`GRAPES OF WRATH` – `கோபத்தின் கனிகள்`
நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் ஜான் ஸ்டீன்பெக்கின் மிகவும் புகழ்பெற்ற நாவல், க்ரேப்ஸ் ஆஃப் ராத் (`GRAPES OF WRATH`). 1939இல் வெளிவந்த நாவல் அது.
கி. ரமேஷ் அவர்களின் `கோபத்தின் கனிகள்` என்ற இந்த நாவலின் தமிழ் மொழிப்பெயர்ப்பை இலக்கிய வட்ட நண்பர்களுடன் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகச் சிறந்த நற்பேறாக உணர்கிறேன். கி. ரமேஷ் அவர்களின் மொழிபெயர்ப்பு, சற்றும் அந்நியத்தன்மை இன்றி மிக எளிய தமிழில் வாசகர்களின் மனதிற்கு நெருக்கமான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது
கலிபோர்னியாவைப் பற்றி நினைத்தாலே என் மனதைக் கவரும் விஷயங்கள், அணிவகுத்து இருக்கும் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கட்டிடங்கள், தேசியப் பூங்காக்கள், ஏரிகள் மற்றும் அதன் இயற்கை அழகுதான். இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகுதான் கலிபோர்னியாவின் வளம் மற்றும் அழகிற்குப் பின்னால் இவ்வளவு வலிகளும் வரலாறும் இருக்கிறன என்பது தெரிந்தது.

இந்த நாவலைப் படிக்கும் பொழுது எனக்கு இந்தியா சந்தித்த பஞ்சங்கள், வறட்சி எல்லாம் மனதில் தோன்றின. ஆனால் இப்போது கலிபோர்னியாவைப் பார்ப்பவர்கள் 1938களில் இப்படி கலிபோர்னியா இருந்தது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். இந்த வரலாற்றுப் புனைவு (Historical Fiction) அப்படியே அந்தக் காலகட்டத்தை நம் முன் நிறுத்தி நாமும் ரூட் 66 ல் பயணிப்பது போன்று தோன்ற வைத்திருப்பது நாவல் ஆசிரியரின் தலைசிறந்த படைப்புத்திறன். ஜோட் குடும்பத்தினர் தங்களின் வாழ்வாதாரத்தைத் தேடி அமெரிக்காவின் ‘டஸ்ட் பவுல்’ (Dust Bowl) பகுதி ஓக்லஹோமாவில் சாலிசாயிலிருந்து கலிபோர்னியாவின் விவசாய நிலங்களை நோக்கிப் பயணிப்பார்கள். இந்த வரலாற்றுப் பயணம் புகழ்பெற்ற யு.எஸ். ரூட் 66 (U.S. Route 66) நெடுஞ்சாலை வழியாகச் செல்கிறது.
ஜோட் குடும்பம் சாலிசாயிலிருந்து கலிபோர்னியா கிளம்பும் முன் கலிபோர்னியாவின் வளமான பழத்தோட்டங்களைப் பற்றி எண்ணி நம்பிக்கையாகப் பேசும் காட்சி மிக அருமையாக இருக்கும் . தாத்தா ஜோட் நான் கலிபோர்னியா போனவுடன் அங்கே இருக்கும் ஆரஞ்சுப் பழங்களையும் திராட்சைப் பழங்களையும் எடுத்துச் சாப்பிடுவேன். ஒரு பெரிய திராட்சை குலையை எடுத்து மூஞ்சிமேல் பிழிந்து கொள்வேன், சாறு என் தாடை வழியாக வழியும் என்று சொல்வார். ஆனால் அவர்தான் கிளம்பும்போது சொந்த இடத்தை விட்டு வர மாட்டேன் என்று அடம் பிடிப்பார். பின்னர் அவருக்கு வலி மருந்து சிரப்பைக் கொடுத்துத் தூங்க வைத்து அழைத்துச் செல்வார்கள். ரோஸ் ஆஃப் ஷாரன் கிளம்பும் போது கர்ப்பிணியாக இருப்பாள். அவள் `நான் ஆரஞ்சு பண்ணையில் சுத்தி ஆரஞ்சு மரங்கள் இருக்கும் வெள்ளை வீட்டில் குழந்தை பெற்றுக் கொள்வேன் என்று சொல்வாள். இவ்வளவு நம்பிக்கையுடன் கிளம்பிப் போகும் வழியிலேயே தாத்தாவும் பாட்டியும் இறந்துவிடுவார்கள்
பயணத்தைத் தொடங்கிய முதல் இரவிலேயே தாத்தா திடீர் பக்கவாதத்தால் இறந்துவிடுகிறார். தனது சொந்த ஓக்லஹோமா மண்ணை விட்டு வர அவருக்கு விருப்பமில்லை. அவர் மனமுடைந்து இறந்து போகிறார். சட்டப்பூர்வமாக அடக்கம் செய்ய 40 டாலர் செலவாகும். அவர்களிடம் அவ்வளவு பணம் இல்லை. குடும்பத்தினர் தாத்தாவின் உடலைச் சாலையோரமாக ரகசியமாகப் புதைக்கின்றனர். தாத்தாவின் மரணத்திற்குப் பிறகு பாட்டியின் உடல்நிலை வேகமாக மோசமடைகிறது. மொஹாவே பாலைவனத்தைக் கடந்து கலிபோர்னியாவிற்குள் நுழையப் பயணிக்கும்போது, வெப்பத்தாலும் சோர்வாலும் பாட்டி வாகனத்தின் பின்புறத்திலேயே இறந்துவிடுகிறார். கலிபோர்னியா எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் அதிகாரிகள் தங்களைத் தடுத்து நிறுத்திவிடுவார்களோ என்ற பயத்தில், மா ஜோட் பாட்டி இறந்துவிட்டதை யாரிடமும் சொல்லவில்லை. இரவு முழுவதும் பாட்டியின் பிணத்தின் அருகிலேயே படுத்துக்கொண்டு, அவர் தூங்குவது போல நடிக்கிறார். எல்லை தாண்டியதுமே பாட்டி இறந்துவிட்டதைக் குடும்பத்தினரிடம் கூறுகிறார். அவரைப் புதைக்கவும் பணம் இல்லாததால் பாட்டியின் உடலை கலிபோர்னியாவில் உள்ள அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கிறார்கள். அரசாங்கச் செலவில் ஏழைகளுக்கான அனாதை பிணமாகப் புதைக்கப்படுகிறார். இவ்வாறு பல இன்னல்களைத் தாண்டி ஜோட் குடும்பம் நம்பிக்கை மட்டும் இழக்காமல் ரூட் 66ல் பயணம் செய்கிறார்கள்.
மனிதர்கள் எப்படி பெரும் துயர் களை எதிர் கொள்கிறார்கள் என்பது இந்த நாவலில் காட்டப்படுகிறது. முகாமில் வசதிகளே இல்லாத பொழுதும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கின்றனர். தம் பசியை விட வழியில் சந்திப்பவர்களின் துன்பமும் பசியும் பெரிது என்று உதவுகின்றனர். தனித்தனிக் குடும்பங்களாகப் பயணிப்பவர்கள், வழியில் ஒன்றிணைந்து ஒரு பெரிய சமூகமாக மாறுகிறார்கள். மனிதநேயம் மற்றும் ஒற்றுமையே பிழைப்பதற்கான ஒரே வழி என்பதை ரூட் 66 பயணம் கற்பிக்கிறது. ரூட் 66 பயணம் செய்பவர்கள் எல்லாச் சவால்களையும் கடந்து நம்பிக்கை இழக்காமல் விடாமுயற்சியுடன் இடம் பெயர்ந்து தமக்கான வாழ்க்கையை தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.
அதே நேரத்தில் கலிபோர்னியாவின் உள்ளூர் மக்கள் புலம் பெயர்ந்த மக்களால் தங்களின் சொந்த வேலைவாய்ப்புகளும், கூலியும் குறைந்துவிடுமோ என்று பயப்படுகின்றார்கள். புலம்பெயர்ந்த மக்கள் சாலையோரம் அமைத்த தற்காலிகக் குடிசைப் பகுதிகளை உள்ளூர் ஆயுதமேந்திய குழுக்கள் வன்முறை மூலம் தீயிட்டுக் கொளுத்தி அவர்களை விரட்டுகின்றனர். பணக்கார நிலவுடைமையாளர்கள் தங்களின் லாபத்திற்காக ஏழை மக்களின் வறுமையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கலிபோர்னியாவில் நிறைய வேலைகள் இருப்பதாக லட்சக்கணக்கில் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கின்றனர். இதனால் தேவைக்கு அதிகமாக ஆட்கள் திரள்கின்றனர். ஆட்கள் அதிகமாக இருந்ததால், நில உரிமையாளர்கள் மிகக் குறைந்த கூலியை நிர்ணயம் செய்கின்றனர். தொழிலாளர்கள் ஒன்றிணைந்து சங்கம் அமைப்பதைத் தடுக்க, அவர்களுக்குள் மோதல்களை உருவாக்குகின்றனர். உள்ளூர் காவல்துறை மற்றும் அதிகாரிகள் நிலவுடைமையாளர்களிடம் விலை போகின்றார்கள். பழங்கள் குழியில் கொட்டப்படுகிறது ஆனால் பசியான குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட மாட்டாது. பழத்தோட்டங்களை துப்பாக்கியேந்தியவர்கள் காவல் காக்கின்றனர்.
இவ்வளவு வறுமை மற்றும் கொடுமைகளுக்கு மத்தியிலும் மக்கள் தங்களுக்குள் மகிழ்ச்சியைத் தேடினர். உணவைத் தேடுவது போலவே, மனதின் உயிர்வாழ்விற்காக அவர்கள் மகிழ்ச்சியையும் தேடினர் என்று நாவலாசிரியர் குறிப்பிடுகிறார். மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து கொண்டு வந்த ஹார்மோனிகா (Harmonica), ஃபிடில் (Fiddle), மற்றும் கிட்டார் (Guitar) போன்ற சிறிய இசைக் கருவிகளைப் பயன்படுத்தி மாலையில் முகாமில் நெருப்பை மூட்டி இசையும் நடனமும் நடத்துகின்றனர். வெறும் மண்ணில் தூசி பறக்க மக்கள் கைகளைக் கோர்த்து பாரம்பரிய நடனங்களை ஆடுகின்றனர். கதைசொல்லிகள் கதைகளைச் சொல்லி வாழ்வை நகைச்சுவையால் நிறைக்கின்றார்கள். அந்த சில மணி நேரங்களில், வறுமையின் கொடூரமான பாரம், பசி மற்றும் கலிபோர்னியா நோக்கிய கடினமான பயணத்தின் சோர்வு ஆகியவை ஒன்றும் இல்லாமல் ஆகிறது. இவை சாலை ஓரத்தில் தன்னிச்சையாக நடக்கின்றது. இதைத் தவிர வீட்பாட்ச் அரசு முகாம் வழியில் வருகிறது. இங்குதான் ஜோட் குடும்பத்தினர் முதன் முதலாகச் சுத்தமான குடிநீர், கழிவறைகள் மற்றும் குளிப்பதற்கான வெந்நீர் போன்ற வசதிகளைப் பார்க்கிறார்கள். இந்த முகாம் அரசால் நடத்தப்பட்டதால், உள்ளூர் கலிபோர்னியா போலீசாருக்கும், நிலப்பிரபுக்களுக்கும் முகாமிற்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்த அதிகாரம் இல்லை. இங்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் முறையான நடன நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதற்காகக் குடும்பங்கள் தங்கள் ஆடைகளைத் துவைத்து, கிழிந்த இடங்களைத் தைத்து, தங்களை அழகுபடுத்திக் கொண்டு நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
நாவலின் இப்பதிவுகள் ஒரு வாசகனுக்கு ஆழமான பல வாழ்வியல் செய்திகளைத் தருகின்றன. எல்லாவற்றையும் இழந்த பிறகும் மக்கள் பாடிய பாடல்களும், பகிர்ந்துகொண்ட சிரிப்பும் மனித ஆன்மாவின் அழியாத தன்மையைக் காட்டுகின்றன. . சூழ்நிலைகள் எவ்வளவு மோசமாக இருந்தாலும், ஒருவன் தன் உள்ளொளியை இழக்காமல் இருந்தால் மீண்டு எழலாம் என்ற நேர்மறை எண்ணத்தை இந்நாவல் விதைக்கிறது.
இந்த நாவலின் மிகச் சிறப்பான அம்சம் கதையின் நடுநடுவே அந்த நிலத்தின் வரலாறு, மக்களின் வாழ்க்கை சொல்லப்படுவது. அந்த நிலம் முதலில் யாரிடம் இருந்தது பின்னர் யாரிடம் எல்லாம் கை மாறுகிறது என்பதை மிக விரிவாகப் பேசுகிறது.
இந்த நாவலாசிரியர் நாவலில் உள்ள கதாபாத்திரங்களின் வழியாகத் தத்துவங்களை நமக்குத் தருகிறார். முன்னாள் போதகர் ஜிம் கேசி தனி மனிதனுக்கு என்று தனியாக ஆன்மா இல்லை.மனிதர்கள் அனைவருக்குள்ளும் இருப்பது ஒரு பெரிய ஆன்மாவின் துண்டு என்பதை உணர்கிறார். கிறிஸ்தவ மதத்தைத் துறந்து மனிதர்களுக்கு சேவை செய்வது தான் சிறந்த ஆன்மீகம் என்று முடிவு செய்கிறார். இது இந்திய அத்வைதத் தத்துவத்தை ஒத்து இருக்கிறது.
கதையில் கடைசியாக இரவில் மா ஜோட் தன் மகன் டாம் ஜோடை சந்திக்கும் இடம் மிகவும் உணர்ச்சிப் பூர்வமானது. இரவின் இருட்டில் மகனைப் பார்க்க முடியாது, மகனைத் தடவி இந்த விரல்களைத் தான் நினைவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வது படிப்பவர் மனதை பாரமாக்கியது. அந்த மகன் சுயநலம் இல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்கள் எங்குப் பசியோடும் துயரத்தோடும் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் அவர்களின் உரிமைக்காகப் போராடப் போவதாக முடிவு செய்து புறப்படுகிறான். திரும்பி வரும் பொழுது மா ஜோட் அழவில்லை என்று கதையில் வரும். இது மா ஜோடின் உயர்ந்த மனதிடத்தைக் காட்டுகிறது. பின்னர் இன்னொரு இடத்தில் `ஆண்கள் எல்லாவற்றையும் துண்டுகளாகப் பார்க்கிறார்கள். ஒரு தோல்வி வந்தால் சோர்ந்து விடுகிறார்கள். ஆனால் பெண்கள் அப்படியல்ல. நமக்கு வாழ்க்கை என்பது ஒரு ஆறு போல, ஓடிக்கொண்டே இருக்கும்` என்று மா ஜோட் பேசுவது புகழ்பெற்ற வசனம்.
நாவலின் முடிவில் கலிபோர்னியாவில் பெய்யும் பெருமழையில் ஜோட் குடும்பம் தங்கியிருக்கும் முகாம் வெள்ளத்தில் மூழ்குகிறது. இந்த நேரத்திலும் மா ஜோட்தான் குடும்பத்தைக் காப்பாற்றி உயரமான இடத்திற்கு அழைத்துச் செல்கிறார். கடைசிக் காட்சி மனிதநேயத்தின் உச்சம். மா ஜோட்டின் விருப்பத்தை அவள் பார்வையிலேயே உணர்ந்து தன் குழந்தை இறந்த சோகத்திலும், ரோஸ் ஆஃப் ஷாரன் பசியால் இறக்க இருந்த முதியவருக்குத் தன் தாய்ப்பாலைக் கொடுத்து அவரது உயிரைக் காப்பாற்றுகிறாள். மிகவும் உருக்கமான, நெகிழ்வான முடிவு.
பெரு மழையால் வெள்ளத்தில் மூழ்கும் நாவல் பகுதிகள் அப்படியே அச்சு அசலாக நேரில் பார்ப்பது போன்ற தோற்றம் தந்தது. அந்தப் பகுதிகளைப் படிக்கும் பொழுது எனக்கு சென்னையில் 2015ல் எங்கள் வீடு ஏழு அடி தண்ணீரில் மூழ்கியது நினைவில் வந்தது. சாதாரணமாக நாம் நினைப்பது போல் தண்ணீர் நிதானமாக மேலே ஏறாது. பதினைந்து நிமிடத்திற்குள் முட்டி அளவு தண்ணீர் நெஞ்சளவு ஆகிவிடும். கீழே இருக்கும் பொருட்கள் கலங்கிய மழைத்தண்ணீர் என்பதால் நம் கண்ணுக்கு தெரியாது. நடந்து செல்வது மிகவும் கடினம். நாங்கள் மாடியில் என் அண்ணன் வீட்டில் இரண்டு வாரம் இருந்து தப்பித்தோம்
ரூட் 66-இன் பயணம் முடிவடைந்தாலும், தமக்கான நல் வாழ்வைத் தேடி இடம்பெயரும் எளிய மக்களின் போராட்டம் உலகெங்கும் இன்றும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. பசியையும் துயரத்தையும் கடந்து நிற்கும் மாபெரும் மனித நேயத்தை விளங்கும் இந்நாவல், அனைவரும் வாழ்நாளில் தவறவிடாமல் கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்றாகும்.
Discover more from சொல்வனம் | இதழ் 372 | 09 ஆக 2026
Subscribe to get the latest posts sent to your email.
