குமார சம்பவம் மஹா காவ்யம்- 10

அத்யாயம்-10

அக்னி தேவன், தாங்கமுடியாத மகேஸ்வர வீர்யத்தை தாங்கியபடி, தேவர்கள் அனைவரும் இருந்த , மகேந்திரன் தலைமை தாங்கிய சபையில் நுழைந்தான். பத்து திசைகளின் தலைவர்களும் புகை மூடிய அக்னி மண்டலத்தை ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.  தன் ஆயிரம் கண்களால் இந்திரன் கண்டான்.  அந்த நிலையில் அக்னியைக் கண்டதும் அவன் மனதில் முதலில் தோன்றிய எண்ணம் காமதகனான – காமனை எரித்த, பகவானிடம் சென்றவன், எளிதில் வெகுளும் பரமேஸ்வரனிடம் சாபம் பெற்று விட்டானோ என்றே ஐயமே. அவசரமாக  ஆசனம் அளித்து அக்னியை அமரச் செய்தான். அனைவரும் கண் கொட்டாமல் பார்த்தபடி இருந்தனர். 

ஹவ்யவாஹ! அக்னியின் பெயர்- யாகத்தில் பெறும் ஹவ்யத்தை கொண்டு செல்பவன் என்ற பொருளில்-என்ன நேர்ந்தது ? உன்னைக் காண மிகவும் வேதனையுடன் இருப்பவன் போல தெரிகிறது.  என்ன நடந்தது என்று சுரேந்திரன் வினவினான். அக்னி தேவன் தன்னை ஆஸ்வாச படுத்திக் கொண்டு பதில் சொன்னான்.

சுர நாயக! உன் ஆணையின் படி நான் ஒரு புறாவின் உருவில் ப்ரபுவின் அந்த:புரத்தில் நுழைந்து விட்டேன்.  

பயத்துடன் என்ன சொல்வாரோ என்று கவலையுடன் நின்றேன். தேவி கௌரி அறையில்  இருந்தார், இருவருமாக அறைக்குள் கூடியிருந்திருக்க வேண்டும். பாதியில் ப்ரபு ஏதோ சந்தேகித்து எழுந்து வந்து விட்டார்.  அவர் முன் நான் என்ன செய்ய முடியும்? என் சுய ரூபத்திலேயே பதில் சொன்னேன். 

என் வேஷம் அவர் முன் எடுபடவில்லை. கண்டு கொண்டு விட்டார்.   இந்திரனே, விநாடி நேரம் அவர் கோபத்தால் தகித்து விடுவது போல் இருந்தார். அவரை சரணடைந்தேன். ஒரே மூச்சில் உன் கட்டளை, என்ன காரணம் அனைத்தையும் ஒப்பித்தேன்.  துதி செய்யலானேன். அதைக் கேட்டபின் அவர் சாந்தமாக என்ன என்று விசாரித்தார்.  மகா காருண்யம் மிகுந்த  பிரபு, வணக்கத்துடன் முறையாக பேசினால் யார் தான் கேட்காமல் இருப்பார்கள்.

பயப்படாதே, சொல் என்றார். சரண்யன்- அடி பணிந்தவர்களை காப்பவர்.  இதோ தகித்து விடுவார் என்று இருந்தவர், என்னிடம் சாதாரணமாக பேசியதால் நானும் தைரியம் பெற்று வந்த காரியத்தைச் சொன்னேன். 

அசந்தர்பமாக நான் அவரை சயனத்திலிருந்து எழுப்பி மகா அபராதம் செய்திருந்தேன். ஆனால் அவர் எதையும் காட்டிக்கொள்ளாமல் கௌரி தேவி அறையில் இருந்தவரை திரும்பி பார்த்துவிட்டு சற்று யோசிப்பவர் போல இருந்தார். 

அந்தரங்கமாக மனைவியுடன் இருந்தவர்,  கூடலின் முடிவில் வெளியான தனது ரேதஸ் என்ற வீர்யத்தை என்னிடம் அளித்தார். அமோகமான வீர்யம், யாராலும் தாங்க முடியாத, மூவுலகையும் எரித்து அழிக்கக் கூடிய அவரது வீர்யம், என்னிடம் அளித்து விட்டார்.   அந்த தேஜஸை பெற்ற நான் தவித்தேன். என் உடலே பற்றி எரிவது போல ஆயிற்று. புகை சூழ்ந்து சக்தியின்றி இதோ உன்னிடம் வந்து விட்டேன். வாஸவ! என்னை காப்பாற்று. ருத்ர வீர்யம், என்னையே தகிக்கிறது.  நான் இதை நிர்வகித்துத் தான் ஆக வேண்டும்.

இந்திரன் என்ன செய்யலாம் என்று யோசித்தான்.  அக்னியின் தாபத்தை போக்கக் கூடியவர் யாருண்டு?  தீயின் சாதாரணமாக தீக் காயம் பட்டு அல்லது தீயில் எரிந்த உடல்களை நீரால் சரி செய்வோம். மிக அரிய செயலை செய்தவன் நீ. உன்னை எப்பாடு பட்டும் காப்பாற்றவே முயலுவோம். பயப்படாதே என்று ஆதரவாக தடவிக் கொடுத்தான்.

அடுத்த ஏழு ஸ்லோகங்களால் அக்னியை பாராட்டினான் இந்திரன். அக்னியே, நான் மிகவும் மகிழ்ந்தேன். ஸ்வாஹா ,ஸ்வதா – என்பவைகளின் மூலம்   நீ தேவர்கள், பித்ருக்கள், மனிதர்கள் என்ற அனைவருக்கும் பிரியமானதைச் செய்பவன்.  அதனால் அவர்களின் முகமாக சொல்லப் படுகிறாய்.  (ஹோமம் என்ற செயலில் ஸ்வஹா என்று சொல்லி தேவதைகளுக்கும், ஸ்வதா என்று சொல்லி குல மூத்தவர்களுக்கும் பொருட்களை ஹோமத்தீயில் இடுவர்.  இந்த பெயர்களுடைய  தீயின் பிழம்புகள் அந்தந்த தேவதைகளுக்கு கொண்டு செல்வதாக சொல்வர்)   

யாகம் செய்பவர்கள் பொருட்களை உன்னிடம் அளித்து ஹோமம் செய்கிறார்கள்.  அவை உன்னிடம் தூய்மையாகின்றன.  அவர்களும் சுவர்கம் அடைகின்றனர். அப்படி ஸ்வர்கம் என்ற நல்கதியை அடைய நீ அனைவருக்கும் உதவி செய்கிறாய்.

தபஸ்விகளும், மந்திரங்களால் பாவனமாக்கிய பின் பொருள்களை யாக குண்டத்தில் சமர்ப்பிக்கிறார்கள்.   அவர்களும் தவத்தின் பலனை நன்மையை அடைகிறார்கள். ஒரு வகையில்,  நீ தான் அவர்கள் தவத்தின் பலனைப் பெற்றுத் தரும் பிரபு.

ஸூரியனுக்கு என்று அவர்கள் அளிப்பதை கொண்டு சேர்க்கிறாய். அதை பெற்ற ஸூரிய பகவான் மழை என்பதன் மூலம் பூமியில் பொழிகிறான். அதிலிருந்து அன்னம் விளைகிறது. அதன் மூலம் பிறவிகள் உலகில் உயிர் வாழ்கின்றன. 

பஞ்ச பூதங்கள் என்ற இயற்கை தத்துவங்களும்  உள்ளூற நீ இருந்து இயக்குவதாலேயே தங்கள் கடமைகளைச் செய்ய முடிகிறது.  எனவே உலகில் அனைத்துக்கும் உயிரைத் தருபவன் நீயே. 

( உரையாசிரியரின் விளக்கம்:  உயிரினங்களின் உள் இருந்து அவைகளின் செயல்களை ஊக்குவிக்கிறாய்.  அவைகளின் சந்ததி உருவாகவும் நீயே காரணமாகிறாய்.  இப்படி இருவிதமாகவும் அவைகள் ஜீவிக்கவும், தங்கள் ப்ரஜைகளை அவை பெருக்கவும் காரணமாவதால் நீ உலகில் ப்ராணன்-உயிர் தருபவன் நீயே.  அக்னி இருப்பதாலேயே ப்ராணிகள் உயிருடன் உலவுகின்றன. உள்ளூற இருப்பது உடன் இருந்து உதவுவது என்றும்,  அக்னி சம்பந்தம் விடாமல் இருந்து கர்பத்தில் உள்ள சிசுக்கள் வளர்ச்சிக்கும் உதவுகிறாய்.  (குயவன் மண் பாண்டம் செய்வது போல.  வடவாக்னி என்று கடலிலும் உள்ளே இருந்து நீர் வாழ் பிறவிகளுக்கும் உணவை சமைப்பதாக பாகவதம் சொல்கிறது)   

உபகாரம் செய்வதில் உன்னைப் போல மற்றொருவர் இல்லை. எங்களுக்கும் தற்சமயம் தேவையான நன்மையை செய்யவும் உன்னையே தேர்ந்தெடுத்திருக்கிறார்.   

அனைத்து தேவர்களிலும் நீ ஒருவனே செயல் வீரன். விபத்துகளும் உன் போன்ற வீரர்களுக்கு, உயர்வே.  வரவேற்கத் தக்கதே. ஹே அக்னியே! நீயும் உபகாரம் செய்யவே துடிப்புடன் இருப்பவன்.  பரோபகாரி நீயே.

தேவி பாகீரதியை காலம் காலமாக  நாம் அனைவரும் பக்தியுடன் உபாசித்து வந்திருக்கிறோம்.  மிக சக்தி வாய்ந்த உன்னால் தாங்க முடியாத இந்த தாபத்தை அவள் தான் ஏற்றுக் கொள்ள தகுதி உடையவள். அந்த ப்ரவாகத்தில் மூழ்கி உன் பொறுப்பை அவளிடம் அளித்து விடு. ஹவ்யவாஹனா! தாமதிக்காதே, உடனே செல். அவசியமான செயல்களை தள்ளிப் போடக் கூடாது.  சுபஸ்ய சீக்ரம்- என்பது ஒரு வசனம். நற்காரியங்களை உடனடியாக செய்வதே நல்லது. 

போ அக்னியே! சம்புவின் தேவி அம்போ மயி- நீர் ரூபமாக ப்ரவகிக்கும் சுராபகா – தேவ லோக நதியே கங்கை.  உன்னிடமிருந்து காம விரோதியான சம்புவின் பீஜத்தை அவள் தாங்குவாள்.  அவள் வேகம் அதற்கு ஈடு கொடுக்கும்.   

இவ்வாறு இந்திரன் சொல்லவும், அக்னி தேவனும் உடனே புறப்பட்டான்.  கங்கையை சென்றடைந்தான்.

தன் நீரில்  மூழ்கி நீராடின மாத்திரத்தில், ஜீவன்களின் அனைத்து பாபங்களையும் நாசம் செய்யும் பாவனமான கங்கா தேவியைக் கண்டான். சுவர்கத்தில் இருந்து இறங்கி வருபவள்,  மோக்ஷம் அளிப்பவள், உதார குணமுள்ள தேவதா, உடனடியாக பலன் தருபவள், துர்கதாரிணி- துன்பங்களை கடக்கச் செய்பவள்,

மகேஸ்வரனின் ஜடையில் வசிப்பவள், பாப நாசினி, அன்புடன் பாலிப்பவள், நிர்வாணம் என்ற மோக்ஷம் தருபவள், தர்ம சாரிணீ,

விஷ்ணுவின் பாதத்தில் இருந்து பிரவகித்தவள், பிரும்ம லோகத்தில் இருப்பவள், மூன்று கிளைகளாக பிரிந்து பூமியில் ஓடும் சமயம், சுற்றி இருப்பவர்களின் களைப்பை நீக்கி, புத்துயிர் அளிப்பவள், மூவுலகையும் பாவனமாக்கும் பாவனி என்று பலவாறாக என்று துதி செய்தான். 

கங்கா தேவி,  அக்னியைக் கண்டவுடன் தன் அலைகளே கையாக உயர எழுந்த அலைகளால் எடுத்த காரியம் நலமாக நிறைவேறட்டும் என்று ஆசீர்வதிப்பது போல,  வரவேற்றாள். 

நீர் வாழ் பறவைகள் மதம் கொண்டு கூச்சலிட்டன. அதன் வழியாக நன்மையே நடக்கும், வா, என்று அழைப்பது போலவும், அபயம் அளிக்கிறேன், உன் துன்பம் நீங்கும் என் சமாதானமாக சொல்வது போலவும் இருந்தன. 

அலைகள் மேலும் உத்சாகமாக நீரை வாரியடித்தன.  கரையைத் தொட்டு திரும்பி வரும் அலைகள் மேலும் வேகம் கொண்டது போல இருந்தன. பிரியமான பந்துக்களை வரவேற்கும் மனிதர்கள் போலவே சுரலோக கங்கை, ஜாத வேதஸ் என்ற அக்னியை வரவேற்றாள். 

குளிர்ந்த நீரில் இறங்கிய அக்னி தேவன், தன் தாபம் தீர அளைந்து களைப்பும், பயமும் நீங்கப் பெற்றான். பெரும் விபத்திலிருந்து மீண்டவர்கள் செய்வது தானே.  ஆபத்தை நீக்கும் என ஏதோ ஒரு  துரும்பை கூட பிடித்துக் கொள்வது இயல்பு. 

கங்கா வாரிணி, கல்யாண காரிணி, ஸ்ரம ஹாரிணீ.- எனப் படும் கங்கையிலிருந்து வெளிவர மனமில்லாதவன் மூழ்கியே இருந்தான்.  புண்ய பாரிணீ- புண்யம் நிரம்பியவள், பவ தாரிணியான கங்கை அக்னிக்கு அமைதியை அளித்தாள். 

தன்னிடம் ஒப்படைக்கப் பட்ட மகேஸ்வரனின் பீஜத்தை நீரில் வைத்தான்.  உடனே கங்கையின் பிரவாகமும், அலைகளின் ஆர்பாட்டமும் மிக அதிகமாக ஆயின.  கங்கா தேவி மரியாதையுடன் ஏற்றுக் கொண்டு விட்டாள் என்று  அமைதி அடைந்த ஹவ்ய வாஹனன், மன நிம்மதியோடு நீரிலிருந்து வெளியேறினான்.  அம்ருத மயமான கங்கையால் குளிப்பாட்ட பட்டவன் போல மகிழ்ந்தவன் எடுத்த காரியம் முடிந்த திருப்தியுடன் தன் வழியில் சென்றான். 

கங்கையால் அந்த பாரத்தை தாங்க முடியவில்லை.  காமனை வென்றவனின் மிகப் பெரிய, அளவிடமுடியாத சக்தி அது.  அறியாமல்  ஏற்றுக் கொண்டு விட்டோமே என்று பரிதவிக்கச் செய்தது.  ஆகாயத்தில் பிரவகிக்கும் கங்கையே தடுமாறினாள்.

தண்ணீர் கொதிப்பது போல இருக்கவும், நீர் வாழ் பிறவிகள் அலை பாய்ந்தன. யுக முடிவில் வரும் பிரளயமோ என பயந்தன. பல நூறு நாக்குகளுடன் தீயின் வேகமோ, நீரினுள் அக்னியின் வெப்பம் எப்படி சாத்யம் ?

ஸ்ரீ ருத்ரனின் வீர்யம்.  சாதாரணமாக அக்னியை அணைக்கும் நீரையே கொதிக்க வைத்து விட்டது.  கங்கை சண்ட மாருதமாக மாறி விட்ட அலைகளால் கங்கை செய்வதறியாது திகைத்தாள்.

மாக-மாசி மாதம் அது. ஸூரியன் மெள்ள உதிக்கும் நேரம். தன் சண்ட கிரணங்களை மெள்ள எழுப்பி, பூமியின் கண்கள் போன்ற ஸூரியன் மலை அடிவாரத்திலிருந்து தலையைத் தூக்கியது போல ஓரளவு தெரிந்த சமயம், திசைகளும் ப்ரகாசமாயின. ஆறு க்ருத்திகா பெண்கள் கங்கையில் ஸ்னானம் செய்ய வந்தனர். 

சுவர்கத்தில் வசிப்பவர்கள், தூய வெண் நிற கங்கை நீரில் வழக்கமாக செய்யும் ஆசமனங்கள் செய்த பின்,  ஆழ்ந்து நீராடத் தயாராக வந்தவர்கள், அலைகளின் வேகத்தாலேயே தன் துக்கத்தை கங்கா தேவி சொல்வது போல இருக்க தயங்கி நின்றனர். 

வழக்கமாக சப்த ரிஷிகள் நீராடி முடித்து, மலர்களையும், தூர்வா என்ற புல்லையும் வைத்து அர்ச்சனை செய்தவை மட்டுமே இருக்கக் கண்டவர்கள், நதியின் வெண் மணலையே கண்டனர்.  யோக சாதனைகள் செய்பவர் மூடிய கண்களுடன் தங்கள் தியானத்தில் ஆழ்ந்து இருந்ததையும் கண்டனர்.  பாதங்களின் கட்டை விரல் மட்டுமே பூமியை தொடுவதாக நின்றபடி ஸூரியனையே நோக்கியபடி ப்ரும்ம ரிஷிகள் தவம் செய்தபடி நின்று கொண்டு இருந்ததைக் கண்டனர். 

திரும்பி நதியைப் பார்த்து வாழ்த்துச் சொல்ல ஆரம்பித்தவர்கள், அம்ருத மயமானவள் ஏன் பதில் வணக்கம் சொல்லவில்லை என்று யோசித்தனர்.  சந்திரசேகரனின்  தலையில் இருந்து பிரவகித்து வருபவள்.  கண்ணால் காண்பதே புண்யம் என்பர்.  இவளை சாதுக்கள் போற்றி புகழ்ந்து பேசுவர்.  அலைகளுடன் இவளைக் காணவே மகிழ்ச்சியாக இருக்கும்.

மகா விஷ்ணுவின் பாதங்களில் இருந்தவள். அவர் பாதங்களைப் பணிந்தவர்களே மோக்ஷம் பெறுவர். தானும் தூய்மையானவள்.  நீராடுபவர்களின் பாபம் என்ற களங்கத்தையும் நீக்குபவள் என்பர். முதலில் வணங்கி விட்டுத் தானே நீரில் இறங்குவோம் என்று சொல்லிய படியே தலை வணங்கினர். 

பக்தியுடன் துதித்தனர். உன்னில் நீராடுவதே ஒரு சௌபாக்யம்.  மோட்சம் பெறுவது போல ஆனந்தம் அளிப்பது. சதி நீ. சுவர்க லோக நதியே! என பாடினர்.  பின் நதியில் மூழ்கி நீராடினர். நம் நல் வினைப் பயனே இந்த நதியில் நீராடும் பாக்யத்தை கொடுத்தது என்பது போல அலுக்கும் வரை நீரில் இருந்து விட்டு எழுந்து வந்தனர்.  க்ருஸாணு- மகேஸ்வரனின் பெயர். அவருடைய பீஜத்தின் உஷ்ணத்தால் ஜலமே வற்றி அடி மணல் ஒட்டிக் கொண்டு விட்டதோ என்பது போல தங்கள் சரீரத்தில் மணல் துகள் போல பரவி இருந்ததைக் கண்டனர்.  கங்கையிடமிருந்து விலகி அவை க்ருத்திகா ஸ்த்ரீகளின் உடலில் ப்ரவேசித்து விட்டன. 

ரௌத்ரம்- ஸ்ரீ ருத்ரனின் வீர்யம், இவர்களையும் தாங்க முடியாத வெப்பத்துடன் தாக்கியது.  என்ன ஏது என்று புரியாமல் திகைத்தனர். 

பர பரப்புடன் வெளியேறி வந்து உடலின் உள் தகிக்கும் அக்னியால் தாக்கப் பட்டது போல தவித்தனர். திடுமென தாங்கள் கர்பவதிகளாக ஆனதை உணர்ந்தனர்.  கங்கையிடமிருந்து நடந்த விவரங்களைத் தெரிந்து கொண்டார்கள். சம்புவின் சந்ததி என்று அறிந்து மகிழ்ச்சியும், திடுமென தோன்றியதால் லஜ்ஜையும், மறுத்து பேச பயமும்,  இது நியாயமா, உலகில் ஏற்றுக் கொள்வார்களா என்ற சந்தேகமும் ஒரு பக்கம் இருக்க, கர்பத்தின் கனத்தால் உடல் வருத்தமும் அனுபவித்தனர். 

அதன் பின் அவர்கள்  சரவண பொய்கையை அடைந்தனர்.  பயமும் வெட்கமும் அவர்களை வாட்டியதை அந்த பொய்கையில், தங்கள் கர்பத்தை  தியாகம் செய்து விட்டு சென்று விட்டனர்.  

பார்வதி தானே சரவண பொய்கையாக ஆனாள்.  சிதைந்த ஸ்கந்த – துண்டுகளாக இருந்ததை இணைத்து ஓருருவாக ஆக்கினாள்- ஸ்கந்தன் என்ற பெயர் வரக் காரணமும் அதுவே. 

அந்த க்ருத்திகா பெண்கள் சரவணத்தில் விடப்பட்ட நளினமான இளம் கர்பத்தின் பாகங்கள், சந்திரனின் முதல் கலை போல காண குளுமையாகவும், அதி கோமளமுமாக இருந்தவைகள்,  ஆறு முகங்களும், நூறு ஸுரியங்களுக்கு  சமமான ப்ரகாசமும் உடையவனாக, ,   உனக்கு நாலு தானே, எனக்கு ஆறு என்று ப்ரும்மாவைப் பார்த்து ஏளனம் செய்வது போலவும்,  ஒரு சிசுவாக உருக் கொண்டன.  ( பின்னால்  காமனை எரித்த பகவானுக்கும் குருவாக ஆனான். – அதனால் ஸ்வாமி நாதன் என்று பெயர் பெற்றான் என்பது பிரசித்தம்)

|| குமாரோத்பத்தி என்ற பத்தாவது அத்யாயம் நிறைவுற்றது.||

குமார சம்பவம் - மஹா காவ்யம்

குமார சம்பவம் மஹா காவ்யம்- 9 குமார சம்பவம்: பாகம் – 2

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.