5. இரவுநேர யாத்திரிகன்

ஆங்கில மூலம் : ஸ்ரீ அரவிந்தர்  ‘Spiritual Sonnets’

தமிழாக்கம் : மீனாக்ஷி பாலகணேஷ்

ஸ்ரீ அரவிந்தரின் ‘Spiritual Sonnets எனும் எட்டுக்கவிதைகளில் இது ஐந்தாவதாகும். 

The Pilgrim of the Night

I made an assignation with the Night;
In the abyss was fixed our rendezvous:
In my breast carrying God’s deathless light
I came her dark and dangerous heart to woo.

I left the glory of the illumined Mind
And the calm rapture of the divinised soul
And travelled through a vastness dim and blind
To the grey shore where her ignorant waters roll.

I walk by the chill wave through the dull slime
And still that weary journeying knows no end;
Lost is the lustrous godhead beyond Time,
There comes no voice of the celestial Friend.

And yet I know my footprints’ track shall be
A pathway towards Immortality.

5. இரவுநேர யாத்திரிகன்

இரவுடனான எனது சந்திப்பிற்கு நான் இடத்தையும் பொழுதையும்
நிர்ணயித்துக் கொண்டேன்.
எங்களுடைய வழக்கமான சந்திப்பு பாழ்நரகத்தில் உறுதிப்படுத்தப்பட்டது.
எனது இதயத்தில் கடவுளின் இறப்பற்ற ஒளியை ஏந்தியபடி
அவளுடைய இருண்ட ஆபத்தான இதயத்தைக் கேட்பதற்காக வந்தேன்.

அறிவொளியூட்டும் மனத்தின் பெருமையை விட்டுவிட்டு
தெய்வீகமான ஆத்மாவின் அமைதியான ஆனந்தப் பரவசத்துடன்
மங்கலான வழிகாணாத எல்லையற்ற பரப்பில் பயணித்து
அவளுடைய அறிவற்ற, நீர் புரளும் சாம்பல்நிறக் கரைக்கு வந்தேன்.

சோம்பலான சேற்றின் வழியாக குளிர்ந்த அலைகளூடே நடந்தேன்
இருந்தும்கூடக் களைப்பான அப்பயணம் முடிவதாகக் காணோம்;
பொழுதை மீறிய ஒளிநிறைந்த தெய்வத்தன்மையில் என்னை இழந்தும்,
தெய்வீக நட்பின் குரல் எங்கும் கேட்கவில்லை.

இருப்பினும் எனது காலடித் தடங்களின் வழியானது
இறவாப்புகழுக்கான வழி என்பதனை நான் அறிவேன்.

இங்கு எனது சில / பல எண்ண ஓட்டங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. உலகில் நாம் வாழும் வாழ்க்கை நமக்களிக்கப்பட்ட வரம். அதனை சமுதாயத்திற்குப் பயனளிக்கும் வகையில் வாழ்ந்து, பின் இறையுடன் ஒன்றுவதே இறப்பு என இங்கு வெளிப்படையாகக் கூறியுள்ளார் ஸ்ரீ அரவிந்தர். 

இறப்பைத் தன் காதலியாகக் கண்டு, அவளுடனான சந்திப்பிற்குத் தயாராவதனை வியக்கத்தக்க நுட்பங்களுடன் எழுத்தில் வடித்துள்ளார். இரவு என அவர் கூறுவது வாழ்க்கையின் இறுதியில் நாம் செல்லும் இடம். அதனை எவ்வாறு தைரியமாக எதிர்கொள்வது என அழகாக உண்மையான விளக்கங்களை அளிப்பது இக்கவிதை. 

இவ்வாறு வாழும் வாழ்க்கையையே தவமாகக் கொண்டு, நமக்கென்று விதிக்கப்பட்ட கடமைகளைச் செவ்வனே செய்து தாமரை இலைத் தண்ணீர்போல எதிலும் ஒட்டாமல், ஆனால் எதனையும் வெறுக்காமல் வாழ்வதே யோகிகள், ஞானிகள் ஆகியோரின் செயல். சாமானிய மனிதர்களுக்கு இது சாத்தியப் படுவதில்லை. எடுத்துக்காட்டாக நாம் பகவான் ரமணரின் வாழ்க்கையையே பார்க்கலாம். தன் உடலையே அதனின்றும் வெளிப்போந்து நின்று பார்த்தவர் ஸ்ரீ ரமணர். உடலும் ஆத்மாவும் வெவ்வேறெனத் தெளிவாக அறிந்தவர் பகவான். உடலை, ‘இது’, ‘அது’, இதற்கு, அதற்கு என மூன்றாம் வகைப் பொருளாகக் கண்டவர். இதனைத் தம் இளம் வயதில் சில சாதனைகளால் உணர்ந்தவர். 

இதனை நாம் எவ்வாறு ஸ்ரீ அரவிந்தரும் தாகூரும் காட்டிய விதத்தில் உணருவது? தாகூர் கூறுவார். இந்த உலகில் வாழ்க்கை எனும் விழாவில் பங்கெடுத்துக்கொள்ள நான் அனுப்பி வைக்கப்பட்டேன். எனக்கான நேரம் முடிந்து விட்டது. உன்னுடன் (இறையுடன்) கலக்கும் தருணம் வந்து விட்டது. என்னைத் தயார் படுத்திக் கொண்டு அவனை, என்னை அழைத்துச் செல்லும் இறைவனின் தூதனை ஆவலாக எதிர்நோக்கியுள்ளேன் என அற்புதமாகத் தனது கவிதையில் வர்ணித்துள்ளார். 


Gitanjali- Poem 16

I have had my invitation to this world’s festival, and thus my life has been blessed. My eyes have seen and my ears have heard.
It was my part at this feast to play upon my instrument, and I have
done all I could.
Now, I ask, has the time come at last when I may go in and see thy face and offer thee my silent salutation?

தமிழாக்கம்:

இந்த உலகின் விழாவிற்கான அழைப்பு எனக்குக் கிடைத்தது, அதனால் எனது வாழ்வு ஆசிர்வதிக்கப்பட்டது, எனது கண்கள் கண்டன செவிகள்  கேட்டன.

இந்த விருந்தின்போது எனது இசைக்கருவியை இசைப்பது எனது பங்கானதனால், நான் என்னால் இயன்றவரை அதனைச் செவ்வனே செய்தேன்.

இப்போது, நான் சென்று உம்மை நேருக்குநேர் சந்தித்து உமக்கான எனது அமைதியான வழிபாட்டினை நடத்தவேண்டிய நேரம் வந்துவிட்டதா எனக் கேட்கிறேன்.


Gitanjali- Poem 90

On the day when death will knock at thy door what wilt thou offer to him?

Oh, I will set before my guest the full vessel of my life—I will never let him go with empty hands.

All the sweet vintage of all my autumn days and summer nights, all the earnings and gleanings of my busy life will I place before him at the close of my days when death will knock at my door.

தமிழாக்கம்:

இறப்பு வந்து உனது கதவைத்தட்டும் அந்நாளில் உன்னிடம் அவனுக்குத் தருவதற்கு என்ன உள்ளது?

ஓ, எனது விருந்தினன் முன்பு எனது வாழ்க்கை எனும் முழுப் பாத்திரத்தையே
வைப்பேன், அவனை வெறுங்கையோடு போக அனுமதிக்க மாட்டேன்.

இறப்பு எனது கதவைத் தட்டும்போது, என் நீண்ட வாழ்க்கையின் இலையுதிர் கால
நாட்களையும், வேனில்கால இரவுகளையும், எனது சுறுசுறுப்பான வாழ்க்கையின்
வரவுகளையும், சேமிப்புகளையும் எனது இறுதி நாட்களின் முடிவில் அவன்முன்
வைப்பேன்.

இக்கருத்துக்களைத்தான் நாம் மேற்காணும் ஸ்ரீ அரவிந்தரின் சானட்டிலும் காண்கிறோம். எப்போது பிறப்பு நிகழ்கின்றதோ அப்போதே இறப்பும் எழுதி வைக்கப்பட்டு விடுகின்றது. அதை நோக்கிப் போகும் பாதை, இருளடைந்தது; இருப்பினும் அயராது பயணித்துச் செல்லும் அந்தப் பாதையையும் தனது காலடித் தடங்களைப் பதித்த பாதையாக்கிவிட்டேன் என உறுதியாகக் கூறுகிறார். 

நாம் வாழ்ந்தோம் என்பது முக்கியமன்று. எப்படி வாழ்ந்தோம், இவ்வுலகில் என்ன அடையாளங்களை விட்டுச் செல்கிறோம் என்பதே முக்கியம்.

இரவுநேர யாத்திரிகன் யாரும் காணாமல் பயணித்துத்தான் தன் இலக்கை அடைகிறான். சிந்திக்கத் தக்கதொரு எண்ணக்குவியல்.


ஸ்ரீ அரவிந்தரின் ஆக்கங்களும் கவிதைகளும்

மாறாத பேரானந்தம் 4. தெய்வீகப் பணியாளன்

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.