அதிரியன் நினைவுகள் – 37

This entry is part 36 of 48 in the series அதிரியன் நினைவுகள்

மூலம் : மார்கெரித் யூர்செனார்

தமிழாக்கம் : நா. கிருஷ்ணா

எனது வாழ்க்கையில் எனக்கும் எனது உடலுக்கும் உறவில் பிரச்சினைகளில்லை ; சுமுகமாகவே இருந்தது; அதனுடைய பணிவையும், பலத்தையும் மறைமுகமாக நம்பியிருக்கவேண்டிய கட்டாயம். இந்த நெருக்கமான தோழமை  பிளவுபடத் தொடங்கியது;  உடல் என் விருப்பப்பத்திற்கு இணங்குவதை நிறுத்திக்கொண்டது; ஆத்மாவென மடத்தனமாக நான் அழைத்த என்னுடைய மனத்தோடுகூட அது உடன்பட  மறுத்தது;  நேற்றுவரை அறிவார்ந்த தோழனாக இருந்த  எனது சரீரம்,  இட்ட பணிக்கு முகம் சுளிக்கும் ஓர் அடிமையென்கிற நிலை. உண்மையில் உடலென்னைப் பயமுறுத்தியது;  தொடர்ந்து எனது நெஞ்சில் பயத்தின் இருளார்ந்த இருப்பை உணர்ந்தேன் ; அதன் பிடி இறுகியிருந்தது ;  இன்னும் வலியின் அறிகுறியில்லை ; ஆனால் அதற்கான முதற்கட்டம். நெடுநாட்களாகவே உறக்கமின்மைக்குப் பழகியிருந்தேன் ; ஆனால் பின்னர் தூக்கமின்மையே உறக்கத்தைக்காட்டிலும் பரவாயில்லை என்கிற நிலைமை; சிறிது கண்ணயர்ந்தால்போதும், அலறிக்கொண்டு கண்விழிக்க நேரும் தலைவலியால் பாதித்திருந்தேன் ; மருத்துவர் ஹெர்மோஜேனெஸ் காலநிலையின் வெப்பமும், தலையில் நான் அணியும் கவசத்தின் பாரமும் காரணமென்றார்; மாலைவேளைகளில் நெடுநேரக் களைப்பிற்குப் பின்னர் சாதாரணமாக உட்கார முடிவதில்லை, கீழே விழுவதுபோல இருக்கையில் அமருவேன்; அதற்குப்பின்னர் ரூஃபஸ்(Rufus) அல்லது செவெரஸ் (Severus) இருவரில் ஒருவரை வரவேற்க  பிரயத்தனப் படநேரும் ;  அதை முன்னதாகப் பலமுறை முயன்று பார்ப்பேன்; முழங்கைகள் பாரத்தை இறக்கியதுபோல எனது இருக்கையின் கைகளில் கிடக்கும். என் தொடைகள் களைத்துப்போன ஓட்டப்பந்தய வீரரின் தொடைகள்போல  நடுங்கின. சிறிது உடலை அசைப்பதுகூட  ஏதோவொரு வேலையைச் செய்ததுபோல  உணர்ந்தேன், இப்படியான வேலைகளாலேயே வாழ்க்கையும் பின்னர் கட்டமைக்கப்பட்டது. 

கொடூரமான சோர்வின் கீழ், அதுநாள்வரை மறைந்திருந்த நோய் வெளிச்சத்திற்கு வந்தது; கிட்டத்தட்ட அபத்தமானதொரு விபத்து; ஒரு குழந்தைத்தனமான சுகவீனம் அதற்குக் காரணம். இராணுவத் தலைமை அதிகாரிகளோடு, ஏற்பாடு செய்திருந்த கலந்தாய்வுக் கூட்டமொன்றில் என் மூக்கில் இரத்தம் கசிந்தது ; ஆரம்பத்தில் அவ்வளவாக நான் அதைப் பெரிதுபடுத்தவில்லை, ஆனால் இரவு உணவின்போதும் தொடர்ந்து ஒழுகியது ; அன்றிரவு கண்விழித்தபோது இரத்தத்தில் நனைந்திருந்தேன். அருகிலிருந்த கூடாரத்தில்  செலெர் படுத்திருந்தான், அவனை அழைத்தேன்; அவன் என்னுடைய மருத்துவர் ஹெர்மோஜேனெஸிடம் உடனடியாக இப்பிரச்சினையைக் கொண்டுபோனான், ஆனால் அந்த பயங்கர வெதுவெதுப்பான இரத்த ஒழுக்குமாத்திரம் நின்றபாடில்லை. இளம் அதிகாரியின்  அக்கறைகொண்ட கைகள் என் முகத்தில் வழிந்த திரவத்தைத் துடைத்தன; உரோமில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள், குளிக்கிறபோது தங்கள் நரம்புகளை வெட்டிக்கொள்வார்கள் ; விடியற்காலை அதுபோன்ற நிலையில் நானிருக்க எனக்குப் பெரும் அதிர்ச்சி; இரத்தப் போக்கினால் சில்லிட்டிருந்த உடலுக்கு முடிந்தவரை வெப்பமூட்ட  போர்வைகள், சூடான நீரை என்மீது சொரிதல் போன்றவற்றின் உதவிகொண்டு  முயன்றார்கள்; இரத்தம்கொட்டுவதை நிறுத்த ஹெர்மோஜேனெஸ் பனிக்கட்டியைப் பரிந்துரைத்தார்; எங்கள் கூடாரத்தில் அதற்குப் பற்றாக்குறை; ஹெர்மோன் மலை உச்சியிலிருந்து பல்வேறு சிரமங்களுக்குப் பின்னர், எனது சேவகன் செலெர் பனிக்கட்டிகளை கொண்டுவந்தான். நான்  உயிர்வாழ்வேன் என்கிற நம்பிக்கையை அவர்கள் இழந்திருந்தார்கள் என்பதைப் பின்னர் தெரிந்துகொண்டேன்; எனது உயிர் வாழ்க்கையோடு என்னைப் பிணைத்திருந்தது ஒரு மெல்லிய இழையென்பதையும், அது எனது மருத்துவரை மிரட்டும்  கண்ணுக்குப்புலனாகாத வேகமாகத் துடிக்கிற நாடித் துடிப்பிற்கு நிகரானதென்பதையும்  உணர்ந்திருந்தேன். என்ன காரணம் என்பதைச் சொல்லமுடியாத நிலையில், இரத்தக் கசிவும்  நின்றது; நான் படுக்கையை விட்டு வெளியில் வந்தேன்; வழக்கம்போல எனது வாழ்க்கையைத் தொடர  நினைத்தேன் ; ஆனால் இயலவில்லை. உடல் நிலையில் பெரிய முன்னேற்றமெதுவுமில்லை இருந்தும், ஒருநாள் மாலை, அஜாக்கிரதையாகச் சிறிது தூரம் குதிரையில் சவாரி செய்யலாமென முயற்சித்துப்பார்க்க, இரண்டாவது எச்சரிக்கை எனக்குக் கிடைத்தது, ஆனாலிது முதலாவதைக்காட்டிலும் கடுமையானதாக இருந்தது. ஒரு நொடி நேரத்தில் அனைத்தும் நடந்தன: இதயத் துடிப்பு அதிகமாயிற்று; பின்னர் குறைந்தது; இயங்காமல் ஓய்வெடுப்பது போலிருந்தது ; பின்னர்  எதுவுமே இல்லையென்றானது. இருண்டிருக்கும் கிணறொன்றில் ஒரு கல் விழுந்தது போல நினைத்தேன்; அந்த இருண்டகிணறு மரணமன்றி வேறில்லை, அது சாந்தமானது என நினைப்பது தவறு:  அதன் பீறிடும்நீர் என்னை அடித்துச்சென்றது, நீரில் முங்கியெழுபவன்  காதுகள்  நீரிடும் முழக்கத்தில் அடைபடும் அனுபவம் எனக்கும் நேர்ந்தது. ஆழ்பகுதியை நான் எட்டவில்லை; நீரின் மேற்பரப்பிற்குத் திரும்பவந்தேன்; மூச்சுத் திணறியது. எல்லாம் முடிந்ததென நினைத்த அந்த நொடியில், எனது மொத்தப் பலத்தையும் என்னருகே நின்றிருந்த செலெர் கரத்தை இறுகப் பற்றியிருந்த எனது கையில் செலுத்தினேன்; அவனுடைய தோளில் பதிந்திருந்த என்னுடைய விரல்களின் சுவடுகளை பின்னர் எனக்குக் காட்டினான். ஆனால் இந்தச் சுருக்கமான வேதனை உடலின் எல்லா அனுபவங்களையும் போன்றது;  அது விவரிக்க முடியாதது ; அதை அனுபவித்த மனிதன் மட்டுமே அறிந்த இரகசியம். இச்சம்பவத்திற்குப்பிறகு இதைப்போன்ற சங்கடங்களைச் சந்தித்திருக்கிறேன், ஆனால் அவை ஒருபோதும் ஒரே மாதிரியானவை அல்ல; அதுபோன்றதொரு பயங்கரத்தையும், அத்தகையதொரு இரவையும் ஒரு மனிதன் இருமுறை,  சாவாமல் எதிர்கொள்ள இயலாதென்பது நிச்சயம். ஹெர்மோஜேனெஸ் கடைசியில் இதயநீர்க்கோர்ப்பு நோயின் ஆரம்பமெனக் கண்டறிந்தார்; திடீரென எனக்கு எஜமானாக மாறியிருந்த இவ்வியாதியின் அறிவுரைகளை நான் ஏற்கவேண்டும் ;  அன்றியும் நீண்டகாலத்திற்குச் செயலற்றிருக்க அல்லது ஓய்விலிருக்கவும்,  வாழ்க்கையின் தொலைநோக்குகளைக் கட்டிலின் வரம்பிற்குள் குறுக்கிக்கொள்ளவும் சம்மதிக்கவேண்டும்.  கிட்டத்தட்ட கண்ணுக்குப் புலனாகாதவகையில், காய்ச்சல் இல்லாமல், சீழ் இல்லாமல்,வயிற்று வலி இல்லாமல், ஆனால் கரகரப்பான சுவாசத்துடனும், வீக்கமான கால்களில் காலணிப்பட்டைகளால் உண்டான அடையாள அறிகுறிகளுடனும் உடலுள்ளே ஒளிந்திருந்த இந்நோய்க்காக நான் வெட்கப்பட்டேன்.

என் கூடாரத்தைச் சுற்றி ஒர் அசாதாரண அமைதி;   பெத்தார் முகாம் முழுவதும் நோய்வாய்ப்பட்ட ஒர் கூடாரமாக மாறியிருந்தது. காவல் தெய்வத்தின்(Génie) காலடியில் எரிந்த நறுமண எண்ணெய், கூடாரத்தினுள்  அடைக்கப்பட்ட காற்றின் இறுக்கத்தைக் கூட்டியிருந்தது; என்னுடைய  தமனி நாளங்களின்  துடிப்பு, டைட்டன்ஸ் தீவின் அதிகாலைக்கும் அது சார்ந்த தெளிவற்ற நினைவுகளுக்கும் அழைத்துச் சென்றது. வேறு நேரங்களில்  சகிக்கவொண்ணாத இவ்வொலிகள் மென்மையான பூமியில் அழுந்தக் கால்பதித்து ஓடும் குதிரையின்  பாய்ச்சலைப்போல அன்றென் காதில் விழுந்தன; ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகள் எனது ஆன்மாவை மிகவும் கவனத்துடன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தேன் ; ஆனாலன்று அது என் வசமில்லை.  என்னுடைய பெருத்த உடல், திக்குத்திசையின்றி மிதப்பதைப்போல உணர்ந்தேன்; போர்வைக்குள் இருந்தவண்ணம், கவனத்தை அங்குமிங்குமாக ஓடவிட்டு விண்மீன்கள், சாய்சதுர வடிவங்களென்று  எண்ணிக் காலத்தைத் தள்ளும்  மனித வாழ்க்கையை ஏற்றுக்கொண்டிருந்தேன்; இருளில் தெரிந்த மார்பளவுப் பளிங்கு சிலைமீது கவனம் சென்றது; குதிரைகளின் தெய்வமான எபோனா(Epona) தேவதைக்கு மரியாதை செலுத்தும்வகையில்    கேன்டிலீனா(cantilène) , பாடலொன்றை, எனது ஸ்பானிஷ் செவிலியர் ஒருமுறை மெல்லிய  குரலில் பாடிக்கொண்டிருந்தாள்; கருத்த பெண், நல்ல உயரம், தோற்றத்தில்  அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட ஓர் பாதாளக் குழியிலிருந்து வெளிப்பட்ட, நம்முடைய விதியைத் தீர்மானிக்கும் பார்க்கா (Parque) தேவதைகளில் ஒருத்திபோல இருந்தாள். அப்போதெல்லாம் பகற்பொழுதுகளும், இரவுகளும் எனது மருத்துவர் ஹெர்மோஜேனெஸ் ஒரு கண்ணாடிக் குவளையில் சொட்டுச் சொட்டாக அளந்து விட்ட பழுப்பு நிறத்திரவத்தைப் போலிருந்தன. 

மாலையில், ரூஃபஸின்(Rufus) அறிக்கையைக் கேட்க, என் ஒட்டுமொத்த சக்தியையும் ஒன்று திரட்டிக்காத்திருந்தேன்: ஒருவழியாகப் போர் அதன் முடிவை எட்டியிருந்தது;  ராபி ஏக்கிபா, யூதர்களுக்கும் உரோமானியர்களாகிய நமக்குமான பகைமையின் தொடக்கத்திலிருந்தே பொதுவிவகாரங்களிலிருந்து விலகிக்கொண்டார்,  தலையிடுவதில்லை; கலிலேயா நிலப்பகுதியைச் சேர்ந்த அஸ்ஃபா நகரில் யூதசமய ராபிக்களுக்குரிய சட்டத்தைக் கற்பிக்க வெளிப்படையாகவே தம்மை அர்ப்பணித்துக்கொண்டார்;  இக்கல்விக்கூடமே யூத தீவிர மதவாதிகளான ஸெலெட்களின் எதிர்ப்பியக்க மையமாக மாறியது; பெறப்பட்ட இரகசியச் செய்திகளை, 90 வயதான ஏக்கிபா திரும்பக் குறியீடுகளாக மாற்ற அவை சைமனின் ஆதரவாளர்களுக்குப் பரிவர்த்தனை செய்யப்பட்டடன;  இக்கிழவரைச் சூழ்ந்திருந்த தீவிர மதவாதம்பிடித்த  மாணவர்களை வலுக்கட்டாயமாக  அவர்கள் வீட்டிற்கு அனுப்பிவைக்க வேண்டியிருந்தது. நீண்ட தயக்கத்திற்குப் பிறகு, கவர்னர் ரூஃபஸ் யூத சமய நெறிமுறைப் படிப்பைத் தேசத்துரோகமாகக் கருதி தடை செய்ய முடிவு செய்தார்; சில நாட்களுக்குப் பிறகு, இந்த ஆணையை மீறிய ஏக்கிபா கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். அவரன்றி ஸெலெட் அமைப்பின் ஆன்மாவாகத் திகழ்ந்த யூத நெறி வித்தகர்கள் ஒன்பதுபேருங்கூட ஏக்கிபா முடிவைச் சந்திக்க வேண்டியிருந்தது.  கவர்னர் ரூஃபஸ் எடுத்த அனைத்து முடிவுகளுக்கும் தலையசைத்து நான் சம்மதம் தெரிவித்தேன். ஏக்கிபாவும் அவருடன் இறந்த அவருடைய விசுவாசிகளும் இறக்கும்வரைத் தாங்கள் தவறிழைக்காதவர்கள், உத்தமர்கள் என வாதிட்டனர்.   மக்களை மூழ்கடித்த இன்னல்களுக்கு தாங்கள் பொறுப்பேற்க  வேண்டிவருமென்பதை அவர்களில் ஒருவர்கூடக் கற்பனை செய்திருக்கவில்லை.  பார்வையற்றவர்கள் மீது  பொறாமைப்பட முடிந்தால், அம்மனிதர்களிடத்திலும் பொறாமைப்பட முடிந்திருக்கும்.  இந்தப்  பத்துப் பைத்தியக்காரர்களுக்கும்  மாவீரர் பட்டத்தைக் கொடுக்கலாமெனில், நான் மறுக்கமாட்டேன்; ஒன்றுமட்டும் நிச்சயம்;  இம்மனிதர்கள் மரியாதைக்குரியவர்கள் அல்லர்.

மூன்று மாதங்கள் கழிந்திருந்தன ; பிப்ரவரி மாதத்தின் ஒரு குளிர்கால காலை, மலை உச்சியில் அமர்ந்து, இலைகள் உதிர்ந்த அத்தி மரமொன்றில் சாய்ந்தவண்ணம், பெதார் கோட்டையைக் கைப்பற்றுவதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்பு  நடந்த தாக்குதலைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தேன்; கோட்டையைப் பாதுகாத்த வீரர்களில் கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சிய ஒன்றிரண்டு வீரர்கள் உடல் சோர்ந்து, மெலிந்து , அலங்கோலமாக அதேவேளை  பணியாதவரை ஒருவரிடம் காண்கிற அதே கம்பீரத்துடன் ஒருவர்பின் ஒருவராக வெளியில் வரக் கண்டேன். அதே மாதத்தின் இறுதியில் ‘ஆபிரகாமின் கிணறு ‘(Abraham’s Well) எனச் சொல்லப்படும் இடத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. புறநகர்ப் பகுதியில் அங்கு ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள்  பிடிபட்டு,   ஏலம் விடப்பட இருந்தனர்;. இவர்களைத் தவிர ஏளனச் சிரிப்புடன் குழந்தைகள்; ஏற்கனவே மூர்க்கத்தின் உச்சத்திலிருந்த நிலையில்,  தங்கள் திடநம்பிக்கையால் சிதைந்து,  டஜன் கணக்கில் ரோமானியத்  துருப்புகளின் சாவுக்குக் காரணமானோம் என்கிற வீண்பெருமையை உரத்துப்பேசி, தூக்கக்கலக்கக் கனவில் உழலும் முதியவர்கள் ; தளதளவென்ற உடல்கொண்ட  தடித்தபெண்கள் ; கீழைநாடுகளின் சமய வழிபாடுகளில் காண்கிற ரௌத்திரமும் கம்பீரமும் ஒருங்கமைந்த பெரியமாதாக்களைப் போன்ற பிறபெண்களும் ; அடிமை வியாபாரிகள் நோட்டம்விட காத்திருந்தனர்,  அடுக்கடுக்கான அக்காட்சித் தூசிப்படலம்போல என்னைக் கடந்துபோனது. இதே காலக்கட்டத்தில் யூத மிதவாதிகளை  வழிநடத்திய ஜோசு பென் கிஸ்மா(Joshua Ben-Kisma)  தம்முடைய சமாதானப் பாத்திரத்தை வெற்றிகரமாக மேடையேற்றத் தவறிய நிலையில், நீண்ட நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இறக்கும் வேளையில், நாங்கள் அந்நியருடன் யுத்தம் செய்யவேண்டுமென்பதும், அதுபோல பார்த்தியர்களுடனான எங்கள் யுத்தத்தில் நாங்கள் தோற்கவேண்டுமென்பதும் அவருடைய கடைசி ஆசையாக இருந்தது. மறுபுறம், கிறித்துவர்களாக மாறிய யூதர்களும் இஸ்ரேலில் இருந்தனர் ; அவர்களால் எங்களுக்கு எவ்வித பிரச்சினையுமில்லை;  தங்கள் இறைத்தூதனுக்குப்  பிற யூதமக்கள் துன்பம் விளைவித்தார்கள் எனக்கருதி அவர்களை இம்மக்கள் வெறுத்தனர்,  இறைச் சீற்றம் உரோமானியரான நம்மைக் கருவியாகப் பயன்படுத்திக்கொண்டதென அவர்கள் நம்பினார்கள். இவைபோன்ற பிரமைகளும் தவறான புரிதல்களும் வெகுகாலம் தொடர்ந்தன.

ஜெருசலேம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த  கல்வெட்டொன்று யூதர்களைத் தடை செய்தது; மீறுபவர்கள் அத் தடையின்படித்  தூக்கிலிடப்படுவார்கள். இடிபாடுகளுக்கிடையில் அக்கல்வெட்டை மீண்டும்  வைத்தோம்; விருத்த சேதனம் செய்த யூதர்கள்  ஆலயத்தில் நுழைவதைத் தடுக்க  வாயிலில் வடித்த அவ்வாக்கியத்தின் ஒவ்வொரு சொல்லும் திரும்பப் பொறிக்கப்பட்டது. மாறாக, ஆண்டுக்கொருநாள் ஆப் (Ab) மாதத்தில் ஒன்பதாவது நாள், சிதிலமடைந்த சுவர் முன்பாக அழுவதற்கு உரிமையுண்டு. தீவிர இறைபக்திகொண்ட யூதர்கள் தங்கள் சொந்த நிலத்தை விட்டு வெளியேற மறுத்துவிட்டனர். 

போரினால் மிகக்குறைந்த அழிவுக்குள்ளான பகுதிகளில்  இயன்றவரைத் தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர்;  தீவிர மதவாதிகள் பார்த்தியன் பிரதேசத்தில் குடிபெயர்ந்தனர்; மற்றவர்கள் அந்தியோக்கியா, அலெக்ஸாண்டிரியா, பெர்கமன் எனச் சென்றார்கள்; ஓரளவு தெளிவு பெற்ற மக்கள் உரோமுக்குக் குடியேறி, அங்குச் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தனர். யூதேயா வரைபடத்தில் இருந்து துடைக்கப்பட்டது ; மேலும் எனது உத்தரவின் பேரில் பாலஸ்தீனம் என்ற பெயரையும் பெற்றது.  இந்த நான்கு ஆண்டுகாலப் போரின்போது, ​​ஐம்பது கோட்டைகளும் தொண்ணூறுக்கும் மேற்பட்ட நகரங்களும் கிராமங்களும் சூறையாடப்பட்டன; நம்முடைய எதிரிகள் கிட்டத்தட்ட ஆறு இலட்சம் மனிதர்களை இழந்திருந்தனர்; யுத்தம்,  உள்ளூர்க் காய்ச்சல், தொற்றுநோயென்று  கிட்டத்தட்ட தொண்ணூறு ஆயிரம் உயிர்களை  நம்முடைய தரப்பிலும் பறிகொடுத்திருந்தோம். போருக்கான வேலைகளை அடுத்து, நாட்டை மறுசீரமைப்பு செய்யும் பணிகள் தொடர்ந்தன. ஏலியாகேபிடோலினா புறநகர்ப்பகுதியைத் திரும்ப எழுப்பினோம், ஆனால் இம்முறை எளிமையாக;   திரும்ப ஒன்றைத் தொடங்குவதென்பது நமக்கு நிரந்தரமாயிற்று. 

சிதோனில்(Sidon)  சிறிது காலம் ஓய்வெடுத்தேன், அங்குக் கிரேக்க வணிகர்  ஒருவர் தனது பூந்தோட்டங்களோடு கூடிய இல்லமொன்றைத் தங்குவதற்குக்  கொடுத்தார். அதொரு மார்ச் மாதம் ; முன்னதாகவே உட்புற முற்றங்கள் ரோஜாபூக்களைக்கொண்டு  தரைவிரிப்புப்  போட்டதுபோல அலங்காரமாக இருந்தன. உடலில் இழந்த சக்தியைத் திரும்பப் பெற்றிருந்தேன். நோயின் கடுமையான முதற் தாக்குதலில் இழந்த வியப்பூட்டும் பலத்தை மீண்டும் என்னிடத்தில் கண்டேன்.  யுத்தத்தையும் காதலையும் போலவே, நோய்க்கென்று சமரசங்கள், பாசாங்குகள், தேவைகள் இருக்கின்றன; தவிர, நோய் என்பது  ஒருவகையான மனப்போக்குடன் கலந்ததொரு குழப்பக் கலவை; இந்நிலையில் யுத்தத்தோடும் காதலோடும் நோய்க்குள்ள விசித்திரமான ஒற்றுமையை நாம் அங்கீகரிக்காதவரை நோயைப் பற்றி நமக்கு எதுவும் புரியாது. நான் குணமடைந்து வந்தபோதும், என் உடல் விஷயத்தில் தந்திரமாக நடந்துகொண்டேன். எவ்வாறெனில்  எனது விருப்பங்களை அதனிடம் திணித்தேன் அல்லது அதன் விருப்பங்களுக்குக் கவனமாக இணங்கினேன்; முந்தையக் காலக் கட்டத்தில் எனக்கான  பிரபஞ்சத்தை விரிவுபடுத்தவும்,  ஒழுங்குபடுத்தவும், என்னை நானே கட்டமைத்துக்கொள்ளவும், எனது வாழ்க்கையை அலங்கரித்துக்கொள்ளவும்   பயன்படுத்திய அதே கலைத் திறனை, தற்போதும் உபயோகித்தேன். ஓர் அளவோடு உடற்பயிற்சிகளைத் திரும்பத் தொடங்கினேன்; என்னுடைய மருத்துவர் குதிரை ஏற்றத்திற்குத் தடையில்லை என்றார்; எனினும்  பயணத்திற்கன்றி வேறுவகை உபயோகத்திற்கில்லை; முன்பெல்லாம் ஆபத்தான சில சாகசங்களைக் குதிரையில் முயற்சித்ததுண்டு; தற்போது அவை இல்லை.

பணிகளின் போதும், இன்பமாகப் பொழுதுகளைக் கழிக்கும் போதும்,  பணியும் இன்பமும்  இனி  முக்கியமல்ல, களைப்பின்றி மீண்டுவருவதே முக்கியம் என்பது என்னுடைய முதலாவது அக்கறையாக இருந்துள்ளது.  என் நண்பர்கள் வெளித்தோற்றத்தில் அத்தகையை முழுமையான மீட்சியை என்னிடம் கண்டு வியப்பதுண்டு;  அவர்களைப் பொறுத்தவரை, எனது நோய்க்கு யுத்த காலத்தில் கடுமையாக நான் உழைத்தது காரணமென உறுதியாக நம்பினர், எனவே இனி அந்நோய்க்கு வாய்ப்பில்லை என்பதும் அவர்கள் கருத்து. ஆனால் எனது அனுமானம் வேறாக இருந்தது;  எனது நினைவில் பித்தினியா பைன் மரக்காடுகள் வந்தன ; அவற்றைக் கடந்துசெல்லும் மரவெட்டி, தனது கோடரியால் குறிவைப்பதுபோல ஒரு மரத்தைச் சிறிது வெட்டுவான்;  மறுபருவக் காலத்தில் மீண்டும் காட்டிற்குத் திரும்பி  குறிவைத்த மரத்தை வெட்டிச் சாய்ப்பான், அதைபோலத்தான் எனது நோயின் முதற் தாக்குதலை எடுத்துக்கொண்டேன். வசந்த காலத்தின் இறுதியில், நான் கடற்படையின் உயர்தர கப்பலில் இத்தாலிக்குத் திரும்பினேன்; செலர் உடனிருப்பது அவசியம் என்ற நிலையில் அவனையும்,  சிதோன் நகரில் சந்தித்த   பிறப்பில் அடிமையான கடாரா( Gadara) நகரைச் சேர்ந்த அழகான கிரேக்க இளைஞன் டையோட்டிமஸ் என்பவனையும் என்னுடன் அழைத்துச் சென்றேன்.  

இத்தாலிக்குத் திரும்பும் வழியில் தீவுக்கூட்டங்கள்; நீலநிறக் கடல் நீரில் டால்பின் மீன்கள் நீரிலிருந்து எம்பிக் குதிப்பதைக்  கண்டேன் ; அநேகமாக என் வாழ்க்கையில் இக்காட்சி கடைசியாக இருக்கக்கூடும்; தற்போதெல்லாம் சகுனங்கள் என்னவாக இருக்குமென்கிற கற்பனைக்குள் செல்வதில்லை;   கப்பலின் மேற்தளத்தில், சில நேரங்களில் புலம்பெயரும் பறவைகள், நம்மிடம் ஏதோ நட்பு பாராட்டுவதுபோல கீழிறங்கி ஓய்வெடுத்தபின்,  சீராக பறந்து வெகுதூரம் பயணிக்கும் ; அவற்றை அவதானிப்பேன். உப்பின் மணத்தையும், சூரியனின் வாசத்தையும், மரக்கலத்தை நிறுத்த இயலாதத் தீவெனத் தெரிந்தும் பலரும் வாழவிரும்பும் இத்தீவுக்கூட்டத்திலுள்ள  லாண்டிஸ்க்(lentisk),  டெரிபந்த்(terebinth) மரங்களின் வாசத்தையும் மனித உடலில் நான் சுவைத்திருக்கிறேன். நல்ல உடற்கட்டை வரமாகப் பெற்ற இளம் அடிமைகளின் மதிப்பை மேலும் அதிகரிக்கும்வகையில், அவர்களுக்கு முறையான இலக்கிய அறிவை அவ்வப்போது போதிப்பதுண்டு; டையோட்டிமஸ் அப்படிப் பெற்றிருக்கிறான். அந்தி வேளையில், ஒரு ஊதா நிற விதானத்தின் கீழ்,  பின்பக்கமாக படுத்தவண்ணம், மனித வாழ்க்கையின் சோகமான நிச்சயமற்ற தன்மையை விவரிக்கும் வரிகள்; புறாக்கள், ரோஜாமலர்களால் தொடுத்த மலர் வளையங்கள்,  முத்தமிட்ட உதடுகளென, தன்னுடைய தேசத்துக் கவிஞர்களின் படைப்புக்களை, இரவு குறுக்கிட்டு அவற்றை மறைக்கும்வரை, அவன்  வாசிக்க நான் கேட்பேன். 

கடலிடமிருந்து ஒர் ஈரப்பதத்துடன் சூடான மூச்சு வெளியேறிக் கொண்டிருக்க, நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாகத் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்திற்கு மேல் நோக்கி நகர்ந்துகொண்டிருந்தன;  மேற்கில் அடிவானில் இன்னமும் ஒட்டிக்கிடக்கிற ஒரு சிவப்பு ஒளிக்கீற்று ; காற்றும் மேற்குலகத் திசைபக்கமாக வீசிக்கொண்டிருக்க, அதன் கட்டளைக்குப் பணிந்து எங்கள் மரக்கலமும் அதனைத் தொடர்ந்தது. எங்கள் நாவாயைத் தொடர்ந்த ஒளித்தடமொன்றை,  அடர்ந்த கருமை நிற அலைத் திரள்கள் வேகவேகமாக மூடின..  “உரோம் நககரில் இரண்டு முக்கியமான விவகாரங்கள்  மட்டுமே எனக்கென காத்திருக்கின்றன”, என்பதை நினைவுபடுத்திக் கொண்டேன்; ஒன்று  எனக்குப்பின் அரசு வாரிசாக யாரை நியமிப்பதென்கிற தேர்வு,  இது முழு சாம்ராஜ்யத்தையும் பற்றிய பிரச்சினை; மற்றொன்று என்னுடைய  மரணம் ; இது என்னை மட்டுமே சார்ந்த பிரச்சினை.

தொடரும்……

அதிரியன் நினைவுகள்

அதிரியன் நினைவுகள் – 36 அதிரியன் நினைவுகள் – 38

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.