றெக்கை– அத்தியாயம் 6

This entry is part 6 of 17 in the series றெக்கை

எந்த நிமிடமும் பிரசவம் ஆகிவிடும் டேவி. 

பள்ளிக்கூட வளாகத்தில் மனைவி ரூத் கூடவர டேவி தச்சன் நுழைந்தபோது ஜோஸ்ஸி சொன்னாள். அவள் டேவிக்கு பழைய சிநேகிதி. டேவியின் மனைவி ஏற்கனவே சொல்லப்பட்ட ரூத் ஒரு மணி நேரம் முன்பு  வயிற்றில், என்றால் அதற்குக் கீழே வாசல் திறக்க,  இன்னொரு உயிர் நீந்திவரச் செய்ய ஆயத்தப்படுத்தப் பட்டாள். அது சீராக வளர்ந்து பிரசவமாகக் கனியலாம். அல்லது சட்டென்று முடியலாம். ஜோஸ்ஸி அதைப்பற்றி அறிய மாட்டாள்.  அவளுக்குத் தெரிந்தது   டேவி தச்சனின் குடவயிற்றின் கனபரிமாணம் இன்ன பிற தான். 

தச்சன் இந்த வயற்றோடு தான் சுற்று வட்டாரம் பத்து மைல் தூரத்துக்குள் இருக்கப்பட்ட சிறியதும் பெரியதுமான ஊர்களில் எல்லாம் மரத்தை அறுத்து இழைத்து ஆணி இறக்கி தச்சு வேலை பார்த்து வருகிறான். 

அங்கங்கே அவனுக்கு பல தரத்தில் தொடுப்பு உண்டு என்பதை    ரூத் அறிவா.ள்  

ஏண்டி ரூத்து குட்டி தச்சருக்கு ஒத்தாசை பண்ண மாட்டியா  

ஜெஸ்ஸி  சீண்ட, ரூத்துக்கு வந்ததே கோபம். 

தேவிடியாளே   என் புருஷனுக்கு தொந்தி தொப்பையே உன்னோடு கிடந்துதான்

ரூத் கூச்சலிட்டாள்.    

வாய் வார்த்தைச் சண்டை இன்னும் தீவிரமான அடுத்த நிலைக்குக் கடந்தது. அழுகிய வாடை வரும் அந்தரங்க உறுப்புகளும் எப்படி எல்லாம் இருட்டிலும் ஆளொழிந்த பகலில் யார் யாரோடு எங்கே கள்ளக் கலவி செய்தார்கள் என்ற ஊகத்தின் அடிப்படையில் கூட்டிச் சேர்த்த பட்டியல் வெளியிடலுமாக கேட்க ரசமான நிகழ்ச்சி அங்கே அரங்கேற்றமாகிக் கொண்டிருந்தது. 

இன்னும் இளம்பெண் வயதில் ரூத்தும்  இல்லை. ஜெஸ்ஸியும் இல்லை. நாற்பதைத் தொட்ட இளம் மத்திய வயது ஸ்திரிகள். சுரைக்குடுக்கைக்கும் மோசமாக வற்றியும், ஊரான் எல்லோரும் விளையாடி நைந்து போனவையுமான ஸ்தன பாரம் பற்றிய பரிகாசம், அந்தரங்க உறுப்புகள் மற்றும் ஒன்று கலக்கும் நேர விசேஷங்கள்  வகையறா, ஒன்றுக்கு இரண்டு பேரிளம் பெண்மணிகளின் வாயில் சரமாரியாக வந்து தெறித்தது 

 பெண் வாயில் இருந்து அசங்கியதான எல்லாம் விழ ,சுற்றி நின்றவர்கள் ஒன்று விடாமல் கேட்டு உய்ய சந்தர்ப்பம் கிட்டியது.  ஃபுட்பால் மேட்ச் பார்க்க நூற்றுச்சில பேர் வந்திருந்தார்கள். அதிலே செம்பாதி இந்தப் பெண்டுகள் சண்டை போடுவதைக் கண்டு களித்துக் கொண்டிருந்தார்கள். 

’டேவ் தச்சனுக்கு கன்னி கழிச்சது யார்?  நான் தான்’ என்று சாதனை விளம்பரம் செய்ய அடுத்த நிலைக்குக் கடந்தது மோதல். 

நான் தான், நான் தான் என்று பெண் குரலைப் போலி செய்து கூட்டத்தின் பங்குபெறல்  நிகழ்ந்தது.  டேவ் வீட்டுப் பட்டியில் அடைத்த கிடாவும் அடிபட்டது. 

மைதானத்துக்கு நேரே பள்ளிக்கூட வெளி நடைபாதையில் அடுப்பு வைத்து பான்கேக்குகளைச் சுட்டெடுத்துக் கொண்டிருந்த  ஓநெல்லி கிழவி. நூறு பேர் கூடியும் இதுவரை சொற்பமான அளவில்தான் வியாபாரம்.

 கால்பந்தாட்டம் காண வரும் கூட்டம் கண்டிப்பாக பான்கேக் வாங்கும்  என்று நம்பிக் கடை விரித்த தன் முட்டாள்தனத்தை திட்டிக் கொண்டிருந்தபோது, பாட்டியம்மா பகல் வணக்கம் என்று குரல் கேட்டு அடுப்பில் வெந்து முடித்த பலகாரத்தைக் கருத்துக் கம்பியால் குத்தியபடி நிமிர்ந்து பார்த்தாள். 

சித்திரம் : ஷங்கரா

வலனாடு கால்பந்தாட்டக் குழுவின் கோல்கீப்பர் ஜாஜா மற்றும் இரண்டு விளையாட்டு வீரர்களும். நின்று கொண்டிருந்தார்கள்.

பான்கேக் விக்கறதை இன்னும் கொஞ்ச தூரம் கடந்து வச்சுக்கணும். மேட்ச் ஆரம்பிக்கப் போறது.

 அவளிடம் சொல்லிய குரலெடுப்புகள் பெரிய ஓலமாக மாறின, கைதட்டு படீரென்று வெடித்தது. 

ஊருக்கு புதுசாக வந்திருக்கும் டாக்டர் நிர்மலாவும் அவளது குழந்தைகள் ரெண்டு பேரும் மைதானப் பார்வையாளர் மேடைக்குப் படியேறிப் போனார்கள். 

போச்சுடா இவஙக இங்கே எங்கே வந்தாங்க?

 ஜா ஜாவின் தோளைத் தொட்டுக்கொண்டு  நின்ற  வலனாடு டீம்  மிட்  ஃபீல்டர்  கேட்டான். 

தெரியலே ஊருக்கு புதுசா வந்திருக்கற டாக்டரும் பசங்களும்   இவங்க. 

நான்தான் வரவேற்றேன் என்று அவனுக்கும் பின்னாலிருந்து குரல். டேவ் தச்சன். டீமுக்கு நிர்வாகியாக நிஜார் அணிந்து நிற்கிறான்.

ஓநெல்லி கிழவி டேவின்  ஆதரவு தனக்குக் கிடைக்கும் என்ற திடமான நம்பிக்கையோடு ஜா ஜாவிடம்  அழுதாள் –

 நானே ஒரு ரிண்டுக்கும் ரெண்டு ரிண்டுக்கும் தீனி வித்துக்கிட்டிருக்கேன். வியாபாரம் இன்னும் சூடு பிடிக்கலே, இப்போ போய் எடத்தை பிடுங்க்றீங்களே

அவள் பொய் அழுகையை நினைத்த ஸ்வரத்தில் பாட தேர்ச்சி பெற்றிருந்தாள். 

உன்னை யார் கடையைக் கட்டச் சொன்னது?கொஞ்சம் நகர்ந்து ஸ்கூல் வராந்தாவுக்கு போயிடேன். இன்னிக்கு ஒருநாள் இந்த இடம் நம்மோடது. 

டேவ்  ஆதரவாக அவள் கையைப் பற்றிக்கொண்டு நன்றி சொன்னான். 

தம்பி நீ அரைமணி நேரம் முந்தி வந்திருந்தா எனக்கு அந்த   நேரத்துலே பான்கேக் சடுதியிலே வித்துப்போயிருக்கும். 

அது எப்படி? 

டேவ் தொப்பையைத் தடவிக்கொண்டு கேட்டான். 

அதை ஏன் கேக்கறே இந்த இடத்தை அடைச்சுக்கிட்டு விளையாட்டை பார்க்க வந்த கும்பல் எல்லாம் இங்கே தான். என்னவா, ரெண்டு அவுசாரிங்க நிறுத்தாம சண்டை போட்டுக்கிட்டிருந்தாங்க,

டேவ் மெல்ல நழுவினான். 

வந்துட்டாங்க  – டேவ் பள்ளிக்கூட வாச.லை பார்த்தபடி சொன்னான்.

அங்கே ஒரு வெள்ளாடு முன்னால்   நடக்க அதன் பின்னால் ஒரு சிறிய கூட்டம். எதிரணி. மேட்ச்க்கும் அதன் பின் ராத்திரி நடக்க இருக்கும் விருந்துக்கும்  அழைக்கப்பட்டவர்கள்

‘சாரி மேட். வந்து சேர தாமதமாயிடுத்து. ஆடு மெதுவாக நடந்து வந்தது

 எதிரணி தலைவன் ஆட்டின் நெற்றியை நீவி விட்டான். இந்த ராத்திரி அது எத்தனை வயிறுகளுக்குள் இந்திய உணவு பிரியாணியாக உறங்கப் போகிறதோ.. 

அங்கிள் 

ஜாஜாவைத்தான் அழைக்கிறார்கள். திரும்பிப் பார்க்க டாக்டரின் மகன். 

எப்போ மேட்ச் ஆரம்பிக்கப் போறுது? 

அவன் வினவ, முந்திக்கொண்டு ’அஞ்சு நிமிஷத்துலே’ என்று டேவ் கூறினான்.. 

 பள்ளிக்கூட வெளியறைக்கு நடந்து போகும் ஆட்டை ஆசையோடு பார்த்தான். ஆடு ஒரு உணவுப்  பதார்த்தம். அது மட்டும் தான் என்று அவன் மனதில் யாரோ நினைவு படுத்திக்கொண்டே இருந்தார்கள். 

பள்ளிக்கூட மணி கால்பந்து ஆட்டத்தில் சக்ஸஸ் சக்ஸஸ் என்று முழங்கியது

ரெப்ரி கால்பந்தை செல்லமாக அணைத்துத் தூக்கி வந்தான். நடு மைதானத்தைக் குறி வைத்து அந்தப் பந்தை எறிந்தான்.

 அவன் தடுப்பதற்குள் வலநாடு கால்பந்தாட்ட அணியின் பதினொரு பேரும் கிழவி பான்கேக் விற்ற மணல் பரப்பிய வெற்று வெளியில் கூடி நின்று சிறுநீர் கழித்தார்கள்.

கூடியிருந்தவர்கள் எல்லோரும் அதிர்ச்சியை வெளிப்படுத்துவது போல் நின்ற இடத்திலேயே பார்த்து நின்று அலறினார்கள். 

அரண்டுபோய் டாக்டர் நிர்மலா எழுந்து வெளியே நடக்க, அவள் வருவதற்கு முன் வீட்டுவாசலுக்கு வந்திருந்த விசியும் கிட்டாவும்  பான்கேக்கை தின்னாமல் குப்பையில் எறிந்தார்கள்.

 ஒநெல்லி கிழவி அலட்டிக்கொள்ளாமல் பான்கேக் சுட்டுக் கொண்டிருந்தாள். அருகே புதிப்பிக்கப்பட்ட இணையில்லாத நட்போடு ரூத்தும் ஜெஸ்ஸியும் ஒரு பான்கேக்கை பரஸ்பர எச்சிலோடு பகிர்ந்து கொண்டிருந்தார்கள். 

ரூத் தோழியிடம் சொன்னாள் – ஏண்டி ஒய்யாரி பக்கத்திலே போய் பார்த்துட்டு வரலாமா?

அதுக்குள்ளே முடிஞ்சிடும். 

சரித்திரப் பிரசித்தி பெறப் போகும் அலாதியான சம்பவம் ஒன்று நிகழும்போது அங்கிருப்பதின் அவசியத்தை உணர்ந்தவளாக ஜெஸ்ஸி இன்னொரு பேன்கேக்கை  ஒநெல்லிக் கிழவியிடம் வாங்கினாள்.

மைதானம் மூத்திரச் சுவடுகளோடு ஈரம் அவசரமாக உலர்ந்து வந்தது.

வலனாடு அணி நிர்வாகி டேவ் முதுகில் செல்லமாக தட்டி சிரித்தபடி கேட்டான் எதிரணி நிர்வாகி. 

என்னய்யா, கக்கூஸ் சாவியை தொலைச்சுட்டீங்களா? 

அது இல்லப்பா. மேட்ச் ஆரம்பிக்கற போது டீம் பசங்க எல்லோரும் ஒரே நேரத்திலே ஆடுகளத்திலே ஒண்ணுக்கிருந்தா, மேட்ச்லே ஜெயிப்பீங்கன்னு ஜோசியம் சொன்னார்  பூசாரி.. – டேவ் ரகசியம் பகிர்ந்தான்..

அப்படியா? பந்தயம் நடந்துட்டு இருக்கும்போது ஹாஃப்டைம்லே எங்க பசங்கள் இதே மாதிரி மைதானத்தை சொட்டச்சொட்ட  நனைத்தால் வெற்றி நிச்சயம்னு  எங்க ஊர்ப் பூசாரி சொன்னார். 

செஞ்சுடலாம் என்றான் டேவ். 

நீ வேணும்னா வீட்டுக்குப் போயேன். 

டேவ் தன் மனைவி ரூத்தையும் தொடுப்பு ஜெஸ்ஸியையும் ஒற்றை நோட்டத்தில் பார்த்துச் சொன்னான்.  முடியாது என்றனர் தீர்மானத்தோடு இருவரும். 

சரித்திரம் நிகழ இருக்கும்போது கலந்து கொள்ள முடியாவிட்டாலும் பார்வையாளராகவாவது இருக்க வேணும்.

ரூத் தத்துவார்த்தமாக மொழிந்து. இன்னொரு பான்கேக்கைக் கடித்து ஜெஸ்ஸியோடு பகிர்ந்தாள்.

சுக்காக உலர்ந்த மைதானத்தில் பந்து விளையாட்டுப் போட்டி தொடங்கியது.     

(தொடரும்)

றெக்கை

றெக்கை– அத்தியாயம் 5 றெக்கை– அத்தியாயம் 7

Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.