தெய்வமரம்

பெரிய சாலையில் மாலைஒளி படும்படி அமர்த்தலாக அமைந்திருந்தது “மங்களவிலாஸ்” வீடு. மழைக்கும் வெய்யிலுக்கும் சோர்ந்து காரைகள் பெயர்ந்த பழையபாணி வீடு. அந்த இடம் வந்ததும் தன்னையறியாமல் தலைதூக்கிப் பார்த்துவிடுவது சிவமணியனின் வழக்கம். ஏதோ ஒரு பய உணர்ச்சியோடுதான் அந்த வீட்டிற்குள் நுழைவான் சிவமணியன். அந்த வீடு தரும் அமைதியின்மையை அவனால் புரிந்து கொள்ள முடிந்ததில்லை. முத்தையாவிற்குப் பரம்பரையாக வந்திருக்கும் சொந்த வீடு அது. முத்தையா சாந்தியைத் திருமணம் செய்து கொண்டு வந்தபின்னே வீட்டிற்கு வண்ணப்பூச்சு அடிக்கப்பட்டது. அதற்குமுன் இதைவிட மோசமாக இருந்தது. காம்பவுண்ட் சுவரைத் தாண்டி நீண்ட வாசற்படியில் சரியாகக் கண் தெரியாத முத்தையாவின் அம்மா எப்போதும் அமர்ந்திருப்பாள். உள்ளே வருபவர்களை நோக்கி அவள் எதையோ சொல்கிறாள் எனத் தோன்றும். மாறாத கண்களுடன் வெற்றிலை பாக்கு மெல்வதை உள்ளே வருபவர்கள் தாமதமாகப் புரிந்துக் கொள்வார்கள். இன்று அந்த இடத்தில் முத்தையா அமர்ந்திருந்தார்.