பாமாவின் கருக்கு

This entry is part 14 of 48 in the series நூறு நூல்கள்

காலச்சுவடு செவ்வியல் பதிப்பிற்கான முன்னுரை

பனங்கருக்கால் அறுபடுவது போல் வாழ்க்கை அமைந்துவிடும்போது அது  வாழ்க்கையின் குறியீடாகிவிடுவது இயல்புதான். ‘கருக்கு’ புத்தகத்தைப் படிப்பதற்கு முன் கருக்கு என்ற சொல் புதுக் கருக்கு என்று நாம் கூறும் பொலிவைக் குறிக்கிறது அல்லது விடிவதற்கு முன் உள்ள கருக்கலைக் குறிக்கிறது என்றுதான் நினைத்திருந்தேன். பனங்கருக்கைத் தொட்டிருந்தால் தானே அது இரு பக்கமும் ரம்பம் போல் அறுக்கும் கத்தி போன்றது என்று தெரியும்? பிறகு ஒரு முறை கிராமம் ஒன்றிற்குப் போனபோது பனங்கருக்கைத் தொட்டுப் பார்த்தேன். சட்டென்று விரலைக் கீறி விட்டது. ரத்தம் வந்தது. வலிக்கவும் செய்தது. பனங்கருக்குடன் குழந்தையில் விளையாடியவர் பாமா. முதலில் அவர் வாழ்க்கையில் குழந்தைப் பருவத்தில் பனங்கருக்கு விரலைக் குத்தியது. பிறகு பனங்கருக்கு போன்ற வாழ்க்கை நிகழ்வுகள் அவர் நெஞ்சைக் குத்தின. அதனால்தான் தன் வாழ்க்கையைப் பற்றி எழுதும்போது கருக்கு என்ற பெயர் அதற்குப் பொருந்தும் என்று நினைத்ததாக பாமா கூறுகிறார். ஒன்பது அத்தியாயங்களும் ஒன்பது வகையாக நம்மைக் கீறுகின்றன. ஒன்பதாயிரம் வகைகளில்   கீறின   இடத்தையே மீண்டும் மீண்டும்  குத்துகின்றன.   முன்னும்   பின்னும்   ரம்பத்தின் அசைவுபோல் நகர்ந்தபடி இருக்கும் கதைப்போக்கு.

மழைக் காலத்தில் நிறைந்து வழியும் கம்மாயும், அதில் மீன் பிடிப்பதும் குழாயடிச் சண்டையும் என ஆரம்பித்த   பின்   சுருக்கென்று   ஒரு   கீறல்   சாதித்தெருக்கள் பற்றிச் சொல்லும்போதும், போஸ்டாபீஸ், பஞ்சாயத்து போர்டு, பால் பண்ணை, பெரிய கடைகள், கோவில், பள்ளிக்கூடம்   எல்லாம்   “அவங்க”   தெருக்களில்தான்   என்று சாதாரணமாகக்  குறிப்பிடும்போதும், நாயக்கர்மாருக்குச் சேவகம் செய்யும் பாட்டிகளைப் பற்றிச் சொல்லும்போதும், நாயக்கர் வீட்டுச் சிறு குழந்தைகள்கூட பாட்டிகளைப் பேரிட்டு அழைப்பதைக் குறிப்பிடும்போதும். மூன்றாம் வகுப்பு வரை  ண்டாமை என்னவென்று தெரிவதில்லை. பிறகு அது துரத்தும் நாகமாய் விரட்டுகிறது. பள்ளியிலும் கல்லூரியிலும் கிறிஸ்துவ சபையிலும் விதம்விதமாகப் படமெடுக்கிறது. பள்ளியில் எல்லாரும் விளையாடி ஒரு பிஞ்சுத் தேங்காய் விழுந்தாலும் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணுக்குத்தான் திருட்டுப் பட்டம் கிடைக்கிறது. அந்தச் சாதிப் பெண் ஆரோக்கியமாக இருந்தாலும் திட்டு விழுகிறது பள்ளியில் போடும் சாப்பாட்டைத் தின்று பருத்துப்போனவள் என்று. பள்ளியில் நன்றாகப் படித்தாலும் பொதுச் சபையில் சாதிப் பெயரிட்டுத்தான் அழைப்பு. பலர் படிக்கும் கல்லூரியிலும் பிற்படுத்தப்பட்டோருக்குச் சாயந்திர ஸ்பெஷல் ட்யூஷனுக்காக அரிஜனப் பிள்ளைகளை எழுந்து நிற்கச் சொல்லும் அவமானங்கள், வீட்டில் தம்பி தங்கச்சிகள் புது நன்மை வாங்குவதால் வீட்டுக்குப் போக உத்தரவு கேட்கும்போது அது மறுக்கப்படுகிறது, “ஒங்க சாதில என்னத்தப் பெரிசா புது நன்மை வாங்குறதை எல்லாம் கொண்டாடப் போறாங்க?” என்ற விமர்சனத்தோடு. ஆசிரியர் படிப்பு, ஆசிரியராகச் சேரும் ஒரு மடத்துப் பள்ளிக்கூடம் எதிலுமே சாதிப் பேச்சு இல்லாமல் இல்லை. தன் சமூகப் பிள்ளைகளுக்கு உதவ வேண்டும் என்ற ஆசையில் திருச்சபையில் கன்யாஸ்திரியாகச் சேர்ந்தபோது சில சபைகளில் அரிஜனர்களைச் சேர்ப்பதில்லை என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல் கிடைக்கிறது. எல்லாம் முடிந்து ஒரு கன்னியர் மடத்தில் சேர்ந்த பின்னும் சுற்றிலும் சாதித் திமிர் பிடித்தவர்கள். தன் சாதியைச் சொல்லும் தைரியம் கூட இல்லாமல் போகிறது. கோபமும் தாபமும் மனத்தினுள் பெருகியவண்ணம் நாட்கள் ஓடுகின்றன. பிறகு மடத்திலிருந்து வெளியேற்றம்.

தன் கதையைக் கூற நினைக்கும்போது இந்த அத்தனை நிகழ்வுகளையும் மீண்டும்மீண்டும் மனம் நினைக்கிறது. முதலில் மறந்தது பின்னால் நினைவுக்கு வருகிறது. ஓயாது உழைத்த அம்மாவும்   பாட்டிகளும்   நினைவுக்கு   வருகிறார்கள்.   செய்த வேலைகள் பற்றி நினைக்கத் தோன்றுகிறது. காட்டு வேலை, கடலை பிடுங்கி ஆயும் வேலை, நாயக்கமார் வீடுகளுக்குப் போய் கடலை  உடைக்கும் வேலை,  ஈராங்காய்  பொறுக்க, முள்ளுப் பொறுக்கப்போனது,  விடிகாலையில்  எழுந்து  மலங்காட்டுக்குள் போய்   முட்கள்   கீறுவதைப்   பொருட்படுத்தாமல்    காய்ந்த விறகைப் பொறுக்கிக் கட்டிக்கொண்டுவந்தது, காடருக்குத் தந்த நாலணா லஞ்சம் இவை எல்லாம் மனத்தில் தோன்ற கூடவே ஒரு முறை விறகுக்கட்டைக் கொண்டுவந்துவிட்டு, வீட்டுச் சுவரில் ஊன்றிக்கொண்டபடி ரத்தரத்தமாய் அம்மா வாந்தி எடுத்தது நினைவுக்கு வருகிறது. பத்தாவது பரீட்சை முடிந்து வந்தபின் அம்மாவுடன் நாயக்கமார் தெருவிலிருந்து மாவிறகு பொறுக்கி, கட்டிச் சுமந்து வந்தது நினைவுக்கு வருகிறது. நாயக்கமார் தெருவிலிருந்து அவர்கள் தெருவுக்கு வர நாடாக்கமார், தேவர்மார் தெருக்களைத் தாண்டி செக்கடி பஜார் தெரு வழியாக வந்தது ஞாபகம் வருகிறது. பேருந்தில் பயணம் செய்தபோது பக்கத்தில் அமர மற்றவர்கள் மறுத்ததும்,  தீப்பெட்டி  ஒட்டும்  வேலையும்  பட்டாசு  வேலையும்  செய்யும் குழந்தைகள்   விடிகாலையில்   எழுந்துபோகும்   தோற்றமும் மனத்தில் எழும்பி வருகின்றன.

சாதிச்   சண்டைகளும்,   போலீஸ்காரர்கள்   தெருக்களில் புகுந்து ஆண்களைப் பிடித்துக்கொண்டு போவதும், பெண்கள் எல்லாவற்றையும் சமாளிப்பதும், ஆண்கள் காடு மலைகளில் மறைந்துகொள்ளும்போது அவர்களுக்கு ரகசியமாகச் சாப்பாடு எடுத்துப்போவதும், ஒரு குழந்தையின் சாவு நேரும்போது ஒளிந்திருக்கும் தந்தையை முக்காடு போட்டு ஒரு பெண்ணாய் வந்து பிள்ளை முகத்தைப் பார்க்க வைப்பதற்கான யோசனையைச் சொல்லி அதைச் செய்துகாட்டும் பாமாவின் பாட்டியும் நினைவுக்கு   வரும்போதே   ஈஸ்டர்   கிறிஸ்மஸ்   பண்டிகைக் கொண்டாட்டங்களும் மைக் செட்காரர் போட்ட பாடல்களும் அந்த நினைவுகளுடன் கலந்துபோகின்றன. “தெருவில் வாராறே, தெருவில் வாராறே – சேசு தேரில் வாராறே” என்று பாடியபடி பெண்கள் கும்மியிட்டதும் மனத்தில் வந்துபோகிறது. பட்டாளத்தில் இருக்கும் அப்பா வீட்டில் இல்லாதபோது சாப்பிட்ட குருநாக் கஞ்சியும், கருவாட்டுத் தண்ணியும், ரவைச் சோறும் கூழும் கூழுடன் கடித்துக்கொள்ள வெங்காயம், வேர்க்கடலை, அச்சு வெல்லம், பச்சை மிளகாய், கையில் பணம் இருந்தால் பொரிகடலைத் துவையல், நாடார் கடையில் விற்கும் ஊறுகாய், முதலாளிகள் வீட்டிலிருந்து கொண்டுவரும் கத்தரிக்காய் மிளகாய் எல்லாம் போட்டுச் செய்த கடுச்சகீரை இவற்றை நினைக்கும்போது அவர் பட்டாளத்திலிருந்து வரும்போது சாப்பிட்ட நல்ல சாப்பாடும் நாக்கை ஊறவைக்கிறது. ஞாயிற்றுக் கிழமைகளில் மதியத்தில் கூழுடன் மசாலா இல்லாமல் உப்பு போட்டு வேகவைத்த மாட்டுக்கறியும் இரவுச்  சோறும் மாட்டுக்கறிக் குழம்பும். அப்பா இல்லாத நாட்களில் குழந்தைகளை எப்படியோ கூழோ சோறோ கேப்பங்களியோ வேகவைத்த முருங்கைக் கீரையோ வைத்துப் பசியாற்றும் அம்மா. சிலேபிக்கெண்டையும் கெண்டை   மீனும்   மலிவாகக்   கிடைக்கும்   நாட்களில்   மீன் குழம்பும்   சோறும்.   இந்தச்   சாப்பாட்டை   நினைக்கும்போது மடத்தில்   கன்யாஸ்திரிகள்   வறுமையாக   வாழ்வோம்   என்று வார்த்தைப்பாடு எடுத்தாலும் மடத்தினுள் வறுமையின் சுவடே இல்லாமல் பழங்களும் கறியும் மீனும் மட்டனும் சாப்பிடும் காட்சிக்கு மனம் தாவுகிறது.

அத்தனையும் மனத்தில் முன்பின்னாகக் கலந்துபோன மனநிலையில் அவை சீராகவும் சிதறியும், கோவையாகவும் கோவையற்றும், சீற்றமாகவும் கண்ணீராகவும் பொங்கிவரும் பிரதிதான் கருக்கு. கருக்கு வெறும் நாவலல்ல; அது பாமாவின் வாழ்க்கையின் பின்னோக்கிப் பார்க்கும் ஒரு கட்டம். ஆதரவற்று, எதிர்காலம் என்னவென்று தெரியாத, புரியாத ஒரு கட்டத்தில் தன்னை, தன் மக்களை, தன் சமூகத்தை நினைத்துப்பார்க்கும் முயற்சி. 1992இல் இது வெளிவந்தபோது புனைகதை படைக்கும் பலரை இது உலுக்கிப்போட்டது. தமிழ்நாட்டுப் பெண்களின் சமூகச் சரித்திரத்தைக் குறித்து ஆராய்ச்சி செய்து எழுதிக்கொண்டிருந்த நான் எழுதுவதை நிறுத்திவிட்டு விடுபட்டுப்போனவற்றைத் தேடத்   தொடங்கினேன்.   1989இல்   வெளிவந்த   சிவகாமியின் ‘பழையன கழிதலும்’ இந்தத் தேடலுக்கான வெளியைத் திறந்திருந்தாலும் ‘கருக்கு’ அந்த வெளியின் மேடுபள்ளங்களை, அதில் உள்ள கற்களை, முட்களை, தாண்ட முடியாத பெரும் பாறாங்கற்களை, அதிலுள்ள புனல்களை, கால் ஊன்ற முடியாத சகதிப் பகுதிகளை, புதைகுழிகளை, சோற்றின் மணத்தை, மலத்தின் நாற்றத்தை ஆங்காரத்துடன்  தீட்டப்பட்ட ஒரு கலவை ஓவியமாகக் காட்டியது.

‘கருக்கு’ வந்தபின் பல நேசக்கரங்களும் நட்புக்கரங்களும் நீண்டன. ஆனால் பாமா எல்லாரிடமிருந்தும் விலகியே இருந்தார் பல ஆண்டுகள். அவர் என்னைத் தன் தோழியாகக் கருதப் பல ஆண்டுகளாயின. அத்தனை ஆண்டுகளும் அவருக்குத் தேவை என்பதை நானும் உணர்ந்து காத்திருந்தேன் அவர் நட்புக்காக. பெண் எழுத்தாளர்கள் கலந்துகொண்ட கருத்தரங்கு ஒன்றில் எல்லா நாட்களும் இருவரும் அருகருகில் அமர்ந்து பலதைப் பேசினோம். நான் ஏதோ எழுதிக் காட்டியபோது “சரி குருவி” என்று பதிலளித்தார் என் ஸ்பாரோ நிறுவனத்தின் பெயருடன் என்னை இணைத்து. பிறகு அவர் என் வீட்டுக்கு வந்து தங்கினார் ஒரு நாள். அவர் வீட்டுக்குச் சென்றேன் நான் அவர் அழைத்ததும்.   இப்படியாக   உருவான   எங்கள்   நட்பு   இந்தச் செவ்வியல் பதிப்புக்கான முன்னுரையை நான் எழுதுவது வரை வந்துள்ளது.

செவ்வியல் பண்புகளைக் கொண்ட ‘கருக்கு’ செவ்வியல் பதிப்பாக ஒவ்வொரு தசாப்தத்திலும் வெளிவர வேண்டும் என்றே நான் கருதுகிறேன்.  காரணம் நாம் சரித்திரத்தை வெகு வேகமாக மறப்பவர்கள். குறிப்பிட்டுச் சொன்னால் தலித்துகளின் வாழ்க்கைச்   சரித்திரங்களையும்,   பெண்கள்   வாழ்க்கைப் போராட்டங்களையும் மறப்பது நமக்கு எளிதாக இருக்கிறது. அப்படி எளிதாக்கிக்கொள்வது நமக்கு வசதியாக இருக்கிறது. மனத்தைக் குத்துபவற்றை அவை இல்லாதவைபோல் பாவனை செய்துகொண்டு இருப்பவர்களின் நிம்மதியான தூக்கத்தைக் கெடுக்க, அவர்களை முட்டிமுட்டித் தொல்லை தர, அவர்களின் தடித்துப்போன தோல்களைக் கீறிவிடக் கருக்கு தேவைப்படுகிறது. உருவகமாகவும் புத்தகமாகவும்.

25 நவம்பர் 2014

Series Navigation<< தத்வமஸி: புத்தக அறிமுகம்பர்மா வழிநடைப் பயணம் – வெ. சாமிநாத சர்மா >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.