இலக்கிய செயல்பாட்டை விமர்சன காலம் விமர்சனமற்ற காலம் என்று இரண்டாக பிரித்துவிடலாம். 2000க்கு முன்பு வரை கடுமையாக விமர்சனங்கள் இருந்தன. ஒவ்வொரு கதைக்கும் மற்ற சக எழுத்தாளர்களிடமிருந்து எதிர்வினைகள் வந்தன. பின் அதற்கு பதிலளித்தது அடுத்த இதழில் வந்தது அடுத்த இதழில் மீண்டும் விமர்சனங்கள் தொடர்ந்தன. எழுத்தாளர்கள் தனிப்பட்ட முறையில் கடிதங்கள் எழுதியும் விமர்சித்துக் கொண்டார்கள்.
2000க்கு பின் வந்தது காலம் விமர்சனமற்ற காலம். இணைய இதழ்களில் வெளியானதால் அங்கேயே உடனுக்குடன் எதிர்வினைகள் எழுதப்பட்டன. ஒரு கட்டத்தில் அவை வசைகளாக மாறிப் போயின. இப்போது கடந்த பத்தாண்டு காலத்தில் விமர்சனங்களை நாம் எதிர் கொள்ள முடியாமல், அவை வசைகளாக கொள்ளப்படும் என்பதால், மதிப்புரைகள் மட்டும் பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கிறோம்.
இந்தசூழலில் அச்சு இதழ்களில் மட்டுமே எழுதி அதை நூலாக்கியிருக்கும் அசோக் ராம்ராஜின் ரித்னாபூரின் மழை தொகுப்பைப் பற்றி விமர்சனங்கள் தேடிப் பார்க்கும்போது, வெளிவந்து மூன்றாண்டுகள் ஆனபின்னும், ஆச்சரியமே மிஞ்சுகிறது. சொல்லும்படியான ஒரு விமர்சனமும் இல்லை.

ஒர் இளம் புதிய எழுத்தாளரின் முதல் தொகுப்பில் தெரியும் கேளிக்கைகள், விளையாட்டுகள் எதுவும் அசோக் ராம்ராஜ் எழுதியிருக்கும் முதல் தொகுப்பான ரித்னாபூரின் மழை தொகுப்பில் இல்லை. ஆனால் புதிய வடிவங்களை முயற்சி செய்து பார்ப்பது, புதிய சொற்களை பயன்படுத்திப் பார்ப்பது இதெல்லாம் அசோக் தன் முதல் தொகுப்பில் செய்திருக்கிறார்.
கோணங்கிக்கு சமர்ப்பித்திருக்கும் இந்நூலில் கோணங்கியின் சாயல் தெரியாமல் இல்லை. தொகுப்பில் இருக்கும் பல கதைகள் கல்குதிரையில் வெளியானவை. முதலில் எழுதும் தயக்கங்கள் தோன்றாமல் தெரியும் முதிர்ந்த எழுத்துநடையை பார்க்கும்போது ஆரம்ப கதைகளை அவர் பிரசுரிக்காமல் விட்டுவிட்டார் என தோன்றியது. உண்மையில் எல்லா கதைகளும் சேர்த்திருக்கிறார்.
அசோக் ராம்ராஜின் கதைகூறல் முறை காஃப்கா, கமூய் கதைகூறல் முறையை ஒத்திருக்கிறது. எப்போதும் சோகம் ததும்பும், புனைவின் மையத்தை தொடாமல் சுற்றியே வரும் மொழி நடை. படைப்பின் உள்ளடக்கத்தைவிட வடிவத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் பாணி. வடிவம் குறித்து கவலை கொள்வதனாலேயே உள்ளடகத்தின் வீச்சை பிரம்மாண்டமாக ஆக்குவதற்கு வடிவத்தை மாற்றி பயன்படுத்துகிறார். ஆனால் வீச்சு குறைந்து குறுநாவலாகாமல் சிறுகதையாக மாறியுள்ளன. சில கதைகள் நாவலுக்குரிய களங்களை கொண்டிருப்பவை.
மற்றொரு பார்வையில் கதைகளில் வரலாற்று தொன்ம பின்னணியைப் பற்றி அதிகம் கவனத்தில் கொள்கிறார். வரலாற்றுடன் தொன்மமும் சேரும்போது, அதை நிஜமான புனைவாக ஏற்றுக் கொள்ள முடிகிறது. சில களங்களை அவர் எழுதுவது கதையா அல்லது வரலாற்றின் ஒரு பகுதியா என சந்தேகம் கொள்ள வைக்கிறது. கிட்டத்தட்ட எல்லாக் கதைகளும் வரலாற்றை பின்னணியாக கொண்டவை. வரலாற்றின் மீதிருக்கும் ஆர்வம் காரணமாக இயல்பான புனைவு வெளிதெரியாமல் இருக்கிறது. இயல்பான ஒரு புனைவு நமக்கு இருக்கிறது. ஆழ்மனதோடு உரசி நாம் எழுதும் எழுத்துக்கு ஒரு வேகம் இருக்கும். அதில் ஒரு உண்மையும் இருக்கும். இந்த இயல்பு உண்மையான நம் மனதை வெளிப்படுத்தும் இயல்பாக கூட இருக்கும். அதை இன்னும் அசோக் ராம்ராஜ் செய்து பார்க்கவில்லை என நினைக்கிறேன்.
ப்ரக்ஞை பூர்வமாக உரையாடல்களற்று வெறும் நிலக்காட்சிகளும், வர்ணனைகளும் முழுமையாக வரும்போது புனைவு தருணம் அமையாமல் போய்விடும். அசோக் ராம்ராஜின் கதைகளில் அதுதான் நிகழ்கிறது, பல கதைகள் ஏதோ ஒரு சாயலை ஏதோ ஒரு வாழ்க்கையின் கூற்றை முழுமையாக எடுத்துக்கொண்டு புனைவாக்கம் செய்யப்படும் பாங்கு தெரிகிறது. அதனால் கதைகள் மறைவாக தெரிவதும் அது குறித்த நம் தேடல்களை விரிவுபடுத்தவும் கோருபவை. ஆனால் ஒரு கட்டத்தில் வாசகனை சலிப்பேற்றுபவையாகவும் அமைந்துவிடுகின்றன.
காலத்தை எழுதாத எழுத்தாளர் அதிகமில்லை என்று சொல்லிவிடலாம். காலத்தையும் கால மாற்றத்தையும் எழுதும் எழுத்தாளன் தன் வரலாற்றை சொல்ல ஆசைப்படுகிறான் என்று பொருள். தான் அறிந்த தன் வாழ்க்கையில் பெற்ற அனுபவங்கள் எல்லாம் இந்த காலத்தின் முன் வைத்து தன்னை சரிபார்க்கின்ற முயற்சிதான் அது. ஒரு காலத்தை ஒரு மீட்சியை நம் முன் நிகழ்த்திக் காட்டும் ஆர்வமும் இதனால்தான் வருகிறது. காலத்தையும் தாண்டி தன் சுற்றத்தை, தன் பழமையை, தன் பெருமிதத்தை அதிகம் கவனம் கொள்கிறார் என்று அர்த்தம். இப்படி புனைவாக்கமும் தன்வரலாற்று சாயல்தன்மையும் இவரது எழுத்து செயல்பாட்டையும் எழுத்து தாகத்தையும் அறிந்துகொள்ளும்படி அமைந்திருக்கின்றன.
அசோக் ராம்ராஜின் புனைவாக்கத்தில் நீர், கல், நதி, நெருப்பு, போர், ரத்தம் போன்ற உருவகங்கள் கதைகளோடு அதிகம் உறவாடுகின்றன. இவை பொருண்மையான வீழ்ச்சியின் உருவகங்களாகவே அமைந்திருக்கின்றன. லத்தீன் அமெரிக்க கதைகளில் வெளிப்படும் கட்டற்ற தன்மையையும் ஒத்திருக்கின்றன. லத்தீன் அமெரிக்க கதைகள் போல நீண்ட சோகங்களையும் சோர்வையும், மனவீழ்ச்சியை அதனால் ஏற்படும் வலியையும் கொண்டிருக்கும் கதைகள்.
திரும்புதல் என்ற கதையில் இப்படி வருகிறது. “தனது குடலை கைகளில் எடுத்து, மீண்டும் மீண்டும் உள்லே இட்டுக் கொண்டு தொடர்ந்து சண்டை புரிந்ததாகவும்”. இந்தமாதிரியான வரிகள் லத்தின் அமெரிக்க கதைகளில் வெளிப்படும். இதே வரியை போன்றே ஒரு வரியை நான் வாசித்திருக்கிறேன். குடல் சரிந்து இறந்து கிடந்த அவனது குடலில் ஒட்டியிருந்த மண் துகள்களை தட்டி விட்டான் என்று. நூற்றாண்டு தனிமை நாவலில் சண்டையின் போது சாலையில் இறந்துவிட்ட ஒருவனது ரத்தம், சாலைகளில் ஓடி, தன் வீட்டை அடைந்து படிகளில் ஏறி அடுப்படியில் வேலை செய்து கொண்டிருக்கும் தன் தாயை பாதத்தை தொட்டதாக வரும். லத்தீன் அமெரிக்க கதைகளில் இருக்கும் சாயல் ஏன் இதில் இருக்கிறது என சொல்லவேண்டும் என்றால், யாரோ யாருக்கோ சொல்வது போலவும், தன்னை சூழலிலிருந்து விலக்கி கொள்வதுமான உரைநடைகளை அமைப்பது. இதை அப்படியே அசோக் செய்திருக்கிறார்.
இந்த மாதிரியான கதைகள் எழுதக்கூடாதா என்றால் நிச்சயமாக எழுதலாம். அது ஒருவரது மன ஒருமையை பொருத்தது. உண்மைதன்மையும், நெகிழ்வையும் கொண்ட சோகத்தையும் வலியையும் பேசும்போது இப்படி வெளிப்படுவது இயற்கைதான்.
இந்த தொகுப்பில் ரித்னாபூரின் மழை, ஏலாம்பூரின் பழைய கல், நெற்கட்டாஞ்செவலின் ஈசல் போன்ற கதைகள் அசலானவை, அசோக்கின் தேடலுக்கு கிடைத்த முத்துகள். மற்ற கதைகள் இந்த கதைகளின் சாயலை கொண்டவை மற்ற கதைகளின் சாயலை கொண்டவை என்று சொல்லலாம். சீவலமாறன் வீடுபேறு அடைந்த கதை இதற்கு முன்னால் வந்த மரணம் குறித்து வந்த கதைகளின் சாயல்தான். மற்ற கதைகள் அதன் தொடர்ச்சியாக கொண்டவை என்று சொல்லலாம்.
அசோக்கின் கதைகளில் குடும்பமில்லை, பெண்கள், குழந்தைகளின் பங்கு இல்லை. எல்லா மனிதர்களும் நேர்பாணி மனநிலை கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஒருவகையில் சிறப்பு என்றால் மற்றொரு வகையில் இன்னும் முயன்று பார்க்கவில்லை என்று தோன்றுகிறது. எப்படி சில பெண்கள் எழுதும் கதைகளில் ஆண்கள் இருப்பதில்லையோ அப்படி இருக்கிறது.
தொண்ணூறுகளில் உண்டான தாராளமயமாக்கலுக்கு பின் குடும்ப உறவுகள், கைதொழில்கள் எல்லா சிதறி வேலைவாய்ப்புகள் வேறு இடங்களுக்கு மாறி உண்டாக வெறுமை மக்கள் மனதில் இருக்கிறது. அதனுடைய வெளிப்பாடு கதைகளிலும் வெளிப்படுகிறது.
முன்பு இருந்த சிறுகதைகளின் வடிவத்தில் ஒரு ஒருமை இருந்தது. ஆரம்பம் நடு முடிவு இருந்தது. ஆனால் இன்று வரும் சிறுகதைகளுக்கு ஒருமை இருப்பதில்லை. சிறுகதைகளின் போதாமை வலுத்துவிட்டது. ஒன்று சிறுகதை கவிதை பாணிக்கும் நாவல் பாணிக்கும் மாற தொடங்கிவிட்டன. ஒரே வகையில் கதைகளை சொல்வதில் இருக்கும் அலுப்பு இந்த இரு பாணிகளில் மாறிவிட்டன.
ஏன் சிக்கலான கதைகள் வருகின்றன? சிக்கலான வாழ்க்கை முறை மாறிவிட்டபின் நேரடியான கதைகள் எழுதுவது குறைந்துவிட்டது. சூழலின் தேவையால் சிக்கலான கதைகள் வெளியாகின்றன. முன்பிருந்த குடும்ப ஒற்றுமையும், வேலையில் இருந்த நிதானமும் இன்றில்லை. மிக வேகமாக சம்பாதிக்கும் நிலை வந்துவிட்டதுபோல, இளம்வயதில் வயோதிகம் வந்துவிட்டதுபோல சிக்கல்களினால் கதையும் பெருத்துவிட்டது.
கவிதையை நோக்கி செல்லும் கதைகள் குறுங்கதைகளாக எழுதப்பட்டுகின்றன. நாவலை நோக்கி செல்லும் கதைகள் சிக்கல், குழப்பதன்மை போன்றவை எழுந்துள்ளன.
சைனியம், உருவரை மாதிரியான புது சொற்களை அதிகம் பழக்கத்தில் இல்லாத சொற்களை பயன்படுத்துவது உரைநடையின் மீதான ஆர்வத்தை காட்டுகிறது. சைனியம் என்றால் படை, உருவரை என்றால் அவுட்லைன், பொதுவாக செழிப்புள்ள நிலம் என்று சொன்னாலும் இங்கு அவுட்லைன் என்றே பயன்படுத்துகிறார்.
இரண்டு கதைகள் தீவிர தன்மையுடன் எழுதப்பட்டால் ஒரு கதை கொஞ்சம் நகைச்சுவையுடன் அல்லது வேடிக்கையான சித்திரத்துடன் எழுத நினைப்பார்கள். அப்படி எழுது வழக்கம் அவருக்கு இல்லை. எல்லா கதைகளும் ஒரு தீவிரத்தன்மை இருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதையையும் ஒரு ஆய்வு போல, ஒரு அறிக்கை போல பாவனை செய்து எழுதுவது சிறப்பு. ஆய்வுக்குரிய தாக்கத்தை வாசகருக்கு அவரால் ஏற்படுத்த முடிகிறது.
முன்பே சொன்னது போல எல்லா கதைகளும் நாவல் அல்லது குறுநாவலின் களத்தை கொண்டவை. அதில் ரித்னாபூரின் மழை, கோமதிசருக்கும் நிச்சயமாக நாவலாக வந்திருக்கும்.
முதல் தொகுப்பை வெளியிட்டிருக்கும் ஆரம்ப நிலை எழுத்தாளர் என்பதால் அதிகம் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன். இன்னும் அவர் உருவாகி வரவேண்டும். புதிய நிலங்களைப் பற்றி, வாழ்க்கை சூழலைப் பற்றி எழுத வேண்டியிருக்கும். அதற்காக அவரது அகஉலகம் மிகப் பரந்து தன் திட்டங்களை, எண்ணங்களை வளர்த்திருக்கிறார் என்பது அவரது தொகுப்பில் தெரிகிறது.
அதோடு அவருக்கு ஒரு கிராப்ட் இருக்கிறது. அதன் மேல் அலாதியான ஆர்வமும் இருக்கிறது. அதனால் ஒரு நடை உருவாகியிருக்கிறது. ஆகவே மேலும் பல சாத்தியங்களை அவர் செய்வார் என்று முன்னமே என்னுடைய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

நல்லது அசோக் சார் சிறுகதை படிக்க தூண்டும். பதிவு நிச்சயம் படித்து விடுவேன். படித்து விட்டு உங்களுக்கு சொல்கிறேன். நன்றி.