- சமூக உணர்ச்சிக் கற்றல்
- தன்னைத் தெரிந்து கொள்ளல்
- பொறுப்புணர்வோடு முடிவுகளை எடுத்தல்
- இன்க்ளூசிவ் – உள்ளடக்கிய நிலை
- சமூக உணர்ச்சி கற்றலை வகுப்பறையில் ஒருங்கிணைக்கும் வழிகள்
- சமூக உணர்ச்சி கற்றலும் நேர்மறையான பள்ளி சூழலும்
- வயதுக்கேற்ற கல்வி முறை
- வாழ்க்கை: இடரின் நீர்நிலை, முயற்சியின் படகு
- பள்ளி-சமூகம்-பெற்றோர் கூட்டுறவு: நிலையான கல்வி மேம்பாட்டிற்கான அடிப்படை
- சமூகக் கற்றலில் சமூகத்தின் பொறுப்பு
- தெரிவுகள் அதிகம், முடிவு ஒன்று
- முடிவெடுத்தல், பொறுப்பேற்றல் மற்றும் சமூக கற்றல்
கல்வியின் வெற்றி என்பது வெறும் பாடப்புத்தகங்களிலும் வகுப்பறைகளிலும் மட்டும் அடைந்து விடக்கூடிய ஒன்றல்ல. அது ஒரு முழுமையான சமூக அனுபவமாக இருக்க வேண்டும். பள்ளிகள், குடும்பங்கள், மற்றும் சமூகம் ஆகியவையே இந்த அனுபவத்தின் மூலக்கூறுகள் ஆகும். இவை ஒன்றிணைந்து செயல்படும்போது மட்டுமே குழந்தைகளின் முழுமையான வளர்ச்சி சாத்தியமாகிறது.
குழந்தைகள் வசிக்கும் நகரம் அல்லது சமூகத்தின் அருகில் பள்ளிகள் இருப்பது முக்கியம். அப்போதுதான் அந்த சமூகத்தின் கலாசாரம், கலை, இனிய பின்புலத்தை அந்த பள்ளிகளும் பிரதிபலிக்க முடியும். அப்படி பிரதிபலிக்கும் பள்ளிகளால் மட்டுமே வெற்றிகரமாக இயங்க முடியும்.
இந்த ஒருங்கிணைவின் பின்னணியில் உள்ள அறிவியல் அடிப்படை என்னவென்றால், குழந்தைகள் தங்கள் அடையாளத்தையும் கலாசார வேர்களையும் பள்ளிக் கல்வியில் பார்க்கும்போது, அவர்களின் கற்றல் திறன் கணிசமாக மேம்படுகிறது. இது வெறும் கல்வியியல் கோட்பாடு மட்டுமல்ல, மனோவியல் ரீதியான நிலையான வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமைகிறது.

ஏனென்றால் பள்ளிகளும் சமூகமும் ஒன்றிணைந்து சமூக கற்றலை ஒருசேர பயிற்சி செய்ய முடிகிறது. இந்த இருவழி பங்குதார முயற்சிகளும் இருவழி கற்றலும் ஒரு மகிழ்ச்சியான சமுதாயத்தை உருவாக்குகிறது.
இந்த மாதிரியின் சிறப்பம்சம் என்னவென்றால், கற்றல் ஒரு ஒருதலைப்பட்ச செயல்முறையாக இல்லாமல் பரஸ்பர பரிமாற்றமாக மாறுகிறது. பள்ளிகள் சமூகத்திடமிருந்து கற்றுக்கொள்வதும், சமூகம் பள்ளிகளிடமிருந்து கற்றுக்கொள்வதும் இணையாக நடைபெறுகிறது.
2010, 2021 இல் ஆல்பிரைட், வைஸ்பர்க் செய்த ஆராய்ச்சிகளில் முறையான ஆராய்ச்சி முடிவுகள் கொண்ட திட்டங்கள் அதிக பயன் தருவதைக் குறிப்பிட்டிருக்கின்றனர். இந்த ஆராய்ச்சிகள் மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட நீண்ட கால ஆய்வுகள் இந்த கூட்டுறவு மாதிரியின் பயன்களை தெள்ளத்தெளிவாக நிரூபித்திருக்கின்றன.
இந்த ஆராய்ச்சிகள் பள்ளி-சமூக கூட்டுறவு திட்டங்களில் பங்கேற்கும் குழந்தைகளின் கல்வி சாதனை மட்டுமல்லாமல், அவர்களின் சமூக உணர்வு, தன்னம்பிக்கை, மற்றும் எதிர்கால வாழ்க்கை வாய்ப்புகளும் கணிசமாக மேம்படுகின்றன எனக் குறிப்பிடுகின்றன. அவர்கள் குழந்தைகளைப் பல ஆண்டுகள் தொடர்ந்து கவனித்து வெற்றியை உறுதி செய்த பின்னரே இதைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
குடும்பங்கள், பள்ளிகளின் பங்குதாரர்கள் அல்லது நண்பர்களாக உணரும்போது பள்ளியில் சொல்லித் தரப்படும் சமூக கற்றல் கொள்கைகளை புரிந்துகொள்கிறார்கள். இதனால், அதை வீட்டிலும் பயிற்சி செய்ய வழிவகை உண்டாகிறது. அதே போல் வீடுகளில் கலாசார அடிப்படையில் சொல்லித் தரப்படும் சில உயரிய சமூகக் கோட்பாடுகளை பள்ளிகளில் தயங்காமல் சொல்ல முடிகிறது. இதனால், அவற்றைப் பள்ளிகள் பின்பற்ற வழி உண்டாகின்றன.
இந்த ஒருங்கிணைவின் முக்கியமான அம்சம் என்னவென்றால், குழந்தைகள் வீட்டிலும் பள்ளியிலும் ஒரே மாதிரியான மதிப்புகளையும் கொள்கைகளையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. இது அவர்களின் ஆளுமை வளர்ச்சியில் குழப்பத்தை தவிர்த்து, நிலையான அடித்தளத்தை வழங்குகிறது.
சமூக கற்றல் எப்படி உறுதிப்பட்டிருக்கிறது என்பது இந்த கூட்டு முயற்சியின் பலனில் இருந்து தெரிகிறது. பள்ளியில் சொல்லித் தரப்படும் பாடங்கள் மற்றும் மதிப்புகள் வீடுகளில் மீண்டும் சொல்லித் தரப்படுகின்றன. அதே கருத்துகள் சமூகத்திலும் கடைப்பிடிக்கப்படுகின்றன. இந்த மூன்று தளங்களிலும் ஒரே செய்தி தொடர்ச்சியாக வலுவூட்டப்படுவதால், அது குழந்தைகளின் உள்ளத்தில் இன்னும் ஆழமாகப் பதிகிறது.
இந்த முப்பரிமாண வலுவூட்டல் முறை அறிவியல் ரீதியாக மிகவும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஒரே கருத்தை பல்வேறு சூழல்களில் மீண்டும் மீண்டும் கேட்கும்போது, அது நீண்ட கால நினைவகத்தில் வலுவாக பதிந்து, நடைமுறை வாழ்வில் பயன்படுத்தக்கூடிய திறனாக மாறுகிறது என்பதையே மனோவியல் ஆராய்ச்சியகளும் சுட்டுகின்றன..
எடுத்துக்காட்டாக, ஒரு குழந்தை பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி கற்றுக்கொள்கிறது. அதே நேரத்தில் வீட்டில் பெற்றோர்கள் அதே கருத்துகளை நடைமுறையில் காண்பிக்கிறார்கள். சமூகத்திலும் அதே மதிப்புகள் போற்றப்படுகின்றன. இப்படி மூன்று தளங்களிலும் ஒரே செய்தி கிடைக்கும்போது, அந்த குழந்தையின் மனதில் அது ஆழமான நம்பிக்கையாகவும் வாழ்க்கை முறையாகவும் மாறுகிறது.
வெறும் அறிவு சார்ந்த விஷயங்களுக்கு மட்டுமே இந்த வலுவூட்டல் முறை பயனுள்ளதல்ல. ஒழுக்கம், பண்பாடு, சமூக உணர்வு, தலைமைத்துவம் போன்ற வாழ்க்கை மதிப்புகளையும் வலுப்படுத்துவதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. குழந்தைகள் எங்கு சென்றாலும் ஒரே மாதிரியான நேர்மறையான செய்திகளை கேட்பதால், அவர்களில் குழப்பம் குறைந்து, தன்னம்பிக்கை அதிகரிக்கிறது.
எடுத்துக்காட்டாக, நற்றிணைப் பாடல் ஒன்று புன்னை மரம் ஒன்றை தங்கையாக உருவகப்படுத்தி வளர்ப்பதையும் காப்பதையும் சொல்லும் தமிழ் மரபை சொல்கிறது. இதைக் கற்று வளரும் குழந்தைகள் மரம் வெட்ட துணிவார்களா? இதைவிட பருவச் சூழல் பேணும் வழி சொல்லித் தர இயலுமா?
“விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
நெய்பெய் தீம்பால் பெய்து இனிது வளர்த்தது
நம்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று
அன்னை கூறினாள் புன்னையது நலனே”
இதைப் பள்ளிகளும் மீண்டும் ஒருமுறை வலியுறுத்திச் சொல்லலாம். இப்படிச் சொல்லும்போது குடும்பங்களும் தங்கள் மதிப்பை உணர்வார்கள். இந்தப் பாடலைச் சொல்லி பள்ளிகள் மரங்களின் இண்றியமைத் தன்மையை விளக்கும் போது தமிழ்மரபின் வழிவந்த பெற்றொர் பெருமை அடைவர். மேலும் ஈடுபாடுகொள்ளத் தூண்டும். மற்ற கலாசாரம் வழிவந்தவர்கள் அவர்கள் பாரம்பரிய பாடல்களைச் சொல்ல, அந்த இடமே இனிமையானதாக மாறும். கலாசார ஒற்றுமையை அறிய முற்படுவார்கள்.
இந்த நற்றிணைப் பாடல் வழியாக நாம் பார்க்கும் கல்வியியல் அணுகுமுறை என்னவென்றால், பாரம்பரிய ஞானத்தை நவீன சூழல் கல்வியுடன் இணைப்பது. இது வெறும் கலாசார பாதுகாப்பு மட்டுமல்ல, நடைமுறையில் சூழலியல் உணர்வை வளர்க்கும் ஒரு சக்திவாய்ந்த கருவியாகவும் செயல்படுகிறது.
பள்ளி-சமூக-பெற்றோர் கூட்டுறவில் பங்கேற்கும் பல்வேறு தரப்பினரின் இயல்புகளையும் பங்களிப்பு முறைகளையும் நாலடியார் ஒரு பாடல் மூலம் அருமையாக விளக்குகிறது:
“கடையாயார் நட்பிற் கமுகனையார்; ஏனை
இடையாயார் தெங்கின் அனையர்; – தலையாயார்
எண்ணரும் பெண்ணைபோன்று இட்டஞான்று இட்டதே,
தொன்மை யுடையார் தொடர்பு.”
இந்த பாடலின் கல்வியியல் விளக்கம் மிகவும் ஆழமானது. நட்புத் தன்மையில் கடையாயவர், நாள்தோறும் தண்ணீர் பாய்ச்சிப் பராமரிக்க உதவும் பாக்கு மரம் போல், நாள்தோறும் உதவி செய்தால்தான் பயன்படுவர். இவர்கள் தொடர்ச்சியான கவனிப்பும் ஊக்கமும் தேவைப்படும் பங்குதாரர்கள். பள்ளிக் கூட்டுறவில் இவர்கள் புதிதாக இணையும் பெற்றோர்களாகவோ அல்லது முதல் முறையாக சமூக நடவடிக்கைகளில் பங்கேற்கும் உறுப்பினர்களாகவோ இருக்கலாம்.
இடையாயவர், விட்டு விட்டு நீர் பாய்ச்சிக் கவனித்து வந்தால் உதவும் தென்னை மரம்போல அவ்வப்போது உதவி செய்தால் பயன்படுவர். இவர்கள் வேலை நிமித்தமோ அல்லது பிற கடமைகள் காரணமாகவோ தொடர்ச்சியாக பங்கேற்க இயலாதவர்கள். ஆனால் குறிப்பிட்ட நேரங்களில் அவர்களின் பங்களிப்பு மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கும்.
தொன்மைத் தொடர்பு பாராட்டும் தன்மையுடைய தலையாயவர், விதையிட்ட நாளில் வார்த்த தண்ணீரன்றிப் பிறகு ஒரு பராமரிப்பும் செய்யாமலே உதவும் மதிப்பு மிக்க பனைமரம் போல் பயன்படுவர். இவர்கள் ஒரு முறை உதவி செய்த பின்னர், அந்த நல்லுறவின் அடிப்படையில் தொடர்ந்து ஆதரவளிப்பவர்கள். இவர்கள் பொதுவாக அனுபவம் வாய்ந்த கல்வியாளர்களாகவோ, பழைய மாணவர்களாகவோ, அல்லது சமூக முன்னோடிகளாகவோ இருப்பார்கள்.
இந்த நாலடியார் பாடல் சொல்வது போல் சமூகம், பள்ளிகள், பெற்றோர் என இந்த கூட்டு முயற்சியில் பலவகை பங்குதாரர்கள் இருப்பார்கள். அவரவர் பணிப்பளு அறிந்து அதற்கேற்ப பங்கு கொள்ளும் திறனும் இருக்கும். அதையும் அறிந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த உணர்தல் நவீன கல்வி நிர்வாகத்தில் மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு பங்குதாரருக்கும் ஒரே மாதிரியான பொறுப்புகளை வழங்குவதற்கு பதிலாக, அவர்களின் இயல்பு மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பங்களிப்பை எதிர்பார்ப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பள்ளிகளும் குடும்பங்கள் ஏற்கெனவே பயன்படுத்தும் பாரம்பரிய சமூக கற்றல் வழிகாட்டிகளை அறிந்து அதில் காலத்துக்கேற்ற சில கோட்பாடுகளை தங்கள் திட்டங்களில் சேர்த்துக்கொள்ளலாம். இதைத்தான் ஆல்பிரைட்டும் வைஸ்பெர்க்கும் தங்கள் ஆய்வுகளில் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
இந்த நவீன அணுகுமுறை என்பது பாரம்பரியத்தை முழுவதுமாக நிராகரிப்பதோ அல்லது அதை மாற்றம் இல்லாமல் ஏற்றுக்கொள்வதோ அல்ல. மாறாக, பாரம்பரிய மதிப்புகளின் நல்ல அம்சங்களை நவீன கல்வியியல் முறைகளுடன் ஒருங்கிணைத்து புதிய பொருள்கொண்ட கல்வி அனுபவத்தை உருவாக்குவது.
ஆனால் இந்த நட்பு பங்குதாரர்களை உருவாக்குவது எளிதான காரியம் அல்ல. அதற்கு பல முன்னுதாரணங்கள், அதற்கான பள்ளிச் சூழல், பள்ளிகளின் மேலாளர்களின் இயல்பு, ஒத்துழைப்பு அவசியம்.
முதலாவதாக, நிறுவன மட்டத்தில் மாற்றம் தேவை. பள்ளி நிர்வாகம் பள்ளிகளை, வெறும் கல்வி வழங்கும் இடமாக மட்டும் பார்க்காமல், சமூக மையமாக செயல்படும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக, ஆசிரியர்கள் தங்கள் வேலையை வெறும் பாடம் நடத்துவது மட்டுமாக பார்க்காமல், கூடுதலாக வருங்கால சமூக மேம்பாட்டு முகவர்களாக தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.
மூன்றாவதாக, பெற்றோர்களும் சமூக உறுப்பினர்களும் பள்ளியை வெறும் குழந்தைகளை அனுப்பும் இடமாக மட்டும் பார்க்காமல், தங்கள் சொந்த கற்றல் மற்றும் வளர்ச்சிக்கான இடமாகவும் பார்க்க வேண்டும்.
இதை மேம்படுத்த பல பள்ளிகள் எளிய இணையவழி மென்பொருள்களை உருவாக்கி இருக்கின்றன. அவை சமூக உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்து பணி செய்ய வாய்ப்புகளை உருவாக்குகின்றன. சில புதிய திட்டங்களை உருவாக்கவும் வழி செய்கின்றன.
இந்த தொழில்நுட்ப தீர்வுகள் வெறும் தகவல் தொடர்பு சாதனங்களாக மட்டும் செயல்படவில்லை. அவை உண்மையான சமூக கட்டமைப்பை உருவாக்கும் கருவிகளாக மாறியிருக்கின்றன. உதாரணமாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிக்கவும், பள்ளி நடவடிக்கைகளில் நேரடியாக பங்கேற்கவும் இந்த மென்பொருள்கள் வழி செய்கின்றன.
நல்ல பயனுள்ள கற்கும் சூழ்நிலையை உருவாக்கும் திட்டம் (Building Equitable Learning Environments – BELE Framework) என்று அழைக்கப்படும். இது சமூக கற்றல் திட்டத்தின் கோட்பாடுகளுடன் இணைந்து செயல்படுகிறது.
இந்த BELE திட்டம் நான்கு முக்கியமான கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. முதலாவதாக, குடும்பங்களுக்கும் பள்ளி பணியாளர்களுக்கும் இடையே ஒரு கூட்டுறவு உண்டு, அதன் நோக்கம், மாணவர் வெற்றிக்கான ஒரு வரையறையை உருவாக்கி முன்னேறுவது. இரண்டாவதாக, குடும்பங்களும் பள்ளி பணியாளர்களும் சேர்ந்து மாணவர்கள் நலனுக்காக, கலாசாரம் மற்றும் பிற நம்பிக்கைகள் அடிப்படையில் பரஸ்பர நம்பிக்கை, புரிதல் மற்றும் பாராட்டுக்களை வளர்க்கும் அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்குகின்றனர்.
மூன்றாவதாக, பள்ளி பணியாளர்களும் பள்ளி நேர வெளி கூட்டாளர்களும் தகவல்களையும் வளங்களையும் பகிர்ந்துகொள்கின்றனர், மேலும் மாணவர் கற்றல் மற்றும் வளர்ச்சியை ஆதரிப்பதற்காக பள்ளிகள், வீடுகள் மற்றும் சமூகங்கள் முழுவதும் ஒன்றாக வேலை செய்கின்றனர். நான்காவதாக, குடும்பங்களும் சமூக உறுப்பினர்களும் பள்ளிகளை இணையாக வடிவமைத்து நிர்வகிக்கின்றனர், இதனால் கொள்கைகளும் நடைமுறைகளும் சமமானதாகவும் அனைத்து மாணவர்களையும் ஆதரிப்பதாகவும் இருக்கும்.
இந்த கூட்டுறவு மாதிரி(Model) வெறும் குறுகிய கால கல்வி மேம்பாட்டை மட்டும் குறிக்கவில்லை. இது சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பங்களிக்கிறது. குழந்தைகள் இந்த சூழலில் வளரும்போது, அவர்கள் சமூக பொறுப்புணர்வு கொண்ட குடிமக்களாக மாறுகின்றனர். அவர்கள் தங்கள் சமூகத்தின் பிரச்சினைகளை தங்கள் பிரச்சினைகளாக கருதி தீர்வு காண முயல்கின்றனர்.
இந்த நீண்ட கால பயன்கள் தனிநபர் மட்டத்தில் மட்டுமின்றி, சமூக மட்டத்திலும் தெரிகின்றன. கல்வி மட்டம் உயர்வது, வேலையின்மை குறைவது, குற்ற விகிதம் குறைவது, சமூக நல்லிணக்கம் அதிகரிப்பது போன்ற பல நேர்மறையான மாற்றங்கள் இந்த மாதிரியின்(model) விளைவாக உண்டாகின்றன.
இந்த கூட்டுறவு மாதிரியை மேலும் வலுப்படுத்த பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முதலாவதாக, கொள்கை மட்டத்தில் மாற்றங்கள் தேவை. அரசு கல்விக் கொள்கைகள் இந்த கூட்டுறவு அணுகுமுறையை ஊக்குவிக்கும் வகையில் இருக்க வேண்டும். இரண்டாவதாக, ஆசிரியர் பயிற்சி திட்டங்களில் சமூக ஈடுபாடு மற்றும் கூட்டுறவு முறைகள் குறித்த பயிற்சிகள் சேர்க்கப்பட வேண்டும்.
மூன்றாவதாக, தொடர்ச்சியான ஆராய்ச்சி மற்றும் மதிப்பீடு அவசியம். இந்த மாதிரிகள் எவ்வளவு பயனுள்ளவை, எங்கே மேம்பாடு தேவை என்பதை தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டே இருக்க வேண்டும். நான்காவதாக, வெற்றிகரமான மாதிரிகளை பிற பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யும் வழிகளை கண்டுபிடிக்க வேண்டும்.
பள்ளி-சமூக-பெற்றோர் கூட்டுறவு என்பது நவீன கல்வியின் அடிப்படைத் தேவையாக மாறியிருக்கிறது. இது வெறும் கல்வியியல் சோதனை அல்ல, சமூக முன்னேற்றத்திற்கான அத்தியாவசிய கருவியாகும். நம் பாரம்பரிய ஞானத்தையும் நவீன கல்வியியல் முறைகளையும் இணைத்து, குழந்தைகளுக்கு முழுமையான கல்வி அனுபவத்தை வழங்குவதே இந்த கூட்டுறவின் இலக்காகும்.
இந்த மாதிரியின் வெற்றி அனைவரின் பங்களிப்பையும் சார்ந்துள்ளது. பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூக உறுப்பினர்கள், மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் அனைவரும் இந்த நோக்கத்திற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் நமது குழந்தைகளுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும், அதே நேரத்தில் நமது சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் உறுதி செய்ய முடியும்.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
