- குமார சம்பவம் மஹா காவ்யம்
- குமார சம்பவம் மஹா காவ்யம் – 2
- குமார சம்பவம் மஹா காவ்யம் – 3
- குமார சம்பவம் மஹா காவ்யம் – 4
- குமார சம்பவம் மஹா காவ்யம் – 5
- குமார சம்பவம் மஹா காவ்யம் – 6
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 7
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 8
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 9
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 10
- குமார சம்பவம்: பாகம் – 2
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 9
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 13
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 14
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 15
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 16
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 17
அத்யாயம்-13
அதன் பின் குமாரன், வெளியில் செல்ல வசதியான ஆடை அலங்காரங்களுடன் வந்து மூவுலக நாயகனான தந்தை மகேஸ்வரனை வணங்கி இந்திராதி தேவர்களுடன் புறப்பட்டான்.
அப்படி வணங்கிய மகனை அவர் ஆசீர்வதித்தார். மகனே, யுத்தத்தில் உறுதியாக இரு. இந்திர சத்ருவை வதைத்து விடு, என்றவர் அன்புடன் அவனை அனைத்து உச்சி முகர்ந்து வழி அனுப்பி வைத்தார்.
தாயாரையும் அவள் பாதங்களைத் தொட்டு குமாரன் வணங்கினான். அவளும் மகனை அணைத்து தன் ஆனந்த கண்ணீரால் முழுக்காட்டியவளாக மகிழ்ச்சியுடன் விடை கொடுத்தாள். வீரனை பெற்றவள் மகிழ்வது இயல்பே. மடியில் இருத்திக் கொண்டு, உச்சி முகர்ந்து, ‘சத்ருக்களை வெற்றி கொண்டு, செயல் வீரனாக திரும்பி வா மகனே, என்னை உலகில் மா வீரனைப் பெற்றவள் என்று புகழும்படி செய்’ என்றாள்.
கர்வத்துடன் தைத்யர்களின் தலைவன் உலகினரை துன்பம் அடைய செய்து கொண்டிருந்தானே, அவனை அடக்க தங்களால் முடியாமல் ஈசனின் மகனை யாசிக்க வந்த இந்திரன் முதலான தேவர்கள் பக்தியுடன் கைலாச நாதனையும், மலைமகளையும் சேர்த்து வணங்கி குமாரனோடு கிளம்பினர். மனதில் நம்பிக்கையுடன் குமாரனிடம் பய பக்தியும், மரியாதையும் இயல்பாக தோன்றின.

வானமே இதனால் மகிழ்ந்தது போல இருந்தது. பகலில் நக்ஷத்திர கணங்களும் வந்து ஸூரியனுடன் கூடி நின்றது போல ப்ரகாசம். அனைத்து தேவர்களும் சேர்ந்து ஒரே சமயத்தில் தென்பட்டதை கொண்டாடியது போல இருந்தது. அவர்கள் நடுவில் குமாரன் தனித்து தெரிந்தான். அதிகமான காந்தியுடன், நள்ளிரவின் மூன்றாவது யாமத்தில் நக்ஷத்திர, தாரா கணங்கள் இடையில் சந்திரன் ஒளி மிகுந்து தெரிவது போல.
மகேசனின் தனயனுடன் செல்வதே தங்கள் பாக்யமாக எண்ணியது போல இந்திரன், தன் பரிவாரத்தோடு நக்ஷத்திர மார்கத்தைக் கடந்து, முஹூர்த்த நேரத்தில், தன் லோகத்தை சென்றடைந்தான். தங்கள் இருப்பிடமான சுவர்கத்தையே பல காலமாக காணாமல் இருந்தவர்கள், அந்த அளவு பயம் மகாசுரனான தாரகனிடம். அதை அவன் கைப்பற்றிய பின் கால் வைக்கத் தயங்கியவாறே நுழையாமல் நின்றனர்.
நீ முன் செல், நான் பின்னால் வருகிறேன் என்று ஒவ்வொருவரும் மற்றவரை வேண்டினர். சுவர்கலோக வாசிகளே அந்த சமயம் தங்களுக்குள் இப்படி ஒரு கலகத்தை தோற்றுவித்து விட்டனர். ஒருமுகமாக அனைவரும் குமாரனை நோக்கினர். அவனோ மென் முறுவலோடு புதியதைக் காணும் இளம் பாலகனாக, ஆவலுடன் குதூகலமாக இருந்தான். அந்த மலர் முகத்தைக் கண்ட தேவர்கள் பயம் சற்று விலகியது போலவும், தாரகனை மறந்தது போலவும் ப்ரகாசமாயிற்று.
குமாரனோ அந்த இடத்தை ரசித்தபடி முன்னேறினான். வரும் காலத்தில் அவன் தாரகனை வதம் செய்யப் போவதையே ஆவலுடன் அதிகமாக தேவ கணங்கள் நினைவில் இருந்தது போலும். தாங்களே வீரர்களாக இருந்தவர்கள், இந்த சிறுவன் விளையாட்டும், சிரிப்புமாக வளைய வருவதில் மகிழ்ச்சி ஒரு பக்கம் கவலை ஒரு புறமாக, மெல்ல சிரித்தபடி நினைவூட்டினர்.
அதைக் கண்டு கொண்ட பாலகன், பயப்பட வேண்டாம், தேவர்களே, நீங்கள் அனைவரும் கவலையின்றி ஊருக்குள் நுழையுங்கள். நான் இங்கேயே இருந்து சத்ரு தென் படுகிறானா என்று பார்த்துக் கொள்கிறேன், முன் கண்டவர்கள் நீங்கள் அவனை அறிவீர்கள் தானே, என்றான்.
இந்த அழகிய சுவர்க லோகம், அழகிய லக்ஷ்மி கடாக்ஷம் பெற்றது, அதைக் கேசத்தை கலைத்து நாசம் செய்வது போல கலைத்து அழித்த துஷ்டனான அசுரன் வரட்டும். உங்கள் எதிரிலேயே என் சரங்களால் வதம் செய்கிறேன்.
என் கையில் உள்ள சக்தி என்ற ஆயுதம் வலிமையானது. துல்லியமாக அடிக்கக் கூடியது. நிம்மதியாக அதன் சக்தியை கண்டு கொள்வீர்கள். சுவர்க லக்ஷ்மி எதிர் கொண்ட விபத்துகள் அனைத்தும் என் சரங்களால் விலகுவதைக் காணுங்கள். இந்த சக்தி ஆயுதம் உங்களுக்கு நன்மையே தரும் பயப்பட வேண்டாம் என்று சமாதானம் செய்தான்.
இந்த அழகிய வசனங்களால் தங்கள் பயம் தெளிய, தாங்களும் யுத்தம் செய்ய வலிமையையும், உத்சாகத்தையும் பெற்றவர்களாக தாமரை மலரை பழிக்கும் குமாரனின் முகத்தில் மென் முறுவலால் மேலும் நம்பிக்கை பெற்றவர்களாக, தேவர்கள் கூட்டம் மனம் மகிழ்ந்தது.
அறியாமை என்ற அந்தகாரத்தை அழிக்கும் தேவனின் மகன், தைத்ய வதத்தின் பொருட்டு வேண்டி அழைத்து வந்திருக்கிறோம், நம் நல்ல காலம் சிறுவனானாலும் யுத்தம் செய்வதில் மகிழ்ச்சியே கொண்டிருக்கிறான், அரவிந்தம் போன்ற முகத்தில் சதா மென்முறுவலுடன் இருப்பவனைக் காணக் காண கீர்வானர்கள் எனும் தேவ கூட்டம் மனம் மகிழ்ந்தது. அந்த மகிழ்ச்சி அவர்கள் அன்புடன் பேசியதில் தெரிந்தது.
விசாலமான கண்கள் அப்பொழுது தான் மலர்ந்த உத்பல மலர் போல இருக்க, உடலில் ஆயிரம் கண்களாலும் கண்டும் இந்திரன், மனம் நிறைவுறாமல் பார்த்தபடியே இருந்தான். தன் உத்தரீயத்தை அவனுக்கு அணிவித்தான். (சகோதரர்கள் இடையில் உத்தரீயம் என்ற மேல் வஸ்திரம் மற்றிக் கொள்வது உண்டு. உறவினால் வந்த உரிமை என்பதால். மற்றபடி லோகாயதத்தில் அது சம்ப்ரதாயமாக பார்க்கப் படும் என்று உரையாசிரியர்)
முதியவரான பிரும்மா வந்தார். நான் முகன் – முகம் நாலும் மலர கண்களில் ஆனந்த பாஷ்பம் பொங்க சிறுவனின் உச்சந்தலையை முகர்ந்து ஆசீர்வதித்தார். அவனும் ஷடானனன் ஆறு முகத்தான். தனித் தனியே ஆறு முகத்தையும் நோக்கி ஆசிகள் அளித்தார். அருகில் இருந்தவர்கள் சாது சாது என்றனர். திரிபுராரி மகன் நீ, ஜய ஜய, மேன் மேலும் வெற்றி பெறுவாய் என்றனர். கந்தர்வ, சித்த, வித்யாதரர்கள், சங்கத்தினர் அனைவரும் வந்து ஜய கோஷம் செய்தனர்.
திவ்ய ரிஷிகள் வந்தனர். நாரதர் முதலானோர் வந்து வாழ்த்தி வரவேற்றனர். சத்ருவை ஜயிக்க வந்ததை பாராட்டினர். நல் ஆடைகள், பொன் மயமான உத்தரீயங்கள், தங்கள் வல்கலைகள் இவற்றை தாங்கள் அவனுக்கு உற்றாரே என்பதை தெரிவிக்கும் வகையில் கொடுத்தனர்.
சக்தி தரன், சக்தி என்ற ஆயுதம் உடையவன், நம்மிடையே இருக்கிறான் என்பதால் உத்சாகம் பெற்று, அசுரனிடம் இருந்த பயமின்றி அனைவருமாக தலைவனான யானையின் பின், எந்த விதமான பயமோ, சிந்தனையோ இன்றி குட்டி யானைகள் பின் தொடருவது போல சென்றனர். (சக்தி தரன்- அளவில்லாத சக்தி உடையவன்)
திரிபுரத்தை எரித்த சமயம் உடன் சென்ற அடியார் கூட்டத்தினர் பிரமத-பூத கணங்கள் எனப்படுவர், பகவான் பரமேஸ்வரனை பின் தொடர்ந்து சென்றது போல தற்சமயம் அவர் மகனுடன் சென்றனர். மந்தாகினீ நதிக் கரையை அடைந்தனர். தேவ லோக பெண்கள் நீராடும் இடம். அதில் திசைகளை காவல் காக்கும் திக் கஜங்கள் எனும் யானைகளும் வந்து நீரில் மூழ்கி இளப்பாறும். விளையாட்டாக கைகளால் நீரை அளையும் சமயம் அலைகள் விசிறி அடிக்கும். கரையில் இருக்கும் மரங்களுக்கு நீர் விடுவது போல இருக்கும்.
தேவ லோக பெண்கள் தங்கள் கைகளால் செய்த அழகிய பொன் நிற வேதிகா எனும் யாக பூமிகள் காணப் பட்டன. வாசனையால் கவரப் பட்டு வரும் வண்டுகள், பாடிக் கொண்டே வருவது போல ரீங்காரம் செய்யும். வாசனை அந்த நீரில் பெண்கள் பயன்படுத்தும் வாசனை திரவியங்களே என்பதை அறியாமல் மலர்களைத் தேடும்.
நதியின் மறு கரையில் வந்து நின்றபடி குமாரனை காண நின்ற தேவலோக பெண்களின் பிம்பங்கள் நதியின் நீரில் பலராகத் தெரிந்ததும் ரசிக்கத் தகுந்த காட்சியாக இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின் நதியையும், சுற்றுப்புறத்தையும் பார்த்து இந்திரன் மகிழ்ந்தான். கார்த்திகேயனுக்கு அந்த அழகிய இடங்களைப் பற்றி விவரித்தான். தேவர்கள் உடன் வர அந்த இடங்களை முதன் முறையாக கண்ட கார்த்திகேயனும் ஆச்சர்யத்துடன் கண்கள் விரிய பார்த்தபடி வந்தான். அவர்களுடன் தானும் தேவ நதி என்று வணங்கினான்.
தாங்களும் ஏதோ உபசாரமாக செய்ய எண்ணியோ, நதியின் அலைகளின் மேல் பரவி தன்னை குளுமையாக செய்து கொண்டு கார்த்திகேயனை சுகமான காற்று வரவேற்றது.
ஜம்பன் என்ற அசுரனை வென்றவன் இந்திரன் என்பதால் ஜம்பஜிதன். உல்லாசமாக பொழுது போக்க என்றே கவனமாக அமைத்த நந்தன என்ற உப வனம். தேவர்கள் விளையாடும் இடம். கவனிப்பாரற்று சால மரங்கள் உடைந்து கிடந்தன. அசுரர்கள் படையெடுத்து அழித்திருக்கின்றனர், என்பது தெளிவாக தெரிந்தது.
சிதிலமான உப வனங்கள், ராஜ வீதிகளில் உடைந்தும் இடிந்தும் கிடந்த மாளிகைகள், மேல் தளங்கள் உடைந்த விமானங்கள் என்ற மாளிகையின் உயர்ந்த வேலைபாடமைந்த கோபுரங்கள். அமராவதி என்று புகழ் பெற்ற அந்த தேவ லோக ராஜதானி பரிதாபமாக காட்சியளித்தது.
குமாரனும் அதைக் கண்டு கருணை மிகுந்தவனாக ஆனான். விரோதம் மட்டுமே காரணமாக நகரத்தையே ஸூறையாடி அழித்திருப்பதையறிந்து அசுரனிடம் கோபமும் எழுந்தது. தேவ விரோதி என்று அசுரனை வதைத்து தான் ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். சுரேஸ்வர ராஜதானி என்று மதிப்புடன் இருந்த இடம் சிதைந்து உருத் தெரியாமல் கிடந்ததை பார்த்து பரிதாப பட்டான். வரிசை வரிசையாக மாளிகைகள் ஸ்படிகங்கள் கொண்டு அலங்கரிக்கப் பட்டிருக்க வேண்டும்.
நல்ல நிலையில் அந்த இடங்களை அறிந்திருந்த தேவர்கள் தற்சமயம் அதனுடைய வீழ்ச்சியைக் கண்டு அங்கலாய்த்தனர். தாமரைகள் வடிவில், வைடூரியங்கள் பதித்த சிலைகள், என்று அவர்கள் தங்கள் நினைவில் இருந்த பொருட்களையும் இடங்களையும் சுற்றி வந்தனர்.
இந்திரனின் முன்னோர்கள் நிர்மாணித்த மாளிகைகளை தாரகனின் யானைகள் பல்லால் கடித்து விழச் செய்திருக்கின்றன. வைஜயந்தம் என்ற ப்ரசித்தமான மாளிகை அதன் கலையழகு மிக்க சுவர்கள் தரை மட்டமாகியிருந்தன. அதில் அழகுக்காக பதிக்கப் பட்டிருந்த ரத்தினங்கள், வேலைப் பாடமைந்த சாளரங்கள், வலை போல அமைந்த வேலைப் பாடுகள், என்று இந்திரன் ஒவ்வொன்றாக நினைவில் வர, அனைத்தும் தற்சமயம் மண் குவியலாக கிடப்பதைக் காட்டினான்.
தேவர்கள் தலைவன், செல்வ செழிப்பு நிரம்பியன் எனும் தேவேந்திரனும், மற்ற தேவர்களும் இடி பாடுகளுடன் இருந்த ஒரு மாளிகையைக் காட்டவும், குமாரன் அதன் படிகளில் ஏறி மீதமிருந்த பகுதிகளைப் பார்க்க ஏறினான். கற்பக மரங்கள் தோரணம் கட்டியது போல வரிசையாக இருந்தன. பாரிஜாத மரங்களின் மலர்கள் தூவியது போல இருந்த தரை, அதில் வசித்த கஸ்யபர் முதலான ரிஷிகள் வாழ்த்துச் சொல்லி வரவேற்றனர். வீட்டுப் பெண்கள் நடு கூடத்திலேயே நின்றபடி வரவேற்றனர்.
மகரிஷியின் பாதங்களில் வீழ்ந்து வணங்கிய பின், சுர, அசுர இரு குலத்துக்கும் முன் முதலானவர், குல விருத்தர் என்பதால் ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்தான். – பின் குறிப்பு
தேவ மாதா-அவருடைய மனைவி என்பதால் இருவரையும் சேர்த்து வணங்கினான். சைல சுதாவின் மகன் என்று அவர்களும் ஆதரவுடனும், அன்புடனும் கனிவுடனும் பார்த்தனர். கஸ்யபரும், தேவர்களின் தாயார் அதிதியும், இருவருமாக ஆசீர்வதித்தனர். உக்ர வீர்யனான தாரகனை வெற்றி கொள்வாய், அதனாலேயே மூவுலகையும் ஜயித்தவன் ஆவாய் என்றனர்.
அதே போல தங்களை வணங்கிய தன் மைந்தர்களையும் ஆசீர்வதித்தனர். அனைவரும் இதனால் மன நிறைவு பெற்றவர்களாக ஆனார்கள்.
புலோம என்பவரின் மகள் சசீ என்ற இந்திரனின் மனைவியும் வந்து வரவேற்றாள். அவளும், அதன் பின் காஸ்யபரின் மற்ற ஏழு மனைவிகளும் வந்து மகேஸ்வர புத்ரனை வணங்கி வாழ்த்தினர். அனைவருமாக மிக்க மகிழ்ச்சியுடன், குமாரனை தேவ சேனாபதியாக அபிஷேகம் செய்வித்தனர். எங்கும் மகிழ்ச்சி நிலவியது. தங்கள் சோகங்கள் எல்லாம் இதோ விலகி விடும் என்பது போல நிம்மதியடைந்தனர். யுத்தம் செய்யும் ஆவலும் அவர்களைத் தொற்றிக் கொண்டன. அவர்களுக்கு, வீர்யவானான ஹரனின் மகன், நமக்கு இழந்த செல்வங்களை மீட்டுத் தருவான் என்று நம்பிக்கை வந்தது.
(இது வரை காளிதாஸரின் குமார சம்பவம் என்ற மகா காவியத்தில் कुमार सैनापत्याभिषेको – குமரனை சேனைத் தலைவனாக ஏற்பது – என்ற பதின் மூன்றாவது அத்யாயம்)
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
