இந்தப் பொருண்மை உலகம் என்பது, பொருள், தகவல், சக்தி இவற்றிற்கு இடையே நடைபெறும் நுட்பம் மற்றும் சிக்கலான நடனத்தால் அடையாளம் காணப்படுகிறது. உயிரியலின், புதிய வானத்தில், மைடோகாண்ட்ரியாவிற்கு (Mitochondria) உயிருள்ளது என்ற சிந்தனை, ஒளிரும் தாரகையாக, பல புதிய படிப்பினைகளைத் தரும் ஒன்றாக வலம் வருகிறது.
ஆமாம், மைடோகாண்ட்ரியா என்பது என்ன?

- யூகார்யோடிக்கில் (Eukaryotic) சக்தி பிறப்பது இந்த முதல் தளத்தில் தான்.
- உயிர் அணுக்களின் உயிராற்றல், வளர் சிதை (Metabolism) மாற்றங்களுக்கான அடிப்படைக் கூறுகள், கால்சிய (Calcium) சத்தினை முறைப்படுத்துதல், நோய் எதிர்பாற்றலிற்கான (immunity) சமிக்ஞைகள் எல்லாம் மைடோகாண்ட்ரியா தயவே.
- சமீபத்திய ஆய்வுகளின்படி இந்த மைடோகாண்ட்ரியா ஒரு முக்கிய செய்திகளைச் சேமிக்கும் கிடங்காக இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறது. நாம் இரண்டாம் தலைமைக்கு மனிதர்களைத் தயார் செய்வது போல் இது இயற்கை செய்யும் முன்னெடுப்பு.
- மைடோகாண்ட்ரியாவை அறிந்து கொள்வது, நமக்கு ஏற்படும் நரம்பு அழற்சி நோய், தொடரும் நுரையீரல் அடைப்பு போன்ற பிணிகளிலிருந்து விடுபடுவதற்கு உதவும் மருத்துவ முறைகளில் பயனாகிறது. திசுக்களின் அழிவு அல்லது சேதம், வயதாவது போன்றவற்றையும் இது குணப்படுத்துகிறது. அதாவது, மூலக்கூறுகளை இலக்கெனக் கொண்டு, ‘மைடோகாண்ட்ரியா பாதைகளில் தென்படும் சுகவீனங்களைக் குணப்படுத்தும் மருத்துவத்தில்’ இது முதன்மை வாய்ந்தது.
சற்று விரிவாகப் பார்ப்போம்.
முன்னொரு காலத்தில் நடந்த ஒரு கூட்டுச்சேர்க்கையின் எச்சங்கள் என்று நம் உடலின் உயிரணுக்களைச் சொல்கிறார்கள்.
‘மைடோசிங் உயிரணுக்களின் தோற்றம்’ (Origin of Mitiosing cells) என்று ஒரு அறிவியல் அறிக்கையை 1967ல் அமெரிக்காவைச் சேர்ந்த பரிணாம உயிரியலாளரான (Evolution biologist) லின் மார்குலிஸ் (Lynn Margulis) வெளியிட்டார். அது நகைப்பிற்குரியதானது. 12 இதழ்கள் அதை வெளியிட மறுத்துவிட்டன. அப்படி என்னதான் சொன்னார் அவர்? ஒன்றரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு யூகார்யோடிக் அணு, உயிர்வாயுவை பயன்படுத்தும் ஒரு பாக்டீரியாவுடன் (Prokaryotes) கூட்டு சேர்ந்தது; இரண்டுமே ஒன்றையொன்று அழிக்க முனையவில்லை; மாறாக, விருந்தாளியான பாக்டீரியாவிற்குத் தேவையான சத்துக்களையும், பாதுகாப்பையும், யூகார்யோடிக் அணு வழங்க, சக்தியை தன் பங்கிற்கு பாக்டீரியா வழங்கியிருக்கிறது. இந்தக் கூட்டமைப்பை, எதிர்கால வளர்ச்சிக்கான வித்து என்று மார்குலிஸ் சொன்னார். பல உயிரிகள் கிளைப்பதற்கும், இன்றைய மைடோகாண்ட்ரியாக்கள் உருவாவதற்கும், பச்சையத்திற்கும் இது காரணி என்று அவர் சொன்னார்.
இவரது இந்தக் கோட்பாடு கேலி செய்யப்பட்டது, நிராகரிக்கப்பட்டது. பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்டது. காரணம் எளிமையானது. – ஜவ்வின் அமைப்பும், மைடோகாண்ட்ரியாவின் உள்ளிருக்கும் மூலக்கூறு இயந்திரமும், கிட்டத்தட்ட இன்றும் நடப்பிலுள்ள பாக்டீரியாவை ஒத்து இருப்பதை உயிரியலாளர்கள் அறிந்தனர். இன்றைய பல உயிரியலாளர்கள், இந்த மைடோகாண்ட்ரியா, சவ்வு சார் உறுப்பு மட்டுமில்லை, உயிரற்ற என்டோப்ளாஸ்மிக் ரெடிகுலம் (Endoplasmic Reticulum) அல்லது கோல்கி கலம் (Golgi Apparatus) போன்றது என்று சொல்கிறார்கள். என்டோப்ளாஸ்மா (Endoplasma) என்பது உட்புறத்தில் குருதி அணுக்களை ஏந்திச்செல்லும் ஒன்று; ரெடிகுலம் என்பது, புரதங்கள் மற்றும் பிற மூலக்கூறுகளைக் கொண்டு செல்ல உதவும் அமைப்பினுள்ளே அமைந்திருக்கும் சவ்வுகளின் வலைப்பின்னல் எனப் புரிந்து கொள்ளலாம். அப்படியென்றால் இந்த கோல்கி கலம் தான் என்ன? இது, உயிரணு உறுப்பு, செல்லின் மற்ற பகுதிகளில் பயன்படுத்துவதற்கானப் புரதங்களைத் தயார் செய்கிறது. வேலைகளை பகுப்பது உயிர் தோன்றிய காலத்திலிருந்து இருந்து வருகிறது போலும்! சற்று முன்னர் மைடோகாண்ட்ரியா, உறுப்பினைப் போல என்று பார்த்தோம். இப்போதோ, உறுப்பின் உயிர் வகையென அவை கருதப்படுகின்றன.

பல்லுயிர்கள் தோன்றுவதும், அவை சூழலுக்கு ஏற்ப தம்மை தகவமைத்துக் கொள்வதும், அந்த முதல் சேர்க்கையால் ஏற்பட்டுள்ளது. புதுவித இரசாயன சேர்க்கைகள், பல பரிமாணங்களில் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளன. மைடோகாண்ட்ரியாவை உயிர்கூறு எனச் சொல்வது சிலருக்கு அதீதமாகப்படுகிறது. அதை சவ்வுத் திரள் எனக் குறிப்பதும், உயிர் என்பதும் விவாதத்திற்குரிய ஒன்றா என்பதே அனாவசியமான கேள்வி. இதன் வரைமுறையை நாம் சரியாகப் புரிந்து கொள்ளாவிடில், உயிரியல் அமைப்புகளை புரிந்து கொள்வது எப்படி, அவற்றை நாம் அறிய உதவும் கருவிகளை உண்டாக்குவது எப்படி, மைடோகாண்ட்ரியாவின் முழுப் பயன்பாட்டையும் பெறுவதுதான் எப்படி?
உயிரியல், அறிவியல் என்ற கோட்பாட்டில் வந்த காலம் முதலே ‘வாழ்வு’ என்பது என்ன என்பதற்கான பல வரைமுறைகளும் வந்துவிட்டன. ஒன்றையொன்று மீதூறும், ஆனால் தனித்ததான விளக்கங்கள் சொல்லப்படுகின்றன. மூலக்கூறு உயிரியலாளர்கள் சில பண்புகளைச் சொல்லி, இவையெல்லாமிருந்தால் அது ‘வாழ்க்கை; என்று சொல்கிறார்கள்- வளர்சிதை மாற்றம், வளர்ச்சி, முன்னேற்றம், தூண்டுதலுக்கான எதிர் வினைகள், இன விருத்தி, தகவல்களை அலசி ஆராய்தல் என்று அந்தப் பட்டியல் நீள்கிறது.
உயிர் இயற்பியலாளர்களோ, சற்றுக் கடுமையான வரைமுறையைச் சொல்கிறார்கள். எர்வின் ஷ்ரோடிஞ்சர், (Erwin Schrodinger) இல்யா பைகோஹின்(Ilya Prigogine) போன்றோர் ‘சிதறல்’ அல்லது ‘உலைதி’ (Entropy) மூலம் வாழ்வைச் சொல்கிறார்கள். அதாவது, அகிலத்தில் ஆற்றலானது சிதறி உலைந்து கொண்டே இருக்கையில், வாழும் உயிரிகள் ஒழுங்கினைக் கடைபிடிக்கின்றன. இதைக் கொண்டு வாழ்வு என்பதை விளக்க முடியும் என்பது அவர்கள் கூற்று. மிகச் சீராக, தொலைதூரஅமைப்புகளை நிலை நிறுத்துவதற்காக, வாழும் அமைப்புகள், சம நிலையிலிருந்து கொண்டு, தொடர்ந்து பொருளையும், ஆற்றலையும் தங்கள் சூழல்களில் பரிவர்த்தனை செய்து கொண்டிருக்கின்றன. உயிரணுக்கள், குறைந்த உலைதி உள்ள பொருட்களை எடுத்துக் கொண்டு(உணவு, கதிரொளி) அதிகச் சிதறல் உள்ள கழிவு போன்ற பொருட்களை வெளியேற்றுகின்றன.
எதை நீங்கள் வரைமுறையென ஏற்றுக் கொண்டாலும், ஒன்று மட்டும் தெளிவாக நினைவில் இருக்க வேண்டும்- மைடோகாண்ட்ரியா உயிரோடு இருக்கிறது. உயிரணுவின் மையக்கரு மூலக்கூறுகளிலிருந்து (Nucleus Molecules) வேறுபாடு கொண்டுள்ள, தமதே தமதான மரபணுக்களை, தங்களது லுமன்களில்(நீருள்ள உட்பகுதி வெளி-Lumens)) மைடோகாண்ட்ரியாக்கள் செலுத்துகின்றன. பாக்டீரியாவைப் போலவே, தங்களை இரட்டைப் பிளவு (Binary Fission) செய்து கொண்டு பிரதிகள் எடுக்கின்றன. அனைத்து உயிரியலாளர்களும் பாக்டீரியாவை உயிருள்ள ஒன்று என ஒத்துக் கொள்ளும் போது, ஏன் மைடோகாண்ட்ரியாவிற்கு மட்டும் ஓரவஞ்சனை?
மைடோகாண்ட்ரியா, தங்கள் விருந்தாளரான உயிரணுவிலிருந்து குறைந்த உலைதல் உள்ள பொருட்களான க்ளுகோஸ், கொழுப்பு திரவங்களை எடுத்துக் கொண்டு, அதிக என்ட்ரோபியான கரியமிலவாயு, நீர் போன்றவற்றைத் தரும் என்று வெப்ப இயக்கவியல்(Thermo dynamics) சொல்கிறது. தனது உட்புற சவ்விலிருந்து ப்ரோடானை வெளியிடுகிறது. அதன்மூலம் சம நிலைக்கு வெளியே வெப்ப இயக்க சமனை நிலைநிறுத்தி, அதன் சாய்வளவைக் (Gradient) கொண்டு, உயிரணுக்கள், தங்களின் செயல்பாடுகளான டி என் எ(DNA) பிரதிசெய்தல், புரதங்களின் தொகுப்பு போன்றவைகளைச் செய்ய உதவும் ஏடிபி (ATP) மூலக்கூறுகளை உற்பத்தி செய்கிறது.
மூலக்கூறு உயிரியலாளர்களின் பார்வையில் மைடோகாண்ட்ரியா வெறும் ஆற்றல் உற்பத்தியாளர் மட்டுமல்ல, ஒரு மனித உயிரணு போல அதுவும் செய்திகளைப் படிக்கிறது, சூழலில் வினை புரிகிறது. அது ஸ்டெராய்ட் உட்சுரப்பிகளை,(Steroid Harmones) ஆக்ஸினேற்ற அழுத்தத்தை, (Oxidative Stress- நிலையற்ற மூலக்கூறுகளை நடுநிலையாக்கப் போதுமான உயிர்வாயு ஏற்றம் இல்லாத நிலையில் ஏற்படும் அழுத்தம்) ஏடிபி நிலவரத்தை, இரண்டாம் வளர்சிதை மாற்றிகளை, உயிராதாரப் பொருளான நிறமற்றகூழ் எனப்படும் சைடோப்ளாச (Cytoplasam) சூழலில் மிதந்து செல்லும் மேலும் பல மூலக்கூறுகளை கண்காணிக்கிறது. இந்தத் தகவல்களைக் கொண்டு உயிரணு செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது. ஒரு தொற்று, செல்லை ஆக்ரமிக்கப்பார்த்தால், அதைக் கண்டுபிடித்து, ஆக்ரமிக்கும் அயலான் மேலும் பரவுவதைத் தடுக்க, அந்த செல்லைத் தானே அழியுமாறு கட்டளையிடுகிறது.
மைடோகாண்ட்ரியா, வளர்வதும், பிறப்பிப்பதும் அது சார்ந்த உயிரணுவிலிருந்து மாறுபட்ட ஒன்று. அதாவது அது சுயமாகச் செயல்படுகிறது. மைடோகாண்ட்ரியா டி என் எ (Mitochondria DNA) என்று சொல்லப்படும் வட்ட மரபணுக்களை (Circular genomes) தனியாகவே பிரதி எடுத்து அதை இரட்டைப் பிளவின் மூலம் பெருக்குகிறது. இது செல்களின் பிரதியெடுப்பை ஒத்து இல்லை என்று ஆய்வுகள் சொல்கின்றன. மனித மரபணுக்கள் மாறுபாடு கொள்ளும் வேகத்தை விட இது 100-1000 மடங்கு அதி வேகம் எனச் சொல்கிறார்கள். இந்த மாறுபாட்டு வேகமானது, மைடோகாண்ட்ரியா தன்னை பலப்படுத்துவதற்கும், அதன் மூலம் தன்னை ஆதரிக்கும் செல்லின் பலத்திற்கும் காரணியாகிறது. இந்த விதத்தில், பரிணாமத்தின் முகவர்களாக, அதன் அங்கமாக இது இருக்கிறது.
இத்தனை சிறப்புகள் இருந்தும், மைடோகாண்ட்ரியா உயிருள்ளது என்பதை ஏன் ஏற்க மறுக்கிறார்கள்? அதை ஆதரிக்கும் உயிரணுவின் சைடோப்ளாசத்தில் உட்பொதிந்து இருந்துதான் அது செயலாற்றுகிறது- எனவே, அதற்கு சார்பு நிலைதானே உள்ளது? இந்த தர்க்கத்தை நாம் ஏற்றுக் கொண்டால், பல உயிரிகளை, உயிர்கள் என்றே சொல்ல முடியாமல் போய்விடும். தன் சூழலிலிருந்து தனித்து நிற்பவை என எந்த உயிரியுமில்லை என்றே உயிரியல் சொல்கிறதல்லவா?
மனித உயிர் மற்றொரு மனித உயிரில் முளைக்கரு என ஆகி, கருப்பையில் வளர்ந்து பத்து மாதங்களுக்குப் பிறகு குழந்தை எனப் பிறக்கிறது. மைடோகாண்ட்ரியா மட்டுமல்ல, மேலும் பலதும் மற்ற உயிரணுக்களில் இருக்கின்றன. ரிக்கெட்சியா (Rickettsiae) என்ற நுண்ணுயிர், உண்ணி, பேன், பூச்சி போன்ற சிற்றுயிர்களின் உயிரணு சைடோப்ளாசத்தில் காணக்கிடைக்கிறது. ஹோலோஸ்போரோ எஸ் பி பி ( Holospora spp.) என்ற நுண்ணுயிர், எதிரியின் மையக்கருவில் வாழ்கிறது. பல உயிரினங்கள் பல அடுக்குகளில், உயிர் அமைப்புகளில், சூழல் அமைப்புகளில் பொதியப்பட்டுத்தான் வளர்ச்சி அடைந்திருக்கின்றன.
உயிரி என்பது, உயிர்மண்டலத்தில் தன்னிச்சையாக, நிச்சயமாக நாம் கொள்ளும் வரைமுறைக்கு உட்பட்டு இருப்பது என்று சொல்வது தர்க்கத்திற்கு ஒத்து வருவதில்லை. ஒவ்வொரு உயிரினமும் இந்த அகிலத்தில் வளர்ந்து, தகவமைத்துக் கொண்டு நிலைக்கின்றன. இந்தப் பண்பைத்தான் உயிரிகள் மேற்கொள்ளும் சிறந்த பயன்பாடு (Effective Niche) என்று சொல்கிறோம். அது தன் அமைப்பிற்குள்ளிருந்தும், மற்றொரு உயிர் அமைப்பிலிருந்தும் வாழும் தன்மையைக் கொண்டுள்ளது. ஒரு பயன்பாட்டைக் கொண்டு ஒரு உயிரினம் வளர்ந்தது என்று சொல்லும் போது அது மற்றொன்றில் வாழாது எனக் கருதக்கூடாது. இந்த இடத்தில் ஒரு சுவையான செய்தியைப் பார்க்கலாம், தன் தோள்பட்டையிலிருந்து ஒரு தோல் செல்லை எடுத்து அதை ஆய்வகத்தில் ஸ்டெம் செல்லாக மாற்றி, அதை ந்யூரானாக்கி எடுத்து ஆராய்ந்தார் பிலிப்ஸ் பால் என்ற உயிரியலாளர் மூளை உறுப்புக்களை ஒத்த அமைப்புகளுடன் ‘ஆர்கனாய்ட்ஸ்’ கிடைத்தன. (ராயல் நிறுவன உரை) உயிர்கூறு என்பதன் சாத்தியங்கள், நாம் அறிந்திருப்பதைவிட மிக அதிகம் என்பதை உணரலாம்.

பலவகை பூஞ்சைகளின் உயிராதாரப் பொருளில், வாழும் நுண்ணியிரை செயற்கை முறையில், ஜூரிச் ஆய்வகத்தில் செலுத்தி அதன் விளைவை ஆராய்ந்தார்கள். அதாவது கூட்டுச் சேர்க்கையால் என்ன பாதிப்பு உண்டாகிறது எனப் பார்ப்பது நோக்கம். இதனால், அந்த பாக்டீரியா வாழாத உயிரியாக மாறவில்லை.
இதைப் போலத்தான் மைடோகாண்ட்ரியா, தன் ஆதரவாளரான உயிரணுவின் உயிராற்றலை பயன்பாட்டில் சார்ந்திருந்தாலும், அதனுடன் மட்டுமே பிணைக்கப்படுவதில்லை. பல செல்களுக்கிடையே இவை பயணம் செய்கின்றன. பல உயிரினங்கள் பல் வேறு மைடோகாண்ட்ரியா கொண்டிருந்தாலும், ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மைடோகாண்ட்ரியாவை மாற்ற முடியும் என பரிசோதனைகள் நிரூபிக்கின்றன.
சிம்பன்சி மற்றும் கொரில்லாக் குரங்களிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மைடோகாண்ட்ரியாவைக் கொண்டு 1997ல் விஞ்ஞானிகள், இந்த மைடோகாண்ட்ரியா இயல்பிலேயே உட்பொருந்தி, மனித செல்களில் இணைக்கப்பட்டது என செய்முறையில் காட்டினார்கள். மேலும், வெளியில் இருந்து பெறப்படும் மைடோகாண்ட்ரியா தண்டுவடக் காயத்தையும், இதயச் செயலிழப்பையும் நேர் செய்கிறது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மைடோகாண்ட்ரியா அதிக சாத்தியங்கள் உள்ளது என்பது ஒப்புக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
பல்லுயிர்களும், யூகார்யோடிக்களும் எத்தகைய சிக்கலான உயிரமைப்பின் மூலம் அமைந்துள்ளன என்பதை அறிய மார்குலிசின் ஆய்வு வழிகாட்டியது. அதைப் போலவே, நாமும் மைடோகாண்ட்ரியாவை அறிந்து கொண்டோம் என்றால், சில பிடிவாத பழங்கருத்துக்கள் இல்லாமலாகும்.
20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆல்பர்ட் ஐன்ஸ்டெனும், க்ளாட் ஷேனும், பொருள், தகவல், ஆற்றல் என்ற மூன்று தூண்களை உடையது உலகம் என்று சொன்னார்கள். ஃப்ரன்ஸ் க்ரிக், ஜேம்ஸ் வாட்சன் டி என் ஏவின் இரட்டைச் சுருளை கண்டுபிடித்து அறிமுகம் செய்த போது, பொருளையும், தகவலையும் நாம் அறிந்து கொண்டு அதைக் கட்டுப்பாடிற்குள் எவ்வாறு கொண்டு வருவது என்றும் புரிந்து கொண்டோம். தொடர்ந்த 70 ஆண்டுகளில், சக்தியுள்ள வழிமுறைகள், கருவிகள் கொண்டு, மரபணுவை அறிதல், செல்களுக்குள் தகவல் எப்படிப் பயணிக்கிறது, க்ரிஸ்பர் அடிப்படையில் பாதிப்புள்ள அணு நீக்கம் போன்றவைகளில் முன்னேறி வருகிறோம். ஆயினும், உயிராற்றலை அறிந்து கொள்ளவும், அதைக் கையாளவும் தேவையான கருவிகள் இன்னமும் நம்மிடமில்லை. மைடோகாண்ட்ரியாவைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும், உயிராற்றலை மேம்படுத்தவும் வழிமுறைகள், கருவிகள் தேவை. கோடானுகோடி ஆண்டுகள் ஆன பிறகும் மைடோகாண்ட்ரியா, உயிரணுவில் முக்கிய பங்கு வகிக்கிறது; அவை அகற்றப்படவுமில்லை, பயனற்றுப் போகவுமில்லை. மனிதன் வளர வளர மைடோகாண்ட்ரியா அவனுக்கு ஆயுளையும், உடல் நிலையையும் நல்கி வருகிறது. செயல் பிறழ்ச்சி மைடோகாண்ட்ரியாவில் ஏற்பட்டால், நீரிழிவு நோய், உடல் பருமன், ஸ்கிளீரோசிஸ், வயது சார்ந்த நோய்கள், பார்கின்சன், அல்ஸைமர் ஏற்படுகின்றன என அறிவியல் சொல்கிறது. இத்தகைய பாதிப்புகள் உள்ள நோயாளிகளை பரிசோதித்ததில், மைடோகாண்ட்ரியா சரிவர இயங்காதது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அவை செல்களுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுப்பதில்லை, உள் தகவல் தொடர்பிலும் குழப்பங்கள் ஏற்படுகின்றன. நோயுற்ற மைடோகாண்ட்ரியா, நச்சுக் கூட்டுப் பொருளை உண்டாக்கி, அணுவை அழித்து விடுகிறது. உயிராற்றல் வளம் பெற, வாழ் நாள் நீடிக்க, நம்முடைய உயிரணுக்களும், மற்ற உயிரினங்கள் தரக்கூடிய, ஒளிச்சேர்க்கையைப் போல பிறவற்றையும் நம் மைடோகாண்ட்ரியாக்கள் பெறும் வண்ணம் உயிரியல் கருவிகளைக் கண்டடைய வேண்டும். காலம் கடந்து நிற்கும் இந்தக் கூட்டினைத் தழுவிக் கொள்வோமே?
பாரதத்தில், மந்திரம் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. மந்திரம் என்பது அர்ச்சிப்பது மட்டுமல்ல, அது ஜெபிப்பது, அதாவது உருவேற்றித் திரு ஏறுவதாகும். பீஜம், சக்தி, கீலகம் என்ற மூன்றும் நிறைந்ததை மந்திரம் என்று சொல்கிறோம். பீஜம் என்பது விதை- அதில் அடங்கியுள்ள ஒன்று, சக்தியினால் பலம் பெற்று, திறமையான ஒருங்கிணைப்பால், (இது கீலகம்) வளர்கிறது. ஓம் ஐம் பீஜம் என்று சொல்லி வலது தோளையும், ஓம் ஹ்ரீம் சக்தி என்று இடது தோளையும் தொட்டுவிட்டு, க்ரோம் கீலகம் என்று நடுவில் தொடுவார்கள்.
சிவ சகஸ்ர நாமத்தில் ‘த்ரிககுதே மந்த்ராய நம:’ என்பது பீஜம், ஷக்தி, கீலகத்தைக் குறிப்பது மட்டுமல்ல, வாழ்க்கை மரத்தின் ஒருங்கமைவைக் காட்டுவதுமாகும்.
உசாவி: Liyam Chitayat. “Mitochondria Are Alive” Asimov Press (2024). DOI: https://doi.org/10.62211/38pe-75hu
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
