தெய்வநல்லூர் கதைகள்- 32

This entry is part 32 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

பாலாஜி அண்ணன் சிவகிரியிலிருந்து திரும்பி வந்து தோழரண்ணனுடன் பேசி விட்டு பிரேம் வீட்டிற்கு வந்தார். இருள் மண்டிக் கிடந்த வீட்டில் அனைவருக்கும் ஆறுதலைச் சொல்லி  எங்களை பிரேமுடன் பேசிக் கொண்டிருக்கும்படியும் வெளியில் எங்கும் போக வேண்டாமெனவும் சொல்லிச் சென்றார். வாசலில் வந்து நின்ற வெங்கடகிறுக்கனின் பாட்டி பாலாஜியண்ணனால் விரட்டப்பட்டார். அடுத்த பத்து நாட்கள் நிகழ்ந்தவற்றை சுருக்கமாகச் சொல்ல முயற்சிக்கிறேன். பெரிய கோவிலில்தான் எங்கள் சந்திப்பு நிகழ்கிறது என்பது ரகசியம் அல்ல என்றாலும் இந்த விவகாரம் தொடர்பாக அங்கும் பேசப்பட்டது. ஓதுவார், சபேச குருக்கள், மீனா மாமி ஆகியோர் எங்களுக்கு ஆதரவாக இருந்தும் செயல் அலுவலர் இனி கோயிலில் மாணவர்கள் சந்திப்பது, பாடம் படிப்பது ஆகியவற்றை தற்காலிகமாக அனுமதிப்பதில்லை என முடிவெடுத்தார். வேறு சில பெற்றோர் பிரேமுடன் தம் பையன்கள் சேர வேண்டாமென வற்புறுத்தினர். ஊரில் அவ்வப்போது நாங்கள் செல்கையில் பின்னிருந்து வீசப்படும் கேலிச்சொற்கள் பிரேமை மிகச் சரியாக குறி வைத்தன. பள்ளியில் துரை கோஷ்டியார் பார்க்கும்போதெல்லாம் சுவரிலிருந்து அழிக்கப்பட்டவற்றை வாயால் வரைந்து காட்டினர். ரதவீதிகளைச் சுற்றிக்கொண்டு பள்ளி சென்று வரும் நேரத்தை நீட்டித்து மகிழ்ந்த நாங்கள் இப்போது மேலச் சந்து, கீழச் சந்து வழியே நாய் துரத்தும் பாவனையில் பள்ளி சென்று வந்தோம். பிரேம் வீட்டுத் திண்ணையிலேயே எங்கள் மாலைப்பொழுதுகளும், வார இறுதி நாட்களும் கழிந்தன. பிரேம் எங்களைத் தவிர வேறு எவரிடமும் பேசாமலானார். எங்களிடமும் குறைவாகவே பேசினார். 

இவ்விஷயத்தில் நாங்களே எதிர்பாராதது சிவாஜியின் ஆச்சி பட்டவாரத்தி அம்மையின் வெறியாட்டு –“கொள்ளி முடிவான், பேதீல போவான்,எழுதுனவன் கைய ஒடச்சு அடுப்பில வைக்க. தேவிடியா பெத்த புள்ள கூட இப்டி செய்ய கூசுமே.  அருமந்தப் புள்ளைக, படிப்புன்னா என்னான்னு தெரியாத புள்ளைகளுக்கெல்லாம் பாடஞ்சொல்லி சேந்து வெளயாண்டு சந்தோசமாத்தான இருந்துச்சுக. ரெண்டு பிள்ளைகளும் அருமையா பாட்டின்னு கூப்பிட்டு பேசுமே. ஏட்டி, எடுபட்டவளுகளா, எவளாவது எம்புள்ளைகள்ட்ட எதுனாச்சும் கேட்டீகன்னு தெரிஞ்சது தூமயக் கரச்சு வாயிலே ஊத்திருவேன். பொட்ட நாயி மோண்ட எடம்லாம் மோந்துகிட்டு அலையுத சொறிநாயி மாதிரி புருசனையும், புள்ளைகளையும் பெத்துப் போட்டுட்டு துட்டி கேக்க வாராளுக. அருளாச்சி கணேச சேனையரு மக பட்டவாரத்தின்னா யாருன்னு நெனச்சீக… பேசுன வாய்க்குள்ள கைய வுட்டு கொடலப் புடுங்கி கையில கொடுத்துருவேன் தாயோளி மக்கா… எலேய் கணேசா, எம் பேரனால நீனு? கொட்டைய நசுக்கி விட்ட காளங்கன்னு மாதிரி சொங்கிட்டு கெடக்கே… எறங்கி நிமுந்து நடந்து போல தெருல… எவன் வந்து ஒன்னயப்பேசுதாம்னு நான் பாக்கேன்.” விரிதலையும், வெற்றிலைச்செவ்வாயும், உதறி செருகிய கொசுவமுமாய் முதுகொற்றவை பேராச்சி இறங்கி நின்ற கோலத்தைக் கண்டதும் சிவாஜியிடம் எவரும் இதைக் குறித்து பேசாமலானார்கள்.     

 ஆனால் பிரேமுக்கு இத்தகைய நல்லூழ் வாய்க்காமலாயிற்று. உச்சகட்டமாக பிரேமை கூசிப் போகும்படி செய்தது ராஜசேகரன் சாரின் அறியாத்தனம். கீழே விழுந்து விட்ட பேனாவை மெஜூரா பிரேமிடம் எடுத்துக்கொடுக்கும்போது சரியாக வகுப்புக்குள் நுழைந்த  ராஜசேகரன் சார் பதறிப் போனார். மெஜூராவை அனைவர் முன்பாகவும் எச்சரித்ததோடு மட்டுமல்லாமல் இனி வகுப்பிலிருக்கும் பெண்பிள்ளைகள் யாரும் பிரேமோடு பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் சொன்னார்-

 “வாட் இஸ் திஸ் ஜெயலட்சுமி? என்ன செய்யற நீ? ஏற்கனவே அவன் கூட பேசுனதுக்கு சங்கீதா பட்ட பாடு தெரியாதா ஒனக்கு? தொடைச்சி வச்சிருக்கற சுவத்துல அடுத்து உம் பேரும் வரணுமா? ஆல் கேர்ள் ஸ்டூடண்ட்ஸ், லிஸன் கேர்ஃபுலி. இனிமேக்கொண்டு கேர்ள்ஸ் யாரும் பிரேமோட பேசற வேலை வச்சுக்காதீங்க. டே பிரேமு, நீ ஏண்டே அழற? இட்ஸ் ஆல் ஃபார் குட் ஒன்லி. நான் சொல்றது ரெண்டு பேருக்கும் நல்லதுதான? இட் இஸ் ஜஸ்ட் எ ப்ரிக்காஷன். புரியுதா?”. 

அன்று மாலை சந்திப்பில் யக்கா கொதித்தார் – “பிரிக்காஷன், டிக்காஷன்னு .. அறிவில்லாதவன விட தனக்குதான் அறிவிருக்குன்னு நெனக்கறவன் நாக்குலதான் இபிலீஸ் எறங்குவான்னு நம்ம உப்புக்கண்டத்தோட பெரிய அத்தா சொல்லுவாரு. சரியாத்தாம்ல இருக்கு, சும்மா ரெண்டு வரிக்கு ஒருக்கா இங்லீசுல பேசுனா அறிவாளின்னு நெனப்பு அவருக்கு. இங்க்லீசுதாம்ல இவருக்கு இபிலீசு.  மீச சார், தமிழ் சார்லாம் அதுக்கப்பறம் ஒரு வார்த்த பேசுதாங்களா அதப்பத்தி? புதுசா வந்த வேல்முருகன் சார் கூட அத மறந்துட்டு படிப்பைப் பாருடேன்னு அன்பாத்தான சொன்னாரு. நீ ஏம்டே பிரேம் அவர் முன்னாடி அழுத?”  

ராஜேசேகரன் சார் சென்றதுமே மெஜூரா எழுந்து வந்து – பிரேம், சாரி என்ன அவர் பேசுனதுக்கு? நான் எதுவும் நெனக்கல. நாம எப்பயும் போலவே பேசுவோம். சங்கீதா இரு….” அதற்கு மேல் பேச இயலாதபடி தொண்டை அடைக்க முதல்முறையாக மெஜூரா எங்கள் முன் அழுதார். 

இத்தனையிலும் சங்கீதா என்னவானார் எனச் சொல்லப்படாதது குறித்து நீங்கள் யோசித்திருக்கலாம். அந்த திங்கள்கிழமை காலையில் பள்ளியை விட்டுச் சென்ற சங்கீதாவை நாங்கள் அதன்பின் இன்றுவரை சந்திக்கவே இல்லை. சங்கீதாவின் அப்பா மிகுந்த மனவுறுதியுடன் சூழலைக் கையாண்டாலும் அன்று காலை விவரம் அறியாமல் “அம்பலம்” சென்ற சங்கீதாவின் அம்மா கரிசனத்தோடு வீசப்பட்ட கத்திவீச்சுகளால் மனமெல்லாம் புண்ணாகி வீடு வந்தார். சமூகம் மீதான கணவரின் ஆவேசமான பேச்சை பொறுமையாகக் கேட்டுக் கொண்டே காய்ச்சல் கண்டது போல கிடந்த சங்கீதாவையும் தேற்றினார். தானும் பிள்ளைகளும் அன்று  இரவே நாகர்கோவில் கிளம்புவதாகவும் இங்கு செய்ய வேண்டியவற்றை செய்து விட்டு பொங்கலுக்கு முன் ஊர் வந்து சேரும்படியும் சொல்லிவிட்டு  கிளம்பினார். எல்லா ஆடைகளையும் அடுக்கி எடுத்து கிளம்புவதைக் கண்டபோதும் கூட சங்கீதா அப்பாவிற்கு யூகிக்க முடியவில்லை. 

பொங்கல் விடுமுறையில் நாகர்கோவிலில் சங்கீதா அம்மா தன் தரப்பை தெளிவாகச் சொல்லிவிட்டார். தன் மகள் மேலோ, பிரேம் மேலோ தனக்கு துளியும் ஐயமில்லை எனவும், இருந்தபோதிலும் தன் அப்பாவியான மகளை இழிவுசெய்த அந்த மண்ணில் இனி தானோ, தன் மகளோ கால் வைக்கப்போவதில்லை என்றும் உறுதிபடக் கூறி நின்றார். அன்றிரவு மூன்று கோப்பை கள்ளும், கறிமீன் பொள்ளிச்சது இரண்டும் உள்ளே நிறைய நிறைய அவருக்கு தன் மனைவி சொல்வதில் இருக்கும் நியாயம் புரிந்தது. பொங்கல் விடுமுறை முடிந்து தெய்வநல்லூர் திரும்பிய சங்கீதா அப்பா தோழரண்ணன் மூலமாக மாவட்ட சங்க ஆட்களை அணுகி பதினைந்து நாட்களில் எவரும் பொறுப்பேற்கத் தயங்கும் காளிகேசம் மின் அலுவலகத்துக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு ஊரைக் காலி செய்து  கிளம்பினார். கிளம்புமுன் பிரேம் வீட்டுக்கு வந்த அவர் பிரேம் அம்மாவிடம் தனக்கோ, தன் குடும்பத்தாருக்கோ எவ்வித ஐயமும் பிள்ளைகள் மேல் இல்லை எனவும், ஊர்வாய்க்கு மூடி இல்லை என்பதாலும், பெண்பிள்ளை என்பதாலும் மட்டுமே இப்படி செய்ய நேர்ந்தது எனவும், தன் மனைவி பிரேம் குடும்பத்தாரை நாகர்கோவிலுக்கு வரவேற்பதாக சொல்லச் சொன்னதாகவும் சொல்லி விடை பெற்றார். பிரேமின் அம்மா கண்ணீர் மல்க குழந்தை சங்கீதாவிற்கு எந்தவொரு குறையுமின்றி க்ஷேமமாக இருப்பாள் எனவும், இப்படியான தகப்பன் இருக்க அக்குழந்தைக்கு எவ்வித கஷ்டமும் பகவான் இனி தரமாட்டான், இதோடு அவள் கெடுகாலம் முடிந்தது, இனி நீடூழி புகழுடன் வாழ்வாள் என பிரேம் பாட்டியும் வாழ்த்தி விடை தந்தனர். சங்கீதா அப்பா பிரேமிடம் வந்து அவர் தலையை வருடி “மோனே, விஷமிக்கண்டா கேட்டோ, எனிக்கு நின்ன வளற இஷ்டமானு. மோன் நன்னாயி படிச்சு நல்ல உத்யோகத்திலாகணும், கேட்டோ?” என தழுதழுத்த குரலில் பேசி கிளம்பினார்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை என அபூர்வமாகவே மலர்ந்தாலும் ஒரு வாரம் கூட தாளாமல் மறைந்து விடும் குறிஞ்சி பூ போல எங்கள் வாழ்வில் சங்கீதா அபூர்வமாக வந்து மறைந்தார். நல்லவர்களாக ஆகவும், காட்டிக்கொள்ளவுமான முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டு எங்களை நாங்களே ஏமாற்றிக்கொண்டிருந்தபோது நல்லவராகவே இருப்பதை இயல்பெனக் கொண்டு எங்களை சிந்திக்க வைத்தவர். பொறாமை, அசூயை, ஆத்திரம் போன்ற எவையும் அண்டாத ஒரு தேவதை போல எங்களுடன் இருந்த சங்கீதா கண்ணீரோடு வகுப்பறை வாசலிலிருந்து எங்களைத் திரும்பிப் பார்த்த காட்சியோடுதான் நினைவில் நிற்கிறார்.  நாங்கள் இப்போது நினைத்தால் சமூக ஊடக வழியே சங்கீதாவை கண்டுபிடிக்க அதிக நாட்கள் ஆகாதுதான். ஆனால் பிரேம் உறுதியாக அதை மறுத்து விட்டார்- 

“வேணாம்டா சிவாஜி, அது சரியாயிருக்காது. என்னை விட நல்லா படிக்கறவ. நிச்சயம் படிச்சு நல்ல வேலைல இருப்பா. அவ நெனச்சிருந்தா  சோஷியல் மீடியால நம்மள புடிச்சிருக்க முடியாதா என்ன?  என் அட்ரஸ், உன் அட்ரஸ்லாம் அவளுக்குத் தெரியும், பேசணும்னு தோணியிருந்தா ஒரு லெட்டர் போட்ருக்க மாட்டாளா?… இல்லடா சேமியா, நம்ம மேலல்லாம் அவளுக்கு கோபம் கிடையாது. அவளும் நம்மளல்லாம் மிஸ் பண்ணுவாதான். ஆனா நம்மளப் பார்த்தா அதுவரை அவ்வளவு நாளும் சந்தோஷமா இருந்ததெல்லாத்தையும் விட அந்த அசிங்கம்தான் ஞாபகத்துக்கு வரும். வீ ஆல் வேர் ஸோ ப்யூர் இன் தோஸ் டேய்ஸ். ஸ்பாட்லெஸ், ப்ரிஸ்டைன் அன்ட் டிவைன். ஆனா அந்த கர்ஸ்ட் ஈவன்ட்டுக்கு அப்புறமா நாமல்லாம் வேற மாதிரி ஆயிட்டோம். நான் என்ன பண்ணினேன்னு உங்களுக்கெல்லாம் தெரியும். யெஸ், வீ காட் பொல்யூட்டட், இஃப் நாட் ஆல் அட்லீஸ்ட் ஐ வாஸ்…. ஆமா, யு ஆர் ரைட் அமுக்குடப்பா, அந்த மாற்றத்தை நாம தவிர்த்துருக்க முடியாதுதான். ஆனா தன்னியல்பா சுவாரசியமா நடக்க வேண்டியதெல்லாம் நமக்கு ஏன் இவ்ளோ மோசமா நடந்தது? வீ வேர் ஃபோர்ஸ்ட் டு கம் டு ஏஜ். ஸோ இஸ் தி ஸேம் டு சங்கீதா ஆல்ஸோ. அவள நாம டிவைனாவே பார்த்துட்டோம். இன்னைக்கு வேற ஆளா அவளப் பாக்கற தைரியம் எனக்கில்லை. அதைப்போலவே அவளுக்கும் நம்மள … நம்மள என்ன, என்னைய இப்படி பொல்லூட்டடா பாக்கறதுக்கு விருப்பமிருக்குமா என்ன? பட் ஒன் திங், நம்ம நினைப்புல இருக்கற சங்கீதாவை ஒவ்வொரு தடவையும் நெனச்சிக்கும்போது ஐ ஃபீல் டீடாக்ஸிஃபைட் எ பிட் டீப் இன் மை ஹார்ட். எனக்கு அவ அப்படியே இருந்துட்டு போகட்டும்…. டேய், ஒனக்கு மட்டும் எப்டிறா இப்டில்லாம் தோணுது (என்னைப் பார்த்து) … அப்டியே யதேச்சையா பார்த்தாலும் கூட சாதாரண பழைய ஸ்கூல் ஃப்ரண்ட்ஸ் மாதிரி இயல்பா நடிச்சிட்டு அப்படியே பை சொல்லிட்டு போயிடுவோம். எனக்கு சங்கீதா வாஸ் எ ஷீட்டிங் ஸ்டார். இதை இனிமேயும் பேசணுமாடா?” – 2009 ல் பிரேம் முதல்முறையாக பணிக்காக அமெரிக்கா போகும்போது சென்னை விமான நிலையத்தில் அவரை வழியனுப்பப் போனபோது பேசியதுதான் எங்களுக்குள் சங்கீதா குறித்து நடந்த கடைசிப் பேச்சு.   

இப்போது தெய்வநல்லூருக்குத் திரும்புவோம். அடுத்த ஒரு மாதத்தில் பிரேமிடம் அழுகை வறண்டு ஒரு வெற்றுத் தன்மை வந்தது. வகுப்பில் சங்கீதாவின் இடம் வெறுமையாக இருப்பதைப் பார்க்கப் பார்க்க எங்களுக்கே தொண்டை அடைத்தது. பிரேம் வகுப்பில் ஐயம் கேட்பது, ஆலோசனைகள் சொல்வது, பிறருக்குக் கற்றுத் தருவது ஆகிய அனைத்தையும் கைவிட்டுவிட்டு எப்போதும் ஜன்னலை ஒட்டிய இடத்தில் வெளியில் வெறித்த பார்வையோடு இருந்தார். ஒரு கட்டத்தில் துரை கோஷ்டியாரின் சீண்டல்களையும் கூட வெற்றுப் பார்வையால் கடந்து செல்பவராக ஆனார். பள்ளி விட்டதும் எங்கள் பழைய தலைமையகமான செண்பக விநாயகர் கோவிலுக்குச் சென்று இருட்டும்வரை அமர்ந்திருப்போம். இடையில் மாத விடுப்பில் எலுமிச்சை தோட்டத்திலிருந்து வந்திருந்த சுனா கானா  பிரேமைத் தேடி வந்து ஆறுதலும், தைரியமும் சொன்னார்-“நீ முட்டாப்பய, படிக்கத் தெரியாதவன்னு கிறுக்கி வச்சா இப்டி இருப்பியா? அது பொய்யின்னு உனக்கே தெரியும்லா. இதுவும் அப்டித்தானடே தம்பி. பொய்யா எவனோ ஒரு மயிராண்டி எழுதுனதுக்கு நீ ஏம்டே கெடந்து சடையுத? யாருன்னு தெரியட்டும். அவனுக்கு இருக்கு பாரு, ஒரு நாளைக்கு”. தோழரண்ணன் ஆளைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாகச் சொன்னதும்தான் சுனா கானா சற்றே சமாதானமானார்.  இந்த சூழலில்தான் பிப்ரவரி மாத முதல் வாரம் எங்கள் பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. மார்ச் மாத மத்தியில் தேர்வுகள் அட்டவணையிடப்பட்டிருந்தன. அடுத்த பத்து நாட்கள் தேர்வு விண்ணப்பப் படிவம் நிரப்புதல், தேர்வுக்கட்டணம் செலுத்துதல், ஹால் டிக்கெட்டுக்கு ஃபோட்டோ எடுத்தல் ஆகிய பரபரப்பில் கழிந்தன. 

இந்த பரபரப்பில் நாங்கள் இருந்ததால்தான் அந்த மாற்றத்தை கவனிக்காமல் ஆனோம். அதன் பின்னணியை முதலில் தெரிந்து கொள்வது உதவியாக இருக்கும். விசாரணைக்குப் பிறகு கிட்டத்தட்ட வாரம் முழுவதுமே எம் எஸ் சி சார் தனிப்பயிற்சி மையத்தில் தங்க ஆரம்பித்தார். வார இறுதிகளில் மட்டும் புளியங்குடி சென்று வரும் அவர் கோதையாச்சி மெஸ்ஸிலும் , ராமர் பிள்ளை மெஸ்ஸிலும், முத்தலிபத்தா பரோட்டா கடையிலும், அவ்வப்போது தமிழக்கா வீட்டிலும்  சாப்பிட்டுக் கொண்டு தெய்வநல்லூர்வாசியாக மாற முயன்றார். சுவர் ஓவிய சம்பவத்துக்குப் பிறகு இழந்த நாட்டை அடைந்த மன்னன் போல மாறியிருந்த எம் எஸ் சி சார் குறும்பும், விளையாட்டும் கூடிப் போனவராகத் தெரிந்தார் (சத்தியமால, டியூசன்ல ஆல் இன் ஆல் அழகுராசா கவுண்டமணி மாதிரியே பேசி நடிச்சி காட்டினார்ல எங்களுக்கு. அப்பறம் திருவிளையாடல்ல சிவாஜிட்ட நாகேஷ் கேப்பார்லா கேள்வி பதிலு.. அதையெல்லாம் மனப்பாடமா சொல்லிக் காமிச்சார்ல. தினம் தினம் உன் முகம் நினைவில் மலருது பாட்டை அச்சொட்டா பாடுனாரு தெரியுமா?அவர் சினிமால நடிக்கப் போயிருவார்னு துரையும், தீத்தியும் சொன்னாங்க. வேணும்னா சிங்கிட்ட கேளு – தெண்டிலு. ஏம்ல, டான்ஸ் எதுவும் ஆடிக் காட்டலையாக்கும் ஒங்களுக்கு- கடுப்பான சேமியாவின் கேள்வி).  இதற்கு நடுவேதான் அந்த மாற்றம். உங்களால் மட்டுமல்ல, எங்களாலும் நம்ப முடியாத மாற்றம். கலையக்காவும், செல்வியக்காவும் தனித்தனியே பள்ளிக்கு வருகிறார்கள். இன்னும் கூடுதல் அதிர்ச்சியாக வகுப்பில் வெவ்வேறு இடங்களில் பிரிந்து அமர்ந்திருக்கிறார்கள். பேசிக் கொள்வதுமில்லை, பேசாமல் இருப்பதுமில்லை என்பது போல இருக்கிறார்கள். வகுப்புகள் முடிந்த பின்னர் யாருமில்லாதபோது இருவரும் வெவ்வேறு திசைகளைப் பார்த்தவாறு ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கிறார்கள். அவர்கள் வகுப்பில் பலரும் பேசிப்பார்த்தும் எதனால் இப்படி என இருவரிடமிருந்தும் துளி கூட காரணம் கசியவில்லை. இந்த ஊடல் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. ஒரு அபத்த நாடகத்தின் சோக முடிவு போல இந்த ஊடல் முடிவுக்கு வந்தது. ஆனால் அது நிகழ்ந்த இடம் எம் எஸ் சி சாரின் தனிப்பயிற்சி மையம். இரு செல்வியக்காக்களும் அதில் பாத்திரமேற்கவில்லை. ஒரு புதிய கதாபாத்திரம் அறிமுகமானது. அரை மணி நேரம் மட்டுமே தெய்வநல்லூருக்கு வந்து சென்ற அவரால் பல வாழ்க்கைகளும் மாறின. ஆனால் அவர் அதற்கு பொறுப்பாளி அல்லர். 

வழக்கமாக தனிப்பயிற்சி நடந்து கொண்டிருக்கும் நேரம் தெய்வநல்லூருக்கு மிக அபூர்வமான பொருளான ப்ரீமியர் பத்மினி கார் ஒன்று சிக்கனப்பிள்ளை வீட்டின் வாயிலில் வந்து நின்றது. நெல்லை வட்டார திரையரங்குகளில் 90களில் பிரபலமான “மங்கல நாள்தனிலே” ஆரெம்கேவி பட்டு விளம்பரத்தில்  (இப்போதும் யூ டியூபில் இருக்கிறது)  வரும் மணப்பெண் போன்ற தோற்றத்தில் ஒரு இளம்பெண்ணும், அவரது பெற்றோர் இருவரும் இறங்கி சிக்கனப்பிள்ளை மனைவியிடம் விசாரித்து தனிப்பயிற்சி மையம் நடக்கும் மாடிக்கு ஏறினர். மொத்த வீடும் அவர்கள் உடை, நகைகளால் ஒளியேறி நறுமணம் பரவியது.  அவர்களுக்குப் பதிலளிப்பதன் வழியாகவே அவர்கள் யாரெனத் தெரிந்து கொண்ட தமிழக்காவின் அம்மா பரபரத்தார். வீட்டிலிருந்த அச்சு முறுக்கையும், பொட்டுக்கடலை உருண்டையையும் தட்டில் வைத்து செம்பு தண்ணீருடன் தமிழக்காவை மேலே போகச் சொன்னபோது மாணவர்கள் அனைவரும் கீழே இறங்கிப் போய்க்கொண்டிருந்தனர். சற்று குழப்பமாக மேலே போன தமிழக்கா ஐந்து நிமிடங்களில் அழுவது போன்ற முகத்துடன் பாய்ந்து கீழே வந்தார். அன்று இரவு உணவு வேண்டாமென சொன்ன தமிழக்கா காலையில் வற்புறுத்தலால் ஒரே இட்லியை மட்டும் சாப்பிட்டுவிட்டு மேலபஜார் முடியுமிடத்தில் இருந்த கலையக்கா வீட்டிற்கு ஓடினார். வழியிலேயே பள்ளிக்கு வந்துகொண்டிருந்த கலையக்காவைப் பார்த்து விட்ட அவர் வீதியென்றும் பாராமல் கலையின் கைகளைப் பற்றிக் கொள்ள கலையக்கா பதட்டம் அடைந்து பள்ளிக்கு விரைவாக தமிழக்காவை அழைத்துச் சென்றார். பள்ளிக்கு விரைவாகவே வந்து விட்டதால் தனியே இருந்தனர் இருவரும். தமிழக்கா பேசப்பேச இருவருக்கும் அழுகை முட்டிக் கொண்டு வந்தது. “அப்ப கட்டக்கடைசில நீயுமில்ல, நானுமில்லன்னாடி ஆவப்போவுது?” என்ற கலையக்காவின் அழுகைக் குரல் கேட்கையில் முதல் மாணவர் நுழைய அதன் பின் இருவரும் பழையபடி அருகருகே வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்ததை மட்டுமே எல்லோரும் பார்க்க முடிந்தது.  

அடுத்த பத்து நாட்கள் வெறுமே நகர்ந்தன. இந்த நாட்களில் கவனத்தை சற்றே சீண்டிய சம்பவம் எம் எஸ் சி சாருக்கு திருமணம் நிச்சயமாகியிருப்பது மட்டுமே. எம் எட் முடிந்த பின்னரே திருமணம் என இருந்தவரும், எம் எஸ் சி சாரின்  ஒன்று விட்ட மாமாவின் மகளும், தென்காசி நகரின் புகழ் பெற்ற சோமநாத …ர்&கோ  நகைக்கடை அதிபரின் ஒரே வாரிசுமான திருவளர்செல்வி. காந்திமதி என்ற காந்தியை எம் எஸ் சி சார் விரைவில் மணக்க இருக்கிறார் என்ற தகவல் உள்ளூர பலருக்கும் புகைச்சலை ஏற்படுத்தத் தவறவில்லை. ஜன்னல் வழியே வகுப்பு வாசலையே வெறித்திருந்த பிரேம் வேல்முருகன் சார் வகுப்பின்போது ஒரு முறை மிக அவசரமாக எழுந்து ஒற்றை விரலை உயர்த்தினார். அதுவரை அப்படி எதுவும் கேட்டிராத பிரேம் கேட்டதால் சார் உடனே தலையசைத்து அனுமதிக்க பிரேம் அசாதாரணமான பாய்ச்சலில் வெளியேறினார். சிவாஜிக்கும், எனக்கும் குழப்பம் ஏற்பட்டது. சரியாக பத்து நிமிடங்களில் திரும்பி வந்த பிரேம் முகத்தில் விவரிக்க முடியாத ஒரு இளிப்பு ஒளிந்திருப்பது போல பட்டது. மாலை சந்திப்பில் சிவாஜி சற்று வலியுறுத்திக் கேட்டும் பிரேம் எதுவும் சொல்லவில்லை. சரியான ஆதாரத்துக்கு தான் காத்திருப்பதாகவும் கிடைத்ததும் எங்களிடம்தான் முதலில் சொல்லப்போவதாகவும் வாக்களித்தார். அன்றிலிருந்து அவர் வகுப்பை விடவும் வகுப்பறை வாசலை வெறித்தபடியே இருப்பதும் தினமும் பள்ளி முடிந்ததும் ஆசிரியப் பயிற்சி வகுப்பில் எவரும் இல்லாமலிருப்பதை உறுதிப்படுத்திய பின்னரே கிளம்புவதுமாக இருந்தார். எங்களுக்கு சற்று விசித்திரமாக இருந்த பிரேமின் நடவடிக்கைகள் தெளிவாகும் அந்த சபிக்கப்பட்ட நாளும் வந்தது.   

(தொடரும்)

தெய்வநல்லூர் கதைகள்

தெய்வநல்லூர் கதைகள்- 31 தெய்வநல்லூர் கதைகள்- 33

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “தெய்வநல்லூர் கதைகள்- 32”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.