அதிரியன் நினைவுகள் – 32

This entry is part 31 of 48 in the series அதிரியன் நினைவுகள்

மூலம் : மார்கெரித் யூர்செனார்

தமிழாக்கம் : நா. கிருஷ்ணா

காதல் கவிதைகள், அவ்வப்போது சூழலுக்கொப்ப எழுதியவை ; பின்னர் புளோட்டினா நினைவாகப் பாடியதெனச் சொந்தப்படைப்புகள் கைவசமிருந்தன, அவற்றைத் திருத்தி எழுதினேன். என்றாவதொரு நாள், யாரேனும் இவைகளையெல்லாம் வாசிக்க விரும்பலாம். ஆயினும் அக்கவிதைகளில் ஆபாசமாக ஒரு பகுதி இருக்க, அதனை அப்படியே அனுமதிக்க முதலில் தயங்கினேன், பின்னர் ஆனது ஆகட்டுமென  தொகுப்பில் சேர்த்தேன். மிகவும் நேர்மையானவர்களெனச் சொல்லப்படும் நம்முடைய மனிதர்கள் இதுபோன்றவற்றையே எழுதுகிறார்கள். அவர்களுக்கு இதொரு விளையாட்டு. அவற்றிலிருந்து என்னுடையவை வேறுப்பட்டிருக்க வேண்டும், அதற்கு உண்மையை ஒளிக்காமல் சொல்வது அவசியம். ஆனால் அத்தகைய முயற்சியிலும்  நாம் தனித்தன்மையைப் பொதுவாகக் கடைப்பிடிப்பதில்லை. இருந்தும், இதுபோன்றவற்றிலிருந்து நம்மை விலக்கிக்கொள்ள மனம் மட்டுமே துணிந்தால் போதாதென்பதும்; வழக்கமான நடைமுறைகளை ஒரு கவிஞன் வெற்றிபெறுவது,  தன் எண்ணங்களை வார்த்தைகளாக வடிப்பது – இவைகளெல்லாம்   என்னுடைய சக்கவர்த்திப் பணிகளைப்போலக் கடுமையான நீண்ட முயற்சியின் தயவு இருந்தாலன்றிச் சாத்தியமில்லை என்பதும் எனக்குப் புரிய ஆரம்பித்தன. என்னைப் பொறுத்தவரை பெரிய எதிர்பார்ப்புகளில்லை, தொழில்முறை அல்லாத கலைஞர்களுக்கென்று  அரிதாகச் சில சலுகைகள இருக்கின்றன, அதற்கு மட்டுமே உரிமை கோருகிறேன்;  இந்தக் குழப்பத்திலிருந்து இரண்டு, மூன்று   வரிகள் தப்பிப்பிழைத்தாலே மிகவும் பெரிய விஷயம். இருப்பினும், அவ்வாறான காலகட்டத்தில் ஓர் இலட்சியப் படைப்பொன்றை வடிப்பதென உட்கார்ந்தேன்;  அது ஒரு பாதி உரை நடை, மறு பாதி கவிதை வடிவம் என்றிருக்கவேண்டுமெனவும்,  இவற்றில் உள்ளார்ந்த கருத்துக்கள், முரண்நகைகள், சொந்த வாழ்க்கையில் அவதானித்த விநோதமான உண்மைகள், தியானங்கள், ஒரு சில கனவுகளென்று அனைத்தையும் சொல்ல நினைத்தேன்; மிக மெல்லிய நூலிழைகள் இவை அனைத்தையும் இணைத்திருக்கும்; மிகவும் கடுமையானதொரு அங்கதவகைப் (Satyricon) படைப்பு. அதில் மாற்றம், மீட்சி என்கிற ஹெராக்கிளைட்டஸ்(Heraclitus) சிந்தனையை எனக்கேற்பப் பொதுவெளிக்குக் கொண்டுவரவேண்டும், என்றெல்லாம் திட்டமிட்டிருந்தேன். ஆனால் அதொரு மிகப்பெரிய திட்டமென்பதை உணர்ந்த பிறகு தள்ளிவைத்தேன். 

அதேவருடத்தில், முன்பு எலியூசிஸில் எனக்குத் தீட்சையளித்த  பூசாரிப் பெண்மணியுடன் பலமுறை « ஆண்ட்டினூஸ் வழிபாட்டுமுறைகள் » ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியாக விவாதித்து விவரங்கள் உறுதிப்படுத்தப்பட்டன;  அப்பெண்மணியின் பெயர் பற்றிய ரகசியம் காக்கப்படவேண்டும் என்பதால், இங்கே அதைக் குறிப்பிட விருப்பமில்லை. எலியூசிஸ் நகரில் மிகச் சிறந்த குறியீடுகளெனக் கருதப்பட்ட  ஒவ்வொன்றும்  தொடர்ந்து எனக்கு அமைதியைப் பருக வாய்ப்பளித்தன. இவ்வுலகு பொருளற்றது ; அப்படியொன்று இருக்குமெனில் எலியூசிஸலன்றி வேறெங்கும் விவேகத்துடனோ, பெருந்தன்மையுடனோ உன்னதமாகவோ அதைக் காண்பதற்கு வாய்ப்பில்லை. இப்பெண்மணியின் பாதிப்பால் டீம்கள்(Deme) என்கிற உட்கோட்டங்கள், வீதிகள், நகர்புறத் தொகுதிகளென்று, பல உட்பிரிவுகளாகப் ஆண்ட்டினோபோலீஸ் நகரைப் பிரித்தேன; ஒருவகையில் கடவுள்கள் உலகத்தைப் பூமியில் காணும் திட்டம் போன்றது. அதேவேளை, இப்புதிய நகரமைப்பை என்னுடைய  சொந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பெனவும் கருதமுடியும்.   இல்லம், அடுக்களை ஆகியவற்றின் தேவதை எசிடியா (Hestia), காமக்களியாட்டத்தின் தேவதை பாக்கஸ்(Bacchus) ; இக்கடவுள்களன்றி விண்ணுலகத் தெய்வங்கள், மண்ணுலகத் தெய்வங்கள்   அத்தனைபேரும் புதிய நகரில் உரியவகையில் நினைவுகூரப்பட்டனர் ; தவிர திராயான், நெர்வா போன்ற பேரரசின் முன்னோர்களுக்கும் இடமளித்தேன்; அவர்களும் இக்குறியீடுகள் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறினர். புளோட்டினவும் இடம்பெற்றார். அதுபோல  திராயான், சகோதரர் மகளான மத்திதியா, டிமீட்டர்(Demeter) தேவதை தோற்றத்தில் இடம் பெற்றார், நகரைக் கட்டமைக்கும் வேளையில் என்னுடைய மனைவியுடன் நல்லுறவைக் கொண்டிருந்ததால் நிர்மாணித்திருந்த தெய்வங்கள் வரிசையில் அவரையும் நிறுத்தினேன்.  ஒரு சில மாதங்களுக்குப் பிறகு, என் சகோதரி போலினா பெயரை ஆண்ட்டினோபோலீஸ் நகரின் புறநகரொன்றிற்கு வைத்தேன்.  செர்வியானஸ் மனைவியுடனான உறவு சண்டையில் முடிந்தது, ஆனால் போலினாவின் மரணம் இந்நினைவு நகரில் சகோதரி என்கிற ஒரு தனித்துவ இடத்தைப் பெறவைத்தது. இழப்பின் வலியுடன் உருவான இந்நகரம் மனிதர்கள் ஒன்று கூடவும், நினைவுகளைப் போற்றவும் உகந்தவொன்றாகவும்;  மனிதர் வாழ்க்கையின் ஆசிர்வதிக்கபட்ட இடமாகவும்; முரண்மாடுகளை களையும் இடமாகவும் ; அதனதன் இடத்தில் ஒவ்வொன்றும் புனிதமானதென்பதை தெரிவிப்பதாவும் இருந்தது.  

நட்சத்திரங்கள் நிரம்பிய இரவுநேரம், அர்ரியனின் இல்லத்தின் ஜன்னலருகே  நின்று, எகிப்திய  சமயப் பூசாரிகள், ஆண்ட்டின்டிஸ் சவப்பெட்டியில் பொறித்த, “பரலோகத்தின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்திருக்கிறான்” என்ற வாக்கியத்தை  எண்ணிப்பார்த்தேன். பரலோகம் நமக்கு கட்டளையிடுவது சாத்தியமா,  நம்மிடையே உள்ள பிற மனிதர்கள் சகிக்கவொண்ணாத நிசப்தத்தை மட்டுமே உணரும்போது, நம்மில் சிறந்தவர்கள் மட்டும் அந்த்க் கட்டளையைக் கேட்கிறார்களென்பது எப்படி?  இருந்தபோதிலும், அதனைப் பெண்பூசாரியும் ஷப்ரியாஸும் நம்பினார்கள் ; அதற்கான காரணத்தை என்னாலும் புரிந்துகொள்ள முடிந்தது . அன்று காலை இறந்த உடலைப் பாதுகாக்க இறுதிக்கிரியை ஊழியர்கள் செய்தவற்றைக் கடைசியாகப் பார்க்கநேர்ந்தபோது, அவனுடைய உள்ளங்கை மரணத்தால் மிருதுவாக மாறியிருந்த உண்மையைத் திரும்ப நினைவுகூர்ந்தேன்; என்னைக் கவலையடையச் செய்த வரிகளின் சுவடுகள் இல்லை; பூசிய மெழுகின் வழவழப்புடனிருக்க, பரலோகத்தின்  ஆணையை நிறைவேற்றியதுபோல இருக்கக்கண்டேன். அன்றியும், நிறைவேற்றப்பட்ட கட்டளையை, உறுதிசெய்த அதன் உன்னதமான நிச்சயத்தன்மை, என்னைச்சுற்றிலும் இருள் மண்டிய இரவாக இருந்தபோதும், வெப்பமின்றி  நட்சத்திரங்ளைப்போல ஒளிர்ந்தது. தெய்வீகத் தராசில் ஆண்ட்டினூஸ் செய்திருந்த தியாகம் ஒருவகையில் எனக்குச்   சாதகமாக இருந்தது என்கிறபோதும் ,  பயங்கரமான இந்த சுய தியாகத்தின் விளைவுகளின் தாக்கம் இன்னமும் கூட சரியாகத் தன் முகத்தைக் காட்டவில்லை;  இதன் நன்மைகள்,  உயிர் வாழ்க்கைக்கு உரியன அல்ல, ஏன் இறவாமைக்குக்கூட இவற்றால் பலன்களில்லை. இந்நிலையில் இவற்றுக்குப் புதிய பெயரொன்றைச் சூட்டவும் துணிவில்லை. சில நேரங்களில், அவ்வபோது  மங்கலானதொரு ஒளியை எனது அடிவானில்  சோர்வுடன் ஒளிரும் ; அதனால்  எனக்கோ, இவ்வுலகிற்கோ எவ்விதப் பலனுமில்லை.  அவன் முடிவு,  என்னைக் காப்பாற்ற என்பதைக் காட்டிலும் சீரழிக்கவே என்கிற எண்ணமே தொடர்ந்து என்னிடமிருந்தது.

ஏறக்குறைய இத்தருணத்திலேதான், கிறித்துவர்களின் பேராயர்  பிஷப் குவாதுராட்டுஸ்(Quadratus), தமது சமய நம்பிக்கைக்கு ஆதரவாகப் பிரசங்கமொன்றை எனக்கு அனுப்பினார். சக்கரவர்த்தி திராயான் ஆட்சிகாலத்தில் மிகச்சிறப்பான  காலகட்டத்தில் சிறுபான்மை வழிபாட்டுப் பிரிவினரிடம் கறாரான நடுநிலைமை கடைப்பிக்கப்பட்டது, எனது கொள்கையும் அத்தகையதே; குடிமகன்கள் அனைவருக்கும் பாதுகாப்பினை அளிக்கின்ற வகையில் சட்டம் பரவலாக்கப்பட்டிருப்பதை மாகாண ஆளுனர்களுக்கு நினவூட்டியதோடு, அவர்களிடம்,  ஆதாரமின்றிக் கிறித்துவச் சமயத்தின்மீது குற்றம் சுமத்தும் பழிகாரர்களைத் தண்டிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டேன். ஆனால் மதவெறியர்களிடம் காட்டப்படும் எந்தவொரு சகிப்புத்தன்மையும், மறுகணம் அவர்கள் பிரச்சினை மீதான அனுதாபமாக எடுத்துக்கொள்ளப் படுகிறது; குவாதுராட்டுஸிடம் என்னைக் கிறித்துவனாக மதமாற்றம் செய்யும்  எண்ணத்தைக் கற்பனை செய்துபார்க்க இயலாத நிலை.   ஆயினும், தமது கோட்பாட்டின் சிறப்பையும், குறிப்பாக அரசுக்கு அதன் பாதிப்பில்லாத தன்மையையும் நிரூபிக்க விரும்பினார். அவருடைய படைப்பையும் வாசித்திருந்தேன், அன்றியும் ஃபிளெகனைக்கொண்டு அச்சமய வழிமுறைக்கு அடித்தளமிட்ட இளம்வயது தீர்க்கதரிசி இயேசுவின் உயிர்வாழ்க்கையையும், சுமார் ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு சகிப்புத்தன்மையற்ற யூதர்களால் பாதிப்பிற்குள்ளாகி அவர் மரணித்த தகவல்களையும்  திரட்ட விரும்பினேன். அந்த இளம்யோகி விட்டுச்சென்ற போதனைகள், அவருடைய சீடர்கள் சிற்சிலசமயங்களில் ஒப்பிடுவதைப்போல ஓரளவிற்கு ஓஃபியஸ்(Orphée) போதனைகளுக்கு நிகரானவைகளே. ஒப்பீடற்ற, தட்டையான குவாதுராட்டுஸ் உரைநடை ;    வசீகரத்துடன் நெகிழவைக்கும் அதில் காணும் எளிய மக்களின் நற்பண்புகள், அவர்களுடைய இனிமைப்பண்பு,  கபடமின்மை, ஒருவருக்கொருவர் அவர்கள் கொண்டிருக்கிற பற்றுதல் ஆகியவற்றைச் சுவைக்காமல் இருக்க முடிந்ததில்லை.

 இவை அனைத்தும், நகரங்கள் மற்றும் நெரிசலான புறநகர்ப் பகுதிகளில் நமது தெய்வங்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அடிமைகளும் ஏழைகளும் அமைத்துக்கொண்ட சகோதரத்துவத்தைப் போல இருந்தன; ஒருவருக்கொருவர் உதவியாய் இருக்கிற இதுபோன்ற சிறிய எண்ணிக்கையிலான  மனித சமூகங்கள், மானுடத்தின் துயரம், நம்பிக்கை விஷயங்களில் சற்றுக் கடுமையாகவும், பாராமுகமாகவும் இருக்கப்பழகிய உலகில்  பாவப்பட்ட மக்களுக்கு ஆறுதலோடு, ஆதரவினையும் வழங்கும் களங்களாக இருக்கின்றன. இதுபோன்றவற்றில் ஒரு சில அபாயங்களும்  இருக்க, அவற்றை உணரக்கூடியவனாகவும் இருந்தேன். உதாரணத்திற்குக் குழந்தைகள், அடிமைகளின் நற்பண்புகளை ஒருபககம் கொண்டாடுகிறபோது, மறுபக்கம் நம்மிடமுள்ள துணிவையும், தெளிந்தசிந்தனையையும் இழக்கின்ற நிலைமை. தமக்குச் சொந்தமற்ற வாழ்க்கை மற்றும் சிந்தனை வடிவங்களுக்கு முன்பாக, பிறமனிதர்களினும் பார்க்கத் தம்மை உயரத்திக் காணும் இறுமாப்பையும்;  விரும்பியே கண்களை இறுகமூடித் தமக்கென ஒரு பார்வையை வகுத்துக்கொள்ளும் குணத்தையும், சாதுவான, பூசிமெழுகிய  கரவின்மையின் கீழ் இக்குறுகிய சமயப்பிரிவினரிடம் நிலவிய கடுமையான மூர்க்கத்தையும் என்னால் பார்க்க முடிந்தது.  குவாதுராட்டுஸின் உண்மையைப்போல தோற்றமளிக்கிற  வாதங்களிலும், நமது ஞானிகளின் எழுத்துக்களிலிருந்து முறையற்றுக் கடன் வாங்கிய தத்துவத் துணுக்குகளிலும் விரைவாக எனக்குச் சோர்வு தட்டியது. ஷப்ரியாஸ் வழக்கம்போல கடவுள்களுக்குச் செலுத்தப்பட வேண்டிய சரியான வழிபாட்டைப் பற்றி எப்போதும் அக்கறை கொண்டிருக்கிறவர் எனபதால்,  பெரிய நகரங்களில்  உள்ள மக்களிடையே சிறு சிறு சமயப் பிரிவுகளில் ஏற்படும்  வளர்ச்சி அவரைக் கவலை கொள்ள வைத்தது; இந்நிலையில் மனிதர் கழுத்தில் எவ்விதக் கோட்பாட்டு நுகத்தடியையும் வைக்காத, அதேவேளை இயற்கை போலவே பலவிதமான விளக்கங்களுக்கு இடமளித்து, எளிமையான இதயங்கள் விரும்புமெனில் மிகவும் உன்னதமானதொரு நெறியை அனுமதித்து, வெகு சனத்தைக் கடுமையான விதிமுறைகளுக்கு உட்படுத்தி, அதனூடாக அவர்களிடத்தில் உடனடியாக ஒருவிதக் கபடத்தையும் கட்டுப்பாட்டையும் விதைக்கக் காரணமாகாத நம்முடைய மிகவும் பழமையான சமயங்கள் நலன் குறித்து அவருக்குக் கவலைகளிருந்தன.  அர்ரியனுக்கு இக்கருத்துக்களில் உடன்பாடிருந்தது.  « தன்னைப் போலவே பிறரையும் நேசிப்பது » என்கிற கட்டளையைப் பற்றி ஒரு மாலை முழுவதும் அவருடன் விவாதித்தேன்; சாதாரண மனிதனால் உண்மையாகக் கீழ்ப்படிவதென்பது, மனித இயல்புக்கு மிகவும் முரணானது. அதேவேளை தத்துவவாதிகளுக்கும் இது முழுமையாகப் பொருந்தக்கூடியதல்ல, காரணம் அவர்கள் குறிப்பாகத் தங்களைத் தாங்களே நேசிக்கும் வகையினரல்லர்.

அனேக விடயங்களில், நம்முடைய தத்துவவாதிகளின் கருத்துகள், வரம்பிற்கு உட்பட்டதாகவே இருந்தன ; போதாதற்குக் குழப்பும் வகையிலும் மலட்டுத்தன்மையுடனும் இருந்தனவென்பதும் எனது கருத்து. நமது அறிவுசார் பயிற்சிகளில் முக்கால்பங்கு சுவரில்லா சித்திரங்கள்; அதிகரித்து வரும் இத்தகைய வெறுமைக்குக்  காரணம் அறிவுத்திறன் குறைந்துவருவதாலா அல்லது மனிதர் பண்பில் நிகழும் வீழ்ச்சியா என்கிற கேள்வியும் எனக்குள் இருந்தது. காரணம் எதுவாயினும், சராசரி மனிதமனதோடு ஏறக்குறைய அது போகுமிடமெல்லாம் அதனுடன் துணையாக வருவது ஓர் இழிவான ஆத்மா. ஹீரோட்ஸ்   ஆட்டிகஸிடம் (Herode Atticus) ஆசியா மைனரைச் சேர்ந்த ட்ரோடு(Troad)பிரதேசத்தில் ஒரு கால்வாய்ப் பாலத்தின் கட்டுமானப் பணியை மேற்பார்வையிட கேட்டுக்கொண்டேன்;  அதைக் காரணமாக வைத்து பொதுநிதியை வெட்கக்கேடான வகையில் வீணடித்தார்; உரிய கணக்கைக்கேட்டபோது, நிதிப்பற்றாகுறையச் சரிகட்டப் போதுமான பணம் தம்மிடம் இருக்கிறதென்று சிறிதும் வெட்கமின்றிப் பதிலிறுத்தார்; இவ்வகையான செல்வமேகூட ஒருவகையில் அபவாதத்திற்குரியதுதான். அண்மையில் இறந்துபோன அவரது தந்தை, ஏதன்ஸ் குடிமக்களுக்குத் தமது செல்வத்தை வினியோகிக்கும் வகையில்  நன்கொடைகளை அதிகரித்து  ஆவணம் செய்திருந்தார், ஒருவகையில் அது தமது மகனை வாரிசுரிமையிலிருந்து விலக்கிவைப்பதற்கு அவர் செய்த தந்திரமான ஏற்பாடு, ஆனால் தத்துவவாதியான மகன் ஹீரோட்ஸ் தந்தையின் விருப்புறுதிக் கொடையை ஏதன்ஸ் குடிகளுக்குத் தரமறுத்ததால்  எழுந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. ஸ்மிர்னா(Smyrne) நகரில், தத்துவவாதியும் எனது முன்னாள் நெருங்கிய நண்பருமான போலமான்(Polemon) என்பவர், அவருடைய விருந்தோம்பலை நம்பி, இல்லம் தேடிவந்த உரோமானிய செனட்டர் குழுவினரைத் திருப்பி அனுப்பினார். உன்னதமான மனிதரென்று பெயரெடுத்த உனது  தந்தை அன்ட்டோனினஸ் (Antonin) கோபமுற்றார்;  அரசுப் பிரதிநிதி, நியாயவான், மெய்யியலாளர் என்றறியப்பட்ட அவர் இப்பிரச்சினையில் பொறுமையின்றி  மோதலில் இறங்கினார் ; எதிர்கால உரோமானிய சக்கரவர்த்தி மட்டுமல்ல, தவிர கிரேக்க தத்துவவாதிகளிலும் ஒருவர் என்கிற நிலையில் இப்படியான மோதலில் இறங்கியது, அவருடைய தகுதிக்குக் கூடாதது.  இன்னொருவர் ஃபேவரினஸ்(Favorinus), பணத்தையும் கௌரவத்தையும் நான் இவருக்கு வாரி வழங்கியிருக்கிறேன், இருந்தும் பேராசை பிடித்த இந்தக் குள்ள ஆசாமி போகின்ற இடங்களிலெல்லாம் மனதிற்பட்டதைக் கூறப்போக,  அதற்குண்டானை தண்டத்தை நான் செலுத்த வேண்டியிருந்தது. அம்மனிதரைப் பொறுத்தவரை, தத்துவமோதல்களின்போது நான் கர்வம்கொண்ட மகிழ்ச்சிக்கும்,  அம்மோதல்களில் இறுதிவார்த்தையைச் சக்கரவர்த்தியாகிய எனக்கு, அவர் விட்டுக் கொடுப்பதற்கும்,  என்னுடைய வாதங்கள் அனைத்திலும், முப்பது படைப்பிரிவுகளைத் தலைமையேற்று நடத்தியவன், என நான் முன்வைத்த வாதமே காரணம், செல்லுபடியானதும் அதொன்றுதான்.  ஒரு வகையில் அவர கருத்து,  சரியான புரிதலின்றி அனுமானத்தின்பேரில் என்னைத் தண்டித்தது எனலாம்;  அதொரு கோழைத்தனமான கர்வம். பரந்த ஞானமற்ற அவர்களுடைய தொழில் இரகசியத்தைப் பிறர் அறியநேரும்போது, எல்லாம் தெரிந்த ஆசாமிகளாகப் பாவனை செய்பவர்கள் எரிச்சலுறுதல் இயல்பு; இத்தகைய ஞானம் எதைப்பற்றியும் சாதுர்யமாக கருத்தினைக்கூற அவர்களை அனுமதிக்கின்றது. கவிஞர்கள் எசியோடு(Hesiod), என்னியஸ்(Ennius) ஆகியோரின் படைப்புக்ள் இதுநாள்வரை மோசமாக  அலட்சியப்படுத்தப்பட்டு வந்தன ; அவற்றைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்க ஏற்பாடுசெய்தேன்.   இப்படியான வழக்கிற்குப் பழகிய என் மனம் உடனடியாகக் கவிஞர்கள் ஹோமரையும்,  வேர்ஜிலையும்(Virgil) அவர்களுடைய   சிம்மாசனத்திலிருந்து அகற்ற விரும்பினேன் ; இதில் பின்னவரின் படைப்பை அடிக்கடி நான் கையாள்வதுண்டு என்கிறபோதும்,  இதுபோன்ற மனிதர்களை வைத்துக்கொண்டு நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை.

அர்ரியன் எவ்வளவோ மேல். அவரிடம் விவாதிக்காத பிரச்சினைகளே இல்லை. பித்தினியா இளைஞனைக்குறித்து அவரிடம் திகைப்பில் ஆழ்த்தும், காத்திரமான மறக்கமுடியாத  சம்பவமொன்றுண்டு.  கடந்த காலத்திய, பரஸ்பர அன்புசெலுத்திய பெரும் உறவுகள் வரிசையில் அவர் சாட்சியாகவிருந்த எங்கள் காதலுக்கும் இடமளித்திருந்தார் ; அதற்காக அவருக்கு மிகவும் நன்றிக் கடன்பட்டிருந்தேன். அவ்வப்போது அது குறித்து இருவரும் பேசுவதுண்டு; இவ்விஷயத்தில் எவ்விதமான பொய்க்கும் இடமில்லை என்கிறபோதும், சிற்சில வேளைகளில் எங்கள் உரையாடலில் ஒன்றிரண்டு பொய்கள் கலப்பதுண்டு. உன்னதத்தின்பேரால் உண்மையை ஒளிக்க வேண்டியிருந்தது.   ஏறக்குறைய இதே அளவிற்கு ஷப்ரியாஸிடம் ஏமாற்றம் அடைந்திருந்தேன். ஒரு வயதான அடிமை, ஓர் இளம் எஜமானிடம் காட்டும் குருட்டு விசுவாசத்தை ஆண்ட்டினூஸிடம் அவர் வைத்திருந்தார் ; ஆனால், புதிய சமயவழிபாடு, தெய்வத்திடம் ஏற்பட்டிருந்த அதீத ஈடுபாட்டினால், உயிருள்ள ஜீவன் பற்றிய கிட்டத்தட்ட எல்லா நினைவுகளையும் மறந்தவர்போல அவர் நடந்துகொண்டார். என்னுடைய  கருப்பர் யூஃபோரியனைப் பொறுத்தவரை  இவ்விவகாரங்களைக் குறைந்தபட்சம் அருகிலிருந்து   கவனித்த மனிதர் எனலாம். அர்ரியன், ஷப்ரியாஸ் இருவருமே எனக்கு மிகவும் பிடித்தவர்கள், இந்த நேர்மையான மனிதர்களோடு ஒப்பிடும்போது  நான் எந்த வகையிலும் உயர்ந்தவன் அல்ல என்பதைப் புரிந்துவைத்திருந்தேன், ஆனால் சில நேரங்களில் விழிகளை மூடாதிருக்க முயற்சிக்கும்  ஒரே மனிதனாக நான்மட்டும் இருப்பதைப்போன்ற உணர்வு.

தொடரும்……

அதிரியன் நினைவுகள்

அதிரியன் நினைவுகள் -31 அதிரியன் நினைவுகள் – 33

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.