நீர்ப்பறவைகளின் தியானம்

This entry is part 47 of 48 in the series நூறு நூல்கள்

[08/06/2022 அன்று விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) ஒருங்கிணைத்த க.நா.சு உரையாடல் அரங்கில், எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களின் “நீர்ப்பறவைகளின் தியானம்” சிறுகதை தொகுப்பை முன்வைத்து ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.]

“நீர்ப்பறவைகளின் தியானம்” கதை தொகுப்பில் கிருஷ்ணன் என்ற கதாப்பாத்திரம் சொல்லும் ஒரு வரியில் இருந்து இந்த உரையை தொடங்கலாம். நாஞ்சில் நாடனின் கும்பமுனி போல, கிருஷ்ணன் என்பது யுவன் சந்திரசேகருடைய புனைவு-ஆளுமை.

‘நண்பர்கள் வட்டத்தில் “ஆடி கிருஷ்ணன்” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். “ஒன்று வாங்கினால் நாலு இலவசம்” என்கிற ஆடி தள்ளுபடி போல என் கதைகள் இருக்கின்றனவாம்’ – கிருஷ்ணன்’. 

கதைத் தொகுப்பில் பத்துக் கதைகள் இருக்கின்றன. நான் எண்ணியதில் கடிதங்கள், பகுதிகள் என  ஐம்பது குறுங்கதைகளாவது இருக்கும். சிறுகதை என்பது ஒரு வீடு என்றால், யுவனுடைய கதைகள் அடுக்குமாடிக் குடியிருப்புகள். நிறைய கதைகளை குறுநாவல்கள் அல்லது “கதைக் கொத்துக்கள்” என்றே சொல்லலாம்.

சிலிக்கான் ஷெல்ஃப் தளம் நடத்தும் நண்பர் ஆர்வி மூலமாக எனக்கு யுவன் அறிமுகமானார். ஆர்வி யிடம் இருந்து கு.பா.ரா, ஜெயகாந்தன், அசோகமித்திரன் என மூத்த தலைமுறை எழுத்தாளர்களின் புத்தகங்களை வாங்கி வந்து படிப்பேன். அந்தத் தலைமுறை எழுத்தாளர்களின் சிறுகதைகள் ஒரே ஒரு சம்பவம், ஒரு இடத்தில் நடக்கும் கதைகளாக இருந்தது எனக்கு சலிப்பாக இருந்தது. அவை செவ்வியல் சிறுகதை வடிவங்கள் எனவும், அந்த சிறுகதைகளின் முக்கியத்துவமும் அப்போது எனக்கு புரியவில்லை. ஆர்வி பரிந்துரைத்து, பத்து வருடங்களுக்கு முன்பு “நீர்ப்பறவைகளின் தியானம்” கதை தொகுப்பை வாங்கினேன்.  அப்போது என்னை கவர்ந்த முதல் அம்சம் என்பது இதில் உள்ள கதைகள் எல்லாமே படிப்பதற்கு “ஜாலி”யாக இருந்தன என்பதுதான். “ஜாலி” என்பது வாசிப்பின்பம் / சுவாரஸ்யம் / சலிப்பின்மை என்ற அர்த்தத்தில் சொல்கிறேன்.  “இடம் பெயர்தல்” பேய்க்கதை பாணி, “காணாமல் போனவனின் கடிதங்கள்” என்ற துப்பறியும் பாணி கதை என விதவிதமான கதைக் கலவையாக இருந்த யுவனுடைய கதைகள் எனக்கு பிடித்திருந்தன.   

காலையில் ஒன்பது மணிக்கு வேலைக்கு சென்று மாலை ஐந்து மணிக்கு திரும்பும் “9-5” வேலைகள் இப்போது எந்த துறையிலும் இல்லை. இந்த வாரம் நான் மேற்பார்வை செய்யும் பணியில் ஒரு தொடர் சிக்கல் (ஆன்-கால் / செவ்-1 / பி 1 என சொல்வோம்.) கிடைத்த கால் மணி நேர இடைவெளிகளில் “நீர்ப்பறவைகளின் தியானம்” கதைத் தொகுப்பை இரண்டாவது முறை படித்தேன். “நான்காவது கனவு” கதையின் ஜாமங்கள், “காணாமல் போனவனின் கடிதங்கள்” சிவச்சந்திரனின் கடிதங்களை மாற்றி மாற்றித்தான் படித்தேன். முதல்முறை படித்ததன் சுவாரஸ்யம் எவ்வகையிலும் குறையவில்லை. அதற்குக் காரணம் இந்தக் கதைகளின் வடிவமே துண்டு துண்டான நிகழ்வுகள் என்பதுதான்.  

இந்த சுவாரஸ்யம் / சலிப்பின்மை என்பது எப்படி உருவாகிறது என்று பார்த்தால் வெவ்வேறு காலங்களில்-இடங்களில் கதைகள் நடக்கின்றன என்பதால். “பெரியவுக தெரியாமயா சொல்லிவச்சிருக்காக  – ராசாவா இருக்கறதவிட ராப் பிச்சையா இருக்கறது எம்புட்டோ நிம்மதிண்டு?” போன்ற சொலவடைகளை யுவன் உருவாக்குகிறார். புதுமைப் பித்தன், கு.ப.ரா கதை மாந்தர்கள் யுவனின் கதைகளில் உலாவுகிறார்கள். அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்து, “நில்லாய் நெடுஞ்சுவரே” போன்ற கம்பர் பாடல்கள் உள்ளன. ரால்ப் ஷ்னைடர், ஆல்பர்டோ பொக்காச்சியோ, கிளாட் லூமியர் — அறிஞர்கள், அறிவியலாளார்கள், புத்தகங்களின் பட்டியல் நிறைய வருகிறது. மேலே சொன்ன பட்டியலில் ஒன்றிரண்டு உண்மையான பெயர்கள் உண்டு. மற்றவர்களை நீங்கள் கூகிளில் தேடினால், “கிறக்கம்” கதையில் முனியனின் கதைகளை பற்றி கிருஷ்ணன் அம்மா நினைப்பது போல “அம்புட்டும் புளுகு”.  

இந்த “புளுகு” (புனைவு) கதைகளின் நம்பகத்தன்மை குறித்து  வாசகர்கள் எழுப்பும் கேள்வியையும் இந்த கதைகளிலே ஒரு கேள்வியாக வந்து, பதிலும் சொல்லி, கதை மேலே சொல்கிறது.  உதாரணமாக “நீர்ப்பறவைகளின் தியானம்” கதையில் கதைசொல்லி ஒரு பழைய புத்தகக் கடையில் ஒரு பத்திரிகை வாங்குகிறார். அதில் முந்தைய இதழில் வெளியான ஒரு கட்டுரைக்கு எதிர்வினையாக மூன்று கடிதங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்தக் கடிதங்களை கதைசொல்லி மொழிபெயர்க்கிறார். ஒரு வெள்ளையர், கருப்பர், ஆசியர் எழுதியது. இந்த கடிதங்களில் உள்ள தர்க்க ஓட்டைகளை சுட்டிக்காட்டி, அந்த பத்திரிக்கையே எழுதிய  போலியான கடிதங்கள் என கதைசொல்லி நினைக்கிறார். பிறகு அவருக்கு சந்தேகத்தின் பதிலாக “தணக்கன் குளம் சாமி” (முன்பு ஊரில் இருக்கும்போது பக்கிரி இப்போது மகான்) அடிக்கடி சொல்வது நினைவிற்கு வருகிறது – “ஐயிரெ, சட்டி முக்கியமா, சாப்பாடு முக்கியமா” ?  

“சட்டி” என்பது யுவன் உருவாக்கும் இந்த கதைப்புலம்.  யுவனின் விரிவான வாசிப்பு. இந்த கதை நிகழ்வுகளில் உள்ள அபாரமான புனைவுத்திறன் (creativity) பார்த்து நான் அசந்துவிட்டேன். சரி, இதில் இருக்கும் “சாப்பாடு” என்ன ? வாழ்வின் நிகழ்வுகள் தற்செயல்கள் போல தோற்றமளிக்கின்றன, அவற்றின் இடையே நாம் அறியாத ஒரு தர்க்கம் உள்ளது என்பதே கதைகளில் உள்ள “சாப்பாடு”.  அதை “மாற்று மெய்மை” என்கிறார். “எதிர்காலம் அவ்வளவு ஒன்றும் புகைமூட்டமானது அல்ல. மிகத் துல்லியமான கணக்குகள் மூலம் எட்டிப்பார்த்தால் எதிர்காலம் திறந்து கிடக்கும் வெட்டவெளி கட்டாந்தரை” / “எங்களுக்கு பார்க்கக் கிடைக்கிற உலகத்தில் எங்களை மாதிரி சாதாரணர்கள் பார்க்க இயலாத பல அடுக்குகள் உண்டு” போன்ற வரிகள்  இந்த “மாற்று மெய்மையின்” சாரம். இந்த “மாற்று மெய்மையை” ஒரு ஆன்மீகப் பார்வை என்று சொல்லலாம். 

மாற்று மெய்மை என்று சொல்லும் நேரத்தில் பண்டைய கலாச்சாரம், பாரத சமுதாயம் பேணிய விழுமியங்கள் என மரபின் மீது தீவிரமான விமர்சனப்பார்வையும் யுவனுடைய கதைகள் வெளிப்படுத்துகின்றன.  மகாபாரதத்தில் வரும் “சுக்ராச்சாரியார்-கசன்-தேவயானி கதை” நமக்கு தெரியும். அசுர குரு சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானி, அவருடைய சீடனான கசனை விரும்புகிறாள். குருவின் மகள் சகோதரிக்கு சமமானவள் என தேவயானியின் காதலை மறுக்கிறான் கசன். இந்த கதையின் மூன்று வடிவங்கள் “விஷக்கோப்பை” கதையில் வருகிறது.  கல்லூரிப் பாடத்திட்டத்தில் துணைப்பாடமாக இருக்கும் “எழுதப்பட்ட” கதை. (செஞ்சுலதா-லட்சுமண ரெட்டி கதை அப்படியே மகாபாரத கதையின் நவீன வடிவம்தான் – பினாயில் வாடை என இதை குறிப்பிடுகிறார்). அதை எழுதிய எழுத்தாளர் “சொல்லும்” ஒரு வடிவம் (சலபதி ராவ்-நிர்மலா தேஷ்பாண்டே). கதைசொல்லி “பார்க்கும்” ஒரு வடிவம். “சொல்லப்படும்” மற்றும் “பார்க்கப்படும்” கதையின் வடிவங்கள் “எழுதப்பட்ட” வடிவத்திற்கு நேரெதிர். இன்னொரு உதாரணம்: “சுவர்பேய்” கதையில் சுருட்டு பிடிக்கும் முத்தாச்சி கிளவி “அவ்வையாரின்” ஒரு வடிவமாகத்தான் வருகிறாள்.

***

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர்  அவருடைய தலைமுறை எழுத்தாளர்களில் தனக்கான வலைத்தளமோ, ப்ளாக்கோ இல்லாதவர். பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் அவர் இல்லை. எனக்கு இது மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.  “நீர்ப்பறவைகளின் தியானம்” புத்தகத்தை வாங்க விருப்பமுள்ளவர்கள், இங்கே செல்லவும்: பனுவல் | அமேசான் | உடுமலை | காமன்ஃபோக்ஸ் | மெரினா | நூல் உலகம்

நன்றி.

தொடர்புள்ள பதிவு: க.நா.சு காணொளி அரங்கு, அமெரிக்கா – யுவன் சந்திரசேகர்

Series Navigation<< யதார்த்தங்களின் சங்கமம் – நீலகண்டம் நாவல்ஷோபாசக்தியின் இச்சாவும் மானுட அவலமும் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.