குறுங்கவிதைகள்- கு.அழகர்சாமி

(1)

அறைக்குள்
மின்விசிறிக் காற்றில்
சுழன்று மிதக்கிற ஒரு
சிறகு
சன்னலின் வழியே வெளியேறி
தன் பறவையின் நினைவில்,
முன்பு பறந்தது போல்
பறந்து போகிறது
திசைவெளியில்.


(2)

ஒடிக்க முடிந்தால்
வானவில்லை ஒடி
துண்டிக்க முடிந்தால்
உன் நிழலைத்
துண்டி-
சந்திக்க முடிந்தால்
உன்னை நீ
சந்தி-


(3)

தொடங்குங் கால்
ஊர்ந்து ஊர்ந்து வருவது போல்
வருகிற பாதை
முடியுங் கால்
முதலிலிருந்து
தலைதெறிக்க
ஓடி வருவது போல்
தெரிகிறதே
எனக்கு!


(4)
ஒரு சொல் முன்
மண்டியிட வேண்டியிருக்கிறது முதலில்
ஓர் அர்த்தத்தின் முன்
நிமிர்ந்து நிற்கும் முன்-


(5)

அப்பால்-
அப்பால் தான் –
எங்கு போய்
முட்டி மோதுவது?


(6)

முத்தமிடுவது
உதட்டாலா?
எப்படி நம்புவது
என் உதட்டால்
என்னை நான்
முத்தமிட முடியாத போது?
உன்னை நான்
முத்தமிட்ட போது
என்ன நீ உணர்ந்தாய்?
என்னை நீ
உணர்ந்திருந்தால்
என் முத்தம் உண்மை.


(7)

மற்ற தெருக்கள் முறையிட்டும்
ஒரு தெரு வழியே தான்
நிதம் நடை செல்கிறேன்-
ஆனால்
ஒருவர் கூட
இன்னும்
சிநேகிதமாகாமல்-


(8)

பூவா தலையா
பூமியைச் சுண்டிப் போட?
எப்போது நடக்கும்
ஊழிக் கூத்து?


(9)

நனவு
தன் கனவில்
என்னைக்
கனவு
காணும் வரை
வாழ்வேன்
நானென்று
கனவு காணுகிறேன்
என் கனவில்
நனவை
நான்.


(10)

வெயில் பொத்தலிட்ட
நிழற் பரப்பு போலில்லாமல்
அடர் நிழல் பரப்பி
இலைகள் அடர்ந்திருக்கும்
புங்க மரத்தின் கீழ்
ஒதுங்கி
நிழற்குளிர்ச்சியை அனுபவிக்க-
வெளியில் அனல் அடிக்கிற
உச்சி வெயிலும்
விரும்பத்தக்கதாகவே தோன்றும்
எனக்கு.


(11)

ஒன்றும் பெரிதாய்
’வெட்டி முறிக்க’வில்லையாயினும்
மகிழ்வுறுகிறேன் –
மகிழ்வுறக் கூடவா
முடியாதென்று?


(12)
ஒரு பனித்துளி
உள்ளுணரும் வெம்மை-
விரலால் தொட
எப்படி புரியும்?


(13)

பேசிக் கண்டதெல்லாம்-
பேசாமலிருந்திருந்தால்
ஒரு நட்டமுமில்லை.


(14)

ஏன் என் பழம் நழவி
உன் விஷத்தில்
விழுந்தது?


(15)

என் அறைக்குள்
சுற்றிக் கொண்டே இருக்கும்
சிற்றெறும்பு
சுற்றிப் பார்த்த அளவுக்கு கூட
சுற்றிப் பார்த்திருப்பேனா
என் அறையை நான்
என்பது
சந்தேகமே!


(16)

விண்ணுலகிலிருந்து
இறங்குவது போல்
ஒய்யாரமாய்
சிறகுகள் விரித்து
உச்சி வெயிலில்
ஒற்றை வெண் நாரை
இறங்குகிறது-
அவாவும்
தன் நிழலைச் சேர
பச்சை நாற்று வயலில்
சேரும் முன் –


(17)

பறந்த நிலையிலேயே
தட்டான் பூச்சி
செத்துக் கிடக்கிறது தரையில்-
வானத்திலேயே செத்துக் கிடக்கும்
சாகசத்தை நிகழ்த்தி விட்டிருக்க
முடியும் அது
நிலம் சாரா
சுத்த வெளியில்
அது பறக்க
சித்தித்திருந்தால்-


(18)
வேர் அடியோடி
இறந்த காலத்தில்-
தண்டு நிலைநின்று
நிகழ்காலத்தில்-
கிளைகள் திசை நோக்கி
எதிர்காலத்தில்-
உருவம் கொண்டதோ காலம்
தன்னை அனுமதித்து
விருட்சத்தில்.


(19)

குழந்தை பேசும்
மழலை-
குறிப்பிட்ட அர்த்தம்
கற்பித்து மகிழும்
அம்மாவைக் கடந்து
எட்ட செவிமடுக்கும்
என்னைத் தாவிச் சேர்கிறது
பூரித்து-
மழலையை
மழலையாகவே
நான் இரசிப்பது
பார்த்து.


(20)

இருந்தும்
இல்லை போல்
இருப்பதை விட
இறந்து
இல்லையாகினும்
இல்லையாகவே
இருப்பதாலே
இறத்தல்
தகும்.


Discover more from சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.