- சமூக உணர்ச்சிக் கற்றல்
- தன்னைத் தெரிந்து கொள்ளல்
- பொறுப்புணர்வோடு முடிவுகளை எடுத்தல்
- இன்க்ளூசிவ் – உள்ளடக்கிய நிலை
- சமூக உணர்ச்சி கற்றலை வகுப்பறையில் ஒருங்கிணைக்கும் வழிகள்
- சமூக உணர்ச்சி கற்றலும் நேர்மறையான பள்ளி சூழலும்
- வயதுக்கேற்ற கல்வி முறை
- வாழ்க்கை: இடரின் நீர்நிலை, முயற்சியின் படகு
- பள்ளி-சமூகம்-பெற்றோர் கூட்டுறவு: நிலையான கல்வி மேம்பாட்டிற்கான அடிப்படை
- சமூகக் கற்றலில் சமூகத்தின் பொறுப்பு
- தெரிவுகள் அதிகம், முடிவு ஒன்று
- முடிவெடுத்தல், பொறுப்பேற்றல் மற்றும் சமூக கற்றல்
“அம்மா, நான் கணக்கு பரீட்சையில் 80 மார்க் வாங்கினேன், ஆனால் கிரண் 95 வாங்கிட்டான்” – இப்படி வீட்டுக்கு வந்து அழுகிற குழந்தைகளின் எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் வீட்டில் மூத்த சகோதரர் தம்பியிடம் “பரவாயில்லை, அடுத்தத் தடவை இன்னும் கொஞ்சம் கவனமா படி, எந்த எந்த கணக்குகலில் தவறு செய்திருக்கிறாய் எனப் பார்த்து கற்றுக்கொள்” என்று ஆறுதல் சொல்வார். இன்று அந்த சகோதர பாசமும் குறைந்து, ஒப்பீட்டுப் போட்டியும் அதிகரித்துள்ளது.
நதியில் குளித்துவிட்டு, நண்பர்களுடன் பேசிக்கொண்டே மூன்று கிலோமீட்டர் நடந்து பள்ளிக்குச் செல்வது ஒரு காலம். அன்று பாடப் புத்தகங்கள் அண்ணன் பயன்படுத்தியவைதான். ட்யூஷன் கிளாஸ் என்பது சிலருக்கு மட்டும் கிடைக்கும் அபூர்வ வாய்ப்பு. ஆனால் சகோதர சகோதரிகளின் நட்பு, கிராமத்து முதியோர்களின் கதைகள், விளையாட்டு நேரத்தின் மகிழ்ச்சி – இவைதான் மன அழுத்தத்தைக் குறைக்கும் இயற்கையான மருந்துகள்.
இன்று கூகிளில் எதையும் தேடிப் படிக்கலாம். ஆன்லைன் கிளாஸ்கள், டிஜிட்டல் லைப்ரரி – எல்லாம் கைநீட்டும் தூரத்தில். ஆனால் அந்த நேரடி உரையாடலும், சகோதர பாசமும், அரவணைக்கும் சூழலின் அமைதியும் காணாமல் போயிருக்கின்றன.

தி.நகரில் ஒரு அம்மா தன் மகளிடம், “பார்த்தியா, சுதாவின் மகள் NEET-ல் 600 மார்க் வாங்கிட்டா. நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்கே, எப்ப பார் டிவி, உனக்கு என்னதான் செய்யலை. காசைக் கொட்டி பயிற்சி வகுப்புக்கு வேற அனுப்பினோம்?” என்று கேட்கிறார். அந்தப் பெண் வெறும் 16 வயது. அவளுக்குள் குற்ற உணர்வும், பயமும் ஆழமாகப் பதிகிறது.
அலுவலகத்தில் ஒரு மேலாளர் தன் பணியாளரிடம், “உன்னைவிட ராஜு இந்த வேலையை நல்லா பண்றான்” என்று சொன்னால் அது தவறு என்று நாம் அறிவோம். மேலாளர் ஒருவரின் திறன்களை வளர்க்க வேண்டுமானால், என்ன குறை இருக்கிரது என்றூ சொல்லி, அதை எப்படி சரி செய்வது என்பதையும் சொல்லவேண்டும் அல்லவா? அதைச் சரிசெய்து நன்றாக பணி செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதையும் கூடச் சொல்லவேண்டும். அப்படியிருக்கும்போது, பெற்றோரைச் சார்ந்து வாழும் குழந்தைகளிடம் இப்படி ஒப்பிடுவது எவ்வளவு அநீதி?
கடந்த ஆண்டு கோவையில் நடந்த சம்பவம் நம் மனசாட்சியை உலுக்குகிறது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் எதிர்பார்த்த மார்க் வராததால் தற்கொலை செய்துகொண்டான். அவனுடைய அம்மா அன்று இரவு “பரவாயில்லை கண்ணு, அடுத்த வருசம் மறுபடி எழுதலாம்” என்று சொல்ல நினைத்தாள். ஆனால் காலம் அவளுக்கு அந்த வாய்ப்பையே தரவில்லை.
மதுரையில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காததால் ஒரு பெண் மாணவி உயிரை மாய்த்துக்கொண்டாள். அவளின் தந்தையால் இன்னும் அவளது அறையின் கதவை குற்ற உணர்ச்சியின்றி திறக்க முடியவில்லை. “உயிரைவிட்ட பிறகு எப்படி சாதிக்க முடியும்?” என்ற கேள்வி அவரை இன்னும் வாட்டுகிறது.
இவையெல்லாம் வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல. ஒவ்வொன்றும் ஒரு குடும்பத்தின் தீராத காயம். பெற்றோர்கள் வாழ்நாள் முழுவதும் சுமக்கும் வேதனை.

அமெரிக்காவில் பள்ளி மாணவர்கள் கல்லூரியில் இடம் கிடைக்காமல் தற்கொலை செய்துகொள்வது அரிது. ஆனால் அங்கே பள்ளி மாணவர்களிடையே புல்லியிங் (கொடுமைப்படுத்துதல்) பெரும் பிரச்சினை. ஒரு மாணவன் வேறு மாணவர்களால் கேலி செய்யப்படுவதும், அடிமைப்படுத்தப்படுவதும் அவனுக்குள் ஆழமான மன அழுத்தத்தை உருவாக்குகிறது.
“உலகில் வாழ்க்கையைத் திறம்பட நடத்த பல்வேறு தொழில்கள் அவசியம். மருத்துவர்களோ, பொறியியல் வல்லுநர்களோ மட்டுமே உலகம் அல்ல” – இந்த எளிய உண்மையை நாம் மறந்துவிட்டோம்.
பள்ளியில் ஒரு மாணவன் கலை வகுப்பில் சிறப்பாகச் செயல்படுகிறான், ஆனால் கணக்கைப் பொறுத்தவரை அவன் பாரதியின் வாரிசு. ஆசிரியர் அவனை “கணக்கில் மோசமான மாணவன்” என்று முத்திரை குத்துகிறார். இங்குதான் சமூக உணர்வுக் கல்வி தேவைப்படுகிறது.
அமெரிக்காவின் லிட்டில் லீக் கால்பந்து போட்டிகளில் நடக்கும் காட்சிகள் நம்மிடையேயும் பரவி வருகின்றன. குழந்தைகளின் விளையாட்டின்போது பெற்றோர்கள் தம்முள் சண்டையிடுவது இன்று சாதாரண நிகழ்வாகிவிட்டது. “என் பையன் கோல் அடிச்சான், உங்க பையன் தடுத்தான்” என்று ஆரம்பித்த வாக்குவாதம் கையாலாகாத்தனம், உடல்மேல் செலுத்தப்படும் வன்முறை வரை செல்கிறது. குழந்தைகள் அதைப் பார்த்து என்ன நினைத்திருப்பார்கள்? விளையாட்டு என்பது மகிழ்ச்சிக்காக என்று அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியவர்களே போட்டியின் பெயரால் அமளி செய்கிறார்கள்.
இன்று இந்தியாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பல்வேறு பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புகிறார்கள். காலையில் பள்ளி, மாலையில் டியூஷன், இரவில் டான்ஸ் கிளாஸ், வார இறுதியில் கராத்தே, நீச்சல், சின்னப் பிராயத்திலேயே குழந்தைகளின் நாள் அட்டவணை ஒரு மேலாளரின் டைரியை விட நிறைந்திருக்கிறது. குழந்தைகளுக்கு மனதைத் தளர்த்தவும், சிந்திக்கவும், கனவு காணவும் நேரமே இல்லை.
மாணவர்களுக்குத் தேவையானவை வெறும் மதிப்பெண்களில் அடைக்க முடியாத ஆழமான விஷயங்கள். பிடித்த பாடங்களில் ஆழ்ந்து செல்லும் சுதந்திரம், தோல்வியை ஒரு கற்றல் வாய்ப்பாகப் பார்க்கும் பக்குவம், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் நேர்மையான உரையாடல், ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடும் வாய்ப்பு இவைதான் அவர்களுக்கு அவசியம்.
தமிழகத்தின் ஒரு கிராமப் பள்ளியில் நடந்த சம்பவம். மாணவர் ஒருவர் பேச்சுப் போட்டியில் தோற்றுவிட்டார். ஆசிரியை அவரிடம், “ஏன் தோற்றாய் என்று நினைக்கிறாய்?” என்று கேட்டார். “நான் கொஞ்சம் பதட்டப்பட்டேன் மேடம்,” என்றான் அந்த மாணவர். “சரி, அடுத்த முறை பதட்டத்தைக் குறைக்க என்ன செய்யலாம்?” என்று கேட்டார் ஆசிரியை. இதுதான் ஆரோக்கியமான அணுகுமுறை.
இன்று பல தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் சிறு திருத்தங்களுக்குக் கூட பங்கேற்பாளர்கள் அழுதுபுலம்புகிறார்கள். இது மிக அதிகரித்துள்ள கவலைக்குரிய நிலை. ஒரு பாட்டுப் போட்டியில் 8 வயது சிறுமி பாடும் போது ஸ்வரங்களில் தவறு செய்தாள் என்று விமர்சகர் சொன்னதற்காக கண்ணீர் விட்டு அழுகிறாள். அவளுடைய தாய் மேடையிலேயே “என் குழந்தையை ஏன் வருத்தப்படுத்துகிறீர்கள்?” என்று கோபப்படுகிறார். இன்னும் மோசம் – பெற்றோர்களே தோல்வியைத் தாங்கமுடியாதவர்களாக இருக்கிறார்கள். நல்ல நேர்மறையான விமர்சனங்கள் வெற்றி பெற ஒரு வழி அல்லவா? ஆனால் இந்த மனப்பான்மையின்மை நிலை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமல்ல, அன்றாட வாழ்க்கையிலும் அதிகரித்துவருகிறது.
கோயம்பேடு சந்தையில் ஒரு வியாபாரி தன் மகனிடம், “இன்னைக்கு நஷ்டம் வந்திருக்கு. ஏன் என்று தெரியுமா? நம்ம தக்காளி ரேட் மற்றவங்களை விட அதிகமா இருந்திருக்கு. அடுத்த தடவை சந்தை விலையை முதல்ல பாத்துட்டு நம்ம விலையை நிர்ணயிக்கலாம்” என்று சொல்கிறார். இது ஆரோக்கியமான விமர்சனம்.
ஆனால் வீட்டில், “நீ எப்போதுமே கவனமில்லாம இருக்கே, உன்னை நம்பி என்னாலே இந்த வியாபாரத்தை உன்னிடம் விட்டுக் கொடுக்க முடியாது” என்று சொன்னால் அது ஆரோக்கியமற்ற விமர்சனம். அது அவர் மகனின் தன்னம்பிக்கையை குலைக்கும்.
அதே போல குடுபங்களுக்கென ஒரு கொள்கைப் பிடிப்பு அறம் உண்டு. அது எதுவாக வேண்டுமானால் இருக்கலாம். சில குடுபங்களில் கடின உழைப்பு, நேர்மை, சில குடுபங்களில் எதிலும் விட்டுக்கொடுக்காத தன்மானம், வேறு சில குடுபங்களில் காலத்தோடு காரியமாற்றும் பண்பு என எதுவாக வேண்டுமானால் இருக்கலாம். அந்த கொள்கைப் பிடிப்புகளை விட்டுவிடாமல் செயலாற்ற பழக வேண்டும். இல்லை எனில் குடும்பச் சூழல் இனிக்காது.
பெற்றோர்கள்: மற்ற குழந்தைகளுடன் தங்கள் பிள்ளைகளை ஒப்பிடுவதை முற்றிலும் நிறுத்துங்கள். குழந்தையின் தனித்துவமான திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவியுங்கள். தோல்வியை ஒரு கற்றல் வாய்ப்பாக முன்வையுங்கள். உங்கள் கனவுகளை குழந்தைகள் மீது சுமத்தாதீர்கள். அவர்களுடைய விளையாட்டையும் மகிழ்ச்சியையும் போட்டியாக மாற்றாதீர்கள்.
ஆசிரியர்களும் ஒவ்வொரு மாணவரின் வலிமையான பகுதிகளை அடையாளம் காண வேண்டியது அவசியம். தோல்வியின்போது “ஏன்” என்று கேட்காமல் “எப்படி மேம்படுத்தலாம்” என்று கேளுங்கள். மாணவர்கள் மத்தியில் ஆரோக்கியமான போட்டி மனோபாவத்தை வளர்ப்பதோடு, கொடுமைப்படுத்துதலை முற்றிலும் தடுங்கள். உணர்ச்சிபூர்வமான பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.
இன்றைய கல்விச் சூழலில் மாணவர்களுக்குத் தேவை மார்க் மட்டுமல்ல, மனவலிமையும்தான். தோல்வியை எதிர்கொள்ளும் திறனும், விமர்சனங்களைக் கற்றலாக மாற்றும் பக்குவமும், சுய மதிப்பீட்டின் உயர்வும் – இவைதான் உண்மையான கல்வி.
“நமக்கு வெற்றிபெற எல்லா உரிமையும் உண்டு” என்ற மனோபாவத்திலிருந்து விடுபட்டு, “உழைத்தால் வெற்றி கிடைக்கும், தோற்றாலும் கற்றல் கிடைக்கும்” என்ற மனோபாவத்துக்கு மாற வேண்டும்.
கால மாற்றங்கள் அடிப்படை அறத்தைச் சாய்க்கக் கூடாது. குடும்ப மதிப்புகள், நேர்மை, பரஸ்பர மரியாதை – இவற்றின் அடித்தளத்தில்தான் உண்மையான சமூக உணர்வுக் கல்வி வளரும்.
இன்றைய மாணவர்கள் நாளைய சமுதாயத்தின் தூண்கள். அவர்களின் மனநலம்தான் நமது எதிர்கால சமுதாயத்தின் ஆரோக்கியம். எனவே, போட்டியில் வெல்லும் மாணவர்களை மட்டுமல்ல, தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளும் மாணவர்களையும் கொண்டாட வேண்டும்.
“வெற்றியே வாழ்க்கையின் குறிக்கோள் அல்ல, வளர்ச்சியே நமது நிரந்தர பயணம்” – இந்த மனோபாவத்துடன் நாம் நமது குழந்தைகளை வளர்த்தால், அவர்கள் வலிமையான, அமைதியான, மகிழ்ச்சியான மனிதர்களாக உருவாவார்கள்.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
