சிந்தனையின் சுருக்கமான வரலாறு

புத்தகம் அறிவோம்: வாழ்வதற்கான ஒரு தத்துவ வழிகாட்டி

அறிமுகம்

 “சிந்தனையின் சுருக்கமான வரலாறு: வாழ்வதற்கான ஒரு தத்துவ வழிகாட்டி(A Brief History of Thought: A Philosophical Guide to Living (Learning to Live))” என்ற இந்த புத்தகத்தினை சமகால ப்ரெஞ்ச் தத்துவ ஆசிரியர் லூக் பெரி எழுதினார். 2011ம் ஆண்டு வெளியானது. ப்ரெஞ்ச் மொழியில் வந்த இந்த புத்தகத்தினை ஆங்கிலத்தில் தியோ கபே மொழிப்பெயர்த்தார்.  இந்த புத்தகம் மேலை தத்துவ மரபின் வரலாற்றை சுருக்கமாக பேசுகின்றது. வரலாற்றினை காலக்கோட்டில் பொருத்தி நமக்கு வழங்குகின்றது.  தத்துவவாதிகளின் வரலாற்றினை பேசுவதில்லை. கிரேக்க தத்துவ பள்ளிகளில் தொடங்கி கிறிஸ்தவ தத்துவ மரபு, நவீனத்துவ மரபு, பின் நவீனத்துவ மரபு , அதை கடந்த சம கால தத்துவ தேவைகள் என அனைத்தையும் இணைக்கின்றது.

பொதுவாக மேலை மரபின் தத்துவத்தினை பேசும் புத்தகங்கள் கடினமான மொழியில் உள்ளடக்கத்தினை கொண்டிருக்கும். பெரும் தத்துவவியலாளர்களை,அவர்கள் வாழ்வினை, அவர்களது பல புத்தகங்களை, தத்துவ சொற்களை அடுக்கிக் கொண்டே போவார்கள். ஒரு உயர் கல்வி நிறுவனத்தில் முதுகலை பட்டப் படிப்பு அளவில் தத்துவ அறிமுகம் உள்ளவருக்கு, வாழ்நாளில் தத்துவத்தினை படிப்பாக கொண்டவருக்கு அந்த அடுக்கினை கொண்டு பெரும் சித்திரம் உருவாக்கி கொள்ள முடியும். ஓவ்வொரு தத்துவவாதியும் தன் வாழ்நாளை செலவிட்டு உருவாக்கிய தத்துவத்தினை, அதன் பல நூறு ஆண்டுகளில் அது உருவாக்கிய விவாதத்தினை, தாக்கத்தினை புரிந்துக் கொள்ள, ஊறி திளைக்க நம் வாழ்வில் நேரமும், இடமும் நாம் கொடுத்தால்தானே அதை தொட முடியும். 

ஆனால் உயர்நிலை பள்ளி அளவில், இளங்கலை கல்லூரி வாசிப்பில் மேலை மரபில் பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்த தத்துவத்தின் கோட்டுச் சித்திரத்தினை, தத்துவம் உருவாக்கிய முக்கிய விவாதங்களை, அந்த விவாதங்கள் உருவாக்கிய பயன்பாடுகளை ஒரு புத்தகத்தில், ஒரு வாசிப்பில் புரிந்துக் கொள்ளச் சொன்னால் தடுமாறவே வாய்ப்பு அதிகம். வாழ்நாளை செலவிட, முழு நேர வாழ்வினை செலவிட  இடமின்றி அதே நேரம் தத்துவம் மீது ஆர்வம் இருந்தால் என்ன செய்வது?  அப்படி ஆர்வம் உள்ளவருக்கு இந்த புத்தகம் பயன்படும்.

புத்தகச் சுருக்கம்

இந்த நூலாசிரியரின் சொல்லில் இந்த புத்தகம் சொல்ல வருவதன் சாராம்சம் இனி முன் வைக்கப்படுகின்றது.

மேலை மரபில் பிலோசாபி என்பது philo + sophia என்ற இரண்டு வார்த்தைகளின் தொகுப்பு என இந்நூலின் ஆசிரியர் துவங்குகின்றார். பிலோ என்றால் அன்பு(love), சோபியா என்றால் ஞானம்(wisdom). பிலாசபி என்பது ஞானத்தின் மீதான அன்பு என அர்த்தப்படுகின்றது. (இந்த பரிந்துரை முழுதும் பிலாசபி அல்லது ஞானத்தின் மீதான அன்பு என்பதை தத்துவம் என்ற சொல் சுட்டுகின்றது. )

புத்தக அறிமுகத்தில் நவீன உலகின் மிகவும் பொதுவான தவறுகளில் ஒன்று, தத்துவத்தை “விமர்சன தன்மை கொண்ட சிந்தனை” என எளிய விஷயமாகக் தரம் குறைத்து மதிப்பிடுவது என்கிறார்.

இந்த நூலாசிரியர் கருத்துப்படி மனிதர்கள், கடவுள் அல்ல, அவர்களுக்கு மரணம் உண்டு, அல்லது, தத்துவஞானிகளின் சொற்களைப் பயன்படுத்தி சொன்னால், “வரையறுக்கப்பட்ட இருப்பு”  கொண்டவர்கள். மனிதனுக்கு இடம் , நேரம் என்னும் வரையறைகள் உண்டு. 

மானுடர், விலங்குகளைப் போலல்லாமல், இந்த வரையறைகளை அறிந்திருக்கின்றார்கள். தான்  இறந்து விடுவேன் என்றும், தன்னுடைய அன்புக்குரியவர்கள் இறந்துவிடுவார்கள் என்பதையும் மானுடம் அறியும்.  இந்த அறிதலால் இறப்பு தவிர்க்கப்பட முடியாதது என்பதை பற்றி மானுடம் சிந்திக்க ஆரம்பித்தது. அந்த சிந்தனை வளர்ச்சியில் மதமும் தத்துவமும் மீளமுடியாத இந்த பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்க ஆரம்பித்தன.  மதம் பூரணமாக விசுவாசம் கொண்டு கீழ்படியக் கூடிய குணம் உள்ளவருக்கு தன்னுடைய தீர்வை வழங்குகிறது. வேறு குணங்களை விட கீழ்படிதல் மதத்துக்கு முக்கியம், அச்சாணி.  காரண காரியம் அலசுதல் மூலமும், அறிவினை நோக்கிய பகுத்தறிவின் வழியேயும் மதம் தீர்வை வழங்கவில்லை. இதற்கு முற்றிலும் மாறாக தத்துவம் பகுத்தறிவை ஆதரிக்கிறது. 

 நூலாசிரியர்  மேலை தத்துவ மரபில் இருந்து பல மேற்கோள்கள் வைக்கின்றார்.  கிரேக்க தத்துவ மேதை எபிகுர்கஸ்(Epicurus) “மரணத்திற்கு அஞ்சக்கூடாது(death is not to be feared)” என்ற குறிக்கோளை சொல்லி “தத்துவம் ஆன்மாவிற்கு மருந்து(medicine for the soul)” என்று கூறினார். பிரெஞ்ச் தத்துவ மேதையான மாண்டெய்ன்(Montaigne)  சொல்லும் பொழுது “தத்துவம் என்பது எப்படி இறப்பது என்பதைக் கற்றுக்கொள்வது(to philosophize is to learn how to die)”  என சொல்கின்றார். தத்துவமேதை ஸ்பினோசா(Spinoza) “புத்திசாலி ஒரு முட்டாளை விட குறைவாக இறக்கிறான்(wise man dies less than a fool)”  என சொல்கின்றார். தத்துவ மேதை காண்ட்(Kant)  “எதை நம்புவதற்கு நாம் அனுமதிக்கப்படுகிறோம்(what are we permitted to hope for)”  என வாழ்வினை குறித்து கேள்வி எழுப்புகின்றார்.

இதன் மூலம் இந்த நூலாசிரியர் தத்துவம் சாவினை நோக்கிய கவலையை,பதட்டத்தினை அறிவின் மூலம் வெல்ல உதவுகின்றது என ஆசிரியர் சொல்கின்றார்.

இவ்வாசிரியர்  1) கோட்பாடு (Theory)  2) நெறிமுறைகள் (Ethics)  3) மீட்சி (Wisdom or Salvation) என்ற முப்பரிமாண கருவி வழியே நமக்கு மொத்த மேலை மரபின் தத்துவ வரலாற்றையும் காட்டுகின்றார்.

கோட்பாடு (Theory) என்பது தத்துவத்தின் ஒரு பரிமாணம்.  கிரேக்க மொழியில் தியோன் என்றால் தெய்வீகமானது. ஓரா என்றால் பார்ப்பது. எனவே to theion or ta theia ora என்றால் “நான் தெய்வீக விஷயங்களைப் பார்க்கிறேன்”. உலகத்தைப் பற்றிய உள்ளார்ந்த விஷயம் எது, எது மிகவும் உண்மையானது, எது மிக முக்கியமானது, எது மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது என வரையறுக்கும் நிலை. இந்நிலையில் நாம் இருக்கும் உலகினை பற்றி ஒரு உள்ளுணர்வு அல்லது கருத்தினை உருவாக்கிக் கொள்கின்றோம் என புத்தக ஆசிரியர் சொல்கின்றார்.

உதாரணத்துக்கு இது அன்பால் ஆனதா, பகையால் அமைந்ததா, ஒழுங்கினால் ஆனதா, ஓழுங்கற்றதால் ஆனதா, புரிந்துக் கொள்ளக் கூடியதா, புத்திக்கு அப்பாற் பட்டதா என பல விளக்கங்கள் சாத்தியம். அதை தியரி விளக்குகின்றது. மேலும் தியரி விளங்கிக் கொள்வதற்கான சாதனங்கள் எவையென்றும் வரையறுத்து சொல்கின்றது.

அடுத்த பரிமாணம நடத்தையையும்,பழக்க வழக்கத்தினையும் சொல்லும் நெறிமுறைகள்(Ethics), இது மேலே சொன்ன கோட்பாட்டினை வாழும் முறை என ஆசிரியர் சொல்கின்றார். எத்திக்ஸ் கிரேக்கத்தில் இருந்து வரும் வார்த்தை, மாரல் என்பது லத்தீனில் இருந்து வரும் வார்த்தை. இரண்டு வார்த்தைகளும் நடத்தை, பழக்க வழக்கம் என்ற வேர்ச்சொல்லை கொண்டவை. இவ்வாசிரியர் இரண்டும் ஓன்றுதான் என சொல்கின்றார். 

அடுத்த பரிமாணம் இரட்சிப்பு(Wisdom or Salvation)  என்கின்றார். இது கோட்பாடினை வாழ்க்கையாகி கொள்வதால் என்ன கிடைக்கின்றது என சொல்வது.

இவ்வாசிரியர் பல தத்துவத் தரப்புகளின் ஆசிரியர்களின் மேற்கோள்களை விளக்கங்களுக்கு பயன்படுத்துகின்றார். மேற்கோள்கள் வாசிப்பு வேகத்தினை தடை செய்தாலும், அவை தத்துவக் கல்விக்கான  பகுப்பாய்வு மனப்பான்மைக்கு அத்தியாவசியம் என சொல்லியிருக்கின்றார். 

கிரேக்க தத்துவம் குறித்த அத்தியாயத்தின் தலைப்பே கிரேக்க அதிசயம் என்பதாகும். கிரேக்க தத்துவ மரபில் ஸ்டோயிசம் என்பதை விரிவாக பேசுகின்றார். ஸ்டோவா என்றால் கிரேக்க மொழியில் நம்மூர் தாழ்வாரம். கிரேக்க ஞானி ஜீனோ தன் வீட்டு தாழ்வாரத்தில் துவங்கிய தத்துவம் எனலாம் என்கின்றார். 

ஸ்டோயிசிசம், உலகின் சாரம்சம் என்பது பிரபஞ்சத்தின் ஒத்திசைவு, ஒழுங்கு என்கின்றது. இதைத்தான் கிரேக்க பெயர் பிரபஞ்சம் (Kosmos)” குறிக்கிறது. கிரேக்கம் குறிப்பிடும் இந்த ஒழுங்கு அல்லது பிரபஞ்சம் நம் கண் முன் உள்ள பொருள்வடிவமான பிரபஞ்சத்திற்கு அப்பால் வேறு எங்கோ ஒரு இடத்தில் இல்லை, இதன் உருவாக்கத்திற்கு முன்பு இருந்தது இல்லை, மேலும் அதன் உருவாக்கத்திற்கு பொறுப்பானதும் இல்லை. 

ஸ்டோயிசிசம் பொறுத்தவரை, பிரபஞ்ச அமைப்பு தெய்வீகமானது மட்டுமல்ல, ஒரு குறையும் அற்றது, அதை தாண்டி அவர்கள் லோகோஸ்(Logos)  என்று அழைப்பதற்கு இணங்க, பிரபஞ்சம் அற்புதமான ஒழுங்கை துல்லியமாக வெளிப்படுத்தும் ‘தர்க்கரீதியானது’.

ஸ்டோயிசிசத்தில் சொல்லப்படும் தெய்வீகம் இந்த உலகத்தில் இங்கேயே இருக்க கூடியது, அதே நேரம் ஒரு தனிப்பட்ட உயிரை விட மிகவும் மேலானது , தனிப்பட்ட உயிருக்கு அப்பாற்பட்டது. ஒரே நேரம் இங்கிருப்பதும், அதே நேரம் எல்லை கடந்து இருப்பதும்( Immanent and Transcendent) என சொல்கின்றார். இந்த தெய்வீகம் முழு வடிவில் , முழு அளவில் ஏற்கனவே இங்கு இருப்பதால்,இதை மனிதன் தேடல் இருப்பின் கண்டு அடையலாம். இதை உருவாக்க மனிதனால் இயலாது.

எபிகுரஸ் ஸ்டோயிசிச பள்ளி தவிர்த்து பெரும்பாலான பிற ஸ்டோயிக் பள்ளிகள் கிட்டதட்ட இதே கோட்பாட்டைத்தான் பயன்படுத்தின என ஆசிரியர் சொல்கின்றார்.

ஸ்டோயிசிச நெறிமுறைகள் பிரபஞ்சத்தை மையமாக்கி அதன் ஓழுங்கு, ஒத்திசைவுக்கு ஏற்ப மனிதன் தன் அறத்தினை சரிப்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கிறது என்று வரையறுக்கிறது. நல்லது என்பது தனிமனிதனின் விருப்பு, வெறுப்புக்கு அப்பால் உள்ளது. அது பிரஞ்ச ஒழுங்கில், ஒத்திசைவில் தீர்மானிக்கபபடுகின்றது. தீயது என்பதும் விருப்பு, வெறுப்புக்கு அப்பால் உள்ளது. அது பிரஞ்ச ஒழுங்கில், ஒத்திசைவில் தீர்மானிக்கபபடுகின்றது. கிட்டதட்ட சமகால சூழியலாளர்கள் சொல்வதை போல ஸ்டோயிச நெறிமுறை இருக்கும் என்பதை ஜெர்மானிய தத்துவவாதியான ஹான்ஸ் ஜோனாஸ் அவர்களின் கூற்றான “ஒரு மனிதனின் இறுதி இலக்கு இயற்கையை தன் வீடாக்கி கொள்வதில் உள்ளது(the ends of a man are at home in nature)” என்பதை  மேற்கோள் காட்டி ஆசிரியர் சொல்கின்றார்.

ஸ்டோயிசிச பார்வையில் வான் மண்டலம் பூரணமானது, மாற்றங்களுக்கு அப்பாற்பட்ட பொருளால் ஆனது. மாறாக புவியில் உள்ள பொருள்கள் மாற்றங்களுக்கு உட்பட்டவை, சிதையக் கூடியவை. வான் மண்டலத்தின் உள் இருப்பான முழுமை, மண் பொருள்களை  ஆளும் விதிகளிலிருந்து அப்பாற்பட்ட தனியான இயற்கை விதிகளுக்கு உட்பட்டவை என்ற கருத்துக்கு வழிவகுத்தது. மாறாத வானுலகம் ஒரு புறம், மறு புறம் குறைந்தும் , சிதைந்தும் வளர்ந்தும் வரும் புவி.  இரண்டையும் ஒப்பிட்டால் ஒன்று அப்பழுக்கில்லாத முழுமைக்கும் , குறைபாடுக்கும் இடையிலான வேற்றுமையை புலப்படுத்துகின்றது. வானுலகம் இருப்பின் உச்சத்தை அடையாளப்படுத்தியது, அதேசமயம் புவியானது முழுமையின்மையும், சீரழிவினையும் நிகழ்த்தும் களத்தை அடையாளப்படுத்துகிறது. வானுலகத்தின் மாற்றமின்மை என்ற கருத்து ஸ்டோயிசிசத்தின் நெறிமுறை, அறிவாற்றல் மீதான கொள்கைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. மக்கள், பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், நல்லொழுக்கங்களை வளர்த்து, இயற்கையுடன் இணக்கமாக வாழ்வதன் மூலம் வான மண்டலத்தின் பகுத்தறிவு கொண்ட இணக்கத்துடன் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என்று ஸ்டோயிக்ஸ் நம்பினர். மேலும், வானுலகத்தினை புரிந்துகொள்வது நல்லொழுக்கத்தின் மீதமைந்த இலக்கை நோக்கி ஒரு திசைகாட்டியாக செயல்படும் என்று அவர்கள் கூறினர்.

இதிலிருந்துதான் ரோமானிய நீதி மரபின் அடிப்படையான “ஒவ்வொருவருக்கும் உரியதை வழங்க வேண்டும்(To render each what is due)”  உதித்தது. உரியது எது என்பது பிரஞ்சத்தின் ஒழுங்கு தீர்மானிக்கின்றது என சொல்கின்றது. 

இப்படி ஒரு கோட்பாட்டினை சொல்லி, அப்பார்வையை ஒட்டிய நெறிமுறையை சொல்லி, அப்புறம் இந்த பார்வையுடன், இந்த நெறிமுறையுடன் இருந்தால் என்ன கிடைக்கும் என்பதை மீட்சி என சொல்கின்றார்.

ஸ்டோயிசிச பார்வையில் ஞானத்தின் மீதான காதல் அல்லது பிலாசபி என்பது ஞானத்தை நடைமுறைப்படுத்துதல் நோக்கி செல்ல வேண்டும் என்பது முக்கியமாக இருந்தது. மனித இருப்பினை கட்டிப்பாடும் கயிறுகளில் ஓன்றான காலம் என்பதின் மீது ஸ்டோயிசம் கவனத்தினை வைக்கின்றது. நேற்றும், நாளையும் தரும் சுமையோ, கவலையோ இரண்டில் இருந்து விடுபடவும் வழி சொல்கின்றது.  மனிதன் தான் மதிக்கும் , தன்னுடைய நற்பண்புகளுடன் ஒத்துப்போகும் ஒரு இலக்கைத் தொடரும்போது, அவர்களால் கட்டுப்படுத்தக்கூடிய விஷயங்களை நம்புவதற்கும், அவர்களால் முடியாத விஷயங்களை ஏற்றுக்கொள்வதற்கும் ஸ்டோயிசிசம் வழி தந்தது. இதன் வழியே கஷ்டங்கள் , சவால்களை எதிர்கொள்வதில் பின்னடைவு வந்தாலும், மனநிறைவை, மன அமைதியை உருவாக்க முயற்சித்தது.

ஸ்டோயிசிச பார்வையில் மரணத்தின் வழியே மனிதன் பிரபஞ்சத்தில் ஐக்கியமாகின்றான். அதன் பின் அங்கே அவன் இதே உடல், இதே மனம், ஞாபகம் கொண்டு அமைவதில்லை, ஒரு பிரமாண்டத்தின் துளியாகின்றான். ஸ்டோயிசிச ஞானத்தின் மீதான காதல் கொண்ட மனிதனுக்கு அதன் கோட்பாட்டை புரிந்து கொண்டு நெறிமுறைகளுடன் வாழ்ந்து அடையும் இடமாக இது சொல்லப்படுகின்றது.

இவ்வத்தியாயம் முடிக்கையில் நூலாசிரியர் இந்த பிரமாண்டத்துடன் ஐக்கியப்படும் தனிமனிதன் இறப்புக்கு பின் தனது தனித்துவத்தினை இழப்பதை ஸ்டோயிசிசத்தின் பலவீனமாக சொல்கின்றார். இது எல்லாருக்கும் உவப்பாக இருந்ததா என்ன? இல்லை. மாறாக புவியில் மனிதர்கள் “நான்” என்னும் அகங்காரத்தில் பிடிப்புடைவர்களுக்கு மரணத்தின் பின் தனித்துவம் இல்லை , பிரமாண்டத்தின் சிறு துளி என்பது ஏற்புடையதாக இல்லை. இந்த விஷயம்  ஸ்டோயிசிசத்தின் மறைவுக்கு பெரும் காரணம் என்கின்றார்.

மேலை மரபில் பேரலையாக வந்த கிறிஸ்தவ மதம் சார்ந்த மரபு எவ்வாறு கிரேக்க தத்துவ மரபினை வென்றது என்பதை அடுத்த அத்தியாயத்தில் விவரிக்கின்றார்.

இவ்வாசிரியர் மதம் என்பது தத்துவம் அல்லாத மீட்சிக்கான தேடல் என்கின்றார். அதற்கான காரணம் மதம் பகுத்தறிவு வழியாக மீட்சியை வைக்காமல், கடவுள் மீதான விசுவாசத்தின் மீது மீட்சியை வைக்கின்றது என்கின்றார். அப்படியானால் ஏன் மதத்தினை விவாதிக்க வேண்டும் என்பதற்கு நான்கு காரணங்களை சொல்கின்றார். கிறிஸ்தவ மதம் எவ்வாறு கிரேக்க தத்துவ மரபினை வென்றது என்பது தத்துவம் விரும்புவோர் அவசியம் கற்க வேண்டிய ஓன்று. கிறிஸ்தவம் கொண்டு வந்த மீட்பு பார்வையை விளக்க பயன்படுத்திய தர்க்கங்கள் மதத்தின் மீதும், விசுவாசத்தின் மீதும் இருந்தாலும் அவை தர்க்க வடிவில் உருவாக்கப்பட்ட முறை கவனிக்கப்பட வேண்டிய ஓன்றாகும்.  விமர்சன (Critical)  ஓப்பீட்டு முறையில் தத்துவம், தத்துவம் அல்லாத ஒன்றுடன் ஒப்பிட்டு பார்க்கப்படுவது அவசியமான ஓன்றாகும் என்ற அடிப்படையில் கிறிஸ்தவத்துடன் படிப்பது அவசியமாகின்றது. பல நவீன கால நெறிமுறைகள் கிறிஸ்தவ இறையியலில் இருந்து உதித்தவை என்பதால் நவீன மரபினை(Modernity)  புரிந்து கொள்ளவும் கிறிஸ்தவம் பற்றி படிப்பது அவசியமாகின்றது என்கின்றார். 

கிறிஸ்தவத்தில் வழங்கப்பட்ட ஓவ்வொரு மனிதருக்குமான தனிப்பட்ட மீட்சி என்பது மிக பெரிய ஈர்ப்பினை வழங்கியது. மரணத்துக்கு பின்பு இதே உடலுடன், மனதுடன், நினைவுடன் வானுலகம் சென்று தனது அன்புக்குரியவர்களை சந்திக்கலாம், அவர்களுடன் வாழலாம் என சொல்லப்பட்டது. மாறாக அக்காலத்தில் கிரேக்க தத்துவம் தனி மனிதன் மண்ணில் இறந்த பின்னர் தனி அடையாளத்தினை இழந்து பிரபஞ்சத்தின் பேருண்மையில் ஒரு துளியாக ஐக்கியப்படுவதே சாத்தியம் என்றது என நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.

கிறிஸ்தவ கோட்பாட்டினை சொல்ல ஆரம்பிக்கையில் நூலாசிரியர் பைபிளில் ஜான் 1-1 சொல்லும் சொல்லே கிரேக்க தத்துவத்தினை மறுத்து புரட்டிப் போட்டது என சொல்கின்றார். “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.(“In the beginning was the Word[Logos], Word was with the God, and the Word was God”)  என அந்த வரி தொடங்கும்.  

கிரேக்க தத்துவம் தெய்வீக தன்மை கொண்ட பெரும் காஸ்மோஸின் ஒழுங்கினை  லோகோஸ் என சொன்னது. கிறிஸ்தவத்தில் மனித உடலுடன் லோகோஸ் பூமிக்கு வந்த கிறிஸ்து ஆனது. 

லோகோஸ் என்ற தெய்வீக அடிப்படை ஒரு மனிதனின் ஆளுமையில்  உள்ளதா அல்லது பிரபஞ்சத்தின் கட்டமைப்பில் உள்ளதா என்ற விவாதம் மேலை உலகை புரட்டிப் போட்டது.

 கிரேக்க தத்துவவாதிகளின் பார்வையில் லோகோஸ் அல்லது பிரபஞ்சத்தின் ஓழுங்கு என்பது பிரமாண்டமான ஒன்று. ஆகவே  “அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்(And the Word[Logos] became flesh and dwelt among us)”  என சொல்வது கிரேக்க தத்துவாதிகளால் ஏற்றுக் கொள்ளவே முடியாத விஷயம் என நூலாசிரியர் சொல்கின்றார்.

இந்த நூலாசிரியர் கிறிஸ்தவத்தின் நெறிமுறை கொண்டு வந்த மாற்றம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஓழுங்கை மனிதன் பகுப்பாய்வு செய்வது மீட்சிக்கு வழியல்ல,  மண்ணில் வந்த இறைவனின் மீதான  நம்பிக்கையே வழி என முன் வைத்ததுதான் என்கின்றார். 

நம்பிக்கை மையமானதால் வெகுஜன மக்கள் , இவ்வாசிரியர் கூற்றுப் படி “simple folks”  கிறிஸ்துவத்தில் எளிதில் பங்கு பெற முடிந்தது. வெகுஜன மக்கள் தத்துவ விசாரணை செய்வதில்லை. அதனால்  ஏற்கனவே தத்துவ சிந்தனையை மையமாக கொண்டிருந்த கிரேக்க சிந்தனை மரபு நெருக்கடிக்கு ஆளானது. தத்துவ சிந்தனை போன்ற விஷயங்களில் நேரம் செலவிடுவோரை என்பது தற்பெருமை உள்ளவர், படித்தவன் என்ற திமிர் உடையவன், வீண் வாதங்களில் குழப்புவன் என சொல்லி ஓதுக்க ஆரம்பித்தனர்.

கிறிஸ்தவத்தின் வழியான இயேசுவின் வாழ்க்கை, மரணம் , உயிர்த்தெழுதல் ஆகியவற்றை நேரில் கண்ட சாட்சிகளின் கணக்குகள் விசுவாசத்தின் அடித்தளமாக மாறியது. இந்த சாட்சியங்களை நிரூபிக்க அவசியமில்லை, அவற்றை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்வதே முக்கியமானதாக இருந்தது. கிறிஸ்தவ மரபில்  சாட்சியமளிப்பது (“bearing witness”)  முக்கிய பங்காற்றியது. தத்துவ சிந்தனை என்பது தனி நபர் சிந்தனையில் வலுபெறுவது, வாத பிரதிவாதங்களில் நிறுவப்படுவது,  அதை புரிந்து கொள்ள வாசிப்பு, விவாதம் என பல படிகளில் ஏறி செல்ல வேண்டும். இதற்கு மாறாக சாட்சியமளிப்பது  என்பது வெறும் தனி நபர் செயல் அல்ல, அது சமூக கூட்டு நிகழ்வு. எனவே சமூகத்துக்குள்  அனுபவங்களைப் பகிர உதவியது, அதன் மூலம் பங்களிப்பினை எளிதாக்கியது என நூலாசிரியர் சொல்கின்றார்.

அப்படியானால் கிறிஸ்தவத்தில் தத்துவத்துக்கு இடமில்லையா என்ற கேள்வியை இந்நூலாசிரியர் எழுப்பி விடை தேடுகின்றார். நம்பிக்கை மட்டுமே கிறிஸ்தவத்தின் மீட்சியின் வழி என முடிவானாதால்,மீட்சிக்கு வேறு எதுவும் தத்துவ விசாரணை தேவை இல்லை என ஆனது. இச்சூழலில் தத்துவம் வேறொரு பயனை கண்டு அடைந்தது. தத்துவம் என்பது பைபிள் சொற்களை, வாசகங்களை , செய்தியை புரிந்துக் கொள்ள உதவும் கருவியானது என பதில் சொல்கின்றார். தத்துவம் மீட்சியை வழங்க இயலாத இடத்தில் இருந்து செயல்பட்டது. 

இதனை இன்றைய கல்வி சூழலிலும் காணலாம். இன்றைக்கும் நவீன பள்ளிகள் , கல்லூரிகளில், தத்துவம் பெரும்பாலும் கருத்துகளின் வரலாற்று ஆய்வாகப் படிக்கப்படுகிறது, வெறும் வகுப்பாக மட்டுமே கற்பித்தலிலும் கற்றலிலும் கவனம் செலுத்துகிறது. இது பண்டைய கிரேக்கத்தில் செய்ய நினைத்தது அல்ல என நூலாசிரியர் சொல்கின்றார்.

அக்காலக் கட்டத்தில் கிறிஸ்தவம் மூன்று புத்தம் புதிய கருத்தாக்கங்களை கொண்டு வந்தது. மேற்கத்திய வரலாற்றில் முதன்முறையாக, அறநெறி என்பது இயற்கையால் பிறப்பிலேயே வருவதில்லை , அதற்கு  பதிலாக தனி மனித தேர்வு வழியான சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது என்ற கருத்தாக்கம் வந்தது. ஒரு மனிதன் ஊரிலேயே வலிமையாகவும், அழகாகவும், புத்திசாலியாகவும் இருந்தாலும், கிறிஸ்தவ மரபுகளைப் பின்பற்றவில்லை என்றால், அவனுக்கு மீட்சி இல்லை. கிறிஸ்தவ நம்பிக்கையை மட்டுமே கொண்ட ஒருவர் வலிமையாகவும், அழகாகவும், புத்திசாலியாகவும் போல எதுவும் இல்லையெனிலும் தன் சுய விருப்பதில் கிறிஸ்தவத்தினை தேர்ந்து எடுத்தமையால் மீட்சி அடையலாம்.  இதனால் சுதந்திரமாக செயலாற்றும் தன்மை(free will)  அதிக முக்கியத்துவம் பெற்றது என நூலாசிரியர் சொல்கின்றார். 

அக்காலக்கட்டத்தில் கிரேக்க மெய்யியலுக்கு மாறாக மட்டுமில்லாமல், மற்ற ஆபிரகாமிய நம்பிக்கைகளுடன் ஒப்பிடுகையில் கூட, கிறிஸ்தவம் கடுமையான விதிகளைப் பின்பற்றுவதை விட மனசாட்சிக்கும், ஆன்மீகத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தது என நூலாசிரியர் சொல்கின்றார்.  கிறிஸ்தவ சுவிசேஷங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதை பார்த்தால், திருமண பழக்கவழக்கங்கள், உணவு முறை,  ஒரு நாளைக்கு எத்தனை முறை பிரார்த்தனை செய்ய வேண்டும் போன்ற அன்றாட அம்சங்களின் மீது மிக குறைந்த அதிகாரத்தை கிறிஸ்தவம் செலுத்தியது. இதுவே பின்னாளில் மதசார்பற்ற மனநிலை உருவாக காரணமாயிற்று என இவ்வாசிரியர் சொல்கின்றார். ஏனென்றால் அறநெறி என்பது மனசாட்சி சார்ந்ததாக மாற இது வழி வகுத்தது என்கின்றார்.

அக்காலக்கட்டத்துக்கு  உரிய பார்பாரியன்ஸ்(Barbarians) என  “நாகரிக” ரோமானியர்களை “நாகரிகமற்ற” வெளியாட்களிடமிருந்து வேறுபடுத்துவது., படிப்படியாக குறைந்து, அனைத்து தரப்பு மனிதரையும் உள்ளே கொண்டு வரக்கூடிய மனித நேயம் என்ற பரந்த கருத்துக்கு இடம் உருவாக கிறிஸ்தவம் முக்கிய பங்களித்தது. 

அது வரை இருந்த கலாசாரம் இடத்துக்கு தக்க பிராந்திய நெறிமுறைகள்  கொண்டிருந்தது. இதற்கு  மாற்றாக அனைவருக்கும் பொதுவான (யுனிவர்சிலிஸ்ட்) நெறிமுறை என்ற தத்துவம் மானுட சிந்தனையில் முதன் முதலில் வெளிப்பட்டது என்றும் நூலாசிரியர் சொல்கின்றார்.

கிறிஸ்தவத்தில் பரலோகம் அல்லது வானுலகின் மாறாத தன்மை என்ற கருத்து பழைய , புதிய ஏற்பாடுகளில் இருந்து உருவானது. பழைய ஏற்பாட்டில், வானம் கடவுளின் இருப்பிடமாக சித்தரிக்கப்படுகிறது, வானம் புனிதத்தன்மையும், குறைகளை கடந்த தன்மையும் உடையது என சித்தரிக்கப்படுகின்றது. வானங்கள் கடவுளின் மகத்துவத்தைக் காட்டுகின்றன என்று கிறிஸ்தவ இறையியல் நூல்கள் பறைசாற்றுகிறன.

கிறிஸ்தவம் மூன்று விதத்தில் அன்பை சொன்னது. சொந்த பந்தங்கள், உறவுகள் மீதான அன்பு (love as attachment), இரக்கம் என்ற வடிவுடைய அன்பு (love as Compassion), கடவுள் மீதான அன்பு (love in god).  கிரேக்க தத்துவ மரபு அது வரை அன்பு என்பதை அடிப்படையாக பேசியதில்லை. அதன் தர்க்கங்கள் மனித மனத்தில் விருப்பங்களை சொல்லி அதன் எல்லைகளை மட்டுமே சுட்டியது. முதன் முறையாக கிறிஸ்தவம் கடவுளிடம் கொண்ட அன்புக்குள் சொந்த பந்தங்கள், இரக்கம் இரண்டையும் கொண்டு வந்தது. நம்பிக்கையை கொண்டு மூன்றையும் இணைத்தது.  இதற்கு கிறிஸ்தவ நம்பிக்கையான உயிர்த்தெழுதலை அடிப்படையாக கொண்டு விளக்கம் அளித்தது என நூலாசிரியர் சொல்கின்றார். இது கிறிஸ்தவத்தின் ஞானம் என ஆசிரியர் குறிப்பிடுகின்றார். கடவுள், தேவ சாம்ராஜ்யம் , மானுடரின் புவி வாழ்வு ஆகியவற்றின் சாராம்சத்தைப் புரிந்துகொள்வதில் கிறிஸ்தவ இறையியலாளர்களுக்கு  மாறாத வானுலகம் என்ற கருத்து முக்கிய கருவியாகும். இது மீட்பெனும் இறுதி நோக்கத்தின் நினைவூட்டலாக செயல்படுகிறது, வான மண்டலத்தில் கடவுளின் முன்னிலையில் நித்திய வாழ்வு ஓன்று மாற்றங்கள்,பாவங்கள் , தவறுகள் அறவே இல்லாமலாகி கிடைக்கும் என சொல்லப்பட்டது.

இதற்கு அடுத்த அத்தியாயத்தில் 16ம், 17ம் நூற்றாண்டுகளில் மனித சிந்தனையில் எழுத மாற்றங்கள் அது வரை மேலை மரபில் கிரேக்க தத்துவ மரபாலும், கிறிஸ்தவ மரபாலும் சொல்லப்பட்ட கோட்பாடு, நெறிமுறைகள், மீட்சி மூன்றையும் கலைத்து போட்டன என நூலாசிரியர் சொல்கின்றார். அந்த கலைத்து போடலின் நடுவே மனிதாபிமானம் பேசும் மனித சிந்தனை வந்தது என்றார். அதை எவ்வாறு நூலாசிரியர் சொல்கின்றார் என பார்க்கலாம்.

மதத்தின் பார்வையில் பார்த்தால் கிறிஸ்தவ திருச்சபைகள்  சொன்ன சொர்க்கத்தின் இடம், புவியின் வயது, சூரியனுடன் பூமியின் உறவு, மனித இனம் தோன்றிய கதை, விலங்குகளை பற்றிய பார்வை போன்ற பல விஷயங்கள் நவீன அறிவியலுடன் உடன்படவில்லை.  அதை தாண்டி நவீனத்தின் மையமான  ஐயம் அறிவின் வழி என்ற புதிய நகர்வு நகர்வு, மத அமைப்பின் மீதான கேள்வியில்லாத மரியாதை என்பதை சவாலுக்கு உட்படுத்தியது என நூலாசிரியர் சொல்கின்றார். 

தத்துவ பார்வையில் பார்த்தால் ஐரோப்பாவின் நவீன இயற்பியல் கிரேக்க தத்துவம் முன் வைத்த பிரபஞ்ச வடிவமைப்பை முழுக்க மறுத்து விட்டது.  கிரேக்க பிரபஞ்சம் ஊகித்து இருந்த தெய்வத்தன்மை உடைய ஒழுங்குடன், மூடியதாக,வட்டமாக இருந்த பிரபஞ்சம் காணாமல் ஆனது. மாறாக நவீன இயற்பியலின் பிரபஞ்சம் உலகத்தை எல்லையற்றதாகவும் அர்த்தமற்ற குழப்பம் உடையதாகவும் சித்தரிக்கிறது, அங்கு பல விசைகளும் , பொருள்களும் எந்த இணக்க உணர்வும் இல்லாமல் மோதுமிடமாக சொன்னது.

நவீன இயற்பியல் புறத்தில் உள்ள பிரபஞ்சத்தின் ஒத்திசைவு, ஒழுங்கு, நேர்த்தி, அழகு ஆகிய கிரேக்க தத்துவார்த்த முதல் பொருள்கள் (fundamental principles) உடைந்து போயின. இதனால் ஏற்கனவே கிரேக்க தத்துவம் நிறுவியிருந்த முதற் பொருளை அடிப்படையாக கொண்டு சிந்தித்து, திட்டமிட்டு அதற்கேற்ப வாழ்வினை அமைத்துக் கொள்ளுதல் என்பது உடைந்து போனது. 

இனி எது முதற்பொருள்? எதை கொண்டு நெறிமுறைகள் உருவாவது? எதை கொண்டு அதை அளப்பது? இந்த இடத்தில் வான மண்டலத்துக்கு பதிலாக மனிதன் மையப்பொருளானான். அவனை மையமாக கொண்டு நெறிமுறைகள் எழும்ப இடம் அமைந்தது. மனித உழைப்பின் வழியாக, செயலின் வழியாக , சிந்தனையின் வழியாக புதிய நெறிமுறைகள் வளரத் தொடங்கின. “What is proper to man”  என்ற பார்வையானது அறிவார்த்த ரீதியில் முக்கியமானது என நூலாசிரியர் சொல்கின்றார். 

இவ்விடத்தில் நூலாசிரியர் மனிதன் மட்டுமே மையமாகும் முன்பு, பிற உயிர்கள் இதில் வருமா, மனிதன் மட்டும் வரக்கூடுமா என மேலை தத்துவ உலகம் விவாதித்தது என்கின்றார். விலங்குகள் என்றால் என்ன ,அவை எவ்வாறு மனிதனிடத்து இருந்து வேறுபடுகின்றன என்ற அறிவுத் துறையில் ஆராய்சி நடந்தது என்கின்றார். அவ்வகையில் இரண்டு திறன்கள் சொல்லப்பட்டது: அறிவு (intelligence), உணர்திறன்(sensibility)

தத்துவ துறையில், உணர்திறன் என்பது உணர்ச்சிகரமான முறையில் தூண்டுதல்களை அனுபவிக்கும் , அதற்கு எதிர்வினையாற்றும் திறனைக் குறிக்கிறது. சில தத்துவவாதிகள் உணர்திறன் என்பது மனித அனுபவத்தின் இன்றியமையாத அங்கம் என்று வாதிடுகின்றனர்.

தத்துவ மேதை அரிஸ்டாட்டில் காலத்திலேயே மனிதனை காரணம் கண்டறியும் விலங்கு என சொன்னார். விலங்குகளுக்கு காரணம் கண்டறியும் திறனில்லை, மனிதன் காரணம் கேட்பவன் என நூலாசிரியர் சொல்கின்றார். 

தத்துவ மேதை டெகார்ட்ஸ், விலங்குகளை “ஆட்டோமெட்டா(automata)-அவற்றுக்கு உணர்வில்லை என கருத்தினை முன்வைத்தார். பேசுவதற்கான நாவிருந்தும் அவை பேசவில்லை எனவே அவை பேசுவதற்கு உணர்வற்றவை என்றார்.

பின்னர் தத்துவ மேதை ரூஸோ , விலங்குகளுக்கு அறிவும், உணர் திறனும் உண்டு என காரணம் சொல்லி, அவை தங்களை மேம்படுத்திக் கொள்ளும் திறனற்றவை, மனிதனுக்கு மட்டுமே தன்னை மேம்படுத்திக் கொள்ளும் திறன் (Perfectibility)  உண்டு.  

 ரூசோவின் பார்வையான “இயற்கை மௌனமானாலும், சுதந்திரமாக செயலாற்றும் தன்மை நிலைத்திருக்கும்(the will persists even when nature becomes silent)” என்பது மனிதனிடம் உள்ள உறுதியை நமக்கு காட்டுகின்றது. விலங்குகள் என்று வரும்போது, ​​இயற்கை கொடுத்த விதிகளை மீறி விலங்குகள் செயல்பட முடிவதில்லை, இயற்கை உயிரியல் ரீதியில், சூழியல் ரீதியில் சொல்லும் செய்திக்கு கீழ்ப்படிவதைத் தவிர விலங்குக்கு வேறு வழியில்லை. ஆனால் மனிதர்கள் பெரும்பாலும் இயற்கை கட்டமைக்கும் விதிகளை புறக்கணிக்க கூடியவர்கள்.  மனிதர்களால் இந்த இயற்கைக்கு எதிரான கலாச்சார நடைமுறைகளை உருவாக்க முடிகின்றது.  தத்துவ மேதை காண்ட் ரூசோவினை மாரல் யுனிவர்சின் நியூட்டன் என சொல்வதாக நூலாசிரியர் சொல்கின்றார்.

நவீனத்துவம் மூன்று காரணங்களை சொல்லி “மனிதன் விலங்குகளில் இருந்து வேறுபட்டவன்”  என்றது. முதல் காரணம் ‘இரட்டை வரலாற்றுத்தன்மை(double historicity)’.  மனிதனுக்கு தனிப்பட்ட வரலாறு உண்டு, அதை தவிர கலாச்சாரம், அரசியல் என இன்னோரு வரலாறும் உண்டு. இரண்டாம் காரணம் சொல்ல தத்துவ மேதை சார்த்தரிடம் செல்கின்றார். மனிதன் சுதந்திரமானவன் அதன் விளைவாக உள்ளார்ந்த மனித இயல்புகள் என எதுவும் இல்லை, மனிதகுலத்தின் அத்தியாவசிய பண்புகள் என எதுவும் எதுவும் இல்லை (existence precedes essence) என்று சார்த்தர் சொன்னதை முன் வைக்கின்றார். மூன்றாம் காரணம் மனிதன் வரலாறாலும், இயற்கையாலும் கட்டபடாதவன் என்பதால் அவன் சுதந்திரமானவன், எனவே அவனது நெறிமுறைகளை அவனே தேர்ந்தெடுக்கலாம், அதைக் கொண்டு நல்லது, கெட்டது என இரண்டையும் செய்யக்கூடிய இடத்தில் இருப்பவன். 

நூலாசிரியர் இதன் பின்பு  ரூஸோவின் “மனிதன் இயற்கைக்கு மாறான விலங்கு (Man as denatured animal)” என்ற கருத்தை சொல்கின்றார். உயிர் ஒன்றின் நெறிமுறை, பண்பாட்டுத் தளம் இரண்டையும் கணக்கிடும் ஒரே அளவுகோல் இயற்கையிலிருந்து அந்த இருப்பு இருக்கும் தூரம் ஆகும்: இந்த தூரம் மனிதனை இயற்கைக்கு பணயக்கைதியாக இருப்பதை விட கலாச்சார பரிணாம வளர்ச்சியில் தீவிரமாக பங்கேற்க உதவுகிறது.இந்த தூரம் யதார்த்தத்தை ஆராயவும், உலகை மதிப்பிடவும், மாற்றவும், ‘இலட்சியங்களை’ உருவாக்கவும், நன்மை தீமைகளை வேறுபடுத்தவும் அனுமதிக்கிறது.  இந்த புதிய ‘மானுடவியல்(Anthropology)’ மூலம், இந்த மனிதனுக்கான தனித்தன்மை வரையறையால், ரூசோ நவீன தத்துவத்திற்கான வழியைத் திறந்து வைத்தார்.

மேலை தத்துவ மரபில் அடுத்த பெரும் நகர்வு எப்படி செயல்படுவது அறம் , எதை நோக்கி செயல்படுவது அறம் என்பதற்கான வரையறைகளை அமைத்தது. மேலை தத்துவ மேதை காண்ட் எழுதிய  “நடைமுறை காரணத்தின் விமர்சனம் (Critique of Practical Reason)” என்ற புத்தகம் வழியாக பற்றின்மை, உலகளாவிய தன்மை (disinterestedness, universality) என்ற இரண்டு கருத்தாக்கங்கள் வந்தன. இந்த கருத்தாக்கங்களை மையமாக வைத்து மனிதனது நடத்தை கடமையால் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதற்காக  அறக் கொள்கைளை (categorical imperatives) காண்ட் முன் வைத்தார்.  இன்றளவும் மேலை நெறிமுறைகளின் மையமாக இவை மூன்றும் இருக்கின்றது.  முதலாவது சுதந்திரம்,​​ இரண்டாவது பற்றற்ற செயலை நோக்கிய எண்ணம் (Good Will), மூன்றாவது பொதுநலனில் அக்கறை.

மேலைமரபு மனிதனுக்கு இயற்கையான விலங்குணர்வினை தாண்டி செயல்பட மனிதனுக்கு சுதந்திரம் இருந்தது என்றது. அதைக் கொண்டு பற்றில்லாத செயலை சுயநலம், தன்முனைப்பு இல்லாமல் செய்ய எண்ணம் கொண்டு செய்ய முடியும் என்றது. மூன்றாவதாக அவ்வாறு செய்யும் செயல் தனிப்பட்ட குடும்பத்துக்கு, குழுவுக்கு மட்டும் பலனளிக்காமல் உலகத்துக்கே பலனளிக்கும் வகையில் பொதுநலனில் அக்கறை கொண்டு அமையலாம் என சொன்னது. 

மனிதனின் உயிரியல் , உள்ளுணர்வு சார்ந்த குணாதிசயங்கள் ‘முதல் இயல்பு(first nature)’ என காண்ட் சொன்னார். இது மனிதனுக்கு இயற்கையாக இருக்கும் உடல் இயல்பால், உளவியல் பண்பால்  வருவது. 

ஆனால் ‘இரண்டாவது இயல்பு(second nature)’  என்பது மனிதன் கற்றுக் கொள்ளும் அல்லது வளர்த்துக் கொள்ளும் குணாதிசயங்கள். இரண்டாவது இயல்பு  அறிவுசார் சிந்தனையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கான்ட் கருத்துப்படி இரண்டாவது இயல்பு, தர்க்கரீதியான சிந்தனை , அற விவாதத்தின் விளைவாக அமைவதால் அது அறநெறிக்கான அடிப்படையாகும். முத இயல்பால் இயற்கையான சுயநலம் இருந்தபோதிலும், இரண்டாவது இயல்பு ஒழுக்கமாக செயல்பட உதவுகிறது என காண்ட் சொல்கின்றார்.

தனித்துவவாதம்(“individualism” ) என்ற சொல், அகங்காரம் என்ற அர்த்தத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது. இதற்கு முற்றிலும் மனிதனால் உருவாக்கப்பட்ட நெறிமுறைகளை கொண்டு இந்த பிரபஞ்சத்தை உருவாக்குவதற்காக, தனிநபர்கள் அவர்களிடம் இயற்கையாக உள்ள அகங்காரத்திலிருந்து விடுபடுவதற்கு எவ்வளவு  திறனுடையவர்கள் என்பதை அளவிடும் புதிய அற அளவுக்கோலை தனித்துவம் அளித்தது. எவ்வளவுக்கு எவ்வளவு அகங்காரத்தில் இருந்து விடுபடுகின்றார்களோ அந்த அளவு தனித்துவம் உடையவர்கள் ஆவார்கள் என்பது நவீனத்துவ பார்வையாகும். இதற்கு மாறாக கிரேக்க மரபில் ஏற்கனவே இயற்கையாக உள்ளதே திறமை என்பது , ஒருவர் அதில்தான் கூர் தீட்டிக் கொள்ள இயலும், மாறாக நவீனத்துவம் இயற்கையாக உள்ள அகங்காரம், சுயநலத்தில் இருந்து விடுபட்டு முன்னகர உள்ள சுதந்திரத்தினை பயன்படுத்துவதே திறமையாக அங்கிகரித்தது. ஆகவே திறமையால் வரும் தகுதி(Merit) என்பதுமே கிரேக்க மரபிலும், நவீன மரபிலும் வெவ்வேறு இடத்தினை சுட்டின.

நூலாசிரியர் தத்துவ மேதை டெஸ்கார்டஸ் நவீனத்துவத்தின் துவக்கம் என சொல்கின்றார். டெஸ்கார்டஸ் முன்னர் இருந்த பார்வைகள் முடிய ஆரம்பித்ததையும், நவீனத்துவத்தின் புறப்பாடு ஆகிய இரண்டையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

“நான் சிந்திக்கின்றேன், எனவே நான் இருக்கிறேன் (Cogito ergo sum)”  என்ற டெஸ்கார்டஸ் முன் வைத்த தத்துவ மரபு , பிரபஞ்சத்தினை முதற்பொருளாக கொண்ட கிரேக்க தத்துவ பார்வையில் இருந்த மேலை மரபினை  அகநிலை(Subjectivity) நோக்கி திருப்பியது என்கின்றார்.  மனிதனை முதற்பொருளாக மேலை தத்துவப்பார்வை ஏற்றது. அதில் இருந்து புதியக் கோட்பாடுகள், நெறிமுறைகள், மீட்சி பார்வைகள் முளைத்தன. ரூஸோவுக்கும், காண்டுக்கும் இவ்வகையில் டெஸ்காரடஸ் முன்னோடியாக இருந்தார். 

டெஸ்கார்டஸ் ஐயம் என்பதை அறிவுக்கான கருவியாக முன் வைத்தார். டெஸ்கார்ட்ஸ் சித்தரிப்பது விசித்திரமாகத் தோன்றினாலும், எதையும் ஐயப்பட்டு உண்மையை நோக்கி செல்வது மூன்று கருத்துக்களை வழங்கியது என நூலாசிரியர் சொல்கின்றார். முதலாவது ஐயம் கருவியாவதால்  மானுட அகநிலை(subjectivity) என்பது உண்மையை அளக்கும் கருவியானது. இரண்டாவது பாரம்பரியத்திலிருந்து தோன்றிய எந்தவொரு அனுமானங்களையும் அல்லது மரபுவழி நம்பிக்கைகளையும் ஏற்க மறுப்பது. இது டெஸ்கார்டஸ் மிக அடிப்படையான நம்பிக்கைகள் கூட பொய்யாக இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகளைக் சுட்டிக்காட்டியதை குறிக்கிறது. மூன்றாவது அதிகாரத்திலிருந்து வாதங்கள்(arguments from authority) என்பதை நிராகரிப்பது. உதாரணத்துக்கு பூமி சூரியனை சுற்றவில்லை என மத அதிகார அமைப்பு சொன்னால் அதை ஐயத்தின் வழியே ஆராய்ந்து நிராகரிக்கும் சுதந்திரத்துடன் இருப்பது.

நூலாசிரியர் பின்னர் இந்த அடிப்படைகளை கொண்டு நெறிமுறைகளுக்கும், மீட்சிக்கும் இணைப்பு தருகின்றார்.

மேலே சொன்ன நெறிமுறைகள் அனைத்தும் நடைமுறைக்கு வந்து, அமைதியும், நல்லிணக்கமும் உள்ள சமூகம் வந்தால் கூட அது மானுடருக்கு வாழ்வில் குறிக்கோளையோ, அடைய வேண்டிய இலக்கினையோ தரப்போவதில்லை. நிறைவளிப்பதில்லை. மனித வாழ்க்கையின் நிலையின்மை மற்றும் இறப்பை ஒத்தி போட முடியாத தன்மையை கையாள வெறும் மனிதாபிமான  அற நெறிமுறைகள் போதுமா, அதை தாண்டிய பெரிய பார்வை வேண்டுமே என நூலாசிரியர் சொல்கின்றார்.

இவ்விடத்தினை புவியின் உள்ளேயே  இரட்சிப்பளிக்கும் மதங்கள் (religions of earthly salvations)  எடுத்துக் கொண்டன என்கின்றார். அவை தேசப்பற்று, கம்யூனிசம், அறிவியல்வாதம் என சொல்கின்றார். அவை முறையே தாய்மண், புரட்சி, அறிவியல் உண்மைகள் என்ற மூன்று பொன் உலகங்கள் எதிர்காலத்தில் அமையும் என உறுதி கூறின. இவற்றின் வழியாக நம்பிக்கை சார்ந்த வாழ்வின் சாராம்சங்கள் மீண்டும் மனித வாழ்வில் வந்தன. இந்த பொன்னுலகம் வருமென உழைப்பை கொடுக்க, உயிரை கொடுக்க அதன் வழியே மீட்படைய மனித மனம் தயாரானது.

காண்ட் தனது தத்துவத்தின் உச்சத்தில் “முடிவுகளின் சாம்ராஜ்யம்(realm of ends)” ஓன்றினை வைத்தார். இந்த இடத்தினை நிர்வகிப்பது மனிதர்களின் அற சட்டமே. இது இணக்கமானது. இங்கிருப்பவர்கள் பகுத்தறிவாளர்கள். இந்த களத்திற்குள், மனிதர்கள் ஒருவர் மற்றொருரின் உள்ளார்ந்த மதிப்பை ஒப்புக் கொள்கிறார்கள்.

இந்த  தத்துவம் நோக்கி செல்ல “விரிவுபடுத்தப்பட்ட சிந்தனை (Enlarged Thought)” தேவை என சொல்லப்பட்டது. சிந்தனையை விரிவுபடுத்துவதன் மூலம், தனிநபர்கள் தங்கள் தனிப்பட்ட கவலைகளுக்கு அப்பால் நகர்கிறார்கள். நகர்வதால் தங்கள் செயல்களை வழிநடத்த உலகளாவிய அறக் கொள்கைகளை கருத்தில் கொள்கிறார்கள். இந்த பரந்த கண்ணோட்டம் வழியே மனிதர்கள் மற்றவர்களின் அற மதிப்பை அங்கீகரிப்பதற்கும் அவர்களைத் தங்களுக்குள் வாழ்க்கையின் நோக்கத்துக்குள் கொண்டு வரவும் செய்கின்றார்கள். விரிவாக்கப்பட்ட சிந்தனை  என்பது வெறுமனே பச்சாதாபம் அல்லது அனுதாபத்தின் ஒரு விஷயம் அல்ல, மாறாக ஒரு பரந்துபட்ட நிலைப்பாட்டில் இருந்து பகுத்தறிவு பார்வை கொள்ள தனிநபர்களுக்கு உதவும் திறன் என்று காண்ட் வாதிட்டார். 

அடுத்த அத்தியாயத்தில் நூலாசிரியர் மேலை மரபின் கட்டுடைத்தல்(Deconstruction) எழுந்ததை பற்றி பேசுகின்றார். இந்த அத்தியாயம் தத்துவ மேதை நீட்சேவினை மையமாக வைத்து கட்டுடைத்தலை விளக்குகின்றது.

பின்நவீனத்துவத்தின்  கண்ணோட்டத்தில், குறிப்பாக நீட்சேவின் படி, நவீனத்துவம் உருவாக்கிய ஹுயுமானிட்டி என்ற தத்துவம் அதன் உள்ளுறையும் மதம் சார்ந்த அடித்தளங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. நீட்சேவின் கூற்றுப்படி, அறிவொளியின் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட குடியரசுக் கொள்கைவாதிகள் தங்களை நாத்திகர்கள் என்றோ மெட்டீரியலிஸ்ட் என்றோ என்று அறிவித்தாலும், உண்மையில், அவர்கள் இன்னும் மத நம்பிக்கைகளை போன்ற நம்பிக்கை சார்ந்த அடிப்படைகளையே கொண்டிருந்தனர்.

நீட்சே “மனிதனை பார்“( Ecce Homo(Latin)( “behold the man”) என்னும் புத்தகத்தில் “யதார்த்தம் அதன் மதிப்பையும், பொருத்தத்தையும், உண்மையையும் இழந்து, புனையப்பட்ட கற்பனாவாத சாம்ராஜ்யத்தால் கைப்பற்றப்பட்டுள்ளது… இலட்சியம்   நீண்டகாலமாக ஏமாற்றுவதன் வழியே யதார்த்தத்தை பாதித்துள்ளது.  அது மனிதகுலத்தை அது விரும்பி செய்யக்கூடிய விஷயங்களில் கூட வஞ்சகமாகவும் நேர்மையற்றவராகவும் ஆக்குகிறது.அது மனிதகுலத்தை அதன் செழுமை, எதிர்காலம், உரிமை போன்றவற்றினை பாதுகாப்பதாகக் சொல்லி முரண்பட்ட கருத்துக்களை மதிக்கும் நிலைக்குத் தள்ளுகிறது” என சொல்கின்றார். இலட்சியம் குறித்த நீட்சேவின் பார்வையை இதில் நாம் காணலாம்.

அனைத்து மனிதருக்கும் பொதுவான (universal)  கொள்கைகளுக்கு அதிகம் முக்கியத்துவம் அளித்து அனைவரையும் ஒரே மாதிரியான அற நெறிமுறைகளைப் பயன்படுத்த கோரும் அமைப்புகளை நீட்சே கடுமையாக விமர்சித்தார். மனிதனின் தனிப்பட்ட சுயமும், தனிப்பட்ட படைப்பூக்கமும் மிக முக்கியமானது என்பதில் வலுவான நம்பிக்கை வைத்திருந்தார், மேலும்  அனைத்து மனிதருக்கும் பொதுவான அறக் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் காரணமாக நவீனத்துவ நெறிமுறைகள் மிகவும் தனித்துவத்தின் மீது இறுக்கமாக மாறுகின்றன என்பதை சொன்னார்.

நீட்சேவின் முக்கிய கருத்தாக்கங்களில் ஒன்று நிகிலிசம் (nihilism). நிகிலிசம் என்பது இலட்சியத்தின் பெயரால் உண்மையை மறுப்பது என நீட்சே வரையறுத்தார்.  நாளைய மீட்சியின் பெயரால் இன்றை தொலைப்பதை அவ்வாறு பார்த்தார். 

பின்நவீனத்துவவாதியின் முதல் கொள்கை:  அழகு, உண்மை , மீட்சி ஆகியவற்றை போர்த்திக் கொண்டு  பாரம்பரிய நம்பிக்கைகள் என்ற பெயரிலும், நல்வழி கோட்பாடுகள் என்ற பெயரிலும்  வடிவம் கொண்டு இருக்கும் தத்துவங்கள் மேலோட்டமானவை. அவற்றின் பின்னால் சுயநலம் மீதான விருப்பங்கள், அதிகாரம் மீதான விருப்பங்கள்  ,  வார்த்தைகளில் வரவிரும்பாத உண்மைகள் மறைந்துள்ளன.

பின்நவீனத்துவம் தனது அறிவுக் கருவியாக “கட்டுடைத்தல்(deconstruction)” என்பதை முன்வைத்தது. கருத்தின் துவக்கம் (Origins) நோக்கி நகர்வதன் வழியே கட்டுடைத்தல் நிகழ்ந்தது.  பின்நவீனத்துவாதியான நீட்சே   தன்னை ஒரு “மரபியல் நிபுணர்(Genealogist)” என்று அழைத்துக் கொண்டார். இவ்விடத்தில்  “மரபியல்” என்பது ஒரு வரலாற்று விசாரணைக் கருவி.  அது கலாச்சார,அற நிகழ்வுகளை வடிவமைக்கக் கூடிய ஆழமான உந்துதல்கள் எவை என்பதை ஆராயும். மேலோட்டமான விசாரணை வடிவத்தினை கையாள்வதில்லை. அது உடலின் மரபியல் கூறுகளை ஆராய்வதல்ல. 

கிரேக்க தத்துவத்தில் “அழகு, அறிவு, உண்மை என அனைத்தும் உள்ளடக்கிய பேரண்டத்தினை நோக்கி தீர யோசித்து உண்மைகளை கண்டடைதல்” அறிவினை அறிய உதவும் கருவி, நவீனத்துவத்தில் கருத்தாக்கங்களுக்கு இடையேயான உறவுகளை கண்டு பிடிக்க மனிதன் முயற்சி செய்வது, செயலில் இறங்குவது அறிவுக் கருவி, பின் நவீனத்துவத்தில் கட்டுடைத்தல் அறிவினை அறியும் கருவியானது.

நீட்சேவின் பார்வைப்படி, அனைத்து வேறுபாடுகளையும் கடந்த எல்லாருக்கும் பொதுவாக வரக்கூடிய லட்சியங்கள்(transcendental ideals) தீங்கிழைக்கும் நோக்கங்களைக் கொண்டுள்ளன. இந்த அமைப்பின் அடிப்படை நோக்கம் மனிதகுலத்திற்கு உதவுவது அல்ல, மாறாக தீர்ப்பை வழங்குவதும், மானுட இருப்பையே கண்டனம் செய்வதுமே ஆகும். இவை புனையப்பட்ட உண்மைகளுக்கு ஆதரவாக யதார்த்தமான உண்மைகளை நிராகரிக்கிறன.

கட்டுடைக்கும் தத்துவம், எந்த ஒரு மனிதனும் தனது முக்கிய நலன்களைக் கருத்தில் கொள்ளாமல், தனது அறத்தினையும், நல்லெண்ணத்தினையும் மட்டும் அடிப்படையாக பார்த்து  நல்லது என்றோ மோசமானது என்றோ என எந்த ஒன்றையும் பற்றி  “புறவயமான(objective) “, “பக்கச்சார்பற்ற(disinterested)” மதிப்பீட்டை வழங்க முடியாது என சொல்லும். 

நீட்சே முன்வைத்த தத்துவம் கிரேக்கம் சொன்ன இயற்கையாக அமைந்த ஓழுங்கை கொண்ட பிரபஞ்சத்தினையோ, நவீனத்துவர் சொன்ன மனிதனின் பகுப்பாய்வு மூலம் விளக்கம் கொண்ட பிரபஞ்சத்தினையோ காணவில்லை. பின்நவீனத்துவம் பிரபஞ்சம் ஓழுங்கற்றது (Chaos), என சொன்னது.

ஓழுங்கற்ற ஓன்றில் எவ்வாறு வாழ்வது என கேட்ட பொழுது தத்துவார்த்த ரீதியில் நீட்சே வாழ்வின் அடிப்படையான கொள்கைகளை பகுப்பாய்வு செய்கிறார். மனிதன் இயங்க எது அவசியம் என்பதை அவரது கவனம் திரும்பியது . வாழ்வில் இயங்க தேவையான சக்திகளின் பங்கென்ன என பார்த்தார். பலம் x பலவீனம், ஆரோக்கியம் x நோய், அதிகாரம் செலுத்துதல் x அடிபணிதல் போன்ற பல தரமான வேறுபாடுகளை சுட்டிக் காட்டி அங்கிருந்து உள்ளே சென்று பின்பு முடிவில் தனித்தன்மை வாய்ந்த வேறுபாட்டை  சுட்டிக் காட்டினார்: செயல்(Active) அல்லது எதிர்வினை(Reactive).

வாழ்வென்பது செயலும், எதிர்வினையும் ஓன்றுடன் ஓன்று கூடி வெளிப்படுவது. எதிர்வினை சக்திகள்(Reactive forces), வெளிப்புற தாக்கங்களுக்கு பதிலடியாக வருபவை. வலியிலிருந்து தப்பிக்கும் முயற்சியில், கசப்பில்,  மறுப்பில்  நம்பிக்கை கொண்டு வெளிப்படுவது. இவ்வகை வெளிப்பட்டாக இருப்பதால் எதிர்வினை தன்னை பலமற்றதாகவும், உதவியற்றதாகவும் உணருவதால், அது மற்றவர்களை வீழ்த்த முயற்சிக்கிறது. அதன் பின்னே அதிகாரத்துக்கான ஆசைகள் ஒளிந்திருக்க வாய்ப்புள்ளது என நீட்சே சொல்கின்றார். 

மாறாக செயலில் உள்ள சக்திகள்(Active forces) வாழ்வில் உள்ள உள்ளார்ந்த உந்து காரணிகளைக் குறிக்கிறது. இந்த சக்திகள் வளர்ச்சி, உருவாக்கம், வரம்புகளை மீறுதல், சுய வெளிப்பாடு , சுய உருவாக்கம், செயலூக்கம் ஆகிய வடிவில் வகைப்படுத்தப்படுகின்றன. இந்த சக்தி தடைகளைத் தாண்டி உலகை வடிவமைக்க பாடுபடுகிறது.

இந்த முக்கிய சக்திகள் ஒன்றுக்கொன்று எதிராகச் செயல்படாமல், ஒன்றையொன்று கிழித்து எறியாமல், ஒன்றையொன்று ரத்து செய்யாமல் இருக்க வேண்டும்.  அதே நேரம் நம் வாழ்வின்  எதிர்வினை சக்திகள், நேர்செயல் புரியும் சக்திகளின் உள்ளடங்கி ஓன்றுக்கொன்று இணக்கமாக கற்றுக் கொள்ளும் வாழ்வினை  ‘பெரு வழி(Grand Style)’  என்று நீட்சே அழைத்தார்.  இதுதான் நீட்சேவின் நெறிமுறை.

இங்கே குறிப்பிடப்பட்டுள்ள இணக்கம் என்பது மனநிறைவின் காரணமாக அமைந்த நல்லிணக்கம் அல்ல.  நம்மை சோர்வடையச் செய்யும் மோதல்களையும், நம் ஆற்றல்களை விரையம் செய்யும் சுய-தீங்குகளையும் தவிர்த்தும் பெற்ற அனுபவத்தில் கற்றுக் கொண்டது. இது பலம்.  இணக்கம் அவ்வாறே உருவாக்கிக் கொள்ளப்பட வேண்டும்

நீட்சே இதை நோக்கி செல்ல “சுதந்திரமாக முடிவு எடுக்கும் மனத்தின் மீதான அதிகாரம்”  (will to power) என்பதை சொல்கின்றார்.  இங்கு சொல்லப்பட்டுள்ள  “சுதந்திரமாக முடிவு எடுக்கும் மனத்தின் மீதான அதிகாரம்”   என்ற  கருத்து புற உலகை ஆள வேண்டுமென்ற  அதிகாரத்திற்கான விருப்பம் அல்ல. குறிப்பிடத்தக்க பதவியையோ அல்லது  குறிப்பிட்ட அளவில் பணத்தினையோ அல்லது அது போன்ற ஏதோ ஒன்றையோ கைப்பற்றும் விருப்பம் கிடையாது.   

“சுதந்திரமாக முடிவு எடுக்கும் மனத்தின் மீதான அதிகாரம்”  என்பது வாழ்வினை அதன் முழு அளவில் வாழ நாம் கொள்ளும் தீவிர மன உறுதியாகும். நம் அகத்தில் எழும் மோதல்கள் , நம் வாழ்வின் சக்தியை துண்டு துண்டாக சிதறி போகடிக்க செய்யக்கூடியது. அப்படிப்பட்ட  வாழ்வின் சிதற்ல்களில் சிக்காமல், வாழ்வின் நம்  முழு ஆற்றலுடன் வாழ கொள்ளும் உறுதியே சுய அதிகாரத்துக்கான மன உறுதியாகும்.

நீட்சே வைத்த மீட்பு பார்வை என்ன? நீட்சே பூவுலகை கடந்த மீட்சி என்பதை ஏற்கவில்லை. இன்றைக்கு, இப்போதில்லாத மீட்சியை ஏற்கவில்லை. 

அவரது மீட்சி பார்வையை தெரிந்துக் கொள்ள   “இன்றைய பொழுதில் இன்றைக்கு இருப்பதை  முழுமனதோடு நேசித்தல்(Amor fati)”  என்ற கருத்தை அறிதல் அவசியமாகும்.

நீட்சேவின் பார்வைப்படி இன்றைய இருப்பை முழுமையாக நேசிக்க வேண்டும், கட்டாயத்தினால் உருவான நேசிப்பாக இருக்க கூடாது, முழு மனதினால் நேசிக்க வேண்டும். இன்றைய இருப்பினை எதிர்காலத்திலோ அல்லது கடந்த காலத்திலோ அல்லது நித்தியத்திலோ எதுவுமே வேறுபட்டதாக இருக்க வேண்டுமென என்ற ஆசைக் கொள்ளக் கூடாது. தேவையின் விளைவாக ஏற்படுவதை ஏற்றுக்கொள்வது அல்ல. ஏனேனில் எல்லா இலட்சியவாதமும் தேவையின் போது நேர்மையற்றது. ஆகவே உளமாற இன்றைய இருப்பினை நேசித்தல் வேண்டும்.

“அப்பழுக்கிலாதவனாக மாறுதல் (The innocence of Becoming)” என்ற கருத்தை இரட்சிப்புக்கு வழியாக வைக்கின்றார். இதை எப்படி வரையறுகின்றார்.  புகழ், விமர்சனம் என்ற இரண்டின் செல்வாக்கிலும் பிடிபடாமல், கடந்த காலம், நிகழ்காலம் என்ற தளைகளிடம் இருந்து தன்னைப் விடுவித்து, தன்னை சமநிலைப்படுத்தி, தனக்கான சொந்த முறையில் தனக்கான சொந்த இலக்குகளை அடைய ஒருவனால் முடியும்.

இந்நூலாசிரியர் நீட்சேவினை விவரித்து விட்டு நீட்சேவின் மீட்சி தத்துவத்தினை நிராகரிக்கின்றார்.  இன்றைய இருப்பினை முழுமையாக நேசிக்க  முடியுமெனில் எவ்வாறு கொலைகாரர்களை, கொடுமைப்படுத்தும் ஆட்களை நேசிக்க இயலும் என்கின்றார்.

ஆனாலும் நீட்சேவின் பங்களிப்பாக மூன்று விஷயங்களை சொல்கின்றார். ஓன்று நீட்சே சொன்ன மரபியலில் நுணுக்கி மூலம் தேடி செல்வதை போல கருத்தியலின் மூலம் தேடி செல்லும் பார்வை புதிய வழியை உண்டாக்கியது. நீட்சே வாழ்வின் நெறிமுறைக் கோட்பாடாக உருவாக்கிய நேர்செயல்களுக்கும், எதிர்வினை செயல்களுக்கான இணக்க உருவாக்கமும் முற்றிலும் புதிய சிந்தனையை உருவாக்கி அளித்தது. மூன்றாவதாக கடவுளும், இலட்சியவாதமும் இல்லாது இன்றைக்கு வாழுதலை வைத்து உருவாக்கிய அவரது மீட்சி தத்துவமும் புதிய பார்வையை அளித்தது.

அடுத்த அத்தியாயத்தில் ஆசிரியர் சமகால தத்துவத்தினை எடுத்து அதனை ஆராய்கின்றார். சமகால மேலை உலக ஜனநாயகங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் 18 ஆம் நூற்றாண்டில் இருந்தது போல இல்லை.  ஒட்டு மொத்தமாக பார்க்கையில் தனிநபர்களுக்கும் அவர்களது சமூகங்களுக்கும் இடையிலான உறவு பெரும் மாற்றத்தினை சந்தித்துள்ளது. மனித விருப்பு, வெறுப்புகள் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் சந்தித்துள்ளது. புதிய புதிய வழியில் அதிகாரத்துடனான  தொடர்புகள் , தனிமனித  நுகர்வு முறைகள் உருவாகியுள்ளன. இதனால் புதிய மனித உரிமைகள், புதியதாக அரசியலில் பங்கு பெறுபவர்களை உருவாக்கியுள்ளது. இதெல்லாம் வெட்ட வெளிச்சம். இந்த மாற்றங்களுக்கு பிறகு சம காலதின் கேள்வி என்பது கட்டுடைப்பதன்  மூலம் அமைக்கப்பட்டுள்ள பாதையில் தொடர்வதா அல்லது மாற்றுப் போக்கைத் தொடர்வதா என்பதைச் சுற்றியே உள்ளது.

நீட்சேவின் வழியில் 20ம் நூற்றாண்டில் மார்க்ஸ், ப்ராய்ட் போன்றவர்கள் வந்தார்கள். இந்த நூலாசிரியர் இவர்களை “ஐயத்தினை கருவியாக கொண்ட தத்துவாதிகள்(philosophers of suspicion)”  என சொல்கின்றார். பாரம்பரிய மதிப்புகள் மீதான அவர்களின் கூட்டு விமர்சனம், மறைக்கப்பட்ட நோக்கங்களை கண்டறிதல், அதிகாரத்தின் நகர்வுகளை ஆராய்தல் ,சந்தேகத்தை  கருவியாக பயன்படுத்துதல் ஆகியவை கொண்ட இவர்களது  தத்துவ அணுகுமுறைகள் மனித வாழ்வினையும், இந்த உலகத்தினையும் பற்றிய நமது புரிதலை மாற்றி அமைத்தன.

அல்துசர், லகான், ஃபூக்கோ, டெலூஸ், டெரிடா போன்றவர்கள் நீட்ஷே மார்க்ஸ், ப்ராய்ட் பள்ளியின் தொடர்ச்சியில் பணியாற்றினர். மார்க்சின் வழியில் சமூக, பொருளாதார காரணிகளும், ப்ராய்டின் வழியில் ஆழ்மனத்தின் உள்ளுணர்வுகளும்,மொழியும் கவனம் பெற்றன.

ஜூர்கன்ஸ் ஹேபர்மாஸ்(Jurgens Habermas), கார்ல்-ஓட்டோ-அபெல்(Karl-Otto-Apel), கார்ல் பாப்பர்(Karl Popper), ஜான் ராவல்ஸ்(John Rawls) ஆகியோர் கான்ட்டின் தத்துவப் பள்ளியின் வழியில் தொடர்ந்து பணியாற்றினர். சமூக நீதி, சுதந்திரம் கொண்ட குடிமக்கள் செய்யும்  விவாதங்களின் நெறிமுறைகள், அறிவியலில் பண்பு, அறிவியலுக்கும், ஜனநாயகத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து தத்துவ ஆராய்சி தொடர்ந்தது.

கட்டுடைத்தல் தொடர்ந்து நிகழும் பொழுது என்ன நிகழ்கின்றது? நாம் உலகை அறிய முயல்கின்றோம்.  கட்டுடைத்தல் மூலம் முயற்சிக்கையில் எல்லா   தனிநபர்களும் முதன்மையாக சுயநலத்தால் உந்தப்பட்டதாக நம்ப ஆரம்பிக்கின்றோம்.  அதன் முடிவில் கசப்பே வளர்கின்றது.

இந்த இடத்தில் நூலாசிரியர் மார்டின் ஹைடெகர் தத்துவத்தினை முன் வைக்கின்றார். ஹைடிகரும் கட்டுடைத்தல்வாதம் வைப்பவர் எனினும் அவர் நீட்சேவின் “இன்றைய பொழுதில் இன்றைக்கு இருப்பதை  முழுமனதோடு நேசித்தல்”  என்ற பார்வைக்கு மாறாக யதார்த்தத்தின் தன்மையைப் புரிந்து கொள்ள, பகுத்தறிவு மீதான செயல்முறையின் துணைக் கொண்டு ஆராய்ந்து மதிப்பீடு செய்ய வேண்டும் என்பதை ஹைடெகர் சொன்னார். எனவே ஹைடேகரின் கட்டுடைத்தல் பார்வையானது  நீட்சேவின் முறையை விட பொருத்தமானது என நூலாசிரியர் சொல்கின்றார்.

சமகாலத்தில் மேலை மரபில் கோலாச்சுவது சுதந்திரவாத முதலாளித்துவம் (Liberal Capitalism).  இதன் மீது இன்று பல புகார்கள் உண்டு. நூலாசிரியர் ஐந்து முக்கிய புகார்களை பட்டியல் இடுகின்றார். இது சமத்துவமின்மையை அதிகரித்தது.இது பிராந்திய கலாச்சாரங்களையும், அடையாளங்களையும் அழித்தது. இது இயற்கையில் உள்ள பல விலங்குகளின் பன்முகத்தன்மை குறைத்தது, பல விலங்குகளின் உயிர்தொகையை இல்லாமல் செய்தது. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியை விரிவுபடுத்துகின்றது. இது கண்மூடித்தனமான புகார் என்றும் சொல்லி விடுகின்றார்,

இப்படி  17ம் நூற்றாண்டில் இருந்து வளர்ந்து இன்றைக்கு வரைக்கும் வந்துள்ள சுதந்திரவாத முதலாளித்துவம் என்பதை புரிந்து கொள்வது அவசியம். இது கிளம்பிய இடம், வளர்ந்த விதம், போய் சேரக் கூடிய இடம், இதன் பலன்கள், இதனால் விளையும் பிரச்சனைகள் என எல்லாவற்றையும் அலச ஹைடேகரை நூலாசிரியர் பயன்படுத்துகின்றார். ஹைடேகரின் தொழில் நுட்ப உலகம் (world of technology) என்ற கருத்தின் துணைக் கொண்டு விளக்குகின்றார்.

ஹைடேகர் அறிவியலால் உருவான தொழில்நுட்பம் மனிதனை பூமியின் சர்வாதிகாரி ஆக்கியது என்கின்றார். டெஸ்காரடஸ் மொழியில் “ கிட்டதட்ட இயற்கையினை கட்டி ஆளும் முதலாளியாகவும், உரிமையாளானாகவும்(as if master and owner of nature)  ” ஆக்கியது என்கின்றார். அறிவியலின் முன்னேற்றம் இயற்கையின் மர்மங்களை, பேரதியசயங்களை அதன் மூலங்களை, காரணங்களை கண்டறிவதன் மூலம் மனித அறிவுக்கு எட்டும் கோட்பாடாக்கியது. அதன் மீதான வியப்பு குறைந்து கையாளும் தன்மை மனிதனுக்கு எட்டியது. இயற்கை என்பது அதன் புனிதம்,வியப்பு போன பின்பு குடோனில் இருக்கும் சரக்கு போல கையாள வேண்டிய பொருளானாது.  எப்படி விருப்பமோ, தேவையோ அதை மனிதன் குடோனில் இருந்து பயன்படுத்திக் கொள்ளும் மனநிலையில் கையாள துவங்கினான். அறிவியல் மானுட விடுதலை போன்ற பெரும் இலக்குகளை நோக்கிய கருவி என்ற பார்வை 18ம் நூற்றாண்டு, 19ம் நூற்றாண்டு பார்வையில் இருந்தது. உலகை புரிந்துக் கொள்ள உதவும் கருவியாக அதன் வழியாக சுதந்திரத்தினையும், மகிழ்ச்சியையும் பெறுவதாக அறிவியலுக்கு அது உருவாக்கிய தொழில்நுட்பத்துக்கு இடம் ஊகிக்கப்பட்டது. அறிவியல் பலம் பெறுகையில் பல தொழில்நுட்பங்களுக்கு அடிக்கோளிட்டது. தொழில் நுட்ப உருவாக்கம் போட்டி மிகுந்த சூழலில் உருவானது. சமகால உலகமயமாக்கல் சூழலில் போட்டியே எல்லாவற்றையும் நிர்வகிக்கின்றது. மனிதனது முன்னேற்றம் என்பது மகிழ்ச்சி, சுதந்திர உருவாக்கம் என்பதன் வழியே சிந்திப்பது மாறி தொழில் நுட்ப உருவாக்கத்தின் முன்னேற்றம் முக்கியம் பிடித்தது. போட்டி என்பதே முன்னேற்றம் என வரையறை ஆனது என ஹைடேகர் சொன்னார்.

இதற்கு என்ன செய்வது என யோசித்த  ஹைடேகர் ஒரு கட்டதில் ஜனநாயகத்தினால் இதை கையாள இயலாது என சொல்லி , அவர் நாசியிசத்தினை ஆதரித்தார் என நூலாசிரியர் சொல்கின்றார்.

இந்த தொழில்நுட்ப யுகத்தின் சூழலை சொல்லி சமகால பிலாசபி அல்லது ஞானத்தின் மீதான காதல் என்பதற்கு என்ன செய்வது என கேள்வியை நூலாசிரியர் எழுப்புகின்றார். 

ஸ்காலஸ்டிசிசம்( Scholasticism) என்பது இடைக்கால (Medieval) கிறிஸ்தவ அறிவுஜீவிகளால் அவர்களின் சொந்த மத பாரம்பரியத்திற்குள் பல்வேறு அறிவு தரப்புகளிடம் சமரசம் உருவாக்குவதற்கான  முயற்சியாக நடந்த ஒரு நிகழ்வு.  குறிப்பாக அரிஸ்டாட்டில் மற்றும் நியோபிளாடோனிசத்தின் செவ்வியல் தத்துவக் கருத்துக்களுடன் கிறிஸ்தவ இறையியலை ஒத்திசைவு கொள்ளும் நோக்கம் கொண்டிருந்தது.  சமகாலத்திலும் அது போல மறுக்கப்பட முடியாத இறையியலை ஒத்த கொள்கைகளுடன், தத்துவம் என்பதை சேர்த்து புதிய  “ஸ்காலஸ்டிசிசம்” நிகழ்கின்றது 

தொழில்நுட்பத்தால் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், தத்துவம் தன்னை தொழில் நுட்பம் போலவே சிறப்பு வகைகளாகப் பிரித்துக் கொள்கிறது: அறிவியல், தர்க்கம், சட்டம், அறநெறிகள், அரசியல், மொழி, சுற்றுச்சூழல், உயிரியல் நெறிமுறைகள் இன்னமும் பல. இது போல சிறப்பு பிரிவுகளை உருவாக்குதலில் முடிவே இல்லை.

இந்த வகை முன்னேற்றத்தில் பல சிறப்பு பிரிவு நிபுணர்கள் உருவான பின் மானுடத்தின் மிக ​​முக்கியமான தத்துவக் கேள்விகளை கடந்த கால செண்டிமெண்ட் திரைப்படங்களை போன்ற மனநிலையில் பார்க்கின்றார்கள் என நூலாசிரியர் சொல்கின்றார்.

முடிவில் நூலாசிரியர் காண்ட் சொன்ன விரிந்த பார்வையையும், மேம்படுத்திக் கொள்ளும் திறனையும் இந்த நூற்றாண்டுக்கு பரிந்துரைக்கின்றார். ஒருவர் தன்னை பிறர் இடத்தில் வைத்து பார்ப்பது என்ற  காண்ட் சொன்ன விரிந்த பார்வையின் வரைறையை,  சுய விமர்சனம் செய்து கொள்ளும் உள்நோக்கிய பார்வையும் சேர்த்து  என இன்னமும் விரிக்க வேண்டியுள்ளது என்கின்றார். பின்னர் இதில் மானுடத்தின் தனிப்பட்ட குணமான மேம்படுத்திக் கொள்ளும் திறனும் பொருந்த வேண்டும் என்கின்றார்.

புத்தகம் தருவது என்ன?

இது வரை நூலாசிரியரின் சொல்லில் இந்த புத்தகம் சொல்ல வருவதன் சாராம்சம் என்னவென பார்த்தோம். இனி இந்த புத்தகத்தின் சாரம்சம் எவ்வாறு வாசகனுக்கு பயன்படலாம் என பார்ப்போம்.

மேலைத்தத்துவத்தில் அறிமுகமும், பயிற்சியும் இன்றைக்கு உலகம் முழுவதும் அனைவருக்கும் தேவை என நான் நினைக்கின்றேன். நமது பல அன்றாடத்தேவைகள் மீதான கருத்தாக்கங்களுக்கு  மேலைத்தத்துவம் அடிப்படையாக உள்ளது.  அடிப்படைகளை தெரிந்துக் கொள்வதன் வழியே புரிதல் அதிகமாகும், இன்னமும் தெளிவுடன் ஈடுபடலாம்.

இந்த புத்தகம் ப்ரெஞ்ச் தேசத்து சமகால தத்துவ ஆசிரியரான லூக் பெரியின் பார்வையில் தத்துவம் தருவது என்ன என மேலை தத்துவத்தின் வரலாற்று காலக் கோட்டினை மையமாக வைத்து பேசுகின்றது. இந்த நூலாசிரியர் தத்துவத்தின் இறுதி இலக்கு வாழ்வதற்கான வழிகாட்டியை வழங்குவது என சொல்கின்றார்.  

இந்த புத்தகம்  மேலை தத்துவ வரலாற்றில் ஐந்து முக்கிய திருப்புமுனைகளை பேசுகின்றது.  மேலை உலகினை மாற்றிய தரிசனங்களை விளக்கி, அவ்வுலகம் எவ்வாறு ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறியது என்பதை விளக்குகிறது. நூலாசிரியர் தத்துவம் என்றால் என்ன என்று ஒரு அறிமுகப் பார்வையை தந்து, பின்னர் கிரேக்க அதிசயம்; கிரேக்க தத்துவத்தின் மீது கிறிஸ்தவத்தின் வெற்றி; மனிதநேயம், அல்லது நவீன தத்துவத்தின் பிறப்பு; பின்நவீனத்துவம்: நீட்சேவின் வழக்குரைவாதங்கள்; பின்னர் இறுதியாக அவர் தனது சொந்த பார்வையை ‘கட்டுடைத்தலுக்குப் பிறகு: சமகாலத் தத்துவம்’ என்ற தலைப்பில் வழங்குகிறார். 

தத்துவம் குறித்து பல நூல்கள் உண்டு. வெவ்வேறு தத்துவ வழிகளைப் பற்றி பேசும். தத்துவ பார்வைகள் எவ்விடத்தில் ஒற்றுமை கொள்கின்றது, எவ்விடத்தில் வேறுபடுகின்றது என்பதைக் காட்டும். ஆனால் ஒரு தத்துவம் எப்படி அடுத்த தத்துவத்திற்கு இட்டுச் செல்கிறது என்பதை மிகத் தெளிவாகக் காட்டும் புத்தகத்தை நாம் அடிக்கடி காண்பதில்லை. ஒரு குறிப்பிட்ட தத்துவம் முடிவுக்கு வந்தது எப்படி?  ஒரு தத்துவம் காட்டிய வழி ,அடுத்த தத்துவத்துக்கு எவ்வாறு வழி செய்தது? என்ற கேள்விக்கெல்லாம் இந்த புத்தகம் பதில் சொல்கின்றது.

இந்த புத்தகத்தில்  ஓவ்வொரு மேலை தத்துவப் பள்ளியையும் அதன் மையம், அதன் நெறிமுறைகள், அதன் உச்சம் என மூன்றாக பிரித்து அலசும் ஆசிரியரின் உத்தி வாசகனுக்கு பலனளிக்க கூடியதாக இருக்கின்றது. புதிய தத்துவங்களை கற்கையில் இந்த உத்தியை பயன்படுத்தி கற்கலாம். இந்த நூல் தன் கூறுபொருளை அதன் மையப்பொருள் மாறாமல் எளிமையான சொல்லில் சொல்கின்றது.

நூலாசிரியர் குறிப்பிட்ட தத்துவ மேதையை, தத்துவ பின்புலத்தினை பேசுகையில் முக்கிய அம்சங்களை மட்டும் தொகுப்பதால், விடுபடல் நடக்கின்றது. மேலும் மேலை மரபின் பெரும் தத்துவ மேதைகள் அனைவரையும் பற்றி இந்த புத்தகம் பேசவில்லை.பல விடுபடல்கள் உண்டு. புத்தகமே சுருக்கமான வரலாற்று பார்வை அளிக்கும் நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளதால் இது எதிர்பார்க்க கூடியதே.

சமகாலத்தில் தகவல் நம்மை தொடும் விதம் குறித்த விழிப்புணர்வு அவசியம். தொழில்நுட்பம் உருவாக்கும் 24 மணி நேர தகவல்கள் என்பது நம்மை அரவணைத்து வடிவமைக்கிறது. தொழில்நுட்பம் என்பது அதன் சொந்த வேகமும் திசையும் கொண்ட ஒரு வரலாற்று சக்தியாக இன்றுள்ளது. இது சில நேரங்களில் நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாக தோன்றுகிறது. இந்த சூழலில் தகவல்களாக வரும் தர்க்கங்களின் மூல வடிவங்களை காணுதல் அவசியம். அதற்கு இந்த புத்தகம் கொடுக்கும் பார்வை உதவும்.

தத்துவங்கள் ரோமானிய அரசாகவும், கிறிஸ்தவ அரசுகளாகவும், ப்ரெஞ்ச் புரட்சியாகவும், குடியரசு தேசமாகவும், மார்க்சிய அரசுகளாகவும் வரலாறெங்கும் நடைமுறை படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. தத்துவங்கள் பேச்சாகவும், பேசி ஓய்ந்த சொல்லாகவும் இல்லாமல் கண் முன்னே பருவடிவமாக எழும்புகின்றன். சமகாலத்திலும் செய்தியாக, தகவலாக,செயற்கை நுண்ணறிவாக தத்துவங்கள் பல வடிவம் கொள்கின்றது. இப்புத்தகத்தின் அறிமுகம் நாம் ஏற்கனவே காணும் தேசமாக, சேவையாக, செய்தியாக, தகவலாக,செயற்கை நுண்ணறிவாக காணும் பருவடிங்களின் உள்ளே உள்ள சூட்சும உடலான தத்துவம் எது என்ற ஆர்வத்தினை தூண்டுகின்றது.

நம்மை 24 மணி நேரம் தொடும் செய்திகளை கொண்டு ஒரு இந்த புத்தகத்தில் இருந்து கற்றுக் கொண்டதை பயன்பாடாக மாற்றும் உதாரணம் பார்க்கலாம்.

சுரைக்காய்க்கு உப்பில்லை என்பது செய்தி என எடுத்துக் கொள்ளுங்கள். 

இதை கிரேக்க வடிவமைப்பில் சொன்னால்  இந்த பிரபஞ்சத்தினை நோக்கினால் ஓவ்வொரு அம்சத்துக்கும் ஒரு பயன் உண்டு, சூரியனுக்கு ஒரு பயன், சந்திரனுக்கு ஒரு பயன், அது போல காய்களில் ஓவ்வொரு காய்க்கும் ஒரு பயன், உப்பில்லாத தன்மை சுரைக்காயின் பயன் என சொல்லலாம். அந்த நியாயம் சொல்லல் பிரபஞ்ச அமைப்பில் ஓவ்வொன்றுக்கும் இடம் உண்டு என்ற பார்வையில் இருந்து வருகின்றது

உப்பென்பது உலகம் முழுதும் உள்ள சுவை என  விளக்கம் வரும். நவீனத்துவர் உப்பு தன்மை என்பது சுரைக்காயில் எந்த மூலக்கூறால்  உருவாகிறது, அதை நாவின் எந்த நரம்பு சுவையாக்குகின்றது என்ற தர்க்க அடிப்படைகள் சொல்லப்படும். எந்த வேதியல் மாற்றம் சுவையாக்குகின்றது என்ற காரணம் சொல்லப்படும். இந்த நியாயம் சொல்லல் பிரபஞ்சத்தினை  விளக்கம் , தர்க்கம், காரணம் சொல்லி பகுப்பாய்வு செய்யலாம் என்ற பார்வையில் இருந்து வருகின்றது.

பின்நவீனத்துவம் சுரைக்காய்க்கு உப்பில்லை என சொல்பவர் என்ன பயன் பெறுகின்றார், சுரைக்காய்க்கு ஏன் உப்புத்தன்மை மறுக்கப்படுகின்றது, உப்புத்தன்மை அதிகாரம் எங்கே உருவானது, சுரைக்காய்க்கு உப்பு உண்டென சொல்லும் அதிகாரம் எப்படி உருவாக்குவது  என நகர்த்தும். இந்த வகை நியாயம் சொல்லல் பிரபஞ்சம் குழப்பமானது, இங்கு கட்டுடைத்தே ஏன் நடக்கின்றது என அறிய இயலும் என்ற பார்வையில் இருந்து வருகின்றது.  

மேலே ஒரே செய்தி , அதை சொல்லும் சட்டகம் பலவாக இருந்தால் எப்படி இருக்கும் என பார்த்தோம்.   

இந்த செய்தியை நுகரும் சமகால நண்பர் அதன் செய்தியின் சட்டகத்தினை கவனிக்க இடம் இருக்காது, மாறாக அதன் தர்க்கம் சொல்வது, நியாயம் சொல்வது என ஈடுபடுவார். 

நம்மை யாரையாவது குழப்ப வேண்டுமெனில் அவர் தரப்புக்கு கிரேக்கம் கொஞ்சம், நவீனம் கொஞ்சம் எடுத்து, நம் தரப்பினை பின்நவீனத்துவத்தில் வைத்தால் போதும். நம் தரப்புக்கு இது புரியவில்லை எனில், அவர் நம்மை தூண்டில் மீனாக போட்டு இழுக்கலாம். நாம் அவர் தரப்பினை பேச நவீனத்துக்கும், நமது தரப்பினை கட்டிக் காக்க பின்நவீனத்துவத்துக்கு செல்ல வேண்டும் என நிலை வரும். பின் நவீனத்துவம் உடைக்கும் கருவி, நவீனத்துவம் பொதுவில் அமைப்புகளை எழுப்பும் கருவி. ஆற்று மண்ணில் வீடு கட்ட ஒருவருக்கு  அவரது கையை பயன்படுத்தலாம் என சொல்லி விட்டு, இன்னோருவருக்கு கையில் சுத்தியலை கொடுத்து விட்டு சுத்தியலால் மட்டும் மண்ணை அள்ளி வீடு கட்ட சொல்வது போலாகும்.  தத்துவத்தின் வடிவம் புரிந்து கொள்வது இது போல அபத்தங்களை அடையாளம் காண விரும்புபவருக்கு பயனாகும். இல்லாவிட்டால் சுத்தியலில் மண் அள்ளி வீடு கட்டும் முயற்சியே மிஞ்சும்.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.