குமார சம்பவம் மஹா காவ்யம்- 17

அத்யாயம்-17

தாரகாசுரன் நேர் எதிரின் வந்து நிற்கவும், இந்திரன் முதலான தேவர்களும் தாங்களும் உத்சாகம் பெற்றவர்களாக, யுத்தம் செய்யும் ஆவல் மேலிட  எட்டு திக் பாலர்களும் உடன் வர  பெரும் யுத்தம் செய்ய ஆயத்தமாக புறப்பட்டனர்.   தங்கள் முயற்சியால்  மட்டும் இதை சாதிக்க முடியாது என்பதை அறிந்தவர்கள்.  பெரிய மலைகள் போல உடல் வாகு கொண்ட தேவ விரோதிகளான அசுரர்கள் இவர்களின் பதட்டத்தைக் கண்டு பலமாக சிரித்தனர்.  சரமாரியாக பாணங்களை மழையாக பொழிந்தனர்.  தேவர்கள் சைன்யமே தெரியாதபடி நாலா புறமும் பாணங்களாக நிரப்பி விட்டனர். 

அவர்களும் அதே போல தங்களை விடுவித்துக் கொண்டு கூர்மையான சக்தி வாய்ந்த பாணங்களால் பதிலடி கொடுத்தனர்.   சீறி எழும் சர்ப்பங்களை அதே வேகத்தில் கருடன் உடனடியாக கவர்ந்து செல்வது போல, அசுரர்களின் ஆயுதங்களை பொடிப் பொடியாக்கி விட்டனர்.   வான மண்டலம் முழுவதும் மறைத்திருந்த பாணங்கள், ஹவ்ய வாஹன என்ற அக்னி  கும்பலாக வைக்கப் பட்ட புல்லை பொசுக்குவது போல. 

தன் பலத்தில் அசாத்ய நம்பிக்கையுடன் வந்திருந்த அசுரன் சற்று அலட்சியமாக பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தவன், திடுமென,  ரோஷத்துடன்  பயங்கரமான நாகாஸ்திரத்தை பிரயோகித்தான்.  அது  தேவ சைன்யத்தை கட்டி விட்டது. 

எதிர்பாராத திடீர் தாக்குதலால், தேவ சைன்யத்தினர் மூச்சு முட்டி திகைத்தனர்.  ரண களத்திலிருந்து புற முதுகிட்டு ஓடி  சங்கரன் மகனான கார்த்திகேயனை சரணடைந்தனர்.  அவருடைய அருகில் சென்று வேண்டிய சமயம் அவருடைய  குளிர்ந்த பார்வையிலேயே  நாக பாசத்தால் பட்ட கட்டப் பட்டவர்கள் விடுபட்டார்கள். அனைவருமாக துதி செய்தனர். 

தாரகாசுரன் இதைக் கண்டான். இது என்ன, என் அமோகமான அஸ்திரத்தால் கட்டி செயலிழக்கச்  செய்த எதிரிகளை பார்வையாலேயே காப்பாற்றி விட்டானே இந்த தூர்ஜடி-மகேஸ்வரனின் ஒரு பெயர்- மகன். இனி இவர்களுடன் போர் இல்லை. நேரடியாக அந்த குமாரனுடன் போர் புரியப் போகிறேன்.  சாரதியே, என் ரதத்தை அவனுக்கு அருகில் கொண்டு செல் என்றான்.

அவ்விதமே சாரதி, ரதத்தை கார்த்திகேயனுடைய அருகில் கொண்டு போய் நிறுத்தினான்.  பெரும் ஆரவாரத்துடன், வேகமாக சமர பூமியில் கிடந்த உடைந்த உடல் பாகங்கள், ரதங்களும், ஆயுதங்களுடன்  உதிரம் வழிந்து சேறாகி கிடந்த ரண பூமியில் சக்கரங்கள் அழுந்துவதையும் சமாளித்தபடி வேகமாக ஓட்டினான்.  

பிரளய கால சண்ட மாருதம் போலவும், அதில் அலைகழிக்கப் பட்ட கிரி ராஜன் போலவும், கல்ப முடிவே நெருங்கி விட்டது போலவும் மகா பயங்கரமாக வந்த அசுர ராஜன், ரௌத்ரமான அவன் உருவத்தைக் கண்டதும் தேவ சைன்யத்தினர்  பயத்தால்  வேர்வை பெருக நடு நடுங்கி விட்டனர்.  ரதத்தைக் கண்டே கவலை கொண்டவர், நேரடியாக எதிரில் கண்டதும் சோகமே உருவாக ஆயினர்.

தாரகாசுரன் யாரையும் லட்சியம் செய்யாமல் நேரடியாக கார்த்திகேயன் அருகில் சென்றான்.  பெரிய வில்லும், அம்பையும் கையிலேந்தி, போர் புரிவதே குதூகலமாக ஏதோ விளையாட்டுப் போட்டியை எதிர் கொள்பவன்  போல அட்டகாசமாக பேசினான்.

ரே! சம்புவின் தவப் புதல்வனே!  சொல், மூவுலக நாயகர்கள் என்று சொல்லிக் கொள்ளும் இந்த தேவர்களுக்காக வந்து நிற்கிறாயே, உன் ஆயுதங்களை எடுத்து பிரயோகம் செய்.  வீணாக தோள் தட்டி வீரன் என்று சொல்லிக் கொள்ளாதே.  பாலகன், கோமளமான புஜங்களும், உடலும்,  இந்த செயலுக்கு சற்றும் பொருத்தமாகவே இல்லையே.  சின்னஞ் சிறுவன் பாவம். சுமக்க முடியாத பெரும் பாரத்தை சுமந்து நிற்பவன் போல காண்கிறேன்.  என் வாளோ, மற்ற அஸ்த்ர சஸ்திரங்களோ உன்னிடம் நான் எடுக்கப் போவதில்லை. அவைகளால் என்ன பயன்?

கைலாச நாதன்-மலைமகள் இவர்களின் மகன். எதற்காக என் சரங்களால் அடிபட்டு மடிய விரும்புகிறாய். மகனே, நீண்ட ஆயுளுடன்  பெற்றோருக்கு ஆதரவாக இரு.  இந்த போர் முனையில் இருந்து விலகு. தாய் மடியில் இருக்க வேண்டிய பாலகன், அதைச் செய். அல்லது யோசித்து பார். ஜம்பனை அடித்ததாக சொல்லிக் கொள்ளும் இந்த இந்திரனை விட்டு என் படைக்கு  வா.  ஏற்கனவே இந்த கடக்க முடியாத யுத்தம் என்ற கடலில் மூழ்கிக் கொண்டிருக்கிறான். உன்னையும் மூழ்கடிப்பான்.  அவன்  கடலைக் கடக்க வைத்திருப்பது கல்லால் ஆன படகு. அது மூழ்கத்தான் போகிறது.  உன்னையும் சேர்த்து மூழ்குவான்.  அதனால், மகனே, போ, உன் பெற்றோரிடமே போ. உயிரைக் காப்பாற்றிக் கொள். 

தாரகனின் தற் பெருமையைக் கேட்ட குமாரன் பதில் சொன்னான்.  நீ பாலகன், உன்னால் யுத்தம் செய்ய முடியாது, போ என்று அலட்சியமாக பேசியதைக் கேட்டு, அதற்கு பதில் சொல்வது போல தன் சக்தி           ஆயுதத்தை கண்ணால் பார்த்தான். ‘தைத்யாதி ராஜனே!  நீ சொன்னது சரியே. கர்வத்துடன் சொன்னாய். அது உனக்கே தகும். உன் பலத்தை நான் பார்த்து விட்டேன்.  உன் புஜ பலம் பராக்ரமம் அனைத்தையும் அறிந்து கொண்டேன்.   உன் ஆயுதங்களை எடுத்துக் கொள். நேருக்கு நேர் நாமிருவரும் மோதிப் பார்ப்போம். உன் வில்லையும் அம்பையும் தயார் செய்து கொள். 

தாரகன் கோபத்தில் உதடுகள் துடிக்க, திரிபுராரி புத்ரன் என்பதையும் மறந்தான். யுத்தம் செய்ய தயாராக இருக்கிறாய் போலும். உன் புஜ பலத்தில் அவ்வளவு நம்பிக்கையா?  என் பாணங்களைத் தாங்குவாயோ, என் எதிரில் நிற்க மாட்டாமல்  பலர்  புறமுதுகிட்டு ஓடியிருக்கிறார்கள்.  சிறு பிள்ளைத் தனமாக நீ பேசினாலும் நான் எப்படி ஏற்பேன். சமமானவரோடு தான் யுத்தம் செய்ய வேண்டும்.  உன்னால் முடியாது, விலகு. என்றான்.

குமாரன் கார்த்திகேயன் தன் வில்லில் பயங்கரமான அம்பை பூட்டிய பொழுது, சிறுவனானாலும் ஏற்பாடோடு வந்திருக்கிறான் என்பதை புரிந்து கொண்ட தாரகன்,  தானும்  தன் வில்லில் அஸ்திரங்களைப் பூட்டி குமாரனை அடித்தான்.  இது வரை எவரும் எதிர் கொண்டு பதிலடி கொடுத்ததில்லை என்பதால்,  தன் சிறப்பான ஆயுதங்களையே பயங்கரமான  சர்ப்பங்கள் போல சீறிப் பாயும் அம்புகளையே பிரயோகித்தான்,

காது வரை வில்லின் நாணை  இழுத்து தைத்யன் விட்ட அம்பு. திசைகளில் பரவும் போதே பயங்கரமான ஓசையும் கொண்டதாக இருந்தது. கணக்கில்லாத அம்புகள் வில்லிலிருந்து தொடுக்கப் பட்டு இடை விடாமல் வெளி வந்து தீப்பொறி பறக்க, பல விதமான கிரணங்களாக வலை விரித்தாற் போல தேவ சைன்யமே அதனடியில் மறைந்து விட்டது.   அசுரனின் படையினரே அந்த ஒளி வளையத்தில் அகப்பட்டு கொண்டவர்களாக குமாரன் கார்த்திக்கேயனையே கூட காணாமல், அவன் வெளியேறி விட்டான் போலும் என நினைத்து விட்டனர்.   குமாரன் எங்கே என்று பரஸ்பரம் வினவினர்.  அனைவரையும் பயம் ஆட்கொண்டது. தாரகனோ நகைத்தான். சிறுவன், வீணாக தான் வீரன் எனக் காட்டிக் கொண்டான். பயந்து ஓடி விட்டான் என்றான்.  திடுமென வாயவ்யம் என்ற அஸ்திரத்தை பிரயோகித்தான்.

அந்த அஸ்திரத்தை தொடுத்த மாத்திரத்தில், யுகாந்த காலமே வந்து விட்டது போல தோற்றமளித்தது.  மனிதர்கள், பஞ்ச பூதங்களால் ஆன உயிரினங்கள் அனைத்தும்,  பயங்கரமான சத்தம், பெரும் கோஷமாக வருவதைக் கேட்டனர்.   தூசி படலம் எழுந்து வானத்தை மறைத்து, ஸூரியனுடைய கிரணங்களையும் மறைத்து விட்டது.  எங்கும் காற்றின் கோர விளையாட்டாகவே இருந்தது. 

தேவ சைன்யத்தினரின், மல்லிகை மலர் போன்ற வெண்மையான குடைகள், சாமரங்களுடன் இருந்த சைன்யத்தினர் பிடியிலிருந்து விடுபட்டு வானத்தில் பறந்தன. முன் கண்டறியாத வாயுவின் வேகம். தூசியின் பின் புலத்தின் வெண் குடைகளும் சாமரங்களும் வானத்தில் பறக்கும் கல ஹம்ஸங்கள் போல இருந்தன.  தேவ சைன்யத்தினரின் கொடிகளும் அதே போல வெண்ணிறமானவை.  சுவர்க நதியில் பெருகி வரும் நீரில் விழுந்த மலர்ந்த மல்லிகை போன்றே, வான வெளியில் மிதந்தன.  

தேவ சைன்யத்தின் மகா கஜங்கள், நூற்றுக் கணக்கானவை, முன் ஒரு சமயம் இந்திரன்  இறக்கைகளுடன் இருந்த மலைகளின் இறக்கைகளை வெட்டியதும், அவைகள்  விழுந்ததையும் நினைவுறுத்தின.  பெரிய ரதங்கள், ரத ராஜா எனபடும் விசாலமான ரதங்கள், அதில் பூட்டியிருந்த குதிரைகள் விழவும் தாங்களும் இழுத்துச் செல்லப் பட்டன.  சாரதிகள் இன்றி ஓடிக் கொண்டிருந்த ரதங்கள் பூமியில் நதி ப்ரவாகத்தில் அடித்துச் செல்லப் பட்டன. 

புயல் காற்றில் அகப்பட்டுக் கொண்டவை போல குதிரை வீரர்கள் வழி தடுமாறி தங்கள் ஆயுதங்களை எடுக்க முடியாமல் பூமியில் விழுந்தனர்.  காலாட் படைகள் பற்றி என்ன சொல்ல. அவர்கள் கையில் வைத்திருந்த ஆயுதங்கள் தானே பறந்தன.  காற்றினால் தள்ளிச் செல்லப் பட்டு, வெகு தூரம் சென்றவர்கள், வானத்திலிருந்து பூமியில் விழுந்தனர். 

இந்த நிலையில், ப்ரும்மாவை முன்னிட்ட தேவர்கள்  தைத்ய ராஜனின் முற்றுகையை எதிர் கொள்ள மாட்டாமல் திணறியதைக் கண்ட தேவன் கார்த்திகேயன் பவனாஸ்திரம் என்பதைக் கொண்டு அந்த வாயவ்யம் என்ற அசுரனின் அஸ்திரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தார்.  உடனே சத்யத்துக்கு கட்டுப் பட்டது போல அந்த அசுரனின் ஆயுதம் தன் வேகத்தை இழக்கவும், தேவ சைன்யம் தன் நிலையை அடைந்தது.

அதைக் கண்ட அசுர ராஜன், பெரும் கோபத்துடன் அடுத்த நொடியே தஹனம் என்ற அக்னி மயமான அஸ்திரத்தை பிரயோகித்தான்.  அவன் கோபமே அக்னியாக வெளிப்பட்டது போல.  அந்த அஸ்திரம் கிளப்பிய புகை, கரு நிற  மண்டலங்களாக வானத்தை நிரப்பியது. மழை கால மேகம் போல தோற்றம் ஆனால், வெப்பத்தையும், கருமையான நிறத்தால் ஸூரியனை மறைத்து இருட்டையும் கொண்டு வந்தது போல எங்கும் இருள் பரவியது.  நீல உத்பலம் போலவோ, மழைக் கால மேகம் போலவோ ப்ரபஞ்சமே நீல நிறம் கொண்டதாக ஆயிற்று. 

நீல மேகத்தையும், நிர்மலமான வானத்தையும் கண்டு ராஜ ஹம்ஸங்கள் மகிழ்ந்தன. மழைக்கு முன்னதான குளிர்ந்த சீதோஷ்ணம் அவைகளுக்கு பிடித்தமானது. ஆங்காங்கு இருந்த குளங்களை நோக்கி சென்றன. 

தேவர்களும், சைன்யத்தைச் சேர்ந்தவர்களும் ப்ரளய காலத்தை நினைவுறுத்தும்  அந்த வெப்பத்தில் திணறினர்.  ஜ்வாலையாக, தீயின் பிழம்புகள், மேல் நோக்கி உயர்ந்து உயர்ந்து போவது போல இருக்க, கபிலன்- நிறம் – கரு நீல நிறம், கபிலர்- முனிவர் – போல வான வெளி நீலமாக ஆயிற்று. கண் முன்னால் தீயின் நாக்குகள் காணவே கண்கள் கூசின.  எந்த வித இடையூறும் இன்றி தன் பல கரங்களால் அக்னி தேவன் விஸ்வத்தையே அணைத்துக் கொள்வது போல பரவி, மேகங்கள் போல இருந்த புகை மண்டலங்களும் மேலும் பயங்கரமாக காட்சியளிக்க, தங்கள் வாழ்வு முடிந்து விட்டது போலும் என் உயிரினங்கள் அனைத்தும் மயங்கின.

எந்த வித இடையூறுமின்றி வேகமாக கொழுந்து விட்டு பரவிய தீயின் நாக்குகள் மழை தாரை போல அகிலமெங்கும் பரவி அதனுடன் புகை மண்டலமும் வான மண்டலத்தையே மறைத்தபடி, கரு மேகங்களின் இடையில் பளிச்சிடும் மின்னல் போலவும், இடி போன்ற ஓசையுடனும் இருந்தது. பயத்தால் முகம் வெளிற, தேவ சைன்யத்தினர், சிவ குமாரன், கார்த்திகேயனை சரணடைந்தனர்.  இதற்குள் நிலைமையை கண்டு தானாகவே  கார்த்திகேயன் வருணாஸ்திரம் என்பதை பிரயோகித்து விட்டு,  மென் முறுவலுடன்  தேவர்களை பார்த்து அவர்களை சமாதானம் ஆக செய்து விட்டான். 

நீரின் அதிபதியான வருணனின்  அஸ்திரம் உடனடியாக அந்த தீயின் அதனுடன் எழுந்த புகை மண்டலங்கள் இவைகளை விலக்கி விட்டு தன் கரு மேகங்களால் அண்ட சரா சரங்களையும் குளிர்வித்துக் கொண்டு மூவுலகையும் காத்தது. மலை முகடுகளில் இருந்து வேகமாக விழுந்த மழை நீர் ப்ரவாஹமாக ஓடி புவனமெங்கும் பரவியது.  இயல்பான மின்னல், அதனுடன் கர்ஜித்த  மேகம் இவற்றை தேவ சைன்யம் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.  மாலைகள் போல அடுக்கடுக்காக மேகங்கள் வானத்தில் அலைந்தன. அதனால் இருண்டு விட்டது போல இருந்தாலும், வானத்தில் வருணாஸ்திரத்தின் ப்ரகாசம் ஒளி கூட்டியது.  தொடர்ந்து மழை தாரைகள் பெரும் தூண்கள் போல விழுந்தன.

தைத்ய ராஜன் தாரகனின் கோபம் கார்திகேயனின் மேல் திரும்பியது.  சிதறி ஓடிய தேவ சைன்யத்தை திரும்பக் கூட்டியுதும் அல்லாமல் தன் அஸ்திரங்களை பலனில்லாமல் போகச் செய்தவன் ஈசன் மகனான  அவன் தான்  என்பதால் தன் முழு கவனத்துடன் கார்திகேயனை தாக்க ஆரம்பித்தான்.  சுலபமாக தன் மாயையால் ஜயித்து விடுவோம் என்ற அவனது எண்ணம் நிறைவேற விடாமல் இவன் தடுத்து விட்டானே என்று ஆத்திரப் பட்டான்.  பராஜயம்  தோல்வி என்பதை சகிக்க முடியாத வீரனாக இதுகாறும் மதிக்கப் பட்டவன். 

இதற்குள் தேவ சைன்யம் சுதாகரித்துக் கொண்டு விட்டனர். பின் பலம் கொடுத்த தைரியத்தால்,  தாங்களும் உயர்ந்த அஸ்திரங்களை அசுர சைன்யத்தின் மேல் பிரயோகித்தனர்.  யோக சாதனைகள் செய்வோர், யோக விதிகளை கிரமமாக அனுசரித்து, படிப் படியாக, சம்சார விஷய சுகங்களை விடுவது போல அவர்களும் மனதளவில் பலம் பெற்றவர்கள் போல ஆனார்கள். 

அசுர சக்ரவர்த்தி ஆத்திரத்தில் மதியிழந்தவனாக,  ரதத்திலிருந்து இறங்கி த்ரிபுராரி மகனையே, கார்திகேயனையே குறி வைத்து அடிக்கும் எண்ணத்துடன் பயங்கரமான ஆயுதம் ஏந்தி அவர் இருந்த திக்கில் ஓடினான்.  தன்னை நோக்கி வேகமாக ஓடி வருபவனை ஈசன் மகன், கார்த்திகேயன் தூரத்திலிருந்தே பார்த்து, அவன் புஜ பலத்தையும், கோபத்தால் யுகாந்த அக்னி போல ஜொலித்தவனை ,  தன் சக்தி ஆயுதத்தை எடுத்துக் கொண்டான்.  அந்த நிலையிலும் மலர்ந்த தாமரை போன்ற முகத்தில் சிரிப்பே இருந்தது. அனேக கிரணங்களுடன் கூடிய சக்தி ஆயுதம் பலமாக அசுரேந்திரன் மார்பில் தாக்கியதும்  அவன் வீழ்ந்தான்.             

தேவ சமூகத்தினர் ஆராவாரத்துடன், மகிழ்ச்சியுடன் பெருக்கிய ஆனந்த பாஷ்பமும்,  அசுர கூட்டத்தினரின் சோகத்துடன் கூடிய கண்ணீரும் ஒன்றாக கலந்தன. 

பெரிய மலையின் சிகரம் கல்பாந்த கால வாயுவினால் அடித்து தள்ளப் பட்டது போல கிடந்த அசுரனின் உடலைக் கண்டு, தேவர்கள் இது வரை பட்ட கஷ்டங்களை மறந்தனர்.  இந்திரன் முதல் அனைவரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  

அசுரனின் ப்ரும்மாண்ட சரீரம் விழுந்த வேகம், பூமியை ஆட்டம் காண வைத்து  அதைத் தாங்கி நின்ற சேஷ நாகங்களும் தடுமாறின. சிரமத்துடன் பூமியை சீராக நிலை நிறுத்த முயன்றன.  ஆகாய கங்கையின் ப்ரவாஹம் கற்பக மரங்களும்  பூமாரி பொழிந்தன. அவை கார்த்திகேயனின் தலையில் விழுந்தன. தாரகனின் அம்புகள் மற்றும் பல விதமான அஸ்திரங்களால்  இது வரை மிகுந்த துன்பங்களை அனுபவித்த தேவர்கள் முகம் மலர வெற்றியை ரசித்தனர். 

இந்திரனும் தன் சுவர்க அதிபதி என்ற பதவியைத் திரும்ப பெற்றான்.  உயர் மணிகளால் அலங்கரிக்கப் பட்ட முகுடத்தை அணிவித்தனர்.  மகேஸ்வரனின் மகன்,  தாரகாசுரனை வதைத்து மூவுலகத்தினரையும் பெரும் கஷ்டங்களிலிருந்து விடுவித்து விட்டான் என்று எங்கும் புகழ் பரவியது. இந்திரன் தன் இழந்த பதவியை எந்த வித இடையூறும் இன்றி அடைந்தான். 

இந்த காவியத்திற்கு சஞ்சீவனீ என்ற உரை எழுதிய  ஆசிரியர் தன் பெற்றோர், சகோதரன் இவர்களை நினைவு கூறுகிறார்.  தாயார் சுஹீரா, சிறந்த புத்திமானான, புத்திமான்களின் தலவராக விளங்கியவர் தந்தை ஸ்ரீ லக்ஷ்மணர் என்பவர்,   சகோதர்கள் இருவரும் மகத்தான பண்டிதர்கள்.  1570 ம் ஆண்டு அங்காத்ரி புராண வருஷம், அனங்கனின் திதி, அஜீவ வாரம், சீதா ராம கவி என்ற இதன் ஆசிரியர்,  குமாரனின் சரித்திரத்திற்கு டீகா என்ற உரையை எழுதி முடித்தார்.  கசடற கற்ற பெரியவர்கள், இதை படித்து அனுக்ரஹிக்க வேண்டுகிறேன். இதில் நல்லதை ஏற்று, குறைகளைக் களைந்து இந்த என் முயற்சியை பாராட்ட வேண்டுகின்றேன்.  காவியங்கள்  அதற்கான டீகா- உரையும் சேர்ந்தே ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளன.அந்த முறையில் என் முயற்சியும் சாஹித்யம் என்ற மாலையில் இடம் பெறட்டும்.  

(இதுவரை ஸ்ரீ காளி தாஸரின் குமார சம்பவம் என்ற காவ்யத்தின்  तारकासुर वधम् – தாரகாசுர வதம் என்ற பதினேழாவது அத்யாயம்) 

 உரை எழுதியவர் மஹா மஹோபாத்யாய கோலாசல மல்லினாதா ஸுரி அவர்களின் சஞ்சீவனி வ்யாக்யா 

மகா கவி காளிதாசனின் இந்த காவியத்தின்  தமிழாக்கம்- ஜானகி க்ருஷ்ணன்.


  பின் குறிப்பு-1 – ப்ருது சரித்திரம்

பிருது என்ற அரசனின் சரித்திரம்:- ப்ருது அங்க ராஜ்யத்தில்   அரசனாக  அபிஷேகம் செய்து வைக்கப் பட்டான்.  ஜனங்களும் ஏற்றுக் கொண்டார்கள்.  ப்ருது ராஜ்யத்தை ஏற்றுக் கொண்ட சமயம், நாட்டில், பயங்கர பஞ்சம் வந்தது.  பிரஜைகள், பசி, ஆகாரம் இல்லாமை, முதலியவற்றால் உடல் இளைத்து, அவரிடம் முறையிட்டனர்.

“அரசனே! நாங்கள் பசி கொடுமையால் மிகவும் தவிக்கிறோம். மரத்தின் உள்ளே அக்னி தகிப்பது போல. உங்களை சரணடைகிறோம். எங்களுக்கு உதவும் பதியாக எண்ணி எங்கள் கஷ்டங்களைச் சொல்கிறோம்.முதலில் எங்களுக்கு அன்னம் வேண்டும்.  பசி தாங்கவில்லை. எங்கள் உடலில் உயிர் வர, சக்தியை அளியுங்கள். லோகபாலன் நீங்கள்” என்றனர்.  ப்ருது திகைத்தான். பிரஜைகளின் இந்த நிலையை எப்படி சரி செய்வது? என்று சம்பந்தப் பட்டவர்களிடம் வினவினான்.  கலந்து ஆலோசித்து கையில் வில்லை எடுத்து பூமியை துளைக்க முயன்றான்.  அவன் கை வில்லை பார்த்து  நடு நடுங்கி பூ தேவி துரத்தப் பட்ட மான் போல ஓடினாள்.  அவளை அரசன் துரத்திச் சென்றான்.  அவளைக் கண்டவர்கள் ம்ருத்யுவைக் கண்டது போல பயந்தனர்.  நானா திசைகளிலும் ஓடி யாரும் உதவ முன் வராததால்,  அரசனிடமே முறையிட்டாள். அவளும் தர்மம் அறிந்தவள் தானே. அதனால் “அரசனே உன் ப்ரஜைகளைக் காக்க என்னை அடிக்க வருகிறாய். என் குறையையும் கேள். என்னையும் நீ பாலிக்க வேண்டியவனே” என்றாள்.   நான் என்ன குற்றம் செய்தேன் என்று அடிக்க வருகிறாய்? தீனமான பெண் என்றும் பாராமல் கொல்லத் துணிகிறாய்? உன்னை தர்மம் அறிந்தவன் என்று சொல்கிறார்களே , அதற்கு தகுந்தவன் தானா?  குற்றமே செய்திருந்தாலும், உடனடியாக பெண்களை துன்புறுத்த மாட்டார்கள். தீன வத்ஸலன் என்று பெயர் பெற்றவன், இப்படி செய்யலாமா?  என்ன நினைத்து என்னை துளைக்க முயன்றாய்? என்னை துண்டாக்கி என்ன செய்யப் போகிறாய்? என்னை என்றும் அழியாத நாவம் Navam- படகு, அதன் மேல் விஸ்வம்-உலகம்  நிலைத்திருக்கிறது என்பர்.   மஹா பிரளய நீரின் மேல்   நிலையாக நிறுவப் பட்டிருக்கிறது என்பதை அறியாதவனா?  என்னை அழித்தால்,  உன்னுடன், உன் பிரஜைகளையும் அலை மோதும் நீரில் தான் தள்ளப் போகிறாயா? 

ப்ருது சொன்னான்:  வசுதே! (பூமியின் பல பெயர்களில் ஒன்று )என் சாஸனத்தில் உள்ளவள், என் உத்தரவை மீறுபவர்களை தண்டிப்பது என்ற முறையில் உன்னை தண்டிக்க வந்தேன்.  பூ லோக உயிரினங்களுக்கு உணவைத் தருவது உன் செயல். வசு- செல்வம் உன்னிடம் தான் இருக்கின்றன. பசுவாக  தினமும் புல்லைத் தின்கிறாய், பால் தருவதில்லை. அதனால் துஷ்டை- அத்து மீறியவள் தண்டனைக்குரியவள்.  ஸ்வயம்பூ, அனைத்து ஔஷதிகளின்  (தாவரங்கள்) விதைகளையும் உன்னிடம் ஒப்படைத்தார். நீ அதை வளர விடாமல் வைத்திருக்கிறாய்.  இதோ பார், இவர்கள் உணவு இல்லாமல் வாடி வதங்கி இருக்கிறார்கள்.  இவர்கள் கஷ்டத்தை போக்க நான் என்ன செய்வேன். அதனால் உன்னிடம் ஒளித்து வைத்திருப்பதை என் பாணங்களால் வெளிக் கொணரப் போகிறேன்.  பெண் என்று சொல்கிறாய். யாராயிருந்தாலும் மற்றவர்களிடம் இரக்கம் இல்லாமல் நடந்து கொண்டால், என் போன்றவர்கள் வதைக்கத்தான் செய்வார்கள். பசு வேடம் போட்டுக் கொண்டு வந்திருக்கிறாய். உன் மாயையை அறிவேன். என் பிரஜைகளை காப்பாற்ற உன்னை துளைத்து எடுக்கப் போகிறேன்.

ஆத்திரத்துடன்  மரண தேவன் போல பேசும் அரசனை விட்டு பூமி பகவானை துதி செய்தாள்.

‘நம: பரஸ்மை புருஷாய ‘ नम:परस्मै पुरुषाय – முதல் தேவனான பரம புருஷனை வணங்குகிறேன் என்று ஆரம்பித்து பலவாறாக துதித்தாள்.  இவ்வாறு பகவானை துதி செய்த பின் பூதேவி, பயம் நீங்காதவளாக  தன்னை சமாளீத்துக் கொண்டு மேலும் ப்ருதுவைப் பார்த்து சொன்னாள்:  உன் கோபத்தை அடக்கிக் கொள்.  நான் சொன்னதை யோசித்துப் பார். தேன் வண்டு போல நல்லதை மட்டுமே எடுத்துக் கொள்வது தான் பெரியோர்களுக்கு அழகு.  இந்த உலகில், அல்லது பரலோகத்தில், தத்வ தரிசிகளான முனிவர்கள்  மனிதர்கள் நன்மை பெற யோகம் என்பதே சிறந்த  வழி என்று சொன்னார்கள்.  முன் சென்றவர்கள் காட்டிய வழி, அதில் தனக்கு பயன்படும் உபாயங்களை கண்டு கொள்ளலாம்.  சிலர் சிரத்தையுடன் தாங்களே  முனைந்து எது நல்லது என்று அறிந்து கொள்கிறார்கள்.  இவைகளைக் கண்டு கொள்ளாமல் தானாக தான்தோன்றித் தனமாக செய்ய ஆரம்பிப்பவர்கள் திரும்பத் திரும்ப ஆரம்பித்து முடிவைக் காணாமல்  பாதியில் நிறுத்தி, நேரமும் பொருளும் நஷ்டமாகும்,

அரசனே! முன் பிரும்மா ஔஷதிகள் (பச்சிலையுடைய செடி கொடிகள்) உணவிற்காக ஏற்படுத்தினார். அதை சில மூடர்கள் முறையின்றி பயன் படுத்தி அழித்தார்கள். நான் அதை பார்த்தேன்.  அனாவசியமாக திருடப் படுகிறது, முக்கியமான சில செடி கொடிகள், விளை பொருள்கள், யாக காரியத்தில் முக்கியமாக கருதப் படுபவை,  உங்களைப் போன்ற லோக பாலகர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அரசர்கள் கண்டு கொள்ளவேயில்லை.  காலப் போக்கில் அந்த விதைகள் க்ஷீணமடைந்து விட்டன. பல நாட்களாக நானும் அதை காக்கவே முயன்று வந்துள்ளேன். நீயே பார்.  எனக்கு ஒரு கன்றைக் கொடு. கன்றிடம் வாத்ஸல்யம் உடைய பசு நான். நான் பாலாக உன் தேவைகளைத் தருகிறேன். அனுரூபமான தோஹனம்- கறந்த பாலை வைக்கத் தகுந்த பாத்திரம்.  அதையும் கொடு.   கறப்பவனாக பகவானே இருக்கட்டும்.  பூவுலகில் அடைக்கலம் தருபவனாக விளங்கும் பகவான் விரும்பினால், வேண்டிய அளவு அன்னம், கறந்து கொள்.   தேவர்கள் மழை பொழியாமல் விட்டாலும் என்னிடம் நீர் இருக்கவேண்டும். தண்ணீர் தங்க வேண்டுமானால் நிலம் சமமாக இருக்க வேண்டும்.  . அதனால் நிலத்தை சமமாக்கு.  அதற்கு சமமாக என்னிடம் பாலையும் பெறுவாய். 

அரசனும் அவ்வாறே ஸ்வாயம்புவ  மனுவை கன்றாக வைத்து,  தன் கைகளாலேயே கறந்து ஔஷதிகள்- தாவரங்கள், செடி கொடிகள் முதலியவைகளைப் பெற்றான்.  நிலத்தை சமன் செய்து, தண்ணீரையும் பெருமளவில் தங்கச் செய்து  செடி கொடிகளையும், தாவரங்களையும் வளரச் செய்தான் என்பது உட்பொருள் தன் கைகளே பாத்திரமாக, -தன் புஜ வலிமையே மூல தனமான பூமியை வளப்படுத்தினான். 

மற்றும் சில அறிஞர்கள்,  ப்ருது கறந்து கொண்டபின் , தங்களுக்கு வேண்டிய அளவு கறந்து கொண்டார்கள்.   

தன் தந்தை வேனின் அராஜகமான  ராஜ்யத்தில் வேத பரமான யாகங்கள் எதுவும் செய்ய முடியாமல் இருந்ததை  இதன் பின் தொடர்ந்தனர். இந்திரன் தலைமையில் தேவர்கள், ப்ரஹ்லாதன் தலைமையில் தைத்யர்கள், 

சித்தர்கள்   சித்திகளை, வான சாஸ்திர வித்தைகளை,யக்ஷ ராக்ஷஸர்கள் பூதங்களை, 

மாயாவிகள், அந்தர்தானம், அத்புதம், இவைகளை செய்து காட்டும் அறிவை ,

பசுக்கள்,காளையுடன் புல்லை, பாம்புகள் சர்ப்பங்கள், நாகங்கள்,   விஷத்தை, ம்ருகேந்திரன் அரண்ய மிருகங்களை, மாமிசம் உண்ணும் ப்ராணிகள், மாமிசத்திற்கு ஏற்றவைகளை, பறவைகள் அசையும் அசையா பொருட்களுடன் சராசரத்தை,  மலைகள் ஹிமவானை கன்றாக வைத்து,  பலவிதமான தாதுக்கள் தங்கள் மலைச் சாரல்களில் பெற்றன. 

இவ்வாறு ஒருவருவரும், தாங்கள் உயர்வாக எண்ணுவதை வைத்து, தங்களில் ஒருவரின் தலைமையில் சகல விருப்பங்களையும் தரும் பூதேவியின் அருளால் பெற்றனர். இதனால் மகிழ்ந்த ப்ருது அரசன்,  அன்புடன் பூதேயை தன் மகளாக ஏற்றுக் கொண்டான்.  அவள் சொன்னபடியே முடிந்தவரை மேடு பள்ளங்களை சீராக்கி தண்ணீர் தேங்கும்படி குளங்களை வெட்டி,  கிராமங்களை, சற்று பெரிய நகரங்களை நிர்மாணித்தான். கோட்டைகளை, தானியங்கள் சேகரிக்கும் இடங்கள், கோசாலைகள், வ்ரஜ எனும் கால் நடைகளை வளர்க்கும் இடங்கள், போர் வீரர்களுக்கான கூடாரங்கள், வேட்டையாடுபவர்களுக்கான கேடம்(खेट्म्) என்ற இடங்கள்,  வியாபாரிகளுக்கான தனி இடங்கள்,  முதலியவற்றை நிர்மாணித்தான்.  இது வரை இது போல பொதுமக்கள் நலத்துக்கான இடங்கள் இருந்திருக்கவில்லை என்பதால் ப்ருது முதல் அரசன் புரம்- நகரம் என்பதை நிர்மாணித்தான்.  மக்கள் பயமின்றி வாழ்ந்தனர்.

பின் குறிப்பு-2 கின்னர,காந்தர்வர்கள் யாவர்?

வரிசைக் கிரமமாக படைப்புத் தொழில்.  முதலில் ப்ரஜாபதிகள் என்வர்கள் உலகில் உயிரினங்கள் தோன்றக் காரணமானவர்கள்.  ஒவ்வொரு யுகத்துக்கும் ஒருவர் மனு என்று தலைமை ஏற்பார்.   தேவர்கள், ரிஷிகள், பித்ருக்கள் என்பவர்களை பிரும்மா தானே  படைத்தார். அதன் பின்   , சித்த சாரணர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர்கள்,என்று பல ரூபங்கள்.  கின்னர, அப்சர, நாக, ஸ்ர்ப்பம், கிம்புருஷ என்ற வகையினர், ராக்ஷஸர்கள், பிசாச, ப்ரேத,பூதங்கள் என்றும் பசுக்கள், பக்ஷிகள், மரங்கள், மலைகள் ஊர்வன , நிலம் நீர் இரண்டிலும் வாழ்பவை, நிலம்,ஆகாயம் இரண்டிலும் வாழ்பவை என்று பலவிதமாக உயிரினங்கள்.

 தேவ, மனித, அசுரர்கள்  என்றாலும் ஒவ்வொருவருக்கும் தனித் தனியான நடையுடை பாவனைகள், உணவு முதலிய பழக்க வழக்கங்கள்.  இந்த பகவான் தான் தர்ம ரூபம். உலகை நிலை நிறுத்தி, உலகில், கால் நடைகள்,மனிதன், தேவர்கள் இவர்களை காக்கிறான்.  பின், காலாக்னி என்ற ரூபத்தில் தானே ஸ்ருஷ்டி செய்த இந்த உலகை காலத்தால்  காற்று, மேகத்தை கலைப்பது போல கலைத்து விடுகிறான். 

இது தான் பகவானின்  இயல்பு.

பின் குறிப்பு-3 

 பாகவதம் என்ற நூல். பூ கோளம் என்பதைப் பற்றி விரிவாக விளக்குகிறது. பிரளயத்திற்கு பிறகு மீண்டும் மூவுலகங்களும் அண்ட சரா சரங்களும் புதியனவாக தோன்றுமாம். தண்ணீரில் மூழ்கி  சற்றே சாய்த்து வைக்கப் பட்டமுட்டை வடிவத்தில் கோளமான  உருண்டை வடிவமாக கிடக்கும். அதை விழாமல் காக்க சக்கரத்தின் அச்சு போல இமய மலையை உருவாக்கினயதாக சொல்லப் படுகிறது. நீண்ட விளக்கம்.   

பின் குறிப்பு-4 வராக அவதாரம்

ஒரு யுகத்தில் மனு தன் மகனை அழைத்து அரசாளச் சொன்னார். ‘ இப்பொழுது பூமியின் நாயகன்.  குற்றம் குறையின்றி நியாயமாக ஆட்சி செய். மனப்பூர்வமாக உன்னை ஆசிர்வதிக்கிறேன். முதல் கடமை உன் சந்ததி வளரட்டும். அது தான் மிகப் பெரிய சக்தி.  அவர்களை உனக்கு சமமான குணவான்களாக தயார் செய். பூமியை தர்மமே பிரதானமாக ஆட்சி செய். யாக காரியங்களால் பரம புருஷனான ஸ்ரீ ஹரியை ஆராதித்து வா. இது தான் எனக்கு நீ செய்யும் மிகப் பெரிய கைங்கர்யம் என்றார்.  

கட்டளையிடுங்கள், பகவான் விருப்பப் படியே செய்கிறேன். எங்களுக்கு வசிக்க இடம் வேண்டுமே. பூமி அனைத்து ஜீவராசிகளுக்கும் இருப்பிடமாக இருந்து வந்தது. இப்பொழுது நீரில் மூழ்கி விட்டதே. அதை எப்படி வெளிக் கொணர்வேன்? என்றார் மகன்.

அவரும் பூமியை எப்படி வெளிக் கொணர்வோம் என்று சிந்தித்தார்.  நான் தேவ அசுரர்களை படைக்கும் வேலையில் மும்முரமாக இருந்த சமயம் பெருகிய ஜலத்தில் மூழ்கி பூமி ரஸாதளம் சென்று விட்டாள். நான் என்ன செய்வேன்? பகவான் தான் வழி காட்ட வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே அவரது நாசியில் இருந்து, கட்டை விரல் அளவு சிறிய வராகம் ஒன்று வெளி வந்தது. பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, அந்தரத்தில் இருந்த அந்த வராகம், யானை அளவு வளர்ந்தது.  அத்புதமான காட்சி.மரீசி முதலிய ரிஷிகள், குமாரர்கள், இவர்களுடன் மனுவும், அந்த பன்றி ரூபத்தைப் பார்த்து தங்களுக்குள் என்னவாக இருக்கும் என்று பேசிக் கோண்டனர்.  ப்ரும்மாவும், அஹோ, என்ன இது? என் நாசியிலிருந்து வந்தது, அடுத்த க்ஷணத்தில் பெரிய மலை போல நிற்கிறது, பகவனே தானோ, யக்ஞ ரூபனான ஸ்ரீ ஹரியே, என் வருத்தத்தை உணர்ந்து வந்திருக்கிறார் போலும் என்று வியந்தார். இப்படி தன் பிள்ளைகளுடன் வியந்து அவர் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, பெரிய கர்ஜனை கேட்டது. மலையரசன் போல ஓங்கி வளர்ந்து நின்ற அந்த உருவமும், கர்ஜனையும்  அவரையும், அவர் பிள்ளைகளையும், மற்றும் அங்கு கூடியிருந்த மரீசி முதலான , ரிஷி முனிவர்களையும் ஆறுதல் அடையச் செய்தது..   வேதத்தை முழுமையாக அத்யயனம் செய்து அதன் படியே வாழ்க்கையை நடத்தும் ஞானிகள்,  அவர்களின் எதிர் பார்ப்பை  நியாயப் படுத்துவது போல, யக்ஞ புருஷன் -यज्ञपुरुषन्- யாகமே உருவான பன்றியாக வந்த பகவான் கடலில் குதித்தான்.  

உயர தூக்கிய வால், வலிமையான உடல், நீண்ட கூர்மையான ரோமங்கள் அடர்ந்த முதுகு பாகம், அதிவெண்மையான பள பளக்கும் பற்கள், பகவான் தன் அழகிய சுய ரூபத்தை மறைத்துக் கொண்டு ஒரு மிருகமாக, ரிஷிகளின் துதிகளை கேட்டபடி, ஒரே தாவலில் ஆகாயத்தை அடைந்து பயனித்தார்.  தன் மூக்கினால் நுகர்ந்து பூமியை தேடுவது போல, இருந்தது. தடாலென்று கடலில்  விழுந்த வேகத்தில் சமுத்திரம் அலறியது. என் மடியில் ஏராளமான ஜீவராசிகள் தவிக்கின்றன. இது என்ன என்று ஆர்பரித்த தன் அலைகளால் கேட்பது போல இருந்தது. யக்ஞேஸ்வரா,(யாகங்களின் நாயகனே) காப்பாற்று என்று அலறுவது போல. 

தன் குளம்புகளால் நீரைக் கிழித்து உட் புகுந்த வராகம் பூமியைக் கண்டவுடன், தன் கூரான பற்களால் பூமியை தூக்கிக் கொண்டு நீரை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கையில் பயங்கர கோபத்துடன் சிங்கம் போல கர்ஜித்துக் கொண்டு தாக்க வந்த ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனை தாக்கி கொன்றார்.  தமால புஷ்பம் போன்ற நீல வண்ணன், வெண்மையான பல் நுனியில் பூமியை அனாயாசமக ஒரு யானை விளையாடுவது போல தூக்கிக் கொண்டு வருவதை பார்த்தவர்கள், வாழ்த்துப் பாடல்களை பாடியபடி அவரை எதிர்கொள்ள வந்தனர்.

பின் குறிப்பு -5 வாமன அவதாரம்

நான் ஒருவரை தேர்ந்தெடுத்து அனுக்ரஹம் செய்ய நினைத்தால், முதலில்  தன் ஐஸ்வர்யங்களை எண்ணி அவன் மனதில் உள்ள அகங்காரத்தை நீக்குவேன்.  இவன் குரு சபித்த பொழுது கூட தான் கொடுத்த வாக்கை மீற மாட்டேன் என்று உறுதியாக இருந்தான்.  நான் என்னை வெளிப்படையாக காட்டிக் கொள்ளாமல் தர்ம உபதேசம் செய்தேன்.  அதன் பின்னும் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. அதனால் இவனுக்கு அமரர்களுக்கு கூட கிடைக்க முடியாத ஸ்தானம் அளிக்கப் போகிறேன். இந்த யுக முடிவில் இவன் இந்திரனாவான்.  அதுவரை இவன் சுதலத்தில், விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்ட நகரில், அங்கு ஆதி வியாதிகள் இருக்காது. உடல் வருத்தமோ, தந்திரங்களோ-(சோம்பலோ) , அவமானமோ, இராது. என் பராமரிப்பில் இருப்பதால், அங்குள்ளோர் நிரந்தரமாக உபத்ரவம் இன்றி பயமின்றி இருப்பர்.

தானே, பலி சக்ரவர்த்தியைப் பார்த்து, இந்த்ரசேன, மஹாராஜா, எழுந்திரு.  உன் உறவினர்கள் பந்து ஜனங்களோடு, சுதலம் செல்வாய். அந்த இடம் ஸ்வர்க வாசிகள் கூட விரும்பும் இடம் . யாரும் இடையூறாக இருக்க மாட்டாட்கள்.  உன் சாஸனத்தை எவரேனும் மீறினால் என் சக்கரத்தால் தண்டிப்பேன். எப்பொழுதும் என் கவனத்தில் இருப்பாய், உன்னை ரக்ஷிப்பது என் பொறுப்பு.  எப்பொழுதும் நான் அருகில் இருப்பதாக உணர்வாய்.  அசுர குலத்தில் பிறந்தவன் அதன் பாதிப்பு இருந்தாலும், என் அருகாமையும், என் ஈடுபாடும் அந்த குல குணத்திலிருந்து உன்னை விடுவிக்கும்.

(குமார சம்பவம் தொடர் முற்றியது)



குமார சம்பவம் - மஹா காவ்யம்

குமார சம்பவம் மஹா காவ்யம்- 16

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “குமார சம்பவம் மஹா காவ்யம்- 17”

Leave a Reply to SPRCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.