- சமூக உணர்ச்சிக் கற்றல்
- தன்னைத் தெரிந்து கொள்ளல்
- பொறுப்புணர்வோடு முடிவுகளை எடுத்தல்
- இன்க்ளூசிவ் – உள்ளடக்கிய நிலை
- சமூக உணர்ச்சி கற்றலை வகுப்பறையில் ஒருங்கிணைக்கும் வழிகள்
- சமூக உணர்ச்சி கற்றலும் நேர்மறையான பள்ளி சூழலும்
- வயதுக்கேற்ற கல்வி முறை
- வாழ்க்கை: இடரின் நீர்நிலை, முயற்சியின் படகு
- பள்ளி-சமூகம்-பெற்றோர் கூட்டுறவு: நிலையான கல்வி மேம்பாட்டிற்கான அடிப்படை
- சமூகக் கற்றலில் சமூகத்தின் பொறுப்பு
- தெரிவுகள் அதிகம், முடிவு ஒன்று
- முடிவெடுத்தல், பொறுப்பேற்றல் மற்றும் சமூக கற்றல்
கல்வி என்பது வெறும் பள்ளிக்கூடத்தில் நடக்கும் செயல்பாடு மட்டுமல்ல. ஒரு குழந்தை பிறந்தது முதல் இறக்கும் வரை நடைபெறும் தொடர் செயல்பாடே கல்வி. இந்த நீண்ட பயணத்தில் சமூகம் வகிக்கும் பங்கு மிகவும் முக்கியமானது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரும் கல்விக்கு உதவி செய்தாலும், அவர்கள் அனைவரும் கூடி வாழும் சமூகமே இந்தக் கற்றல் செயல்பாட்டின் அடித்தளமாக விளங்குகிறது.
சமூகம் என்பது அந்தப் பகுதியில் வாழும் எல்லா மக்களும் சேர்ந்ததுதான். அது அங்கே இருக்கும் அனைவரின் கலாச்சாரம், மொழி, இனம் ஆகியவற்றின் அடையாளங்களை பிரதிபலிப்பதாகவும் மதிப்பதாகவும் இருக்க வேண்டும்.
ஒரு சமூகம் நல்ல கற்றல் சூழலை உருவாக்க வேண்டுமானால், அனைவராலும் சட்டத்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய “சரி-தவறு” என்ற அளவுகோல்கள் இருக்க வேண்டும். யார் மனதையும் புண்படுத்தாத வகையில் வரைமுறைகள் அமைய வேண்டும். இத்தகைய சமூகத்தில்தான் ஆரோக்கியமான கற்றல் நிகழ முடியும்.
எல்லா மக்களும் அந்த சமூகம் “நம்முடையது” என்ற உணர்வு பெற்றிருக்க வேண்டும். “நம்முடையது” என்னும்போது பற்று வந்துவிடுகிறது. தானாகவே “தவறு செய்துவிடக்கூடாது” என்ற எண்ணமும், “இந்த சமூகத்தைக் காக்க வேண்டும்” என்ற பொறுப்பும் வருகிறது.

சமூகத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் அந்த சமூகத்தில் இருக்கும் மற்றவருக்கு சுய பாதுகாப்பும், நம்பிக்கையும் வரும் வண்ணம் நடந்துகொள்ள வேண்டும். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பாதுகாப்புடன் உணர வேண்டும். அப்போதுதான் கற்றல் சுதந்திரமாக நிகழும்.
வளரும் பருவத்தில் உள்ளவராயினும் முதிர்ந்த பருவத்தில் உள்ளவராயினும், இன்னல் ஏற்படும்போது மற்றவரின் ஆதரவு அவசியம் தேவைப்படும். அப்போது வெறும் அறிவுரைகள் இனிமை தராது. அரிய சில உண்மைகளை, அறிவுரைகளை இனிமையாக்கி, பழக எளிமையாக, நடைமுறைக்கு உகந்ததாகச் சொல்லும் திறன் வாய்க்கப் பெற வேண்டும்.
இதற்கு நமது இலக்கியங்களிலேயே சான்றுகள் உண்டு. வாழ்க்கையைக் காட்டும் கண்ணாடி இலக்கியம். அவ்வாழ்க்கையை இலக்கிய இன்பம் தோன்ற அழகுறக் காண்பிப்பது திருக்குறளும் நாலடியாரும்.
அருளும் பொருளும் மிக மிக இன்றியமையாத தேவைகளாகும். அதுவும் மிகவும் பரபரப்பான இக்கால உலகில் அவற்றின் தேவைகள் மிக அவசியம். “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்று வள்ளுவர் கூறிவிடுகிறார். ஆனால், அத்தோடு நின்றுவிடவில்லை.
அருளின் பெருமை, அன்பின் வழித்தொன்றல் என்று சொல்வதில்தான் இக்கால மனிதர்களுக்கான பொருள் இருக்கிறது. அருள் என்றால் என்ன? தொடர்பில்லாத மனிதரிடத்தும் பற்று கொள்வது. தொடர்புடையாரிடம் கொள்ளும் பற்று அன்பு என்பது. இவை இரண்டும் உயர்ந்த பண்புகளாகும்.
ஆனால், அன்பும் அருளும் உடையவரிடம் பொருள் இல்லை என்றால் பயன் இல்லை. பொருள் உடையவரிடத்து அன்பும் அருளும் இருப்பின், அவனது பொருள் அவனை மட்டும் அன்றி இந்த சமூகத்தையே காக்கும். எனவே அன்பும் அருளும் இருந்தால் மட்டும் போதாது, அப்பண்புகள் பயன்படுவதற்குரிய செல்வமும் வேண்டும்.
“அருளென்னும் அன்பீன் குழவி புருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு”
அன்பு ஒரு அன்னை போன்றவள் என்றால், அவள் ஈன்ற அருள் என்ற குழந்தையை வளர்க்க செல்வம் என்ற செவிலியும் தேவை.
இப்படி சமூகம் அக்கறையோடு சொல்லிக் கொடுக்க வேண்டும். மாறாக “பணம் சேர்த்தால் மட்டும் போதாது, கருணையும் வேண்டும்” என்று வெறுமனே சொல்லிக் கொடுப்பதால் பலனில்லை. நடைமுறையில் எவ்வாறு இவற்றை ஒன்றிணைப்பது என்பதை அறிவுரை மூலம் அல்ல, வாழ்க்கை முறை மூலம் காட்ட வேண்டும்.
மன நலன் பிரச்சினைகளும் உளவியல் பிரச்சினைகளும் இருக்கும் மாணவர்களும் இளவயதினரும் மனம் விட்டுப் பேச ஒரு ஆதரவுக் குழு, நம்பகத்தன்மை உள்ள ஆதரவான அமைப்பு அந்த சமூகத்தில் அவசியம் வேண்டும்.
சமூகக் கற்றலில் நண்பர்களின் பங்கு மிக முக்கியமானது. சகவயதினரின் ஆதரவு (peer support) என்பது வெறும் நட்பு மட்டுமல்ல, அது ஒருவரின் மன உறுதியை (resilience) வளர்க்கும் வலிமையான கருவியாகும்.
நவீன மன நல ஆராய்ச்சிகளின்படி, peer support என்பது “வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட நபர்களால் வழங்கப்படும் சமூக-உணர்வு ரீதியான ஆதரவு” என வரையறுக்கப்படுகிறது. இத்தகைய ஆதரவு மகிழ்ச்சி, சுயமரியாதை மற்றும் திறமையான சமாளிப்பு முறைகளை அதிகரிக்கிறது, அதேசமயம் மனச்சோர்வு, தனிமை மற்றும் கவலையைக் குறைக்கிறது.
ஒரு மாணவன் கல்வியில் தோல்வியடையும்போதோ, வாழ்க்கையில் சிக்கல்களை எதிர்கொள்ளும்போதோ, அதே வயதுடைய நண்பர்களின் புரிதலும் ஆதரவும் அவனுக்கு புதிய வலிமையைத் தருகிறது. ஏனெனில் அவர்கள் அவனது சூழ்நிலையை நன்கு அறிந்திருப்பார்கள். அவர்களும் அதே போன்ற சவால்களை எதிர்கொண்டிருப்பார்கள்.
“நட்பு என்ற கலங்கரை விளக்கம்
சக்கரவாள கடலில் நம்மை வழிநடத்தும்”
அறிவியல் பூர்வமான அடிப்படைகள்
நண்பர்களின் ஆதரவு(peer support)-ன் அடிப்படையில் உள்ள உளவியல் செயல்முறைகளாக சமூக ஆதரவு (social support), அனுபவ அறிவு (experiential knowledge), உதவியாளர்-சிகிச்சை கொள்கை (helper-therapy principle), சமூக கற்றல் கோட்பாடு (social learning theory), மற்றும் சமூக ஒப்பீட்டு கோட்பாடு (social comparison theory)எனச் சில உள்ளன.
சமூக ஆதரவு (social support) என்பது ஒருவர் சமூகத்தில் பெறும் உணர்வு ரீதியான, மன ரீதியான மற்றும் நடைமுறை உதவிகளின் தொகுப்பாகும். இது குடும்பத்தினர், ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் சமூக அமைப்புகள் மூலம் கிடைக்கிறது. பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழகம் செல்லாத இளைஞர்கள், மற்றும் சிறுபான்மை இனத்தவர்/பாலியல் சிறுபான்மையினர் ஆகிய அனைத்துக் குழுக்களிலும் இந்த ஆதரவு நேர்மறையான விளைவுகளைக் காட்டுகிறது.
மன உறுதி (resilience) என்பது ஒருமுறை கிடைத்துவிட்டால் போதும் என்பதல்ல. அது தொடர்ந்து வளர்க்கப்பட வேண்டிய பண்பாகும். சமகால ஆராய்ச்சிகள் காட்டுவது என்னவென்றால், peer support ஒருவருக்கு மட்டுமல்ல, ஆதரவு வழங்குபவருக்கும் நன்மை தருகிறது. இதை “helper-therapy principle” என்று கூறுவர்.
இதில் சமூகம் செய்ய வேண்டியவை என்ன?:
கற்றல் சூழலில் பாதுகாப்பு: மாணவர்கள் தவறு செய்தாலும், தோல்வியடைந்தாலும் அவர்களை தண்டிக்காமல், அந்த அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ள உதவ வேண்டும்.
பன்முக ஆதரவு அமைப்பு: ஒரே நபரிடம் மட்டும் சார்ந்திருக்காமல், பல்வேறு நபர்களிடமிருந்து ஆதரவு பெற வழி செய்ய வேண்டும்.
சுய நம்பிக்கை வளர்ப்பு: “நான் இதைச் செய்ய முடியும்” என்ற நம்பிக்கையை வளர்க்கும் சூழலை உருவாக்க வேண்டும்.
தொழில்முறை பயிற்சி: 2004-ல் இருந்து இன்று வரை peer support ஒரு தொழில்முறை சேவையாக வளர்ந்துள்ளது. பயிற்சி, சான்றிதழ், திருப்பிச் செலுத்தும் முறைகள், தகுதி தரநிலைகள் மற்றும் நம்பகத்தன்மை மதிப்பீடு போன்ற அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
நண்பர்களின் ஆதரவு என்பது ஒருவழிப் பாதை அல்ல. உதவி பெறுபவருக்கு மட்டுமல்ல, உதவி வழங்குபவருக்கும் மன நலன் மேம்பாடு கிடைக்கிறது. இது சமூகக் கற்றலின் அழகான அம்சமாகும் – கற்பிப்பவனும் கற்கிறான், உதவுபவனும் உதவி பெறுகிறான். ஒரே தடைகளை இரண்டு நண்பர்கள் சந்திக்கும் போது கலந்து பேசும்போது அந்தத் தடைகளை அவர்கள் இருவரும் சேர்ந்தே தகர்த்தெறியும் வழிமுறைகளை எளிதாகக் கண்டுகொள்கிறார்கள். ஒருவருவருக்கொருவர் ஆறுதலாகவும் பற்றுக்கோலாகவும் இருக்கும் வாய்ப்பும் இருக்கிறது. அவர்களின் அனுபவப் பகிர்வு பலருக்கு நல்ல வழிகாட்டுதலாகவும் இருக்கும்.
சொல்லிப் பகிர்ந்து கொள்ளும் விஷயங்கள் பல வடிவங்களில் கற்பனைகள் சேர்ந்து கதைகளாக சிறகு கட்டிப் பறக்கும்போதோ, அந்த இளைஞர்களும் யுவதிகளும் மேலும் வன்முறைக்கு ஆளானால், அந்த சமூகம் மேலும் சீரழியும். ஆனால் வலிமையான சமூக ஆதரவு அமைப்பும், நண்பர்களின் ஆரோக்கியமான துணையும் இருந்தால், அத்தகைய பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தீர்வு காண முடியும்.
தூதுவர்கள், அமைச்சர்கள், சமூகத் தலைவர்கள் என பலர் தன்னிடம் பேச வந்திருந்தாலும், அவரவர் குறைகளைக் கேட்டு அறிந்து, அதற்கு ஏற்றாற்போல் நல்ல உபாயங்களைச் சொல்லுகிற தலைவன் இருக்கிற நாடு வளம் பெறுவது உண்டு.
“கைவரும் வேந்தன் நமக்கென்று காதலித்த
செவ்வி தெரியாது உரையற்க – ஒவ்வொருகால்
எண்மையனேனும் அரியன் பெரிதம்மா
கண்ணிலன் உள்வெயர்ப்பினான்”
அது போல ஒரு பள்ளித் தலைவரும், சமூகத் தலைவரும், அதன்படியே குடும்பத் தலைவர்களும் சார்பின்றி நல்ல உபாயங்களை வழங்க வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமான, நல்ல, உறுதியான சமூகம் உருவாக வாய்ப்பு உருவாகும்.
நல்ல யானையை வழிநடத்தும் பாகன், அந்த யானைக்கு மதம் பிடித்தாலும் அதைத் தன் கட்டுக்குள் கொண்டு வர இயலும். அது போல தன் சமூகத்தில், மக்களின்மேல் அக்கறையுள்ள தலைவர்கள் தன் உயிருக்கு கவலைப்படாமல், அரசரோ தலைவரோ தவறு இழைக்கும்போது அது தம் மக்களுக்கு பாதகம் விளைவிக்கும் என்று உணர்ந்து, தடுத்து நிறுத்தி உண்மையை உரைக்க வல்லவர்கள் வேண்டும்.
கம்பராமாயணத்தில் வரும் இப்பாடல் இதை அழகாகக் காட்டுகிறது:
“கதங்கொள் சீற்றத்தையாற்றுவான் இனியன கழறி
பதங்கொள் பாகனும் அந்திரியொத்தனன் பன்னூல்
விதங்களால் அவன் மெல்லென மெல்லன விளம்பும்
இதங்கள் கொள்கிலா விறைவனையொத்ததோர் யானை”
மதம் பிடித்த யானையையும் வழிபடுத்தும் பாகனைப் போல, சமூகத்தின் தவறான போக்குகளையும் மாற்றி அமைக்கும் திறமையுள்ள தலைவர்கள் இருப்பவர்களைப் பெற்ற சமூகம், தன் மக்களுக்கு நல்ல சமூக கற்றலை வழிகாட்டும்.
இன்றைய உலகில் சமூக ஆதரவு பல்வேறு வடிவங்களில் அமைய வேண்டும். பாரம்பரிய குடும்ப அமைப்புகளுடன் கூடுதலாக:
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மன நல ஆலோசகர்கள் இருக்க வேண்டும்.
மாணவர்களே தங்களுக்குள் ஆதரவு அளிக்கும் அமைப்புகள் உருவாக வேண்டும். நவீன ஆராய்ச்சிகளின்படி, நண்பர்கள் ஆதரவுக்குழுக்கள் அமைப்பு இப்போது உலகெங்கும் வழங்கப்படும் ஒரு சேவையாகவும், இன்றியமையாத மன நல சேவையாகவும் கருதப்படுகிறது.
ஊரின் ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் கூடி உரையாடும் இடங்கள் இருக்க வேண்டும்.
வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் திறன்களை வளர்க்கும் பயிற்சிகள் வேண்டும்.
நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும் சிக்கும்போது peer support வழங்கும் புதிய முறைகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
உடல் நலம் மற்றும் மன நலம் இரண்டையும் ஒருங்கே பார்க்கும் சேவைகளில் peer support முக்கிய பங்கு வகிக்கிறது.
1980களில் இருந்து, மன நோய், போதைப் பழக்கம், மற்றும் மனதிற்கான இளுப்பு ஆகியவற்றின் அனுபவம் உள்ளவர்கள் சேவை வழங்கும் அமைப்புகளில் பங்கேற்பு அதிகரித்து வருகிறது. அவர்கள் ஆலோசனைக் குழுக்கள், நோயாளி பேரவைகள், மற்றும் சிகிச்சை மற்றும் சமூக ஆதரவு சேவைகளின் ஊழியர்களாக பங்கேற்கின்றனர்.
அமெரிக்காவில் மட்டுமே ஆண்டுக்கு 43.6 மில்லியன் பெரியவர்கள் மன நோயால் பாதிக்கப்படுகின்றனர், இவர்களில் 9.8 மில்லியன் பேர் கடுமையான மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று 2015 கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
ஒரு மரத்தின் வலிமை அதன் வேர்களின் பரப்பில் இருப்பது போல, ஒரு மனிதனின் மன உறுதியும் அவனைச் சுற்றியிருக்கும் சமூக ஆதரவு வலையத்தின் வலிமையில் இருக்கிறது.
சமூகக் கற்றல் என்பது பலதரப்பட்ட செயல்பாடு. இதில் குடும்பம், பள்ளி, அரசு என அனைவரும் பங்கேற்றாலும், சமூகமே இதன் முக்கிய அடிப்படையாக விளங்குகிறது. அன்பும் அருளும் பொருளும் ஒருங்கே பெற்ற, வலிமையான நண்பர்களின் ஆதரவுடன் கூடிய, தைரியமான தலைமையுள்ள, பொறுப்புணர்வு கொண்ட சமூகத்தில்தான் நல்ல கற்றல் சூழல் உருவாக முடியும்.
இன்றைய சமூகத்தில் peer support, resilience building, social support systems போன்ற நவீன கருத்துகளை நமது பாரம்பரிய மதிப்புகளுடன் ஒருங்கிணைத்து, முழுமையான கற்றல் சூழலை உருவாக்க வேண்டும். ஒருவன் தனியாக வளர முடியாது; சமூகம் என்ற பெரிய மரத்தின் நிழலில்தான் ஒவ்வொரு தனி மனிதனும் வளர முடியும்.
இதற்கு நமது பாரம்பரிய இலக்கியங்களில் உள்ள ஞானக் கருவூலங்களையும் நவீன கால மன நல ஆய்வுகளின் முடிவுகளையும் ஒருங்கிணைத்து, சமூகம் முழுவதும் கைகோர்த்து முன்னேற வேண்டும். அப்போதுதான் எதிர்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான, நம்பகமான, மன உறுதியுள்ள, வளமான கற்றல் சூழலை அமைத்துத் தர முடியும்.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
