- சமூக உணர்ச்சிக் கற்றல்
- தன்னைத் தெரிந்து கொள்ளல்
- பொறுப்புணர்வோடு முடிவுகளை எடுத்தல்
- இன்க்ளூசிவ் – உள்ளடக்கிய நிலை
- சமூக உணர்ச்சி கற்றலை வகுப்பறையில் ஒருங்கிணைக்கும் வழிகள்
- சமூக உணர்ச்சி கற்றலும் நேர்மறையான பள்ளி சூழலும்
- வயதுக்கேற்ற கல்வி முறை
- வாழ்க்கை: இடரின் நீர்நிலை, முயற்சியின் படகு
- பள்ளி-சமூகம்-பெற்றோர் கூட்டுறவு: நிலையான கல்வி மேம்பாட்டிற்கான அடிப்படை
- சமூகக் கற்றலில் சமூகத்தின் பொறுப்பு
- தெரிவுகள் அதிகம், முடிவு ஒன்று
- முடிவெடுத்தல், பொறுப்பேற்றல் மற்றும் சமூக கற்றல்
நம் அனைவருக்கும் குழந்தைப் பருவத்தில் சில வலிமிகுந்த அனுபவங்கள் உண்டு. இந்த கடினமான தருணங்களில், நமக்கு உதவிய ஒருவரை நாம் என்றும் நினைவில் கொள்கிறோம். அந்த உதவி பெரும்பாலும் செவிமடுத்தலில் இருந்து தொடங்குகிறது – அவசரப்படாமல் கேட்பது, ஒருவர் போராடிக்கொண்டிருக்கும்போது அதைக் கவனிப்பது, அவர்களின் உணர்வுகளை அங்கீகரிப்பது. இது சமூக மற்றும் உணர்ச்சி கற்றலின் அடிப்படையாக அமைகிறது. சமூக-உணர்ச்சி கற்றல் என்பது தன்னைப் புரிந்துகொள்ளுதல், மற்றவர்களை உணர்தல், உறவுகளை வளர்த்தல், பொறுப்பான முடிவுகளை எடுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது. குழந்தைகள் சமூக திறன்களை வளர்த்துக்கொள்ளும்போது, அவர்கள் தங்கள் உணர்வுகளை சிறப்பாக கையாளவும், மற்றவர்களுடன் இணைந்து செயல்படவும், கடினமான சூழ்நிலைகளை சமாளிக்கவும் கற்றுக்கொள்கிறார்கள். பள்ளிகளில் சமூக-உணர்ச்சி கற்றலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, குழந்தைகளுக்கு வெறும் கல்வி சார்ந்த அறிவை மட்டுமல்லாமல், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள தேவையான முழுமையான திறன்களையும் வழங்குகிறது. குழந்தைகளின் கல்வி மற்றும் உணர்ச்சி தேவைகள் எவ்வாறு பின்னிப்பிணைந்துள்ளன என்பதை சில உண்மை நிகழ்வுகள் மூலம் பார்ப்போம்.
அது ஒரு கீழ்நிலைப் பள்ளி. ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரைதான். ஆசிரியர் சர்க்கிள் நேரம் என்று சொல்லியும் வழக்கத்துக்கு மாறாக குழந்தைகள் ஓடிவரவில்லை. யாருமே இல்லை. எங்கே குழந்தைகள் என்று பார்த்தால் அலமாரிக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்.
“ஏன் எல்லோரும் ஒளிந்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டால், “இன்று நம் ஸ்கூலுக்கு ஐஸ் வந்து கன்சாலைஸை பிடித்துக்கொண্டு போய்விடுவார்களா, டீச்சர்? இல்லை ரோசலினாவை? எங்களுக்கு யாரையும் அனுப்பவேண்டாம்? நாங்கள் இங்கே இல்லை என்று சொல்லிவிடுங்கள்” என்று கோரஸாக அலமாரிக்குள் இருந்து குரல் வருகிறது. இந்த பள்ளி இருப்பது பன்ஹாண்டில் டெக்ஸாஸில். கடவுச் சீட்டு என்றால் என்ன என்றே தெரியாத வயது. அவர்கள் அறிந்ததெல்லாம் நட்பு. சமூகம். அந்த நட்பில் யாரையும் இழக்க அவர்கள் தயாரில்லை. இந்த நிகழ்வைச் சொல்லும் ஆசிரியரின் குரல் உடைகிறது. இந்த பாதிப்பு அந்தக் குழந்தைகளின் மனதை விட்டு நீண்ட நாள்களுக்கு அகலப் போவதில்லை.
இன்னொரு உயர் நிலைப் பள்ளி. காலை நேர வகுப்பு. கசங்கிய உடையும் கலங்கிய கண்களுமாக மாணவன் உள்நுழைகிறான். எப்போதும் போல மாணவன் ஒருவன் கேலியாக பேசுகிறான். கண்டுகொள்ளாத மாணவன் தன் இடத்தில் சென்று அமர்ந்த பின்னும் சிரிப்பும் கேலியும் பரவுகிறது. வழக்கமான சீண்டல்கள். சட்டென்று மாணவன் எழுந்து கேலிசெய்த மாணவனின் முகத்தில் குத்துவிடுகிறான். அமைதியாகிறது வகுப்பு. அப்போதுதான் நுழைந்த ஆசிரியை, மாணவனை அழைத்து டீடென்ஷன் என்ற ஒதுக்குப் புற அறைக்கு அனுப்பி தண்டித்திருக்கலாம். ஆனால் அவர் மாறாக அவனை அருகே அழைக்கிறார்.
“மைக், காலையில் என்ன உணவு உண்டாய்?”
…….
“மைக் உன்னைத்தான், என்ன சாப்பிட்டாய்?
என்னோடு இந்த சீரியல் சாப்பிடுகிறாயா?
” சட்டென்று மைக் தலையாட்டுகிறான். ஆர்வமோடு, “என் தம்பி தங்கையும் சாப்பிடவில்லை” என்று சொல்கிறான்.
“அப்படியா, அவர்கள் எந்த வகுப்பு?” “மைக், தங்கை 8 ஆம் வகுப்பு, தம்பி 6 ஆம் வகுப்பு மிஸ் ரோஸ்” என்கிறான்.
இண்டர்காமில் அழைத்து அவர்களுக்கு காலை உணவு அனுப்பச் சொல்கிறாள்.
“என்ன நடந்தது, மைக்? நாம் வெளியே சென்று பேசுவோம், வா.
” நேற்று மாலை போலீஸ், என் அப்பாவை திடீரென கைது செய்து அழைத்து போனார்கள். ஏன் என்று தெரியவில்லை. அம்மா அதன் பின் எங்கே போனாள் என்று தெரியவில்லை. வீட்டிற்கே வரவில்லை. நானும் தங்கை தம்பியும் ஒன்றும் சாப்பிடவில்லை. பயந்துகொண்டே இரவு முழுதும் தூங்கக்கூட இல்லை.” அழுதுகொண்டே சொன்னான் மைக்.
அவனைத் தேற்றிய ஆசிரியை, மன நல ஆலோசகரிடம் அவனை அழைத்துச் சென்று அவனுக்கும் அவன் சகோதர சகோதரிக்கும் உதவ சொல்லிவிட்டு, சமூக சேவக அமைப்புக்கும் தகவல் சொன்னார். இந்த தாக்கம் எத்தனை காலம் மைக்கலுக்கு இருக்கும் என யோசித்துப் பாருங்கள். இது அந்தக் குழந்தைகளின் தவறா? ஆனாலும், தவறாமல் பள்ளிக்கு நேரத்திற்கு வந்த மைக்கேல், ஒரு வெற்றியாளனே.

இந்த இரண்டு நிகழ்வுகளும் நம்மை சிந்திக்க வைக்கின்றன. குழந்தைகளின் சமூக உணர்வுகளும் கற்றலும் எவ்வாறு பின்னிப்பிணைந்துள்ளன என்பதை இவை காட்டுகின்றன. குழந்தைகள் தங்கள் சுற்றுச்சூழலால் ஆழமாக பாதிக்கப்படுகிறார்கள், மேலும் இந்த பாதிப்புகள் அவர்களின் கற்றல் திறனில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
மாற்றம் ஒன்றே மாறாதது என்பது ஆடை, கேளிக்கைகள், விளையாட்டு, உணவு இரசனை சார்ந்தது மட்டும் அல்ல. நாம் கற்கும் முறைகளில் கூட மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. கற்கும் முறை, என்ன கற்கிறோம், எதைக் கற்கிறோம், எப்போது கற்கிறோம் என்பது தொடங்கி எல்லாவற்றிலுமே மாறுதல்கள். அதிலும் இப்போது பள்ளியில் படிக்கிற குழந்தைகளின் மனதில் அரசு இயந்திரங்களால் உருவான அச்சமும் நிலவுகிறது. பாடம் படிப்பதோடு தங்களுடன் படிக்கிற குழந்தைகளில் எத்தனை பேர் மறுநாள் மீண்டும் பள்ளிக்கே வருவார்களா இல்லையா எனக்கூடத் தெரியாமல் புரிந்தும் புரியாத ஒரு சூழ்நிலை அமெரிக்காவில் பல மாநிலங்களில் நிலவுகிறது. சமூக மனநலன் சார்ந்து அறிதல் மிக முக்கியமான ஒன்று.
அமெரிக்கா மட்டும் அல்லாமல், தனித்து வாழும் ஒற்றைப் பெற்றோரால் வளர்க்கப்படும் குழந்தைகள், சேர்ந்து வாழும் தம்பதியரால் வளர்க்கப்படும் குழந்தைகள் இந்தியச் சூழலில் பள்ளிகளில் அடையும் மன அழுத்தம் வேறு வகை. இதைவிட, அரசியல் காரணங்களுக்காக, சமூக அந்தஸ்து காரணங்களுக்காக குழந்தைகளின் இந்த மன அழுத்தத்தை பொறுமையாக உரையாடும் நிலையில் கூட பல பெற்றோர்கள் இருப்பதில்லை. அவர்களுக்கு அதற்கான நேரமோ அவசியமோ இருப்பதில்லை.
பெரும்பாலானவர்கள் குழந்தைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பதாலேயே அவர்கள் மகிழ்ச்சியாக இருந்துவிடுவதாக நினைத்து விடுகிறார்கள். சிலர் குழந்தைகள் நண்பர்களுடன் இரவில் பேசி மகிழ்வதும் வார இறுதிகளில் கூடி மகிழ்வதுமே போதும் என நினைக்கிறார்கள்.
நல்ல உரையாடல் எது என்று கூட அறிந்து கொள்ள பெற்றோர்கள் நேரம் ஒதுக்குவதில்லை. பள்ளியில், மனநல ஆலோசகர்கள் ஏதேனும் சொல்லிவிட்டால் கூட முதலில் அந்த ஆலோசகர் மீதுதான் குறையைச் சொல்லுகிறார்கள். இவ்வளவு ஏன், மருத்துவர்களிடம் அழைத்துப் போகும் போது கூட ஒரு பக்கம் செல்பேசியில் அல்லது மடிக்கணினியில் எதையாவது பார்த்துக்கொண்டு இருக்கும் பெற்றோர்களை அறிவீர்களா?
குழந்தைகளின் மனதில் என்ன ஓடுகிறது என்பது கூடத் தெரியாமல், நம் ஆசைகளை அவர்கள் மேல் திணித்து மேலும் மேலும் அழுத்தங்களைக் கூட்டுவது அவர்களின் இளமைப் பருவத்தை அபகரிப்பது போல.
சமூக கற்றல் என்பது வெறும் பாடப்புத்தகங்களில் மட்டும் அல்ல. குழந்தைகள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தை புரிந்துகொள்வதும், அதற்கு ஏற்ப தங்களை தகவமைத்துக்கொள்வதும்தான். வகுப்பறைகளில் நண்பர்களின் வருகை, ஆசிரியர்களின் அணுகுமுறை, பெற்றோரின் அரவணைப்பு – இவையெல்லாம் ஒரு குழந்தையின் கற்றலில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குழந்தைகளின் சமூக, உணர்வு நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்த வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
