குமார சம்பவம் மஹா காவ்யம்

முன்னுரை

ஸ்ரீ மத் வால்மீகி ராமாயணத்தின்  பாலகாண்டத்தில் ஒரு செய்தி.   விஸ்வாமித்திரரின் யாகசாலையில் அவருடைய விரதங்களுடன் யாகத்தை நடக்க விடாமல் ராக்ஷஸர்கள் துன்புறுத்தினர். மௌன விரதம் ஏற்றவர், கோபம் கொள்வது தவறு என்ற காரணங்களால்  தானே அவர்களை அடக்கச் சக்தி உடையவராக  இருந்தும் விஸ்வாமித்திரர்  ராஜா தசரதரிடம் உதவியை வேண்டி பெற்றார்.   ஸ்ரீ ராமன் சகோதரனுடன் அவருக்கு உதவியாக இருந்து தாடகை முதலானவர்களை அழித்தார்.  யாகம் நல்ல முறையில் முடிந்த பின் ரிஷி அவர்களுடன் புறப்பட்டார்.  செல்லும் வழிகளில் எல்லாம் சிறுவர்களுக்கு கதைச் சொல்லிக் கொண்டே வந்தார். அந்த சமயம் குமார சம்பவம் எனும் முருகனின் பிறப்பு என்ற காவியத்தின் தலைப்பு அவராலேயே கொடுக்கப் பட்டது.  அவருடைய மேலும்  சில சொற்றொடர்கள் பிரபலமாகி உள்ளன.  காலையில் ராம லக்ஷ்மணர்களை துயிலெழுப்ப அன்புடன் அழைத்த கௌசல்யா சுப்ரஜா –(சுப்ரஜா- சிறந்த மகன்)  கோசலன் மகள் கௌசல்யா அவளின் தவப் புதல்வனே அவர்  அழைத்ததும் ஒன்று.

தாரகாசுரன் என்ற அசுரனைக் கொல்ல  சிவ பெருமானும்- மலைமகளான பார்வதி தம்பதிகளின் மகனே வர வேண்டும் என்று தேவர்கள் யாசிக்கிறார்கள் என்று ஆரம்பித்து அவர் சொன்ன வரலாற்றை கவி காளிதாஸன், தன் கவித்வம், காவ்யாலங்காரங்களுடன்   அழகிய காவ்யமாக செய்ததே   ‘குமார சம்பவ மகா காவ்யம்’  

மொழி பெயர்ப்பு மூல கவியின் பாவங்களை முழுதும் கொண்டு வர முடியாது என்பர்.  அதிலும் காளிதாசன் போன்ற மகா கவிகளின் காவியங்களை மொழி அறியாதவர்களும் ரசிக்க முடியும்.  தெரிந்த கதை, சொல்லும் விதம் தான் அழகு.    மூல காவியத்தை அதன் மூலமான வடமொழியில் உரையுடன் படித்து மொழி பெயர்த்துள்ளேன். 

கவி தன் படைப்பை, பாதியில் நிறுத்தி விட்டதாகச் சொல்வார்கள்.  சஞ்சீவினீ என்ற உரை எழுதிய மஹா மஹோபாத்யாய கோலாசல மல்லினாத ஸுரி அவர்களும் தன் உரையில் அதை குறிப்பிட்டிருக்கிறார்.   ஈசன் , மலைமகளை  மணம் கொண்டது வரை எழுதிய பின் அவர் எதனாலோ, போர் செய்திகளை மற்ற ஒருவரைக் கொண்டு எழுத வைத்தார் என்பர்.  

சில இடங்களில் சிறு மாறுதல்களுடன் அவருக்கே உரிய அழகிய  வடமொழியில் எழுதியுள்ளார். நான் அதையே  தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். வடமொழியை  படிக்காதவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதால்.  இதை படித்த பின் அந்த மொழியின் அழகுக்காக கற்றுக் கொள்ளத் தோன்றினால் ஆச்சர்யமில்லை. ‘உபமா காளி தாசஸ்ய’  उपमा कालिदासस्य– ஒப்புவமை சொல்வதில் காளிதாச கவிக்கு ஈடு இல்லை என்பது இதன் பொருள்.  இவ்வாறு  இலக்கிய உலகில் போற்றப் படுபவர் காளிதாஸ கவி.  இட்லி மல்லிப்பூ  மாதிரி இருக்கு என்பது போல –இதன் மூலம் இட்லியில் தரத்தை நாம் அறிந்து கொள்வோம். அது போல ஒப்புவமைகள் இலக்கியத்தில் ஒரு அழகு.   இந்த உவமைகளை அறிந்து ரசிக்கவே படிக்கலாம்.

இமய மலையின் வர்ணனையோடு காவ்யம் ஆரம்பிக்கிறது.

 ஜானகி க்ருஷ்ணன்.

முதல் அத்தியாயம்

இந்த தேசத்தின் வடக்கு திசையில், தேவதைகளின் ஆத்மா போன்ற இமாலயம் என்ற  நகாதி ராஜ: नगादि राज:- மலைகளின் அரசன் எனப்படும் உன்னதமான மலை.  அதைச் சுற்றிலும் நீர் ஸூழ்ந்த நிலப் பரப்பு.  உலகில் மானதண்டம்- நடு நாயகமான தண்டம் போன்றது.  ( அண்ட சராசரத்தையே சற்றே சாய்ந்த கோளமாகவும், அது நீரில் கிடப்பதாகவும்,    அந்த கோளத்தை  நட்ட நடுவில் மேலிருந்து கீழ்வரை  கோடு போட்டது போல  ஒரு இயற்கை சக்தி ,  சுழலும் சக்கரத்தின் நடுவில் உள்ள அச்சு போல இருந்து தாங்குவதாகவும், அதுவே இமயமலை என்றும் பாகவதம் என்ற நூல் சொல்கிறது. மலைகளுக்கே பூ தர:भूधर:-பூமியை தாங்குபவன் என்ற பெயர் உண்டு.)

ப்ருது என்ற அரசன் ஒரு முறை மழையின்றி வறட்சியாக இருந்த நிலத்தை மீண்டும்  வளமாக ஆக்க பூமியையே வேண்டினான்.  அவள் அனுக்ரஹத்தால் வேண்டியவர் வேண்டியதை அவளிடம் கறந்து கொண்டனர் என்பதையும் பாகவதம் விவரமாக சொல்கிறது. இந்த சரித்திரத்தை நினைவுறுத்துவது போல இமய மலையே பசுவாகவும், இதர மலைகள் அதனிடம் ரத்தினங்களைக் கறந்து கொண்டதாகவும் கவியின் கருத்து. அதன் படி, விலை உயர்ந்த ரத்னங்களையும், ஓஷதிகள் என்ற சிறப்பான தாவரங்களையும் பெற்றன. எந்த உயர்ந்த ரத்னமானாலும், தாவரமோ  இந்த இமய மலையிலிருந்தே உத்பத்தியாகின. (பின் குறிப்பு-1)

அப்படி இருந்தும், பனி மூடிய மலை சிகரங்கள், அதனால் பனியின் – நடுக்க வைக்கும் குளிர் என்பதன் பாதிப்பை மட்டும் இமாலய மலையால் தடுக்க முடியவில்லை.  ஒரே ஒரு சிறிய தோஷம், களங்கமாக சந்திரனின் இருந்தாலும், அது, சந்திரனின் குளுமைக்கும் பெருமைக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை. 

தன் சிகரங்களில் நடமாடி மகிழும் அப்சரஸ்களை மகிழ்விக்க அகாலத்தில் மாலைப் பொழுது வரும்படி செய்கிறதாம். எப்படி என்றால், மலையில் தாது பொருட்கள் பல வண்ணங்களில் உள்ளன, குங்கும வண்ணம், கௌர (गौर )-வெண்மை என்பது போன்ற பல வண்ணங்களில் தாதுப் பொருட்கள், மலையின் இடை வெளிகளில் பாய்ந்து வரும் நீரின் வெண்மையுடன் சேர்ந்து மாலைப் பொழுதின் வண்ணங்களுடன் இருப்பது  போன்ற தோற்றத்தை தருகின்றன என்பது கவியின் காவ்ய அலங்கார வர்ணனை. 

இமயமலையின் உயரம் காரணமாக மேகங்கள் அதன் இடை பாகத்தில், நடு பாகத்தில் சஞ்சரிக்கின்றன, மேக மண்டலத்தையும் தாண்டி அதன் உயரம் இருப்பதால், மேல் சிகரங்கள் ஸூரிய ஒளியுடன் ப்ரகாசமாகத் தெரிகின்றன.  மேகலை என்ற ஒட்டியானம்- மனிதர்கள் இடையில் அணியும் நகை போல மேகங்கள் தெரிகின்றன. சித்தர்கள் என்பவர்கள் அணிமாதி சித்திகள் கை வரப் பெற்றவர்கள், மேல் பகுதிக்குச் செல்கிறார்கள்.  நல் கதியடைகின்றனர். சாமான்ய ஜனங்களால் அது முடியாது.

அந்த மலையில் சிங்கங்களை வேட்டையாடுபவர்கள் இருந்தனர்.  கிராதர்கள் என்ற பெயர் பெற்ற அவர்கள் அந்த செயலில் திறன் வாய்ந்தவர்கள். அடிபட்ட சுவடு தெரியாமல் எடுத்துச் சென்று விடுவர் போலும்.  அதனால் ரத்தம் தோய்ந்த நகங்களே அடையாளம், அதைக் கொண்டு அடிபட்டது எது என்று அறிவார்களாம்.

 தேவ மகளிர் அங்கு நடமாடும் சமயம் அந்த அடிபட்ட யானைகளின் மத ஜலத்தில் பெருகி வரும் முத்துக்களையும், போஜ பத்ரங்களையும் –  भोज-போஜ என்று பெயருடைய மரத்தின் இலைகள் பெரியதாக இருக்குமாம்.  அதை வைத்து உடைகளை தயாரித்துக் கொள்வர் என்று உரையாசிரியர் சொல்கிறார்..

குகையிலிருந்து வெளிவரும் காற்றே வேணு கானம் போல இருக்குமாம். பாடுபவர்கள் அந்த ஒலியை அனுசரித்து தங்கள் வாத்யங்களின் சுருதியை சரி செய்து கொள்வார்களாம். யானைகள் தங்கள் கழுத்தை உரசி உரசி தேவ தாரு மரங்களை பால் வடியச் செய்து விடுமாம். அந்த பாலின் மணம் அலாதியானது என அங்கு வரும் தேவர்கள் மலையுச்சி வரை அந்த மணம் பரவி இருப்பதாகச் சொல்வார்கள். 

பச்சிலைகள் நிரம்பிய மலை இமாலய மலை. இரவில் அவை பளிச்சிடும் குணம் கொண்டவை. காட்டு மிருகங்கள்  அதை அறிந்து தங்கள் வழியை அறிந்து கொள்ளும்.  எண்ணெய், திரியின்றி எரியும் விளக்குகள் அந்த மருத்துவ குணம் கொண்ட இலைகள். 

 அந்த குகைகள் திவாகரன் என்ற – பகல் பொழுதை நிர்வகிப்பவன் என்ற ஸூரியனிடம் பயந்து தங்களிடம் அடைக்கலமாக வந்த இருட்டை பாதுகாக்கின்றன. என்னதான் சிறிய ஜந்து என்றாலும் பெரியவர்கள் தங்களிடம் அடைக்கலமாக வந்தவர்களை கைவிடுவதில்லை அல்லவா, அது போல. 

சமரீ என்ற மான்கள் தங்கள் வெண்மையான தோகைகளை விரித்து மலையின் மேல் சஞ்சரிக்கின்றன. அவைகள் கொடி போலவும், சாமரம் போலவும் தெரிவது, இமய மலைக்கு சாமரம் வீசுவது போலவும், சக்ரவர்த்திகளின் ராஜ்யத்தில் வெண்ணிற கொடிகள் அலங்காரமாக கட்டப் பட்டிருப்பது போலவும் தெரிகின்றன. கிரி ராஜன், கிரிகளுக்கு அரசன் இமவான் – அதனால் அது பொருத்தமே. 

அடர்ந்து விழும் அருவிகள் வீடுகளில் மறைவாக தொங்கும் திரைச் சீலைகள் போல உள்ளன. அங்கு உலாவ வரும் கின்னர ஸ்த்ரீகள்,  அந்த குகைகளில் வசிப்பது போலவும், அதற்கான திரைச் சீலையாக மேகங்களே உள்ளன என்றும் வர்ணனை.

அருவி நீர் வேகமாக விழும் சமயம் நீர் துளிகளாக சிதறுவதை வாயு கொண்டு செல்கிறது.  கரையில் உள்ள தேவ தாரு மரங்கள் அசைந்து தன் மேல் படிந்த நீர் துளிகளை உதறுகிறது. இதனால் மழை என்று நினைத்து மயில்கள் மகிழ்ந்து ஆடுகின்றன. 

சப்த ரிஷிகள் இங்குள்ள குளங்களில் இருந்து தாமரை மலர்களை பறித்துச் செல்கின்றனர்.  பறிக்கப் படாத மலர்கள் மேல் நோக்கியே இருப்பதைக் காண அவை ஸூரியனை தேடுவது போல உள்ளன.  அதனால் மேல் நோக்கிச் செல்லும் ஸுரிய கிரணங்கள் தாங்களாகவே அவைகளை நெருங்கிச் சென்று  மலர்ந்தே இருக்கச் செய்கின்றன.  

சப்த ரிஷி மண்டலம் துருவ நக்ஷத்திற்கும் மேல் உள்ளவை. எனவே இந்த குளங்கள் அதையும் தாண்டி                வான வெளிக்கும் மேல் உள்ளவை போலும். அதனால் ஸூரியன் அவைகளை மலரச் செய்ய தன் கிரணங்களை மேல் முகமாக செலுத்துகிறான் என்று அறியலாம். 

சோம லதா போன்ற ஓஷதிகள், இமய மலையில் வளருகின்றன. இவை யாகத்தில் பங்கு பெறுபவை. ஆனதால் இந்த மலைக்கு யாகத்தில் பங்கு என்ற பொருளில் யக்ஞாங்கா  यज्ञान्गा-எனப்படுகிறது. அது மட்டுமல்ல மலைகள் பூமியை தாங்குவதாக ஒரு கருத்து.  அதனாலும் ப்ரஜாபதி – ( உயிரினங்களை படைப்பது என்ற செயலை செய்பவர்களில் முதன்மையானவர் – என்பது இந்த சொல்லின் பொருள்) என்ற இமவானுக்கு யாகத்தில் பங்கு கொடுத்ததோடு, மலைகளின் அரசன் என்ற பட்டமும் கொடுத்தார். 

இமவான், குல மூத்தோர்கள் என ஒரு பிரிவினர்.  நமக்கு முன் தந்தை, அவர் தந்தை என்று அந்த குலத்தில்  வாழ்ந்தவர்கள். அவர்களில் ஒருவரின்  மானச புத்ரியான மேனா என்ற பெண், முனிவர்கள் மதிக்கும் படியான சுபமான பெண், தனக்கு அனுரூபமாக, குலம், சீலம், சௌந்தர்யம் உள்ளவளாக இருக்கக் கண்டு தன் குலம் விளங்க – அவளை மணந்து கொண்டார்.  இருவரும் இளம் வயதினர். சமமான யோக்யதாம்சங்கள் கொண்டவர். எனவே நாட்கள் இனிமையாக கடந்தன.  நாளடைவில்  அந்த மலையரசனின்  மனைவி மேனா கருத்தரித்தாள்.  மைனாகம் என்ற பர்வதத்தை பெற்றாள். பின்னால், இவன் நாக கன்யாவை மணந்தான். சமுத்திரத்துடன் நட்பு கொண்டான். மலைகளின் இறக்கையை வெட்டி வீழ்த்திய இந்திரனின் வஜ்ரம் என்ற ஆயுதமும் இவனை எதுவும் செய்யவில்லை.  மேனாவின் மகன் பாக்யசாலி எனக் கொண்டாடப் பட்டான்.  மற்றொரு சிறப்பான விஷயம் இந்த மைனாகம், பார்வதியின் சகோதரன் ஆவான்.  சகோதரன் உடைய பெண்ணையே மணந்து கொள்ள வேண்டும் என்று ஒரு வழக்கம் இருந்தது தான் காரணம். 

முதன் முதலில் சக்தி வாய்ந்தவனாக இருந்த  தட்சனின் மகளான சதி, மகாதேவரின் மனைவியானாள்.  ஒரு சமயம் தந்தையான தட்சன்  மிகப் பெரிய யாகம் செய்த பொழுது, மகாதேவருக்கு செய்ய வேண்டிய மரியாதைகளைச் செய்யாமல் அவமதித்தான். அதை தாங்கமாட்டாமல், யாக சாலையிலேயே (தட்சனின்  மகள் दाक्षायणी – தாட்சாயணி – என்ற பெயரைத் துறக்க  யோக முறையில் தன் சரீரத்தை தியாகம் செய்திருந்தாள்.  திரும்ப பிறந்து மகாதேவரையே பதியாக அடைய வேண்டும்.  அதன் பொருட்டு  மலையரசன் -மேனகா தம்பதிகளை தனக்கு தகுதியான பெற்றோராக இருக்க தேர்ந்தெடுத்தாள்.   இமவானின் மகளாக பிறந்தாள்.  (பர்வதம்-மலை அதன் மகள் பார்வதி)

அவள் பிறந்த சமயம் திசைகள் நிர்மலமாக இருந்தன. சங்குகள் ஒலித்த நாதம் நிறைந்தது. எங்கும் பூ மாரி பொழிந்தது.  உயிருடைய தாவர ஜங்கம எனும் அசையும் அசையா பொருட்கள் அனைத்தும் மகிழ்ந்தன. அவர்கள் மிகப் பெரிய நன்மையை அடைய காரணமாக அந்த சிசு அறியப் பட்டது. 

அழகிய அந்த பெண் மகவின் பிறப்பால் தாயான மேனகா மிகவும் மகிழ்ந்தாள்.  பார்க்கப் பார்க்க தெவிட்டாத அழகு..  வெகு தூரத்தில் கேட்ட மேக நாதம் போன்று இனிமையான அனுபவமாக இருந்தது.   நாள் தோறும் வளர வளர, புது புது அழகுடன் விளங்கினாள். சந்திரனின் கலைகள் வளருவது போல மேலும் மேலும் அழகுற தாயை மகிழ்ச்சியில் மூழ்கடித்தாள்.  அவளை பார்வதி என்று அழைத்தனர்.  பந்துக்கள் அனைவரும் அவளை பிரியமாக அழைத்தனர். தாயார் மேனகா அவளை உமா என்றாள்.    அதுவே மிக சிறந்த புகழ் பெற்ற உமா என்ற பெயராயிற்று.

பர்வத ராஜன், ஒரு மகனுக்கு தந்தையானவன் தான்.  இருந்தாலும் இந்த குழந்தையிடம் அதிக ஈடுபாடு கொண்டான். குழந்தை பார்வதியை கொஞ்சி குலாவியது போதும் என தோன்றவேயில்லை.  வசந்த காலத்தில் பல மலர்களில் தேடித் தேடி சென்று தேனை சேகரிக்கும் வண்டுகள் தாங்களும் தொடுத்து வைத்த மாலை போல வரிசை வரிசையாக பறந்து செல்லும். மற்ற மலர்களை விட அந்த பருவத்தில் பூக்கும் மாமரத்தின் மலர்களை அதிகம் விரும்புவது போல. 

மந்தாகினி நதி த்ரிபதகா என்றும் அழைக்கப் படுவாள்.  தீபத்தின் ஒளி மூன்று கிரணங்கள்- சிகா शिखा-  தீபத்தின் எரியும் திரி மூன்று ஜ்வாலையாகத் தெரியும்.  த்ரிதிவம் – என்பது சுவர்கத்தின் பெயர். இலக்கணத்தை கற்று தேர்ந்தவன் சுத்தமான பதங்களை பிரயோகிப்பது போல, புத்தி உடையவன் வித்வான் என்று ஆவது போலவும், பார்வதியினால் ஹிமவான் தானும் சுத்தமாக (தவறில்லாத பதம் போலவும்), புனிதனாக ( மந்தாகினி நதி போல சுவர்கத்துக்கு செல்ல வழி வகுப்பது போல) தீபத்தின் ப்ரகாசம் போலவும் ப்ரகாசமாக ஆனான். 

மந்தாகினி நதியின் கரையில் மணல் படுகைகளில் பார்வதி சகிகளுடன் விளையாடிக் களித்தாள்.  பொம்மைகளுடனும், பூ பந்துகள் வைத்து விளையாடும் பொழுதும் நடுவில் ப்ரதானமாக பார்வதியே இருப்பாள்.  சரத்காலத்தில் ஹம்ஸங்கள் கூட்டமாக கங்கையில் செல்வது போலவும், இரவில் மூலிகைச் செடிகள் தங்கள் இலைகளின் பள பளப்பால் தங்களை வெளிப் படுத்திக் கொள்வது போலவும், இருந்தாள். உபதேசங்களை உடனடியாக கிரஹித்துக் கொள்வதில் திறமையுடையவளாக இருந்தாள். தன் தனித்தன்மை எந்த பொருளானாலும் மிகுந்து தெரியும் என்பதை உவமானத்தால் சொல்கிறார். 

மெள்ள மெள்ள அவள் வளர வளர அங்கங்களில் பொலிவும்,  எந்த வித செயற்கையான அலங்காரங்கள் இன்றியும், இயல்பாகவே ஆபரணங்கள் அணிந்தவள் போல, மதுவோ, மயக்கும் பொருள்களோ இல்லாமலே கண்டவரை தன் பால் இழுக்கும் வசீகரம் இயல்பாகவே அவளிடம் தோன்றியது. யௌவனம் அடைந்தாள். ஆதவனைக் கண்ட தாமரை மலர் போல அழகு அவளிடம் மலர்ந்தது.  சித்திரம் வரைபவன் தன் தூரிகையால் கவனமாக மலரின் இதழ்களை  கவனமாக வரைவான். எந்த இதழும், இலையும்,  கூடவும் கூடாது. குறையவும் கூடாது என்று அந்த பாகங்களை கவனமாக வரைவது போலவும், இயற்கையிலேயே  அவள் தேகத்தில் ஒவ்வொரு அங்கமும் செதுக்கி வைத்தாற் போன்ற ஒழுங்குடன் அமைந்திருந்தது. 

நடக்கும் சமயம், பாதங்களின் நகங்கள் மேல் நோக்கி வளர்ந்து பாதத்தின் இளம் சிவப்பு நிறத்தைக் காட்டுவது போல இருக்கும். பாதங்கள் பதியும் இடங்கள் அடையாளமிட்டபடி செல்லும். நீரில் மலரும் பத்மங்கள் பூமியில் வந்து விட்டனவா என்று ஐயம் வரச் செய்யும்.  ராஜ ஹம்ஸம் அவள் நூபுரங்களின் இனிய நாதத்தைக் கேட்டு அவள் பாதங்களில் வந்து இருந்து கொண்டு அவள் நடையை தனக்கு சமமான மென்மையான  உல்லாசமான நடையாகச் செய்ததோ, 

ப்ரும்மா தன் சக்தி, படைக்கும் திறன் இவற்றை முழுமையாக பிரயோகித்து அவளுடைய  கனுக்கால்கள் முதல் முழங்கால் வரை ஏற்ற இறக்கத்துடன் கண் கவர் வனப்புடன் படைத்தாரோ, அதனால் அவருடைய கற்பனைத் திறனே அவளுடைய மற்ற அங்கங்கள் விஷயத்தில் போதாமல் போயிற்றோ எனும்படியும்,
தொடைகளுக்கு உவமிக்க முடியாமல் யானையின் துதிக்கைகள் கரடு முரடான மேல் தோல் காரணமாக விடுபட்டு போயிற்று என்றால் வாழைத் தண்டு அதிக குளிர்ச்சி என்பதால் அதுவும் சரி வராமல் போகவே, அதற்கு அதுவே உவமானம் என்றபடி அழகிய தொடைகள். 

பின்னால் ஈசனின் பிரிய பத்னியாக அவருடைய மடியில் அமர ஏதுவாக இருக்கவே என்பது போல இடை பாகமும் பின்னழகும் விளங்கின. அடுத்து அழகிய நாபியும், அதைச் சுற்றி ரோம ராசியும், மேகலையில் பதித்த மணி போலவும், வளித்ரயம் என்ற கோடுகள், அழகிய ஸ்தனங்கள், உத்பலம் போன்ற கண்கள் என  ஒவ்வொரு அங்கமும் யௌவனம் வந்து விட்டதை பறை சாற்றின போலும்.   மன்மதன் தோற்றானே, திரும்ப வந்து விட்டானா என்பது போன்ற சிரீஷ புஷ்பம் போன்ற சுகுமாரமான புஜங்கள், தங்கள் அமைப்பினால்  கிரீசனிடம் அவனுக்கு இருந்த விரோதத்தை விரட்டி விட்டதோ,  உயர்ந்த  முத்துமாலைகள் அவள் கழுத்தில் அணிந்ததாலேயே புகழும் பெருமையும் பெற்றன போலும்.  பொதுவாக அலங்காரம் என்றே முத்து மாலையை கழுத்தில் அணிவது வழக்கம்.

லக்ஷ்மி தேவிக்கு பத்ம குணா, பத்மாசனஸ்தா என்று பெயர்கள். அவள் சந்திரனின் அழகில் தன் பங்கை- லக்ஷ்மீகரமாக இருப்பது தான் அதன்  குணம் என்பதால் இந்த பெயர்களைப் பெற்றவள்.  சந்திரனிடம் அவளுக்கு பத்ம சம்பந்தமான பெயர்கள் பயன் படுத்த முடியவில்லை, அதனால் உமா முகத்தில் வந்து குடி கொண்டாள். இரண்டு பதவிகளையும் அடைந்து விட்டாள். ( சஞ்சலமான லக்ஷ்மி இரவுகளில் சந்திரனிலும், காலையில் பத்மத்திலும் இருப்பாள் என்பது அனைவரும் அறிந்ததே.   பகலில் பத்மத்தில் இருப்பவள் சந்திரனின் குளிர்ச்சியையும், கவர்ச்சியையும் பெற முடியவில்லையோ, என்ற குறை, சந்திரனை ஒத்த முகத்தினளான உமையிடம் வந்து இரு வகையிலும் அவள் அதனுடைய குணங்களை பெற்று விட்டாள்.)

புத்தம் புது தளிர்கள், பவழம் இவைகளின் சோபையை அவள் அதரங்கள் எடுத்துக் கொண்டு விட்டன போலும்.  அதில் வெண் நிறத்தை அவளுடைய மென் முறுவல் கொண்டு சேர்த்தது.

அமுதம் போன்ற அவள் குரல். பேசும்பொழுது எவரும் மீட்டாமலே அதில் வீணையின் நாதம் எழுந்தது.

நீலோத்பலம் போன்ற நீண்ட கண்களில் மானின் கண்கள் போன்ற சாயை அவளிடம் இயல்பாகவே வந்து விட்டனவா அல்லது  பெண் மான்கள் அந்த குணத்தை அவளைப் பார்த்து தாங்களும் விரும்பி அவளிடம் யாசித்து மருட்சியைப் பெற்றனவா? 

அவளுடைய புருவங்களில் தீட்டிய அஞ்சனம் எனும் மையுடன் இருந்த அழகையும் நேர்த்தியையும், கண்டவுடன் கவர்ந்திழுக்கும் கவர்ச்சியையும் பார்த்த  மன்மதன் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு தன்னுடைய வில்லின் காந்தியை இழந்து விட்டான் போலும். தன்னுடைய வில் தான் மிகச் சிறந்தது  என்ற அபிமானத்தையும் விட்டு விட்டான். 

சமரீ என்ற விலங்கு தன் அடர்த்தியான கேசத்திற்கு புகழ் பெற்றது. பர்வத ராஜ புத்ரியின் கேசத்தைப் பார்த்து மிகுந்த லஜ்ஜை அடைந்து விட்டது போலும். இந்த கேசத்தின் அழகுக்கும் அடர்த்திக்கும் எதிரில் தான் மிகவும் விரும்பும் தன் அடர்ந்த கேச பாசம் பற்றி கொண்டிருந்த கர்வம் அதை  விட்டு விலகி விட்டது. 

விஸ்வஸ்ருட்- உலகத்தை படைத்தவன் மிக நேர்த்தியான அவளுடைய அங்கங்களை வைத்து உண்மையில் எப்படி அழகிய உருவத்தை படைப்பது என்று கற்றுக் கொண்டார் போலும்.  சந்திர, அரவிந்த, எள், பூ  என்று உவமானம் சொல்லும் வஸ்துக்களில் எவைகள் எந்தெந்த அளவில் பயன் படுத்த வேண்டும் என்பதை கணக்கிட்டுக் கொண்டாரோ.

தன் இஷ்டம் போல மூவுலகிலும் சஞ்சரிப்பவரான நாரதர் யதேச்சையாக அங்கு வந்தார். இந்த சிறுமியைப் பார்த்தவுடன் புரிந்து கொண்டு விட்டார். இவள், பகவான் சங்கரனின் அர்தாங்கீ- சரீரத்தில் ஒரு பாகம் கொண்ட சதி, அவருடைய மனைவி தான் என்று ஊகித்தவர், தானாகவே அவளுடைய எதிர்காலம் பற்றிச் சொன்னார்.  மந்திரங்கள் ஓதி, ஆஹுதி- யாகத் தீயில் போடப் படும் பொருளை அக்னி தான் ஏற்றுக் கொள்ள முடியும்.  வேறு யாராலும் முடியாது. அது போல இந்த சிறுமி, தற்சமயம் பர்வத ராஜ புத்ரியாக பிறந்து இருந்தாலும், இவளுக்கு மணவாளன் அந்த சங்கரனே.  பர்வத ராஜன் பலவான்.  அவன் அனுமதியின்றி அவன் மகளை தானாக சங்கரன் கவர்ந்து சென்றோ, யாசித்தோ பெற முடியாது.  பெண் கேட்டு வந்து வரன் பக்கத்திலிருந்து பெரியவர்கள் அல்லது பெற்றவர்கள் வராத வரை இவள் தந்தைக்கு மகள் தான். என்ன செய்யலாம், காரியமும் நடக்க வேண்டும், அதார்மிகமாகவும் செய்யக் கூடாது. வேறு உபாயம்  செய்ய யோசித்தபடி அங்கேயே நின்றார். 

இந்த பெண், சதியாக தட்சனிடம் விரோதம் வந்ததால், கோபத்துடன் தானாக அந்த தாக்ஷாயணி என்ற பெயரையே வெறுத்தவளாக, சரீரத்தை விட்டவள்.  பசுபதியான இவள் கணவன் அன்றிலிருந்து எதிலும் பற்றில்லாமல், யாரையும் அருகில் அண்ட விடாமல், தவமே செய்கிறான்.  गज चर्मम् -கஜசர்மம்- யானை தோலை ஆடையாக, கங்கையின் கரையில் உள்ள தேவ தாரு மரம், அதனடியில், கங்கையின் ப்ரவாகத்தில் வரும் நீர்த் துளிகளால் அந்த மரமும் வளருகிறது, அதன் அடியில் அமர்ந்து விட்டார்.  கஸ்தூரி மிருகங்கள் வளைய வருவதால் சுகந்தமான இடம் அது.  கின்னர தம்பதிகள் அங்கு வந்து உல்லாசமாக இருப்பர். பாடுவர். ரமணீயமான இமய மலையின் ஒரு சிகரம், அதிலேயே வசிக்கிறார். 

ப்ரமத प्रमथ- கணங்கள் – (இவர்கள் ருத்ரனின் தொண்டர்கள். )வந்து வணங்குவர். தேவ புங்க மரத்தின் பூக்கள் மிக அழகானவை. அதையே தங்கள் அலங்காரமாக தரித்துக் கொண்டு, ம்ருதுவான போஜ (பூர்ஜ) என்ற மரத்தின் இலைகளைக் கொண்டு தங்களுக்கு ஆடைகள் தயாரித்துக் கொண்டு ப்ரசித்தமான  மணம் உள்ள  மன:ஸிலா என்ற தாது, அதை உடலில் பூசிக் கொண்டு,  அவர் அருகில் பாறைகளில் அமர்ந்திருப்பர். 

பகவான் சங்கரனின் அணுக்கத் தொண்டனான நந்தியும் தன் கூரிய கால் நகங்களால் பாறைகளை பிளந்து வழி செய்து கொண்டு, தன் இயல்பான ஓங்கார நாதம் செய்தபடி அங்கு வந்து சேர்ந்தார்.  கீழிருந்து பசுக்கள் பயத்துடன் ஏறிட்டு நோக்கின. பயங்கரமான சிங்கம் கர்ஜித்ததை லட்சியம் செய்யாமல், தானும் அதே போல பயங்கரமாக கர்ஜனை செய்தபடி தன் பெரிய ககுத்-திமில் தெரிய, ஏறி அருகில் வந்து நின்றார்.

மற்றவர்கள் செய்யும் தவத்தின் பலனே அவர். வேண்டியவர்களுக்கு வேண்டியபடி வரமளிப்பவர். எதைக் குறித்து தவம்? தானே அஷ்ட மூர்த்தியானவர்.  विधाता – விதாதா – இந்திராதி தேவர்களை படைத்தவர்.   அவரே அக்னியாக இருப்பவர்.  தான் விரும்பியது அனைத்தையும் குறைவற பெற்றவர்.  அக்னியின் நடுவில் அமர்ந்து தவம் செய்வது எதற்காக?

இமவான் அதை அறிந்து,  பெரும் மதிப்புக்குரிய  பகவான் சங்கரனுக்கு அர்க்யம் முதலிய மரியாதைக்குகந்த பொருட்களை எடுத்துக் கொண்டு பத்னியுடன் வந்து வணங்கினான். சகிகளுடன் பார்வதியை அவருடைய பணிவிடை செய்ய நியமித்து விட்டுச் சென்றான். 

உள்ளுணர்வால் கைலாச நாதன்  அவள் அங்கு இருப்பதை உணர்ந்தார்.  பணிவிடைகள் செய்வதை ஏற்றுக் கொண்டார். வெளிக் காட்டிக் கொள்ளவும் இல்லை, தன் தவத்திலிருந்து வெளி வரவும் இல்லை. தீரர்கள் என்பவர்கள் அவர்களே.  மிக அதிகமான சபலங்களிலும் மாட்டிக் கொள்ளாமல் தன் சாதனையை தொடருபவனே தீரன். 

பார்வதி, தினமும் பூஜைக்கான பூக்களை பறித்துக் கொண்டு வந்து வைப்பாள். யாகத்தின் தேவையான வேதி என்பதை தயாராக சுத்தம் செய்து வைப்பாள்.  தினசரி தேவைக்கான தண்ணீர், குசம், இவைகளை கொண்டு வந்து சதாசிவனுக்கு சிரத்தையுடன் தேவையான பணிவிடைகளைச் செய்தாள். அவர் தலையில் இருந்த சந்திரனின் குளுமையால் தானும் சிரம பரிகாரம் செய்து கொண்டவள் போல உத்சாகமாக இருந்தாள். 

(இது வரை ஸ்ரீ காளி தாசரின் குமார சம்பவ மகா காவியத்தின் உமோத்பத்தி उमोत्पत्ति என்ற முதல் அத்யாயம்)

Series Navigationகுமார சம்பவம் மஹா காவ்யம் – 2 >>

One Reply to “குமார சம்பவம் மஹா காவ்யம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.