மூலம் : கோவிலன்
ஆங்கிலத்தில் : ஏ.ஜே.தாமஸ்
தமிழாக்கம் : தி.இரா.மீனா
ஓர் ஐந்நூறு ரூபாய்த் தலைவலியை நான் எதிர் கொண்டிருக்கிறேன். என் சட்டைப் பையில் ஐந்நூறு ரூபாய் இருக்கிறது. பையிலிருக்கும் அந்த ஐந்நூறு ரூபாயில்தான் நான் செலவு செய்தாக வேண்டும்! அந்தப் பணம் என்னிடம் வருவதற்கு முன்பே அதற்கான செலவுப் பட்டியல் என்னிடமிருந்தது. எல்லா பாக்கிகளையும் நான் முடித்தாக வேண்டும். இரவு முழுவதும் காசு, பணம், பற்றி யோசித்து ஒரு கணக்கு போட்டு வைத்திருந்தேன்.
’எப்போது திரும்பி வருவீர்கள் அப்பா?’ என்று காலையில் எழுந்ததும் சுஜா என்னிடம் கேட்டாள்.
’எப்போது வர வேண்டுமென்று தோன்றுகிறதோ அப்போது’
எப்போதும் எனக்கு அவள் தரும் கடுங் காப்பியைத் தரவில்லை. பதில் சொல்லிய போது நான் என் எரிச்சலை வெளிப்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக ’உனக்கு என்ன வேண்டும்’ என்று கேட்டேன்.
’எனக்கு ஒரு ரிப்பன் வாங்கி வாருங்கள்’ என்றாள்.
வீடு தீப்பற்றி எரியும் போது, தலைமுடி நாடா கருகி விட்டதென்று அவள் புலம்புகிறாள். ஒத்த வகையான பெண்ணினம்! ’இப்போது இல்லை.முதலில் சரனின் அறுவை சிகிச்சை முடியட்டும்’ என்று சொன்னேன்.
’எப்போதும் நீங்கள் அவனைப் பற்றித்தான் கவலைப் படுவீர்கள் அப்பா. ரிப்பனின் விலை நாப்பது பைசாதான்’ அழுதாள்.
செய்ய வேண்டிய செலவுகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் என்னிடமில்லை. ஐந்நூறு ரூபாய் நோட்டைச் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு நான் பஸ் நிலையத்துக்கு நடந்த போது எனக்கு ரிப்பனைப் பற்றிய நினைவு இல்லை. புறப்படப் போகும் பஸ்சில் நான் ஏறியாக வேண்டும். என் சட்டைப் பையில் ஐந்நூறு ரூபாய் இருக்கிறது.

நடைபாதையில் எப்போதுமில்லாத அளவுக்கு ஜனக் கூட்டம் நிரம்பி வழிந்தது. அந்தக் கூட்டத்தில் யார் என் பின்னால் வருகிறார்கள், உடன் வருகிறார்கள், அல்லது எதிரில் வருகிறார்கள்? சிட்பண்ட் ஆபீஸ் கவுண்டரில் பணத்தை வாங்கி எண்ணிக் கொண்டிருந்த என்னை யார் கண்காணித்தார்கள்?
வேகமாக நான் நடந்த போது, என் கையால் பாக்கெட்டை மூடிக் கொண்டிருந்தேன். இடது மார்புப் பகுதியில் பாக்கெட்டுக்களை வைத்துத் தைத்திருந்த டெய்லரைச் சபித்தேன். ஐயோ,இந்தக் குடை வேறு! வலது கையால் குடையைத் தூக்கித்தான் எனக்குப் பழக்கம். நான் ஓர் இதய நோயாளியென்பதால், பாக்கெட்டை என் கையால் முழுவதுமாக மூட முடியவில்லை.பஸ்சிலேறி இருக்கையில் உட்கார்ந்த பிறகே மூச்சு விட முடிந்தது.
’பணம் கொண்டு வாருங்கள். மற்றதெல்லாம் ஆண்டவன் கையில்!’ என்று மதர் சுப்பீரியர் சொன்னார்.
’சிறுநீரகக் கல் இருக்கிறது’ என்று டாக்டர் சொன்னார்.
ஆஸ்பத்திரி அலுவலகத்திலிருந்து வெளியே வந்தவுடன் ’அப்படியென்றால் என்ன’ என்று சுரன் கேட்டான். ஒளிவட்டம் தன் தலையைச் சுற்றியிருக்க, உலகத்தைக் காக்க திரிசூலத்தைத் தன் கையில் வைத்தபடி புனித வளனார் நிற்கிறாரா? தாமரைக் குளத்தில் இருக்கும் நீர் வீழ்ச்சிக்குத் தண்ணீர் எங்கிருந்து வருகிறது? ஆஸ்பத்திரி கேட்டைத் தாண்டியவுடன் அவன் கேள்விகள் தொடர்ந்து வந்தன.
பள்ளத்தாக்கு முழுவதையும் சுற்றியதாக ஆஸ்பத்திரி அமைந்திருந்தது. நடந்து மலையின் சாலையை அடைவதற்குள் சுரனுக்கு இரைத்தது.
’மெதுவாகப் போங்கள் அப்பா!’ என்றான்.
நான் மெதுவாக நடந்தபடியே அவனுக்குப் பழைய கதைகளைச் சொன்னேன்.அந்த நாட்களில் சாலை மண் பாதையாக இருந்தது.. மனிதன் ஒரு குரங்காக இருந்தான்!நான் என்ன சொல்ல வந்தேனென்றால்…
எதையாவது சொல்ல வேண்டுமென்று விரும்பினேன். நான் அதைச் சொல்லத் தொடங்கும் போது, அது நான் என்ன சொல்ல வந்தேனோ அதுவாக இருக்காது.
அந்த நாட்களில் மார்க்கெட்டிலிருந்து கன்னிப் பாலம் செல்லும் வழி வெறும் கயிறு போன்ற மண் பாதைதான். இந்த இடம் பற்றி ஏதோ ஓர் அச்சமுண்டு. வைகறை அல்லது நண்பகல் அல்லது அந்தி நேரங்களில் இந்தப் பாதையில் போவதை மக்கள் தவிர்ப்பார்கள். அந்த வழியில் போகும் எந்த வழிப்போக்கனுக்கும் மூச்சு முட்டும் தன்மை ஏற்படும். இப்போதிருக்கும் இந்தப் பெரிய குளத்தை அடைந்த பிறகு நடுங்கும் குரலில் ’ஓ..காளி!’ என்று சொல்லிக் கொள்வான்.
அந்த வழிப்போக்கன் மேலே ஓர் அடி எடுத்து வைக்க வேண்டுமென்றாலும், அவனுக்கு ஒரு பதில் கிடைத்தாக வேண்டும். அந்தப் பள்ளத்தாக்கை அவன் கடக்கும் போது, அவனது குரல் காளிக்குக் கேட்கவில்லையா? வழிப் போக்கனுக்கு அது பற்றிய நிச்சயமில்லை.
அவன் இரண்டாவது முறையாகக் கூப்பிடுவான்: ’காள்யே!’ குளத்திலுள்ள காளி எங்கே போயிருக்கிறாள்? அவன் காத்திருக்கும் போது அவனுக்கு பதில் கிடைத்து விடும். ஒரு நிறைவோடு அவளை மூன்றாம் முறை அழைத்து விட்டு காணிக்கை தருவான். அவனுடைய அழைப்பும், அதன் எதிர் முழக்கமும் இணைந்து பள்ளத்தாக்கில் அவன் மேலே நடக்கும் போது எதிரொலிக்கும். அவனுக்கு வியர்க்கும். குளத்திலுள்ள காளி அவனைப் பின் தொடர்கிறாளா?
’நீங்கள் எங்கே நின்று கொண்டு காளியைக் கூப்பிட்டீர்கள்?’ சுரன் கேட்டான்.
’எனக்கு ஞாபகமில்லை’
கன்னிகா ஸ்திரீகளுக்குச் சொந்தமான ஆஸ்பத்திரி, கன்னி மடம் என்று இப்போதிருக்கிற ஆஸ்பத்திரி சுவர்களுக்குள் அந்தப் பாதை அடங்கி விட்டது. அந்த நாட்களிலிருந்த பள்ளத்தாக்கு என்பது இப்போதில்லை.’நான் காளியைக் கூப்பிட விரும்புகிறேன்’ சுரன் சொன்னான். அது என் காதில் விழாதது போல’மரியாதைக்குரிய ஒரு கிறித்தவ குரு இந்தப் பள்ளத்தாக்கிற்கு வந்தார்’ என்று ஆரம்பித்தேன்.
’நான் காளியைக் கூப்பிட விரும்புகிறேன்’ சுரன் வற்புறுத்தினான்.
’வேண்டாம், வேண்டாம்! நீ பயந்து விடுவாய்!’
’உங்களுக்கு எப்போதும் பயம்தான் அப்பா’ எரிச்சலோடு சொன்னான். எனது பயம் அவன் நோய் பற்றியது.
’அறுவை சிகிச்சை மூலம் கல்லை அகற்றுவதில் தொண்ணூறு சதவிகிதம் வெற்றி கிடைக்கலாம். பத்து சதவிகிதம் இழப்பு ஏற்படக் கூடிய கட்டத்திற்கு உங்கள் மகன் வர மாட்டாரென்று நம்புவோம்’ என்று டாக்டர் சொன்னார். பிறகு ஏன் நான் குருவின் கதையை சுரனுக்குச் சொல்ல வேண்டும்? அவர்தான் ஒரு மருத்துவமனை, ஒரு கன்னிமடம்,ஒரு சர்ச் ஆகியவற்றை காளியின் குளம் இருந்த இடத்தில் உருவாக்கியவர். அவரும் ஒரு காலத்தில் சிறுவனாக இருந்தவர்தான். நானும் கூட.
ஆஸ்பத்திரியின் முன்னால் இருந்த குளத்தினருகே நின்றுகொண்டு’ இதுதான் அந்தக் குளமா?’ சுரன் கேட்டான்.
’இல்லை இது ஒரு குளமில்லை. வெறும் கான்கிரீட்தான்’
செம்மண் நிலச் சூழலில் வளர்ந்த எனக்கு கான்கிரீட் அமைப்பில் வளர்ந்த குழந்தைக்கு எப்படி விவரிப்பதென எனக்குத் தெரியவில்லை.
இந்தப் பாதையில் ஓர் ஓடை இருந்தது. அங்குள்ள மரத்தின் கிளை ஆற்றின் குறுக்கே ஒரு பாலமாய் நின்றது. கன்னிப் பாலம்–முதல் பாலம் என்பது கனிப் பாலமாக காலப் போக்கில் மாறி விட்டது. அந்த நாட்களில் நோயாளிகளை ஏற்றிக் கொண்டு அந்தப் பொதுப் பாதையை ஒட்டி வாகனங்கள் செல்லும்.
அந்த இடத்திலிருந்து வெளியே வந்ததும், மூலையிலிருந்த டாக்டரின் அறையில் திரைச் சீலைக்குப் பின்னால் கையை நீட்டி ’அது என்ன ’என்று சுரன் கேட்டான்.
சுருளோடு இருந்த பெட்டியைச் சுவற்றில் பதிந்திருக்கும்படியாக டாக்டர் இணைத்திருந்தார். ஒரு மஞ்சள் விளக்கு அந்தப் பெட்டியில் வெளிச்சம் தந்து
கொண்டிருந்தது. கருமையான படத்தில் வெள்ளைச் சுவடுகள் தெரிந்தன.
’கற்கள் இருக்கின்றன’ என்று டாக்டர் சொன்னார்.
ஆனால் ராமு வாத்தியார் ’சுரனுக்கு இரத்தப் பித்தம் இருக்கிறது. நான்கு சின்ன வெங்காயத் துண்டுகளை ஓர் இரும்புப் பாத்திரத்தில் புளித்த மோரில் இரவில் ஊற வைக்க வேண்டும். காலையில் முகம், கை கால் கழுவி விட்டு அதைக் கூறுகளாக்கி, மோருடன் கலந்து குடித்து விட வேண்டும். இதை ஏழு நாட்கள் செய்ய வேண்டும். இரத்தப் போக்கு நின்று விடுமென்று வழக்காறு சொல்கிறது’ என்றார்.
’கடவுள் நமக்கு ஒரே ஒரு மகனைக் கொடுத்திருக்கிறார். மனிதர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யட்டும்’ என்று சொல்லி சுரனின் அம்மா அழுதாள்.
’அது மைக்ரோஸ் கோப்பா?” சுரன் கேட்டான். நாங்கள் பரிசோதனைச் சாலையின் முன்னால் நின்றிருந்தோம்.
’இது உங்கள் மகனா? சிவப்பணுக்கள் இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது’
டெஸ்ட் ரிப்போர்ட்டை எழுதிய சிஸ்டர் எங்களருகில் வந்தாள்.
’நான் அதைப் பார்க்க வேண்டும்’ சுரன் கேட்டான்.
’உன் உடம்பிலிருக்கிற எல்லாவற்றையும் உன்னால் பார்க்க முடியாது’ சிஸ்டர் சிரித்தாள்.
மடியிலிருந்து இழுக்கப்பட்ட ஒரு கன்று போல சுரன் தவித்தான்.
’அது..’
மனித உடம்பின் தாது வளங்களை ஆராய்கிற சிஸ்டர் சிரித்தபடி அவன் ஆன்மாவிற்குள் நுழைந்தாள். அவள் குரல் நெஞ்சில் ஒலியலைகளை ஏற்படுத்தியது.
’அவன் மைக்ரோ ஸ்கோப்பைப் பார்க்க விரும்புகிறானா?அவன் பார்க்கட்டுமே. ஒரு வேளை..’ என்று நான் சொன்னேன்.
சிஸ்டர், ஏன் உங்கள் வழக்கமான உடையிலிருந்து மாறினீர்கள்? ஏன் இந்த கன்னிகா ஸ்திரி தன் ஆன்மீக வாழ்க்கைக்கான கண்டிப்புகளின் கனத்திலிருந்து சுரனின் நல்வாழ்விற்காகப் பதட்டம் கொள்ள வேண்டும்?
எக்ஸ்ரே அறையின் கதவு மூடியிருந்தது.
’இது தனிப்பலகையான ஒற்றைக் கதவா?’ சுரன் கேட்டான்.
சிறுவனின் இடைவிடாத கேள்விகளால் அலுப்படைந்தது போல எக்ஸ்ரே அறையின் சிஸ்டர் பதில் சொன்னாள். ’நீ ஒரு மக்குப் பையன். கதிர்கள் சூரியன் ,சந்திரன், நட்சத்திரங்கள் அல்லது மின்மினிப்பூச்சிகள் ஆகியவற்றிலிருந்து மட்டும் வருவதில்லை.. உன் கண்களும் கதிர்களை வெளிப்படுத்தும். கண்மூடித்தனங்களை விட்டு விடு! இங்கே, ஒளியின் மூலம் மின்சாரம். உன் டவுசரைக் கழற்ற வேண்டும். இந்த முண்டுவைச் சுற்றிக் கொள். முண்டை எப்படி உடுத்திக் கொள்ள வேண்டுமென்று உனக்குத் தெரியாதா? ஒளியின் மூலத்திலிருந்து வெளி வரும் நுண்கதிர்கள் .. இங்கு பரவிக் கிடக்கின்றன’
கருவி கொண்டு வரப்பட்ட பிறகு ’அவன் இடுப்பில் கடப்பட்டிருக்கும் தாயத்து இன்னும் அவிழ்க்கப்படவில்லை! ’ சிஸ்டர் கத்தினாள்.
’அது எனக்குத் தெரியாது. நீங்கள் என்னிடம் சொல்லியிருக்க வேண்டும். சிஸ்டர், எங்கள் பகுதியில், தென்னை மரம் முதல் பூ விடும் போது, அல்லது முதல் பூக் கொத்து வரும் போது கூட, நாங்கள் அடி மரத்தில் ஒரு இடுப்புப் பட்டை கட்டுவோம். உங்கள் இடையில் கூட நூல் கட்டக் கூடிய ஒரு நாள் வரலாம்’
டாக்டர் ஒளிர் கருவியில் கல்லைக் காண முயன்று கொண்டிருந்த போது,நான் பார்த்தது.. பிரபஞ்சத்தைச் சுற்றிய மூலம்…இல்லை, அது பிரபஞ்சமில்லை. திரையில் தெரிந்த அந்த இருட்டுப் படத்தில், சுற்றுப் பாதை சுழல்களில் என் மகனின் நிர்வாண உருவம்!
’திங்கள் அல்லது வியாழக் கிழமையன்று அவனை அட்மிட் செய்து விடுங்கள். செவ்வாயும், வெள்ளியும் அறுவைச் சிகிச்சைக்கான நாட்கள்’
எனக்குத் தாகமாக இருக்கிறது.
பத்து பைசா…குளிர் தண்ணீர்.. யார் தாகமாக இருந்தாலும்…பத்து பைசா. என் ஐந்நூறு ரூபாய். பணம் என் பாக்கெட்டில் இருந்தது. நான் இது போலத் தூங்கினால்..கடவுளே! உட்கார்ந்து கொண்டு,சட்டைப் பாக்கெட்டை அழுத்திப் பிடித்தேன்.
நாளைதான் குலுக்கல் தினம்…கேரள அரசு லாட்டரி. ஒரே ஒரு ரூபாயில் ஒரு லட்சம் வெல்லலாம்!
’எனக்கு ஒரு ரிப்பன் வேண்டும்’ சுஜா கேட்டாள்.
எனக்குத் தாகமாக இருக்கிறது.
குளிர் தண்ணீர் ..பத்துப் பைசாதான்.
’எங்கே போக வேண்டும்?’ கண்டக்டர் கேட்டார்.
’என்னையா கேட்கிறீர்கள்?”
கிடிக்..கிடிக்…(கண்டக்டர் மணி அடித்தார்)
’தூங்கிக் கொண்டிருக்கிறீர்களா? டிக்கெட்டை வாங்கி விட்டுத் தூங்குங்கள். தூங்கக் காசு கிடையாது. எங்கே போக வேண்டும்? சில்லறை கொடுங்கள்…’என்ன ஆனாலும் ஐந்நூறு ரூபாயை மாற்றக் கூடாது என்று உறுதியாக இருந்ததால் சில்லறை வைத்திருந்தேன்.
பஸ் நிரம்பி விடுமென்று எனக்குத் தெரியவில்லை. நான் இது போலத் தூங்கி விட்டால்,கைப் பிடியை மீறிக் கொண்டு பின்னாலிருந்து யாருடைய கையும் நீண்டு என் பாக்கெட்டைத் தொட முடியாது.
பஸ் நகரத் தொடங்கிய போது சில நடைபாதை வியாபாரிகள் நீளமான ரிப்பன்களை கையில் வைத்து பறக்க விட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.
என்னைத் தூண்டாதீர்கள்! இந்த ஐந்நூறு ரூபாயிலிருந்து எதுவும் செலவழிக்க மாட்டேன்!
ஜனங்களையும், சாமான்களையும் ஏற்றிக் கொண்டு நடக்கும் வேகத்தில்தான் பஸ் நகர்ந்து அடுத்த ஸ்டாப்பில் நின்றது. ஆனால் என் கண்கள் மஞ்சள் நிற வெளிச்சமான எக்ஸ்ரே ஒளி பிழம்பால் நிறைந்திருந்தன. கருப்பான அந்தப் படத்தைக் கழுவியவுடன் தெரிந்த வெள்ளை வடிவங்கள் மிகத் தெளிவாகத் தெரிந்தன.
இதுதான் அந்தக் கல்.
நாளை வியாழக்கிழமை.
வியாழக்கிழமைக்குப் பிறகு வெள்ளிக் கிழமை (விரல்களால் எண்ணி..)நான் அவ்வளவாக அதை நம்புவதில்லை. வியாழக் கிழமையை தவறாகப் நினைத்து விடக் கூடாது.. வளைந்த விரலை நிமிர்த்தி, விரல்களை மடக்குவது. நான் விரல் நுனிகளை அழுத்திக் கொண்டிருந்தேன்.
வெள்ளிக் கிழமை.
டாக்டரின் கத்தியும் ஒரு கல்லும் மோதுவது. என் கண்களிலில் இருந்து
தீப்பொறிகள் பறந்தன.
ஆபரேஷன் தியேட்டரில் நீங்கள் இருப்பீர்களா,சிஸ்டர்? நான் உள்ளே வந்து பார்க்கலாமா?
’ஆமாம். பார்க்கலாம். ஆனால் வருவதற்குள் முடிந்து விடும்’
பஸ்சில் உட்கார்ந்தபடி நான் நடைபாதையில் கூடியிருக்கும் மனிதர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நடைபாதை வியாபாரிகளும், கூட்டமும் ஆறடி நிலம், காற்று,அவர்களின் வாழ்க்கை ஆகியவற்றிற்காக தங்களுக்குள் கடுமையாகப் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒருவரால் மண்ணைத் தொட முடியும் போது ,மற்றவரால் அழுத்தமாகக் கால் பதிக்க முடியவில்லை.ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எத்தனை மனிதர்கள் அந்த இடத்தைக் கடப்பார்கள் என்று அறியும் என் முயற்சி வீணானது. மின்மத்தை அளக்கும் ஓர் அனைத்துலக அலகு, மின் சக்தி.. ஆனால் உயிர்கள், மனிதர்கள் மின்சாரமல்ல! அணுத் தொகுப்புகளின் பரவல் பிரம்மாண்டமான பிரபஞ்சம் — ஒவ்வொரு உயிரும், மனிதனும் அமைதியற்ற அணு. அணுத் தொகுப்பில் மின்சாரத்தின் தளராத சுழற்சி போல உயிர்கள், மனிதர்கள் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் சாதிக்க நினைக்கிறார்கள். நான் என்னுடைய பாதையிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறேன்— ஆஸ்பத்திரியில், சிட்பண்ட் அலுவலகத்தில், ரிப்பனில், கனிப் பாலத்தில் ஆபரேஷன் தியேட்டரில் என்று. பஸ் மீண்டும் நின்றது. எனக்கு முன்னால், நடைபாதையில்,ஓர் இளம் ஜோடி. அந்த இளைஞன் பேசிக் கொண்டிருந்தான். அவன் நல்ல உயரம். அவளுடைய நீண்ட கழுத்து.. வட்டமான கழுத்து, அவன் உதடுகளால் அதை எட்ட முடியவில்லை. அவன் என்ன சொல்கிறானென்று அவள் கவனிக்கவில்லை. பஸ் இன்னும் கொஞ்சம் முன்னால் நின்றிருக்கலாம். அவர்களால் இன்னும் கொஞ்சம் இந்தப் பக்கம் நகர்ந்திருக்க முடியும். அப்படியிருந்திருந்தால், அவன் என்ன பேசினான் என்பதை நானும் கேட்டிருக்க முடியும். அவன் உறுதியான உதடுகளிலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் அவளுடைய கண்களை நிறைத்து, தொண்டையின் நீல நரம்புகளைத் துடிக்க வைத்து.. தொண்டைக்குக் கீழே, ரவிக்கையின் உள்ளே உருளைக் கலன் உருளுவது போல நெஞ்சும், விலா எலும்புகளும் மேலும் கீழும் குலுங்கின. தொடர்ந்து அவள் சிரித்துக் கொண்டிருந்தாள். சிவப்பு ரவிக்கையின் பின்னணியில் மூலையில் சிவப்பு ரிப்பன் பறந்து கொண்டிருந்தது.
’சுரனின் அறுவைச் சிகிச்சை முடியட்டும்’
பாக்கிகள் எல்லாம் இன்று கட்டப்பட்டு விட்டன. இன்று புதன் கிழமை. கடைசி வியாழக் கிழமை.. விரல்களின் இணைப்பு எனக்கு மீண்டும் ரூபாய்கணக்கைப் போட வைத்தது. பஸ் நகர்ந்த போது நான் விழித்துக் கொண்டேன். அந்த ஜோடி அதே இடத்திலேயே நின்றிருந்தனர். அவர்களுக்குப் பின்னால் தடையில்லாமல் ஜனக் கூட்டம் பெருகிக் கொண்டிருந்தது. கடைகளில் இருந்த வாடிக்கையாளர்கள் தாங்கள் நின்றிருந்த குறுகிய இடத்திலிருந்து மேலும் கீழுமாக குதித்துக் கொண்டிருக்க, அவர்கள் அமைதியாக நின்று கொண்டிருந்தனர். அவர்களின் முன்னால் ஒரு பஸ். தங்கள் நேரத்தை வீணாக்கி விட்டதாகச் சொல்லிப் பயணிகள் கண்டக்டருக்குச் சாபம் கொடுத்துக் கொண்டிருந்தனர். இருப்பினும் அவர்கள் உலகம் பேரானந்தமானதாக இருந்தது. வண்டிகளின் கலவைக்கு அந்தத் தெருவே சாட்சி சொன்னது. தெருவிலிருந்த மைதானத்திலிருந்து ஒலி பெருக்கிகளின் காதைக் கிழிக்கும் சப்தம் வந்து கொண்டிருந்தது. இருப்பினும் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். அந்த இளம்பெண் மேல் நோக்கி வார்த்தைகளை அவனுக்கு அனுப்பினாள். அவள் உதடுகளிலிருந்து வரும் வார்த்தைகள் வாடி விடக் கூடாது அல்லது காற்றில் கலந்து விடக் கூடாதென்பதற்காக அவன் குனிந்து அவற்றை கிரகித்துக் கொண்டான். அவள் நெஞ்சும், விலா எலும்புகளும் அமைதியற்றவையாக ஆழமான உணர்வுகளில் நெளிந்தன. அந்த உணர்வுகளின் சக்தி இளைஞனின் கண்களில் சூரியனாக எழுவதை நான் பார்த்தேன். ஆனால் பஸ் நகர்ந்தது.
ரத்தமும் ,சதையுமாக அந்தச் சக்தி, வாழ்க்கைப் புள்ளிகள் குருதியில் இருப்பது போல.. அணுவின் வாழ்க்கைப் பயணத்தில், ஒரு கல் தடையாய் உருவானது.
இழப்பு ஏற்படக் கூடிய பத்து சதவிகித நோயாளிகளில் ஒருவனாக உங்கள் மகன் இருக்கக் கூடாதென்று நம்புவோம்..மகன் என்பது மட்டுமில்லை இந்தக் காளியின் பள்ளத்தாக்கில், கனிப் பாலத்தில் இந்த நகரத்தில் அவனுடைய தொடர் பயணம்.. என்னை விடுத்து அவனால் பார்க்கப்பட வேண்டிய காட்சிகள்…அவனுக்கு மட்டுமே இருக்க வேண்டியவை..
பஸ் திரும்பவும் நின்றது.
பொருட்களைப், பளுவைச் சுமந்து மண்ணில் ஓடும் இந்தக் கப்பல் இணைப்பு உப்பங்கழி.
எனக்கு ஒரு ரிப்பன்.
பின்னப்பட்ட சடையில் இருந்த சிவப்பு ரிப்பன்..எவ்வளவோ கஷ்டப்பட்டு முயற்சித்தும் அதைப் பார்க்க முடியாமல் போனது.
பஸ் மீண்டும் நகர்ந்தது. அடுத்த வளைவில் திடீரென நின்று விட்டது. பஸ்சின் உள்ளிருந்தோ அல்லது வெளியிலோ யாரோ கூக்குரலிட்டனர். நடைபாதைக் கூட்டமும், வியாபாரிகளும் அப்படியே உறைந்து…அவர்கள் விம்மிக் கொண்டு நின்றனர்.. சலித்துக் கொண்டே நான் மேலே பார்த்தேன். ஆனால் என் ஐந்நூறு ரூபாய்! பயணிகள் இறங்கினார்கள். என் ஐந்நூறு ரூபாயைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். இப்போது பஸ்சில் என்னைத் தவிர யாருமில்லை. நானும் இறங்க வேண்டும். இறங்கிக் கீழே பார்த்த போது…
அந்த இளைஞன்..அவனது மடியில்… பின்னல்.. ரத்தத்தில் தோய்ந்திருந்த,
சிவப்பு ரிப்பனைப் பார்க்க முடிந்தது. ஆனால் இப்போது அந்தச் சிவப்பு ரவிக்கை இயக்கமற்றிருந்தது.
அவள் உடல் தெருவில் கிடத்தப்பட்டிருக்க, தலை அவன் மடியில்..இளைஞன் அவளை நீவி, தழுவி, கட்டிக் கொண்டான். ஆனால் சூரியன் அவன் முகத்தில் அஸ்தமித்திருந்தான்.
கூட்டம் தன் வேகத்தை இழந்து, ஒரு விபத்துக் கொடுமையின் அழுகையாய்..
அவர்கள் சாலையைக் கடந்த போது அவர்களின் பேரானந்த உலகில் திளைத்து..
அந்த இளைஞன், தன் கண்களிலிருந்து வெளிப்பட்ட வெம்மைக் கதிர்களினூடே அவள் வாழ்க்கையை, அவளுடல் முழுவதும் தடவித் தேடினான்.
நான் என் சட்டைப் பையைத் தடவினேன்! நல்லதுதான்!
நான் சிரிப்பதை யாராவது கவனித்தார்களா? யாராலும் மனதைப் பார்க்க முடியாது.
என் மனதில்..
இது ஒரு மங்களகரமான சகுனம்!
ஒரு சடலம்!
காளியே!
நன்றி : The Greatest Malayalam Stories Ever Told A.J.Thomas , Aleph Company ,India
2023மலையாள இலக்கியப் படைப்பாசிரியரான கோவிலன் சமகால இந்தியப் படைப்பாளிகளில் குறிப்பிடத் தக்கவர். பதினொரு நாவல்கள், பத்து சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாடகம் உள்ளிட்டவை இவர் படைப்புகளில் அடங்கும். சாகித்ய அகாதெமி விருது, கேரள சாகித்ய அகாதெமி விருது, எழுத்தச்சன் புரஸ்காரம், மாத்ருபூமி இலக்கிய விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். A Minus B. ஏழாமெடங்கள், ஹிமாலயன் உள்ளிட்ட நாவல்கள் அவருடைய இந்திய ராணுவ அனுபவங்களை வெளிப்படுத்தும் நாவல்களாகும்.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “சகுனம்”