பக்கத்திலிருந்த மொபைலை எடுத்துப் பார்த்தான். 32 மிஸ்டு கால்கள். கோபமாகவும், அலுப்பாகவும் இருந்தது. கதவு பெருஞ்சத்தத்துடன் திறந்தது. இடுப்பில் கையை வைத்து கொண்டு ராதிகா இவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். திரும்ப கண்களை மூடிக் கொண்டான்.
அருகில் வந்து உலுக்கினாள்.
நகுல்.. டோண்ட் பீ சைல்டிஷ். நைட்லேருந்து எத்தனை பேர் கூப்புட்டுட்டு இருக்காங்க. ஒருத்தர் காலையும் அட்டெண்ட் பண்ண மாட்டேங்குற?
மெளனமாயிருந்தான். இதற்கு பதில் ராதிகா அறிவாள். தெரிந்தும் கேட்கிறாள். அவளும் பாவம் என்ன செய்வாள். இந்த இரண்டு மாதமாக எவ்ளோ கால்கள். எவ்ளோ ந்யூஸ்கள். எவ்ளோ அவமானங்கள். எவ்ளோ நக்கல்கள்.குத்தல்கள். எனக்கே தாங்கமுடியவில்லை. இவள் பாவம் என்ன செய்வாள்.
ப்ளீஸ். எதாவது பேசு நகுல் . அருகில் அமர்ந்து இவன் விரல்கள் கோர்த்துக் கொண்டாள். இவன் மார்பின் சுருள் ரோமங்களை நீண்ட விரல்களால் பற்றி சுழற்றினாள். இவர்களின் அந்தரங்க நேரத்தின் அவளது உமேனரிசம்.
என்ன பேசறது ராது. இந்த வருஷம் ரொம்ப வெயில் அடிக்குதுல்ல.
ஏய்.. ஏய்.. முன்முடிக் கற்றையை பிடித்து உலுக்கினாள்.
ஸ்.. வலிக்குதுடி. விடுடி.
விடமாட்டேண்டா. நீ எதாவது பேசு.
அதான் பேசினேனே?
வெயில் அடிக்குது.. மழை பெய்யுது.. டேஷ்.. டேஷ்.. கொன்னுடுவேன் படவா.
மென்முறுவலுடன் எழுந்து உட்கார்ந்தான்.
ஜிம்மி நேற்று நைட்லேர்ந்து கூப்பிட்டு இருக்கார். நீ எடுக்கவே இல்லையாம். சரேலென கை நீட்டி மொபைல் பார்த்தான். ஜிம்மி ஆறு தடவை கூப்பிட்டிருந்தார். ஜிம்மி இவனது பால்யகால கோச். மெண்டார். அவரில்லையேல் இன்று இவன் இல்லை.
ராதிகா அவனையே யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். நா கால் பண்ணி தரவா?
தலையசைத்து மறுத்தான். நா கூப்புட்டுக்கறேன்.
இப்பவே.
இப்பவேவா?
ப்ளீஸ்.. ப்ளீஸ்.
ஓக்கே.. ஓக்கே.
எதிர்முனையில் ஜிம்மியின் உற்சாகக்குரல். ஹாய் மை டியர் பாய். அவர் குரல் கேட்டதும் இவன் கண்கள் உடைந்தன. ராதிகா அவன் தோள் இறுக்கிக் கொண்டாள்.
சொல்லுங்க கோச்.
ஆர் யூ ஆல்ரைட்.
யெஸ்.
இன்னும் கிளம்பலையா?
நா போகலை.
எதிர்முனையில் ஜிம்மி பதறினார். இல்ல. நாஞ்சொல்றத கேளு நகுல். போய் உன் தரப்பை சொல். ஹூயூமானிடேரியன் கிரவ்ண்ட்ல அவங்க புரிஞ்சுக்குவாங்க.
ஸாரி கோச். எனக்கு அதில இஷ்டமில்லே.
இது உன் தனிப்பட்ட விஷயம் மட்டுமில்ல நகுல். நாட்டோட பெருமை சம்பந்தப் பட்ட விஷயம்.
இல்ல கோச். இது தனிப்பட்ட விருப்பம். தோல்வியை நான் மனதார ஏத்துக்கறேன். கமிட்டி என்ன தண்டனை கொடுக்குமோ ஏற்றுக் கொள்கிறேன்.
அவசரப் படாதே நகுல். கமிட்டில உன் சார்பா பேச கொஞ்சம் பேர் இருக்காங்க. அந்த பாண்டேதான் உன்னை ஒழிச்சுக் கட்டணும்னு வெறி கொண்டு அலையறான்.
விடுங்க கோச். அவனே ஜெயிக்கட்டும்.
உனக்கான தண்டனை கடுமையா இருக்கும் நகுல். உன் கரியரையே காலி பண்ணிடுவாங்க.
போதும். நானே இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
இதுதான் உன் முடிவா?
ஆம்.
ஜிம்மி மெளனமாயிருந்தார்.
இன்னும் பல ரெக்கார்டுகளை நீ முறியடிப்பாய் என்று நம்பினேன் நகுல்.
எனக்குப் பின்னால் ஓரு இளைஞர்கள் வரிசை காத்துட்டு இருக்கு. அவங்க வரட்டும்.
நானும் வரட்டும்னுதான் சொல்றேன். ஆனா நீ கெளரவமாக பெரும் புகழுடன் ரிட்டயர்ட் ஆகவேண்டும்.
நகுல் சிரித்தான். கெளரவம். புகழ். கடும் உழைப்பில் விளைந்த முத்துக்கள்.
நான் பெற்றதைதானே இழக்கிறேன். இதை என் சுயவிருப்பத்துடன் செய்கிறேன் கோச்.
பக்கத்துல ராதிகா இருக்காளா?
இல்லை. அவள் உடம்பு சுகமில்லை.
ஜிம்மி கோபத்துடன் ஃபோனை வைத்தார்.
ராதிகா தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். அவளைத் தொட்டு முகம் நிமிர்த்தினான். கன்னங்களில் நீர் உருண்டு கொண்டிருந்தன.
ஏண்டா செல்லம். இப்ப என்ன நடந்துச்சுன்னு அழறே?
என்ன நடக்கலை. எல்லாம் முடிச்சிடுச்சு நகுல். ஏண்டா இப்டி பண்றே?
மறு நாள் செய்தி தாள்களில் நகுலின் புகைப்படத்துடன் செய்தி வந்திருந்தது.
நகுல் என்கிற நகுலன் துரைசாமி, அவரின் மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க என்கொயரி கமிட்டி முன் நேரில் ஆஜராகவில்லை. மேலும் அவரது தரப்பிலிருந்து எந்த பதிலோ, விளக்கமோ எழுத்துப் பூர்வமாகவும் அளிக்கப்படவில்லை. எனவே என்கொயரி கமிட்டியின் சிபாரிசினை தேசிய கிரிக்கெட் கமிட்டி சிறு திருத்தத்துடன் ஏற்றுக் கொள்கிறது.
அதன் விபரம் பின் வருமாறு:
நகுல் நம் தேசத்தில் இன்னும் பத்து வருடங்களுக்கு எந்த வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. இது இன்றையிலிருந்து பதினைந்து நாட்களுக்குள் அமுலுக்கு வருகிறது. இந்த பதினைந்து நாட்களுக்குள் நகுலின் தரப்பிலிருந்து ஏதேனும் விளக்கம் நேரிடையாகவோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ கிடைக்கப் பெற்றால் அந்த விளக்கத்துக்கேற்ப இந்த தடை மாறுதலுக்குட்படுத்தப் படும். மற்றபடி அவர் தரப்பிலிருந்து எந்த எதிர்வினையும் வரவில்லையெனில் இந்த தடை மிகச் சரியாக இன்றிலிருந்து பதினாறாம் நாளிலிருந்து அமுலுக்கு வரும். அந்த தேதிக்குப் பின் வருகிற அவரது எந்த விளக்கமும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்பதனை இந்த செய்தி அறிக்கை மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த செய்தி தேசிய விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலின் படி வெளியிடப்படுகிறது.
அந்த செய்தியை படித்த ராதிகா ஒரு சிறுபறவையின் துயரக்குரல் போல் கதறி அழுதாள்.
நகுல் அவளை இழுத்து மடியில் புதைத்து அவள் கேசம் நீவினான். அவன் கண்களும் திரையிட்டிருந்தன.
பெரு மதிப்பிற்குரிய உங்கள் அனைவரையும் ஜிம்பாப்வே கனிவுடன் வரவேற்கிறது. கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றழைக்கப் படுகிற உங்கள் அணி எங்களைப் பொருட்படுத்தி ,எங்கள் தேசத்திற்கு விளையாட வந்தததிற்கு இந்த தேசத்தின் அதிபர் சார்பிலும் , எங்கள் தேசிய கிரிக்கெட் கமிட்டி சார்பிலும் பேரன்புடன் வரவேற்கிறேன்.
குழைந்த ஆங்கிலத்தில் அவர் பேசிக் கொண்டிருந்தார்.
எவருக்கும் கேட்காமல் நகுலின் காதுகளில் மிக ரகசியமாக கோவிந்த் யாதவ் சொன்னான்.
அவங்க பிளயர்ஸ் எல்லாம் நிக்குறாங்க. நல்லா பாத்துக்கோ உன்னோட 418 வது கேட்ச் யாரென்று. எந்த புள்ளிமான் இந்த புலியின் கையில் சிக்கப் போகுது?
நகுல் அவனை ஒதுக்கித்தள்ளி அவரின் பேச்சை உன்னிப்பாக கேட்க ஆரம்பித்தான்.
எங்கள் நாடு உங்கள் நாட்டுடன் ஒப்பிடும் போது மிக மிகச் சிறியது. எங்கள் மக்கள் தொகை வெறும் 15 மில்லியன். இங்கே 16 மொழிகள் வழக்கத்தில் உள்ளன. எங்கள் நாடு மலைகளாலும், காடுகளாலும் சூழப்பட்ட பிரதேசம். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் இடங்கள் நிறைய உள்ளன. குறிப்பாக விக்டோரியா ஃபால்ஸ், நியாங்கா நேஷனல் பார்க், புவ்ம்பா மெளண்ட் வ்யூ. இங்கிருந்து பார்த்தால் உலகம் தெரியும் என்பது எங்கள் நம்பிக்கை. சற்றேறக்குறைய 70 கிலோமீட்டர் தூரம் வரை எவ்வித தடையும் இல்லாமல் பார்க்க முடியும் என்பதே இதன் சிறப்பு.
எல்லோரும் கை தட்டினார்கள்.
இவனும் தட்டினான்.
அந்த உயரதிகாரி நகுலைப் பார்த்து ஆச்சர்யமாகக் கேட்டார்.
செயிண்ட் தாமஸ்?
ஆமாம். செயிண்ட் தாமஸ் கேன்சர் இன்ஸ்டியூட் போய் பாக்கலாம் அல்லவா?
சந்தேகமாக தலையசைத்தார்.
எதுக்கு? இங்கே நிறைய இயற்கை அழகை ரசிக்க இடமுண்டு.
செயிண்ட் தாமஸ்?
யோசித்தார்.
நகுல் அருகிலிருந்த அவிநாஷிடம் சொன்னான். ப்ளீஸ் அவி இவர்கிட்ட சொல்லி புரிய வை.
அவிநாஷ் சற்று தள்ளி அழைத்துப் போனான். கை ஆட்டி ஆட்டி ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.
இருவரும் வந்தார்கள். நகுலின் கண்களைப் பார்த்து ஸாரி சொன்னார்.
இட்ஸ் ஓக்கே. தோள்களைக் குலுக்கினான்.
அவன் கை பற்றி சிறிது நேரம் பேசாமலிருந்தார்.பின் தொண்டையைக் கனைத்துக் கொண்டு எனக்கு உங்கள் இழப்பு புரிகிறது நண்பரே என்றார். எங்கள் தேசத்தில் உங்கள் பாதுகாப்பு குறித்து எந்த அச்சமுமில்லை. ஆனால் எங்கள் வெளியுறவு துறை அதிகாரிகளிடம் பேசி விட்டு அழைத்துப் போகிறேன்.
செயிண்ட் தாமஸ் மருத்துவமனை.
பதினெட்டாம் நூற்றாண்டு கருங்கல் கட்டிடத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. சுற்றிலும் மலைகள். மரங்கள் மென்காற்றுக்கு தலையசைத்துக் கொண்டிருந்தன. வர்ண மலர்களால் சூழப்பட்டிருந்தது அந்தக் கட்டிடம். பெயர் தெரியாப் பறவைகளின் குரல்கள் கேட்டுக்கொண்டேயிருந்தன. அந்த குரல்களில் சொல்லப்படாத ஒரு சோகம் ஒலிப்பது போல் நகுலுக்குத் தோன்றியது.
நகுலின் விரல்கள் நடுங்கின. அவிநாஷ் இவன் தோள்களை மிருதுவாக அணைத்துக் கொண்டான். நகுலின் பரிசுப் பொருளான மலர்கள், வாழ்த்து அட்டைகள், சிற்பங்கள், பொம்மைகள்,கேக்குகள் நிரம்பிய கூடைகளை இருவர் தூக்கிக் கொண்டு இவர்கள் பின்னாலேயே வந்து கொண்டிருந்தனர். இவர்களுக்குத் துணையாக அந்த உயரதிகாரி வந்திருந்தார்.
ஏழு படுக்கைகள் கொண்ட பத்து ஹால்கள். ஒவ்வொரு ஹாலிலும் நுழைந்து அவிநாஷ் பரிசுகளை வழங்கிக் கொண்டிருந்தார். நகுல் வெறுமென நின்று கொண்டிருந்தான். நகுலின் கண்கள் முழுவதும் நிரம்பியிருந்தன.
ஒன்பதாவது ஹால் முழுக்க குழந்தைகள் . தலை முழுக்க மழிக்கப் பட்ட குழந்தைகள். இனிமையான முகங்கள். அவர்களின் வாழ்நாளின் எல்லை அறிந்தவர்கள் போல் குழந்தைகளுக்குரிய எந்த கூச்சலும் இன்றி அமைதியாக பரிசுகளைப் பெற்றுக் கொண்டார்கள்.
ஏன் அவிநாஷ்.. ஏன்?
அவிநாஷின் கண்களும் கலங்கியிருந்தன.
பத்தாவது ஹாலில் முதியவர்கள்.
அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். இழப்பதற்கு ஏதுமில்லாத போது வரும் மகிழ்ச்சி. எவரும் சொல்லாமலேயே புரிந்தது. அப்பாவும் கடைசி மூன்று மாதங்கள் இப்படித்தானே இருந்தார். இவனிடம் சிரிக்கச்சிரிக்க பேசிக் கொண்டிருந்தார். இவனால் தான் அவரின் எந்த நகைச்சுவைக்கும் சிரிக்க இயலவில்லை.
உயரதிகாரி அறிமுகப் படுத்திக் கொண்டே வந்தார்.
கெவின்,டங்கன், ஜாக், டேவிட், அலி, பீட்டர் சொல்லிக் கொண்டே வந்தவர் கடைசி நபரிடம் வந்த போது நிறுத்தினார்.
இவர் மால்கம் ப்ரெளவ்ன். சிறிது இடைவெளி விட்டு கிரிக்கெட் கோச்.
நகுல் அவர் முகத்தைப் பார்த்தான். மெலிதாக சிரித்தார். அவர் கை பற்றினான். தன் பெயர் சொன்னான்.
இவரின் பையன் ஜெரால்டு ப்ரெளவ்ன். எங்க டீமுக்கு செலெக்ட் ஆகிருக்கார். நாளை மறுநாள் மேட்ச்ல விளையாடறதுக்கு நிறைய சான்ஸஸ்.இருக்கு.
சீனியர் ப்ரெளவ்னின் கண்கள் ஒளிர்ந்தன.
அவர் கை பற்றி குலுக்கினான்.
முப்பது வருட கனவு. என்னால் முடியல. என் பையன் சாதிச்சுட்டான். ஆனா இனிமேல தான் அவனோட முதல் மேட்ச்சை ஆடப்போறான்.
அவர் குரலில் பெருமை வழிந்தோடியது.
விநய்குமார் பதட்டமாக இருந்தான். அந்தக் குளிரிலும் அவனுக்கு வியர்த்திருந்தது. மிகச் சாதாரணமாக நினைத்த மேட்ச் ராட்சஸ வடிவமெடுத்து அவன் முன் நின்றது. எவரும் எதிர்பார்க்கவில்லை. எதிரணியினர் மிக மிக இளைஞர்கள் என்று சொல்வதுகூட தவறு. சிறுவர்கள். அவர்கள் கண்களில் இளமை மின்னியது. ஒவ்வொரு ரன்னையும் காற்றென கடுகி ஓடி எடுத்திருந்தனர்.

இன்னும் மூன்று ரன்கள். ஒரு விக்கெட் அவர்கள் வசம் இருந்தது. கடைசி விக்கெட்டுக்கு இறங்கியவன் கண்கள் மைபூசியிருந்தது போல் ஒரு தேவகுமாரன் போலிருந்தான். எந்த பதட்டமுமில்லாமல் புன்னைகையுடன் ஸ்டம்புக்கு எதிரில் நின்றுகொண்டிருந்தான்.
அவன் பார்வையைச் சந்தித்த விநய் மேலும் பதட்டமானான்.
ஒவ்வொரு ஃபீல்டரிடமும் போய் பேசினான். கோவிந்த் யாதவிடம் போய் பேசினான். அவன் தான் இந்த ஓவரை வீசப் போகிறவன். அவன் உடல்மொழியில் ஓர் அலட்சியம் தெரிந்தது.
விநய் நகுலிடம் வந்தான்.
நகுல் ஞாபகமிருக்கா. இந்த ஒரு கேட்ச்சில் நீ உலகின் நம்பர் ஒன் லிஸ்ட்க்குப் போய்டுவே. கில்கிறிஸ்ட் ரெக்கார்டை சமன் பண்ணி வச்சிருக்க. இந்த ஒரு கேட்ச்சை பிடிச்சா முப்பது வருஷ ரெக்கார்டை பிரேக் பண்ணிடுவே.
இவன் சிரித்தான்.
சிரிக்காதே நகுல். கோவிந்த்கிட்ட சொல்லிருக்கேன். பால் உன்கிட்ட தான் வரும். அதுக்கு மேல நான் ஏதும் சொல்ல வேண்டிய அவசியமில்லை தானே.
சொல்ல வேண்டிய அவசியம் இல்லை தான்.
தலையசைத்தான்.
மெல்ல தலையசைத்தவாறு விநய் நகர்ந்தான்.
ஃபர்ஸ்ட் ஸ்லிப்பிலிருந்த அவிநாஷ் இவனருகில் வந்து முணுமுணுத்தான்.
முந்தாநாள் ஹாஸ்பிட்டல்ல பாத்தோமே அந்த கிரிக்கெட் கோச்சோட பையன் தான் இந்த ஜெரால்டு பிரெளவ்ன்.
ஓ.
விநய் தூரத்திலிருந்த முறைக்க அவிநாஷ் அவன் பொசிஷனுக்கு நகர்ந்தான்.
கோவிந்த் யாதவ் ஃபீல்ட் செட்டிங்கை கண்களைச் சுழற்றிப் பார்த்துக் கொண்டான். பேட்ஸ்மேனின் கவனத்தை சிதற வைக்க அவன் செய்யும் யுக்தி அது.
ஸ்லோ லெஃப்ட் ஆர்ம் ரிஸ்ட் ஸ்பின்னில் கோவிந்த் மன்னன். அவன் வீசினால் எந்த வலது கை பேட்ஸ்மேனும் அவன் வலைக்குள் சிக்கி விடுவார்கள். பேட்டில் படும் பந்து மிகச்சரியாக விக்கெட் கீப்பர் கைகளுக்குள் சர்வ நிச்சயமாக தஞ்சம் புகுந்து விடும்.
சிறு நடையை பெரு நடையாக்கி தன் இடக்கையால் பந்தை சுழற்றி ஜெரால்டுக்கு வீசினான்.
ஜெரால்டு எதிர்பார்த்தது போலவே குழம்பி பேட்டை குறுக்கே நீட்டினான். பந்து எட்ஜ் வாங்கி நகுலை நோக்கி வந்தது. நகுலின் குவிந்த விரல்களின் நுனியில் பட்ட பந்து உருள் புயலென உருண்டு போய் எல்லைக்கோட்டைத் தாண்டியது.
கூட்டம் மதயானைக் கூட்டம் போல் பிளிறியது.
ஜெரால்டு நம்பமுடியாமல் திரும்பி இவனைப் பார்த்தான். நகுல் விநயையே பார்த்துக் கொண்டிருந்தான். விநய் தலையில் கை வைத்து தரையில் முகம் புதைத்திருந்தான். கூட்டம் காவலர்களை மீறி உள்ளே ஓடி வர ஜெரால்டு ஒரு ஸ்டம்பை உருவிக் கொண்டு பெவிலியன் நோக்கி ஓட ஆரம்பித்தான்.
வீடு வெறிச்சென்றிருந்தது.
ராதிகா அவள் அம்மா வீட்டுக்கு போயிருந்தாள்.
முதலில் அவள் மறுக்க இவன் தான் கட்டாயப்படுத்தி அவளை அனுப்பி வைத்தான்.
உன்னை இந்த நிலையில் நான் எப்படி விட்டுட்டு போகமுடியும் நகுல்.
ஐயம் ஓக்கே ராது.
எனக்கு கொஞ்சம் தனிமை தேவை. வெளில போக முடியாது அதான்.
அவள் கண்களில் அடிபட்ட பறவையின் வேதனை தெரிந்தது.
ஒரு கால் பண்ணு நகுல். நான் ஓடி வந்துடுவேன்.
நிச்சயமாக ராது. கூடிய சீக்கிரமே.
அருகில் வந்து அவனை அணைத்து அவன் இதழ்களில் தன்னிதழ்களைப் பொருத்தினாள். பின் விடுபட்டவள் கேட்டாள்.
என்கிட்டகூட சொல்ல மாட்டீல்ல. காசு வாங்கிட்டு அந்தக் கேட்ச்சை விட்டேன்னு எல்லாரும் சொல்றாங்களே. என்னதான் நடந்தது.
ஒண்ணும் நடக்கல ராது. நான் அந்தக் கேட்ச்சை ஜஸ்ட் மிஸ் பண்ணிட்டேன். அவ்ளதான்.
நம்பமுடியாமல் மெல்ல நகர்ந்தாள்.
ஆயிற்று.
ராதிகா போய் இன்றோடு இருபது நாட்கள்.
மிக நீண்ட நெடிய இருபது நெருப்பு நாட்கள். பேப்பர் படிக்கவில்லை. நியூஸ் கேட்கவில்லை. சோஸியல் மீடியாவில் தேசபக்தர்கள் இவனுக்கு மரணதண்டனை வழங்கியிருந்தார்கள்.
அவிநாஷிடம் மட்டும் ஒரு தடவை பேசினான். என்சார்பாக யாரிடமும் எதையும் பேசாதே. இது உன் நண்பனுக்கு கொடுக்கும் சத்தியம்.
அவிநாஷால் மறுக்க இயலவில்லை.
லேப்டாப்பை எடுத்து மெயில் ஓப்பன் பண்ணினான்.
நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
நாற்பத்து நான்காவது மெயில் ஜெரால்டு ப்ரெளவ்னிடமிருந்து வந்திருந்தது.
அன்பு நண்பருக்கு,
மகிழ்ச்சியும், வேதனையும்,வெட்கமுமாய் இதை உங்களுக்கு எழுதுகிறேன்.
மகிழ்ச்சி எங்கள் கிரிக்கெட் அணியில் என் பெயர் ஊர்ஜிதப்படுத்தப் பட்டதற்கு.
வேதனை போன வாரம் என் தந்தை காலமானதால்.
வெட்கம் நீங்கள் எனக்கு விட்டுக்கொடுத்த அந்த கேட்ச்.
மிகவும் நீண்ட நாட்களுக்குப் பிறகே உங்களுக்கு கிடைத்த தண்டனை குறித்து எங்கள் பத்திரிக்கை வாயிலாக அறிந்தேன். முன்பே தெரிந்திருந்தால் என்னால் முடிந்ததை செய்திருப்பேன். என் கிரிக்கெட் முக்கியம் தான். ஆனால் நான் முதலில் மனிதன். பின்புதான் கிரிக்கெட்டர். குற்ற உணர்ச்சி என்னைக் கொல்கிறது நண்பரே. ஏன்? ஏன்? என்று என்னைக் கேட்டுக் கொண்டே இருந்தேன். பதில் கிடைக்கவிலை. அதனால் உங்களிடமே கேட்கிறேன். ஏன் நண்பரே அந்த கேட்ச்சை விட்டீர்கள். எனக்குத் தெரியும் அது மிகச்சுலபமான கேட்ச் என்று. 418 வது கேட்ச். எவ்வளவு விலைமதிப்பில்லாத கேட்ச் என்று உலகமே அறியும். உங்களின் இரக்கத்தால் தானே நாங்கள் ஜெயித்தோம். அனைத்தையும் விளக்கிச்சொல்லி எங்கள் பத்திரிக்கைக்கு சொல்ல நினைத்திருந்தேன். அதற்குள் என் தந்தையின் மரணம் நிகழ்ந்து விட்டது. முப்பது நாட்கள் நான் எங்கும் போகக்கூடாது. இது எங்கள் குடும்ப வழக்கம். முப்பது நாள் கடந்ததும் நான் எப்படியாவது, எங்கள் பத்திரிக்கை மூலமாகவோ அல்லது உங்கள் நாட்டுக்கு வந்தாவதோ பேசவேண்டியவர்களிடம் பேசி உங்கள் மேல் விழுந்த பழியைத் துடைத்து எறிவேன் நண்பரே. அது வரை பொறுத்திருங்கள். என்னால் இன்னமும் நம்ப இயலவில்லை. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா?
அன்புடன்
ப்ரெளவ்ன் ஜூனியர்.
நகுல் மெல்ல புன்னகைத்துக் கொண்டான்.
இனிய ப்ரெளவ்ன் ஜூனியர்,
இங்கு நான் நலமே. எனக்கு எவ்வித புகாருமில்லை. எல்லாருக்கும் சொன்ன பதிலேயே உங்களுக்குச் சொல்கிறேன். நான் 417 கேட்ச் பிடித்திருந்தாலும் எத்தனையோ கேட்ச்களை மிஸ் பண்ணியிருக்கிறேன். அதில் ஒன்று தான் நீங்கள் கொடுத்த கேட்ச். இதில் வருந்துவதற்கோ, குற்ற உணர்ச்சிக்கோ இடமில்லை. எந்த ஸ்போர்ட்ஸ்மேனும் அவன் வாழ்நாளின் கடைசி நாள் வரை ஜெயித்துக் கொண்டேயிருக்க முடியாது. நான் பெற்ற வெற்றிகளை விட இந்த தோல்வி தான் எனக்கு நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. சகமனிதர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, அவநம்பிக்கையை தெரிந்து கொள்ள இது எனக்குக் கிடைத்த நல்ல சந்தர்ப்பம். அதற்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். என்றுமே இருளில் தான் ஒளியின் தேவை புரிகிறது. தொடர்ந்து உங்களை மேம்படுத்திக் கொண்டேயிருங்கள் . அதுவே ஒவ்வொரு விளையாட்டு வீரரும் செய்ய வேண்டியது. என் மேல் உங்களுக்கு ஏதேனும் மதிப்பிருந்தால் என் விஷயத்தை அறவே மறந்து விட்டு தொடர்ந்து விளையாடி உங்கள் நாட்டுக்கும், உங்கள் தந்தைக்கும் பெருமை சேருங்கள். நீங்கள் பயணிக்க வேண்டிய தூரம் அதிகமுள்ளது.
வாழ்த்துகள்.
அன்புடன்,
நகுலன்.
வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே லேப்டாப்பை மூடினான்.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

அருமையான கதை