- ஸ்ரீ அரவிந்தரின் நெருப்புப் பறவை – ஒரு பார்வை
- ஊர்வசி – அரவிந்தரின் பார்வையில்
- ‘ஊர்வசி – விக்ரமோர்வசீயம்’
- ஊர்வசி காதலில் கண்விழித்தாள்!
- ‘ஊர்வசியின் களிப்பு- புரூரவஸின் சலிப்பு’
- இழப்பினில் அடைந்த காதல் சுவர்க்கம்
- அதிர்ஷ்டம் வாய்ந்த சுவர்க்கத்தின் துரதிர்ஷ்டம்!
- தனிமையின் பிடியில் புரூரவஸ்
- புரூரவஸ் செய்த பாவம் – அழகு, காதல்
- மாறாத பேரானந்தம்
- 5. இரவுநேர யாத்திரிகன்
- 4. தெய்வீகப் பணியாளன்
- 3. சரணடைதல்
- நீ இவ்வாறு இருப்பதனால் / ஏனெனில் நீவிர்
- பிறப்பு எனும் அதிசயம்
- 8. கிருஷ்ணா

ஸ்ரீ அரவிந்தரின் எட்டுக்கவிதைகள் ‘Spiritual SONNETS ‘ எனும் தலைப்பின்கீழ் காணப்படுகின்றன. spiritual எனும் சொல்லுக்குப் பொருள் தேடினால்1 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில- தமிழ் அகராதியில் கீழ்க்காணும் இத்தனை பொருள்கள் விரிகின்றன.
spiritual – n. அகநிலைச் செய்தி, அமெரிக்கரின் சமயப்பாடல், (பெ.) அகநிலையான, ஆன்ம இயலான, பருப்பொருட் சார்பற்ற, உடற் சார்பற்ற, உயிர் சார்ந்த, உயிரின் உள்ளியல்புக்குரிய, உயிர் நலஞ் சார்ந்த, தெய்வநிலைக்குரிய, திருநிலையான, சமய ஒழுக்கத்துக்குரிய, புனிதமான தெய்வத்தூண்டுதலுடைய, அகத்தூண்டுதல் சார்ந்த, இறையருள் சார்ந்த, சமயத்துறை சார்ந்த.
இவற்றுள்ளிருந்து நமக்குத் தேவையான ஒன்றை நாமே தேர்ந்துகொள்ள வேண்டும்.
ஸ்ரீ அரவிந்தர் ஆங்கிலத்தில் மிகப்பல செய்திகளை எழுதி வைத்துள்ளார். இவை நமக்குக் கிடைத்த பொக்கிஷங்கள்2. விந்தையிலும் விந்தை என்னவென்றால் நான் முதுநிலைக் கல்வி பயின்றது ஜிப்மர் பாண்டிச்சேரியில் தான். ஆசிரமத்திற்கு அகர்பத்திகள் அல்லது அதீத ருசி கொண்ட வங்காள உணவிற்காக மட்டுமே நண்பர்களுடன் செல்வதுண்டு, ஆன்மீக சிந்தனை எல்லாம் அந்த வயதில் இருந்ததே இல்லை. சென்ற வருடம் ஒரு அருமை நண்பரின் தூண்டுதலின்பேரில் ஸ்ரீ அரவிந்தரின் எழுத்துக்களைப் படிக்கத் தொடங்கினேன்; ஈர்க்கப்பட்டேன். இதுவும் ஒருவிதமான இறையருளே என எண்ணி மகிழ்ச்சியடைந்தேன். மொழிபெயர்க்க ஆவல் கொண்டேன். நன்றாக வந்துள்ளதோ எனச் சிந்தித்தேன்; பின் எனக்கானவை இவை. இன்னும் நான்குபேர் படித்தால் நன்மையே எனும் எண்ணத்தில் இங்கு பகிர்கிறேன்.
The Miracle of Birth
I saw my soul a traveller through Time;
From life to life the cosmic ways it trod,
Obscure in the depths and on the heights sublime,
Evolving from the worm into the god.
A spark of the eternal Fire, it came
To build a house in Matter for the Unborn.
The inconscient sunless Night received the flame,
In the brute seed of things dumb and forlorn
Life stirred and Thought outlined a gleaming shape
Till on the stark inanimate earth could move,
Born to somnambulist Nature in her sleep,
A thinking creature who can hope and love.
Still by slow steps the miracle goes on,
The Immortal’s gradual birth mid mire and stone.
பிறப்பு எனும் அதிசயம்.
எனது ஆத்மா காலவெள்ளத்தில் ஒரு யாத்ரீகனாக இருப்பதனைக் கண்டேன்.
ஒரு பிறப்பிலிருந்து அடுத்த பிறவிக்கு அது இயலுலக அண்டத்துக்குரிய வழிகளில் மெல்ல நடந்தது.
ஆழங்களில் தெளிவாகப் புலப்படாமலும் உயரங்களில் பெருமிதப் போக்குடனும், புழுவிலிருந்து கடவுள் வரை பரிணாம வளர்ச்சியில் (பயணித்தது).
நிலையான நெருப்பினின்று ஒரு பொறியாக, அது வந்தது
இன்னும் பிறந்திராத சடப்பொருளில் ஒருவீட்டைக் கட்ட.
பேச்சற்ற, கைவிடப்பட்ட, முரட்டுத்தனமான பொருட்களின் விதையில்
பொறுப்பற்ற, சூரியனற்ற இரவு அந்த நெருப்பை ஏற்றுக் கொண்டது,
உயிர் கிளர்ந்தெழுந்தது; எண்ணங்கள் பளிச்சிடும் அதன் வடிவைக் காட்டின
கலப்பற்ற மந்தமான பூமி நகரமுடியும்வரை,
சிந்திக்க முடிந்த ஒரு உயிரினம் நம்பிக்கைக்கும் அன்பு செய்வதற்கும்
உறக்கத்தில் நடைபயிலும் இயற்கை அவளுடைய உறக்கத்தில் பெற்றெடுத்தது.
இருப்பினும் நிதானமான இயக்கங்களில் இந்த அதிசயம் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது,
அழிவற்றதன் முறையான பிறப்பு சேற்றுக்கும் கற்களுக்கும் இடையே.
இந்தப் பிறப்பும், இறப்பும் என்றென்றும் அதிசயம்தான்; அதனைப்பற்றி நாம் என்றாவது அமைதியாக உட்கார்ந்து சிந்தித்திருக்கிறோமா? அதுதான் இல்லை. ஆனால் பேரறிஞர்களுக்கு அது என்றென்றும் புதிராகவே தோன்றியுள்ளது. அதனாலேயே பலவிதமான விளக்கங்களும் தந்து சென்றுள்ளனர்.
நாம் இப்பிறவியில் செய்யும் பாவ புண்ணியங்களுக்கேற்ப அடுத்த பிறவி அமையும் என்பார்கள். ஆனால் அதனால் நாம் இப்பிறவியில் தவறுகள் இழைக்காமலோ புறம் பேசாமலோ இருக்கிறோமா என்றால் இல்லை. எல்லாவற்றையும் செய்துவிட்டு, கடவுள்முன்பு போய்நின்று வேண்டிக் கொண்டால் மன்னிப்புக் கிடைத்துவிடும் எனவொரு அற்ப எண்ணம்!
பிறக்கும்போதும் அழுகின்றாய்
இறக்கும்போதும் அழுகின்றாய்
ஒருநாளேனும் கவலையில்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே!
என கருத்துப் பொதிந்த திரைப்பாடல். பிறந்ததும் புரியாத உலகத்துக்குள் வந்துவிட்டதற்கான அழுகை- திசை தவறிவிட்ட பயம்- ஒருவழியாகச் சிறிது வளர்ந்து உலக வாழ்க்கை என்னவென்று பிடிபட்டதும், மெத்தனம்; எல்லாம் அறிந்த நினைப்பு. வந்த வழியைப் பற்றிய எண்ணமே மறந்துவிடுகின்றது. பின்பு இறக்கும்போதும் எங்கே செல்கிறோமோ எனும் பயத்தில் அழுகை; சொத்து, உறவுகளை விட்டுச்செல்லும் ஏக்கம், இங்கேதான் மதாலஸாவின் உபதேச மொழிகளை நாம் நினைவில் இருத்திக்கொல்ள வேண்டும். பெரும்பாலானோருக்கு அவை சாத்தியமே இயல்லை.
நம் பிறவிக்கான காரணத்தையாவது முழுமையாக உணர்கிறோமா?
நமக்கு செயல்களைச் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டு; நாம் நல்லவர்களாகவும் நம்பிக்கைக்குரியவர்களாகவும்தான் பிறக்கிறோம். கனவுகளுடனும் உயர்ந்த சிந்தனைகளுடனும் பிறக்கிறோம். பெருமையுடையவர்களாக ஆவதற்காகவே பிறக்கிறோம். இறக்கைகளுடன் பிறக்கிறோம். இயலாமையில் தவழ்ந்து செல்வதற்காக நாம் இல்லை.
இறக்கைகளை உபயோகித்து அவற்றை விரித்துப் பறக்கக் கற்றுக்கொள் என்கிறார் ரூமி.
இவற்றில் ஓரிரண்டையாவது செய்தால் நம் பிறவி நோக்கம் ஈடேறி விடாதோ?

தாகூரின் அருமையான கவிதை, தாய் – சேயின் உரையாடலாக, பிறப்பைப் பற்றிக் கூறுகிறது.
பிறப்பின் கதை3 எனும் தலைப்பில் அமைந்த, தாகூராலேயே ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்ட கவிதையின் தமிழ் மொழியாக்கம்:
குழந்தை தாயிடம் கேட்கிறது,
நான் எங்கிருந்து வந்தேன்,
என்னை எங்கு கண்டெடுத்தாய்?
அவளைக் கண்ணீருடன் இறுக அணைத்தபடி.
சிரித்தபடியே தாய் சொல்லுவாள்,
‘நீ எனது உள்ளத்தில் இருந்தாய்
நான் சிறுமியாக இருந்தபோது
பொம்மைகளுடன் விளையாடும்போது
எனது ஆழமான ஆசையில் என்னுடன் இருந்தாய்.
காலையில் சிவபெருமானை வழிபடும்போது
ஒவ்வொரு முறையும் உன்னை ஆக்கியும் அழித்தும் செய்தபடி
இருந்தேன்.
கருவறையில் நீ என் கடவுளுடன் இருந்தாய்
அவருடன் சேர்த்து நான் உன்னையும் வழிபட்டேன்.
எனது நம்பிக்கைகளுடனும் ஆசைகளுடனும் நீ இருந்தாய்
எனது அன்பில் நீ இருந்தாய்
எனது அன்னை, பாட்டியினுடைய உள்ளங்களில் இருந்தாய்
எத்தன நாட்கள் என நானறியேன்
நமது பழமையான வீட்டில்
நம் குலதெய்வத்தின் மடியில்
நீ உன்னை ஒளித்துக் கொண்டிருந்தாய்
நான் எனது இளமையில் மலராக மலர்ந்ததும்
நீ என்னில் இனிய நறுமணமாக இருந்தாய்
உனது மென்மையுடனும் இனிமையுடனும்
எனது ஒவ்வொரு உறுப்பிலும் இருந்தாய்.
எல்லாத் தெய்வங்களுக்கும் பிரியமான நீ,
நீ சாஸ்வதமானவள் ஆயினும் புதியவள்
காலைச் சூரியனின் வயதுதான் உனக்கும்
பிரபஞ்சத்தின் கனவிலிருந்து
எப்போதும் இவ்வுலகில் பெருக்கெடுக்கும்
ஆனந்தத்தில் பெருவெள்ளத்தினுடன்
நீ என்னிடம் மிதந்து வந்தாய்.
உன்னை நோக்கி ஆச்சரியத்தில் விழித்து நோக்கி
உனது புதிரை விடுவிக்க நான் மறக்கிறேன் —
எல்லாருக்கும் உரிமையான ஒன்று
எவ்வாறு என்னிடம் மட்டுமே வந்திருக்கிறது?
உனது உடலை எனது உடலால் அணைத்தபடி
இந்த உலகில் நீ என் குழந்தையாக வந்திருக்கிறாய்.
ஆகவே உன்னை நான் என் நெஞ்சோடு இறுகப் பிணைத்துக்
கொள்கிறேன்.
நீ சிறு பொழுதாவது என்னிடமிருந்து பிரிந்தால் அழுகிறேன்
உலகிற்கே கண்ணான உன்னை இழந்துவிடுவேனோ
எனும் பயத்தில் எப்போதும் தவிக்கிறேன்.
உன்னை எவ்வாறு எந்த மந்திர சக்தியினால்
பிணைப்பதென அறியாமல் இருக்கிறேன்.’
பிறப்புக்கும் அதன் மாய வசீகர சக்திக்கும் வேறேது விளக்கம் வேண்டும்?
அறிவியல் பூர்வமாகப் பார்த்தால், எந்த ஒரு உயிரினமும் அழிந்துபோகாமல் காப்பதற்கென்றே இயற்கையினால் ஏற்படுத்தப்படத் நிகழ்ச்சியாகப் பிறப்பு தோன்றுகிறது.
திருவள்ளுவரும்,
‘உறங்குவது போலும் சாக்கா டுறங்கி
என்றார்
விழிப்பது போலும் பிறப்பு.’4.
இறப்பு எனப்படுவது ஒருவனுக்கு உறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது. வள்ளுவர் இதனை வாழ்க்கையின் ஒரு நிகழ்வாக எடுத்துக் கொள்கிறார் என்றே எண்ணத்தோன்றுகிறது.
பல பெரும் ஞானிகள் இதனைப் பற்றிச் சிந்தித்து அதற்குப் பல தத்துவ வேதாந்த விளக்கங்களைத் தந்திருக்கிறார்கள். இந்த உலகின் இயற்கையான நியதிகளுக்கு உட்பட்டு ஆன்மா என்பது பலப்பல பிறவிகளை எடுக்கிறது. நாம் உடைகளை மாற்றி மாற்றி அணிவதுபோல ஆன்மா உடல்களை மாறிமாறி அடைகிறது என்கிறது கீதை. இந்த விதத்தில் ஆன்மாவானது வெவ்வேறு உடல்களை, பரிணாம வளர்ச்சி சுட்டிக்காட்டும் வகையில் புழுவிலிருந்து கடவுள் வரையிலும் அடைகின்றது என்கிறார் மாணிக்கவாசகர். ஸ்ரீ அரவிந்தர் பதினெட்டாம் நூற்றாண்டில் எழுதிய கருத்துகளை மாணிக்கவாசகர் பொது நூற்றாண்டு ஒன்பதிலேயே சிவபுராணத்தில் பதிவு செய்துள்ளார்.
‘பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் (30)
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்,’5
புல், பூண்டு, புழு, மரம், பலவிதமான மிருகங்கள், பறவை, பாம்பு, கல், மனிதன், பேய், கணங்கள், அசுரர் எனும் பிறப்பு, முனிவர், தேவர் ஆகிய பிறப்புகள் இவை அனைத்தையும் எடுத்துக் களைத்தேன் என்கிறார்.
மொத்தத்தில் பிறப்பு என்பது ஒரு அதிசயம்தான்; வாழ்க்கையும், இறப்பும் கூட அதிசயங்களே. பிறப்பு என்பது ஒருவர் வேண்டும்போது, வேண்டும் நிலையில், வேண்டும் பிறவியை அடையுமாறு நிகழ்வதல்ல. ஒவ்வொன்றும் முன்னரே நிச்சயிக்கப்பட்டபடி (pre-determined / ordained) நிகழ்வதாகும். ஆனால் இதனை நாமறிய இயலாது. ஆகவேதான் பிறப்பும் இறப்பும் நம் வசத்திலில்லை.
அறிவியல் வல்லுனர்களின் கூற்றுப்படி பார்த்தால் நாம் யார், எப்படிப்பட்ட குணங்களுடன் பிறக்கிறோம், எவ்வாறு வளர்கிறோம், யாராக ஆகிறோம் என்பதற்கு ‘வாய்ப்பு – தேவை’ (Chance & Necessity)6 எனும் இரு இன்றியமையாத காரணிகள் உண்டு.
யாராகப் பிறக்கிறோம் என்பதற்கு நமது மரபணுக்கள் (genes) காரணமென்றால் எப்படிப்பட்ட குணாதிசயங்கள் கொண்டுள்ளோம் என்பதற்கும் அந்த மரபணுக்களின்.தாக்கமே காரணமெனலாம். சுற்றுப்புறச் சூழல் ஓரளவு இதில் சிறிது மாற்றத்தைக் கொண்டுவர இயலும்.
உதாரணமாக, பாக்டீரியாக்கள் ஆன்டிபயாடிக்கின் தன்மைக்கேற்பத் தங்கள் மரபணுக்களை மாற்றியமைத்துக் கொள்ளும் திறன் வாய்ந்தவை. இது அவற்றிற்கான உயிர்வாழவேண்டிய ‘தேவை’. இந்தத் ‘தேவை’ என்பது அவற்றைக் கடினமான நிலைமைக்குத் தள்ளிவிட்டு பின்பு உயிர்வாழும், / உயிர்பிழைக்கும் நிலையையும் ஏற்படுத்தியும் கொடுக்கிறது.
அதுபோலத்தான் என்னவாகப் பிறக்கிறோம், எப்போது, என்னவிதமான குணங்களுடன் என்பதும் அதிசயம். அறிவியலாலும் இதனை ஓரளவே கட்டுப்படுத்த இயலும்.
ஆகவேதான் பிறப்பும், வாழ்க்கையும் அதிசயம். இறப்பு இன்னும் பெரிய அதிசயம். உதாரணமாக, சிகரெட் புகைத்தால் நுரையீரல் புற்றுநோய் வந்து இறக்கிறான் மனிதன் என்பார்கள். ஆனால் அதனைப் புகைக்காமலே அந்த நோய்வந்து பலர் இறப்பதனை எப்படி விளக்கலாம்?
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு4 என்றார் வள்ளுவர். ஆகவே வாழ்க்கையின் மாபெரும் நிகழ்வுகளான மனிதன் ஆதிக்கம் செலுத்த முடியாத பிறப்பும் இறப்பும் அதிசயங்களே என்பதில் என்ன ஆச்சரியம்? இங்கு ஔவையின் வாக்கினையும்7 நினைவுகூரலாம்
அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது
மானிடராய்ப் பிறந்தகாலை கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வ ராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே.
இவற்றில் ஒவ்வொன்றுமே அதிசயம் தானே?
Bibliography:
- சென்னைப் பல்கலைக் கழக ஆங்கிலம்- தமிழ் அகராதி
- https://land.auroville.org/sonnets-by-sri-aurobindo/
- Transcreation of the poem ‘Janmkatha’ from the collection Shishu by Rabindranath Tagore. https://allpoetry.com/Birth-Story- English-Translation
- திருக்குறள்.
- சிவபுராணம்- திருவாசகம்- மாணிக்கவாசகர்
- Chance and Necessity- Essay on the Natural Philosophy of Modern Biology by Jaques Monod.
- ஔவையார்- தனிப்பாடல்கள்
–000000000—
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
