பாவம், மரணம், நரகம்

This entry is part 9 of 14 in the series குடாகாயம்

நரகம்  மரணத்தைத் தொடரும் வேறொரு புலம். பாவம் செய்தவர்கள் நரகத்தில் அவற்றுக்குரிய தண்டனைகளைப் பெறுவார்கள். உலகின் பெரும்பாலான சமயங்கள் நரகம் என்ற கோட்பாட்டை முன்வைக்கின்றன.   மனிதனை நெறிப்படுத்த உருவான மதங்களில் கடவுள் என்ற கருத்தாக்கத்தை ஒட்டி,  நரகமும் சேர்த்தே உருவாக்கப்பட்டிருக்கிறது.  பெரும்பாலான மதங்களில் நரகத்தில் கடவுளே பாவிகளுக்கான தண்டனைகளை விதிக்கிறார் (சில மதங்களில் எமனைப்போல, இறைவனின் தூதர்கள் இந்தப் பணியை மேற்கொள்கிறார்கள்).  அதிசயிக்கத்தக்க வகையில் நரகம் அனைத்து மதங்களாலும் இப்படி வர்ணிக்கப்படுகிறது: அது இருண்டது, கொடுமையானது, தாளவியலாத வெம்மையைக் கொண்டது (சில மதங்கள் கடுங்குளிரையும் சேர்க்கின்றன), அங்கே பாவிகள் குரூரமான தண்டனைகளை அனுபவிப்பார்கள் (இந்தக் குரூரத்தை வரையறுப்பதிலும், வர்ணிப்பதிலுமே மதங்கள் தங்களுக்கான தனித்துவத்தை வெளிப்படுத்துகின்றன.)

கிறிஸ்துவம் மானுடத்தை உருவாக்கும்பொழுதே, அவரகள் செய்ய வேண்டிய பாவத்தையும் சேர்த்தே வடிவமைத்தது.  சொல்லப்போனால், அது நல்லவர்களாக தங்களை நிறுவிக்கொள்ளாத வரையில் அனைத்து மனிதர்களுமே பாவிகள்தாம் என்று வரையறுக்கிறது. ஆரம்பகால கிறிஸ்துவ இறையியல் அறிஞர்களில் ஒருவரான புனித அகுஸ்தின், ஆதிமனிதனான ஆதாம் பாவம் இழைத்தான், எனவே இயற்கையிலேயே மனிதர்கள் பாவிகள், கிறிஸ்துவத்தின் வழிகாட்டல்களைப் புறக்கணித்தால் அவர்களுக்கு  நரகம் நிச்சயம், என்று சொன்னார்.   புதிய ஏற்பாட்டில் நரகம் கடவுளிடமிருந்து விலகிச் செல்லுமிடமாக வரையறுக்கப்படுகிறது. 

“…பின்பு இடப்புறம் உள்ளோரைப் பார்த்து, சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போவீராக. பிசாசுக்காவும் அவன் தூதர்களுக்குமாகவும் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கும் நிரந்தத் தீயைச் சேருவீராக, என்றார்”
மத்தேயு, 25:41.

பிற்காலத்தில், இத்தாலியக் கவிஞர் தாந்தே (Dante) விண்ணோர் பாட்டு (The Divine Comedy) நூலில்  பாவங்களைத் தரப்படுத்தியும் அவற்றுக்கேற்ற தண்டனைகளை அறுதியிட்டும் கொடுத்தவையே கிறிஸ்துவத்தில் நரகத்தின் வரையறைகளாக இப்பொழுதும் அறியப்படுகின்றன.   

யூத மதத்தில் நரகம் நிரந்தர இறுதி நிலையாகச் சொல்லப்படவில்லை.  சில யூத போதனைகள் நரகம் மரணத்துக்குப் பிறகானது என்றுகூடச் சொல்வதில்லை.  மாறாக, அது பாவங்களுக்காக இந்த உலகிலேயே வருந்தும் நிலை, அந்த வருத்தமும் பாவம் குறித்த அவமானமும், அவரகளுக்கு விடுதலையைத் தருகின்றன.  வேறு சிலர் கெஹென்னா (Gehenna), ஷெயோல் (Sheol) என்று சொல்லப்படும் யூதர்களின் நரகங்கள் பாவிகளுக்குத் தண்டனையளிப்பதுடன் அவர்களைத் தூய்மைப்படுத்தி அவர்களை மறுமைக்குத் தயாராக்குகிறன என்று போதிக்கிறார்கள்.   மாறாக, இஸ்லாம் கடவுளை மறுத்தல், இன்னபிற பாவங்களைச் செய்தவர்களுக்கான நரகம் விடுதலையற்றது என்று கூறுகிறது.  ஜஹன்னம்  என்ற முதலடுக்கில் துவங்கி ஹாவியா என்ற ஏழாம் அடுக்குவரை உள்ளடக்கியது இஸ்லாமியர்களின் நரகம்.  

“அந்நரகத்திற்கு ஏழு வாசல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வாசலிலும் (செல்லக்கூடிய வகையில்) அவர்கள் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுவிடுவார்கள்”
குர்ஆன் : 15:44.

இந்தியாவின் பெருமதங்களான இந்து, பௌத்தம், சமணம், மூன்றுமே நரகம் என்ற கேட்பாட்டைக் கொண்டிருக்கின்றன. (இவை ஒரேமாதிரியான பெயர்களையும், வரையறைகளையும் கூடக் கொண்டிருக்கின்றன).   இந்த மூன்று மதங்களிலும் ‘நரகம்’ என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது.   இந்து மதத்தின் பாகவத புராணத்தில், ரௌரவம், விஸாஸனா, மஹாஜ்வாலா, காளசூத்ரா, தமஸ், உள்ளிட்ட பல்வேறு விதமான நரகங்கள் விவரிக்கப்படுகின்றன.  

“…இந்த, மற்றும் இதைப்போன்ற, பயம் தரும் நரகங்கள் எமனின் ஆளுகையில் இருக்கும் கொடிய பிராந்தியங்கள்.  இங்கே சித்திரவதைக் கருவிகள், கொடுந்தீ, போன்றவை விரவிக்கிடக்கின்றன.  மண்ணுலகில் பாவம் தரும் செயல்களுக்குப் பழக்கப்பட்டவர்கள் இந்த நரகங்களில் தள்ளப்படுவார்கள் 

விஷ்ணு புராணம், 2-ம் பாகம், 6-ம் சருக்கம்”.  

பாகவத புராணத்தைச் சேர்ந்த கருடபுராணம் என்ற நூலில் இறந்தபின் பாவிகள் சேரும் பாதைகள், நரகங்கள், எமன், எமதண்டனை போன்றவை விரிவாகச் சொல்லப்படுகின்றன. 

“மாபாவிகளே, எமனின் பயங்கர வடிவத்தை அறிந்துகொள்ளுங்கள்;  பெரும் உடலைக் கொண்ட அவன் கையில் கதையுடன் எருமையின் மீது அமர்ந்திருப்பான். பிரளயத்தின் பேரோசையைப் போல கர்ஜ்ஜிப்பான்.  அவன் மூன்று யோசனை விரிவுள்ள கரியாலான  மலையைப் போன்றவன்,  முப்பத்திரண்டு கரங்களைக் கொண்டவன்…

கருடபுராணம், இரண்டாம் சருக்கம், 19-21″  

தொடர்ந்து கருடபுராணம் பாவிகள் முள்கட்டைகள், சூலம் போன்றவைகளால் துன்புறுத்தப்படுவது, எரியும் எண்ணெய்க் கொப்பரையில் இடப்படுவது, விசித்திர மிருகங்கள், கிருமிகள் போன்றவற்றால் தின்னப்படுவது என விலாவரியாக பாவங்களையும் அதற்கான தண்டனைகளையும் பட்டியலிடுகிறது. இதுபோன்ற தண்டனை அட்டவணைகள் சமண மதத்திலும் உண்டு.   பாவத்துக்கு உண்டான தண்டனையை அனுபவித்தபின் மனிதர்கள் தங்கள் மறுபிறப்பை அடைவதாக இந்துமதம் வகுக்கிறது. 

புத்தமத்தின் பல பிரிவுகளுக்குள்ளே நரகத்தைப் பற்றிய கருத்தில் குழப்பங்கள் நிரம்பிக் கிடக்கின்றன. தேராவத பவுத்தத்தின் பாலி நியதியில்

தளம் இரும்பாலானது,
அங்கே கடுந்தீ எரியும்
அதன் வெம்மை பரவும்
ஒரு நூறு காத தூரம் படரும்
தேவதூத சுத்தம், 3.36 , பாலி நியதிகள்

என்று நரகம் விவரிக்கப்படுகிறது.  புத்தமதத்தில் பொதுவில் நரகம் சுத்திகரிப்புக்கான ஒரு இடைநிலையாகத்தான் விளக்கப்படுகிறது. ஆனாலும் இந்த இடைப்போக்கில் இந்து மதத்தை ஒத்த எமதண்டனைகள் இங்கும் உண்டு.  மஹாயான புத்தத்தில் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட எட்டுவிதமான தீயாலான நரகங்கள் விவரிக்கப்படுகின்றன.  மஹாயானத்தின் மஹாபரிநிர்வாண சூத்திரம் மேலும் எட்டு குளிர் நரகங்களையும் சொல்லுகிறது.  இதைப் போலவே சமண மதமும் ஏழுவிதமான நகரங்களையும் அவற்றின் தண்டனைகளையும் வரையறுத்திருக்கிறது. இன்னும் பல மத்தியக் கிழக்கு, அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளின் மதங்கள், பூர்வகுடிகளின் கதையாடல்கள் நரகங்களைப் பற்றி பேசுகின்றன. 

படம் – 1: இடப்புறத்தில் வட தாய்லாந்தின் புத்தக் கோவிலில் இருக்கும் நரகம் குறித்த ஓவியம். பின்னணியில் பனி போர்த்த மலை அதன் கொடுங்குளிரைக் காட்டுகிறது. நிர்வாணமான பாவி கீழே ஆயுதத்தால் தாக்குபவர்களிடமிருந்து தப்பிக்க மரமேறுகிறான், அவனை மேலிருந்து பறவைகள் கொத்துகின்றன.  வலப்புறம் சமண மதத்தில் பாவிகள் நரகத்தில் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாவதைக் காட்டும் சீலை ஓவியம், இது 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. 

மதங்கள் கடவுள்களையும் நரகங்களையும் ஒருசேர படைத்தது போலவே, அனைத்து மத ஆலயங்களிலும் கடவுள்களின் சிலைகளுடன் கூடவே கடவுளை மறுத்தால் கிடைக்கப்போகும் தண்டனை குறித்த ஓவியங்களும் சேர்த்தே சமைக்கப்பட்டன.  இவை பெரும்பாலும் அச்சமூட்டுவனவாகவும் சில சமயங்களில் அருவருப்பூட்டுவதாகவும் அமைந்திருக்கின்றன.   இவற்றுக்குள்ளே நெதர்லாந்து நாட்டின் ஹைரோனிமஸ் பாஷ் (Hieronymus Bosch)

பதினைந்தாம் நூற்றாண்டில் வரைந்த பல ஓவியங்கள் ஐநூறு ஆண்டுகளுக்குப் பின்னர் இன்றும் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.   குறிப்பாக இவர் உருவாக்கிய பூவுலக இச்சைத் தோட்டம் (The Garden of Earthly Delights, 1490-1510), இறுதித் தீர்ப்பு (1482-1505), தூய அந்தோணியாரின் சபலங்கள் (1500-16) போன்ற ஓவியங்கள் மிகப் புகழ்பெற்றவை.   இந்த ஓவியங்கள் அவை வரையப்பட்ட காலத்தை மீறிய அதீத கற்பனைகளைக் கொண்டதாக வரலாற்று ஆய்வாளர்களாலும் விமர்சகர்களாலும் புகழப்படுகின்றன. 

படம் – 2 நெதர்லாந்து ஓவியர் ஹைரோனிமஸ் பாஷ் உருவாக்கிய “பூலோக இச்சைச் சுவர்க்கம்” முப்பலகை ஓவியம் (205.5 × 384.9 செ.மீ, பொ.யு 1490-1510).  ஓக் பலகைகளில் நெய்ப்பூச்சினால் வரையப்பட்ட இந்த முப்பலகை இப்பொழுது மாட்ரிட் நகரின் ப்ராடோ தேசிய அருங்காட்சியகத்தில் இருக்கிறது. 

இங்கே நாம் பார்ப்பது ‘பூவுலக இச்சைத் தோட்டம்’ ((Dutch: De tuin der lusten) என்ற முப்பலகை ஓவியம். இது கிட்டத்தட்ட 1490-1510 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் ஹைரோனிமஸ் பாஷ் வரைந்தது.  தற்பொழுது மாட்றிட் நகரில் ஸ்பெயினின் நாட்டின் ப்ராடோ தேசிய அருங்காட்சியகத்தில் (Museo Nacional del Prado, Madrid) இருக்கிறது.  ஓக் மரப்பலகைகளில் நெய்ப்பூச்சினால் வரையப்பட்ட,  இப்படைப்பு  205.5 × 384.9 செ.மீ அளவுக்கு விரியும் பிரமாணடமானது.  ஆங்கிலத்தில் ‘ட்ரிப்டிக்’ என்று சொல்லப்படும் முப்பலகை (triptych) ஓவியங்கள் பொதுயுகம் 1300 தொடங்கி கிறிஸ்தவத் தேவாலயங்களையும் சில கலைக்கூடங்களையும் அலங்கரிக்கத் தொடங்கின.  இவற்றுள் மிகப் பழையது ரோம் நகரின் பழைய புனித பேதுரு பேராலயத்தில் (Old St. Peter’s Basilica) இருந்த ‘ஸ்டெஃபானஸ்சி தேவபீட முப்பலகை’ (Stefaneschi Altarpiece), இது இத்தாலியப் பெருங்கலைஞர் கியோத்தோவினால் ( Giotto) 1320-ல் உருவாக்கப்பட்டது.  இதன் பிரபலத்தைத் தொடர்ந்து பல தேவாலயங்களும் முன்னனி ஒவியர்களைக் கொண்டு தமக்கான முப்பலகைகளை உருவாக்கிக் கொண்டனர்.  முப்பலகைகளை மூடினால் கிடைக்கும் இரண்டு கதவுகளின் வெளிப்புறங்களிலும் ஓவியங்கள் வரையப்படும். எனவே, மூடினால் இரண்டு பகுதிகளைக் கொண்டதாகவும், திறந்தால் இரண்டு வெளிப்புறப் பலகைகள், நடுவே மையப்பலகை என மூன்று பாகங்களைக் கொண்ட ஓவியங்கள் இருக்கும்.  இந்த அமைப்பு புராணக் கதைகளின் வேவ்வேறு பகுதிகளைத் தனிப்படுத்தி ஓவியங்களாகக் காட்டப் பேருதவியாக இருக்கும். 

படம் – 3: பூவுலக இச்சைகளின் தோட்டம், முப்பலகை ஓவிய மூடப்பட்ட நிலையில்.  இது கர்த்தரால் பூமி படைக்கப்படும் நிகழ்கனத்தைக் காட்டுகிறது. 

முப்பலகைகள் பெரும்பாலும் மூடிவைக்கப்பட்டிருக்கும், சில பண்டிகை நாட்களில் இவை பார்வைக்குத் திறக்கப்படும். இங்கே நாம் பார்க்கும் பூவுலக இச்சைத் தோட்டம் ஓவியம். இதன் வெளிப்புறம் கடவுளால் பூலோகம் உருவாக்கப்பட்டதைக் காட்டுகிறது. சோகை பச்சை வண்ணத்தில் (Grisaille green) வரையப்பட்ட பூமி இன்னும் முழுமையாக உருவாக்கி முடிக்கப்படாமல் இருப்பதைச் சுட்டுகிறது.   அந்தக் கால நெதர்லாந்து ஓவியர்கள் முழுமையடையாத நிலையைக் கருத்தில் காட்ட வண்ணங்களை வெளிரச் செய்து  சோகை நிறங்களாக்கி வரைந்தார்கள்.  (இந்த வெளிர் நிறக் கதவுகளைத் திறந்தால் காணக்கிடைக்கும் பளீரிடும் வண்ணங்கள் உள்பகுதியை இன்னும் பிரம்மாண்டமாக்கிக் காட்டும்).  ஓவியத்தின் இடது மேல் மூலையில் கர்த்தாவாகிய கடவுள் இருக்கிறார். இவர்தான் படத்தில் விரியும் பூமியைப் படைத்துக்கொண்டிருக்கிறார்.  

“பூமி ஒழுங்கற்ற வெறுமையாய் இருந்தது. அதன் ஆழத்தை இருள் சூழ்ந்திருந்தது. தேவனுடைய ஆவி நீர்ப்பரப்பின் மேல் வியாபித்திருந்தது”
ஆதியாகமம் 1.2, புனித வேதாகமம்.

இது படைப்பின் மூன்றாம் நாள் காட்சிநிலை. கிறிஸ்தவத்தில் கடவுள் முதலில் பூமியைப் படைத்தார். பின்னரே பூமிக்கு ஒளி தர சூரியனையும் சந்திரனையும் படைத்தார்.  இந்த ஓவியம் இன்னும் சூரியன் உருவாக்கப்படாத நிலை. விண்ணிலிருந்து தெறிக்கும் ஒளிக்கீற்று இறைவனின் பேரொளி.   ஓவியத்தில் நீர், மலைகள், தாவரங்கள் இருக்கின்றன, ஆனால் விலங்குகள் இல்லை; கடவுள் இன்னும் அவற்றைப் படைக்கவில்லை.  எனவே இது உருவாக்கத்தின் ஒரு  நிகழ்கனத்தைச் சுட்டுகிறது. ஒவியத்தின் மேற்புறம், “Ipse dīxit, et facta sunt: ipse mandāvit, et creāta sunt” என்று இலத்தீன் மொழியில் எழுதப்பட்டிருக்கிறது; 

“அவர் அப்படிச் சொல்ல, அவ்வாறே ஆனது; அவர் கட்டளையிட அது நிலைத்து நின்றது”
தேவசங்கீதம் 33:9, புனித வேதாகமம்.

படம் – 4 இடப்புற பலகையில் கர்த்தரால் ஏவாளும் ஆதமும் படைக்கப்படும் காட்சி.  கிறிஸ்து இளவயதினராகக் காட்டப்பட்டிருக்கிறார். அவர் மார்பிலிருந்து விரியும் ஆடை, ஆதாமின் கால்களைத் தொட்டுக்கொண்டிருக்க, அவர் ஏவாளின் கரம்பிடித்திருக்கிறார்.  பூலோக சுவர்க்கமான ஏடன் தோட்டத்தில்கூட எலியும் தவளையும் உணவுகளாகக் கவ்வப்பட்டிருக்கின்றன.

பலகைக் கதவுகளைத் திறந்தால் நம் கண்முன் விரியும் குழப்பமான காட்சிகளுக்கு வெளிப்புற வெளிர் ஓவியம் நம்மைத் தயார்படுத்தவில்லை.  உள்ளிருக்கும் ஓவியம் மிகச் சிக்கலானது.  கட்டாயம் இந்த ஓவியஙகள் சொல்லும் காலங்கள் வெளிப்புறத்திற்குப் பிந்தையன; இங்கே மனிதர்களும் விலங்குகளும் நிறைந்திருக்கிறார்கள்.  ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் பொழுது,  இடப்பகுதி ஒருவித தெய்வீகத் தன்மை கொண்டதாகவும், கருமை நிறத்தில் வலப்புறம் ஒருவித நரகம் போலவும், நடுப்பட்ட பெரும்பகுதி சுவர்க்கம்-நரகம் போன்றவற்றின் கலவையாகவும் தோன்றுகின்றன.  அவற்றைப் புரிந்துகொள்ள நாம் பகுதிகளைத் தனித்தனியே பார்த்தாக வேண்டும்.  முதலில் இடப்புறம்,  இது ஈடன் தோட்டத்தின் வடிவம்.  நம் கவனத்தை முதலில் ஈர்ப்பது கீழ்ப்பகுதி, இங்கே கர்த்தர் ஏவாளையும் ஆதமையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார், எனவே அவர்கள் முழு நிர்வாண நிலையில் இருக்கிறார்கள்.  கர்த்தர் ஏவாளின் கரம் பிடித்து ஆதாமிடம் அளிக்கப்போகிறார், அவனுடைய கால்கள் கர்த்தரின் ஆடையைத் தொட்டுக்கொண்டிருக்கின்றன. எனவே, இன்னும் ஏவாளும் ஆதாமும், கர்த்தரை விட்டு அகலாது, அவரின் ஒரு பகுதியாகவே இருக்கிறார்கள்.  கர்த்தர் வலக்கரம் உயர்த்தி அவர்களுக்கு ஆசியளித்துக் கொண்டிருக்கிறார்.  ஏவாளின் பார்வை பூமியில் நிலைத்திருக்க, ஆதாம் அவளுடைய வெற்றுடலை முதல்முறையாகக் கண்கொண்டு பார்க்கிறான்.   ஓவியத்தில் நீர்நிலைகள், தாவரங்கள், விலங்குகள் நிறைந்திருக்கின்றன.   பச்சைப் புல்வெளிகள், மரங்கள் போன்றவையே பெரிதும் பலகையை நிறைக்கின்றன. தனித்துத் தெரியும் ஒற்றை மரம் நிரந்தரம், நீண்ட ஆயுள் போன்றவற்றின் குறியீடு.   சகல விலங்கினங்களும் இருக்கின்றன, நீர்நிலைகளில் மீன்கள், வாத்துகள், நாரைகள், அவற்றிலிருந்து ஊர்வன கரையேறிக்கொண்டிருக்கின்றன.  பலகையின் கீழ்ப்பகுதி பூனை, தேள், காகம், முயல் போன்ற சிறிய விலங்குகளாலும், மேற்ப்பகுதி மாடுகள், யானை, ஒட்டகச்சிவிங்கி போன்ற பெரும் விலங்குகளாலும் இருக்கின்றன.  அந்தக் காலத்தில் இந்த ஓவியங்களைப் பார்த்த ஐரோப்பியர்களுக்கு யானையும், ஒட்டகச்சிவிங்கியும் கற்பனை விலங்குகளாக இருந்திருக்கக்கூடும்.  படத்திலிருக்கும் பல விலங்குகள் – இரட்டைக்கால் நாய், ஒற்றைக்கொம்புக் குதிரை, புத்தகத்தை வாசிக்கும் வாத்து போன்றவை  முழுக் கற்பனை. 

ஈடன் தோட்டத்தில் எல்லாம் நல்லபடியாகவே இருந்தாக வேண்டிய கட்டாயம் இல்லை.  ஒரு எலியின் உயிர் பூனையின் வாயில் இருக்கிறது.  மீன்களும் தவளைகளும் பறவைகளுக்கு உணவுகளாகிக் கொண்டிருக்கின்றன.  கொல்லபட்ட விலங்கைச் சிங்கம் புசிக்கப்போகிறது.  கொடுக்கை உயர்த்திய தேள் (போன்ற விலங்கு) விஷத்தைப் பாய்ச்சத் தயாரக இருக்கிறது.   ஆதமின் அருகே இருக்கும் மரத்தின் அடியில் படரும் கொடியில் ஸ்ட்ராபெர்ரி பழுத்திருக்கிறது;  செவ்வியலில் ஸ்ட்ராபெர்ரி காம விழைவின் குறியீடு.  மரத்தின் மேலே எறிக்கொண்டிருக்கும் பாம்புதான் கர்த்தர் அகன்றபிறகு அவர்களை விலக்கப்பட்ட கனியைப் புசிக்கத் தூண்டிய சாத்தானாக இருக்கக்கூடும்.  ஏவாளின் பின்னே முயல்கள் விளையாடிக் கொண்டிருக்கிறன, அவையும் காம இச்சையின் அடையாளங்கள்.  மையத்தில் இருக்கும் நீரூற்றின் கோளத்தில் ஆந்தை விழித்துக் கொண்டிருக்கிறது, இது வரவிருக்கும் அழிவுகளுக்குக் கட்டியம் கூறிக் கொண்டிருக்கிறது. 

படம் – 5: நடுப்பலகை. மனிதர்களால் கேளிக்கூடமாகப்பட்ட பூவுலகம்.

நடுப்பலகை சுவர்க்கமும் நரகமும் கலந்த கலவை, இதுதான் பூவுலகு.  இடது பலகையில் வந்த ஆதாமும் ஏவாளும் தங்கள் ஆதி பாவத்தைச் செய்துவிட்டார்கள். எனவே பூமி மனிதர்களாலும் விலங்குகளாலும் நிறைந்திருக்கிறது. இதுவே படைப்பின் தலைப்பு சொல்லும் இச்சைகளின் உலகம். மையத்திலிருக்கும் நீறூற்றில் ஆண்களும் பெண்களும் ஜலக்கீரீடைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாரக்ள். இந்த மாபெரும் நீறூற்று பெருகி ஆறுகளாகி நான்கு புறங்களிலும் சென்று கொண்டிருக்கின்றன.  சற்று கீழே இன்னொரு நீர்நிலை, அங்கே பெண்கள் கூட்டங்களாகக் குளித்துக் கொண்டிருக்கிறார்கள்.  அந்தக் குட்டையைச் சுற்றி பல்வேறு விலங்குகளில் ஆண்கள் வலம் வருகிறார்கள்.  அவர்கள் இச்சைகளால் தூண்டப்பட்டு குளிக்கும் பெண்களைக் கேலி செய்து அழைப்பதுப்போலத் தோன்றுகிறது.  பலகையின் கிழ்ப்பகுதியில் ஆண்களும் பெண்களும் பழங்களுடனும் பூக்களுடனும் நிறைகிறார்கள்.  ஒருவன் ஆப்பிளைப் பறித்துக்கொண்டிருக்கிறான். இன்னொருவன் பெண்களுக்கு ஸ்ட்ராபெர்ரியைக் கொண்டு தருகிறான்,  சல்லாப நிலையிலிருக்கும் ஒருவனின் தலைக்குப் பதிலாக ப்ளூபெர்ரி,  இன்னும் கரும்பெர்ரி, ராஸ்பெர்ரி, செர்ரி போன்றவை கீரீடங்களாகத் தலையில் இருக்கின்றன.  ஒருவரின் உயரும் காலில் அமர்ந்திருக்கும் பறவைக்கு அவர் கையால் பழம் ஒன்றைத் தருகிறார்.  மாபெரும் காகம் போன்ற பறவை தன் அலகால் இன்னொருவருக்குப்  பழத்தை ஊட்டிக் கொண்டிருக்கிறது.  மனிதர்கள் மாபெரும் மீன்களையும் சிப்பிகளையும் சுமக்கிறார்கள். 

விசித்திரமாக, குனிந்திருக்கும் ஒருவரின் ஆசனப் புழையிலிருந்து பூங்கொத்து நீள்கிறது.  நீரில் தலைகீழாக நிருக்கும் ஒருவரின் கால்களுக்கிடையில் ஒரு பெரிய பழம், அதில் பறவைகள் கூடுகட்டி அமர்ந்திருக்கின்றன.  ஒருவர் மாபெரும் சிப்பியைச் சுமந்துகொண்டு செல்கிறார், அதற்குள் இன்னொருவர், அவர் பிட்டத்திலிருந்து முத்து வெளிவருகிறது. மிதக்கும் அன்னாசிப் பழமொன்றின் காம்பு, மயில் சிறகைப்போல விரிகிறது, அந்தப் பழத்தினுள்  இருப்பவர் கண்ணாடிக்குழாய் வழியாக வரும் எலியைக் கண்டு மிரள்கிறார். பிட்டம் ஒட்டியிருக்கும் இருவரின் மீது கொடிகள் படர்ந்து கனிந்துகொண்டிருக்கிறன. அதன்மேல் ஆந்தை அமர்ந்திருக்கிறது.  அதற்கு எதிர்ப்புறம் ஓடையில் மிதக்கும் இன்னொரு ஆந்தையின் முதுகில் ஒருவர் பயணிக்கிறார்.  பறக்கும் வாத்தின் முதுகில் ஒருவரும் அவரைவிட மிகப் பெரிய மரங்கொத்திப் பறவையும் பயணிக்கின்றனர். 

ஒரு நிலையில் நாம் வார்த்தைகளின் போதாமையை உணர்ந்து மௌனமாகிறோம்.  என்ன விதமான கற்பனை இது.  ஓவியர் என்னதான் சொல்ல வருகிறார்?

ஹைரோனிமஸ் பாஷ் என்று அறியப்படும் அந்த ஓவியரின் இயற்பெயர் ஆக்கெனின் ஜெரோனிமஸ் (Jheronimus van Aken). இந்த டச்சுப் பெயரைவிட ஹைரோனிமஸ் பாஷ் என லத்தீனில் ஒலிக்கும் பெயரை விரும்பிச் சூட்டிக்கொண்டார். அவருடைய வாழ்க்கையைப் பற்றி நமக்கு நிறைய தகவல்கள் கிடைக்கவில்லை. அவர்  பொ.யு 1450 (சுமார்)-ல் பிறந்தார், அறுபத்தைந்து வருடம் வாழ்ந்து 1516-ல் மறைந்தார்.  அவர் வரைந்த எல்லா  ஓவியங்களும் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அவர் கட்டாயம் பெரும் செல்வாக்குடன் இருந்திருக்கிறார்.  இருபத்தைந்து ஓவியங்கள் நிச்சயமாக அவருடையதுதான் என அறிவியல் பூர்வமாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளன.  நாம் பார்த்துக்கொண்டிருக்கும் ஓவியத்தைப்போல மொத்தம் ஏழு முப்பலகைகளை வடிவமைத்திருக்கிறார். இவற்றில் பெரும்பான்மையானவை இதைப் போலவே பூமி-சுவர்க்கம்-நரகம் கருத்துகளை விளக்குகின்றன.  பாஷ் கத்தோலிக்க கிறிஸ்துவத்தில் பெரும் நம்பிக்கை கொண்டவராக வாழ்ந்திருக்கிறார். எனவே இந்தக் கலைப்படைப்புகளை நிச்சயமாக கத்தோலிக்க ஒழுக்க நெறிகளைப் போதிப்பனவாக அறியலாம்.  


படம் – 6 இசைக்கருவிகளின் சித்திரவதை

கத்தோலிக்க ஒழுக்க நெறிகளை நிலைநாட்ட ‘நரகம்’ என்ற கருத்துருவாக்கம் பெரிதும் உதவியது.  நன்னெறிகளைப் போதிப்பதுடன் அவ்வப்பொழுது அவற்றிலிருந்து பிறழ்ந்தால் அனுபவிக்க வேண்டிய தண்டனைகளையும் சேர்த்துச் சொல்வது உலக வழக்கு.  முதல் பலகையில் கடவுள் படைக்கும் பூலோக சுவர்க்கம், இரண்டாவது பலகையில் அந்த உலகை கேளிக்கைக் கூடமாக மனிதர்கள் மாற்றியமை இரண்டையும் காட்டிய பிறகு, அந்தக் கேளிக்கைப் பாவங்களுக்குச் சம்பளமாக என்னென்ன தண்டனைகள் நரகத்தில் இருக்கிறன என்று தெருட்ட, பாஷ் மூன்றாவது பலகையை வரைந்தார்.  முதல் இரண்டு பலகைகளுடன் ஒப்பிட மூன்றாவதன் ஓவியங்கள் முற்றிலும் மாறுபட்டனவாக இருக்கின்றன. முதலில் நம் கவனத்தைப் பெறுவது, அதன் கறுப்புப் பிண்ணனி; நரகம் இருள் சார்ந்தது.   பலகையின் மேற்புறத்தில் தொலைவில் எரிந்து கொண்டிருக்கும் நகரங்களிலிருந்து வெளிச்சம் கசிந்துகொண்டிருக்கிறது.  அது முழுப்பலகைக்கும் அமானுஷ்யத் தன்மையை அளிக்கிறது.  சற்று கீழே ஆற்றில் சடலங்கள் மிதக்கின்றன. நடுப்பகுதியில் ஒற்றை மனித முகம், அது ஒரு உடைந்த முட்டையை உடலாகக் கொண்டிருக்கிறது. அதன் தலையில் தளம் அமைக்கப்பட்டு, அதில் மனிதர்களைவிட மிகப் பெரிய, விரைக்கொட்டையின் வடிவத்தில் பருத்த பேக்பைப்பர் இசைக்கருவி இருக்கிறது.  அவ்வுருவத்தின் கால்கள் மரத்தினாலானவை. அடியில் உறைந்த ஆறு, அதில் மனிதர்கள் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள், சருக்கிச் செல்கிறார்கள்.  நரகம் கூட இயக்கங்கள் நிறைந்தாதத்தான் தோன்றுகிறது.  நடு மனிதனின் இடப்புறத்தில், மாபெரும் காது அம்புகளால் துளைக்கப்படுகிறது, கத்தியால் கிழிக்கப்படுகிறது, அதனடியில் மனிதர்கள் நசுங்கிக் கொண்டிருக்கிறார்கள். அருகே இரும்பு வளையத்தில் மனித உடல் சரிபாதியாகத் தொங்குகிறது.  உறைந்த ஆற்றின் கீழே இசைக்கருவிகள் நிரம்பியிருக்கின்றன. ஒரு வகையில் பார்த்தால் அக்கருவிகள் இசைக்கப்படுவதுபோலும், மறுவகையில் அக்கருவிகளால் அவர்கள் துன்புறுத்தப்படுவதைப் போலும் இருக்கின்றன.   

படம் – 7 பைபிள் சொல்லும் ஏழு பாவங்களில் சில.  பேராசையின் அடையாளமாகப் பறவை உருவம் ஒன்று பிரம்மாணடமான ஆசனத்தில் அமர்ந்து, யாரையோ விழுங்கிக் கழிவுகளாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த ஆசனம் ஒரு மல இருக்கை. அதே மலக்குழியில் இன்னும் சிலர். பெருந்தீனி உண்ட ஒருவன் அந்த மலக்குழியில் வாந்தியெடுக்கிறான். இப்படி அருவருப்பின் உச்ச வெளிப்பாடுகளாகப் பல இடங்கள் ஓவியத்தில் இருக்கின்றன.  

பலகையின் கீழ்ப்பகுதியில் பைபிள் வரையறுக்கும் ஏழு பாவங்கள் வரையப்பட்டிருக்கின்றன.   மாபெரும்  பறவை ஒன்று கழிவு இருக்கையில் அமர்ந்து ஒரு மனிதனைத் தின்று அவர்களை மலமாகக் கழிக்கிறது (பேராசை).  அதே மலக்குழியில் ஒருவன் வாந்தியெடுக்கிறான் (பெருந்தீனி).  பேராசையின் காலடியில் பெண்னொருத்தி (சுய பெருமை).  இன்னும் பிற பாவங்களையும் எளிதில் அடையாளம் காணமுடியும்.  கீழே வலது ஓரத்தில் கன்யாஸ்திரி உடையணிந்த பன்றி ஒருவனை ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தூண்டுகிறது.  சூதாட்டத்தில் தோற்றவனை மிருகம் தின்றுகொண்டிருக்கிறது.   மொத்தத்தில் இப்பலகை பாவங்கள், அவலம், அருவருப்பு, இழிமை, கொடுமை போன்றவற்றின் தொகுப்பாக நம்மை மிரட்டுகிறது. 

இந்தக் கலைப்படைப்பு சொல்லவரும் சேதி என்ன என்பதில் பல குழப்பங்கள் இருக்கின்றன.  நேரடியாகப் பார்த்தால்,  வெளிப்புறத்தில் கடவுள் இவ்வுலகைப் படைக்கிறார்.  உள்ளே, முதல் பலகையில்  பூலோக சுவர்க்கமாக இருக்கும் ஈடன் தோட்டத்தில் கடவுள் பெண்ணையும் ஆணையும் படைக்கிறார்.  நடுப்பலகையில் அந்த பூமி மனிதர்களால் களியாட்டங்களின் விளைநிலமாக மாற்றப்படுகிறது.  அந்தப் பாவத்திற்கு அவர்கள் மூன்றாவது பலகையில் (நரகத்தில்) தண்டனையைப் பெறுகிறார்கள்.   இது மறுமலர்ச்சி காலத்திலிருந்த கிறிஸ்தவ நெறிகளின் போதனை.  ஆனால் இதன் அழகியில் மறுமலர்ச்சி கால (பொதுயுகம் 1300 முதல் 1600 வரை) பெருவழக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.  கியோட்டோ (Giotto 1266–1337), ஸான்றோ போட்டிச்செல்லி (Sandro Botticelli c. 1445–1510), லெனார்டோ டாவின்சி (Leonardo da Vinci 1452–1519), மைக்கெலாஞ்சலோ – (Michelangelo 1475–1564), ரஃபயேல் (Raphael 1483–1520) போன்ற மாபெரும் கலைஞர்களின் காலம் அது. அவர்களுடைய உன்னத படைப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது ஹைரோனிமஸ் பாஷின் ஆழகியல் கட்டாயம் அதிர்ச்சி தருவது.  ஆசனப்புழையிலிருந்து பூங்கொத்து, புல்லாங்குழல், பிட்டத்தில் எழுதப்பட்ட இசைக்குறிப்புகள், காமத்தின் வெளிப்பாடுகளான நடத்தைகள், குறியீடுகள், மலக்குழியில் கிடக்கும் மனிதர்கள், கன்யாஸ்த்ரீ உடையணிந்த பன்றி,  என்று படைப்பெங்கும் அருவருக்கத்தக்க விடயங்கள் விரவிக்கிடக்கின்றன.  இதை முழுமையாகப் புரிந்துகொள்ள நமக்கு ஓவியரின் வரலாறு உதவக்கூடும். ஆனால துரதிருஷ்ட வசமாக நமக்கு அவரைப்பற்றிய குறிப்புகள் அதிகம் கிடைக்கவில்லை.  ஆனால் நாமறிந்த வகையில் அவர் இப்படி அதிர்ச்சியூட்டும் ஓவியங்களை வரைந்ததற்காக எதுவும் தண்டனை பெற்றதாகக் குறிப்புகள் இல்லை. சொல்லப்போனால் அவர் தேவாலயங்கள் மற்றும் உயர்குடியினரின் செல்லாக்குடனேயே வாழ்ந்திருக்கிறார். எனவே, இவை அக்காலக் கத்தோலிக்க நெறியையே விளக்குவதாகவே கொள்ள வேண்டியிருக்கிறது. 

இந்தப் பேரவலங்களை வரைய பாஷ்-க்கு என்ன உந்துதல்கள் இருந்திருக்கலாம் என்று பலரும் ஊகித்திருக்கிறார்கள். பொது யுகம் 1310-களில் ஐரோப்பாவைப் பெருங்குளிர் பீடித்தது.  தேம்ஸ் உள்ளிட்ட பல முக்கியமான ஆறுகள் அவ்வப்பொழுது உறைந்துபோயின. வேளாண்மை சீரழிந்து தானிய உற்பத்திக் குறைந்தது. உணவின்றி பலரும் இறந்தனர்.   அதிலிருந்து சில வருடங்களுக்குள்ளாகவே, 1347 முதல் 1351 ஐரோப்பா முழுவதையும் கருப்புச் சாவு என்று அழைக்கப்பட்ட பிளேக் நோய் பீடித்திருந்தது.  ஐரோப்பாவின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கைக் காவு வாங்கிய பிறகே அது கட்டுக்கடங்கியது.   முறையாக அடக்கம் செய்யமுடியாமல் சவங்கள் நகரத் தெருக்களின் ஓரங்களில் குவிந்து கிடந்தன.  பாஷ் நிச்சயம் இதைப்பற்றிய விவரணைகளைக் கேட்டிருப்பார், சில ஓவியங்களில் பார்த்திருக்கவும்கூடும். கொள்ளை நோய் முடிந்தபிறகு மக்கள் கடவுளின் சீற்றத்தைக் கண்டு பயப்பட்டு, பணிவுள்ளவர்களாக, ஒழுக்கமானவர்களாக, கடவுளுக்கும் கத்தோலிக்க மதத்திற்கும் விசுவாசமானவர்களாக மாறியிருப்பார்கள் என்றுதானே எதிர்பார்ப்போம்? மாறாக, அவர்கள் முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு பேராசை, அகம்பாவம், ஆணவம் போன்ற இழிகுணங்களுடன் களிவாழ்க்கை நடத்தத் தலைப்பட்டார்கள்.  எனவே, கத்தோலிக்க மதமும் தீவிரமான பிரச்சாரங்களைச் செய்ய வேண்டியிருந்தது.  

பதினைந்தாம் நூற்றாண்டு ஐரோப்பாவில் கம்பு  (Rye) தானியத்தில் க்ளாவிஸெப்ஸ் பர்புரியா (Claviceps purpurea) எனும் பூஞ்சையின் தாக்குதாலால் எர்கோட்டிஸம் என்ற வியாதி பெருகியது.  கம்பஞ்செடி கதிர் முற்றும் நேரத்தில் இந்தப் பூஞ்சை பீடிப்பதால், அதன் எச்சம் உணவுக்கான தானியத்திலும் மீண்டிருக்கும்.  இதைத்  தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம்  எர்கோட்டிஸம் தாக்கும்.  தலைவலி, வாந்தியில் தொடங்கி நோய் திவிரமடையும் பொழுது பாதிக்கப்பட்டவர் கை, கால்களில் தாளமுடியாத எரிச்சல் உண்டாகும் (எனவே இந்த வியாதிக்கு நரகத்தீ, தூய அந்தோணியாரின் தீ என்ற பெயர்களும் உண்டு). உச்சத்தில் நோயாளியின் மனநிலையில் பிறழ்வு ஏற்படும். அப்பொழுது நடப்பை மீறிய சித்தப்பிரமைகளுக்கு ஆளாவார்கள்.  ஓவியர் பாஷ் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அவருக்கு பிறழ்வுக் கற்பனைகள் தோன்றியிருக்கலாம் என்று சில வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள்.  1938-ஆம் ஆண்டு ஸ்விஸ் நாட்டின் ஆல்பெர்ட் ஹாஃப்மன் என்பவர் தற்செயலாக ஆய்வகத்தில் எல்.எஸ்.டி (LSD Lysergic acid diethylamide) என்ற வேதிப்பொருளை உருவாக்கினார். இதுவும் இந்தக் குடும்பத்தின் பிற வேதிப் பொருட்களும் மனப்பிறழ்வைத் தரும் போதைப்பொருள்களாக இப்பொழுதும் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறன.  சில போதைக் காளான்களும் இந்தவகை வேதிப்பொருள்களைக் கொண்டிருக்கின்றன.  இருபதாம் நூற்றாண்டில் மிகப் பிரபலமான பல இசைக் கலைஞர்கள், ஓவியர்கள், எழுத்தாளர்கள் தங்கள் கற்பனைகளை விரிவாக்க இதுபோன்ற போதை மருந்துகளை உட்கொண்டார்கள்.   குறிப்பாக சர்ரியலிஸம், சைக்கடெலிக் ஆர்ட், பாப் ஆர்ட் வகைக் கலைஞர்களில் பலர் போதை மருந்துகளால் முற்செலுத்தப்பட்டிருக்கிறார்கள். 

படம் – 8: ஹுவான் மிரோவின் ‘உழப்பட்ட வயல்’ ஓவியம்.  இருபதாம் நூற்றாண்டில் சர்ரியலிஸ பாணியை வரையறுத்த ஓவியங்களுள் ஒன்றாக அறிப்படும் இதில்  நானூறு ஆண்டுகளுக்கு முன் ஹைரோனிமஸ் பாஷ் வரைந்த ‘பூவுலக இச்சைத் தோட்டம்’ என்ற ஓவியத்தின் பாதிப்பை நன்றாக அடையாளம் காணமுடியும்.  தனித்த பெரும் காது, கண், மரம், நீர்நிலை, பறவைக்கூட்டம், ஸ்ட்ராபெர்ரி, முயல், கற்பனை மிருகங்கள் எனப் பலவும் பாஷ்-ன் ஓவியத்தை அடியொற்றியவை.  குழாயிலிருந்து வெளிவரும் மிருகம்கூட பாஷ்-ன் கற்பனையின் நீட்டிப்பே.

ஐநூறு ஆண்டுகளுக்குப் பிறகு, இன்றும் அவருடைய ஓவியங்கள் மிகவும் புகழுடன் நிலைத்திருக்கின்றன. சொல்லப்போனால் இருபதாம் நூற்றாண்டில் உருவான சர்ரியலிஸ முறைமையில் ஹைரோனிமஸ் பாஷின் தாக்கத்தை நிறையவே பார்க்க முடிகிறது. புகழ்பெற்ற ஸ்பானிய சர்ரியலிஸக் கலைஞர் ஹுவான் மிரோ (Joan Miró, 1893-1983) ,

“என்னுடைய ஓவியங்களைப் பற்றி நான் பேசுவது கடினம்.  ஏனென்றால் அது எப்பொழுதும் அதிர்ச்சி, புற மற்றும் அகநிலைகளால் தூண்டப்பட்ட மாயத்தோற்றம் இவற்றில் பிறக்கிறது. அதற்காக நான் முழுவதும் பொறுப்பற்றவன்” 

என்று கூறுகிறார்.  இவருடைய ‘உழப்பட்ட வயல்’ (The Tilled Field, 1923–1924) என்ற சர்ரியலிஸ ஓவியம் ஹைரோனிமஸ் பாஷின் முழு பாதிப்பில் உருவானது. இதில் பாஷ் ஓவியங்களின் கருட்பொருட்கள் முற்றிலும் சர்ரியலிஸப் பிறழ்நிலையில் வரையப்பட்டிருக்கிறது. இன்னும் சால்வடர் டலி, ரெனெ மக்ரீட், மாக்ஸ் எர்னெஸ்ட் போன்ற பல சர்ரியலிஸ மேதைகளின் படைப்புகளில் ஹைரோனிமஸ் பாஷ்-ன் தாக்கம் இருப்பதால் சிலர் பாஷ்-ஐ சர்ரியலிஸத்தின் ஊற்றுக்கண், பதினைந்தாம் நூற்றாண்டு சர்ரியலிஸ்ட் என்றே கூறுகிறார்கள்.   

வைதீக கத்தோலிக்கப் பரம்பரையின் நெறிப்பிரச்சாரமா அல்லது முற்றிலும் பிறழ் மனநிலையில் உருவான காமக் களிப்புகளின் வெளிப்பாடா?  ஹைரோனிமஸ் பாஷ்-ன் ‘பூவுலக இச்சைகளின் தோட்டம்’ கிட்டத்தட்ட ஐநூறு ஆண்டுகளாக விடையறிய முடியாத புதிர்தான்.   இந்தப் புரியாமையே அதன் மீது நம்மை ஆர்வம் கொள்ளத் தூண்டுகிறது.  இது தொடர்ந்தும் பல நவீன கலைகளின் ஊற்றாகப் பெருக்கெடுக்கிறது. 


குடாகாயம்

எதற்காக உயிரைத் துறக்கலாம்? – 2 கானலின் நீரோ, காட்சிப்பிழையோ?

Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.