சிந்தனைச் சோதனை, தர்க்க முரண்கள் கொண்ட விடையைக் கொடுத்தது. அதாவது, குவாண்டத் தேற்றம் என்பது உலகம் முழுதும், அது அணுவோ, மனிதனோ, செல்லுபடியாகும் ஒன்று என்ற கோட்பாட்டை ரென்னரின் சோதனை நிரூபிக்கவில்லை. இப்போது அவர் சொல்கிறார்: ‘குவாண்ட குறிப்புச் சட்டகங்களை பயன்படுத்தியிருக்கத் தவறினோம். இனி அதை நேர் செய்ய முயலலாம்’.

அது அவ்வளவு எளிதல்ல. குவாண்ட குறிப்புச் சட்டகங்கள், விடை தெரியாத பல கேள்விகளைக் கொண்டுள்ளன. மரபான குறிப்புச் சட்டகங்களில், உங்கள் கோணத்தை/பார்வையை ஒன்றிலிருந்து மற்றொன்றிக்கு மாற்ற முடியும். இது குவாண்டத்தில் சாத்தியமா என்பது பெரும் கேள்வி. மனித முயற்சிகள் இதிலும் வெற்றி காணலாம்.

குவாண்ட அமைப்பு, அணுக்கடிகாரம், உணர்விகள் இவைகளுக்கு துல்லிய கிளர்கதிர் (Laser) தேவை. அப்படியான ஒரு லேசர் கருவியை, குவாண்ட உபயோகத்திற்காக அமைத்திருக்கிறார்கள். எடை குறைந்த 780 என் எம் (780 nm) தீப்பெட்டி அளவில் உள்ள இது, ருபீடியம் அணுக்களின் பண்புக் கூறுகளை ஒரு ஒளிமியைச் செலுத்திப் பெற்று அதை சிலிகான் நைட்ரேட் சிப்பின் மீது மேவி, கையடக்கமான, எங்கும் பயனாகக் கூடிய, முக்கியமாக குவாண்ட பரிசோதனைகளுக்கு உதவும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சத்தமில்லாமல் இயங்கும்.

( https://interestingengineering.com/innovation/matchbox-sized-780nm-laser-quantum-research) இது ஒருக்கால், குவாண்ட குறிப்புச் சட்டகங்களைத் தரப்படுத்த உதவலாம். 

மேலே வந்துள்ள கருத்துக்கள், சார்பியல் கோட்பாட்டை ஒட்டி இருப்பதாகத் தோன்றுவது இயற்கை. ஒரு சின்ன வேறுபாட்டை குறிப்புச் சட்டகம் சிந்திக்கிறது. பார்வையாளர், பொருள், கோணம் என்பதயெல்லாம் கணக்கில் கொண்டாலும், பார்க்கும் நபரின் நிலையாத் தன்மைக்கு ஒரு சிறப்பிடம் இருக்கிறது. அசையும் அவைகளில் அசையாத, ‘ரியாலிடியைச் சொல்லும் அளவீடுகள் எவ்வளவு தூரம் நம்பத் தகுந்தவை? கண்ணிற்குத் தெரியாத அணுத்துகளின் அலைத் தன்மை இதை எதுவரை பாதிக்கிறது?

அத்வைதம், ஹைசன்பெர்க், போர்ஹெஸ்

நிலையாமை எனச் சொல்வது, ‘எதுவும் நிரந்தரமல்ல, மாறுதலுக்கு உட்பட்டு அழியும்’ என்ற அர்த்தத்தில் மட்டுமல்ல. ஒன்றின் ஒரு பண்பை நாம் அறிய முயலும் போது, பார்ப்பவர், பார்க்கப்படுவது என்ற இரண்டு மட்டுமே புலனாகிறது. அதையே உண்மை என எடுத்துக் கொள்கிறோம், ஆனால், பார்ப்பவரின் கோணம் என்பதை நம் வேதாங்தங்களும், குவாண்டம் இயற்பியலும் வலியுறுத்துகின்றன. பார்ப்பதும் பாதிக்கும் என்பது இவற்றின் அடிப்படை. இதன்படி உண்மைத் தன்மை என நாம் புரிந்து கொள்வது நிலையான ஒன்றல்ல, பலவாறாகத் தோன்றும் அனைத்தும் அடிப்படையில் தொடர்பில் உள்ளது என்ற நல்லதொரு திறப்பைத் தருகிறது. தன்னுணர்வு, உங்கள் காட்சிகளின் தோற்றத்தை உங்களில் பிரதிபலிக்கிறது, ஒரு கடலைப் பார்க்கிறோம். என்ன தெரிகிறது? அதன் நிறம், அலை, அலை நுரை, அது எழுப்பும் ஒலி, தண்ணீர் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், அலையை, அதன் நுரையை, அந்த ஒலியை மட்டுமே கடல் என்று சொல்வோமா? அந்தத் தண்ணீர் இல்லையேல் அது கடலாகுமா? சென்ற கணம் உங்கள் கால்களைத் தழுவிய அதே அலைதான் இந்தக் கணத்தில் உங்கள் பாதங்களைத் தொடுகிறதா? இந்தக் கேள்விகளைச் சிந்தித்தால், நம் தத்துவங்களுக்கும், குவாண்டத்தில் சொல்லப்படும் கருத்துக்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமை தென்படும், குவாண்ட இயற்பியல், சாத்தியங்களைப் பற்றிப் பேசும் ஒன்று. ஹைசன்பெர்க்கின் ‘அன்செர்டனிடி பிரின்சிபல்’, நிலையையும், இயக்கத்தையும் ஒரே நேரத்தில் துல்லியக் கணக்கில் கொண்டு வருவது கடினம் என்று சொல்கிறது. தேற்றக் கோட்பாடுகள், அறிவு பூர்வமான அலசல்கள், நம் அறிதலின் எல்லைகள், நம் மொழிகளின் போதாமைகள் அனைத்தும் நமக்கு முழு உண்மையைக் காட்டுவதில்லை. இந்த எல்லைகளைக் கடந்தால் ‘ரியாலிடி’ என்பதை நாம் அறிந்து கொள்ளலாம், உலகம் முழுவதிலும் காணப்படும், அசையும், அசையாப் பொருட்கள், தகவல்கள், ஆற்றல், அறிவு நிலையில் தென்படும் ஆறு வகைகள் அனைத்தும் நம் கண்ணோட்டத்தை ஒட்டி நம்முள் வடிவாகின்றன. ஒரே ‘பிரும்மனின்’ தோற்ற வடிவங்கள் என்பதைச் சொல்வது எளிது, புரிந்து கொள்வது கடினம். அத்வைத வேதாந்தம் இதைத் திறமையாகக் கையாள்கிறது. தனித்தனி என நாம் நினைக்கும் அனைத்தும் அவ்வாறல்ல, அது ஒற்றை உண்மை, தன் 24 வகை தத்துவங்களால் தன்னையே ஒவ்வொன்றிலும் அமைத்திருக்கிறது, அதன் மாயையை விலக்கினோம் என்றால், நம்மால் உண்மையை அறிய முடியும் எனச்  சொல்கிறது. 

‘சர்வம் கல்விதம் ப்ரும்மன்’ என்பது முக்கிய உபனிடத வாக்கியம். பொருள், அதன் அத்தனை வடிவிலுமாகக் காணப்படுவது தோற்ற மயக்கம். அனைத்துப் பொருட்களுக்கும் அடிப்படையெனக் கருதப்படும் சக்தி அல்லது ஆற்றலும் கூட ஒரே பிரும்மத்தின் பல பரிமாணங்களாக இலங்குகின்றன. இதனால் நாம், காணப்படும் ஒன்றையே உண்மை என நம்புகிறோம். மரத்தில் மறைந்துள்ள மாமத யானை எளிதில் புலப்படுவதில்லை. ப்ரும்மம், ப்ரகிருதி, மஹத், முக்குணங்கள், என்று 24 தத்துவங்கள் இந்தச் செய்தியை, ப்ரஷ்ன உபனிஷத்தில் ஆறு கேள்விகள், ஆறு பதில்கள் மூலம் விளக்குகிறது.

உலகப்புகழ் பெற்ற போர்ஹெஸ் தன் சிறுகதை ஒன்றில் இவ்வாறு எழுதுகிறார். ‘சர்க்குலர் ருயின்ஸ்’ என்பதில் மனிதர்களின் கனவில் உண்மையான இடங்களைக் காண்பதாக நினைப்பவர், தானுமே மற்றவரின் கனவுத் தோற்றம் எனப் புரிந்து கொள்வார்.

உசாவி:


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.