- ஸ்ரீ அரவிந்தரின் நெருப்புப் பறவை – ஒரு பார்வை
- ஊர்வசி – அரவிந்தரின் பார்வையில்
- ‘ஊர்வசி – விக்ரமோர்வசீயம்’
- ஊர்வசி காதலில் கண்விழித்தாள்!
- ‘ஊர்வசியின் களிப்பு- புரூரவஸின் சலிப்பு’
- இழப்பினில் அடைந்த காதல் சுவர்க்கம்
- அதிர்ஷ்டம் வாய்ந்த சுவர்க்கத்தின் துரதிர்ஷ்டம்!
- தனிமையின் பிடியில் புரூரவஸ்
- புரூரவஸ் செய்த பாவம் – அழகு, காதல்
- மாறாத பேரானந்தம்
- 5. இரவுநேர யாத்திரிகன்
- 4. தெய்வீகப் பணியாளன்
- 3. சரணடைதல்
- நீ இவ்வாறு இருப்பதனால் / ஏனெனில் நீவிர்
- பிறப்பு எனும் அதிசயம்
- 8. கிருஷ்ணா
தமிழாக்கம் : மீனாக்ஷி பாலகணேஷ்
ஸ்ரீ அரவிந்தரின் ‘ஸ்piritual Sonnets எனும் எட்டுக்கவிதைகளில் மூன்றாவது இது – ‘சரணடைதல்’ எனும் தலைப்பிலானது.
Surrender1
O Thou of whom I am the instrument,
O secret Spirit and Nature housed in me,
Let all my mortal being now be blent
In Thy still glory of divinity.
I have given my mind to be dug Thy channel mind,
I have offered up my will to be Thy will:
Let nothing of myself be left behind
In our union mystic and unutterable.
My heart shall throb with the world-beats of Thy love,
My body become Thy engine for earth-use;
In my nerves and veins Thy rapture’s streams shall move;
My thoughts shall be hounds of Light for Thy power to loose.
Keep only my soul to adore eternally
And meet Thee in each form and soul of Thee.
சரணடைதல்
ஓ, யாருடைய கரங்களில் நான் கருவியாக உள்ளேனோ அவரே,
ஓ, என்னில் உறைந்திருக்கும் இயற்கையின் ரகசியமான தெய்வவடிவே
எனது அழியக்கூடிய தன்மை இப்போது தங்களது
நிலையான தெய்வத்தன்மையின் புகழுடன் இணையட்டும்.
எனது உள்ளத்தை தங்கள் கால்வாய் வழியெனக் கொண்டு
தோண்டுவதற்குக் கொடுத்துள்ளேன்.
எனது விருப்பத்தைத் தங்களது விருப்பத்திற்காக அர்ப்பணித்துள்ளேன்:
நமது தெய்வத்திறனுடையதும் வர்ணிக்க முடியாததுமான
சங்கமத்திற்கு எனது எதுவும் மீதமிருக்க வேண்டாம்.
எனது இதயம் தங்கள் அன்பால் உலகத் துடிப்புகளால் உடன் சேர்ந்து அதிரும்:
எனது உடல் இந்த பூமியின் உபயோகத்திற்காகத் தங்களது இயந்திரமாகும்;
எனது ரத்தநாளங்களிலும் நரம்புகளிலும் தங்கள் ஆனந்தப் பரவசத்தின்
ஊற்றுகள் ஓடும்;
எனது எண்ணங்கள் தேடும் விளக்குகளாகி உங்கள் ஆற்றலில் தம்மை இழக்கும்.
எனது ஆத்மாவை மட்டும் எப்போதும் (தங்களைப்) போற்றுவதற்காகவும்
ஒவ்வொரு வடிவத்திலும் தங்களது ஆன்மாவைச் சந்திப்பதற்காகவும் வைத்திருப்பீர்.

படித்ததுமே புரிந்துவிடும் – இது பூரண சரணாகதி.
எது மனிதனை அசக்தனாக்கி, எதுவோ ஒன்றில் சரணடைய வைக்கிறது? இயலாமையா? நம்பிக்கையா? இல்லை வேறு ஏதோவா? ஒன்று மட்டும் நன்கு விளங்குகிறது. நன்மையிலும் தீமையிலும் நாம் நமக்குத் துணையாக வேறு ஒன்றில் இணைந்திருக்க விரும்புகிறோம்; அது நம்மை மீறிய ஒரு சக்தியாக இருக்க வேண்டும்; நம்மை அரவணைக்க வேண்டும்; நமக்குத் துணையாக, பலமாக இருக்க வேண்டும். அதுவே நாம் சாய்ந்துகொள்ள ஒரு தோள்; அடைக்கலம் புகும் தாயின் மடி. சிலருக்கு அது தெய்வ சக்தி; இன்னும் சிலருக்கு அது மற்றொருவரின் துணை. எது எப்படியோ, சரணாகதி தரும் நிம்மதியும் காப்புணர்வும் நம்மை இடையறாது வழிநடத்துகின்றன என்பதில் வேறு கருத்து கிடையாதல்லவா?
பெரும் அறிஞர்களே சரணாகதியைக் கூறி வலியுறுத்துகிறார்கள்!
தாகூரைப் பார்ப்போமா? மேற்காணும் அரவிந்தரின் பாடலின் பிரதிபலிப்பாகவே இந்தப் பாடலும் அமைந்துள்ளது வியக்கத்தான் வைக்கிறது.
Gitanjali2
LET ONLY THAT little be left of me whereby I may name thee my all.
Let only that little be left of my will whereby I may feel thee on every side,
and come to thee in everything, and offer to thee my love every moment.
Let only that little be left of me whereby I may never hide thee.
Let only that little of my fetters be left whereby I am bound with thy will,
and thy purpose is carried out in my life-and that is the fetter of thy love.
தமிழாக்கம்:
தாங்களே என்னுடைய எல்லாம் என கூறிக்கொள்ளும் வண்ணம் என்னுடைய சிறுபகுதி ஒன்றே எஞ்சியிருக்கட்டும்.
உங்களை எல்லாப் பக்கங்களிலும் உணர்வதற்காகவும், எல்லாவற்றிற்கும் உங்களிடமே வரவும், எனது அன்பை உங்களுக்கு எல்லாப்பொழுதுகளிலும் அர்ப்பணிப்பதற்காகவும் எனது வி ருப்பத்தின் சிறுபகுதி ஒன்றே எஞ்சியிருக்கட்டும்.
உங்களை ஒளித்துவைக்க இயலாதபடி, எனது சிறுபகுதி எஞ்சியிருக்கட்டும்.
உங்களது விருப்பத்தில் என்னைப் பிணைத்துக் கொள்ளும்படிக்கு, உங்களது செயல்நோக்கம் எனது வாழ்வில் செயல்படுத்தப்படும்படிக்கு எனது தளைகள் சிறிதே விட்டு வைக்கப்படட்டும்; அவையே உமது அன்பின் தளைகள்.
மேற்காணும் கருத்துக்கள் இறையுணர்வை மட்டுமே பிரதிபலிக்கவில்லை; இது ஆழந்த அன்பின், நேசத்தின் அடையாளம். தன்னையே இழந்துவிடத் துடிக்கும் தவிப்பின் வெளிப்பாடு. காதலாகவும் இருக்கலாம்; பக்தியாகவும் கொள்ளப்படலாம்.
நேற்றைய சமுதாயத்தில் உறவின் பிரதிபலிப்புகள் பெரும்பாலும் இதன் அடிப்படையிலேயே இருந்தன; உருப்பெற்றன. நாம் எல்லாம் அதன் அடுத்த தலைமுறை வாரிசுகள். நமக்கும் அடுத்த தலைமுறை இவற்றில் நம்பிக்கை கொள்வதா வேண்டாமா எனச் சிந்திப்பதாகக் காணப்படுகிறது.
பூரண சரணாகதி என்பது ஒரு அடிப்படை வைணவத் தத்துவம்.
‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு3′ என்கிறார் திருவள்ளுவர்.
இறைவன் ஒருவனே பற்றுகளை விட்டொழித்தவன். அவனது தாள்களைப் பிடித்துக் கொண்டால் நமது பற்றுகளையும் விட இயலும் என்பதே இதன் பொருள்.
பூரண சரணாகதி பற்றிய பல செய்திகள் உண்டு.
அரசர் திருமலை நாயக்கரிடம் அமைச்சராக பணிபுரிந்த நீலகண்ட தீட்சிதர் மீனாக்ஷி அம்மையினிடம் பெரும் பக்தி கொண்டவர். ஒருமுறை மன்னரின் சந்தேகத்திற்கு உள்ளாகி மன்னர் அவர் கண்களைப் பறிக்க உத்தரவிடுகிறார். இதனை ஞானதிருஷ்டியால் அறிந்து கொண்ட தீட்சிதர், பூஜை சமயம் வைத்திருக்கும் கற்பூர ஆரத்தியால் கண்களைத்தாமே பறித்துக் கொண்டுவிடுகிறார். தன் தவற்றினை உணர்ந்துகொண்ட அரசர், தீட்சிதரின் கால்களில் விழுந்து மன்னிப்புவேண்ட, அப்போது மன்னரின் புகழுக்குக் களங்கம் வராமல் தனது கண்பார்வையைத் திரும்ப அளிக்குமாறு அன்னையிடம் வேண்டிக்கொண்டு அவர் இயற்றிய சமஸ்கிருத நூலே ஆனந்தசாகர ஸ்தவமாகும்.
இதனைத் தமிழில் எழுத்து பிசகாமல் மொழியாக்கம் செய்தவர் இரு மொழிகளிலும் வல்லுனரான கோவை கவியரசு நடேச கவுண்டராவார். (இவர் எனது பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய பேராசிரியர் காலஞ்சென்ற உயர்திரு. கோ. ந. முத்துக்குமாரஸ்வாமி அவர்களின் தகப்பனார்) இந்நூலின் பெயர் இன்பமாகடல்4. இதிலிருந்து மீனாட்சியன்னையிடம் சரணாகதி அடைந்துவிட்ட நிலையை ஒரு குழந்தையின் பாசத்துடனும், கையறு நிலையிலுமாகி தீட்சிதர் பாடியுள்ள ஓரிரு பாடல்களைக் காண்போம்.
நாட்டுப்புறத்து ஏழை மக்கள் நகரத்தில் வாழும் நாகரிக மனிதரைக் கண்டு அதிசயப்படுவது போல, தேவர்களை இம்மாநிலத்தில் வாழும் மனிதர்கள் மதித்து வாழ்வார்கள். அம்பிகையே! உன் திருவடிகளை உறுதியாக இறுகப் பற்றிய என் சிந்தையானது, எவர் வலிந்து பிடித்து இழுத்தாலும் எள்ளளவும் உன்னை விட்டுப் பிரியாது. பட்டிதொட்டி என்பது சிறு கிராமங்களைக் குறிக்கும்.
பட்டிதொட்டி வாழ்மாக்கள் பட்டினம்வாழ்
நரைவியந்து பார்க்கு மாபோல்
மட்டறுபேர் அதிசயத்தால் வானவரை
மண்ணவர்கள் மதித்து வாழ்க.
திட்டமுற நின்றாளைச் சிக்கெனப்பற்
றியஎனது சிந்தை தாயே
எட்டனையும் விட்டகலா தெவர்வலிந்து
பிடித்து முயன் றீர்த்தா லும்மே4. (5)
எனக்கு நலம் தருவதை நான் அறியேன்; அதை அடைவதற்கு வழியும் அறியேன். ஏழையேன். ஐயோ! எனக்கு விதி விலக்கு அறிந்து நடக்கவும் முடியாதே. என்ன செய்வேன்? அழகிய மீன் போலும் கண்ணாளே! இனி எனக்கு நன்மை செய்வார் உன்னையன்றி வேறு யாருளார்? உன் திருவடிகளையே தஞ்சமாக அடைந்தேன்
எனக்கினிய தறியேனான் அதை அடையும்
வழியறியேன் எளியேன் அந்தோ!
எனக்குவிதி விலக்கறிந்து நடப்பதற்கும்
இயலாதே, என்செய் கேனோ?
எனக்கினிய தயைத்தாயே! எவ்வுலகும்
தருந்தாயே! எழில்மீ னாட்சி!
எனக்கினியார் இனியார்? மற் றுன்சரணே
சரணாக எய்தி னேனே4 (32)
சரண் இரண்டில் முதலாவது பொருள் திருவடி. இரண்டாவது பொருள் புகலிடம். தம்முடைய இயலாமையைக் கூறித் தேவியின் திருவடிகளில் ஆசிரியர் தஞ்சம் அடைகின்றார். இதுவே சரணாகதி எனப்படும். ஒருவருக்கு அவரைவிட இறைவனே அவரிடம் இனியவன், அன்புடையவன் என்பது புலப்படுகிறது.
மாணிக்க வாசகர், திருவாசகத்தின் குழைத்த பத்தில் கூறுகிறார்:
‘வேண்டத்தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ5.’
அறியாத சிறு குழந்தைக்கு, அதற்கு வேண்டுவது என்னவென்று தாய் அறிந்து செய்வதனைப்போல, இறைவனும் நாம் நியாயமாக வேண்டுவதனை அறிவான்; அவற்றை முழுமையாகவும் அளிப்பான்’ எனச் சரணடைந்து விடுகிறார் அவர்.
‘நம்பினோர் கெடுவதில்லை, நான்குமறைத் தீர்ப்பு6‘ என்பது பாரதியாரின் வாக்கு. இதில் நம்புவது என்பது அடிப்படையில் சரணடைதல் எனும் பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் அடுத்த வரிகள். ‘அம்பிகையைச் சரணடைந்தால் அதிக வரம் பெறலாம்’ என்பதுதான்!
இவ்வாறு எத்தனை எத்தனையோ எடுத்துக்காட்டுகள்.
ஸ்ரீ அரவிந்தரின் எழுத்துக்களை ஆழ்ந்து கற்று, சிந்தித்து, ஆய்வும் செய்து ‘இறப்பற்ற ரோஜா’ (Deathless Rose7) எனும் அருமையான சிறு நூல் ஒன்றினை எழுதியுள்ளார் திரு எம். பி. பண்டிட் அவர்கள். அவர் தம் நூலின் முன்னுரையில் கூறுகிறார்: ‘இயக்கம் சார்புடைய தியானம் என்பதற்கு இயக்கம் சார்புடைய பொருள் வேண்டும். ஆகவே இந்த விளக்கங்களை எழுதியுள்ளேன்’ என்கிறார். ‘ ஸ்ரீ அரவிந்தரின் ஒவ்வொரு சொற்றொடரும் மந்திர சக்தியின் ஆற்றல் நிறைந்து அதன் பயனாக இலங்கும் அனுபவங்களை எழுப்புகிறது.’
‘எனது இதயம் தங்கள் அன்பால் உலகத் துடிப்புகளால் உடன் சேர்ந்து அதிரும்’ என்பதனை விளக்குகிறார்.
உயிரியக்கத்திற்கான மையமான இதயம், உணர்வுகளின், உணர்ச்சிகளின் மையம் கூட. அனைத்தும் நமது ‘நான்’ எனும் முனைப்பில் வேர்கொண்டு அதனைச் சுற்றியே சுழல்கிறது. இந்த நான் எனும் நினைப்பை அறவே ஒதுக்கி, விட்டொழித்து இறைமையே எல்லாவற்றிலும் ஓங்கி நிற்கிறது என்பதனை உணர்ந்தால் அதுவே இறை அன்பு ஆகும் என்ற கருத்தையே இது தெரிவிக்கிறது.
எனது உடல் இந்த பூமியின் உபயோகத்திற்காகத் தங்களது இயந்திரமாகும்;
இந்த வரிகளினால் விளங்குவது என்னவெனில், நாம் முன்பொரு கட்டுரையில் கண்டபடி, உடலினைப் போற்றுவது என்பதே. இறைமையின் செய்கைகளுக்கு நம் உடல் கருவி. நமது ஆன்மா வளர உடலைப் போற்றிப் பேண வேண்டும்.
எனது ரத்தநாளங்களிலும் நரம்புகளிலும் தங்கள் ஆனந்தப் பரவசத்தின் ஊற்றுகள் ஓடும்;
நமது உடலின் நரம்புகள் அன்பு, வலி ஆகிய தொடுகைகளுக்கு ஆளாகி வாழ்வை அனுபவிக்கப் பழகிக் கொண்டு விட்டன. அவற்றை வெளிப்புற உணர்வுகளின் விசையினின்று மீட்டெடுத்து அமைதிப்படுத்தி உயர்மட்டமான ஆற்றலை உள்வாங்கப் பழக்கவேண்டும். இவையே பின்பு இறைமையைக் கொண்டாடும் பாதைகளாக மாறிவிடும்.
எனது ஆத்மாவை மட்டும் எப்போதும் (தங்களைப்) போற்றுவதற்காகவும் ஒவ்வொரு வடிவத்திலும் தங்களது ஆன்மாவைச் சந்திப்பதற்காகவும் வைத்திருப்பீர்.
உள்ளத்தை, மனதை, ஆற்றலை, உடலை என அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணித்து விட வேண்டும். ஆன்மாவைமட்டும் நம்மிடமே வைத்துக்கொண்டு இறைமையையும் அதன் இனிமையையும் அனுபவிக்க வேண்டும்.
பூரண சரணாகதி- எத்தனை இனிமையானது? நம்மால் அதனை அடைய இயலுமா? சிந்திப்பதற்குரியது!!
——————————————————–
பார்வை நூல்கள்:
Deathless Rose- by M P Pandit.
ஸ்ரீ அரவிந்தரின் கவிதைகள்- (‘Spiritual Sonnets’)
கீதாஞ்சலி- தாகூர்
திருக்குறள்
இன்பமாகடல்- கு. நடேச கவுண்டர்
திருவாசகம்- குழைத்த பத்து – மாணிக்கவாசகர்
பாரதியார் பாடல்கள்
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
