- குமார சம்பவம் மஹா காவ்யம்
- குமார சம்பவம் மஹா காவ்யம் – 2
- குமார சம்பவம் மஹா காவ்யம் – 3
- குமார சம்பவம் மஹா காவ்யம் – 4
- குமார சம்பவம் மஹா காவ்யம் – 5
- குமார சம்பவம் மஹா காவ்யம் – 6
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 7
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 8
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 9
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 10
- குமார சம்பவம்: பாகம் – 2
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 9
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 13
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 14
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 15
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 16
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 17
அத்யாயம் 12

இந்திரன் முதலான தேவர்கள் சாதக பட்சி மழை நீருக்காக காத்திருப்பது போல குமரன் வளர்ந்து போர் புரியும் தகுதியை அடைவதை எதிர் நோக்கியிருந்தனர். அபிமானி- கர்வம் மிகுந்த அசுரன் தாரகனின் அதிகாரமும் அட்டகாசமும் அளவு மீறி போய் விட்டிருந்தன. அவனால் பாதிக்கப் பட்ட அனைவரும், இந்திரன் அவன் பரிவாரங்கள், மற்ற தேவர்களுடன் ஸ்ரீ ஹரனைக் காண வந்தனர்.
அசுரன் கண்ணில் படாமல் மேகங்களுக்குள் மறைந்தபடி பிரயாணித்து கைலாஸ மலை வந்து சேர்ந்தனர். மலைமகளும் கைலாச நாதனும் நடமாடிய பவித்ரமான மலை பிரதேசத்தில் இறங்கினர். மேகாத்மா – மேக ரூபத்தில் மாதலி என்ற சாரதி கை கொடுக்க, பினாகியின் ஆலயம் என்பதால் தூய்மையான உடல், உடை, எண்ணங்களுடன் அவரைக் காண வந்தனர். கடும் கோடையில் தாகத்தால் தவிக்கும் மனிதர்கள் தண்ணீர் உள்ள இடத்தை நோக்கி வேகமாக வருவது போல வந்தனர்.
அந்த நிலையிலும், ஸ்படிக மலையில். எங்கும் தங்கள் ப்ரதி பிம்பங்கள் தெரிவதை வினோதமாக ரசித்தனர். தங்களையே பலவாக காட்டிய அந்த ப்ரதி பிம்பங்களால் மனம் இளகி பதட்டம் குறைந்தவர்களாக விபுவின் இடத்தை அடைந்தனர்.
வழியில் துவார பாலகனான நந்தி எதிர் பட்டார். அவர் உடலில் பலவிதமான உயர் மணிகளும் ரத்னங்களும் பதித்த கண்டா- பெரும் ஆலய மணி, அருகில் பொன்னாலான விசித்ரமான தண்டம் இவைகளுடன் ஸ்ரீ ஹரனின் ஆலய பாதுகாப்பை தான் ஏற்றிருப்பதாக பறை சாற்றுவது போல அமர்ந்து இருந்தவரை வணங்கினர். அவர் அனுமதியின்றி ஆலயத்தினுள் ப்ரவேசிப்பது முடியாது என்பதால் அருகில் சென்றனர்.
அவர்களைக் கண்டதும் தண்டத்தை தன் இடையில் செருகிக் கொண்டு சுரேந்திரன் என்ற மதிப்பினால் அருகில் வந்து வாழ்த்தி, வரவேற்று விட்டு, ஈஸ்வரனிடம் தெரிவிக்கச் சென்றார்.
அதைக் கேட்ட ஜகதீஸ்வரனின் புருவத்தின் அசைவால் அனுமதியைப் பெற்று, தேவ லோகத்து ப்ரதி நிதிகளுடன் தானும் உள்ளே வந்தார். ப்ருங்கி முதலிய முனிவர்களும் வந்து சேர்ந்தனர். பலவிதமான உடல் அமைப்பு உள்ள அடியார்கள். ஆயிரம் கண்கள் உடைய- சஹஸ்ர நேத்ரன்- இந்திரனுக்கு ஒரு பெயர். அவன் பகவானை ரத்ன மயமான ஆசனத்தில் அமர்ந்திருப்பவராகக் கண்டான்.
அடுத்த பதின் மூன்று ஸ்லோகங்கள் மூலம் பகவான் ஸ்ரீ ஹரனை இந்திரன் துதித்தான்.
- வாசுகி முதலான நாகங்கள் தலையில் கிரீடம் போல எந்த கட்டும் இல்லாமலேயே ஸ்திரமாக இருக்கின்றன. அதன் மணிகளே ப்ரகாசமாக தங்களைக் காட்டிக் கொடுத்துக் கொள்கின்றன. சடைகளின் இடையில், இந்த நாக மணிகளின் ஒளி, சுமேரு மலையில், தாதுக்கள் தனிப் பட்டு ப்ரகாசமாக தெரிவது போல உள்ளன.
- உன்னதமான கங்கை நதி பொங்கி ப்ரவாகமாக ஓடுபவள். இவருடைய சடையில், தன் சீறும் அலைகளை அடக்கி வைத்துக் கொண்டு, வெண்மையான அதன் நுரைகளே, கைகளாக, ஸ்ரீ ஹரனின் அங்கத்தில் இணைந்துள்ள பார்வதி தேவியை சீண்டி விளையாடுவது போல இருக்கிறது. என்ன இருந்தாலும் சபத்னி அல்லவா?
- கங்கையின் ப்ரவாகத்தில், இளம் சந்திரனின் கலை, பலவாக தெரிகிறது. அதன் கிரணங்கள் வெண் மேகங்கள் பனி படர்ந்து முன்னிலும் அதிகமான வெண் நிறமாகத் தெரிவதை, ரசித்தனர்.
- நெற்றிக் கண்ணின் ஒளியின் முன் சந்திர ஸூரியர்கள் -இங்கு அவருடைய மற்ற இரு கண்கள் – ஓளி குறைந்து காணப் படுகின்றன. அதன் பிரளய காலத்து அக்னிக்கு சமமான தேஜஸ்- வெப்பம் அதனால் தான் மீனத்வஜன் எனப்படும் மன்மதன் எரிந்தான்.
- குண்டலங்கள் உயர்ந்த மணிகளால் ஆனவை. அவைகளும் சேர்ந்து முகத்தின் காந்தியோடு போட்டி போட்டுக் கொண்டு ஸூரிய சந்திரர்களுடன் தாங்களும் வணக்கத்தை பெறுகின்றன.
- அலங்காரமாக ஆகி விட்ட நீல கண்டம். தேவி கௌரி அணிந்துள்ள கண்ட பூஷணம், கழுத்தின் அலங்காரமான நீல மணி மாலையுடன் சேர்ந்து ஒளி வீசுகிறது போலும்.
- வெண்மையான புகை பரவி உள்ளது. அதைக் காண இமவானுடைய பனி மூடிய சோபையை ஒத்திருப்பதாக உணர்கிறோம். ப்ரபோ! முப்பத்து மூன்று தேவர்களும் அசுரர்களால் பெரும் துன்பங்களை அனுபவிக்கின்றனர். தேவ லோகத்து இயல்பான அமரத்வம் என்பதே அழியும் நிலையில் உள்ளதோ என பயப்படுகிறோம்
- தங்கள் கையில் வைத்திருக்கும் பிரும்ம கபாலம் அதை வைகுண்டத்தில் உள்ளவர்கள் கூட மதிப்புடன் வணங்குகிறார்கள். ஆபரணமோ யுத்த முடிவில், நர- மனித அஸ்தி எலும்புகளாலான மாலையும், த்ரிஸூலமும் அபயம் அளிக்கும் தங்கள் கைக்கு அலங்காரமே.
- சந்திரனின் குளுமையான அம்ருதம் போன்ற காந்தியால் முழுக்காக்கப் பட்டு அந்த பிரம்ம கபாலம் உயிர் பெற்று எழுந்து விட்டதோ, என்ற ஐயம் எழும் படி வேத கானம் அங்கு நிறைந்துள்ளது. இந்த விதமாக இந்திரன் பகவான் ஸ்ரீ ஹரனைக் கண்டான்.
- பொற்கொடி போன்ற தேவி அங்கு வந்து, இயல்பாக அவர் அருகில் வந்து நிற்கவும் அந்த இடமே மங்களமயமாக ஆனது. சரத் காலத்து மேகம் போன்றவளும், மகேஸ்வரனின் வெண்மையும் மின்னலுடன் கூடிய மழைக் கால மேகத்தை நினைவுறுத்தியது.
- கர்வம் கொண்டதால் மன்மதனை மகேஸ்வரன் அழித்தார். பினாக பாணியான பகவானுடைய கையில் இருக்கும் பினாகம் என்ற வில் மற்ற எவராலும் தொட்டு தூக்கக் கூட முடியாத சக்தி வாய்ந்தது.
- தேவ தேவனின் பத்ராசனம் என்ற கால் வைக்கும் பீடம் மாணிக்க மணியால் ஆனது. சாமரங்கள் வீசும் சமயம் சந்திர சூரியர்களின் ஒளி பட்டு தானும் வெண்மை கலந்து தென்படுகிறது போலும். இவ்வாறு அவர்கள் கேசாதி பாதம் என்ற முறையில் போற்றித் துதித்துக் கொண்டிருந்த சமயம் குமாரன் அங்கு வந்தான். சஸ்த்ரங்களின் பயிற்சி முடிந்து தன் சகாக்களுடன் வந்தவன், அவர்களைக் கண்டதும் தேவர்கள் மகிழ்ச்சியுடன் கண் கொட்டாமல் பார்த்தபடி இருந்தனர்.
சைல புத்ரியின் மகன் இப்படித் தான் இருப்பான் என்று ஓரளவு எதிர்பார்த்து இருந்தாலும் அந்த தேஜஸ், அழகுக்கே அழகூட்டுவதாக அமைந்த உடல் வாகும், கம்பீரமும், ஒரு நிமிடம், இந்திரன் திகைத்தான். கண்களைக் கூசும் ப்ரகாசத்தில் மனம் தடுமாறுவது இயல்பே. கண்கள் ஆயிரம் வேண்டும் என்று சொல்வோம். ஆனால் ஆயிரம் கண்களுடைய தேவர் தலைவனே, மயிர் கூச்செரிய , பருவ காலத்தில் பூத்த மாமரம் தளிர்கள் தெரியாமல் பூவே மரத்தை மறைத்து நிறைந்து தெரிவது போல ரோமங்கள் குத்திட்டு நிற்க, நின்றான் என்று உவமை சொல்கிறார். பரவசம் அடங்கி, தன் நிலைக்கு வந்து பகவான் ஸ்ரீ ஹரனையும் பார்த்து தான் கண் பெற்ற பலனை அடைந்ததாக நினத்தான்.
பொன் மலையின் சாரம் போன்றவன், கைகளில் ஆயுதங்கள், வில், அம்பு இவைகளையும் வைத்துக் கொண்டு எதிரில் நின்ற குமாரனை, தந்தையின் அருகில் சென்று அமர்ந்து விட்டவனைப் பாத்து, இனி நம் சத்ருக்களை ஜயிப்பதில் எந்த தடங்கலும் இல்லை என்பதாக மனதினுள் நிம்மதியடைந்தான்.
ஸ்ரீ நீல கண்டனின் நந்தி தன் பரிவாரங்களோடு வந்தான். பகவானிடம் தன் பொன்னால் ஆன தடி, (அதுவே அவரது ஆயுதம்) வந்து வணங்கி, சஹஸ்ர நேத்ரன் எனும் இந்திரன் வந்திருப்பதையும் கண்டான். நந்தியின் வரவால் அந்த இடம் புத்துணர்வு பெற்றது போலாயிற்று. தான் வந்த காரணத்தையும் தெரிவிக்கலானான், அதற்கு முன் வந்திருந்த விருந்தாளியான இந்திரனை , திரிபுராரியான ஹரனும் கண்களால் அனுக்ரஹித்தார். இந்திரனும் ஜகதேக- உலகமே வணங்கும் ஈஸ்வரனை சாஷ்டாங்கமாக மகுடங்கள் காலில் பட வணங்கினான்.
மகேஸ்வரனை வணங்கியதால், தானே பலனடைந்தவனாக உணர்ந்த இந்திரன் பக்தியுடன் அவர் முன் அடக்கத்துடன் நின்றான். அவர் எதிரில் இருப்பதாலேயே அவர் அருள் பெற்றதாக மகிழ்ந்தான். அருகில் இருந்த அவரது பரிவாரங்கள், கணங்கள் அனைவரையும் மரியாதையுடன் கை கூப்பி வணங்கினான். அதற்குள் பரிவாரங்களால் இந்திரனுக்கான ஆசனம் கொண்டு வரப் பட்டது. பொன்னால் ஆன அந்த உயரிய ஆசனத்தில் அமரவே தயங்கிய இந்திரன் பிரபுவின் அருள் அது என்றெண்ணி உவகையும் அடைந்தான். யார் தான் அந்த மரியாதையை மறுப்பார்கள்.
மென் முறுவலோடு ஈஸ்வரன் உடன் வந்திருந்த மற்றவர்களையும் பார்த்து, வசதியாக அனைவரையும் காணவும் வசதியாக , அமரும் இருக்கைகளை அளிக்கச் செய்தார். அவர்களும் வந்த பின். வந்த காரியம் பற்றி விசாரித்தார். அனைவரும் சுர நாயகர்கள் என்று அறிவேன். முகமே அவர்கள் அசுர வீர்களால் படும் பாட்டை தெரிவிப்பதாக உள்ளதே என்றார். தங்கள் இயல்பான உடல் வலிமையும் மதிப்பும் இழந்து, அடிபட்டு, வாடி வருந்தி இருப்பதாக கண்டார்.
அஹோ! அனைவரும் ஏராளமான பராக்ரமங்களுடன் இருந்தவர்களே. வீரர்களாக, உயர்ந்த அஸ்த்ர சஸ்த்ரங்களுடன், வெற்றியே கண்டவர்கள், பனி விழுந்த பத்மத்தின் இதழ்கள் போல வாட்டத்துடன் காணப் படுகிறீர்கள் என்றார். உங்கள் முயற்சியாலும் நல் வினையாலும் சுவர்கத்தை அடைந்த நீங்கள் அதனால் அமையப் பெற்ற சத்ர சாமரங்களை, அந்தந்த பிரிவில் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் உங்கள் உரிமையான இந்த அடையாளங்களை எக்காரணம் கொண்டும் விடாதீர்கள் என்றார். நீங்களும் தேவ வாசிகளாக இருந்தும், பூ உலகில் எதைத் தேடி அலைகிறீர்கள்? ஏதோ அபசாரம் செய்ததால், தங்கள் புண்யங்களை இழந்தீர்களா? பாடு பட்டு பெற்ற சுவர்க பதவிகள். திடுமென விட்டு வெளியேற என்ன காரணம்? சித்தர்கள் கூட எளிதில் பெற முடியாத தேவ லோகம். சகல வசதிகளும் தேவைகளையும் நிறைவேற்றும் ரம்யமான இடம். உயர்ந்த தெய்வீகமான இருப்பிடம் அதிலிருந்து ஏன் வெளியேறினீர்கள்? அதற்கு சமமான மற்றொரு இடம் உண்டா?
அதன் பின், தானே, அதற்கான காரணத்தை ஊகித்தவர் போல பேசுகிறார். தேவர்களே! தேவர்கள் தலைவனுடன் வந்து இங்கு கூடியிருக்கும் அனைவருமே, ஒரே விதமாக அடிபட்டவர்கள் போல, மன வருத்தம் தெரிய இருப்பவர்களே, சொல்லுங்கள். என்ன கஷ்டம் உங்களுக்கு? மகாசுரன் தாரகன் மூவுலகையும் வெற்றி கொண்டு ஆக்ரமித்து விட்டான் என அறிந்தோம். அவனுடன் முரண் பட்டீர்களா? அவனால் அவமதிக்கப் பட்டீர்களா? அசுரனானாலும் அவனும் பலசாலியே. தாவானலம் எனும் பிரளய கால அக்னி வனத்தையே அழிக்கும். மேகம் வர்ஷித்தால் மட்டுமே அது அடங்கும். நான் மட்டுமே அந்த மகாசுரனை அடக்க சக்தியுடையவன்.
அவரே இப்படி சொன்னதால், நம்பிக்கையிழந்திருந்த தேவர்கள், அவர் முகத்தை ஏறிட்டு பார்த்தவுடன் அவருடைய உள் மனதை, முகம் மலர இருந்ததை வைத்து புரிந்து கொண்டு, உடனடியாக தங்கள் துன்பம் விலகும் என்ற ஆசுவாஸத்தை அடைந்தனர்.
கிடைத்த இடைவெளியில் இந்திரன் தங்கள் கோரிக்கையைச் சொல்ல இதுவே சரியான சமயம் என நினைத்தவன் போல பேசினான். சரியான சமயத்தில் சொல்லும் சரியான சொல். நற் பலன்களைத் தரும் என்பது உலக வழக்கு. தகுதியான ஒரு சொல், மிகப் பெரிய மேன்மையை அடையச் செய்யும் என்று பெரியவர்கள் சொல்வார்களே என்று நினைத்தானோ என்பது போல இருந்தது.
நம்பிக்கை தரும் ஈஸ்வரனுடைய வாக்கால், இழந்த நிம்மதியை திரும்ப பெற்றது போலவும், புத்துயிர் பெற்றது போலவும், இந்திரன் முதலானோர், மகிழ்ச்சி பெருக்கு கண்களில் நீராக வெளிப்பட, முகத்திலேயே மகிழ்ச்சி தெரிய சொன்னார்கள். இந்திரன் சொன்னான்: ப்ரபோ! ஞானமே ஒளியாக, அந்தகார இருட்டை அழிக்கும் தீபமாக, அழியாத ஒன்று, எந்த நிலையிலும் தவறாத ப்ரபை- ப்ரகாசத்தை உடையவன், சர்வக்ஞ! அனைத்தையும் அறிந்தவர் நீங்கள். எது, எந்த அளவு, என்றும் கடந்த காலம், மற்றும் நிகழ், வருங்காலத்தையும் அனைத்தும் உங்கள் கண் முன் காணக் கூடியவர் நீங்கள்.
எங்களுக்கு தற்சமயம் பெரும் கவலையைக் கொடுக்கும் தாரகாசுரன், தானே மூவுலக தலைமையை ஏற்றுக் கொண்டு விட்டான். அவன் இரு புஜங்களின் பலம் அளப்பரியது. அவன் ஆட்சியில், நாங்கள் படும் பாடு, பகவானே, தாங்கள் அறியாததா? விதி-ப்ரும்மாவின் அமோகமான வரம் பெற்றவன். மூன்று உலகையும் தன் வசம் ஆக்கிக் கொண்டு விட்டான். மேலும் மேலும் தண்ட சண்டனாக, தேவர்களை ஒட்டு மொத்தமாக அழிக்கவே முனைந்து நிற்கிறான். என்னையும் என்னைச் சார்ந்தவர்களையும் தான் அவன் எதிர்க்கிறான். மற்றவர்களை புல் பூண்டு போல அலட்சியமாக பார்க்கிறான்.
பிதாமகர்- ப்ரும்மா அவரிடம் வணங்கி முறையிட்டோம். எங்களுக்கு சமாதானம் சொல்கிறார். ஸேனாபதி பிறக்கப் போகிறான். ஸ்மர- மன்மதனை வாட்டியெடுத்த பகவான் சங்கரனின் மகனாக வருவான். அவன் நிச்சயம் இந்த அசுரனை அடக்குவான். பார்க்கப் போனால் தாரகனின் வளர்ச்சிக்கு காரணமே ப்ரும்மா தந்த வர தானமே.
அஹோ! அவர் சொல்லி தற்சமயம் வரை நாங்கள் தாங்க முடியாத பராபவம்- அவமானம் அடைந்து விட்டோம். பல விதமான கஷ்டங்கள். ஹ்ருதயத்தில் குத்தியது போல தவிக்கிறோம். தேவர்கள் அனைவருமே இனி பொறுக்க முடியாது என்ற நிலைக்கு வந்துள்ளோம்.
மூவுலகிலும் ஐஸ்வர்ய லக்ஷ்மியை அவனே அடைந்து விட்டான். அதனால் பெரும் கர்வத்துடன் எங்களை எதிர்க்கிறான். மகாசுரன்- அவனை அடக்கி, பகவானே! நேருக்கு நேர் யுத்தத்தில் அவனை வெற்றி கொள்ள முடியாமல் தவிக்கிறோம். உங்கள் குல நந்தனன் தான் எங்களை காக்க சக்தியுடையவன்.
மிகப் பெரும் யுத்த பூமியில் உங்கள் மகனின் கூர்மையான சஸ்திரங்கள் அவர்கள் தலைகளை கொய்யட்டும். மகாசுரனின் அடியாட்களின் ஓலம் பத்து திக்குகளிலும் எதிரொலிக்கட்டும்.
பெரும் யுத்தத்தில் அந்த அசுர படையை அடக்கி தேவலோக சிறையில் அடைக்கப் பட்ட பெண்கள் விடுவிக்கப் பட்டு முகம் மலரட்டும். சுரேந்திரன் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீ சங்கரன் தேவர்களுக்கு எதிராக அசுரனின் அடக்கு முறையாலும், பலவிதமான துன்புறுத்தலாலும் அவர்கள் பாடும் பாட்டை புரிந்து கொண்டார். அவர்களிடம் இரக்கம் கொண்டார். பூத நாயகன், பதில் சொன்னார்.
அஹோ! அஹோ! தேவ கணங்களே! சுரேந்திரனை முன்னிட்டுக் கொண்டு வந்துள்ள மற்ற தேவர்களே கேளுங்கள். உங்கள், உங்கள் வாரிசுகள் அனைவரும் நன்மை பெற நானும் என் சந்ததியினரும் கண்டிப்பாக உதவுவோம். இந்த வினாடியே என் மகனை உங்கள் சேனாபதியாக நியமித்துக் கொள்ளுங்கள். இவன் அந்த பதவியைப் பெற சக்தியுடையவனே. சத்ருவை ஜயித்து, தேவ லோகத்தை நீங்கள் அனைவரும் திரும்பப் பெறுவீர்கள். இதைச் சொல்லி விட்டு பகவான் தன் மகனைப் பார்த்தார். அவனோ மகா உத்ஸாகமாக இருந்தான். மிகப் பெரிய உக்ரமான யுத்தம் அதில் பங்கு பெறுவேன் என மகிழ்ந்தான். மகனே! அந்த தேவ விரோதியான அசுரனை வதைத்து விடு என்று சொன்னார்.
பசுபதியின் சாஸனம்-ஆணை. குமாரன் உடனே ஏற்றுக் கொண்டான். தலை வணங்கினான். தந்தையிடம் அன்பும், மரியாதையும் வெளிப்பட இருந்தது அவன் செயல். உலகில் பெற்றோரிடம் அன்புள்ள தனயர்களுக்கு இது தானே தர்மம்.
மகனே! யுத்த விதிகளை சொல்கிறேன். அசுரன் பலசாலி என்று ஆரம்பித்தார். தாயும் அங்கு வந்தாள். மகன் பராக்ரமம் பற்றி அறிந்தவள் ஆதலால் தயக்கமின்றி சம்மதம் தெரிவித்தாள். தன் மகன் வெற்றி வீரனாக இருப்பதையறிந்த எந்த தாய் தான் மகிழ்ச்சியடைய மாட்டாள்.
தேவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. பெற்றோரும் சம்மதித்து சக்திசாலியான மகனை அனுப்பி வைக்கிறார்கள். என்ன பெருமை. தேவ விரோதிகளின் கர்வத்தை அடக்கி, உலகுக்கே அபயம் அளிக்க வல்லவன். உடனடியாக சம்மதித்த ஈஸ்வரன் அருளால் பெரும் மன நிம்மதியை அடைந்தனர். தாங்கள் சந்தேகம், கேட்பது சரியா என்பது போன்ற பல கேள்வி சமாதானங்கள், இவைகளுக்கிடையில், கேட்ட உடனே தர சம்மதித்ததும் அல்லாமல், மகனும் உத்சாகமாக உடன் வந்தது பெரும் பாக்யம் என்று மகிழ்ந்தனர்.
|| இது வரை ஸ்ரீ காளி தாஸரின் குமார சம்பவ மகா காவியத்தில் कुमार सेनापत्य वर्णणम् -குமார சேனாபத்ய வர்ணனை ‘என்ற பன்னிரெண்டாவது அத்யாயம் ||
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
