தொழில் நுட்ப அறிவியல் பல விந்தைகளைச் செய்து காட்டுகிறது. மீள மீள செய்யப்படும் ஒரே மாதிரியான செயல்களைச் செய்யும் ரோபோக்கள் தொடங்கி, வரவேற்பாளராகப் பணிபுரியும் பல ரோபோக்களை நாம் பார்த்து வருகிறோம். யூனிட்ரீ (Unitree) என்ற நிறுவனம் உலகின் மிக வேகமான, சக்தி மிகுந்த, கடினமான நிலங்களிலும் திறமையாகச் செயல்படும் மனித ரோபோ ஹெச் 1 (Humanoid Robot H1) வடிவமைத்திருக்கிறார்கள்.
நுண் அறுவை சிகிச்சைக்கு உதவி (Micro Surgery) செய்யும் ரோபோவை சோனி நிறுவனம் வடிவமைத்துள்ளது.

நுண் அறுவை சிகிச்சைகளில் துல்லியமாகச் செயல்படுதல் மிகவும் தேவையான ஒன்று. சோளக் கொண்டையில் இருக்கும் முத்துக்களின் மீது இருக்கும் மெல்லிய ஜவ்வு போன்ற படலத்தை சோனியின் ரோபோ மிகத் துல்லியமாகப் பிரித்து பின்னர் அறுவை சிகிச்சை நடந்த இடத்தையும் திறமையாகத் தையல் போட்டு இணைப்பதையும் காட்டும் காணொலியைப் பார்க்கும் போது ஆச்சர்யத்தில் மூழ்கிவிடுவோம்.
மிகச் சிறிய திசுக்கள். இரத்த நாளங்கள். நரம்புகள் இவைகளில் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு உதவியாக, சோனி நிறுவனம் ‘ நுண் அறுவை சிகிச்சை உதவி ரோபோ’ ஒன்றின் முன்மாதிரியை வெளியிட்டுள்ளது.
அந்த ரோபோவில் என்னென்னக் கருவிகள் உள்ளன?
- மிகச் சிறிதான, தானியங்கிக் கருவி மாற்ற அமைப்பு அதில் உள்ளது; இது, சிகிச்சையின் போது ஏற்படக்கூடிய தடங்கலையும், தாமதங்களையும் போக்குவதால், சிகிச்சையைச் சிறப்பாகச் செய்ய முடியும்.
- மனித விரல்களின் நுனிகளைப் போல, மென்மையாகவும், நுண்மையாகவும் இயங்கும் வண்ணம், எடை குறைந்த, நுட்பமான ஒரு கட்டுப்பாட்டுக் கருவியும் இதில் உள்ளது.
- 1.3 மாதிரி 4கே ஓஎல் ஈடி மைக்ரோ டிஸ்ப்ளே (1.3 Type4K OLED Micro Display) உள்ளதால், எந்தப் பகுதி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோ, அதன் உயர் வரையறை படத்தை(High Definition Image) அறுவை சிகிச்சை நிபுணர்களால் துல்லியமாகப் பார்க்க முடிகிறது; மேலும், அறுவை சிகிச்சை கருவிகள் இயங்கும் விதத்தையும் கண்காணிக்க முடிகிறது. இந்த மைக்ரோ டிஸ்ப்ளேயில் அதிக எண்ணிக்கையில் படத்துணுக்குகள் (Pixels) 0.61 இஞ்ச் திரையில் இடைவெளியின்றி அமைக்கப்பட்டுள்ளன. மின்சக்தி மிகக் குறைந்த அளவில் (0.2 w) தான் தேவைப்படும்; மாறுபாடு(Contrast) 1,00,000:1 என்ற விகிதம்; 96% சீரான தன்மை. இத்தகையதொரு அமைப்பு, மருத்துவர் அணியும் தலைக் கருவிகளிலும், இராணுவத்தினருக்கு இரவுப் பணிகளிலும் மிகவும் பயனாகும்.
இந்த முன்மாதிரி, Aichi மருத்துவ பல்கலையில், ஜப்பானில், பரிசோதிக்கப்பட்டது. இன்னமும் சீராக்க வேண்டிய செயல்கள் உள்ளன; தற்சமயம் விற்பனைக்கு இல்லை. ஆனால், சோனி நிறுவனம் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்: “இதை இன்னமும் மேம்படுத்துவோம். இதன் துல்லியமும், பயன்பாடும், உலகளாவிய நிலையில் மருத்துவத் துறை சந்தித்து வரும் குறைந்த மனித வளத்தை ஈடு செய்யும்.”
உசாவி:
https://mashable.com/video/sony-robot-microsurgery-precision by Teodosia Dobriyanava May 20,2024
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
