4. தெய்வீகப் பணியாளன்

தமிழாக்கம் : மீனாக்ஷி பாலகணேஷ்

ஸ்ரீ அரவிந்தரின் ‘spiritual Sonnets எனும் எட்டுக்கவிதைகளில் இது நான்காவதாகும். 

4. The Divine Worker

I face earth’s happenings with an equal soul;
In all are heard Thy steps: Thy unseen feet
Tread Destiny’s pathways in my front. Life’s whole
Tremendous theorem is Thou complete.

No danger can perturb my spirit’s calm:
My acts are Thine; I do Thy works and pass;
Failure is cradled on Thy deathless arm,
Victory is Thy passage mirrored in Fortune’s glass.

In this rude combat with the fate of man
Thy smile within my heart makes all my strength;
Thy Force in me labours at its grandiose plan,
Indifferent to the Time-snake’s crawling length.

No power can slay my soul; it lives in Thee.
Thy presence is my immortality.

4. தெய்வீகப் பணியாளன்

நான் பூமியின் நடப்புகளை சரிசமமான நோக்கில் எதிர்கொள்கிறேன்;
அவையனைத்திலும் உங்கள் காலடியோசை கேட்கிறது: காணவியலாத
தங்கள் பாதங்கள்
ஊழின் பாதைகளில் என்னெதிரே நடை பயில்கின்றன.
வாழ்க்கையின் முழுதான
பேராற்றல் வாய்ந்த மெய்யாதார முடிவு முழுமையாகத் தாங்களே.

என்னுடைய ஆன்மாவின் அமைதியை எந்த ஆபத்தும் குலைக்க இயலாது:
எனது செயல்கள் உம்முடையவை; நான் உமது செயல்களைச்
செய்துவிட்டுச் செல்கிறேன்;
உமது இறப்பற்ற கரங்களில் தோல்வியானது தொட்டிலாடுகிறது,
வெற்றி உமது பாதையாக அதிர்ஷ்டத்தின் கண்ணாடியில் பிரதிபலிக்கிறது.

மானிடனின் விதி உடனான இந்தக் கடினமான சண்டையில்
எனது இதயத்துள் உமது புன்னகை எனக்கு வலிமையை உண்டாக்குகிறது;
பொழுது எனும் பாம்பு ஊர்ந்துசெல்லும் நேரத்தைப் புறக்கணித்து
உமது பலம் என்னுள் பெருத்ததொரு செயலுக்காக உழைக்கிறது.

என் ஆத்மாவை எந்த சக்தியாலும் அழிக்க இயலாது; அது உம்மில் வாழ்வதனால்.
தங்கள் இருப்பே எனது அழிவற்ற தன்மையாகும்.


இது ஸ்ரீ அரவிந்தரின் இறையுடனான இன்னொரு சம்பாஷணை எனலாமா?

எங்கும் எதிலும் இறைமையைக் கண்டு களிகொள்ளும் உள்ளம் அவருடையது.

திரும்பத் திரும்பத் தம் வாழ்வுடன் அவ்விறைமை பின்னிப் பிணைந்திருப்பதனை இந்தக் கவிதையில் பதிவு செய்துள்ளார். 

‘இறப்பற்ற ரோஜா’வில் திரு பண்டிட் அவர்கள் இக்கவிதையின் சில வரிகளை விளக்கியுள்ளதனைக் காணலாம்.

காணவியலாத தங்கள் பாதங்கள் ஊழின் பாதைகளில் என்னெதிரே
நடை பயில்கின்றன.

‘வாழ்க்கை நாம் காண்பதைப் போன்றதல்ல; அதன் நிகழ்வுகளும் சந்தர்ப்பவசத்தாலோ அல்லது வெளிச் சூழ்நிலைகளாலோ அல்ல. எல்லாம் முன்கூட்டியே நிச்சயிக்கப்பட்டவை. உமக்கும் இவ்வுலகுக்கும் தெய்வச்செயலாக எல்லாமே திட்டமிடப்பட்டுள்ளன. கடவுளின் கரங்களே விருப்பங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் ஊடாக தளங்களிடையே உம்மை அழைத்துச் செல்கின்றன. விதி எனக் கூறப்படுவது தலைவனாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும் ஒருவனின் காலடித்தடங்களே. கண்கள் அவனின் அந்த அடிகளைத் தம்முன் காணாதும், காதுகள் அவன் நடை ஒலியைக் கேளாமலும் இருப்பினும் ஆத்மா அதனை உணரும். ஆகவே அதனைக் கேட்பாயாக.

வாழ்க்கையின் முழுதான பேராற்றல் வாய்ந்த மெய்யாதார முடிவு
முழுமையாகத் தாங்களே.

வாழ்க்கை ஒரு புதிர். அது இருமைகளான மகிழ்ச்சி- வலி, வெற்றி – தோல்வி, அதீதமான ஒளி – தெளிவின்மை, தேர்வெடுப்பது – அடிமைப்பட்டுக் கிடப்பது என இவற்றால் குழப்பமடைந்துள்ளது. வாழ்க்கைக்குப் பொருள் இருக்கிறதா? நோக்கம் உண்டா? இல்லை அது கொடிய கனவென்று எண்ணி அதனின்றும் விழித்தெழுந்து வெளியேறி விடலாமா?

அதற்கான பொருளைக் காணாதவரை வாழ்க்கை என்பது முரண்பாடுகளைக் கொண்டதாகவே இருக்கும். அந்த அறியவேண்டிய பொருள் இறைவனே. அவனே தொடக்கம், ஆதாரம், உட்பொருள் அனைத்தும் ஆவான். வாழ்க்கை எனப்படும் இயக்கத்திற்கு அவனே பொருளும் இலக்கும் ஆகிறான். இறையின் அசைவே வாழ்க்கை. ஒவ்வொரு நொடியும் அவனுடைய மூச்சு என உணர்ந்துகொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை உன்னதமான முக்கியத்துவத்தை அடைகிறது. இறைவனை அறிய இதுவே ஒரு நல்ல வாய்ப்பு – இது பண்டிட்ஜியின்  வியாக்கியானம்.

என்னுடைய ஆன்மாவின் அமைதியை எந்த ஆபத்தும் குலைக்க இயலாது:

வாழ்க்கை எத்தனையோ கவலைகளும் ஆபத்துகளும் நிறைந்தது. அவை மனதைக் குழப்பத்திலாழ்த்தியும், இதயத்தை வேகமாகத் துடிக்க வைத்தும், உடலைச் சில்லிடவும் செய்கின்றன. மனதைக் கட்டியாள்வதன் மூலம் இவற்றை அமைதிப்படுத்த இயலும். ஸ்வயம் என்பது அசைக்க இயலாதது, அமைதியானது. அதனை நம்முள் அறிந்து கொண்டால் எப்போதுமே அமைதியாக இருப்போம்.

எனது இதயத்துள் உமது புன்னகை எனக்கு வலிமையை உண்டாக்குகிறது;

பல திக்குகளிலிருந்தும் எதிர்பாராமல் வரும் சவால்களை சந்தித்து வாழ்வதற்கு மனிதப் பிரயத்தனத்தால் இயலாது. எந்த மானுட சக்தியுமே இதனை எதிர்கொள்ளும் வலுவற்றது. ஆத்மாவின் நிரந்தரமான மகிழ்ச்சி தெய்வத்தின் புன்னகை ஒன்றினாலேயே கிடைப்பது. அது அனைவரையும் இன்பம் கொள்ளச்செய்தும் உண்மையின் வடிவாகவும் திகழ்கிறது.

பண்டிட்ஜியின் ஆழமான விளக்கங்கள் ஸ்ரீ அரவிந்தரின் கருத்துக்களை தெளிவாக விளக்குகின்றன.இவற்றை உள்ளத்தில் அசைபோட்டுத்தான் நாம் அதன் பொருளை உணர முடியும்.


பார்வை நூல்கள்:

1. ஸ்ரீ அரவிந்தரின் கவிதைகள்- (‘Spiritual Sonnets’)

2. Deathless Rose- by M P Pandit.

ஸ்ரீ அரவிந்தரின் ஆக்கங்களும் கவிதைகளும்

5. இரவுநேர யாத்திரிகன் 3. சரணடைதல்

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.