- தெய்வநல்லூர் கதைகள் – 1
- தெய்வநல்லூர் கதைகள் – 2
- தெய்வநல்லூர் கதைகள்- 3
- தெய்வநல்லூர் கதைகள் -4
- தெய்வநல்லூர் கதைகள் – 5
- தெய்வநல்லூர் கதைகள் – 6
- தெய்வநல்லூர் கதைகள் – 7
- தெய்வநல்லூர் கதைகள் -8
- தெய்வநல்லூர் கதைகள் – 9
- தெய்வநல்லூர் கதைகள் 10
- தெய்வநல்லூர் கதைகள் 11
- தெய்வநல்லூர் கதைகள் -12
- தெய்வநல்லூர் கதைகள் 13
- தெய்வநல்லூர் கதைகள் 14
- தெய்வநல்லூர் கதைகள்
- தெய்வநல்லூர் கதைகள் – 16
- தெய்வநல்லூர் கதைகள்
- சர்க்கரை கசக்குமா கசமாடா? தமிழ் வையுமா அடி மூடா?
- தெய்வநல்லூர் கதைகள் – 19
- தெய்வநல்லூர் கதைகள் – 20
- தெய்வநல்லூர் கதைகள் – 21
- தெய்வநல்லூர் கதைகள்
- தெய்வநல்லூர் கதைகள் 23
- எம்புட்டு நேரம்தான் குச்சிய வாய்க்குள்ளயே வச்சிருப்பீரு
- மொகரைல சவக்களை
- தெய்வநல்லூர் கதைகள் – 26
- தெய்வநல்லூர் கதைகள் -27
- தெய்வநல்லூர் கதைகள்- 28
- தெய்வநல்லூர் கதைகள்- 29
- தெய்வநல்லூர் கதைகள்- 30
- தெய்வநல்லூர் கதைகள்- 31
- தெய்வநல்லூர் கதைகள்- 32
- தெய்வநல்லூர் கதைகள்- 33
- தெய்வநல்லூர் கதைகள்-34

அன்று மாலை பெரியகோவில் சந்திப்பு தாள இயலாத கனத்த அமைதியுடன் நீண்டது. பிற வகுப்பினர் பள்ளி நேரம் முடிந்து சென்றுவிட்டதால் (சிறப்பு வகுப்பு எங்கள் பிரிவுக்கு மட்டுமே) சங்கீதா, மெஜூராவுக்கு விஷயம் சென்று சேரவில்லை என்பதால் அவர்கள் வரவில்லை. யக்கா பாட்ஷா, சேமியா மணி வேறு பிரிவுதான் என்றாலும் நாங்கள் சிறப்பு வகுப்பு முடித்து வரும்வரை கோவிலில் காத்திருப்பார்கள் (என்னடே பாயி, இன்னைக்கு ஒனக்கு தொழுக கோயில்லதானா?- சபேச குருக்கள் குறும்பு மொழிகளில் ஒன்று). பையைத் தூக்க கையை நகர்த்த முடியாமல் பிரேம் லேசான வலி முனகலை எழுப்பியபோதுதான் சிவாஜி திடுக்கிட்டு எழுந்தவராய் பாய்ந்து சென்று பிரேமின் இடது கையை மெல்ல உயர்த்திப் பார்த்தார். அடிகள் சரியாக புறங்கை விரல் மூட்டுகள் மேல் விழுந்திருந்தன. ஆகவே தடம் பதியவில்லை. ஆனால் பிரேமின் இடக்கை மணிக்கட்டு வரை வீக்கம் கொண்டு உப்பலாகி ஈரமற்ற மினுமினுப்புடன் இருந்தது. இடக்கையின் விரல்கள் வலக்கை விரல்களை விட இருமடங்கு பெருத்திருந்தன. வீக்கத்தால் மடக்க முடியாது ஆனதால் விரல்கள் விரும்பத்தகாத விறைப்புத் தன்மையில் நீண்டிருந்தன. அடி வாங்கியதிலிருந்து பிரேம் இப்போது வரை எதுவுமே பேசவில்லை. அத்தனை ஆண்டுகளில் முதல்முறையாக சிவாஜி கண்களில் கண்ணீர் வழிவதை நான் பார்த்தேன். அதற்கெனவே காத்திருந்தது போல யக்கா, அமுக்கு டப்பா, சேமியா ஆகியோரும் கண்ணீர் மல்கினர். எனக்கு அழுகை வரவில்லை. ஆனால் கோவிலிலிருந்து கிளம்பும்போது மிகுந்த சிரமத்துடன் இடக்கையை உயர்த்தி விரைத்து வீங்கிய இடக்கையுடன் பொருந்தாத வலக்கையை சேர்த்து கூப்பி பைரவரை வணங்க முயற்சித்த பிரேமைப் பார்த்ததும் அடிவயிற்றில் எதுவோ இடம்மாறி தாவியது போல ஒரு உணர்வும், உள்தொண்டைக்குள் மிகக் குளிர்ந்த ஏதோ ஒன்று இறங்கும் உணர்வும், தோள்கள் உறைந்து இறுகி நெகிழும் உணர்வும் ஒருசேர தோன்றியபோது என் கண்களில் கண்ணீர் சூடாக வழிந்து கொண்டிருப்பதை உணர்ந்தேன். சிவாஜி நெருங்கி வந்து எதுவும் சொல்லாமல் என் தோள்களை பிடித்துக் கொண்டார்.
நாங்கள் கிளம்பி எங்கு போவது என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளவில்லை என்றாலும் எங்கு போகிறோம் என எல்லோருக்குமே தெரிந்திருந்தது. நயினாரை மட்டும் தாமதமாகலாம் என்பதால் அவர் ஊருக்கு அனுப்பி விட்டு நாங்கள் சென்ற இடம் தோழரண்ணன் கடை. நாங்கள் சென்று சற்று நேரம் காத்திருந்ததும் வந்த தோழரண்ணன் பிரேம் கையைப் பார்த்ததும் அதிர்ச்சியானார். விளையாடும்போது விழுந்து விட்டதாக நினைத்த அவர் கேட்கையில் பிரேமிடமிருந்து பதில் வராமல் போகவே குழப்பமாகி சிவாஜியை ஏறிட்டார். பிரேமை ஒரு நொடி பார்த்த சிவாஜி நடந்த அனைத்தையும் குமுறலுடன் சொல்லி முடித்தார். நாங்களும் தகுந்த இடங்களிலெல்லாம் இணைந்து கொண்டோம். இறுகிய முகத்துடன் எதுவும் பேசாமல் நீவு எண்ணையை எடுத்து பிரேமின் புறங்கைகளில் தடவி வருடலாக ஆரம்பித்த தோழரண்ணன் ஒரு கட்டத்தில் பிரேம் வாய் விட்டு அலறும்படி அழுத்தி நீவினார். நண்டுப்பிடி போல தன் விரல்களால் பிரேமின் விரல்களைப் பிடித்து நீவி உள்பக்கமாக மடித்து நிமிர்த்தினார். ஐந்து நிமிட நீவு சிகிச்சைக்குப் பின் பிரேமால் விரல்களை சிரமப்பட்டு மடிக்க முடிந்தது. பிரேம் அவ்வளவு நேர அமைதிக்குப் பின்னர் மெல்ல “தேங்க்ஸ் தோழரண்ணா” என்றபோது நீவு எண்ணையை ஆட்காட்டி விரல் நுனியால் சிறு புன்னகையுடன் பிரேம் கன்னத்தில் தீற்றினார் தோழரண்ணன். அப்போதே மணி ஏழரையை நெருங்கியிருந்ததால் சேமியா எங்கள் வீடுகளுக்குச் சென்று நாங்கள் டியூஷனில் இருப்பதாகவும் 8 மணிக்கு ட்யூஷன் முடிந்து திரும்புவதாகவும் சொல்வதற்கு சென்றார். பிரேமை அழைத்துக் கொண்டு தோழரண்ணன் கிளம்பி நேரே அரசு மருத்துவரான தங்கமணி டாக்டரை அவரது வீட்டில் சந்தித்தார். டாக்டர் பிரேமின் கையைப் பரிசோதித்ததும் எங்களை வெளியில் இருக்கச் சொன்ன தோழரண்ணன் பத்து நிமிடங்களில் கையில் ஒரு கடிதத்துடன் வந்தார். வீட்டில் எதுவும் சொல்ல வேண்டாம் எனவும் விளையாடும்போது விழுந்து கையை தவறாக ஊன்றியதால் அடிபட்டது எனவும், தன்னிடம் காட்டி நீவிக்கொண்டதாகவும் வீட்டில் சொல்லும்படி பிரேமிடம் சொல்லி அனுப்பி வைத்தார். மறுநாள் பிரேம் பள்ளி செல்ல வேண்டாமெனவும் சொன்னார். பிரேமின் எதிர்வீட்டு அண்ணனை உடனே தான் வரச்சொன்னதாக சொல்லச் சொன்னார். நடக்கப்போவதை ஓரளவு கணித்து விட்ட பிரேம் சற்று தயங்குவது போல தோழரண்ணனிடம் பேசினார். ஆனால் தோழரண்ணன் உறுதியாக இது எல்லை மீறிய செயலென்றும், இதைத் தடுக்காவிட்டால் இனி வரும் காலத்தில் மாணவர்கள் பலரும் பாதிக்கப்படுவார்கள் எனவும் சொல்லி பிரேமை ஒப்புக்கொள்ள வைத்தார்.
தோழர் குருசாமியண்ணன் சொல்லியபடியே நாங்கள் அனைவரும் பிரேம் வீட்டில் ஒரேமாதிரி சொன்னதால் அவர் அம்மா நம்பி விட்டார். பொதுத்தேர்வு எழுத வேண்டிய ஆண்டில் முரட்டு விளையாட்டுகளை இனி நாங்கள் விளையாடக் கூடாது எனவும் அறிவுறுத்தினார். பிரேமை விட்டுப் பிரிய மனமில்லாமல் கிளம்பி நாங்கள் எங்கள் வீடுகளுக்குச் சென்று சேர்ந்தோம். மறுநாள் காலை பிரேமின் அண்ணன் பிரேமை நீவு சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி தோழரண்ணன் கடைக்கு அழைத்து வந்தார். அங்கு நீவு சிகிச்சை முடிந்ததும் மனு போல எழுதப்பட்டிருந்த தாளில் பிரேமின் கையெழுத்தும், அவரது அண்ணனின் கையெழுத்தும் பெறப்பட்டன. மாலை அவ்வாறே என்னிடமும், சிவாஜியிடமும் கையெழுத்துகள் பெறப்பட்டன. பிரேமும், நாங்களும் எத்தகவலையும் வெளியில் சொல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு வீட்டிற்கு திரும்பினோம். அன்று நாங்கள் பள்ளி சென்றாலும் மனம் பிரேம்-தோழரண்ணன் மீதே இருந்தது. பிரேம் உடல்நிலை சரியில்லை என விடுப்புக் கடிதம் கொடுத்து விட்டிருந்தார் என்பதாலும், தான் அடித்த அடியின் வீரியத்தை உணர்ந்திருந்ததாலும் எம் எஸ் சி சார் எதுவும் கேட்காமல் விடுப்பு விண்ணப்பத்தை எடுத்து வைத்தார். சுருக்கமாக சொல்வதானால் எம் எஸ் சி சாரும் எங்கள் தரப்பிலிருந்து எதிர்வினையை எதிர்பார்க்காதவராக சற்று அலட்சியமாக வே இருந்தார்.
சரியாக இரண்டு நாட்கள் கழிந்ததும் மதியம் 3 மணியளவில் பள்ளிக்கு இரண்டாம் தபால் வந்தவுடன் சூழ்நிலையில் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. அன்று சிறப்பு வகுப்புகள் கிடையாது என சொல்லப்பட்டது. நாங்கள் வெளியே வந்தபோது தோழரண்ணன் கடைக்கு எப்போதும் வருபவர்களில் இருவர் காத்திருந்து எங்களை அழைத்துச் சென்றனர். மறுநாள் என்ன கேள்விகளுக்கு எவ்வெவ்வாறெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என சிறு பயிற்சி தரப்பட்டது. விஷயம் இதுதான் – பிரேம் அண்ணன் பெயரிலும், தெய்வநல்லூர் நண்பர்கள் கழகம் (செயலர் பாலாஜி – பிரேம் அண்ணன்) பெயரிலும் (அதன் உறுப்பினரான) பிரேம் எனும் மாணவன் கடுமையாக தாக்கப்பட்டது குறித்து வட்டார கல்வி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாக்குதலின் தீவிரத்தன்மை அரசு மருத்துவர் அளித்துள்ள மருத்துவ சான்றிதழ் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே அது தொடர்பான விசாரணைக்கு ஆசிரியர் எம் சூரியசந்திரன் அவர்களும், பொறுப்பு தலைமை ஆசிரியர் எம் ஆவுடைநாயகம் அவர்களும் வட்டார கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்.
இரவு 8 மணி வரை கருத்தபாண்டியார் கடை ஓய்வறை விவாதங்கள் நீடித்ததாக ப்யூன் காளிமுத்து அண்ணன் தகவல் அளித்தார். பிரேமின் அண்ணன் வந்து கேட்கக்கூடும் என்ற அளவில் மட்டுமே தயாராக இருந்த எம் எஸ் சி சார் இந்த அதிரடியை எதிர்பார்த்திருக்கவில்லையென்றாலும் இம்முறை எம் எஸ் சி சார் முன்தயாரிப்புகளின்றி இறங்கக் கூடாது என்ற முடிவிலிருந்தார். அவரது கழக சித்தப்பா உதவி நாடப்பட்டது. அவர் பரிந்துரைத்த வழக்கறிஞர் ஆலோசனையின் பேரில் 5 நாட்களுக்கு மருத்துவ விடுப்பு எம் எஸ் சி சாருக்கு கொடுக்கப்பட்டது (தொலைபேசியில் பேசி இந்த யோசனையைச் சொன்னதும் இரவு 10.30 மணியளவில் பள்ளி தலைமை ஆசிரியர் அறை திறக்கப்பட்டு உடல்நிலை காரணமாக மதியம் அரை நாளிலிருந்து 5 நாட்களுக்கு விடுப்பு கேட்டும், விடுப்பு முடிந்து வருகையில் மருத்துவச் சான்றிதழ் தருவதாகவும் உறுதியளித்து எம் எஸ் சி சார் எழுதிய கடிதம், எம் ஏ என் சாரால் ஒப்புதல் கையெழுத்து போடப்பட்டு அன்றைய தேதி, நேரம் இடப்பட்டு, அதாவது இரண்டாம் தபால் வருமுன்னரே விடுப்புக் கடிதம் வந்து அனுமதிக்கப்பட்டதாக விஞ்ஞான முறைப்படி தயாரிக்கப்பட்டு கோப்பில் கோர்க்கப்பட்டது.) மறுநாள் பள்ளிக்கு வந்த எம் ஏ என் சார் மருத்துவ விடுப்பில் எம் எஸ் சி சார் சென்றிப்பதாகவும், வந்தவுடன் வட்டார கல்வி அதிகாரியை வந்து சந்திப்பதாகவும் பதில் அனுப்பினார்.
வட்டார கல்வி அதிகாரியாகிய டிரிப்பிள் எஸ் சாரும் இதை எதிர்பார்த்திருந்தபடியால் எம் ஏ என் சாரை மட்டும் உடனே வந்து ஆஜராகும்படி தகவல் அனுப்பினார். பூசை சாரை உடன் அழைத்துக் கொண்டு சென்ற எம் ஏ என் சாரிடம் அவர் மட்டுமே அதிகாரியைச் சந்திக்க அனுமதி என்று சொல்லப்பட்டு பூசை சார் வெளியே நாற்காலியில் அமர வைக்கப்பட்டார். கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் நீடித்த அந்த சந்திப்புக்கு அறைக்குள் திரிவிக்கிரம அவதாரமாக நுழைந்த எம் ஏ என் சார் முடிந்து வெளியே வரும்போது வாமன அவதாரமாக தெரிந்தார். பணியில் கவனக்குறைவு மற்றும் அலட்சியம், அதிகாரியின் முந்தைய வருகையின்போதே அறிவுறுத்தியும் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருந்த பணித்திறன் குறைபாடு போன்ற பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தன்னால் இயலும் என்றும் எந்த அரசியல் செல்வாக்கையும் தன்னுடைய அறிக்கையால் செயலிழக்க வைக்கும் வழி தனக்குத் தெரியும் என்றும் புகாரளித்த நண்பர்கள் கழகம் தான் புலனாய்வு இதழ்களின் முன்னோடியான தராசு இதழின் துணை அமைப்பு எனவும் டிரிப்பிள் எஸ் சார் சொன்னவை எம் ஏ என் சாரை திகிலாக்கி விட்டன. இந்த வாரம் முடிவதற்குள் எம் எஸ் சி சாருடன் அவரும் ஆஜராக வேண்டும், இல்லையென்றால் மேல்நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும் என்ற இறுதி மிரட்டலில் எம் ஏ என் சார் அழுது விடுவது போலாகி விட்டார். பூசை சார் எவ்வளவு கேட்டும் விவரத்தை முழுமையாக சொல்லாத எம் ஏ என் சார், தான் உடனே எம் எஸ் சி சாரை சந்திக்க வேண்டுமென்றார். தன் சித்தப்பாவைப் பார்க்க அவர் திருனவேலி க்கு போயிருப்பதால் நாளை சந்திக்கலாமென பூசை சார் சொல்ல எம் ஏ என் சாருக்கு தான் தனித்து களத்தில் நிற்பது புரிந்தது. அன்று மாலை எவருமே எதிர்பாரா வண்ணம் எம் ஏ என் சார் பிரேமின் அண்ணனைப் பார்க்க அவர் வீட்டுக்கே, அதாவது பிரேமின் எதிர்வீட்டுக்கு வந்தார். வீட்டில் பாலாஜி அண்ணன் இல்லை. வீட்டிலுள்ளோர் சொன்னபடி வசந்தம் டெயிலர்ஸ் கடையை வந்தடைந்த எம் ஏ என் சார் மிகுந்த தயக்கத்துடன் படியேறினார். சரியாக அடுத்த பத்தாம் நிமிடத்தில் நீவு சிகிச்சைக்காக அண்ணனுடனும், எங்களுடனும் வந்த பிரேம் எம் ஏ என் சாரைக் கண்டு முதலில் அதிர்ச்சி அடைந்தார். பிறகு மரியாதையுடன் வணக்கம் சொன்னார். கூடவே வந்த நாங்களுமே. தோழரண்ணன் பிரேமுக்கு நீவுவதைப் பார்த்த எம் ஏ என் சாருக்கே வலிக்க ஆரம்பித்தது. சிகிச்சை முடிந்ததும் பிரேமையும், எங்களையும் வெளியே இருக்கச் சொல்லி விட்டு தோழரண்ணன், பாலாஜி அண்ணன், சார் மூவரும் பேசினார்கள். இப்படி அடி விழுந்திருக்கும் என எம் ஏ என் சார் தானே எதிர்பார்த்திருக்கவில்லை எனவும் அடித்ததும் தன்னிடம் வந்து சொல்லியிருந்தால் உடனே தானே நடவடிக்கை எடுத்திருந்திருப்பேன் எனவும் கம்பீரமாக ஆரம்பித்து புகாரில் தன் பங்களிப்பை விசாரணையின்போது மெளனமாக இருந்து கடக்குமாறு பணிவுடன் வேண்டிக் கேட்டுக் கொண்டு முடித்தார்.
அவ்வாறாக எம் ஏ என் சார் தரப்பை பெரிதுபடுத்தாமல் இருக்க வேண்டுமானால் அது எம் ஏ என் சார் தரும் ஒத்துழைப்பைப் பொறுத்தே அமையும் என்றார் தோழரண்ணன். பிரச்சினை ஏற்பட்டவுடன் தன் அரசியல் பின்னணியில் செயல்படும் எம் எஸ் சி சார் தன்னை முன்வைத்து காரியங்களைச் செய்துவிட்டு இப்போது தன்னைக் கை விடுவது போல செயல்படுவதாக வருத்தம் கொண்டிருந்தார் எம் ஏ என் சார். அப்புள்ளியை சரியாகப் பிடித்தார் தோழரண்ணன். அதன்படி எம் எஸ் சி சார் தரப்பின் நகர்த்தல்களை தங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டுமென்று கேட்டு எம் ஏ என் சார் சம்மதிக்க அப்பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்ததற்கு அடையாளமாக ஜெமினி டீக்கடை டீ கடைக்குள் நுழைந்தது. வெளியில் வந்த எம் ஏ என் சார் எங்களைப் பார்த்து ஒரு நொடி நின்றார். பிரேமின் இடக்கை மீது அவர் பார்வை பட்டதும் அவர் முகம் மாறியது. பிரேமிடம் எதுவோ சொல்ல வருவது போல வந்தவர் எதுவும் சொல்ல முடியாமல் பிரேமின் தோளை மெல்ல தட்டிக்கொடுத்து விட்டு கிளம்பினார். அவர் கிளம்பியதும் நாங்கள் உள்ளே நுழைந்தோம். பாலாஜி அண்ணனிடம் பேசிக்கொண்டிருந்த தோழரண்ணன் எம் ஏ என் சாரை முழுமையாக நம்பக்கூடாது எனவும், நம்முடன் அதிகம் சேர்த்தால் நமது தரப்பின் தகவல்களும் அவர்கள் தரப்புக்கு சென்று சேரும் வாய்ப்புண்டு எனவும் தெரிவித்தார். “அப்படி இல்ல தோழர் பாலாஜி, சிலருக்கு அதிகாரம் இருக்கற இடம் மேல ஒரு ஈர்ப்பு இருக்கும். அதை அண்டியே இருக்க முயற்சிப்பாங்க. அதிகாரத்தரப்பு கூடவே இருந்தோம்னா அந்த அதிகாரத்துல கொஞ்சமாவது தனக்கும் கசியும்னு இவங்களா நெனச்சிப்பாங்க. உண்மையில எந்த நிலையிலயும் அதிகாரத்தரப்பு தன் அதிகாரத்தைப் பகிர்ந்துக்காதுன்னும், சிக்கல் வந்தால் தன்னை மட்டுமே பாதுகாத்துக்கும்னும், அதற்கு விலையா அது கொடுக்கறது தன்னை இப்படி சுத்தி வர்றவங்களைத்தான்னும் தெரியும்போது இந்த அண்டி வாழும் தரப்பு அதிர்ச்சி அடைவாங்க. ஆனாலும் அவங்களால அதிகாரம் மேல இருக்கற ஈர்ப்பை விடவே முடியாது. இத்தனைக்கு அப்புறமும் அதிகாரம் எந்தத் தரப்போ அந்தத் தரப்பை சார்ந்தே இருப்பாங்க. இவங்களோட அதிர்ச்சியை மட்டுமே நாம உபயோகப்படுத்திக்கலாமே தவிர இவங்கள நம்ப முடியாது. நம்பவும் கூடாது” தோழரண்ணன் தான் சரியானதொரு அரசியல்வாதியும் கூட என நிரூபித்த இடம் இது.
அடுத்தடுத்த செயல்கள் விரைவாக நடந்தேறின. எம் எஸ் சி சார் வந்தே ஆக வேண்டுமென எம் ஏ என் சார் பலப்பல முயற்சிகள் செய்து இறுதியாக வரவழைத்தார். விசாரணை நாளன்று சிவகிரி வட்டார கல்வி அலுவலகத்துக்கு வந்த எம் ஏ என் சாரை வேறோர் அறையில் அமரச் சொன்னார் டிரிப்பிள் எஸ் சார். டிரிப்பிள் எஸ் சார் அலுவலகத்துக்கு வழக்கறிஞர் புடை சூழ எம் எஸ் சி சார் வந்திறங்கிய போது துறைசார் விசாரணைகளில் வழக்கறிஞர்களுக்கு அனுமதி இல்லை எனச் சொல்லி எம் எஸ் சி சாருடன் வந்தவர்கள் வெளியில் இருக்கும்படி ஆனது. ஆனால் விசாரணை அறையை விட்டு வந்த அவர்கள் வெளியில் செல்லாமல் அலுவலகத்திற்குள்ளேயே கிடைத்த நாற்காலிகளிலெல்லாம் அமர டிரிப்பிள் எஸ் சார் அலுவலகப் பணியாளர் ஒருவரை அழைக்து ஏதோ காதில் சொல்லி அனுப்பினார். அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் இருபதுக்கும் மேற்பட்டோர் சிவப்பு சட்டை, சிவப்புத் துண்டுகளுடன் அலுவலக வாயிலில் குவிந்தனர். கனத்த சிவப்பு சட்டையின் பையில் சிவகிரி மார்க்கெட் சுமை தூக்கு தொழிலாளர் சங்கம் என நூல்பின்னல் வேலைப்பாட்டால் எழுதப்பட்டிருந்தது. சிவப்புச் சட்டைகள் வந்தவுடன் வெள்ளைச் சட்டை-கருப்பு பேண்ட்கள் மெல்ல நழுவி அலுவலகத்திற்கு அருகிலிருந்த டீக்கடையில் முகாமிட்டனர். செஞ்சட்டையினர் அலுவலக வாயிலிலேயே மரத்தடியில் தரையில் அமர்ந்து அவர்களுக்குள் பேச ஆரம்பித்தார்கள். அவ்வப்போது டீக்கடையிலிருந்து டீ அவர்களுக்கு வந்தபடியே இருந்தது.
உள்ளே எம் எஸ் சி சார் நிராயுதபாணியாய் தன்னை உணர்ந்தார். வந்து இறங்கும்வரை சூழ இருந்தவர்களால் உலகையே வெல்லும் மனநிலையில் இருந்தவர் தனித்து நிற்கையில் பாலைவனத்தில் முதலையாக ஆனார். டிரிப்பிள் எஸ் சார் எவ்வித உணர்வுமின்றி தன்னிடம் வந்த புகார் குறித்து விரிவாக விளக்கி உங்கள் தரப்பு கருத்து என்ன எனக் கேட்டார். முதலில் தான் அவ்வாறாக தண்டிக்கவே இல்லை என்று தனக்கு சொல்லிக்கொடுத்தபடி ஆரம்பித்தார் எம் எஸ் சி சார். தயாராக இருந்த டிரிப்பிள் எஸ் சார் தனக்கு வந்திருக்கும் புகாரில் மாணவர் தாக்கப்பட்டதை நேரில் கண்ட சாட்சிகள் பலர் இருப்பதாக குறிப்பிட்டார். அதன்பிறகும் இதை எம் எஸ் சி சார் மறுப்பாரேயானால் அனைத்து மாணவர்கள் முன்னிலையில் பள்ளியில் விசாரணை செய்யப்படும் என்றார். முதல் சுற்றில் தோல்வி அடைந்ததாக உணர்ந்த எம் எஸ் சி சார் தான் தாக்கவில்லை எனவும் தண்டித்தது அம்மாணவனின் கல்வித்தரம் உயரவே எனவும் அதனால் அம்மாணவன் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் எனவும் வாதிட்டார். இம்முறை அரசு மருத்துவர் அளித்த மருத்துவச் சான்றிதழை முன்வைத்த டிரிப்பிள் எஸ் சார் இப்படி சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு செய்திருப்பது தண்டனை அல்ல, தாக்குதலே எனவும் விரல்களைக் கூட அசைக்க முடியாதபடி அடிப்பதால் ஒரு மாணவனின் வருங்காலம் வளமாகும் என்பதற்கு என்ன உத்திரவாதம் எனவும் கேட்க எம் எஸ் சி சார் இரண்டாம் சுற்றையும் இழந்தார். மூன்றாம் சுற்றுக்கு அவரது கழக நண்பர்கள் அளித்த ஆலோசனையை பயன்படுத்தினார்- டிரிப்பிள் எஸ் சார் இடமாறுதலுக்கான காரணம் தான் என நினைப்பதால்தான் தன்மேல் கொண்ட தனிப்பட்ட காழ்ப்புணர்வால் டிரிப்பிள் எஸ் சார் தன்னை பழி வாங்கும் விதத்தில் இப்படிப்பட்ட புகாரை விசாரிப்பதாகவும், புகாரளித்த மாணவர் ஒழுங்கீனமானவர் எனவும், நன்றாகப் படிப்பவர் என்னும் சலுகையில் ஒழுக்கமற்று நடப்பதாகவும் குமுறினார். டிரிப்பிள் எஸ் சாருக்கு களம் எளிதாகிக்கொண்டே போனதால் மிக நிதானமானார். மாணவர் நன்கு படிப்பதற்காகவே தண்டித்ததாக முதலில் சொல்லி விட்டு இப்போது நன்றாகப் படிப்பதன் சலுகையாக ஒழுங்கீனமாக நடப்பதாகச் சொன்னால் எதை ஏற்பது என கூர்மையாகக் கேட்டார். மேலும் எவ்வகையில் அம்மாணவர் ஒழுங்கீனமானவர் எனவும், ஒழுங்கீனமான செயல்கள் எவற்றையெல்லாம் செய்தார் எனவும் தாக்கப்பட்டது படிப்பு காரணத்தாலா, ஒழுங்கீனம் காரணமாகவா என விளக்கும்படியும் கேட்டார். இம்முறை எம் எஸ் சி சார் நிலையழிந்தார்- பெண் பிள்ளைகளுக்கு கடிதம் எழுதிய குற்றச்சாட்டு அம்மாணவன் மீது உண்டு என்றார். இன்னும் நிதானமான எஸ் எஸ் எஸ் சார் நீங்கள் குறிப்பிடுவது நீங்கள் அப்பள்ளியில் பணிக்கு சேருமுன்பே நடைபெற்ற சம்பவம் எனவும் அது குறித்து பள்ளியில் ஏற்கனவே விசாரிக்கப்பட்டு அதில் எவ்வித தவறும் இல்லை என சொல்லப்பட்டு விட்டதாகவும், தவறான கடிதம் என பெண்ணின் தரப்பிலிருந்தோ பெற்றோர் தரப்பிலிருந்தோ எவ்வித புகாரும் வரவில்லை எனவும் சொல்லி விட்டு நீங்கள் இருக்கும்போது நடக்காத ஒரு சம்பவத்துக்காகவா நீங்கள் அம்மாணவனை தாக்கினீர்கள் எனக் கேட்டு நிறுத்தினார். எம் எஸ் சி சாரிடம் பதில் இல்லை. டிரிப்பிள் எஸ் சார் முகம் மாறாமல் தனக்கு எவ்வித காழ்ப்புணர்ச்சியும் இல்லை எனவும் அவ்வாறு எம் எஸ் சி சார் கருதினால் புகாரை மாவட்ட கல்வி அதிகாரிக்கு விசாரணையின் பொருட்டும், மாநில கல்வி அதிகாரிக்கு தகவல் பொருட்டும் தான் அனுப்பி வைப்பதாகவும் அப்படி அனுப்பப்பட்டால் அப்புகார் புலனாய்வு இதழ்களுக்கு வெளியாகும் வாய்ப்பும் உண்டு என்று சொன்னார். மேலும் காழ்ப்புணர்ச்சி குறித்து சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய இடத்தில் இருப்பது எம் எஸ் சி சார்தான் என்றும் சொன்னார். எம் எஸ் சி சார் தொண்டை அடைக்க முகம் சிவந்து தலை குனிந்து நின்றார். பலவீனமான குரலில் தான் இங்கு நடத்தும் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும், எடுக்கப்படும் முடிவுகளுக்குக் கட்டுப்படுவதாகவும் ஒப்புக்கொண்டார்.
விசாரணை முடிவில் எம் ஏ என் சாரும் அழைக்கப்பட்டு மூவரும் கையெழுத்திட்ட விசாரணை அறிக்கை அரசுக் கோப்பாக மாறி இறவா வாழ்வைப் பெற்றது. இதைத் தொடர்ந்து தெய்வநல்லூர் மேல்நிலைப் பள்ளியில் சில மாற்றங்கள் நடைபெற்றன. நாங்கள் மூவரும் பத்தாம் வகுப்பு அ பிரிவுக்கு மாற்றப்பட்டோம். அ பிரிவுக்கும், இ பிரிவுக்கும் கணித ஆசிரியராக புதிதாகப் பணியில் இணைந்த வேல்முருகன் எனும் சி வி எம் சார் நியமிக்கப்பட்டார். கூடுதலாக அ , இ பிரிவுகளுக்கு ஆங்கிலம் எடுக்க மீசை சாரும் நியமிக்கப்பட்டார். கையில் பிரம்புடன் வகுப்புக்கு எம் எஸ் சி சார் வருவது தடை செய்யப்பட்டது. அவரது வகுப்பு மாணவர்களை தலைமை ஆசிரியர் மாதம் ஒருமுறை சந்தித்துப் பேச வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. எங்களுக்கு ஒருபுறம் ஆறுதல் என்றாலும் நயினார், டச்சிங், ஜெபமணி ஆகியோரைப் பிரிவது சற்று வருத்தமாக இருந்தது. ஆனாலும் வகுப்பு இடைவேளைகளில் சந்தித்துக் கொள்வதையோ, பெரிய கோவில் சந்திப்புகளில் நயினாரை இணைத்துக் கொள்வதையோ நாங்கள் நிறுத்தவில்லை.
அ பிரிவில் சங்கீதா, மெஜூரா, யக்கா, சேமியா ஆகியோர் இருந்ததால் நாங்கள் உற்சாகமானோம். வகுப்பாசிரியர் ராஜசேகரன் சாருக்கு தன் வகுப்பில் நன்றாகப் படிக்கும் இருவர் (டிஸ்ட்ரிக்ட் ஃபர்ஸ்ட் மட்டுமில்ல சார், ஸ்டேட் லெவல்ல ரேங்க்குக்கு முயற்சி பண்ணலாம் – ஓய்வறையில் ராஜசேகரன் சார் ஆர்வம்) கிடைத்ததில் பெருமை வேறு. எல்லாம் சரியாகி விட்டதாக நாங்கள் நினைக்கும் ஒவ்வொரு முறையும் வேறோர் விதமாக விதி விளையாடியதை இப்போது நினைத்தாலும் எங்கள் மீதே எங்களுக்கு பரிதாபம் எழுகிறது. களையிழந்தவராக நடமாடிக் கொண்டிருந்தாலும் எம் எஸ் சி சார் பூமியால் அழுத்தப்பெற்ற கரி வைரமாவது போல உள்ளே இறுகிக் கொண்டே இருந்திருக்கிறார் எங்கள் விஷயத்தில். அதன் விளைவுகள் விபரீதமாக பிரேம் மற்றும் நண்பர்கள் வாழ்க்கையில் விளையாடின.
(தொடரும்)
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
