தேடல்

என் மகள் ஒரு மணி நேரம்
காணாமல் போன அந்த நாளில்
அவள் நிரந்தரமாகப் போய்விட்டாள் என
நான் நினைத்து
பின்னர் அவளைக் கண்டுபிடித்த அந்த நாளில்
அவளுடன் சிறிது நேரம் உட்கார்ந்திருக்கிறேன்.
பின்னர் மூலைக்கடைக்குச் சென்று அவளுக்காக
ஆரஞ்சு சாறு வாங்குகிறேன்-
அவளுடைய உதடுகள், நாக்கு, அண்ணம்,
தொண்டை, வயிறு, இரத்தம்,
அவளது உடலின்
ஒவ்வொரு பொன் அணுவுக்காகவும்.

கல்லாவில் இருந்த மனிதரிடம்
நகைச்சுவையாகப் பேசுகிறேன்
பின்னர் குளிர்காலக் காற்றுக்குள்
வெளியே நடந்து வந்து அழுகிறேன்.

அவன் ஒருபோதும்
அவளைக் காயப்படுத்த மாட்டான் என்று
எனக்குத் தெரியும்.
அவளது உடலைத் தன் கைகளில் எடுத்து
அதை நொறுக்கவோ அல்லது
பிழியவோ மாட்டான்.
அவளைப் பாதுகாப்பாக வைத்திருந்து
திரும்ப வீட்டிற்கு
என்னிடம் கொண்டு வந்து சேர்ப்பான்.

ஆனால் அப்படிச் செய்யக்கூடிய சிலர்
இருக்கவே செய்கிறார்கள்.

சிறைச்சாலைகளைப் போல பிரம்மாண்டமாக
சற்றே கோணலாகத் தெரியும்
அந்தப் பெரிய கட்டிடங்களை
கடந்து செல்கிறேன்.
மனிதர்களால் நிரப்பப்பட்டு, அமுக்கப்பட்டு
குறிவைக்கப்பட்டிருக்கும் கட்டிடங்கள்.
என் மகளைக் கூட்டிச் சென்று
அவளைச் சிதைக்க
ஒவ்வொரு அணுவாக
அவளை அழிக்க விரும்பும் சிலர்
அங்கு இருக்கிறார்கள்.

அந்தக் கட்டிடங்கள்
கயிறுகள், இஸ்திரிப் பலகைகள்,
சன்னல் சட்டங்கள் மற்றும் கம்பிகளால்
நிரம்பியவை.
தொப்புள் கொடிகளைப் போல
கருப்பு மற்றும் நீலச் சுருள்களாக
பின்னப்பட்ட இரும்புக் கம்பிகள்,
சவரக் கத்திகள் மற்றும் சாம்பல்காரக் கரைசல்
விநியோகிக்கப்பட்ட குடியிருப்புகள்.

இதுதான் என் தேடல்
மனித இதயத்தில் இருக்கும் தீமை
எங்கே இருக்கிறது
என்பதை அறிந்துகொள்வது.

வீட்டிற்குத் திரும்பும் வழியில்
ஒவ்வொரு முகமாக
பார்த்துக் கொண்டே செல்கிறேன்
அந்தத் தீமையைத் தேடுகிறேன்.

நகரத்தின் இருண்ட அழகு, ஆத்திரம்,
வளர்ந்த குழந்தைகளைப் பார்க்கிறேன்.
அவளோ ஒரு குழந்தையாக
எளிதான இலக்காக
இதில் நடந்து செல்கிறாள்.

அவளை அப்படிச் செய்யக்கூடிய
ஒரு ஆன்மாவைக் கூட
என்னால் காண முடியவில்லை.

அந்தச் சாறு நிரம்பிய ஜாடியை
ஒரு குளிர்ந்த இதயத்தைப் பிடிப்பது போல
இறுகப் பற்றிக் கொள்கிறேன்.
என் பெற்றோர்
என்னை ஒரு நாற்காலியில் கட்டி வைத்து
எனக்கு உணவளிக்க மறுத்ததையும்
நான் நிமிர்ந்து அவர்களது
அழகான முகங்களைப் பார்த்ததையும்
நினைவு கூர்கிறேன்.

அப்போது என் வயிறு
தங்கத்தால் ஆன ஒரு கதாயுதம் போல்
கனத்திருந்தது.
என் மணிக்கட்டுகள்
முட்கம்பியில்
தொண்டையால் தொங்க விடப்பட்ட
பறவைகளைப் போல் இருந்தன.
அவர்களது கண்களுக்குள்
என்னால் முடிந்தவரை ஆழமாக
உற்றுப் பார்த்தேன்.
அங்கே நான் கண்டதெல்லாம்
நன்மையை மட்டுமே.
அதைக் கடந்து
என்னால் பார்க்க முடியவில்லை.

ஆரஞ்சுகளின் இரத்தத்தை
என் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு
வீட்டை நோக்கி விரைகிறேன்.
என்னால் அதை
அவளிடம் கொண்டு சேர்க்க
போதுமான வேகத்தில் செல்ல முடியவில்லை.


மூலம்: “The Quest” By Sharon Olds

ஷாரன் ஓல்ட்ஸ் (1942)

1942ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோவில் பிறந்த ஷாரன் ஓல்ட்ஸ், சமகால அமெரிக்கக் கவிதையின் முக்கியமான குரல்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். கலிஃபோர்னியாவின் பெர்க்லியில் வளர்ந்த அவர், தாம் ஒரு ‘நரக நெருப்பை வலியுறுத்தும் கால்வினியக் கிறிஸ்தவச் சூழலில்’ வளர்க்கப்பட்டதாகக் கூறியுள்ளார். ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் (1972) முனைவர் பட்டமும் பெற்ற இவர், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் படைப்பிலக்கியப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

1980ஆம் ஆண்டு வெளியான Satan Says முதல், 2022ஆம் ஆண்டு வெளியான Balladz வரையிலுமாக இதுவரை 12 கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். இவற்றில் குடும்பம், குழந்தைப் பருவம், உடல், பாலியல், தாய்மை, திருமணம், பிரிவு உள்ளிட்ட பல்வேறு அனுபவங்களையும் மனித உணர்வுகளையும் அச்சமின்றி, நேர்மையாகப் பதிவு செய்துள்ளார். Stag’s Leap (2012) தொகுப்பு அவரது 29 ஆண்டுகாலத் திருமண வாழ்க்கையின் முடிவையும் விவாகரத்துக்குப் பிந்தைய உணர்வுகளையும் மையமாகக் கொண்டது. இத்தொகுப்புக்காக Pulitzer Prize மற்றும் இங்கிலாந்தின் T.S.Eliot Prize ஆகிய இரு முக்கிய விருதுகளையும் பெற்றார். The Dead and the Living தொகுப்பு 50,000 பிரதிகளுக்கு மேல் விற்பனையானது.  பரவலான பாராட்டைப் பெற்ற Strike Sparks தொகுப்புக்காக National Book Critics Circle Award கிடைத்தது. Ruth Lilly Poetry Prize உள்ளிட்ட பல உயரிய விருதுகளால்  கௌரவிக்கப்பட்டவர். 1998 முதல் 2000ஆம் ஆண்டு வரை New York State Poet Laureate ஆகப் பணியாற்றியுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களைப் பொது மனித அனுபவங்களாக உயர்த்தும் திறன் கொண்டவரான ஷாரன் ஓல்ட்ஸ், அதையும் தாண்டி இனப்படுகொலை, அரசியல் ஒடுக்குமுறை, போர், சமூக அநீதி போன்ற உலகளாவிய பிரச்சினைகளையும் தனது கவிதைகளில் பதிந்துள்ளார். அவரது படைப்புகள் நூற்றுக்கும் மேற்பட்ட தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளன, பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தற்போது நியூயார்க் நகரில் வசித்து வருகிறார்.


Discover more from சொல்வனம் | இதழ் 372 | 09 ஆக 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.