குமார சம்பவம் மஹா காவ்யம் – 5

அத்யாயம்-5

தன் கண் முன்னாலேயே காமன் எரிந்து சாம்பலானதைக் கண்ட பார்வதி மிகவும் வருந்தினாள். பினாகி- மஹேஸ்வரன் தன் மணாளனாக வேண்டும் என்ற அவள் விருப்பம் நிறைவேறுமா என்ற கவலை உண்டாயிற்று. தன்னையே நிந்தித்துக் கொண்டாள். உடல் அழகு எதற்கு? மனதுக்கு பிரியமானவர்கள் பாராட்டினால் தானே சிறப்பு.

தானும் தவம் செய்து என் விருப்பத்தை அடைவேன் என தீர்மானித்தாள்.  ஸ்ரீ சங்கரன் போன்ற பதி கிடைக்க ஒன்று அவனிடம் மனதொன்றி பிரியமாக இருத்தல், மற்றொன்று தவம். தவம் செய்வது என்று தீர்மானித்துவிட்ட மகளிடம் தாயார் மேனா வந்தாள். அவளை மார்போடு அனைத்து அரவணைத்து தவம் செய்வது எளிதல்ல மகளே, உன்னால் தாங்க முடியாது என்று தடுத்தாள். ஸ்ரீ சங்கரனே பதியாக வரவேண்டும் என்று அவள் விரும்புவது தெரிந்திருந்தாலும், தாயாராக தவம் செய்வதன் கடினத்தை எடுத்துச் சொன்னாள். 

எல்லா தேவதைகளும் நம் வீட்டிலேயே இருக்கின்றன. மகளே, உன் கோமளமான உடல் எங்கே, கடினமான தவம் செய்யும் விரதங்கள் எங்கே.  தளிர்கள் ப்ரமரம்- வண்டின் பாரத்தை தாங்கும். ஒரு பக்ஷி வந்து அமர்ந்தால் தாங்குமா?  எவ்வளவு தடுத்தும் பார்வதி தன் செயலில் உறுதியாக இருப்பதை மாற்ற முடியவில்லை. மனம் ஒரு விஷயத்தில் பற்று கொண்டு விட்டால் திடமாக அதை அடையவே முயலும்.  திடமான மன உறுதி நீர் போன்றது. கீழ் நோக்கி பிரவகித்து போவது என்று நீரின் இயற்கை. அதை எப்படி தடுத்து நிறுத்த முடியாதோ, மன உறுதியும் அவ்வாறே. 

தந்தையிடம் ஒரு நெருங்கிய சகியை அனுப்பி தவம் செய்ய அனுமதி வேண்டினாள். வனம் செல்லவும், தன் மனோரதம் நிறைவேறும் வரை தவம் செய்யப் போவதாக தீர்மானித்து இருப்பதை தெரிவித்தாள். கிரிராஜன் அவள் விருப்பத்தை அறிந்தவன் ஆனதால் அனுமதித்தார்.  மதிப்புக்குரிய தந்தையே அனுமதித்த பின், கௌரி மகிழ்ச்சியுடன் மலையின் ஒரு சிகரத்தை தேர்ந்தெடுத்தாள்.   பின்னால் அது கௌரி சிகரம் என்றே வழங்கலாயிற்று.

சலனமின்றி தன் குறிக்கோளில் திடமாக இருந்த பார்வதி வல்கலை- மரவுரி ஆடையை உடுத்திக் கொண்டு,  ஜடையை தரித்தாள். முன் அழகிய கேசமாக அலங்காரமாக இருந்தது போலவே இந்த ஜடையிலும் அவள் முகத்தின் அழகு மாறவில்லை. மௌஞ்சி என்ற விரதம் ஏற்றுக் கொண்டதைக் குறிக்கும் முப்புரி நூலை அணிந்தாள்.  மேகலையாக அதுவும் அவள் இடுப்பில் கட்டியதில் கோமளமான அந்த பாகம் சிவந்து விட்டது.  கைகளில் குசம் என்ற கூரான புல்லை பூமியிலிருந்து பிடுங்கி எடுத்து வந்ததில், விரல்கள் சிவந்தன.  காயம்    பட்டது கூட,  ருத்ரனின் கையில் ருத்ராக்ஷ மாலை இருப்பது போல விளங்கியது. அரச போகங்களான, உயர்தர படுக்கை போன்றவைகள் மட்டுமல்ல தன் கேசத்தின் அலங்காரமான மலர்கள் கூட தூங்கும் சமயம் புரண்டு படுத்தால் குத்துவதாக உணர்ந்தவள், தற்சமயம்  தரையில் படுத்து, கைகளில் தலை வைத்து உறங்கினாள். 

இது தவம் செய்வதின் நியமங்கள் மட்டுமே. என் தவப் பலன் கிடைத்தவுடன் திரும்ப மீட்டுக் கொள்வேன் என்பது போல, கொடிகளில் தன் நளினமான தன்மையையும், பெண் மான்களிடம் சஞ்சலமான பார்வையையும் அடைக்கலமாக வைத்து விட்டாள் போலும்.  சிறு செடிகளுக்குத் தானே நீர் விட சிறு குடங்களை பயன் படுத்தினாள். அவள் சரீரம் அதற்கு மேல் தூக்க போதுமானதாக இல்லை.  தானே வளர்த்த செடிகளை, பின்னால் பெறப் போகும் கார்த்திகேயனை நினைத்தோ தாயன்புடன் பரிபாலித்தாள்.  அதனால் கார்த்திகேயன் பிறந்த பின்பும் இந்த செடிகளை பராமரிப்பதை விட மாட்டாள். 

காட்டில் கிடைத்த தானியங்களை கொடுத்து மான் குட்டிகளை தன் பக்கம் வரச் செய்தாள். அவைகளும் அன்புடன் அந்த தானியங்களைப் பெறும் சாக்கில் அவள் அருகில் ஆவலுடன் வந்தவை அவளருகிலேயே சுற்றின.  முன்பு தன் சகிகளின் விசாலமான கண்களை ரசித்தவள், இவைகள் அந்த இடத்தை எடுத்துக் கொண்டன.  அலுக்கவே அலுக்காமல்  அந்த கண்களைப் பார்த்து குதூகலம் அடைந்தாள். 

ரிஷி கணங்கள் இதைக் கேள்விப் பட்டு  தரிசிக்க வந்தனர். தினமும் நீராடி, அக்னியில் ஹோமம் செய்கிறாள், பர்வத ராஜ குமாரி, தவம் செய்வதின் நியமம் என்பதால்  மரவுரியை உடுத்திக் கொண்டிருக்கிறாள், துதிப் பாடல்களை பாடுகிறாள் என்று கேள்விப் பட்டதை நேரில் கண்டு  வியந்தனர்.  அனுதினமும் தர்ம காரியங்களை செய்து வாழ்ந்து வயது முதிர்ந்தவர்கள்,  மரியாதை நிமித்தம் வந்தனர். அவர்களுக்கு வயது ஒரு தடையா என்ன? தர்மம் எங்கிருந்தாலும் பாராட்டுபவர்கள். 

அந்த இடத்தில் பொறாமை என்பது இருக்கவில்லை. அந்த தபோ வனத்தில் இயல்பான பகை கூட இல்லாமல் பசுவும் புலியும்  ஒன்றாக வளர்ந்தன.  அதிதிகளை வரவேற்கவும்  உபசரிக்கவும் அங்கிருந்த மரங்களே பூவாகவும், பழமாகவும் கொடுத்தன.  குடிலுக்குள் பாதுகாத்து இருந்த அக்னி அணையாமல் இருந்து உதவியது. பாவனமான தபோவனம்.  நாளடைவில் தன் தவத்தின் தீவிரத்தை அதிகரிக்க நினைத்து கோமளமான தன் உடலால் முடியாது என்று தயங்கிய  கடினமான தவம் செய்வதில் முனைந்தாள்.  முன்பு விளையாட்டில் பந்தை வீசினால் கூட வருந்திய கைகள், இப்பொழுது முனிவர்கள் போல சரீர சிரமத்தை பாராட்டாமல் இருக்க அறிந்தாள். அவள் உடல் பசும் பொன்னால் ஆன தாமரை மலர் போலும்.   அந்த  மிருதுவான மலர் போன்றவள்,  பொன் போல கடினமாகவும் இருக்க முடியும் என்று காட்டுவது போல. 

நாற்புறமாக அமைந்த  வேதிகளில் நெருப்பு ஜ்வாலையாக எரிய நடுவில் அமர்ந்து தியானம் செய்தாள்.  இடை சிறுத்த சிறுமி அப்பொழுதும் மென் முறுவலோடு காணப் பட்டாள்.  கண்களை ஆதவனின் ஜோதியிலேயே நிலை நிறுத்தி அந்த ஒளி வெள்ளத்தால் பாதிக்கப்படாமல், இடைப் பட்ட இடர்களைத் தவிர்த்து  மற்ற எதையும் பாராமல் ஒரே நோக்காக வைத்து ஆதவனை கண்டும் தயங்காமல் இருந்து தன் செயலைத் தொடர்ந்தாள்.  தபனன் – தகிப்பவன் என்றே பெயர் பெற்ற ஆதவன், அவள் முகத்தை தாமரை மலரை நோகச் செய்வது போல ஓரங்களில் மட்டுமே கருமையாக்க முடிந்தது.  அழைக்காமலே வந்த அம்ருத மயமான சந்திர கிரணங்கள், அவளுக்கு குளுமையாக  அவள் விரும்பி பாரணையாக பருக உதவியது.  (பகல் முழுவதும் உண்ணா விரதம் இருந்தவள், இரவில் விரத முடிவாக பாரணையை சந்திர கிரணங்களின் குளுமையிலேயே அடைந்தாள்) 

வேனிற் கால ஆதவனின் கடுமையான வெப்பமும், சுற்றிலும் ஜ்வாலையாக தானே வைத்துக் கொண்ட தீயாலும் வாட்டமடைந்திருந்தவள், முதல் மழைத்துளி மேலே பட்டதும் பெரிதும் ஆஸ்வாசமடைந்தாள். பூமி முதல் மழை தாரையால்  நனைந்து சூடான ஆவி பறப்பது போல தெரிவது போல, அவள் கண்களிலும் கண்ணீர் பெருகியது.  மழைத் துளி அவள் மேல் விழுந்து அதரங்களில் ஒரு விநாடி நின்று கீழ் நோக்கி விழும் சமயம் அவள் மார்பில் பட்டு சிதறி, வழிந்து,  இடைப் பகுதியின் வளையங்களில் வழி நாபியை அடைந்து  நிலைத்து நின்று விட்டது.   

பாறையில் உறங்கியவளை, உறுதியான மனதோடு எந்த நிலையிலும் தன் தவத்தை விடாமல் இருப்பவளை ஆச்சர்யத்துடன் தன் மின்னல் என்ற கண்களால் மேகங்கள் பார்த்தனவோ, எனும்படி மின்னல் பளிச்சிட்டது. இவ்வாறு மழைகாலத்திலும்  தொடர்ந்து தவம் செய்து கொண்டிருந்தவள், ஹேமந்த ருது வந்தவுடன், பனிப் பொழிவும் அதனுடன் தாங்க முடியாத குளிர் காற்றிலும் சற்றும் பாதிக்கப் படவில்லை.  தை மாத இரவுகள், மிகவும் சீதளமாக இருக்கும். சக்ரவாக பக்ஷிகள்  மாற்றி மாற்றி கூவிக் கொண்டிருக்கும். ஏன் இப்படி தவிக்கின்றன. அந்த பறவைகள் இணையைப் பிரிந்தால் இரவு முழுவதும் கூவிக் கொண்டே இருக்கும் என்று சொல்வர்.  அதைக் கண்டு கருணையுடன் பார்த்தாள். 

கமலங்களுடன், அவைகளைப் போலவே இருந்தாள். பூவின் இலைகள் மெள்ள அசைவது போல அவள் அதரங்களும் பனியின் வேகம் தாங்காமல் துடித்தன. இதுவரை மரங்களிலிருந்து தானே விழுந்த இலைகள் தான் அவள் ஆகாரமாக இருந்து வந்தன. இதன் பின் அதையும் விட்டு விட்டாள். पर्णम् – பர்ணம் -இலை, அதையும் துறந்தவள் என்ற பொருளில் அபர்ணா. என்று அழைக்கலாயினர்.  தாமரைப் பூவின் தண்டு போன்ற அவள் உடல் அதே போல குளுமையும்  மென்மையையும் உடையதாக இருந்தபோதிலும், ஞானிகளான ரிஷிகள் செய்வதை விட அதிக கடினமான தவ விரதங்களை பூர்த்தி செய்தாள். 

மான் தோலாடை  அணிந்து ப்ரும்ம மயமான தேஜஸுடன், கண்ணியமான தோற்றமும் கொண்ட வயதான ஒருவர், தவம் செய்து உடல் மெலிந்து இருந்த ப்ரும்மசாரி – இன்னமும்  முதல் ஆசிரமம் என்பதில் இருப்பவர் போல ( ப்ரும்ம சர்யம், க்ருஹஸ்தம், வான ப்ரஸ்தம், சன்யாசம் – பிறந்ததிலிருந்து கற்று முடிப்பது வரையானது  பால பருவம், இல்லறம், வயதாகி வனம் ஏகுதல், துறவு என்ற நிலைகளில் முதல் நிலை)  அப்பொழுதுதான் அந்த இடத்துக்கு வந்தவர் போல புதியவர், அவளுடைய ஆசிரமத்துக்கு வந்தார்.  

யாரோ அதிதி, அவருக்கு விருந்தோம்பல் என்பதைச் செய்ய வேண்டும் என்று பார்வதி எழுந்து வந்தாள்.  மரியாதையுடன் வரவேற்று முறைப் படி உபசரித்தாள்.   அதை ஏற்றுக் கொண்ட புதியவர், தன் சிரமம் நீங்கியது போன்ற பாவனையுடன், தன்னை நிலை நிறுத்திக் கொண்டு, அவளைப் பார்த்தார்.  நேர் பார்வையாக, கண்ணியத்துடன் பார்த்து, குசலம் விசாரித்தார். 

சுற்றிலும் பார்த்தவர், உன் தவம் தடையின்றி நடக்கிறதா, ஹோமம் செய்கிறாய் போலும். சமித் குசங்கள் கிடக்கின்றன.  அவை சுலபமாக கிடைக்கின்றனவா.  நீராட செய்ய வசதிகள் இருக்கின்றனவா?  அதிக தீவிரமாக இல்லாமல் உன் சக்திக்கேற்ப தவ நியமங்களை அனுசரிக்கிறாயா? ஏன் சொல்கிறேன் என்றால், शरीरमाद्यम् खलु धर्म साधनम् -சரீரமாத்யம் கலு தர்ம சாதனம்-  உடல் ஆரோக்யம் தானே முதல் தேவை- இது ஒரு ப்ரசித்தமான சொல் வழக்கு. சரீரம் தானே முதல் தர்ம சாதனம்- தர்மத்தைச் செய்ய மனமிருந்தாலும், வசதியிருந்தாலும் சரீரம் திடமாக இருந்தால் தானே செயலில் ஈடுபட முடியும் என்பது பிரசித்தமான அறிவுரை.  

இந்த செடி கொடிகளை பாத்திகள் கட்டி நன்றாக வளர்த்து வருகிறாய்.  புது தளிர்கள் செந் நிறமாக காண்கின்றன. தொடர்ந்து நீயும் தவத்தில் மூழ்கி இருந்ததால் நீரின்றி இவைகளும்  உன் அதரம் போலவே உலர்ந்து விட்டன போலும்.  மான்கள் கூட்டம் உன் கையிலிருந்து புல்லை வாங்கிக் கொள்ள வந்து நிற்கின்றனவே, உத்பலம் போன்ற கண்களையுடையவளே!  இந்த ஜீவன்கள் உன்னுடன் போட்டி போடுகின்றன போலும். பார் இவைகளின் கண்கள் எவ்வளவு கவர்ச்சியாக இருக்கின்றன. பார்வதி!  பர்வத ராஜனின் பெண். ரூபத்தை  மட்டும் வைத்து மனிதர்களின் குணத்தை எடை போட கூடாது, அது சரியாகவும் இருக்காது.  கண்களின் தயை உடையவள் அல்லது விசாலமான கண்களுடையவள்.  உன் நன்னடத்தையும், குணமும் மற்ற தபஸ்விகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது.  முனிவர்கள் கூட உன்னைப் பார்த்து தங்களை மேம்படுத்திக் கொள்கின்றனர். 

ஆஹா இந்த இமாலய மலை  சப்த ரிஷிகள் உபசாரமாக மரியாதையுடன் அளித்த  உயர்தரமான பூக்களுடன் அழகாக இருக்கிறது.  பவித்ரமான கங்கை ப்ரவகித்து இதை மேலும் பாவனமாக்கி உள்ளது. ஆனாலும் அவை உனக்கு ஈடாகாது. உன்னுடைய தவம், சீலம் இவைகளால் பெற்றோரை, அவர்களின் குலத்தையே, வரும் காலத்திலும் பிறக்கப் போகும் வம்சத்தினருடன்  பவித்ரமாக்கி விட்டாய். 

இவைகளைப் பார்த்து உன் தர்ம சிந்தனையை அறிந்து கொண்டேன். த்ரிவர்கம் என்ற அர்த்த,காமங்கள், மோக்ஷம் இவைகளை பெற மட்டுமா இந்த தவமும், சாதனைகளும்?  உன்னிடத்தில் இந்த மூன்றும் தானாகவே வந்து புகழ் பெறும்.  அப்படியிருக்க, என்ன காரணம்?  உன் எதிர்பார்ப்பு அல்லது தேவை, இந்த சிறிய விஷயங்கள் அல்ல என்று ஊகிக்கிறேன். எதைத் தேடுகிறாய்?  தர்மம் மட்டுமே என்றால் அனைவருக்கும் இதனால் நன்மையே. 

நீ விவரம் அறிந்தவள்.  என்னை வரவேற்று, எனக்கு செய்த விருந்தோம்பலில் இருந்தே புரிந்து கொண்டேன். கொடி போன்றவளே, நல்லவர்களின் நட்பு, ஏழு காலடி தூரம் உடன் நடந்தாலே அடையலாம். ஏழு வாக்கியங்கள் கூட போதுமானது. அதனால் நம்மிருவரிடையே நட்பு என்பது உறுதியாகி விட்டதாக எண்ணுகிறேன். (ஸப்த பதி என்ற பதம், ஏழு பதம்-காலடி என்றும் பதம் -பதங்கள், வார்த்தை என்றும் இரு பொருள் உடையது)

 அந்தணர்கள் விஷயங்கள் அறிந்து கொள்வதில் ஆர்வமுள்ளவர்கள். அதனால், என் மனதிலும் முழு விவரங்களையறிந்து கொள்ள ஆவல் மேலிடுகிறது. பொறுமையே உருவானவள் நீ.  தபோதனே! ரகஸ்யம் எதுவும் இல்லையெனின் என்னிடம் சொல்லலாம். நல்ல குலத்தில் பிறந்தவள். இரண்ய கர்பனுடைய வம்சத்தில் வந்த இமவானின் மகள்.   மூவுலகிலும் உள்ள சௌந்தர்ய தேவதையே போன்ற சௌந்தர்யம்.-அழகு.  ஐஸ்வர்யம் – செல்வம் பற்றி கேட்கவே வேண்டாம். உன் தந்தையிடம் இல்லாததா? விலை மதிப்பற்ற பல பொருட்கள் இவரிடம் உள்ளன. இளம் வயது. இதை விட வேறு என்ன வேண்டும்? எதற்காக இந்த கடினமான தவ வாழ்க்கை.  ஏதாவது விருப்பமில்லாமல் நடந்து மனம் வெறுத்துப் போனால் பெண்கள் இப்படி தன்னை வருத்திக் கொள்வது உண்டு. உன்னைப் பார்த்தால் அப்படியும் தெரியவில்லை.  பயம் உன்னை அண்டாது.  நீ விரும்பி கிடைக்காமல் போகவும் வழியில்லை. 

உன் புருவங்களும் எவ்வளவு அழகு? பதியினால் அல்லது மற்ற எவரோ, அவமதிக்கும் படி பேசியோ, செய்தோ உன்னை மறுத்தோ பேசினார்களா?  அதுவும் சாத்யமேயில்லை. தந்தையின் வீட்டில், அவருடைய செல்ல மகள், உன்னை யார் அவமதிக்க முடியும்?  உயிருடன் உள்ள சர்ப்பத்தின் தலையில் இருந்து மணியை பறிக்க யாராவது சாகஸம் செய்வார்களா? அந்த தைரியம் யாருக்காவது உண்டா? 

எதற்காக இந்த யௌவன வயதில் ஆபரணங்களை துறந்து வாழ்கிறாய். வல்கலம் என்ற மரவுரி வயதானவர்களுக்குத் தான் அழகு.  பிரதோஷ காலத்தில் சந்திரனும் தாரகைகளும்  அழகுற இருக்கும் இரவு, அதை விட்டு, ஸூரியனின் அருண நிறம் வேண்டும் என்று விரும்புமா என்ன?

உன் வேண்டுதல் என்ன, சுவர்கமா? தேவ லோக வாசமா? அது வீண்.  உன் தந்தையின் மாளிகையில் அது உனக்கு சுலமாக கிடைக்கும் வசதிகளை, மரியாதைகளை விட அது அதிகமல்ல. நல்ல கணவன் வேண்டும் என்று தவமா? அதுவும் தேவையேயில்லை.  இரத்னங்கள் தானே தேடிப் போவது இல்லை. அதை வேண்டி மக்கள் தான்  தேடிச் செல்வார்கள். 

நல்ல வரனைத் தேடி தவம் செய்கிறாயா என்றவுடன் பார்வதியிடம் ஒரு மாறுதல் தோன்றவுடன் அந்த புதியவர் நிறுத்தி ஒரு நிமிஷம் அவளைக் கூர்ந்து பார்த்து தானாகவே தொடர்ந்தார். ஹே கௌரி!  உன் மனம் நினைப்பதை முகமே சொல்லி விட்டது. இந்த வயதில் அது இயல்பே.  வேண்டினாலும் கிடைக்காத அத்புதமான பொருள், தானே வந்து, என்னை எடுத்துக் கொள் என்று வேண்டுமா என்ன?  உனக்கு சம மானவன் என்று நான் அறிந்த வரை யாரும் இருப்பதாகத் தெரியவில்லையே. 

அஹோ! அப்படி ஒருவன் இருந்தால் அவன் அறிவிலியே. கடின சித்தம் உள்ளவனாக இருப்பான். இது வரை உன்னை வாடச் செய்வானா? குண்டலங்களுக்கு அழகாக இருக்கும் உன் கன்னங்கள், நீல மணிகளின் சாயை பிரதி பலிக்க இருக்க வேண்டியிருக்க, தானியங்கள் உலர்ந்தபின் மீதியான  வைக்கோல் நிறமாக ஆகும்வரை விட்டிருப்பானா? 

கடினமான முனி விரதங்கள். வெய்யிலில் வாட்டப் பட்டு இளைத்து, கறுத்து, பகலில் தென்படும் சந்திர கலை போல ஆக்கியிருப்பானா?  இந்த நிலையில் உன்னைப் பார்க்கும் எவர் மனம் தான் வாடாது.  யாராயிருந்தாலும் பச்சாதாபப்படுவர். 

நீ விரும்பும் உன் மணாளன்  மிகுந்த செல்வந்தனாக அதனால் வந்த மதம் கொண்டவனாக இருப்பான் போலும். அந்த கர்வத்தினால் தகுதி வாய்ந்த உன்னை  மதிக்காமல் இருந்திருக்கலாம்.  அல்லது, உன்னைக் கண்டபின், அவன் முகம்  வாடியிருந்திருக்கும். நீ அவனை ஏற்பாய் என்ற நம்பிக்கையை இழந்திருப்பான். 

கௌரீ!  எவ்வளவு நாள் இப்படி உன்னை வாட்டிக் கொள்ளப் போகிறாய். இதைக் கேள். எனக்கும் முன் ஆசிரமத்தில் சேமித்த தவப் பலன் உண்டு. அதில் பாதியைத் தருகிறேன். நீ உன் விருப்பமான வரனை அடைவாய்.  அது சரி,அவன் யார்? அதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.  ஆவலுடன் கேட்கிறேன், சொல்.

இப்படி தானே வந்து அறிமுகப் படுத்திக் கொண்டு விவரங்கள் அறிய முயலும் புதியவரை பார்வதி சந்தேகிக்கவில்லை. மிகவும் நெருங்கிய நண்பன் போல கேட்பதை மறுக்கவும் முயலவில்லை. லஜ்ஜையினால் தயங்கி, அருகில் இருந்த சகியை அழைத்துச் சொன்னாள். மையிடாத மலர்க் கண்களின் வழியே அதைப் புரிந்து கொண்டு சகி அருகில் வந்தாள். 

 பெரியவரே! ஆவலுடன் உண்மையான அக்கறையுடன் கேட்பதால் சொல்கிறேன்.  யாரை நினைத்து என் சகி, தாமரை மலரை விட கோமளமானவள், அந்த மலரே இவளுக்கு குடையாக இருக்க விரும்பும். அவளே உடல் வருத்தி இந்த சாதனையை ஏன் செய்கிறாள், கேளுங்கள்.  இவள் மிகவும் சுய கௌரவம் உடையவள். (மானினீ) – திடமான கொள்கையுடையவள். நால் திசைகளின் அதிபர்கள் , மஹேந்திரன் மற்றும் தேவ லோக வாசிகள் இவர்களுடன் வந்தவன் இந்த காமன் என்ற மன்மதன், அசைக்கமுடியாத தவ பலம் உடைய பினாக பாணியை தன் வில்லால் மோகிக்கச் செய்ய வேண்டும் என்ற  குறிக்கோளோடு தேவர்கள் சகாயமாக பின் நிற்கிறார்கள் என்ற தைரியத்துடன் முன்னால் வந்தான். அவருடைய கண் பார்வையால் பொசுங்கினான். அவரைத் தான் தன் பதியாக வரித்து எங்கள் சகி தவம் செய்கிறாள்.

தாங்கமுடியாத அவருடைய ஹூங்காரம் அதிலேயே முன் ஒரு சமயம் த்ரிபுரங்களை அழித்தவர். மன்மதன்  எங்கள் சகியின் ஒப்பில்லா  சௌந்தர்யத்தை நம்பி அவர் மேல் புஷ்ப பாணத்தை- மலர்களால் ஆன அம்பு- தொடுத்தான் போலும்.  அவரிடம் பலிக்கவில்லை, என் சகியை இதயத்தில் தாக்கி அந்த பாணம் தன் வேலையை செய்கிறது.  அதிலிருந்து இவள் தன் தந்தையின் வீட்டில் பொருந்தாமல் அந்த பினாக பாணியை எப்படி அடைவது என்று சிந்தித்து, எந்த வித சுக போகங்களிலும் மனம் ஈடுபடாமலும், தன் சௌந்தர்யமோ, தந்தையின் ஐஸ்வர்யமோ அவரிடம் எடுபடாது என்பதால் தவம் செய்ய வந்து விட்டாள். பனி பொழியும் இரவுகளில் கூட பாறைகளின் குளிர்ச்சி அவளுக்கு உரைப்பதில்லை. 

கின்னர, கிம்புருஷ பெண்கள் வந்து  சங்கரனின்  துதிகளைப் பாடுவர். அவர்களுடன் சேர்ந்து பாட முயலுவாள். தொண்டை அடைக்கும். கண்களில் நீர் பெருகும். அந்தப் பெண்கள் பாவம், செய்வதறியாது திகைப்பர். பின் குறிப்பு-2

இரவின் பின் பகுதியில் தான் தூக்கம் வரும்.  ஒரு சமயம் க்ஷண நேரம் மூடிய கண்களுடன் தூங்குபவள் திடுமென விழித்து எழுந்து ஹே நீலகண்ட, எங்கு போகிறாய் என்று கேட்டாள்.  அல்லது நீலகண்டனுடன் இருப்பது போல கனவுகள் கண்டு ஏதோ பேசுவாள்.  ஹே நீலகண்ட,  அறிவிற் சிறந்தவன் நீ. ஞானிகளும் வணங்கும் பேறு பெற்றவன். என் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாதா என்ன? இப்படி இவளை என்ன என்று சொல்வது.  ஸ்ரீ சங்கரனுக்கு ஒரு கடிதம் எழுதி தன்னிடமே வைத்திருக்கிறாள். 

இவ்வாறு தவித்தவள், வீட்டில் பெரியவர்களிடம் அனுமதி பெற்று முடிவாக தவம் செய்வது என்று இங்கு வந்து விட்டாள். சகிகள் நாங்களும் உடன் வந்தோம். இங்கு வந்த சமயம் இலைகள் மட்டுமாக இருந்த மரங்கள் இப்பொழுது பழங்கள் நிறைந்து காணப் படுகின்றன.  இவள் மனோரதம் நிறைவேறும் அறிகுறியே தென் படவில்லை.  சசி மௌளி- சந்திர சேகரன் –எனும் மகேஸ்வரனை விரும்பி இவள் தன்னை வருத்திக் கொண்டு இருக்கிறாள் என்பதை அவரும்  அறிந்து கொண்டதாகவே தெரியவில்லை.

பலவிதமாக ப்ரார்த்தனைகள் செய்தாலும் சுலபமாக அவரை அடைய முடியாது என்பர்.  எங்கள் சகி இந்த அளவு தவம் செய்து உடல் இளைத்து உழுது வைத்த விளை நிலம் போல இருக்கிறாள். அந்த நிலம் இந்திரனை மழைக்காக எதிர் நோக்கி தவம் இருப்பது போல சந்திர சேகரனை எதிர்பார்த்து காத்திருக்கிறாள். 

நைஷ்டிக ப்ரும்மசாரி – வாழ்நாள் முழுவதும் பிரும்ம மார்கத்தில் செல்பவன் என்று பெயர் பெற்ற சுந்தரன் -அழகிய தோற்றம் கொண்ட அந்த விருந்தாளியாக வந்த அந்தணன், எந்த உணர்ச்சியையும் வெளிக் காட்டாமல் இருந்த உமாவைப் பார்த்து, சகியின் வார்த்தைகளை தடுக்காததால், அவள் சொன்னது உண்மையே என்று சூசகமாக தெரிந்து கொண்ட பின், நேராக உமாவைப் பார்த்து, ‘அயி, உமே!  உமையே இது என்ன உண்மையா இல்லை விளையாட்டாக அல்லது பரிகாசமாக சொல்வதா?  

கிரி ராஜனின் மகள், தன் கையில் ஸ்படிகத்தால் ஆன அக்ஷமாலையை மூடி வைத்துக் கொண்டு, ஜபம்  செய்வதை நிறுத்தி, தன்னை ஒரு முகப் படுத்திக் கொண்டு, அளவான சொற்களால் பதில் சொன்னாள்.  தாங்களோ வேத வித்து. நீங்கள் அறியாதது அல்ல. கேள்வியும், சாதனையும் உங்களுக்கு தெரிவித்திருக்கும் உண்மைதான்.   இந்த எளிய பெண் அடையக் கூடிய பதமா என்று வியக்கிறீர்கள் போலும். அந்த உயர்ந்த பதம் தான் நான் வேண்டுவது. மனம் வைத்தால் அடைய முடியாத து எதுவும் இல்லை. மனதில் உறுதி வேண்டும் அவ்வளவே. 

ப்ரும்மசாரி சொன்னார்: நான் அறிந்தவரை மகேஸ்வரன் வயதில் மூத்தவர். அவர் முன் ஒரு சமயம் உன்னை அலட்சியப் படுத்தியதாக கேள்வி.  இருந்தும் அவரை விரும்புவதாகச் சொல்கிறாய். எனக்கு சந்தேகம் – அமங்களமான தோற்றம்.  காமனை எரித்தவர் என்பதால் கோபம் அதிகம் உடையவர் என்று தெரிகிறது.  மேலும் அவர் சம்பந்தப் பட்ட சில விஷயங்கள் அமங்களமே.  மிகவும் துச்சமாக நினைக்கும் விஷயங்கள் அவரிடம் உள்ளன. எப்படி நீ அவரை சகிப்பாய்?  விவாகம் என்று வந்தால் கைகளில் மங்களமான ரக்ஷை கயிறு கட்டுவார்கள். அவர் கையில் சுற்றிக் கொண்டிருப்பது சர்ப்பங்களை. எப்படி கை பிடிப்பாய்?  நீயே யோசித்துப் பார். இந்த சம்பந்தம் நல்லது தானா? 

கல ஹம்ஸம் போன்ற வெண் பட்டு ஆடை உடுத்தி மணமகன் வருவான். இவரோ அமங்களமாக உதிரம் சொட்டும் யானைத் தோலைக் கட்டிக் கொண்டு வருவார்.  யோசித்துப் பார்.

ராஜ குமாரி நீ. மாளிகையில் பூக்களை இறைத்து வைத்திருப்பர், நீ நடக்கும் பொழுது ம்ருதுவான உன் கால்கள் நோகக் கூடாது என்று. இவருடன் மயான பூமியில் எப்படி நடமாடுவாய்.  விரோதி கூட அங்கு போக மாட்டான். பிரேத பூதங்கள் இருக்கும் இடம். கபாலங்கள் கிடக்கும்.

முக்கண்ணன், உன் அழகிய கண்களுக்கு எதிரில் எப்படி இருக்கும் தெரியுமா?   பஸ்மத்தை தான் வாசனைப் பொடியாக, பூச்சுகளாக பயன் படுத்த வேண்டியிருக்கும். இந்த திருமணம் நடந்தால்,  பார்ப்பவர்கள் சிரிப்பார்கள். இந்த கிழவனுக்கா மாலையிட்டாள் என்பர்.

சந்திரனின் கலை அவர் தலையில் அமர்ந்து தன் ஒளியை இழந்தது. அது போல நீ இரண்டாவதாக ஆவாய். உன் பெருமை என்ன ஆகும்?  கண்ணுக்கு விருந்து உன்னைக் காண்பதே என்றவர்கள்,  காந்திமதி என அழைத்தவர்கள் வருந்துவார்கள். 

கன்யா வரயதே என்று ஒரு ஸ்லோகம். கன்னிப் பெண் மணாளனாக வருபவன் அழகனாக இருக்க வேண்டும் என்பாள். தாய் செல்வம், சம்பத்து என்ன என்று பார்ப்பாள். தந்தை கல்வியை, பந்துக்கள் நல்ல குலத்தை, மற்றவர்கள் நல்ல விருந்தை எதிர்பார்ப்பார்கள். அதை நினைவுறுத்துவது போல சொல்கிறார்.  அழகனா என்றால், முக்கண்ணன் – பிறப்பு பற்றித் தெரியாது. உடையே சரி இல்லை  திகம்பரன்- செல்வம் இல்லை என்பதை காட்டுகிறது.  பெண் மான் குட்டி போன்ற மருட்சியுடன் உன் கண்கள், இப்படி உயர்வாக சொன்ன ஒரு விஷயமும் நீ சொல்லும் வரனில் இல்லையே. 

இந்த தவறான ஆசையை விடு. புண்ய லக்ஷணங்கள் உடைய நீ எங்கே, காணவே  அருவருப்பான மயானத்தில் ஸூலத்துடன் நிற்கும் பினாகி எங்கே? உன் கொள்கையை கை விடு.  யாராவது அந்த ஸூலத்தை சுபமான  யாக சாலையில் கொண்டு வருவார்களா?

இப்படி அவர் சொல்லிக் கொண்டே போகவும் பார்வதி தன் புருவங்களின் நெரிப்பால் கோபத்தை காட்டியவளாக முகத்தை திருப்பிக் கொண்டாள்.  சமாளித்துக் கொண்டு பதில் சொன்னாள்.

பெரியவரே, பரமார்த்தமாக பினாகியை நீங்கள் அறிந்து கொள்ளவில்லை. அதனால் தான் இப்படி சொல்கிறீர்கள். லோகத்தில் சாமன்யமான பேச்சு இது. ஸ்ரீ ஹரன் இதற்கு அப்பாற்பட்டவர்.  நினைத்து பார்க்க முடியாத பராக்ரமம் உடையவர்.  மஹாத்மா. மந்த புத்தி உள்ளவர்கள்   தான் வெறுப்பு கொள்வர். 

ஜகத் சரண்யன்- உலகமே அவரை சரணடைகிறது. அவருக்கு செல்வம் இல்லை என்றீர்கள்.  இவருக்கு தேவை என்பதே இல்லை. தான் வரங்களை கொடுப்பவர், இவரே மங்கள ஸ்வரூபி, வெளி வேஷங்கள் எதற்கு? 

மூவுலக நாதன், தரித்ரன் அல்ல. செல்வத்தையே தன் பொறுப்பில் வைத்திருப்பவர்.   ஆதி புருஷன், கோத்ரமே இவரிடமிருந்து ஆரம்பிக்கிறது. சிவம்- மங்களம் என்பதே இவரது மற்றொரு பெயர். இவரிடம் உள்ளது எது தோஷம்,  எப்படி இருந்தாலும் இவர் தூய்மையானவரே. வெளி வேஷம் எதற்கு? ஆபரணங்களோ, போக- பாம்புகளை அணிந்தவரோ, வெண் பட்டோ, யானைத் தோலோ, கபாலியோ, இந்து சேகரனோ, இவர் விஸ்வாத்மா, விஸ்வமூர்த்தி, இவரை அண்டியவை பெருமை பெறும்.  

நடனம் ஆடும் பொழுது விழுந்த விபூதியை இந்திராதி தேவர்கள்  நெற்றியில்  அணிகிறார்கள். காலில் விழுந்து வணங்கும் பொழுது, அவர்களின் வாசனைப் பூச்சுக்களோ, மலர்களோ அல்ல விபூதி தான் அவர்களை அவர்கள் மகுடங்களில் விழுந்து ஆசீர்வதிக்கிறது.  ருஷப வாகனம் என்ன மட்டமா? திக்கஜங்கள் அதற்கு முன் ஒன்றுமே இல்லை. விருஷப வாகனத்தில் பவனி வரும் பொழுது,  திக் கஜங்கள் வந்து சேவிக்கின்றன.  இந்த அளவு அவருடைய குறைகளை சொன்னவர் ஒரு விஷயத்தில் உண்மையைச் சொல்லி விட்டீர்கள். அவர் எளிதில் அடைய முடியாதவர். ப்ரும்மாவும் கூட வணங்கி தன் குறைகளைச் சொல்லி நிவர்த்திக்க வேண்டுகிறாரோ, அவரை அடைவது எளிதா என்ன?  இது ஒன்று போதும் அவர் பெருமையைச் சொல்ல.

அது சரி, எதற்கு விவாதம். நீங்கள் சொல்வதைக் கேட்டும் என் மனம் மாறவில்லை. மனப் பூர்வமாக நம்பி ஏற்றுக் கொண்ட பின் மனதை மாற்றிக் கொள்வது அரிது.  மனம் தான் விருப்பு வெறுப்புகளுக்கு காரணம். அதை வெளியிலிருந்து மாற்றுவது முடியாது.  न कामवृत्तिर् वचनीयमीक्षते –  ந காம வ்ருத்திர் வசனீயமீக்ஷதே, – மனது ஒருவரிடம் ஈடுபட்ட பின் பிறர் அதை மற்றவர் விமரிசித்துச் சொல்ல வேண்டும் என்று எதிர் பார்ப்பதில்லை. 

இதோ போகிறேன். அல்லது என்றவள் திடுக்கிட்டுத் திரும்பினாள். வல்கலையை யாரோ பிடித்து இழுப்பது போல இருந்தது.  தன் சுய ரூபத்தில் மென் முருவலோடு சாக்ஷாத் விருஷ கேதனன் – ருஷப வாகனன் –               ஸ்ரீ சங்கரன் நின்றிருந்தார். 

அவரைக் கண்டதும் வேர்வை பெருக, பதற்றத்துடன் வணங்குவதற்காக காலெடுத்தவள்,  எடுத்த காலை விடவும் முடியாமல்,  வேகமாக சென்று கொண்டிருந்த நதி திடுமென ஏற்பட்ட தடையால் திகைப்பது போல, சைல ராஜ குமாரி நிற்கவும் இல்லை. நகரவும் இல்லை  ( இது காளிதாசனின் விசேஷமான பதங்களில் ஒன்று    न ययौ न तस्थौ ந  யயௌ ந தஸ்தௌ) 

இன்றிலிருந்து  கொடி இடையாளே! உன் தாஸன் நான்.  உன் திடமான கொள்கையாலும், பொறுமையாலும் என்னை வென்று விட்டாய்.  இவ்வாறு கூறிய சந்திர மௌளியை கண்டவுடன் இதுவரை இருந்த நியமங்கள், சாதனைகள் என்ற கஷ்டங்கள் நொடியில் மறைந்து விட்டன.  பலனடைந்த பின் அதைப் பெற பட்ட சிரமங்கள் சிரமங்களே அல்ல. 

(இது  வரை ஸ்ரீ காளி தாஸனின் குமார சம்பவம் என்ற மகா காவ்யத்தில் तप: फलोदयो -தப:பலோதயோ என்ற ஐந்தாவது அத்யாயம்) 

குமார சம்பவம் - மஹா காவ்யம்

குமார சம்பவம் மஹா காவ்யம் – 4 குமார சம்பவம் மஹா காவ்யம் – 6

Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.