- சமூக உணர்ச்சிக் கற்றல்
- தன்னைத் தெரிந்து கொள்ளல்
- பொறுப்புணர்வோடு முடிவுகளை எடுத்தல்
- இன்க்ளூசிவ் – உள்ளடக்கிய நிலை
- சமூக உணர்ச்சி கற்றலை வகுப்பறையில் ஒருங்கிணைக்கும் வழிகள்
- சமூக உணர்ச்சி கற்றலும் நேர்மறையான பள்ளி சூழலும்
- வயதுக்கேற்ற கல்வி முறை
- வாழ்க்கை: இடரின் நீர்நிலை, முயற்சியின் படகு
- பள்ளி-சமூகம்-பெற்றோர் கூட்டுறவு: நிலையான கல்வி மேம்பாட்டிற்கான அடிப்படை
- சமூகக் கற்றலில் சமூகத்தின் பொறுப்பு
- தெரிவுகள் அதிகம், முடிவு ஒன்று
- முடிவெடுத்தல், பொறுப்பேற்றல் மற்றும் சமூக கற்றல்
சமூக உணர்ச்சி கற்றல் எல்லாம் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது என்று நினைப்பவர்கள் உண்டு. ஏற்கெனவே ஆசிரியர்களுக்கு நிறைய பணிச்சுமை இருக்கிறது, இதில் இன்னொன்றா என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால் அஞ்ச வேண்டாம். உள்ளடக்கிய பாடத்திட்டம் எல்லா வகுப்பிலும் ஒன்றோடொன்று இயைந்தே வரும். காற்றுப்போல சுதந்திரமாக மலரின் சுகந்தமாக ஒத்துவரும். இதற்கென்று தனி வகுப்போ வீட்டுப்பாடமோ தேவையில்லை. அப்படிப் பழகிவிட்டால், இதுவும் இயல்பாகிவிடும்.
1.காலையில் மாணவர்களின் மனநிலையை அறிதல்
மாணவர்கள் காலையில் வகுப்புக்கு வரும்போது அவர்களின் மனநிலையை அறிந்துகொள்வது மிகவும் முக்கியம். இதற்கு போக்குவரத்தில் பயன்படுத்தும் நிறங்களைப் பயன்படுத்தலாம். பச்சை என்றால் செல், சிவப்பு என்றால் நில் என்பதுபோல, இங்கே பச்சை என்றால் “நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், கற்கத் தயார்”, சிவப்பு என்றால் “எனக்கு இன்று கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது, உதவி வேண்டும்” என்று பொருள்.
உதாரணமாக, வகுப்பின் முன்பக்கத்தில் ஒரு சிறிய அட்டவணையில் நிறமுள்ள மேக்னெட்டுகளை வைத்து, ஒவ்வொரு மாணவனும் தன் பெயருடன் அன்றைய உணர்வைக் குறிக்கும் நிற மேக்னெட்டை ஒட்டலாம். அல்லது சிரிப்பு, அழுகை, கோபம், ஆச்சர்யம் போன்ற இமோஜி ஸ்டிக்கர்களையும் பயன்படுத்தலாம். இதனால் ஆசிரியருக்கு யார் மன வருத்தத்தில் இருக்கிறார்கள் என்று தெரிந்துவிடும். அப்போது அந்த மாணவர்களிடம் “என்ன நடந்தது? ஏதாவது உதவி வேண்டுமா?” என்று கேட்டு, அவர்களைச் சிரிக்க வைக்க முயலலாம். சில நேரங்களில் வீட்டில் சண்டை, பெற்றோர் திட்டியது, நண்பர்களுடன் பிரச்சனை என்று சிறிய விஷயங்களாக இருக்கும். அவற்றை கேட்டு ஆறுதல் சொன்னாலே போதும், அந்த நாளின் பாதி பிரச்சனை தீர்ந்துவிடும்.
2.குழுப் பேச்சு வாய்ப்புகளை உருவாக்குதல்

ஒரு குழுவாக அல்லது நண்பர்களுடன் பேச வாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டும். இது மாணவர்களுக்கு தங்களுக்குப் பிடித்த தோழர்களுடன் பழக உதவும். அதே நேரத்தில், இது மாணவர்கள் எங்கே நன்றாக பிரகாசிக்க முடியும் என அறிய ஆசிரியர்களுக்கு ஒரு வாய்ப்பையும் தரும்.
உதாரணமாக, தமிழ் மொழி வகுப்பில் “இன்றைய செய்தி” என்ற பெயரில் மாணவர்களை இரண்டு அல்லது மூன்று பேர் கொண்ட சிறு குழுக்களாக பிரித்து, அவர்கள் நேற்று என்ன செய்தார்கள், எதை ரசித்தார்கள், எந்த திரைப்படம் பார்த்தார்கள் என்று பேசச் சொல்லலாம். அல்லது கணித வகுப்பில் கணக்குகளை தீர்ப்பதற்கு முன்பு, “இந்த கணக்கை நாம் எப்படி தீர்க்கலாம்?” என்று குழுவாக சிந்திக்கச் சொல்லலாம்.. இப்படிப்பட்ட சிறிய செயல்களிலேயே சில மாணவர்கள் தலைமைப் பண்புடன் பேசுவார்கள், சிலர் அமைதியாக கேட்பார்கள், சிலர் வேடிக்கையாக பேசி எல்லாரையும் சிரிக்க வைப்பார்கள். இதைக் கவனித்து ஆசிரியர் ஒவ்வொருவருடைய தனித்திறமையை கண்டறியலாம்.
3.கலாச்சாரத்தை மரியாதையோடு அணுகுதல்
ஒவ்வொரு மாணவனின் திறமையையும், உழைப்பையும், கலாச்சாரத்தையும் பாராட்ட வேண்டும். நம் வகுப்பில் வெவ்வேறு பகுதியிலிருந்து வந்த மாணவர்கள் இருக்கலாம். ஒருவர் கிராமத்து பின்னணி, இன்னொருவர் நகர பின்னணி என்று இருக்கலாம். ஒருவர் வீட்டில் தமிழ் பேசுவார், இன்னொருவர் தெலுங்கு அல்லது இந்தி பேசுவார். இந்த வேறுபாடுகளை பலவீனம் என்று நினைக்காமல், அது ஒவ்வொருவருடைய தனித்துவம் என்று பாவித்து, அவற்றைப் பாராட்ட வேண்டும்.
உதாரணமாக, சமூக அறிவியல் வகுப்பில் பண்டிகைகளைப் பற்றி படிக்கும்போது, வெவ்வேறு மாணவர்களிடம் அவர்கள் வீட்டில் எப்படி தீபாவளி, கார்த்திகை, பொங்கல் கொண்டாடுகிறார்கள் என்று கேட்கலாம். ஒருவர் “எங்க வீட்டில் கார்த்திகை அன்று வாழை இலையில் தோசை சாப்பிடுவோம்” என்று சொன்னால், “ஆஹா, என்ன அழகான முறை! நாம் எல்லாரும் இதைக் கற்றுக்கொள்ளலாம்” என்று பாராட்டலாம். இப்படி ஒவ்வொருவருடைய வீட்டு முறைகளையும் மதித்து பாராட்டினால், அந்த மாணவருக்கு தன்னம்பிக்கை வளரும். மற்ற மாணவர்களுக்கும் வெவ்வேறு கலாச்சாரங்களை மதிக்கும் மனப்பான்மை வளரும்.
4.சமூக உணர்ச்சி சொல் வங்கியை வளர்த்தல்
மகிழ்ச்சி, வருத்தம், கோபம் போன்ற உணர்ச்சிகளுக்கான ஒவ்வொரு கலாச்சாரத்துக்குமான சொல்வங்கியை உருவாக்க மாணவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அல்லது அவர்கள் உதவியுடன் குழுத் திட்டமாக தயார் செய்ய வேண்டும். இதைச் செய்வதால் மாணவர்கள் தங்கள் உணர்வுகளை மிகச் சரியாக வெளிப்படுத்த முடியும்.
உதாரணமாக, மகிழ்ச்சிக்கு தமிழில் “சந்தோஷம், மகிழ்ச்சி, ஆனந்தம், உற்சாகம், புளகம்” என்று பல சொற்கள் உண்டு. அதேபோல வருத்தத்திற்கு “சோகம், துக்கம், வருத்தம், கவலை, கலக்கம்” என்று பல சொற்கள் உண்டு. இதை வகுப்பில் ஒரு பெரிய சார்ட் பேப்பரில் எழுதி ஒட்டலாம். புதிய சொற்கள் கிடைக்கும்போது அதை சேர்க்கலாம். “இன்று நான் மிகவும் புளகமாக இருக்கிறேன்” என்று ஒரு மாணவர் சொன்னால், “புளகம் என்றால் என்ன?” என்று மற்றவர்களிடம் கேட்டு, அந்த சொல்லின் அர்த்தத்தையும் விளக்கலாம். இப்படி செய்தால் மொழித் திறனும் வளரும், உணர்ச்சி வெளிப்பாட்டுத் திறனும் வளரும்.
5.உணர்ச்சிகளை எழுத்து கலை வடிவில் வெளிப்படுத்துதல்
சில குழந்தைகளும் பதின்ம வயதினரும் பேசுவதற்கும் உரையாடுவதற்கும் சங்கடப்படுவார்கள். அவர்களை தங்கள் உணர்வுகளை வேறுவகையில் வெளிப்படுத்தச் சொல்ல வேண்டும். எழுத்து ஒரு அற்புதமான கலை. குறிப்பாக கவிதை எழுதுவது, கதை எழுதுவது, நாட்குறிப்பு எழுதுவது போன்றவற்றின் மூலம் தங்கள் மனதிலுள்ளதைக் கொட்டலாம்.
உதாரணமாக, ஒரு மாணவர் வீட்டில் தன் தம்பியுடன் சண்டையிட்டு கோபமாக இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரை நேராக “என்ன பிரச்சனை?” என்று கேட்டால் சொல்ல மாட்டார். ஆனால் “இன்று உங்கள் உணர்வைப் பற்றி ஒரு சிறு கவிதை எழுதுங்கள்” என்று சொன்னால், “கோபம் வந்தது எனக்கு, தம்பியை அடிக்க வேண்டும் போல் இருந்தது, ஆனால் அம்மா திட்டுவார், அதனால் பல் கடித்துக்கொண்டேன்” என்று எழுதுவார். இதை படித்தவுடன் ஆசிரியருக்கு அந்த மாணவரின் மனநிலை தெரிந்துவிடும். பின்னர் அவரிடம் தனியாக பேசி, “தம்பியுடன் சண்டையிடும்போது என்ன செய்யலாம்?” என்று பேசி அவருக்கு ஆலோசனை கொடுக்கலாம்.
6.அமைதிக்கான மூலையை உருவாக்குதல்
வகுப்பறைகளில் அமைதிக்கான மூலையை ஏற்படுத்த வேண்டும். வயது வந்தவராக, உங்கள் வீட்டில் ஒரு வசதியான நாற்காலி உங்களுக்கு இருக்கக் கூடும். அது ஒரு நாளின் முடிவில் உங்களை அமைதிப்படுத்தும். அதே போல மாணவர்களுக்கு வகுப்பறைகளில் ஒரு இடம் வேண்டும். அது கண்பார்வை அளவிலும் மனதளவிலும் அவர்களைச் சமாதானப்படுத்தி அமைதிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். அப்போது அவர்கள் திரும்ப குழு அமைப்புக்குள் எளிதாக திரும்ப செல்ல முடியும்.
இந்த அமைதி மூலையை எப்படி அமைக்கலாம்? வகுப்பறையின் ஒரு மூலையில், ஒரு சிறிய கம்பளம் அல்லது மெத்தையை போடலாம். அதன் அருகில் ஒரு சிறிய மேசையில் சில பூக்கள், இனிமையான வாசனையுள்ள மெழுகுவர்த்தி, சில நல்ல புத்தகங்கள் வைக்கலாம். சுவரில் அமைதியான இயற்கை காட்சிகளின் படங்கள் ஒட்டலாம். ஒரு மாணவர் மிகவும் கோபமாக இருக்கிறார் அல்லது வருத்தமாக இருக்கிறார் என்றால், “கொஞ்ச நேரம் அமைதி மூலையில் போய் உட்கார்ந்திரு, அப்புறம் வா” என்று சொல்லலாம். அங்கே அவர் தனியாக இருந்து தன் மனதை அமைதிப்படுத்திக்கொண்டு, மீண்டும் மற்றவர்களுடன் சேர முடியும்.
7.பேச நேரம் கொடுத்தல்
எல்லா மாணவர்களுக்கும் பேச நேரம் கொடுக்க வேண்டும். அவர்களுக்கான இடமும் தர வேண்டும். சில மாணவர்கள் மிகவும் தைர்யமாக பேசுவார்கள், சில மாணவர்கள் அமைதியாக இருப்பார்கள். அமைதியான மாணவர்களையும் பேச ஊக்குவிக்க வேண்டும். அதேநேரம் அதிகம் பேசும் மாணவர்களுக்கு மற்றவர்களுக்கும் பேச வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும்.
இதற்கு “பேச்சு பந்து” முறையைப் பயன்படுத்தலாம். ஒரு மென்மையான பந்தை வகுப்பில் வைத்துக்கொண்டு, யாரிடம் பந்து இருக்கிறதோ அவர்கள் மட்டும் பேசலாம். பேசி முடித்தவுடன் வேறு ஒருவரிடம் பந்தை எறிய வேண்டும். இப்படி செய்தால் ஒருவர் அதிகமாக பேசி நேரத்தை வீணாக்க மாட்டார், அதேநேரம் அமைதியான மாணவர்களும் பேச வேண்டிய கட்டாயம் வரும். “நான் பேச ஒன்னும் இல்லை” என்று சொன்னாலும், “குறைந்தது நேற்று நீ என்ன சாப்பிட்டாய் என்று சொல்லு” என்று எளிய கேள்விகள் கேட்டு பேச வைக்கலாம்.
8.உடல் மன ரீதியாக அந்தந்த நேரத்தில் அந்தந்த இடத்தில் இருக்கப் பழக்குதல்
மாணவர்களுக்கு அந்தந்த நேரத்தில் உடல் மன ரீதியாக அந்தந்த இடத்தில் இருக்கப் பழகச் சொல்லித் தர வேண்டும். இது உடல் மனப் பயிற்சி வாயிலாகத்தான் பழக முடியும். நம் மனம் எப்போதும் கடந்த காலத்தில் அல்லது எதிர்காலத்தில் அலைந்துகொண்டே இருக்கும். ஆனால் நம் உடல் எப்போதும் நிகழ்காலத்தில்தான் இருக்கும். இந்த இரண்டையும் ஒருங்கிணைக்க வேண்டும்.
எளிமையான மூச்சுப் பயிற்சியிலிருந்து தொடங்கலாம். வகுப்பு ஆரம்பிக்கும் முன்பு “நாம் எல்லாரும் ஐந்து முறை ஆழமாக மூச்சு விடுவோம்” என்று சொல்லலாம். மூக்கின் வழியாக மெதுவாக சுவாசித்து, சில நொடிகள் நிறுத்தி, பின்னர் வாயின் வழியாக மெதுவாக வெளியே விடச் சொல்லலாம். இதைச் செய்யும்போது “நம் மூச்சின் மீது கவனம் செலுத்துங்கள், வேறு எதையும் நினைக்க வேண்டாம்” என்று சொல்லலாம். இப்படி செய்தால் மாணவர்களின் மனம் அமைதியாகி, கவனம் கூர்மையாகும்.
9.கலையின் மூலம் வெளிப்படுத்துதல்
மாணவர்களுக்குத் தங்கள் உணர்ச்சிகளை கலையின் மூலமாக வெளிப்படுத்த கற்றுக்கொடுக்க வேண்டும். கலை என்பது வெறும் ஓவியம் மட்டும் அல்ல. இசை, நடனம், நாடகம், கதை சொல்லுதல், புகைப்படம் எடுத்தல் என்று பல வடிவங்கள் உண்டு. ஒவ்வொரு மாணவரும் எந்த கலையில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதைக் கவனித்து, அதை ஊக்குவிக்க வேண்டும்.
உதாரணமாக, வரலாற்று பாடத்தில் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி படிக்கும்போது, ஒரு மாணவரிடம் “நீ காந்திஜியாக நடித்து ஒரு பேச்சு கொடு” என்று சொல்லலாம். இன்னொரு மாணவரிடம் “சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி ஒரு கவிதை எழுது” என்று சொல்லலாம். மற்றொரு மாணவரிடம் “நம் ஊரின் சுதந்திரப் போராட்ட நினைவிடங்களின் புகைப்படம் எடுத்து வா” என்று சொல்லலாம். இப்படி ஒவ்வொருவரின் ஆர்வத்திற்கு ஏற்ப வெவ்வேறு செயல்பாடுகள் கொடுத்தால், அவர்கள் மகிழ்ச்சியோடு கற்பார்கள். அதேநேரம் தன்னுடைய உணர்வுகளையும் கலையின் மூலம் வெளிப்படுத்த கற்றுக்கொள்வார்கள்.
10.குழுவின் சேர்ந்த குறிக்கோளை அடைய உழைத்தல்
மாணவர்களை ஒன்றாக உழைக்கச் சொல்லித் தர வேண்டும். அடிக்கடி சின்ன சின்ன செயல் திட்டங்களை அனைவரும் சேர்ந்து பணி செய்து முடிக்கும் வண்ணம் கொடுத்து செயலாற்ற பயிற்சி தர வேண்டும். இதனால் தனிப்பட்ட ஆதாயத்தைவிட கூட்டு நலன் முக்கியம் என்ற எண்ణம் வளரும். அதேநேரம் ஒருவர் செய்யும் தவறு எல்லாரையும் பாதிக்கும், ஒருவர் செய்யும் நல்ல செயல் எல்லாருக்கும் பயன்படும் என்ற உணர்வும் வளரும்.
உதாரணமாக, பள்ளியின் சுவர்களில் ஓவியம் வரைவது, பள்ளி தோட்டத்தில் பூக்கள் நடுவது, குழந்தைகள் தினத்திற்கு நாடகம் நடத்துவது போன்ற திட்டங்களைக் கொடுக்கலாம். இதில் ஒருவர் வர்ணம் தீட்டுவார், இன்னொருவர் கோடுகள் வரைவார், மூன்றாமவர் பிராஷ் கழுவுவார் என்று எல்லாருக்கும் வேலை பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். யாரேனும் வராமல் இருந்தால் வேலை முடியாது, யாரேனும் ஒழுங்காக வேலை செய்யாவிட்டால் முழு திட்டமும் பாதிக்கும் என்ற உணர்வு அவர்களுக்கு வரும். இதனால் பொறுப்புணர்வும், கூட்டுத்தனமையும் வளரும்.
இப்படி எல்லா நடவடிக்கைகளிலும் சமூக உணர்ச்சி கற்றலை இணைத்துவிட்டால், அது இயல்பாகவே மாணவர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிடும். அதற்கென்று தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை, கூடுதல் வேலை செய்ய வேண்டியதில்லை. காலம் செல்லச்செல்ல, இந்த மாணவர்கள் உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்தத் தெரிந்த, மற்றவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளத் தெரிந்த, சமூகத்தில் இணக்கமாக வாழத் தெரிந்த மனிதர்களாக வளர்வார்கள்.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
