நாவலாய் நீடுவிரியும்  நெஞ்சையள்ளும் கவித்துவம்

வினோத் குமார் சுக்லாவின் நாவல்: ”சுவரில் ஒரு ஜன்னல் வாழ்ந்து வந்தது”

(1)

தினம் கல்லூரிக்கு சென்று வர டெம்ப்போவுக்கு காத்திருக்கும் ரகுவர் பிரசாத், அன்று யானை மீதேறி வீடு திரும்புகிறார். அவரை இறக்கி விட்டு யானை நகர்கிறது. விட்டுவிட்டு யானை மேல்நடக்க அது முன்பு நிரப்பியிருந்த பெரிய வெளி பின்னால் விட்டு விடப்பட்டு தோற்றம் கொள்கிறது. ரகுவர் பிரசாத் சைக்கிளில் கல்லூரிக்கு செல்லலாம். ஆனால்  அவரிடம் சைக்கிள் இல்லாததால் அவர்  இப்படி தினம் டெம்ப்போவுக்கு காத்திருக்க நேரும் போதுதான் அந்த நெடுஞ்சாலை வழியில் கடந்து போகும் யானையின் பாகனின் பரிச்சயத்தில் ஒரு மழை பெய்த மாலையில் கல்லூரியிலிருந்து யானை மீதேறி ரகுவர் பிரசாத் வீடு திரும்புகிறார்.    ரகுவர் பிரசாத் வீட்டிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள தனியார் கல்லூரியில் கணித விரிவுரையாளர். முதன் முதலாய் யானை மீதேறி ரகுவர் பிரசாத் வீடு  திரும்பிய அன்றுதான் முதன் முதலாய் திருமணமாகிய புதிதில் அவருடைய மனைவி ஸோன்ஸியைக் குடியமர்த்த அவருடைய பெற்றோர் அழைத்து வந்திருந்தனர். அன்றிரவின் இருள்யானை  தன் துதிக்கையைத் தரையின் நீளவாக்கில் ஊஞ்சலாட்டிக் கொண்டிருந்தது.  யானையின் எட்டுகளுக்கேற்ப இரவு மேலும் கீழும் ஆடியது. அன்றிரவின் முதல் சந்திப்பில்   ரகுவர் பிரசாத்திடம் ஸோன்ஸி  பேருந்து நிறுத்தத்திலிருந்து  ரிக்‌ஷாவில் வந்தீரா என்று வினவுகிறாள்.  ரகுவர் பிரசாத்தின் பதில்:  நான் நடந்து வந்தேன். ஸோன்ஸியின் காதுகளில்  கேட்கிறது:  நான் குதிரை மீதேறி வந்தேன். ஸோன்ஸி வினவுகிறாள்: அங்கு யானை கிடைக்கவில்லையா?  ரகுவர் பிரசாத்தின் காதுகளுக்கு : ரிக்‌ஷா கிடைக்கவில்லையா?  இப்படி ஒருவருக்கொருவர் ஒன்று கேட்க பதில் வேறொன்றாய் அன்றிரவு கழிய இருவரும் கண் விழிக்கும் போது அவர்கள் கண் விழிக்கக் காத்திருந்த காலை காலையாகியது. ஒரேஒரு சிறிய அறையே வீடாயுள்ள  வீட்டில்   ரகுவர் பிரசாத்தும் ஸோன்ஸியும் இப்படி தொடங்கும்   இனிமையான தாம்பத்யத்தின் கதைதான்  வினோத் குமார் சுக்லாவின் ‘சுவரில் ஒரு ஜன்னல் வாழ்ந்து வந்தது’(दीवार में एक खिड़की रहती थी)  என்ற கவித்துமான நாவலின் கதை.  

ரகுவர் பிரசாத்தும் ஸோன்ஸியும் நடத்தும் தாம்பத்யம் ஒரு சிறிய அறைக்குள் இருந்தாலும் அவர்களுக்கு அது ஒரு வரம்பாக இல்லை. அறையின் ஜன்னல் அவர்களுக்கு ஒரு திறப்பை அளிக்கிறது. குறுக்கும் நெடுக்கும் கம்பிகளில்லா திறந்த ஜன்னல் அது.  ஜன்னலின் பின்புறத்தில் வெளியே    பல்வித மரங்கள், பச்சைக் கிளிகள், கருப்புமுகக் குரங்குகள், பாறைகள், பாறைகளினூடே இழுமெனும் ஓதையோடு இழியும் நீரோடைகள், தாமரைக்குளம்   என்றெல்லாம் பன்முகம் காட்டி கவின் விரிந்து கிடக்கும் காட்டுலகம்.  அந்த காட்டுலகுக்கு ஜன்னல் தான் வழி. ஜன்னலினூடே குதித்தே ரகுவர் பிரசாத்தும் ஸோன்ஸியும் வெளியேறி காட்டுலகுக்குள் நுழைகின்றனர். அங்குள்ள தாமரைக் குளத்தில் நீராடுகின்றனர். துணி துவைக்கின்றனர். புளியம்பழங்கள் பொறுக்குகின்றனர். ஒரு  தேன்சிட்டு கூட அந்நியோநியமாய் பிரசாத்தின் தோள் மீது அமர்கிறது. பாறை மீது மல்லாந்து அவர்கள் வானத்தை அளக்கின்றனர். சூரிய ஒளியில் பனித்த விழிகளில் சூரியன் மங்கி சந்திரனாகிறது. குளக்கரையில் குழந்தைகள் ரங்கோலிக் கோலங்கள் தீட்டியுள்ளன. காற்று சுழன்று வீசுகிறது. ரங்கோலிக் கோலங்கள் காற்றில் பறக்கின்றன. ஆனால் அவற்றின் வடிவங்கள் கலையவில்லை. ஸோன்ஸி முன்னால் பறக்கிறாள். ’நான் பறந்து மறையும் முன்னே பின்னால் ஓடி வந்து என்னைப் பிடி’ என்று ஸோன்ஸி குரல் கொடுப்பது போல் பிரசாத்தின் காதுகளுக்கு கேட்கிறது. ’பார்வையிலிருந்து மறைந்து போகும் ஒருவரை பார்வையிலிருந்து மறைந்து போகும் ஒருவரே பின்தொடர முடியும்’. ஸோன்ஸியின் சேலை காற்றிலடித்துப் பறந்து போகிறது. ஒரு புனிதமான ரங்கோலிக் கோலம் அவளைப் போர்த்துகிறது. அவள் இப்போது ’ரங்கோலி சேலையை’ அணிந்திருக்கிறாள். காற்றிலெங்கும் நறுமணக்கும் காட்டுப் புதர்கள், மரங்கள், புற்கள் என்றிவற்றின் நறுமணம் தணிந்தடங்கியபோது அவற்றைச் சுற்றியே  ஒன்றுகூடிக் கிடக்கிறது- ஆனால் இப்போது மாற்றியமைக்கப்பட்டு. கடைசியாய் ஸோன்ஸி ஒரு தருவுற்று அதன் கீழ் சயனிக்கிறாள். ரகுவர் பிரசாத் அவளைக் காதலின் தாகத்தில் உற்று நோக்குவதைத் தெரிந்தே தெரியாததாய்த் தோன்ற இருக்கிறாள் அவள். 

 இப்படி மொத்த காட்டுலகே அவர்களின் மனங்களினுள் நுழைகிறது.  காட்டின் சாணம் மெழுகிடப்பட்ட பாதை மனதின் பாதையாகிறது. தெளிந்த வானம் மனதின் வானமாய்ச் சிறகடிக்கிறது.  ஜன்னல் சுவரின் ஜன்னலல்ல. அது மனதின் ஜன்னல். அதனால் ’எப்படி ஜன்னலினூடே யானை நுழைய முடியும்’ என்ற கேள்வி ஸோன்ஸியின் காதுகளுக்கு  ’ஏன் யானை நுழைய முடியாது’ என்று வேறுவிதமாய்க் கேட்கிறது. ஸோன்ஸிக்கு மன ஜன்னல் சற்று பெரியதாக இருக்க வேண்டுமென்பது ’மன யானை” மிகப் பெரியதாய் இருக்கும் காரணத்தாலாகிறது.  ஜன்னல் சுவரில் மனதின் ஜன்னலாய் வசிக்கிறது; வாழ்கிறது. 

அதே போல் அறைக்குள் நுழைவதற்கும் காட்டுலகிலிருந்து ஜன்னலின் வழியே தம்பதியர் இருவரும் குதிக்கின்றனர். திரும்பி வந்து ஜன்னலின் வெளியே நின்று அறைக்குள் நோக்க அவர்கள் அறைக்குள் இல்லையென்று குழந்தைகள் போல் குதூகலிக்கின்றனர்.  அறைக்குள் அவர்கள் இருக்கும்போது இப்படி குழந்தைகள் எட்டிப் பார்க்கும் போது அதை இடைஞ்சலென்று எடுத்துக்கொள்ளாமல்  நாற்சுவர்களுக்குள்ளிருக்கும் தனிமையில்  குழந்தைகள் மற்றொரு ஜன்னலைத் திறப்பதாய் அவர்கள் கருதுகின்றனர். ஒவ்வொரு கணமும் சேகரித்த தனிமை அறைக்குள் திரண்டிருக்கிறது. அறைக்குள் அவர்கள் இருவரும் தனித்து; இனி முகிழ்க்கும் சிறு கணத்தையும் அவர்கள் தவற விடத் தயாராயில்லை. முகிழ்க்கும் ஏகாந்தக் கணங்களை மாலையாய்த் தொடுத்து ரகுவர் பிரசாத் ஸோன்ஸியை அலங்கரிக்கிறார். காதலின் நேரத்தைக் கண்டைகின்றனர் காதல் தம்பதியினர். திளைப்பில் ஸோன்ஸி தனக்குள் ஒரு கற்பக விருட்சத்தின் இலை, கனி , கிளை, வேர்கள், கடைசியாய் மரத்தின் விதையென்று  யாவற்றையும் கேட்கிறாள். ஸோன்ஸிக்கு குளத்தில் தெறிக்கும் சப்தம் கேட்கிறது . அது மீன் துள்ளுகிறதென்று குளம் ஒலித்திருக்கலாம். குளத்தில்-  பறக்கும் பறவை மிதக்கும் மேகம், குளத்தோர மரம், வீழும் ஒளி,  பாறை , மரத்திலிருக்கும் பறவைக் கூடு , தாமரை –  என்றிவற்றில் எதுவுடையதோ எனத் தேர்வது  முடியாமல் கணக்கற்ற பிரதிபலிப்புகளின் தெறிப்புகள் ஒலிக்கின்றன. ஸோன்ஸிக்குள் ஒரு குளம் இருக்கிறது. அதற்குள் ரகுவர் பிரசாத்தின் பிரதிபலிப்பு காணப்பட்டிருக்கலாம். அவர்கள் உறங்கிப் போகின்றனர்.  அவர்களின் அந்தரங்கத்திற்கு அந்தச் சிறிய அறையில் நிமிர்த்திப் போட்ட கட்டிலே மறைவு. காலையில்  கட்டில் படுக்கப் போடப்படுகிறது- குழந்தைகள் அறைக்குள் எட்டிப் பார்ப்பதற்கு வசதியாய். தம்பதியரிருவரையும் இணைக்கும் அன்பு குழந்தைகளையும், பிறரையும் அணைக்கும்  பேரன்பாகப் பரிணமிக்கிறது. 

ரகுவர் பிரசாத்தும் ஸோன்ஸியும் பிரியவும் நேர்கிறது. கிராமத்திற்கு வருமாறு தந்தையிடமிருந்து ஸோன்ஸிக்கு கடிதம் கிட்டுகிறது. திருமணமாகி  முதல் முறையாய்த் தன் கணவனிடமிருந்து நீங்கி ஸோன்ஸி ஒரு வாரத்திற்கு  தன் பெற்றோரின் வீட்டுக்கு செல்கிறாள். இரு கைகளாலும் எழுத வல்ல ரகுவர் பிரசாத் தனக்கு கடிதம் எழுதினால்,  கடிதத்தில் இடது கையால் எழுதப்பட்டதையும், வலது கையால் எழுதப்பட்டதையும் வாசிப்பது அவரது ஆலிங்கனத்தினுள்ளே வாசிப்பது போலிருக்கும் என்று ஸோன்ஸி கற்பனை செய்கிறாள். வானமே ஒருவருக்கொருவர் எழுதிக் கொள்ளும் கடிதமாகிறது. யானையை ரகுவர் பிரசாத் இராவில் தேடச் சென்ற போது அதற்கு தீனிக்காக அத்திமரத்திலிருந்து தழைகளைப் பறிக்க சிறுவனைத் தேடிய போது அவன் அங்கில்லையாக, ரகுவர் பிரசாத்  ”இங்கில்லை” என்று இரவின் பேரமைதியில் அவர் ஒலித்த ஒலி எங்கோ ஒருவனுக்கு கேட்டு  “ யாரில்லை  அங்கு” என்று  பதிலுக்கு  அவன் வீசிய கேள்வி  “இங்கில்லை ‘ என்று கூறியவரையே- ரகுவர் பிரசாத்தையே- அடைந்து  அதற்கு இன்னும் விடைகிடைக்காது எங்கோ ஒருவனான அவன் அலமந்திருக்க, இப்போது காதல் மனைவி பிரிந்த தனிமையில் இரவில் ரகுவர் பிரசாத் வெளிவந்ததை, இன்னொரு மனிதன் இந்த இரவில் வெளிவந்திருப்பான் என்று முன்பு ‘யாரில்லை அங்கு’ என்ற கேள்வியை வீசியவன் உணர்ந்தவன் போல்,  மறுபடியும் அந்த இரவில் அதே கேள்வியை அவன் வீசியெறிய ரகுவர் பிரசாத் அதைக் கேட்டு பதிலுக்கு   ”ஸோன்ஸி இங்கில்லை” என்று வேதனையில் உழலும் மனதிலிருந்து உதிர்க்கிறார். முன்னவனுக்கு ஸோன்ஸியைத் தெரியாது. ஆனால் அவனால் இப்போது விடை கிடைத்த நிம்மதியில் உறங்க முடியும். ரகுவர் பிரசாத்துக்கும் ஸோன்ஸி திரும்பி வந்தாலே நிம்மதியாக முடியும். ஒரு வாரத்திற்கு முன்பேயே, ஒரு மாலையில்  திரும்பி விடுகிறாள் ஸோன்ஸி. அன்றிரவு  ரகுவர் பிரசாத் ஆழ்ந்துறங்குவதின் வடிவம், ஸோன்ஸி ஆழ்ந்துறங்குவதின் வடிவத்தோடு பொருந்த இருவரும்  சேர்ந்து ஆழ்ந்துறங்கிப் போகிறார்கள். காதல் மனைவியின் பிரிவில், கணவனின் பிரிவாற்றாமையை இப்படி  தனித்துவத்தோடு – ஒரு மீவியற்பியத்(metaphysical)  தன்மையும் தொனிக்க-  புனைவதில் சுக்லா நாவலின் புனைவை,  அடையச்  சவாலான ஒரு புதிய எல்லைக்கு விஸ்தரிக்கிறார் என்று கூறலாம். 

(2)

ரகுவர் பிரசாத்- ஸோன்ஸி என்ற இணையின் காதல் தாம்பத்யம் மீநடப்பியல்(surrealistic) ரீதியில் கவித்துவத்தோடு நாவல் முழுதும் சித்தரிக்கப்படுகிறது. அது அதீத கற்பனா ரீதியிலான சித்தரிப்பு என்ற ஒரு பார்வையை முன்வைக்கலாம். ஆனால் சிறிய ஒற்றை அறைக்குள் வாழும் நடுத்தர அல்லது அடிமட்ட வாழ்வும் தன் எல்லாக் குறைவுகளோடும் சிறகடிக்க முடிவதில் அவற்றிலிருந்து விடுபட முடியும் என்பதின் குறியீட்டுச் சித்திரிப்பாகவும் அதை எடுத்துக் கொள்ளலாம். அதற்கு மனதின் ஜன்னல் திறந்திருக்க வேண்டும். அதன் வழியே குதித்துப் போகத் தெரிந்திருக்க வேண்டும்.  உடம்பெனும் சுவருக்குள் மனமென்னும் ஜன்னல் வாழ்கிறது என்று அறிந்திருக்க வேண்டும். எப்படி மனமென்னும் ஜன்னல் எவ்வளவு முழுதும் திறந்திருக்க முடியுமென்பதற்கு காட்டுலகில் ஓர் ஆலமரத்தடியில் நடப்பட்ட கம்பங்களின் மீது போர்த்தப்பட்ட படுதாவின் கீழ் ஒரு டீக்கடையை நடத்தும் பாட்டியம்மாவின் பேரன்பு குறிப்புணர்த்துகிறது. அவளின் கன்னத்தின் சுருக்கங்கள் அவளின் அகமகிழ்வைத் தெரிவிக்கின்றன. குளத்தில் நீராடி விட்டு திரும்பும்போதெல்லாம் இருவருக்கும் அவள் டீ தயாரித்துத் தருகிறாள்.  பாறையின் மீது குழந்தைகளின் வரைவுகளின் மீது மேல் பறக்கும் பறவைகள் எச்சங்களிட்டால் அவற்றைக் கழுவி விடுகிறாள். அதற்குப் பிறகு அவற்றின் மீது பறவைகள் எச்சங்களிடுவதில்லை. பாட்டியம்மா  ஆழமில்லா நீரோடையில் மணலைச் சலித்து தங்கத்துகள்களைப் பிரித்தெடுத்து குடிசைக்கு திரும்பும் போது பச்சைக் கிளிகள் அவளோடு கூடப் பறந்து வந்து கரகரக்கும். குரங்குகள் தாவி மகிழும். ஒரு சமயம் ஸோன்ஸி ஒரு கருந்தேளைக் கண்டு அச்சமுற்ற போது அதனைக் கொல்லாமல் துடைப்பத்தால் அகற்றிப் போக்குகிறாள் பாட்டியம்மா. ஒரு பழைய மரப்பெட்டிக்குள் துணிக்குள் முடித்து வைக்கப்பட்டிருந்த இரு தங்கக் காப்புகளை ஸோன்ஸிக்கு தனது அன்பின் பரிசாகவும் அளிக்கிறாள். ஒருமுறை காட்டுலகில் பாட்டியம்மா குடிசைக்கு செல்லும்போது, ரகுவர் பிரசாத்திடம் அவருடைய தந்தை  ’வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கிறதாய்த் தோன்றுகிறது. நாம் வெகுகாலம் வாழ்ந்து விட்டதாயும் மரணம் நெருக்கத்திலும் என்று தோன்றுகிறது’ என்கிறார். ’இன்னும் அதிகம் மீதமிருக்கிற அளவுக்கு வாழ்க்கை நன்றாயுள்ளது. மரணத்திற்கு செல்லும் தூரத்தைக் கடப்பதற்கு வெகுகாலமாகும்’ என்ற பிரசாத்தின் பதிலுக்கு ’நீ கூறுவது சரி;  வாழ்வதற்கு இன்னும் வெகுவாக இருக்கிறது; இங்கிருந்து மரணத்தைக் காண முடியுமென்று நீ நினைக்கிறாயா’ என்ற தந்தையின் பதில்வினாவுக்கு பிரசாத்தின் பதில்:  ’வாழ்கிறதிலிருந்து   கவனம் மீதமிருந்தாலொழிய, அப்போது மட்டுமே; ஒரு வாழும் விழி மரணத்தைக் காணாது’ என்று பிரசாத் கூற ’ஆம்’ என்று அவருடைய தந்தை ஆமோதிக்க , அதைக் கேட்டு  பாட்டியம்மா வெளிவந்து அவர்களை நீடூழி வாழ வாழ்த்துகிறாள். நாவலின் நெடுக ரகுவர் பிரசாத்- ஸோன்ஸி நடத்தும் அன்பினியவாழ்வின் புனைவு  கவித்துவ வீச்சென்றால், ரகுவர் பிரசாத்துக்கும் அவருடைய தந்தைக்கும் இடையே நடக்கும் இந்த  குறுகிய உரையாடல்  நாவலின் தத்துவச் சுருக்கம். 

அத் தத்துவச் சுருக்கத்தின் விளக்கம் நன்றாக வாழ்வது தேவைகளின் அபரிமிதத்தில் இல்லை என்பதாகும். தேவைகளின் குறைவிலும் –மனஜன்னல் விசாலமாயிருந்தால்- நன்றாக வாழ்வது சாத்தியம். வறிய நிலையிலும் தங்கக் காப்புகளை பரிசாக அளிக்கும் பாட்டியம்மா அதனின் உதாரணம். சிறிய அறையாயிருந்தாலும், பிரசாத்தின் பெற்றோரும் ,அவருடைய சின்னத் தம்பியும்  வரும்போது இருக்கிற இடத்தில் ரகுவர் பிரசாத்-ஸோன்ஸி இருவரும்  சேர்ந்து ஐவராய்ப் பகிர்ந்து கொள்ள அறை நெகிழ்ந்து கொடுக்கிறது. அக்கறையோடு, ஜன்னலுக்கு வெளியிலிருந்து அறைக்குள் எட்டிப் பார்க்க குழந்தைகள்  உடைந்த அரை செங்கற்களையே  சரியாக அடுக்காமல் வைத்திருந்ததைக் கண்டு ரகுவர் பிரசாத் அவற்றை ஒழுங்காக அடுக்கி, அவர்கள் எளிதாக எட்டிப் பார்ப்பதற்கு போதுமான உயரத்திற்கு இன்னும் முழு செங்கற்களை அடுக்கி வைக்கிறார்.   ஸோன்ஸியின் வீட்டின்  சுற்றமிருப்போர் முகந்தெரியாதவர்  வரினும் கதவைத் திறக்கின்றனர்;  அருந்தத் தண்ணீர் தருகின்றனர்; ஸோன்ஸி தினம் தன் வாயிலில் வந்து காத்திருக்கும் பழுப்புநிறப் பசுவுக்கு இரண்டு சப்பாத்திகளைத் தின்னத் தருகிறாள். ஒருமுறை பாகனால் கைவிடப்பட்டு தன் வீட்டின் முன் வந்து நின்ற யானையின் தீனிக்கு ரகுவர் பிரசாத்  தழைகளைப் பறித்துப் போடுகிறார். யானை உண்ண ஸோன்ஸி சப்பாத்தியும் தருகிறாள்.  பீடி புகைப்பதற்காக தந்தை அடிப்பாரென்று வீட்டுக்கு செல்லாமல் அத்தி மரத்தில் ஒளிந்திருக்கும் பீடி புகைக்கும் சிறுவனிடம் ஸோன்ஸி அன்பு காட்டி, அவனுக்கு உணவளித்து, கடைசியில் அவனைத் திருத்துகிறாள். ஓரிரவு கொட்டும் மழையில் மரத்தில் அமர்ந்திருக்கும் அவன் நனைவானேயென்று இரவிலேயே மழைவெள்ளத்தில் நீந்தி ரகுவர் பிரசாத் வீட்டிற்கு அழைத்துவர அவனிடத்திற்கு செல்கிறார். அன்பில் கால்கொள்ளும் வாழ்க்கை அதனை நன்றாய் வாழ்வதாகிறது. பாகனின் அனுபவ ஞானத்தில் வாழும் உயிர்களைப் பேணுவதில்தான் நற்பேறை ஈட்ட முடியும்; நன்றாய் வாழமுடியும். சுக்லாவின் நாவலில் எளிய நிலைகளிலும் பல்விதங்களில் தெரிவாகும் பேரன்பே  ரகுவர் பிரசாத்-ஸோன்ஸியின் காதல் வாழ்வை  தனிப்பட்டதாக்காமல் காட்டுலகோடு இணைந்த கவின் பெருவாழ்வாய்ப் பரிணாமப்படுத்துகிறது. அந்த வகையிலே  வீட்டுலகில் தம்பதியினர் வாழ்வின்  யதார்த்தச் சித்தரிப்புக்கு எதிராய்க் காட்டுலகில் அவர்களின்  வாழ்வின் மீநடப்பியல் சித்தரிப்பு மாறுபாடாய்த்(contrast) தோன்றினும் அதே சமயத்தில்   ஒன்றையொன்று முழுமையாக்குவதற்கு (complementary)  அவசியமாய், மீநடப்பியல் சித்தரிப்பு நாவலின் தேவையாய் சுக்லா நமக்கு உணர்த்துவது போல் தோன்றுகிறது. அந்த வகையிலே வீட்டுலகுக்கும்  காட்டுலகுக்கும் இடையே  காதல் தம்பதியினர் ஜன்னலின்  வழியே முன்னும் பின்னும் குதித்துச் செல்வது போல் வீட்டுலகின் யதார்த்தச் சித்தரிப்புக்கும் காட்டுலகின் மீநடப்பியல் சித்தரிப்புக்கும் இடையே நாவலும் முன்னும் பின்னும் ஜன்னலின் வழியே குதித்துச் செல்வது போல் மாயம் கொள்கிறது

(3)

நாவலின் மையம் ரகுவர் பிரசாத்-ஸோன்ஸி தம்பதியராய்த் தோன்றினாலும், இன்னொரு மையம் யானையென்று தோன்றுகிறது. நாவலின் தொடக்கத்திலிருந்து , இறுதி வரை யானையின் பதிவுகள் இல்லாமல் இல்லை. தொடக்கத்தில் தோன்றுகிற யானை , இறுதியில் காணாமல் போகிறது. ரகுவர் பிரசாத்- ஸோன்ஸி தம்பதியரின் காதல் வாழ்வின் இனிமை நாவலின் வாசிப்பின் முடிவில் மனதில் நீங்காமல் நீடிக்கிறதை விட யானை காணாமல் போன வெறுமை நம் மனதில் நீங்காமல் நீடிக்கிறது. ரகுவர் பிரசாத்தும் ஸோன்ஸியும் கூட சுற்றுவெளியில் காணாமல் போன யானையைத் தேடுகின்றனர். வாசக மனங்களையும் அவர்களோடு சேர்ந்து தேட வைக்கிறது நாவல். பாகனால் அனாதையாய்க் கைவிடப்பட்டு விட்ட யானையை கவனித்துக் கொள்ள ரகுவர் பிரசாத் கல்லூரியிலிருந்து விடுப்பெடுக்கிறார். ரகுவர் பிரசாத்தின் துறைத்தலைவருக்கு அனாதையாய்க் கைவிடப்பட்டு பிரசாத்தின் வாயிலின் முன் நிற்கும் யானைக்கு ரகுவர் பிரசாத் பொறுப்பல்ல என்று கருதும்போது, மாறாய் ரகுவர் பிரசாத் பாகன் யானையைத் தன்னை நம்பி ஒப்படைத்ததாகவே கருதுகிறார்.  அதற்கும் மேலாக ’யானை ஒரு வாழும் உயிரி; அதன் மீதேறி கல்லூரிக்கு சென்று வருகிறார்’ என்பது அவருடைய பொறுப்புக்கு அடிப்படையான காரணமாகிறது. ரகுவர் பிரசாத்- தம்பதியினரின் யானை மீதான பரிவு உயிரிரக்கமாய்- ஆன்மநேய உருக்கமாய்- இங்கு பரிணாமமாகிறது. அதனாலே , யானையைக் கைவிட்டு விட்டு,  நோயுற்ற பாகன் பனாரஸ் சென்றுவிட்டதைக் கேள்விப்பட்ட   ரகுவர் பிரசாத் , மனைவி தடுத்தும், யானையைக் காண அது கட்டிப்போடப்பட்டுள்ள இடத்திற்கு ஒரு பின்னிரவில் நடந்து செல்கிறார். செல்லும் போது யானைக்கு அதன் தீனிக்கு தழைகளை மரத்திலிருந்து வெட்டிப் பறித்தெடுத்துச் செல்லுமாறு ஸோன்ஸி நினைவுபடுத்துகிறாள்.  கால்நகத்தின் காயத்திற்கு சூடு போடப்பட்ட  அந்த யானை இரும்புச் சங்கிலியில் கட்டப்பட்டிருக்கிறது. யானை அவரை அறிந்துகொண்டு அவரை நோக்கி முன்வர விழைகிறது. ரகுவர் பிரசாத் இலாவகமாய் இரும்புச் சங்கிலியின் கொக்கியை யானையின் காலிலிருந்து அவிழ்த்து விடுகிறார். கொக்கியிலிருந்து விடுவிக்கப்பட்ட யானையின் சுதந்திரத்தில் அவர் அகம் மகிழ்கிறார்.   வீடு திரும்பும்போது, யானையும் தன்னைப் பின்தொடருமென்று எண்ணுகிறார் ரகுவர் பிரசாத். அன்றிரவு முழுவதும் கண்ணுறங்காது யானை வீடு வந்து சேர்ந்ததா என்று தம்பதியினர் இருவரும் வாயிலில் விழி வைத்திருக்கின்றனர். யானை வந்திலது. மறுநாள் விடிந்ததும் விடியாததுமாய் ரகுவர் பிரசாத் யானையின் இடத்திற்கு சென்று விசாரிக்கிறார். யாருக்கும் யானை எங்கு சென்றதென்று தெரியவில்லை. அங்கிருந்த யானையின் இரும்புச் சங்கிலியை எடுத்துக் கொண்டு ரகுவர் பிரசாத் வீடு திரும்புகிறார். அந்த இரும்புச் சங்கிலி அவர்கள் வீட்டின் மூலையில் கிடக்கிறது. அது வெளியே தூக்கிப் போடப்படவில்லை. அதைக் காணும்போதெல்லாம், அது அவர்களுக்கு யானையை நினைவுபடுத்தலாம். யானைச் சங்கிலி மிகவும் கனப்பது போல், அதன் நினைவும் அவர்களுக்கு கனக்கலாம்.  இருவரும்  யானை எப்படியாவது தென்படும் என்ற நம்பிக்கையில் தினம் மாலைவேளையில் நடை செல்கின்றனர்.  ரகுவர் பிரசாத் வீட்டை விட்டுப் போகும்போதெல்லாம், யானை  மீதேறி  அவர் வீடு திரும்புவாரென்று ஸோன்ஸி கனவு காண்கிறாள்.  ஆனால் ரகுவர் பிரசாத் நடந்தே சோர்ந்து வீடு திரும்புகிறார். யானை எங்கும் தென்படவே இல்லை. நாவலின் முடிவில்  இப்படியொரு காட்சி: ’ரகுவர் பிரசாத்தும், ஸோன்ஸியும் ஜன்னலை நோக்கிப் பார்க்கின்றனர். ஜன்னலினுள்ளே வழிந்தோடும் வெளிச்சமும், வெளிச்சத்தினூடே மறைந்து கொண்டிருக்கும் இருளும் சேர்ந்து  ஒரு யானையின் தூக்கிய துதிக்கையாய் ஒரு கேள்விக்குறியாய் வடிவம் கொண்டிருந்தது’. அந்த கேள்விக்குறி எது? யானை எங்கேயா? எங்கு சென்றதென்று தெரியாமல் சென்று  விட்ட யானை  எங்கு சென்றதென்று தெரியும் வரை அந்த கேள்விக்குறி இருந்து கொண்டே இருக்குமா? 

ரகுவர் பிரசாத்துக்கு யானையோடு உறவு டெம்ப்போவுக்கான ஒரு காத்திருப்பில் தொடங்குகிறது. அந்தக் காத்திருப்பில்- காத்திருப்பின் சோர்வை மறைக்க ஏதாவதொரு பொருளற்ற செயலை- பீடா போடுவது போல- செய்ய அவனை யோசிக்க வைக்கிறது. வேண்டுமானால்,  ’டெம்ப்போவுக்கான காத்திருப்பை’ இன்னொரு செயலால்- அது எவ்வளவு பொருளற்றதாயினும்- மறைத்து விடலாம். ஆனால் ’காத்திருப்பையே’ மறைத்து விட முடியாது. அந்த ’டெம்ப்போவுக்கான  காத்திருப்பு’ யானையின் வருகைக்குப் பின் முடிவுக்கு வருகிறது. ஸோன்ஸியின் வருகைக்குப் பின் யானையும், அதன் பாகனும் ரகுவர் பிரசாத் குடும்பத்தின் அங்கமாகி விடுகின்றனர். ரகுவர் பிரசாத்தின் பெற்றோரும், சின்னத்தம்பியும் யானையையும், பாகனையும் நேசிக்கின்றனர். ரகுவர் பிரசாத்தின் சின்னத்தம்பி யானை மீதேறிச் சென்று குதூகலிக்கிறான். ராம்லீலாவுக்கு ரகுவர்பிரசாத்தின் குடும்பம் யானை மீதேறிச் செல்கிறது. ஒருநாள் ஸோன்ஸி தன் கணவனுக்கு மதிய உணவை   யானை மீதேறி எடுத்துச் செல்கிறாள். பனைமரங்களும் ரகுவர் பிரசாத் யானை மீதேறிச் செல்வதை கவனிக்கின்றன. ஒருமுறை கல்லூரியில் கைவிடப்பட்ட சைக்கிளை திருப்பித் தருவதற்கு ரகுவர் பிரசாத் சைக்கிளில் சென்றபோது அதை வித்தியாசமாகப் பார்த்தன  அவை.   யானை உயிரற்ற சைக்கிளல்ல. அது பேருயிரி. அது மதிக்கப்பட வேண்டும். காலணிகளைக் கழற்றிய பின்னரே  ரகுவர் பிரசாத் யானை மீது ஆரோகணிக்க ஏறுகிறார். அதே போல் சைக்கிளைத் திருப்பித் தருவதற்கு யானை மீது சைக்கிளை ஏற்றிப் போக அவரது மனம் மறுக்கிறது. ரகுவர் பிரசாத்தின் துறைத்தலைவருக்கும் கல்லூரி முதல்வருக்கும் யானை விவாதப் பொருளாகிறது. அவர்களுக்கு யானை அச்சுறுத்தும் விலங்கு. ஆனால் ரகுவர் பிரசாத்தும், ஸோன்ஸியும் அதனோடு பழகி விட அவர்களுக்கு அது அகம் நெருங்கிய உறவு. அவர்கள் யானையின் மொழியையும் கற்க முயல்கின்றனர். கடைசியில், முன்பு குறிப்பிட்டபடி,  யானை காணாமல் போன போது ரகுவர் பிரசாத்தும்- ஸோன்ஸியும் அதைக் கவனித்துக் கொள்வது என்ற முடிவுக்கும் வருகின்றனர். ஆனால் அது திரும்பியே வாராது, தேடியும் தென்படாத போது மனங் கவல்கின்றனர். நாவலெங்கும் –தொடக்கத்திலிருந்து முடிவு வரை- யானையின் தடங்கள் பதிந்துள்ளன. கருக்கலும் காலை விடிவதும் கூட யானையின் சித்திரமாய்-  ’இரவு கழிந்து கொண்டிருக்க, அதனுடைய சிறிது இருள் யானையின் வடிவத்தில்  பின்னால் விட்டு விடப்பட்டிருக்கலாம்.  காலை புலரும்போது இருள்யானை ஒளியானையாய் மாறி நாட்பகலோடு இரண்டறக் கலந்திருக்கு’மென்று- கவித்துவம் கொள்கிறது.  இருள்யானை என்ற படிமம் நாவலில் திரும்பத் திரும்ப பயில்கிறது. ஸோன்ஸி, ரகுவர் பிரசாத், அவருடைய பெற்றோர், சின்னத்தம்பி, ரகுவர் பிரசாத்தின் துறைத்தலைவர், கல்லூரி முதல்வர், பாகன், அத்திமரத்தில் ஒளிந்திருக்கும் சிறுவன்- ஏன் பனைமரங்கள் கூட- என்று பங்கெடுக்காத யாரும் நாவலில்லை எனும்படி, யாவரும்  யானையின் உலகில் பங்கு கொள்கின்றனர். யானை தோன்றுவதில் நாவல் தொடங்குகிறது. யானை நகர்வதில் நாவல் நகர்கிறது. யானை காணாமல் போவதில் நாவல் முடிகிறது.   யானையின் கண்ணோட்டத்திலிருந்து நாவலை வாசிக்கும் போது, கடைசியில்  ஒரு துன்பியல் உணர்வை நோக்கி நாவல் நம் மனதை நகர்த்துகிறது. அது  நாவலை ரகுவர் பிரசாத்-ஸோன்ஸியின் கண்ணோட்டத்தில் வாசிக்கும் போது எழும் இன்பியல் உணர்வுக்கு எதிராய் நாவலை நிறுத்துவதில் நாவலின் பிரதி அடுக்குகள் பல கொண்டதாய் ஆழம் கொள்கிறது. 

(4)

நாவலில் ரகுவர் பிரசாத்துக்கும் அவருடைய துறைத்தலைவருக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் அவற்றின் அபத்தத்தில் நகைப்பை விளைவிப்பதாய் அமைகின்றன. அவற்றினுள் அதிகாரப் படிநிலை அமைப்பின்(hieararchical structure)  மீது சுக்லாவின் நுணுக்கமான விமர்சனமும் உள்ளடங்கும்.  கைவிடப்பட்ட யானையை கவனித்துக் கொள்வதற்காக விடுப்பு விண்ணப்பத்தை துறைத்தலைவரிடம் கொடுக்கும் போது, அவர் கேட்ட கேள்விக்கு, ‘ அது போல் இல்லை “ என்று ரகுவர் பிரசாத் பதில் கூறிய போது, கூறிய வாக்கியத்தின் பின்னால் ‘சார்’ சேர்க்க மறந்து போய், பிறகு அதைச் சேர்ப்பதற்கு சில எட்டுகள் வைத்த பின்னர்  ‘சார்’ என்று மட்டும் சொல்லி அவசரத்தில் வீட்டுக்கு  ரகுவர் பிரசாத் வந்து விட்டார். பின்னர் கல்லூரிக்கு செல்லும் வழியில் ரகுவர் பிரசாத்தை சந்திக்க வந்த துறைத்தலைவர் அவரிடம்,  ’ நீ விடுப்பு விண்ணப்பத்தை அளித்துத் திரும்பும் போது ‘ சார்’ என்று கூறினாயே, அதற்குப் பின்னால் ஒன்றும் கூறவில்லையே’ என்று வினவ ரகுவர் பிரசாத் ’அது அது போல், ’சார்’; உங்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது ’சார்’  சொல்ல மறந்து விட்டேன். என் தவறை உணர்ந்து நான் முன்பு சொல்லத் தவறிய ’சார்’ என்பதை பிறகு சொன்னேன்.  நீங்கள் அதை நான் சொன்னதோடு சேர்த்துக் கொள்வீர்கள் என்று நினைத்தேன்” என்கிறார்.  பதிலுக்கு துறைத்தலைவர்  ’ஒவ்வொரு நாளும் பத்து பதினைந்து முறைகள்  நீ ‘ சார் ‘ என்று கூறிவிட்டு போய் விட்டால், நான் வீடு திரும்புவதற்க்கு பதிலாக உன் ’சார்’களைப் பிரித்துப்  பொருத்திப் பார்ப்பதில்தான் நேரம் செலவழியும். தேவைக்கதிகமாக நீ சார்களைக் கூறினால்  வருஞ் சமயங்களில் நீ ’சார்’ சொல்ல மறந்து போகிற போது அவற்றுக்கு எதிராக  நான் வரவு வைத்துக் கொள்கிறேன்’   என்று கூறி விட்டு ” ரகுவர் பிரசாத், இனி மேல் என்னை ’சார்’ என்று அழைப்பதை விட்டு விடு’ என்கிறார்.   துறைத்தலைவரின் இந்தக் கூற்றுக்கு பதிலாய், நல்லவேளை, ரகுவர் பிரசாத் ‘ ஆமாம், சார்’ என்று கூறவில்லை. ’ஆம்’ என்கிறார். அதிகாரப் படிநிலை அமைப்பை இதை விட நுணுக்கமாய்ப் பகடி செய்ய முடியாது.

(5)

இலக்கியக் கோட்பாட்டு ரீதியில் , சுக்லாவின் நாவலை அணுகினால் , முன்பு கூறியது போல் பாட்டி, பாகன் போன்ற விளிம்புநிலைப் பாத்திரங்களை நாவல்  பேசுவதிலும், நாவலின் மையங்கள் ரகுவர் பிரசாத்-ஸோன்ஸி, யானை என்றமையக் கூடியதாய் மையம் கலைவதுமாயும்,  பெருங்கதையாடல் அல்லது பெரிதாய்க் கதைப்பின்னல் என்றெல்லாம் அமையாதும் ,  நேர்கோட்டுக் கதை என்றுமில்லாதும் இருப்பதால் ஒரு பின்நவீனத்துவ வாசிப்பையும் நிகழ்த்த நாவல் அனுமதிக்கிறது எனலாம். அதே போல் சாதாரணக் காட்சிகளைக் கூட விநோதப்படுத்துவதில்(defamiliarising),   சாதாரணக் காட்சிகள் அசாதரணமாவதில் நாவலில் உருவவியலின் (formalism)  கூறுகளையும் அடையாளம் காணலாம்.  சான்றாக, டெம்ப்போவுக்கு காத்திருக்கிற போது, ரகுவர் பிரசாத் நான்கு பனைமரங்களை கவனிக்கிறார். பனைமரங்கள் பனைமரங்கள்தாம். ஆனால் அவருக்கு   அவை ’பொறுமையான காத்திருத்தலே’ மரங்களாகியதாய்த்  தோன்றுபவை. மேலும் அவருடைய காட்சியில் மரம் காலம்.  அவர் பார்வைக்கு  “முன்பிருந்து இப்போது வரை காலத்தை மரம் சேர்த்துக்கூட்டியுள்ளது.  இப்படியே காலம் முடியும் வரை மரம் காலத்தை சேர்த்துக்கூட்டும்’. மற்றொரு முறை அந்த நான்கு பனை மரங்களை  ரகுவர் பிரசாத் கவனிக்கிறார். அதே பனை மரங்கள்தாம் அவை. ஆனால், இப்போது, கல்லூரியிலிருந்து எடுத்துவந்த கைவிடப்பட்ட சைக்கிளை திருப்பிக் கொடுக்க,  ’கல்லூரிக்கு செல்ல காத்திருந்து கல்லூரிக்கு செல்லாமல் கல்லூரிக்கு ரகுவர் பிரசாத்( சைக்கிளில்)  செல்கிறதை’- வித்தியாசமாய் இருக்கிறதாய்க் காண்கின்ற வித்தியாசமான பனை மரங்கள் அவை. அதே நான்கு பனை மரங்கள் இன்னொரு சமயம் ரகுவர் பிரசாத்தின் கண்களில் தென்படுகின்றன. அவற்றின் நீண்ட ஓலைகள் முன்கவிந்து கிடக்கின்றன. இப்போது  ரகுவர் பிரசாத்தின் பார்வையில் அவை நான்கு பனைமரங்களாயில்லாமல் ஒரேஒரு பனைமரமாகித் தோற்றமுறுபவையாகின்றன. அதே  போல் நாவலின் முடிவில் குறிப்பிடப்படும் ரகுவர் பிரசாத்தின் வீட்டின் முன் நிற்கும் ஒரு வேப்ப மரம் எப்போதும்போல் நிற்கும் வேப்பமரம்தான். ஆனால் ’யாராலும்   கைவிடப்படாமலிருந்தது போல் அந்த வேப்பமரம் ரகுவர் பிரசாத் வீட்டின் முன் நின்றது’ என்ற நாவலின் விநோதப்படுத்தலில், நாவலில்  விவரிப்பாகும் கைவிடப்பட்ட யானை மற்றும் கல்லூரி சைக்கிளாகிய இவற்றின் பின்னணியில்- எப்போதும் போல் நிற்கும் வேப்ப மரம் புதிய காட்சிப் பரிமாணம் பெறுகிறது. 

யதார்த்தமும் மாயமும் நெடுக இழைந்து, ஒரு மாய யதார்த்தவாத ரீதியில் நாவல் நகர்கிறது.  நாவலில் பயிலும்  மாய யதார்த்தச் சித்தரிப்புகளோடு,  ஒருவர் ஒன்று வினவ, இன்னொருவர் அதை வேறுவிதமாய்க் கேட்க, பதிலுக்கு அவர் ஒன்று வினவ முன்வினவியவர் அதை வேறுவிதமாய்க் கேட்க- இப்படி மாறி மாறித் தொடரும்  வித்தியாசமான உரையாடல்களும்  சேர்ந்து, நாவலில் நெடுக ஒரு புதிய உத்தியாய் வந்து  நாவலின் மாய யதார்த்தவாதத்தை நாவலில் மேலும் வலுக்கூட்டுகின்றன. நாவலும் தன்னை நாவலென ’முஸ்தீபு’ செய்து கொள்ளாமல்  வாசகனை உள் அனுமதித்து உணர்வுப் பேரலையாய்த் தண்ணுறத் தொட்டு,  நாவலாயில்லாத நாவலாயும்  மாயம் கொள்கிறது. 

(6)

நாவலில் சைக்கிளுக்கும் யானைக்கும் ஓர் ஒப்பீடு அடிசரடாய் நெடுக இழைகிறது. கல்லூரியில் கைவிடப்பட்ட சைக்கிள்; பாகனால் கைவிடப்பட்ட யானை. பறக்கும் சைக்கிள்; மெதுவாக ஆடியசைந்து செல்லும் யானை. சைக்கிளில் செல்வதை பனைமரங்கள் கவனிக்காமல் இருக்கலாம். ஆனால் யானை மீது செல்வதை அவை கவனித்திருக்கும்.  அதிவேகமாய்ச் சுழலும் உலகின் பிரதிநிதித்துவம் சைக்கிள். மெதுவாகச் சுழலும் உலகின் பிரதிநிதித்துவம் யானை. எந்த உலகில் நுழைவது என்பது நம் முன்னுள்ள தேர்வு.  ரகுவர் பிரசாத்தும்- ஸோன்ஸியும் யானையின் உலகின் தேர்வில், அந்த உலகில் சஞ்சரித்தனர். ஆனால் கடைசியில் யானை காணோம். சைக்கிளின் உலகம் அதிவேகப் புறஉலகம். ஆனால் யானையின் உலகம் மெதுவேக அகஉலகம்.  முன்னதை இழந்து விடலாம். யானை காணாமல் போனதுபோல் பின்னதை இழந்து விட முடியாது.   ஸோன்ஸி தன் பெற்றோரின் வீட்டுக்கு சென்று திரும்பி வரும்போது, ரகுவர்பிரசாத்துக்கு அவருடைய தந்தையின் பழுது சரிசெய்யப்பட்ட சைக்கிளைத்  தன்னோடு எடுத்து வந்து விடுகிறாள். அது ரகுவர் பிரசாத் வீட்டின் முன் நிற்கிறது.  அதை யாரோ ஒருவரால் அனாதையாய்க் கைவிடப்பட்டு நிற்கின்ற சைக்கிளாய் அந்த வழியில் ஸ்கூட்டரில் செல்லும் ரகுவர் பிரசாத்தின் துறைத்தலைவர் காண்கிறார். ஆனால்  யாராலும் கைவிடப்படாமலிருந்தது  போல் ரகுவர் பிரசாத் வீட்டின் முன் நிற்கும் அந்த வேப்ப மரத்தை கவனிக்காமல்  அவசரத்தில் தன் ஸ்கூட்டரில்  விரைந்து விடுகிறார்.  நாவலின் முடிவில் குறிப்பிடப்படும் இந்தக் காட்சி  இயற்கையிலிருந்து விலகியுள்ள இன்றைய அவசர  மனிதவாழ்வினை நாவல் இடையீடு செய்யும் குறிப்பாயுள்ளது

(7)

இந்தியில்  दीवारमेंएकखिड़कीरहतीथी  என்று தலைப்பிடப்பட்ட சுக்லாவின் இந்த நாவல் ‘சுவரில் ஒரு ஜன்னல் இருந்து வந்தது’  என்ற தலைப்பில்  இந்தியிலிருந்து என். காமாட்சி தரணிசங்கரின் நேரடியான தமிழ் மொழிபெயர்ப்பில் சாகித்ய அகாதெமி வெளியிட்டுள்ளது. என் வாசிப்பில் தமிழ் மொழிபெயர்ப்பில் நாவலின் கவித்துமான பகுதிகள் அவற்றின் காத்திரத்தோடு மொழிபெயர்க்கப்பட்டதான அனுபவத்தை அளிக்கவில்லை. இந்த நாவல் சத்தி கன்னாவால் ‘  A Window Lived in the Wall’  என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  தமிழ்மொழிபெயர்ப்போடு ஆங்கில மொழிபெயர்ப்பையும் சேர்த்து வாசிக்கும்போது பின்னதில் சுக்லாவின் கவித்துவம் முன்னதை விடச் சிறப்பாகக் கைப்பற்றப்பட்டுள்ளதாய்த் தோன்றுகிறது. சான்றாய் நாவலின் ஒரு பகுதியை இரண்டு மொழிபெயர்ப்புகளிலும் காணலாம்.

தமிழ் மொழிபெயர்ப்பில்

ஸோன்ஸி, அறையிலிருந்து மரங்களின் ’கரகர’ ஒலி சென்று விட்டது. தற்சமயம் மரங்களின் வெளிப்பகுதியிலிருந்து உள்ளே வந்து விட்டது.

ரகுவர் பிரஸாத், மரங்களின் இந்த கரகர ஒலி பீடத்தில் பறவைகளின் ஆரவாரம் அலங்காரமாக அமர்ந்து இருந்தது.  அந்த ஆரவாரமும் ‘கரகர’ ஒலியுடன் சென்று விட்டது. 

ஸோன்ஸி, மரங்களின் ஒலிக்கு முன்பாகவே பறவைகளின் ஆரவாரம் பறந்து சென்றிருக்கலாம் அல்லவா?

”மரங்களின் ஒலிக் கிளையில் பறவைகளின் ஆரவாரம் அமர்ந்து இருக்கலாம்”.   

”திடீரென்று பயந்து விட்டது”.

“திடுக்கிட்டு சென்றது”.

நான் உன்னுடைய போர்வையை வேகமாக உதறியபொழுது, நீ(பெண்பால்) உன்னுடைய போர்வையை உதரிய1சப்தத்தில் ‘ஆரவாரம்’ திடுக்கிட்டு பறந்து விட்டது.

நாம் இருவருமே ஒரே போர்வையில் தான் இருந்தோம்’ . ஆனால் குளிர் இல்லை. இருந்தாலும் ஜன்னல் கதவுகள் திறந்தே இருந்தன. ஆனாலும் போர்வையில் பறவைகளின் ஆரவாரம் இருந்தது.  ஆனால் இதுவும் சிறிது நேரம் நடந்தது. 

ஆங்கில மொழிபெயர்ப்பில்

‘The rustling of trees has left the room. The rustling we are hearing now is coming from the trees outside’, Sonsi said.
‘Inside the sound of rustling of trees was the chirping of birds. The sound of chirping has also left’, Raghuvar Prasad said.
‘The sound of chirping may have flown out before the rustling wind departed’.
‘The sound of birds chirping must have alighted on the branches of rustling’.
‘It flew away suddenly’
‘It flew away startled’.
‘When I pulled your coverlet off’
When you pulled your own coverlet off , the chirping of birds took flight.
‘We were under the same coverlet’.
‘But it wasn’t cold’.
‘But the window was open’.
‘But the chirping of birds was under the coverlet’.
‘But some of this happened too’.

சுக்லாவின் இந்த நாவலாய் நீடுவிரியும்  நெஞ்சையள்ளும் முழுக்கவித்துவத்தையும் முழுதும் துய்க்க மூலப் படைப்பு மொழியான இந்தியில் வாசித்தால் மட்டுமே முடியுமென்று தோன்றுகிறது. 

1  இந்த மாதிரி எழுத்துப் பிழைகள் தமிழ் மொழிபெயர்ப்பில் ஏராளம். நாவலின் அத்தியாயங்களும் பிரிக்கப்படவில்லை. இவை வாசிப்பில் நெருடலை உண்டாக்குகின்றன.  தமிழில் பதிப்பு வேலையில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை எனத் தோன்றுகிறது.

Sources:  

  1. A Window Lived in the Wall , Translated from Hindi by Satti Khanna, Eka, Westland.
  2. ’சுவரில் ஒரு ஜன்னல் இருந்து வந்தது’  , தமிழில்: என். காமாட்சி தரணிசங்கர், சாகித்ய அகாதெமி, 2018.

Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.