ஊர்வசி காதலில் கண்விழித்தாள்!

‘ஊர்வசி’ – ‘விக்ரமோர்வசீயம்’ – 2

ஸ்ரீ அரவிந்தரின் ‘ஊர்வசி’ எனும் நீண்ட கவிதை தொடர்கிறது ……

          கேசி எனும் ராட்சஸன் தேவலோக மங்கையருள் ஒருத்தியான ஊர்வசியைச் சிறைப்பிடித்துச் சென்றுவிட்டான். இந்தக் கேசிதான் பலபோர்களில் புரூரவஸுடன் மோதித் தோற்றவன். மெல்லிய அல்லிமலரைப் பறித்தெடுத்துப் பலவந்தமாகத் தூக்கிச் செல்லும்போது அது துவண்டுவிடுவது போல ஊர்வசி மூர்ச்சையாகித் துவண்டு விடுகிறாள் என்கிறார் ஸ்ரீ அரவிந்தர். மற்ற தோழியரின் அழுகையையும் புலம்பலையும் செவியுற்ற புரூரவஸ் அரக்கன் பின் விரைகிறான்.

          மூலத்தில் காண்பதுபோல் ஸ்ரீ அரவிந்தரின் கவிதையில் தேர்ப்பாகன் இல்லை; புரூரவஸே தேரைச் செலுத்துகிறான். வெளிப்படையாக பாகனைப் பற்றிய பேச்சில்லை! அவனைக் கண்ட கேசி, தான் வெல்லப்படுவோம் என உணர்ந்து, ஊர்வசியைப் பனியின்மீது போட்டுவிட்டு ஓடோடி மறைகிறான். உணர்விழந்து கிடக்கும் அவளை அள்ளியெடுத்துத் தேரில் இருத்திக்கொண்டு புரூரவஸ் விரைகிறான். அத்தனை பேரழகை அருகாமையில் கண்டவனின் உள்ளம் பரவசத்தில் நடுங்குகிறது. அவளுடைய மற்ற தோழியரான மேனகை, திலோத்தமை ஆகியோர் அவனிடம் பேசி, அவளைத் திரும்பப் பெற்றுக் கொள்கின்றனர்.

          புரூரவஸின் ஆழ்மன, எண்ண ஓட்டங்களை வெகு நுட்பமாக விவரிக்கிறார் ஸ்ரீ அரவிந்தர்.

          அவளை அவள் தோழியரிடம் ஒப்படைத்துச் செல்லும் புரூரவஸை அவள், காதல் வயப்பட்ட ஊர்வசி, ஒரு மலைச் சிகரத்தினின்றும் பார்த்தபடி இருக்கிறாள். அவனும் உள்ளத்தில் புயல்வீசத் தன் தாயான இளையின் இருப்பிடத்தை வந்தடைகிறான்.          இத்துடன் முதல் காண்டம் நிறைவடைகிறது.

          இனிக் கவிதையைக் காண்போம்….

~oOo~

          அது அரக்கன் கேசி. நேற்றைய தினம்தான்

          அலையலையான அவர்களது போரில் அவர்களுடைய சினந்த விழிகள்

          ஒன்றையொன்று சந்தித்திருந்தன. அவன் மழையினால் மங்கலாக

                                                                                          மறைக்கப்பட்டு

          புயலால் வேகமாக, தீவிரமாகவும் பிரம்மாண்டமாகவும்

          பிரதேசங்களைத் தன்னால் நிரப்பியபடி வந்தான். சுவர்க்கத்தின்

          மணப்பெண்களை அவன் மிகப்பெரிதாகப் பாய்ந்து பற்றினான்.

          அவர்கள் காற்றின் வேகத்தில் சிதறடிக்கப்பட்ட மலர்களைப்போல்

          எல்லா வழிகளிலும் ஓடினர்; ஆனால் அவன் குறிப்பிட்டதொரு

                                                                                          அழகியின்மீது 180

          மாயமாகப் பாய்ந்து, இழுத்துப் பிடித்து, புயலொன்று

          அல்லிமலரைத் தூக்குவதுபோல, உயரத் தூக்கி, அம்பைப்போல

          உயர்ந்த மேகங்களிடையுள்ள பனிபடர்ந்த சிகரங்களுக்கு மேல்,

          (பெண்)தெய்வத்துடன் நடுங்கும் கிழக்கை நோக்கி விரைந்தான்.

          ஆனால் இன்னும் பயங்கரமான வேகத்துடனும் விரைவுடனும்

          அரசன் புரூரவஸ் சுவர்க்கத்தினூடே புயலென விசையென

          அவன்பின் விரைந்தான். திரும்பி நோக்கிய அரக்கன் புரிந்துகொண்டான்,

          அந்த வெற்றிச் சக்கரங்களின் ஓசையையும்

          அத்தனை கடவுள்களின் ஒளியையும் மீறிய, தீங்கிற்கும் அபாயத்தை

          உண்டாக்கக்கூடிய தேஜஸை ஒரு மனிதனின் முகத்தில் கண்டான்.

          அவன் நின்று, சுவர்க்கத்தைக் கடந்து நீளும்

          ஒரு அச்சமூட்டும் கரத்தை உயர்த்தி,                                 190

          தனது பிரமிக்கச் செய்யும் வாளை உயர்த்தினான். ஆனால் மிகப்பெரிய

          வேகத்தால் மிகைப்படுத்தப்பட்ட குளம்பொலிகள் அச்சுறுத்தியபடி

          புரூரவஸின் ரதத்தின் சக்கரங்கள் போரைச் சுமந்துகொண்டும்

          எதிர்க்க முடியாததொரு ரதசாரதியை, புரூரவஸை

          ஏற்றிக்கொண்டும் வந்தன. அந்த துரரக்கன் நிதானித்தான்,

          எதிர்ப்பை, ஆத்திரத்தை, இயலாமையைக் காட்டிய கண்களைச்

                                                                                          சுழற்றியவண்ணம்   

          அவன் கரங்களில் மயங்கிவீழ்ந்த (பெண்)தெய்வத்தின் மீதும்

          அந்தப் பழிவாங்குபவன் மீதும். முரட்டுத்தனமும் பயமும்

          ஒருவழியில் சாவின் தாளத்திற்கும், மறுவழியில் அவமானத்திற்கும்

                                                                                          இடையே           200

          சில பொழுதுகளுக்கு அவனை விதியின் ஒரு அலைமீது நிதானிக்க வைத்தன.

          அவனுடைய கொடிய மார்பினுள் வருந்திப் புலம்பியபடி அவன்

          சுவர்க்கத்தின் கொள்ளையடித்த மலரைப் பனியின் மீது போட்டுவிட்டு

          கிழக்கே ஒரு கருந்திட்டென ஓட்டமெடுத்தான். புது வானம்

          சிணுங்குகின்ற மேகங்களினின்றும் புதுப்பிக்கப்பட்டு உதயமானது;

          பெரிய தூய்மையான நீலவானம் பரந்த சூரியஒளியில் எழுந்தது.

          புரூரவஸ் அவனைத் தொடரவில்லை; ஆனால் தனது விரையும் தேரை

          பனியின் மீது நிறுத்தி, அவளிடம் தாவியோடினான்

          பக்கலில் மண்டியிட்டு நடுங்கினான்.

          பரந்த கூந்தலின் நடுவே பூரணமான அவள் கிடந்தாள்                              210

          ஒளிபொருந்திய அல்லிமலர் துவைக்கப்பட்டது போலிருந்தது

          அவள் கிடந்தவிதம். தெள்ளிய ஆடையினூடே

          ஒரு தோள் ஒளிர்ந்தது, ஒரு மார்பு திறந்து கிடந்தது,

          திவ்யமாக உயர்ந்து தாழ்ந்தது, ஒரு பொன்னிறக்கை வீசிக்கிடந்தது,

          ஒரு வெதுவெதுப்பான செழிப்பான பிரகாசம் மிளிரும் வெண்மைக்கெதிராக

          வரைந்ததுபோன்று, அவளுடைய முகம்

          பனியின்மீது விழுந்துகிடக்கும் நிலவு போன்றிருந்தது.

          அரசன் புரூரவஸ் அனைத்தையும் நன்கு நோக்கினான், தணலாக ஜ்வலித்தான்

          தன் கால்கைகளூடே, (காதலின்) தாபத்தால் நிலையிழந்து

          அவன் விதிர்விதிர்த்தான்; போற்றினான். மிகுந்த ஆச்சரியத்துடன்,

                                                                                சப்தம் செய்யாது           220

          மூச்சுவிடவும் மறந்து, நிதானித்து மண்டியிட்டான், பெருந்தன்மை என்பது

          திடீரென்ற பிரமையாலும், தாபத்தாலும் கல்லாகி விட்டதுபோல. காதல்

          மூர்க்கத்தனமான முயற்சியால் அவனைப் பறித்து அவளிடம் சேர்த்ததுபோல்,

          ஆனால் பயம் அந்தப் பூரணமான குழற்கற்றைகளிடமிருந்து அவனுடைய

                                                                                உதடுகளைத் தடுத்தது.

          நீண்ட பொழுதிற்குப்பின் அவன் முத்தமிடப்படாத அவளை எடுத்துத்

          தனது ஒளிபொருந்திய தேரில் கிடத்தினான், தானும் உடன் ஏறினான்,

          அவளுடைய தொங்கும் தலையை அச்சத்துடனான ஆனந்தத்தில் தனது

          ஒரு கரத்தின்மீது இருத்திக்கொண்டான், இன்னொன்றால் ரதத்தைச்

                                                                                          செலுத்தினான்;-                  

          ஒரு கரத்தால் செலுத்திய அவன் கண்கள் அவள்மீதே, அவளையே நோக்கி

          மூடிய விழியிமைகளையும் இதயத்துடிப்பையும் கவனித்தபடி, அதில்  230              

          ஒளிந்திருக்கும் ஆத்மாவின் இனிமையை அனுமானித்தபடி.                                    

          விரைவில் அவள் அசைந்தாள். அந்த அற்புதமான அகன்ற கோளங்களான

                                                                                                    கண்கள்

          அவனுடையவற்றில் உதித்தன, ஓசையின்றி, தியானத்திலிருப்பவை போல.            

          ஒரு அழகான தாமதித்த வியப்பு அவற்றில் ஊர்ந்தது

          பின்பு; கடைசியாக, மிகவும் அழகான ஒன்று,

          அதாவது அவளே, மகிழ்வும், காதலும்.                                                                               ஒருபுயல் நாளில்  மூடிவைத்த சாளரத்தினூடே

          ஆயாசம் உண்டாக்கும் மழையைப் பார்த்தபடி,

          ஒன்றுமறியாத குழந்தை உறங்குவதுபோல, நீண்ட உறக்கத்தில்,    

          பின் அமைதியாக வாழ்க்கையை எதிர்கொண்டு விழித்தெழுந்து 240                         பழங்காலத்து நிலவொளியும், முதலில் உறக்கத்தில் ஒரு விருந்தினன் ஆகிய

          ஆத்மாவின் சந்தோஷமிகுந்த உலகைப்பற்றிய

          பெருத்த சிந்தனையும் அவளுடைய கம்பீரமான

          திரையிடப்படாத கண்களில்; மனிதனின் திகைப்பு அடுத்து வருவது,

          மெதுவாக; கடைசியில், திடீரென, அவை மாறிவிட்ட உலகினை

          உணர்ந்துகொண்டதனால் ஒளிர்ந்து அகல விரிந்து                                                       ஆனந்தத்தில்; அவ்வாறே ஊர்வசி காதலில் கண்விழித்தாள்.

          ஆனால் இப்போது அந்த பிரகாசமான உள்மனத்து விடியல்

          கண்களில் மகிழ்ச்சிப் பாலம் கட்டியது, சிரிப்பு உடைந்து

          நிஜ உலகம் திரும்பிற்று; ஏனெனில் அங்கு அல்லிமலராகப்                    250

          பனியில் நின்ற மேனகை, திரும்பி நகைத்தாள்

          அந்தத் தடுக்க முடியாத சக்கரங்கள் இசையாகப் பேசின;

          அவள் கடந்துவிட்ட பயத்தால் நடுங்கினாள்; மகிழ்ந்தாள்;

          ஆனால் அந்த மலர்போன்ற பெண்கள் வந்தனர், ஒளி அதிகரித்தது,

          அலைகள் புயற்காற்றின் நினைப்பில் சூரிய ஒளியில் பொங்கி எழுவதுபோல்

          அவர்கள் மார்பகங்கள் மூச்சிரைத்தன,                                                                             அவர்களுக்கெல்லாம் முன் மேனகை நடுங்கிச்

          சிரித்தவண்ணம்: “என்ன, ஓ அரசன் புரூரவஸ்,                                                    

          உமது வெற்றியை ஏந்தி நிற்கிறீரா? அவளை உமது              260

          மாளிகையில் வெற்றியின் சின்னமாக வைக்கப் போகிறீரா? ஆனால் அவள்

          உமது மாளிகையின் சலவைக்கல் சிற்பங்களுள் ஒன்றல்ல

          கடினமான கதவுகளுள் ஒன்றல்ல, அதன் நிறமற்ற புனிதமல்ல.      

          அவள் கண்களில் உனது புகழைப் பெரிதாகக் கண்டு வியக்காதீர்.

          அந்த சப்தமற்ற உள்ளுணர்வு ஒளிர்ந்து உமது பூரணமான வெற்றிச் செயல்களை

          அறிந்துகொள்ளும் அறிவினை உமக்கு இன்னும் தரவில்லையா?

          அவளைத் திரும்பத் தந்துவிடும், எங்கள் சகோதரியை எங்களிடம் தந்துவிடும்,

          பிரதியாக உம்மை முழுமையாக எடுத்துக் கொள்ளும்.”                                                 

          இவ்வாறு மேனகை சிவந்த கன்னங்களுடனும் புன்சிரிப்புடனும் கூறினாள்.

          அந்தப் பெருமைவாய்ந்த புரூரவஸ் தேவமங்கையைக் கீழே இறக்கி      270

          அவளுடைய பொலிவான சகோதரியின் கைகளில் கொடுத்தான்,

                                                                      சிறிது தாமதித்தான்

          மிகுந்த சந்தேகத்திலும் கொந்தளிக்கும் அமைதியுடன்,

          சிலிர்த்தவண்ணம். பிறகு தெய்வமங்கை திலோத்தமை:

          “ஓ அரசே! ஓ கடவுள்களையும்விட  சக்திவாய்ந்த மானிடனே!

          ஏனெனில் கடவுள்கள் தங்கள் பலத்தை மாற்றிக்கொள்ள மாட்டார்கள்,

                                                                                ஆனால் பழமைதான்

          பழமையிலும் தான், மனிதனோ இவர்களைவிடத் தாழ்ந்தவன் எனினும்

          சுயவளர்ச்சியினால் இதைவிட உயரங்களுக்கும் செல்வான்.

          மனிதன், அனுபவங்களால் தீவிர ஆசைகளைக் களைந்து,

          அவனுடைய எண்ணற்ற திறமைகளால் பூர்த்திசெய்து, தனது

          சுபாவத்தை அது உயர வளர்ந்தெழுந்து கடவுளின் நிலைக்கு

                                                                                          வரும்வரை          280

          விசாலமாக்கிக் கொள்கிறான். ஏனெனில் எவனொருவன் தனது

          கோபமான உறுதியற்ற துர்ப்பாக்கியமான ஆத்மாவை அடக்குகிறானோ

          ஒரு அமைதியான பூரணமான இன்பத்தையும் அமைதியையும் தன்னைச்

          சுற்றியிருக்கும் சூழலில் உணருகிறானோ, அவன்,

          ஆண்டு முழுவதும் சூரியகாந்தி மலரின் தனித்த உள்ளடிபோல

          தெய்வீகத்தை வடிவமைத்து, அதனைப் பேணிப் பராமரிக்கிறான்.

          ஆகவே நீரும் மானுடர்களில் உள்ளடி போன்றவர். நீவிர் இன்று

          ஒரு பெரும் சாகசத்தை நன்கு செய்தீர், சாவிலிருந்து காப்பாற்றினீர்

          முதலில் சூரிய மண்டலத்தின் பெருங்கடவுள்களை,

          அவர்களுடன் தாரகைகளையும் காப்பாற்றினீர்; ஆனால் இன்று அவள்,        290

          யாரில்லாமல் உலகம் முழுமையும் நிழலில் மறையுமோ

          அல்லது நெருப்புக்கு இரையாகுமோ, எப்படியானாலும் அதன் வாழ்வு                                                                                                        முடிந்துவிடும்.

          தாங்களும் வினோதமான பரிசுகளை அடையக் கடவீர், ஓ அரசே,

          நன்மைகளால் தங்களை வருத்திக்கொண்டும், தங்களையே இழந்து

          அனைத்து சூரிய மண்டலத்தின் வாழ்வைப் பெறுவதும்,

          எல்லையற்ற வெற்றியை எல்லையற்ற இழப்பிலிருந்து பெறுவதும்,

          அனைத்துமே கீழான முடிவற்ற புகழுக்காகவே. இன்று

          பின்வாங்குவீர்; மெல்லவே பக்குவமடைகின்ற விதிகளைப் பறிக்காதீர்;

          பொறுமை காக்கும் கடவுள்களை எதிர்நோக்கும் ஒருவன்

          தனது கிரீடம் பொடியாகி உதிர்வதையும், தனது தேசம்

                                                  துக்கத்திலாழ்வதையும் காண்கிறான். 300

          அதனால் யோசிக்காமல் கொடூரமான இதயத்து அரக்கர்களைத் தேர்ந்தெடுத்து

          அழகான உலகத்தைப் பாராமல், அதனைத் தோன்றிமறையும்

                                                            அழகுக்காக இழந்தும் விடுவீர்.”

          அவள் அமைதியாய் இருந்தாள், அவன் மறுமொழியாய் ஒரு சொல்லும்

                                                                      சொன்னானில்லை, ஆனால்

          கடிவாளங்களைப் பற்றிக்கொண்டு அந்தப் பொன்னுலகிலிருந்து விரைந்தான்.

                                                                                          அவனது தேர்

          பூமியின் அந்த ஊமை இமயத்துக் கதவுகள் மூலம்

          அந்த நமது வாழ்விற்கும் முற்பட்ட ஒரு அமைதியான வாழ்வு

          தன்னந்தனியாகவும் ப்ரம்மாண்டமாகவும் கருணையற்றும்,

          காற்றுடன் புலம்பிக்கொண்டே சென்றது. அவன், ஒரே வாழும் உயிர்,

          சலனமற்ற ஆழமான பெரும் செங்குத்துச் சரிவுகளில் விழுந்து              310

          அகன்ற கண்கூசும் எல்லையற்ற உலகை ஒளியுடனும் சிறியதாகவும்

          கடந்து, எங்கு மனிதத்தன்மையற்ற தனிமையைக் கண்கள் சோர்வுடன் கண்டும்

                                                  செவிகள் கேட்டும் உணருமோ (அங்கு சென்றது).

          குளிர்ந்த நமது கன்னித்தாயான கங்கை குதித்து ஓடுகின்ற

          கொடூரமான பனிக்கட்டியாறுகள் தூய பள்ளங்கள் இவற்றைக் கடந்து

          அவன் கங்கோத்ரியின் பவித்ரமான சிகரங்களை நோக்கிச் சென்றான்.

          ஆனால் இங்கு அவன் மனித பள்ளத்தாக்குகளிலும் கனிவான உயர்ந்த

          தோற்றங்களிலும் மூழ்கினான், அரசன் புரூரவஸ் தன்

          பெரும் உள்ளத்தெழுந்த ஒரு உணர்ச்சிப் பெருக்கில் திரும்பிப் பார்த்தான்,

          அவளைக் கண்டான். ஒரு தனிச் சிகரத்தில், தேவதையாய்,             320

          காற்றில் அலையும் ஆடையிலும், பெருமைமிகுந்த மயிர்களிலும்

          அவள் நின்று அவன் செல்வதனை ஆழ்ந்த சிந்தனையுடைய கண்களால்

          அவற்றில் ஒரு மென்மையான வியப்புடனும், ஒளியுடனும் நோக்கினாள்.

          அலைபாயும் ஆடையைத் தடுக்கும் ஒருகையாலும், மற்றொன்று

                                                                                கண்களின்மேல் குவிந்தும்

          தான்காணும் காட்சி இறப்பற்ற கண்களாலும் காணவியலாத

                                                            பிரகாசம் படைத்தது போலப் பார்த்தாள்.

          அவள் தோள்களின் மேலாக ஒளிபொருந்திய முகங்கள் அழுந்திக்

          கூட்டமாக நகைத்தன. புரூரவஸும்

          வசீகரிக்கப்பட்டவனாகத் தடுமாறி, கடிவாளங்களை அகன்று வீசி

          எல்லையற்ற காற்றினுள் விண்மீன்போல விரைந்தான்;                    330

          வளைந்து கீழே சென்றான் கரைந்து விரையும் முரட்டுச் சக்கரங்களால்,

          அவனது உள்ளம்  கொந்தளிக்கும் புயலாக, இளையின் அமைதியான

          நகருக்கு எங்கும் ஒலிக்கும் காற்றினுடன் வந்து சேர்ந்தான்.

~oOo~

          அரவிந்தரின் கவிதையின் வலிமையை, நயங்களை, நுட்பமான உணர்ச்சிகரமான விவரிப்புகளைக் காதலிலும், துயரத்திலும், அவலத்திலும் கவிதையின் முழுநீளத்திலும் கண்டு படித்து ரசிக்கலாம். புரூரவஸின் வீரத்தை, பலத்தை ஏற்கெனவே உணர்ந்திருந்த அரக்கனின் உள்ள எண்ணங்களை விவரிக்கும் சில வரிகளைக் காணுங்கள்!

          ‘திரும்பி நோக்கிய அரக்கன் புரிந்துகொண்டான்,

          அந்த வெற்றிச் சக்கரங்களின் ஓசையையும்

          அத்தனை கடவுள்களின் ஒளியையும் மீறிய, தீங்கிற்கும் அபாயத்தை

          உண்டாக்கக்கூடிய தேஜஸை ஒரு மனிதனின் முகத்தில் கண்டான்.’

~oOo~

          மனித உணர்வுகளை அவை சினமாகட்டும், வீரமாகட்டும், காதலாகட்டும் – காட்டும் வர்ணனைகள் அழகாக மின்னுகின்றன.

          அரக்கனால் கீழே போடப்பட்ட ஊர்வசி, பனியின்மீது விழுந்துகிடக்கும் நிலவாகக் கிடக்கிறாள். அவள் தேவமங்கை. புரூரவஸ் மானிடன்; அரசன். அவளைக் கண்டதும் அடங்காத காதல் கொள்கிறான். ஆனால் மானிடருக்கே உரிய ஒரு சிறு பயம்? அல்லது அவளுடைய நிலைமை புரிந்ததால் உண்டான தயக்கம், கருணை, அவளை ஆசையோடு முத்தமிடுவதிலிருந்து அவனைத் தடுக்கிறது.

          ‘அச்சத்துடனான ஆனந்தம்’ எனும் அரவிந்தரின் சொற்பிரயோகம் பல செய்திகளை நமக்கு உணர்த்துகிறது. காதல் பிரவகிக்கும்போது ஆனந்தம் எழும்; ஆனால் அவள் தேவமங்கை, தான் காதல் கொள்ளலாமா எனும் சிறு தயக்கம், (அச்சம் (?) மனிதர்கள் தெய்வங்களிடமிருந்து சிறிதேனும் விலகியிருக்கக் கற்பிக்கப்பட்டவர்கள்) அவனைத் தடுக்கிறது; அதனால்தான் நடுங்குகிறான். என்ன செய்வதெனச் சிந்திப்பதிலேயே பொழுது விரைந்தோடுகிறது போலும்!!

          ‘நீண்ட பொழுதிற்குப்பின் அவன் முத்தமிடப்படாத அவளை எடுத்துத்

          தனது ஒளிபொருந்திய தேரில் கிடத்தினான், தானும் உடன் ஏறினான்,

          அவளுடைய தொங்கும் தலையை அச்சத்துடனான ஆனந்தத்தில் தனது

          ஒரு கரத்தின்மீது இருத்திக்கொண்டான்.’

~oOo~

          ஊர்வசி மயக்கம் தெளிந்து கண் விழிப்பதை மிகப் பரவசமூட்டும் கவிதை வரிகளால் வடித்துள்ளார் அரவிந்தர். அவளையே நோக்கியிருந்த அவனுடைய கண்களில் அவள் கண்கள் விழித்து நிலைக்கின்றன. கண்களே உள்ளத்தின் கதவுகள். இராமகாதையில் கம்பனும் நளவெண்பாவில் புகழேந்தியாரும் வள்ளுவரும் சொல்லாததா எனலாம். ஆனாலும் திரும்பத் திரும்ப வெவ்வேறு காதல் இணைகளைக் காணும்போது உற்சாகம் எழுவது தவிர்க்கவியலாது அல்லவா?

          ‘விரைவில் அவள் அசைந்தாள். அந்த அற்புதமான அகன்ற கோளங்களான

                                                                                                    கண்கள்

          அவனுடையவற்றில் உதித்தன, ஓசையின்றி, தியானத்திலிருப்பவை போல.            

          ஒரு அழகான தாமதித்த வியப்பு அவற்றில் ஊர்ந்தது

          பின்பு; கடைசியாக, மிகவும் அழகான ஒன்று,

          அதாவது அவளே, மகிழ்வும், காதலும்.

          ……………………………………………..

          கடைசியில், திடீரென, அவை மாறிவிட்ட உலகினை

          உணர்ந்துகொண்டதனால் ஒளிர்ந்து அகல விரிந்து                                                       ஆனந்தத்தில்; அவ்வாறே ஊர்வசி காதலில் கண்விழித்தாள்.’

                              ~~~~~~~~~~~~

          பின்பு மேனகையும் திலோத்தமையும், ஊர்வசி தேவலோகத்தில் இருக்க வேண்டிய கட்டாயத்தை அவனுக்குத் தெளிவாக்குகின்றனர். புரூரவசும் நிலைமையின் கட்டாயத்தை உணர்ந்து கொண்டவனாகி அவளை அவள் தோழியரிடம் ஒப்படைத்துவிட்டு, மனமின்றிப் பிரிகிறான்.

          செல்பவன் திரும்பிப் பார்க்கும்போது, அவள் தான் செல்வதனையே நோக்கியிருக்கக் கண்டான். காதலுக்கு இனி வேறேதும் சமிக்ஞைகள் தேவையா என்ன?

          மற்றொரு சொற்றொடர், கடவுள்களின் வாழ்க்கை மானுடர்களினின்றும் வேறுபட்டது எனக்கூறுகிறது. (Priorities of Gods are different from those of earthly men).

          காதல் வயப்பட்ட புரூரவஸின் நிலையைப் பற்பல சொற்களால் விளக்குகிறார். அவன், ‘ஒரே வாழும் உயிர்’ என ஒரு சொற்பிரயோகம்- எத்துணை வலிமையானது- சுவர்க்கத்தில் வாழ்வோர் நித்தியர் – அழிவற்றோர் என்பதனையும், புரூரவஸ் ஒருவனே மானிடனாதலால் அவன் ஒருவனே ‘ஒரே வாழும் உயிர்’ என்பதனையும் கூறாமல் கூறிவிடும் சொற்கள். வாழ்ந்தால் தானே இறப்பும் பிறப்பும்?

          ‘மனிதத்தன்மையற்ற தனிமையைக் கண்கள் சோர்வுடன் கண்டும்’ என்பது மற்றுமொரு பிரயோகம். ஒவ்வொரு இடத்திலும் உள்ளவர்களுக்கு (தேவலோகம், பூமி, பாதாளம்) அவர்கள் முதன்மைத் தேவைகளும் எண்ணங்களும், வெவ்வேறானவை எனக் கூறுகின்றன இவ்வரிகள். மனித இனத்திற்கு மட்டுமே உணர்வுகள் வாழ்வில் பெரும் இடத்தை வகிக்கின்றன எனும் பேருண்மையை உணர்த்துகிறாரோ எனவும் நாம்  எண்ணக்கூடும். அது உண்மையும்கூட என நான் எண்ணுகிறேன்.

          விவரித்துக் கொண்டே செல்லலாம். ஆனால் நான் உணர்ந்த வரையில் அவரவர்களே ஒன்றிற்கு இரண்டுமுறை படித்துப் பொருளைக் கிரகித்துக் கொள்ள வேண்டிய கவிதைவரிகள்தாம் இவை.

          ‘சூரியகாந்தி மலரின் தனித்த உள்ளடி’ எனும் பிரயோகம் தனித்துவம் வாய்ந்தது. இதனை ஏன் அரவிந்தர் கையாள்கிறார்?

          அறிவியல், கணிதம் இவற்றின்படி கண்டால் ‘தங்க விகிதம்’ அல்லது ‘ஃபிபொனாச்சி தொடர்’ (The Golden Ratio or Fibonachchi sequence) எனும் பிரயோகத்தைக் காணலாம். சுருக்கமாக இது சூரியகாந்தி மலரின் விதைகள் கணிதமுறைப்படி ஆனால் ஒவ்வொன்றும் தனித்துவமாக அமைக்கப்பட்டுள்ள வரிசைக்கிரமத்தைக் குறிக்கும். இது இயற்கையின் ஒரு கணித விந்தை. அரவிந்தர் நன்கு கற்றுணர்ந்தவர். மானிடன் தெய்வத்தைத் தனது உள்ளத்தில் வடிவமைத்து எழுந்தருளச் செய்து வழிபட்டுப் பின் அதுவாகவே ஆகி விடுவதனை இப்பிரயோகத்தால் மேனகையின் கூற்றாக உணர்த்துகிறார். அதனால் இக்கருத்தைக் கொண்டு வந்துள்ளார் என அனுமானிக்கலாம். மேலும் விளக்கம் வேண்டுவோருக்காக இது பற்றிய கணிதக் குறிப்பும் கொடுத்துள்ளேன். விளக்கப் புகுந்தால் இதுவே இன்னொரு ஆய்வுக் கட்டுரையாகி விடும் அபாயம் உள்ளது!

          இதுபோன்ற பல ஆச்சரியங்கள் இக்கவிதைத் தொகுப்பில் காத்துக் கொண்டிருக்கின்றன. இனிமேலும் எனது எண்ணவோட்டங்களை உங்கள்மீது திணிக்க விரும்பவில்லை.

          நீங்களே படித்து ரசியுங்கள்.

(தொடரும்)

உசாத்துணை:

  • The Golden Ratio in sunflowers- Scott, J. and Gulick, D. (2010) The Beauty of Fractals: Six Different Views. Washington, D.C.: Mathematical Association of America.
  • This entry was posted in Maths is Fun! – Maths Elective on November 20, 2015.
Series Navigation<< ‘ஊர்வசி – விக்ரமோர்வசீயம்’‘ஊர்வசியின் களிப்பு- புரூரவஸின் சலிப்பு’ >>

2 Replies to “ஊர்வசி காதலில் கண்விழித்தாள்!”

  1. அற்புதமான மொழிபெயர்ப்பு மீனாட்சி அவர்களே! காளிதாசனும் இக்கதையை எழுதியிருக்கிறார். என்றாலும் அரவிந்தர் தன் ஆன்மிகத் தேடலின் ஆரம்ப நாட்களில் “மனிதன் மாமனிதன் ஆக உயர முடியும்” என்ற கோட்பாட்டை எப்படியாவது தன் கவிதைகளில் கொண்டு வந்து விட வேண்டும் என்ற உந்துதலோடு எழுதிய பல கவிதைகளில் ஊர்வசியும் ஒன்று என்பதால் அரவிந்த அன்பர்களால் இன்றும் வாசிக்கப்படும் நூல் இது.

    தங்கள் இனிய மொழிபெயர்ப்புக்கு மீண்டும் வாழ்த்துக்கள்! – இராய செல்லப்பா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.