இன்க்ளூசிவ் – உள்ளடக்கிய நிலை

This entry is part 4 of 12 in the series சமூக உணர்ச்சி

சமூக உணர்ச்சி கற்றலின் அடித்தளம் – 4

இதுவரை நாம் சமூக உணர்ச்சி கற்றலின் தன்னை அறிதல், முக்கிய முடிவுகள் எடுத்தல் பற்றித் தெரிந்து கொண்டோம். சமூக உணர்ச்சி கற்றல் இவைதானா, இவை மட்டும்தானா என்றால் இல்லை. இவை ஒரு முக்காலியின் மேல் ஏறி அமர்ந்திருக்கின்றன. அது என்ன என்றால், இன்க்ளூசிவ் என்ற உள்ளடக்கிய நிலை, இண்டெக்ரேஷன் என்ற ஒருங்கிணைப்பு, ஆதரவான சூழல் – அது சமூகமாக இருக்கலாம் அல்லது வகுப்பறையாக இருக்கலாம்.

உள்ளடக்கிய நிலையை எப்படித் தொடங்கலாம்? ஒரு விஷயம் மனதை முழுதும் ஆக்கிரமித்திருக்கிறதா(Mindful) அல்லது நீ கவனிக்கிற அளவுக்கு இருக்கிறதா (mind ful)என்பதுதான் ‘மைண்ட்ஃபுல்’ நிலை. இது வெறும் தியானம் அல்ல, மற்றவர்களின் உணர்வுகளையும் நிலைமைகளையும் கூர்ந்து கவனிப்பதும் கூட.

முதலில் மாணவர்களை அல்லது சமூக உறுப்பினர்களை அவர்களின் பெயர் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ளச் சொல்லலாம். அவர்களின் பெயரோடு தொடர்புள்ள ஒரு செய்தி, பெயரின் பொருள் அல்லது பூ அல்லது பழம் ஏதோ ஒன்றைச் சொல்லச் சொல்லலாம். உதாரணமாக, “என் பெயர் கமலா, தாமரைப்பூ என்று பொருள். என் அம்மா எனக்கு இந்தப் பெயரை வைத்தது தாமரை தண்ணீரில் இருந்தும் சுத்தமாக இருப்பது போல் நானும் இருக்க வேண்டும் என்று நினைத்து” என்று சொல்லலாம். அந்தப் பெயருக்கு ஏற்றவாறு மற்ற மொழிகளில் என்ன பொருள் என்று பேசலாம். இப்படி எல்லாரும் அறிமுகம் செய்துகொள்கையில், ஒருவர் மற்றவரின் பெயரை மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அடுத்த நாள் முதல் பெயர் சொல்லி வரவேற்க வேண்டும். இதுதான் உண்மையான மரியாதை.

ஆனால், அறிமுகம் செய்து பல கலாசார வேறுபாடுகளை உணர்ந்துகொண்டால் மட்டும் போதாது. மாறுபட்ட கலாசாரத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை அந்தக் குடும்பத்தில், சமூகத்தில், வகுப்பில் சேர்ந்தவர்களாக உணர்வதும் முக்கியம். இதைத்தான் ஆங்கிலத்தில் ‘பிலாங்கிங்’ என்கிறார்கள். இதன் பொருள் “நான் இங்கே சொந்தமானவன், என் தேவை இங்கே அவசியம், என் கருத்துகளுக்கு மதிப்பு இருக்கிறது” என்ற உணர்வு. இந்த உணர்வு தானாக வராது. அந்த உணர்வைக் கொண்டுவருவது அச்சமூகத்தில், வகுப்பில் பெரும்பான்மையினரின் பொறுப்பாக உள்ளது. சிறுபான்மையினர் தங்களை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்ற அழுத்தம் இருக்கக் கூடாது.

சமீபத்தில் பென்சில்வேனியாவில் ஒரு மருத்துவர் தன் மகனிடம் காலை உணவாக இட்லியைக் கொடுத்து அனுப்பியிருந்தார். ஆனால், மற்ற நண்பர்கள் கேலி செய்வார்கள் என அஞ்சி அந்தச் சிறுவன் உண்ணாமலே கொண்டுவந்துவிட்டான். தன் மகனிடம் உண்ணாமல் வருவதால் வரும் விளைவுகளை எடுத்துக் கூறிய மருத்துவர், “உன்னுடைய உணவு, உடை இது குறித்து நீ ஒருபோதும் அஞ்சத் தேவையில்லை” என்றும் கூறினார்.

மறுநாள் வகுப்பு ஆசிரியரிடம் பேசி ஒரு நாள் அனைத்துக் குழந்தைகளுக்கும் இட்லி தயார் செய்து எடுத்துச் சென்றார். அந்தக் குழந்தைகளின் பெற்றோரிடம் அது குறித்த விவரங்களைத் தெரிவித்த பின்னர்தான். வகுப்பில் அது பற்றிய போதுமான விவரங்களை ஓர் அச்சிட்டத் தாளில் கொடுத்து, எல்லாக் குழந்தைகளையும் சுவைக்கச் செய்தார். “இது தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவு, அரிசியும் உளுந்தும் கலந்து புளிக்கவைத்து ஆவியில் வேகவைக்கப்படுகிறது. இதில் புரதச்சத்தும் கார்போஹைட்ரேட்டும் நிறைய இருக்கிறது” என்று விளக்கினார்.

பின் சில குழந்தைகளிடம் “இந்த உணவு பிடிக்காவிட்டால் அதில் தவறில்லை” என்றும் சொன்னார். “ஓர் உணவு பிடிப்பதற்கும் பிடிக்காமல் இருப்பதற்கும் நம் சுவை அரும்புகள் காரணம். ஆனால் அது பற்றித் தெரியாமல் அதைக் கேலி செய்வது தவறு” என்றும், “அதனால் உங்கள் தோழன் உணவருந்தாமல் பசியோடு வீட்டிற்கு வர நேரிட்டது” என்றும் சொன்னார். “அதுபோல டாக்கோவை, பிட்சாவை, சாண்ட்விச்சுகளைப் பழகாத பிள்ளைகள் கேலி செய்தால் அவர்கள் எப்படி உணர்வார்கள்?” என்றும் கேட்டார். “நாம் எல்லோரும் வெவ்வேறு உணவுகளை சுவைத்துப் பார்த்து, பிடித்ததை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஒன்றைக் கேலி செய்யக் கூடாது” என்று தெளிவுபடுத്தினார்.

உணவுப் பொருட்கள் எப்படி இடத்துக்கு இடம் மாறுபடும் என்பதையும், சிலருக்குச் சில உணவுப் பொருள்கள் பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது என்பதையும் விளக்கினார். “ஆனால் ஒரு பொருளை அதன் சுவை அறியாமல் கேலி செய்வதும், இன்னொருவர் உணர்வைக் கேலி செய்வதும் வேறு” என விளக்கினார். இது உண்மையில் ஆசிரியரின் வேலைதான்.

இதன் இன்னொரு நிலையை நம் சமூகத்தில் காண முடியும். சமூகத்தில் கலாசாரத்தை ஏற்றுக்கொள்ள, அனுசரிக்கப் பலரும் பழகியிருக்கிறார்கள். ஆனால் சிலர் “நான் தாவர வகை உணவுகளை உண்ணுவதே ஒரு பெரிய மரியாதை” என்று பேசுவதைப் பணியிடங்களில் காணலாம். இது ஒருவிதத்தில் “நான் உங்களை ஏற்றுக்கொள்கிறேன்” என்ற பெருந்தன்மையைக் காட்டுவது போல் தோன்றினாலும், உண்மையில் இது ஒரு மேலாதிக்க மனப்பான்மை.

அதேபோல் சிலர் இந்து மதப் பெருமைகளை மட்டும் பேசுவதையும், இன்னும் சிலர் மதக் குறியீடுகளை அலுவலக அறைகளில் வலிந்து வைத்திருப்பதையும் காணலாம். “இது நம் கலாசாரம், இதை மதிக்க வேண்டும்” என்று சொல்வது, மற்ற கலாசாரங்களை மறைமுகமாக புறக்கணிப்பதுதான். எல்லா மதங்களுக்கும் இடம் கொடுக்கும் பொதுவான சூழல் உருவாக்குவதுதான் சரியான அணுகுமுறை. இதுவும் கூடத் தவறுதான்.

நம் நாட்டில் பல மாநிலங்களில் இருந்து வேலைக்கு வருபவர்கள் தங்கள் மொழியில் பேசும்போது, “இங்கே வந்தால் இங்கே உள்ள மொழி பேசு” என்று சொல்வது கூட ஒரு விதமான புறக்கணிப்புதான். அவர்கள் தங்கள் தாய்மொழியில் பேசும் உரிமை உண்டு. ஆனால் பொதுவான சூழலில் எல்லோரும் புரிந்துகொள்ளும் மொழியில் பேசுவது மரியாதை.

உண்மையான உள்ளடக்கிய நிலை என்பது எல்லோரும் தங்களை அந்தச் சூழலில் வீட்டில் இருப்பது போல் உணர வேண்டும். அவர்களின் கலாசார அடையாளங்களை மதிக்க வேண்டும், ஆனால் அதை மற்றவர் மீது திணிக்கக் கூடாது. வேறுபாடுகளைக் கொண்டாட வேண்டும், ஆனால் அவை பிரிவினையாக மாறக் கூடாது.

இந்த மாற்றம் ஒரே நாளில் நடக்காது. முதலில் நம்மில் இருக்கும் முன்முடிவுகளை, பழைய எண்ணங்களை கேள்விக்குள்ளாக்க வேண்டும். “இது எப்போதும் இப்படித்தான்” என்ற சிந்தனையிலிருந்து வெளியே வர வேண்டும். புதிய கலாசாரங்களிலிருந்து நம்மால் கற்றுக்கொள்ள முடியும் என்ற மனப்பான்மை வேண்டும்.

ஆசிரியர்கள், நிர்வாகிகள், சமூகத் தலைவர்கள் இந்த மாற்றத்திற்கு முன்னணியில் நிற்க வேண்டும். அவர்கள் முன்மாதிரியாக இருந்தால்தான் மற்றவர்கள் பின்பற்றுவார்கள். குழந்தைகளுக்கு இது கற்றுக்கொடுக்கப்பட்டால், அடுத்த தலைமுறையில் இது இயல்பான நடைமுறையாக மாறும். இதுதான் சமூக உணர்ச்சி கற்றலின் உண்மையான அடித்தளம்.

சமூக உணர்ச்சி

பொறுப்புணர்வோடு முடிவுகளை எடுத்தல் சமூக உணர்ச்சி கற்றலை வகுப்பறையில் ஒருங்கிணைக்கும் வழிகள்

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.