வினோத் குமார் சுக்லாவின் கவிதைகள்

தமிழாக்கம்: கு.அழகர்சாமி

(1)

ஒரு சுவரில் வாழ்ந்து வந்த ஒரு ஜன்னலிருந்தது.
அந்த ஜன்னலால் வாழ்ந்து வந்தது ஒரு காட்சி:
ஒரு குடில், இரு நடைபாதைகள், ஒரு நதி,
குளங்களிரண்டு.
ஒரே ஒரு வானம் அவற்றுக்கு போதுமாயிருந்தது.
மனிதர்கள் வந்து போயினர்.
மரங்களும், பறவைகளும் அங்கிருந்தன.
ஒவ்வொன்றும் ஜன்னலில் வாழ்ந்து வந்தது.
சுற்றுமுற்றும் யாருமில்லையென்றால்
ஜன்னல் மூடியிருந்தது.
யாராவது அங்கிருந்தால்
ஜன்னல் திறந்திருந்தது.
சுவரில், அதனின் ஒருபுறம்
ஒரு மனிதன் வாழ்ந்து வந்தான்.


(2)

செல்லச் செல்ல நீ பிறரைச் சந்திப்பாய்.
செல்லச் செல்ல நீ மறுகரையை வந்தடைவாய்.
செல்லச் செல்ல முன்பு முடியாதென்று
தோன்றிய அங்கு நீ அடைய முடியும்.
செல்லச் செல்ல உன் பின்னால் உள்ளதை
பின்னால் விட்டு விட்டுச் செல்வாய்.
செல்லச் செல்ல என்ன
இனி நிகழ இருக்கிறதோ அது இருக்கும்.
செல்லச் செல்ல இருக்கிறதாய் ஒன்றுமில்லாத போது
உன் பின்னாலுள்ள எல்லாமும் இன்னும் இருக்கும்-
இன்னும் இருந்து கொண்டிருக்கிற ஒன்றுமில்லையில்
செய்யப்பட வேண்டிய எல்லாமும்
செய்யப்பட வேண்டி மீதியிருக்கும்.


(3)

எந்த இடத்தில் நான் இருப்பேனென்று
தீர்மானிக்கப்பட்டதோ,
எந்த இடத்திலிருந்து நான்
கடந்து செல்கிறவர்களை
எப்போதும் கவனிக்கின்றேனோ
அந்த இடத்தில் இருக்கிறேன் நான்.
இந்த இடத்தில் தான்
நாங்களெல்லோரும் ஒன்று கூடுவோம்,
எண்ணிப் பார்க்க,
வேறெந்த இடத்திலும் நாங்கள் கூடியிருக்க முடியுமாயினும்
மற்றும் நாங்கள் ஒன்றுகூட முடியாத
இடம் எதுவும் இருக்காது
என்றாலும்.
எந்த இடத்தில் ஒன்றுகூடுகிறோம்
என்பது ஒரு பொருட்டல்ல.
ஒன்றுகூடுவதற்கென்று குறிக்கப்பட்ட இடத்தில்
தவறாது நாங்கள் சந்திக்கிறோம்.


(4)

முடிக்கப்படாத எதுவும் முழுமையாக்கப்பட்டதில்லை.
ஆனால் ஒரு புதிய தொடக்கம் ஆக்கப்பட்டுள்ளது.
ஒரு புதிய முடிக்கப்படாதது பின்னால் விட்டு விடப்பட்டுள்ளது.
அப்படிப்பட்டவை ஏராளம் இப்போது-
உன்னால் அவற்றை எண்ணி முடிக்க முடியாது.

ஆனால், உன்னால் பேரளவினாதாய்
வாழ முடியாத ஒன்றினாலல்ல-
ஒரு முடிக்கப்பட்ட முழுமையென்பது போல்
முடிக்கப்படாததால்
நிரப்பப்பட்டுள்ள
இந்த முடிக்கப்படாத வாழ்க்கையைப் பார்.

இந்த பேரளவினதான வாழ்வில்
மரணத்திற்கு முன்புள்ள கணத்தில்
ஒரு புதிய கவிதை தொடங்கி விட முடியும்-
வெகு காலத்திற்கு முன்பு தொடங்கிய ஒன்றைப் போல
நீ எழுதிய முதற்கவிதையைப் போல.

புதிய முடிக்கப்படாதது எதையும் கடைசியானதென்று
பார்த்து விடக் கூடாது.



(5)

மிகத் தொலைவிலிருந்து ,
கட்டாயப்படுத்தப்பட்டாலும் கூட நீ
திரும்ப முடியாத தொலைவிலிருந்து-
ஒரு நாள் ஏழு கடல்களும் எங்கு உன்னை
இட்டுச் செல்கிறதோ அங்கு நீ செல்வாய் என்ற
எப்போதுமான நம்பிக்கையுடன்-
உன் வீட்டை நீ பார்க்க வேண்டும்-
செல்வதற்கு முன்பு
பின்திரும்பி –
உன் தேசத்தை
மற்றொரு தேசத்திலிருந்து
புவியை விண்வெளியிலிருந்து –
உன் குழந்தைகளையும்,
அவர்கள் வீட்டில் என்ன செய்கிறார்களோ என்று
நீ எண்ணும் போது
புவியின்குழந்தைகளைப் பற்றியும்
நீ எண்ணிக் கொண்டிருக்கும்படி
வீட்டில் போதுமாயில்லாத பொருட்கள் குறித்த கவலை
புவியில் போதுமாயில்லாத பொருட்கள் குறித்த
கவலையாயிருக்கும்படி
புவியில் பசித்திருக்கும் ஒருவன்
வீட்டில் பசித்திருக்கும் ஒருவனைப் போன்றிருக்கும்படி
புவிக்கு திரும்புவது
வீட்டுக்கு திரும்புவது போன்றிருக்கும்படி-
பார்.
வீட்டினுள் விஷயங்கள் அவ்வளவு குழப்பத்திலிருக்க,
சில எட்டுகள் வைத்த பின்பு
நான் வீட்டை நோக்கி திரும்பிய போது
அது புவியை நோக்கி
திரும்பியது போல் இருக்கிறது.


(6)

அரைகுறையாய் நினைவாகும் விஷயங்கள்-
நாட்கள் நழுவிச் செல்லும்.
யாவும் மறந்து போகவில்லை.
நினைவுகூரப்பட்டதிலிருந்து
ஏதோ சில மறக்கப்படுகின்றன.
மறக்கப்பட்டவற்றிலிருந்து
ஏதோ சில நினைவுகூரப்படுகின்றன-
இதை நான் ஒரு முழுநேர வேலையாகக் கருதுகிறேன்-
திங்களிலிருந்து ஞாயிறு வரை
தேதி முதலிருந்து முப்பத்து ஒன்று வரை
முப்பது நிமிட வரைக்கும் கூட-
அப்படி ஒன்றிருந்தால்-


(7)

என் காலடிகளுடனல்ல-
ஒவ்வொருவரின் காலடிகளினுடன்
ஒவ்வொருவரோடும் கூட நடக்கிறேன்.
ஒவ்வொருவரின் விழிகளுடனும் காண்கிறேன்.
நான் விழிக்கும்போது
ஒவ்வொருவரின் விழிப்பிலிருந்து அது.
நான் உறங்கும்போது
ஒவ்வொருவரின் இமைகளின் கீழ் அது.
தனியாயிருக்கிறதற்கு மாறாய்
நான் ஒரு பெருங்கூட்டம்.
அதிலுள்ள ஒவ்வொரு தனிமனிதனும் நான்.
என்னைத் தேடிக் கொண்டு திரியாதே.
நீ என்னைக் கண்டுபிடித்தால் ,அது
மற்ற எல்லோரையும் நீ
கண்டுபிடித்த பிறகாய் இருக்கும்.
ஒரு வேளை நீ என்னைக் கண்டுபிடிக்கவே முடியாது.
எனக்கு பதிலாக
நீ காண்கிற முதல் மனிதனை
நீ சந்திக்க முடியும்.


(8)

விரக்தியில் ஒரு மனிதன் அமர்ந்திருந்தான்.
அவனை அறிந்ததில்லை நான்.
ஆனால் விரக்தியை அறிந்தவன் நான்.
அதனால், அவனருகில் போய்
என் கரத்தை நீட்டினேன்.
என் கரத்தைப் பற்றி எழுந்து நின்றான் அவன்.
அவன் என்னை அறிந்திருக்கவில்லை.
ஆனால் என் நீட்டிய கரத்தை அவன் அறிந்திருந்தான்.
நாங்கள் அருகருகே நடந்தோம்.
நாங்கள் ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை.
ஆனால் எப்படி இணைந்து நடப்பதென்று
நாங்கள் அறிந்திருந்தோம்.


(9)

ஒரு பக்கத்துவீட்டுக்காரிடம் செல்வதற்கு
ஒரு நடை செல்கிறேன்.
இது ஒரு யாத்திரை இல்லையா?
ஒரு யாத்திரை செல்வதற்கு
எப்போதும் வெகுதொலைவுதான் நீ போக வேண்டுமா?
என்னுடைய வீட்டிலிருந்து கிளம்பி விட்டேன்.
இப்போது என் பக்கத்துவீட்டுக்காரரிடம்
சென்று கொண்டிருக்கிறேன்.
என் வீடு எனக்குப் பின்னால்.
இரண்டு எட்டுகள்
எடுத்து வைத்திருக்கிறேன்
யாத்திரைக்கு-
தீர்த்த யாத்திரைக்கு.


(10)

அந்த மனிதன் ஒரு புதிய கம்பளிக் கோட்டை அணிந்து
ஒரு சிந்தனையைப் போல சென்றகன்று விட்டான்.
ரப்பர் செருப்புகளில், போராடிக் கொண்டு பின் தங்கி நான்.
காலை ஆறு மணி காலை ஆறு மணி போலிருந்தது.
ஒரு மனிதன் ஒரு மரத்தடியின் கீழிருந்தான்.
மூடுபனியில் மங்கலான அவனுடைய சொந்த வடிவிற்குள்
அவன் நிற்பது போல் தோன்றியது.
மங்கலான மரம் சரியாய் ஒரு மரம் போலவே தெரிந்தது.
அதன் வலதில் தாழ்ந்த இனத்தைச் சேர்ந்த
ஒரு குதிரையைப் போலிருக்கும்
தாழ்ந்த இனத்தைச் சேர்ந்த
ஒரு மங்கலான குதிரை இருந்தது.
குதிரை பசித்திருந்தது-
மூடுபனி அதற்கு ஒரு புல்நிலம் போல்.
வேறு பல வீடுகளும் , மரங்களும், சாலைகளும் அங்கு-
ஆனால் வேறெந்தக் குதிரையும் இல்லை.
அங்கு இருந்தது ஒரேஒரு குதிரை-
அந்தக் குதிரையில்லை நான்.
ஆனால் என் மூச்சு , மூச்சுவாங்கும் போது,
மூடுபனியிலிருந்து வேறு பிரித்தறிய முடியாததாயிருந்தது.
மரத்தின் கீழ் அந்த குறிப்பிட்ட தடத்தில்
நின்றுகொண்டிருக்கும் அந்த மனிதன் எஜமானனென்றால்
பிறகு அவனுக்கு நான்
என் மிதியடியில் லாடம் கட்டப்பட்டு
நாலுகாற் பாய்ச்சலிலோடும் ஒரு குதிரை.


(11)

இத்தனை ஆண்டுகளாக
கூறுவதற்கு அதிகமிருந்தது.
இன்னும் அதிகம் மீதமிருக்கிறது.
கூப்பிடுவது
நானாய்த் தோன்றலாம்.

கவனிப்பதற்கல்ல
போவதற்கே நான் இங்கு வந்தது.
நான் வரவே இல்லாதது போல.

போதலை நினைவு கொள்கிறேன்.
இந்த நிமிடம் நான் போகின்றேன்
போதல் நின்று விடுவதில்லை என்பது போல.

இயம்பப்பட்ட எல்லாமும்
போதலோடு போய் விட்டது.
மீதியாய் மிஞ்சியது கூப்பிடலே-
வாயிலில் இங்கு .


(12)

நான் வந்துசேரப் போகிறேன்.

எதிர்காலம் அடுத்த கணமாய்
அவ்வளவு நெருக்கமாய் இருக்கிறது.
நிகழ்காலம் சரியாய் இப்போதாய்
அவ்வளவு கடந்து போனதாயுள்ளது.

மிகப் பக்கத்திலுள்ள எதிர்காலத்தையும்
மிக நெருக்கத்திலுள்ள கடந்த காலத்தையும்
உடன்வைத்துக் கொண்டு
இரவில் நிகழிலுள்ளேன் நான்.

துளையிடுபவர்களால் துளைக்கப்பட்ட
என் பழைய நடுமரப்பகுதியில் இருப்பது
கடந்த காலக் குப்பைக்கூளம்.
திரும்ப நினைத்துப்பார்த்தால்
கண்கூசும்படி புதிதாயுள்ளது அது.

அநேகமாக நான் வந்து சேர்ந்திருக்கிறேன்.
நேரம் சுமார் எட்டு மணியாய் இருக்க வேண்டும்.
இருட்டு நேரங்களில் நான் தங்க முடிகிற
ஓர் இடத்தை அமைக்க விரும்புகிறேன்.
ஆனால் காலம்
இந்தப் பயணத்தையே
இரவாய் மாற்றி விட்டது
திசையோ அதை
நிலவில்லா இரவாக்கி விட்டது.

நான் வந்து சேரும் வரை
வந்து சேர்வதன் முடிவில்
வந்து சேர்ந்து கொண்டே இருப்பது போல்
ஏறக்குறைய நான் வந்து சேர்ந்திருக்கிறாய்த்
தோன்றுகிறது அது.


(13)

எது போதாதாதாய்?
எது நம்மிடம் இல்லாததோ
அது போதாதாதயுள்ளது

எது குறைவாயுள்ளதோ
அது போதாதாயுள்ளது.

எது உபரியாயில்லையோ
அது போதாதாயுள்ளது.

எது அதிகமோ
ஆனால் அதிகமாயில்லையோ
அது போதாதாயுள்ளது.

பிறகு, அதிகமென்றால் என்ன?
போதாதாதாயாகி விடாதுள்ள போதாதது
அதிகம்.


(14)

அதிகபட்சமாயுள்ளது இறை இங்கு-
மிக அதிகபட்சமாய்.
வடிவற்ற அது
மிகப் பல் வடிவங்களைக் கொண்டுள்ளது
ஒவ்வொருவரும் தன்
தேவைக்கதிகமாய்
வைத்துக் கொள்ளும்படி.
அதைப் பகுத்த பின்னும் கூட
இன்னும் ஏராளம்
மீதியாயுள்ளன.
பல்வகை மனிதர்கள்
பல்வகை ஏராளங்கள்.
இந்த அபரிமிதத்தில்
அதை மேலும் காலியாக்க
என் காலிப் பையை
ஒரு தயக்கமான உதறலில்
உதறுகிறேன்
வடிவமற்ற சிலவற்றை
உதறி விடுவேன் என்னும்
அச்சத்தில்.


(15)

நகரவாசியான நான்
இயற்கையின் நடுவே
விநோதமாய்க் குழப்பமுற்றிருந்தேன்.

பேருந்து வரிசையில்
ஒரு சாலையோர மரங் கூட வந்து
சேர்ந்து கொண்டது போல் தோன்றியது.
அதற்கு சரியாகப் பின்னாலிருந்தேன் நான் –
வரிசையில் கடைசியாய்.

பேருந்து வந்தடைந்த போது
எழுதப் படிக்கத் தெரிந்த நான்
பேருந்தில் மரம் முதலில் ஏறுவதற்கு
காத்திருந்த வேளையில்,
மரங்கள் பேருந்தில் ஏறுவதில்லையென்று
எனக்கு பொறி தட்டிற்று .

நகரவாசியான நான்
மரத்தைப் பின்னால் விட்டு விட்டு
பேருந்தில் என் இருக்கையில் அமரும் வகையில்
இயற்கையிடமிருந்து பிரிக்கப்பட்டு உள்ளேன்.

இருக்கையில் அமர்ந்ததும்,
என் ஒரே விருப்பம்
கடந்து செல்கிற வழியெல்லாம்
சாலையின் இருபுறங்களிலும்
மரங்களைக் காண வேண்டுமென்பதே.

என் அறையில்
ஒரு காட்டின் முழுஉருவப் படத்தை
தொங்க விட்டிருக்கிறேன்.


(16)

தன் வழியைத்
தொலைத்து விட்ட சூரிய ஒளியின்
ஒரு கதிர்
என்னைச் சுற்றியுள்ள இருளில்
துளைகளிட
வந்து முயற்சிப்பதையல்ல
நான் விரும்புவது
என் இருள்
சூரிய ஒளிக்கதிர்
தன் வழிமாறிப் போவதை
அனுமதிக்கக் கூடாது என்பதைத்
தவிர.


(17)

தனித்தனி சமயலறைகள் இல்லாமல்-
ஒரே கூரையின் கீழ்
நாமெல்லோரும்-
தாத்தா, பெரிய சித்தி
அப்பா, மாமா, உடன் பிறந்தவர்கள்-
ஒன்று கூடி
வாழ்ந்திருந்திருப்போமா?
அதே சுற்றுப்புறத்தில்
தங்கியிருந்திருப்போமா?
இயற்கையின் பக்கத்தில் இயற்கை,
புல்லை அடுத்து புல்,
சேற்றினை அடுத்து சேறு
வாழ்கிறது.
காற்றில்
புயல்கள், சூறாவளிகள்
மணம் நிரம்பிய புயற்காற்றுகள்
முடிச்சுகளின்றி வாழ்கின்றன.
நம் மூச்சோடு சேர்ந்து
உலகைச் சுற்றிச்சுழன்று கொண்டிருக்கிறது
ஒரே ஒரு காற்று.


(18)

கடைசிச் சிறுத்தையும் இறந்து விட்டது.
இன்னுமோர் உயிரினம் அழிந்து விட்டது.

சிறுத்தை ஒரு வார்த்தை,
ஆனால் அது சிறுத்தையல்ல.
செய்திகளில், படங்களில், கதைகளில்
சிறுத்தை நம்மிடையே உள்ளது.

இந்த பூமி இழந்தவற்றைப் பற்றிய
விவரப் பட்டியல் இல்லை.
ஆயினும், பூமி-
பூமியென்னும் வார்த்தை, பூமியின் படங்கள்
பூமியின் செய்திகள், பூமியின் கதைகள்,
மனிதகுலத்தின் படிமங்கள், மனிதகுலத்தின் கதைகள்-
இவற்றையெல்லாம் கொல்லும் ஒவ்வொன்றும் மீதியிருக்கிறது

நிலவில்லா இந்த இரவின் முற்காலத்தியக் குகைக்குள்
நம் காதலையும், காதல் விளையாட்டையும் ஒளித்து வைப்போம்.


(19)

ஒரு வறண்ட நதி மறுபடியும்
அதற்கடுத்த வருடத்தில் வறண்டிருந்தது.
அடியாழத்தில்
அது மேலும் வறண்டிருக்கும்.
வறண்ட நதிகளினடியில்
உள்ளவையாய் மேலும் வறண்ட நதிகளின் வழிகள்
அமைந்திருக்கும் .

ஒரு கிராமத்தில்
அப்படிப்பட்ட ஒரு வறண்ட நதியோடு
கடைசியாய் உயிரோடுள்ள
அதன் அதிமூப்பான மனிதன்-
நதியின் தாவரத்தொகுதி
நதி மீன், நுண்ணுயிர்கள், நத்தைகள்-
இவற்றின் புதைபடிவங்கள்
மற்றும்
உள்ளே அடைபட்ட
பல மில்லியன் ஆண்டுகள்
பழமையான ஒரு மழைத்துளி-
இவையெல்லாம் அடங்கியுள்ள
தெளிவாகத் தெரிகின்ற ஒரு பாறை
வண்டற் படிவினுள்
கடைசியில் புதையுறுவதைக்
கண்டு கொள்வான்.
அதிமூப்பான மனிதனின் ஆத்மாவில்
பாதுகாக்கப்பட்டதாய் இருக்கிறது
ஒற்றை நெல்விதையொன்று.


(20)

ஒரு மரத்தின் கீழ் அமர்வது
நன்றான உணர்வளிக்கிறது.
அது அக உலகிற்கு
அழைத்துச் செல்கிறது.

அக உலகில்
அகக் காடு உள்ளது-
வேர்கள், மேலும் வேர்கள்
வேர்களின் காடு,
வேர்களிலிருந்து வளர்கின்ற வேர்கள்
மேலும் அவற்றிலிருந்து கிளைத்துக் கொண்டே.

ஒரு வேரின்
அதிஉச்சிக் கிளை மீது
அக ஒலிகளை எழுப்பி
அகப் பறவை அமர்ந்திருக்கிறது.
தேடி என்னை,
காட்டில் என் வழியை
தொலைத்துக் கொண்டே –
அதைக் கண்டுபிடித்துக் கொண்டே
இருக்கிறேன்.

வேர்களில் பூக்களோ
இலைகளோ இல்லை.
வசந்தம் என் பருவகாலம்-
குளிர்காலமல்ல.
அதனால்தான் ஒன்றிரண்டு சில பூக்கள்-
நான் விரும்புகின்ற அவை,
பூத்திருக்கின்றன.

வெளியுலகிற்கு மீண்டும் திரும்பியிருப்பது
நன்றான உணர்வைத் தருகிறது.

அதற்கு
வழி கண்டுபிடிக்க
ஒரு மரத்தின் கீழ் அமர்.


(21)

இன்னும் மழை பெய்யாதிருக்கிறது.
எங்கள் வீட்டின் முன்னாலிருந்த
ஒரு மரம் வெட்டப்பட்டிருந்தது.
அதுதான் காரணமா?

மாலையில் நாரைகள் வீடு திரும்புவதைப்
பார்க்கவில்லை நான்.
அப்படியொன்றைப் பார்த்து சிறிது காலமாகிறது.
அருகிலுள்ள குளத்திலிருந்த
கொஞ்சம் தண்ணீரும் வறண்டு விட்டது.
அதுதான் காரணமா?

ஜூலை வந்து போய் விட்டது.
ஆனால் இன்னும் மழையில்லை.
சென்ற ஜூலையிலிருந்த காடு
குறுகி விட்டது.
அதுதான் காரணமா?

ஓ, ஆதிவாசிகளே, மரங்கள் உம்மை கைவிட்டு விடவில்லை.
நீங்களும் தாமாகவே காட்டை வீட்டு நீங்கவில்லை.
சேறுஞ் சகதியுமாய்க் குழந்தைகளை இழுத்துக் கொண்டு
கூட்டங் கூட்டமாக நீங்கள்
இந்த ஆண்டு நகரத்தின் தெருக்களில்
நடந்து போவதைப் பார்த்தேன்-
காட்டின் மனிதர்கள் காடுகளில்லாமல்.
அதுதான் காரணமா?

இப்போது இந்த வருடமும் முடிந்து விட்டது.
தொகுதி தொகுதியான குடும்பங்களில்
சிசுக்களில்லாததைக் கவனித்தேன் நான்.
இது ஆதிவாசிகளின் முடிவின்
தொடக்கமா?


(22)

நகரத்திலிருந்து காடுகளை நான்
யோசிக்கும் போது
காடுகளை ஒரு யோசனையாலேயே
கொன்றொழிக்க முடிகிறது எனக்கு.
காட்டிலில்லாமல் வேறெங்கு காடுகள் இருக்கும்?
நகரத்து மரங்களிடையே அவை இருக்கும்.

இரவில் சாலையோர மரங்களின் கீழ்
உறங்குகின்ற ஒரு ஆதிவாசிக் குடும்பத்திற்கு
பஸ்தாரின் மைனா பறவையும், கூந்தல் பனையும்
கனவில் தோன்றும்.
ஆனால் கனவுகளைக் காண்கின்ற
கண்கள் குருடானவை.

இன்னும் காணவும் கேட்கவும் முடிகிற
குடும்பத்தின் மிகமூத்தவர்
இன்று, கனவு காண்கிற போது.
கனவின் ஒரு உலர் கிளையால் தாக்கப்பட்டு
அவரும் தன் பார்வையை இழந்தார்.


(23)

கணக்கற்றவற்றினுள்ளிருந்து
ஒரு நட்சத்திரம் தோன்றிற்று.
கணக்கற்றவற்றினுள்ளிருந்து
எப்படி அது தோன்றிற்று?
தனித்துவமாய் இருந்தது அது-
சிறிது சமயம் அது முதலாய்.
வீசிய புயற்காற்று
கணக்கற்ற புயற்காற்றுகளினுடையதாய் இருந்தது-
சிறிது சமயம் அது முதலாய்-
கணக்கற்றவற்றிலிருந்து எழுந்து வருகிற
ஓர் அலை கூட,
சிறிது சமயம் முதலாய்-
தனியாய்க் கணக்கற்றவற்றிடமிருந்து
கணக்கற்றவற்றினுள் தனியாயுள்ள ஒன்று-
கணக்கற்றவற்றிலிருந்து வருகிறது
ஒரு துணை-
வாழ்நாள் வரைக்கும்.


Chhattisgarh-based Hindi writer and Jnanpith Award recipient Vinod Kumar Shukla (1937 – 2025)

குறிப்பு:

2024-ல் ஞானபீட விருது வழங்கப்பட்ட வினோத் குமார் சுக்லாவின் ( Vinod Kumar Shukla (1937-2025)) கவிதைகள் இவை. அரவிந்த் கிருஷ்ணா மெரோத்ராவால் (Arvind Krishna Mehrotra) இந்தியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சுக்லாவின் கவிதைத் தொகுப்பிலிருந்து (Treasurer of Piggy Banks, Arvind Krishna Mehrotra, Centre for the Creative and the Critical, Published by Westland Books, 2024) தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை இவை. சுக்லாவின் படைப்புலகம் புதினம், சிறுகதை, கவிதை, சிறார் இலக்கியம் என்று பன்முகப்பட்டதாயினும், அவருடைய படைப்பாக்கத்தின் தனித்துவத்தை அடையாளம் காட்டும் இந்தச் சில கவிதைகளின் வாசிப்பிலேயே, எப்படி ஞானபீடம் சுக்லாவை விருதுக்கு தேர்ந்தெடுத்ததில் தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டது என்பதை நாம் உணராமல் இருக்க முடியாது.

சுக்லாவின் சொல்லாடலிலேயே கூற வேண்டுமானால், சுக்லாவின் ஒவ்வொரு கவிதை வரியும் சுக்லாவின் ஒவ்வொரு கவிதை வரி போல. சுக்லாவின் கவிதை அழகியலில்- அது அது என்றல்ல, அது அது அல்ல என்றல்ல. மூன்றாவதாய் அது அது போல. அது அதுவாயும் அதுவல்லாததாயும். நிச்சயமும் நிச்சயமின்மையும்; முடிந்ததாயும் முடிவற்றதாயும். அவர் கவிதைகள் சாதாரணத்திற்குள் அசாதாரணத்தைக் கைப்பற்றுகின்றன. நழுவும் கணத்திற்குள் காலங்கடந்ததை(transcendental) அனுபவமாக்குகின்றன. அந்த வகையில்தான் சுக்லாவிற்கு பக்கத்து வீட்டுக்கு செல்வது ஒரு தீர்த்த யாத்திரை; ஒரு மனிதன் சிந்தனையைப் போல சென்றகல்வது. ஒரு ஜன்னல் சுவரில் வசித்திருப்பது. சுக்லாவின் பார்வையில் தனிநிலையும் முழுநிலையும் வேறல்ல. நான் ஒரு பெருங்கூட்டம். அதற்குள் ஒவ்வொரு தனிமனிதனும் நான்.. காற்றுகளிடையே முடிச்சுகளில்லாது நம் மூச்சுக்காற்றோடு சேர்ந்து ஒரேஒரு காற்று சுழன்று வீசுவது. மனித விசாலத்தில் எப்போதுமான நம்பிக்கையை அவர் கவிதைகள் பேசுகின்றன. அந்த விசால நோக்கில், வீட்டில் போதுமாயில்லாத பொருட்கள் குறித்த கவலை புவியில் போதுமாயில்லாத பொருட்கள் குறித்த கவலையாயிருக்கும். புவியில் பசித்திருக்கும் ஒருவன் வீட்டில் பசித்திருக்கும் ஒருவனைப் போன்றிருக்கும்படி பரிவு கொள்ளச் செய்யும். வீட்டுக்கும் புவிக்கும் வித்தியாசமில்லாமலாகும்.
சுக்லாவின் அன்னை சமையலடுப்பில் எரியும் விறகில் ஓர் எறும்பு ஊர்ந்து போகக் காணின், உடனே எரியும் விறகுச் சுள்ளிகளை அடுப்பிலிருந்து வெளியே பிடுங்கி அகற்றி விடுவாராம். அந்தத் தாய்மையின் ஈரம் தண்ணெனும் அவர் கவிதைகளில் தெறிக்கிறது. கடைசிச் சிறுத்தையின் மரணம், ஆதிவாசிகளின் அவலம், அறிமுகமில்லாதவரின் விரக்தி போன்ற துயர்களிலெல்லாம் அது பங்கு கொள்கிறது. இயற்கையிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளதை பேருந்தில் ஏறும்போது மரத்தை விட்டு விட்டு ஏறுவதில் அது பிரக்ஞையாக்கிக் கொள்கிறது. மரத்தின் கீழ் உறங்கும் ஓர் ஆதிவாசிக் குடும்பத்தின் முதியவரை கனவின் உலர்கிளை தாக்கி பார்வை இழப்பதை அது பதிவு செய்கிறது. சுக்லாவின் ஆதிவாசிக் கவிதைகள் அவருடைய பாதிக்கப்பட்டவர்களின் பக்கமாகவே பேசும் நுணுக்கமான அரசியல் பார்வையின் தெறிப்புகள்.

சுக்லாவின் இருத்தலியலில் வந்து சேர்வது(arriving) என்பதே இல்லையாகிறது. ஒரு கவிதையின் வரிகள் இப்படி:

நான் வந்து சேரும் வரை
வந்து சேர்வதன் முடிவில்
வந்து சேர்ந்து கொண்டே இருப்பது போல்
ஏறக்குறைய நான் வந்து சேர்ந்திருக்கிறாய்த்
தோன்றுகிறது அது.

இன்னொரு கவிதையில் ”கவனிப்பதற்கல்ல; போவதற்கே நான் இங்கு வந்தது. நான் வரவே இல்லாதது போல” என்று பேசப்படுகிறது. சுக்லாவின் பார்வையில் ‘ஒரு முடிக்கப்பட்ட முழுமையென்பது போல் முடிக்கப்படாததால் நிரப்பப்பட்டுள்ளதே இந்த முடிக்கப்படாத வாழ்க்கை.’

சுக்லா கவிதையையும் புதினத்தையும் ஒன்றையொன்று பிரதிபலித்துக்கொள்ள வைப்பதில் தன் படைப்பாக்கத்தை வித்தியாசமாக்குகிறார். கவிதைக்கும் புதினத்திற்கும் இடையே ஓர் ஊடுபரவலை- இவரின் சொல்லாடல்கள் (narratives) நிகழ்த்துகின்றன. இவருடைய முக்கிய புதினங்களான சுவரில் ஒரு ஜன்னல் வாழ்ந்து வந்தது(A Window Lived in the Wall) மற்றும் வேலைக்காரனின் சட்டை(The Servant’s Shirt) என்பவற்றின் வாசிப்பில் இது அனுபவமாகிறது. அவருடைய முன்குறிப்பிட்ட முதற் புதினத்தின் முன்னுரையே ஒரு கவிதை (மொழிபெயர்ப்பில் கடைசிக் கவிதை(23)). புதினத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பிலும் கவித்துவ வரிகள்.

எடுத்துக்காட்டாக, ’சுவரில் ஒரு ஜன்னல் வாழ்ந்து வந்தது’ என்ற புதினத்தின் முதல் அத்தியாயத்தின் தலைப்பின் வரிகள்: ஒரு யானை நடந்து மேற்சென்றது. முன்பு அதனால் நிரப்பப்பட்ட வெளி விட்டு விடப்பட்டுள்ளது பின்னால். இன்னொரு அத்தியாயத்தின் தலைப்பு வரிகள்: சலசலக்கும் மரங்களின் ஒலிக்குள்ளே கீச்கீச்சிடும் பறவைகளின் ஒலி உறைந்திருந்தது. அதே போல் ’வேலைக்காரனின் சட்டை’ என்ற புதினத்தின் முதல் அத்தியாயத்தின் தலைப்பு வரி: ஆனந்தமானதாயுள்ளது வீடு திரும்புவதற்கு வீட்டை விட்டு திரும்பத் திரும்ப வெளியேறுவது.

சுக்லாவின் படைப்புலகம் அவர் வாழ்ந்த சிறுநகரின் வாழ்வின் அன்றாடங்களில் வேர் கொள்கிறது. அங்கு ஒலிப்பவற்றை எவ்வளவு மென்மையாயினும் அவற்றை அவருடைய காதுகள் கேட்டன. ஒரு முதியோனின் காதுக்கு கேட்காது பாடும் தாலாட்டொலி, தண்ணீர் அடிக்கும் கை பம்ப்பின் ஒலி – இவற்றையெல்லாம் அவர் நின்று அவதானித்ததை அவருடைய ’வேலைக்காரனின் சட்டை’ என்ற புதினத்தின் மொழிபெயர்ப்பாளர் சத்தி கன்னா(Satti Khanna) புதினத்தின் தன் முன்னுரையில் பதிவு செய்கிறார். அதேபோல் கோசா பட்டுநூற் புழுக்கள் இழைகளைப் பின்னி முடித்ததைக் கேட்டு ஆதிவாசிகள் இலைகளைப் பறித்தெடுக்க தயாராவதை, சுக்லா கோசாப் பட்டுப்புழுக்களின் மூச்சு செவியெட்டாததாயினும் அது நிர்வாண மற்றும் அரைநிர்வாணக் காட்டுவாசிகளைத் தொட்டுணர்த்துவதாய்த் தன் கவிதையொன்றில் நுணுக்கமாகப் பதிவு செய்வதைக் குறிப்பிடுகிறார்.

சுக்லாவின் கவிதைகளில் வழக்கமான உருவகங்களில்லை; அலங்காரமான உவமைகளில்லை. முன்பு கூறியது போல் ’காலை ஆறு மணி காலை ஆறு மணி போலிருந்தது ’ என்று சுயபிரதிபலிப்பு (self-reflective) ரீதியிலே அவருடைய ஒப்புமை தனித்துவமாய் அமைந்து ஓர் அழகியல் விந்தையை விளைவிக்கிறது. அப்படியே சுக்லா அரிதாக உவமையைப் பயன்படுத்தினாலும் ’அந்த மனிதன் ஒரு புதிய கம்பளிக் கோட்டை அணிந்து ஒரு சிந்தனையைப் போல சென்றகன்று விட்டான்’ என்ற ஒரு கவிதை வரியில் காண்பது போல் எளிமையும்(austere) ஆனால் ஆழமும் கொள்ளும் பாங்கிலேயே உவமையைப் பயன்படுத்துகிறார். சுக்லா சொற்களை மிகக் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் அணுகுகிறார். அதே சமயத்தில், சொற்களின் போதாமையை உரையாடல்களில் நிகழும் இடைவெளியில் அவர் குறிப்புணர்த்துவது போல் தெரிகிறது. ஒரு கவிதையில் இப்படி குறிப்பிடுகிறார்:

நான் கூறுவதை நீ கேட்க மாட்டாய்.
நான் கூறியதின் எதிரொலியையே
நீ கேட்பாய்.

பதிலுக்கு நீ ஏதாவதொன்றைக் கூறுவாய்.
நீ கூறியதை நான் கேட்க மாட்டேன்.
நீ கூறியதின் எதிரொலியையே
நான் கேட்பேன்.

சுக்லாவின் இந்தக் கவிதை வரிகளின் எதிரொலி அவருடைய புதினங்களில் இடம்பெறும் உரையாடல்களிலும் எதிரொலிக்கிறது. அவருடைய ’சுவரில் ஒரு ஜன்னல் வசித்து வந்தது’ என்ற புதினத்தில் கூறுவோன் ஒன்று கூறுவான்; கேட்பவன் மற்றொன்று கேட்டு அதற்குத் தகுந்தாற்போல் விடையிறுப்பான். இந்த முரணில் அர்த்தத்தின் நிச்சயம் கலைக்கப்பட்டு வாசிக்கும் வாசகனையும் இன்னொரு விதமாய் அர்த்தப்படுத்திக் கொள்வதில் ஆழ்த்துகிறது.

சர்வதேச இலக்கியத்தில் சாதனைக்கான PEN/Nabokov விருதை (2023) வென்ற முதல் இந்திய எழுத்தாளர் சுக்லாவே. ஒரு கவிதையில் ‘அதிகபட்சமாய் உள்ளது இறை இங்கு’ என்று கடவுளிடம் கூட சலிக்கும் சுக்லா தேவைகள் குறைவான, மனநிறைவான வாழ்வை வாழ்ந்தவர். ஒரு கவிதையில் இப்படி அவர் குறிப்பிடுவது அவரையே எனலாம்.

குறைந்தவற்றோடு வாழ்ந்து
குறைந்தவற்றை கண்டு
சில மனிதர்களே நண்பர்களாய்
குறைவான காலத்திற்குள் மொத்த காலமும்-
இங்கிருப்பவற்றைத் தவிர
என்னுடையதாய் எதுவுமில்லை.

முன்பு கூட
சில நாட்கள் வெளியே செல்வதற்கு,
செம்புப் பாத்திரங்கள், வெள்ளி மோதிரம்
சில கடிதங்கள் –இவற்றை
ஒரு தகரப் பெட்டிக்குள் போட்டு
பக்கத்துவீட்டுக்காரரிடம் பாதுகாப்புக்கு
விட்டு விட்டுப் போவேன்.

அவருடைய படைப்பாக்க மேதைமையில் அவர் அடக்கம் வெளிப்பட்டது. ஞானபீட விருது, அவர் பார்வையில், அவருக்கு ஒரு பொறுப்புள்ளதான உணர்வைத் தருவதாகவே இருந்தது. தன் கூர்த்த அவதானிப்பில் பிரக்ஞையில் மின்னற் கணங்களில் காட்சியானவற்றிற்கு காலங்கடந்த பரிமாணத்தை அவர் படைப்புகள் அளித்தன. அதனால் அவர் படைப்புலகம் காலங்கடந்ததாக அதன் புகழை என்றென்றும் நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “வினோத் குமார் சுக்லாவின் கவிதைகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.