பிபேக் தேபராய் (விவேக் தேவராய் Bibek Derbroy-1955-2024) என்ற பொருளாதார அறிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர், லிமெரிக் கவிதைகள் எழுதுபவர், இந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி மறைந்தார்.

‘(Requiem) ‘கோரிக்கை’ என்ற இந்தியன் எக்ஸ்ப்ரஸ் பத்தியில், தன்னைத்தானே உள்விசாரணை செய்யும் விதத்தில், அவர் கடைசியாக எழுதியது வாழ்வின் நிதர்சனம், இயற்கையின் இயக்கம், தத்துவ விசாரங்களைத் தொட்டுச் செல்லும் ஒன்று. அவர் எழுதுகிறார் “முன்னர், யயாதி, புலனின்பத்திற்காகத்தான் இளமையைக் கேட்டான் என நினைத்தேன். இப்போது தோன்றுகிறது- தன் உடலைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் ஏக்கம் அது. ஜனகரிடம் அஷ்டவக்ரர் சொல்கிறார் ‘அரசே, உன் மனதை உன் உடலிலிருந்து பிரித்தால் தான் கொஞ்சமாவது உண்மை புலப்படும்.’ சொல்வதற்கு எளிய ஒன்று, செயலில் எவ்வளவு கடினம்.” அவர் ஏதோ ஒரு விதத்தில் தன் முடிவு நெருங்குவதை அறிந்திருந்தார் எனத் தோன்றுகிறது.
அவருடன் பொருளாதார ஆலோசனைக் குழுவில் பணியாற்றிய சஞ்சீவ் சன்யால் சொல்கிறார்:
“அவரது ஞாபக சக்தி அபாரமானது. நான் ஒரு செயல்முறை சீர்திருத்தம் குறித்து பணியாற்றும் போது, இதைப் பற்றி பழைய வரைமுறைகளில் என்ன சொல்லியிருக்கிறது, அது எந்த உபப்பிரிவு, என்று உடனடியாகச் சொல்லி அதைப்படித்துவிட்டு, பொருந்தும் வண்ணம் இதைச் சீர்திருத்துங்கள் என்று சொன்னார். 30 ஆண்டுகளுக்கு முன் நடந்த திட்டக் குழு தேதியாகட்டும், 1980ல் வெளிவந்த சில மாநில பொருளாதார அறிக்கையாகட்டும், எதுவுமே அவரது நினைவிலிருந்து அருவி போல் பொங்கிப் பிரவகிக்கும்.”
பல முக்கிய பதவிகளில் இருந்திருக்கிறார்; கோகலே அரசியல் மற்றும் பொருளாதார நிறுவனம், பூனா, துணை வேந்தராக, ராஜீவ் காந்தி சமகாலப் படிப்புத் துறைகளின் இயக்குனராக, ‘லார்ஜ் என்ற செயல் திட்டத்தின் இயக்குனராக இருந்தவர். இந்த ‘லார்ஜ்’ என்பது ‘பொருளாதாரத்தை உலகமயமாக்குவதற்கான சட்ட சீர்திருத்தங்கள்’ என்பதாகும். நிதி அமைச்சகத்தின் ‘அம்ருத் கால்’ பிரிவான ‘கட்டமைப்பிற்கான நிதி சீரமைப்புகள்’ குழுவின் தலைவராக மிகச் சமீபத்தில் பணிசெய்தார்.
அவர் மாற்றங்களை விரும்பியவர். காலத்திற்கேற்ற சட்ட திருத்தங்கள், பொருளாதாக் கொள்கை மாற்றங்கள், மேக்ரோ நிலையில் அரசு செய்ய வேண்டியவை என்னென்ன எனத் தெளிவாகக் சொன்னவர். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை -மூன்று.
- ஒன்று இந்திய இறையாண்மை சட்டத்தை மாற்றி வரைதல்.
- இரண்டாவது பயிர்த் தொழில் வருமானத்திற்கு வரி விதிப்பது.
- மூன்றாவது ‘பொருள் மற்றும் சேவை வரி விதிப்பில் ஒரே வரி விகிதம்.
- முதல் எண்ணத்தை ஆளும் கட்சி வரவேற்றால், எதிர்க்கட்சிகள் மறுதளிக்கும். அவரது நோக்கம் இன்றைய இந்தியாவின் எதிர்பார்ப்புகளை, சமூக- அரசியல் நிலவரங்களைக் கணக்கில் கொள்ளும் சட்டத் திருத்தம்.
- இரண்டாவதோ, அரசியல் ஓட்டு வங்கியைப் பாதிக்கும். பெரும் அரசியல்வாதிகளிடத்தில் பயிர் நிலக் கொத்துக்கள் அவர்கள் பெயரிலும், பினாமி பெயரிலும் இருக்கும் நிலையில் ‘விவசாய வருமானத்திற்கு வரி’ என்பதை ஏற்றுக் கொள்வார்களா என்ன? நிலமற்ற அல்லது கையகல நிலமே உள்ள விவசாயிகளைத் தூண்டிவிட்டு, பெரும் விவசாயிகள் பலன் அடைந்து விடுவார்கள். சமச்சீரான வளர்ச்சி என்பது, ஒரு நாட்டின் அனைத்துத் துறைகளுமே, அந்த நாட்டின் முன்னேற்றத்திற்குப் பங்களிப்பது என்பதைத் திண்ணமாக நம்பினார்,
- பொருள் மற்றும் சேவைக்கான ஒற்றை வரி விகிதம், எளிமையாக இருக்கும், பயன்படுத்துவதில் சிக்கல் இல்லாமல் இருக்கும், வரியும் விரைவாகத் திரட்டப்படும், நிதித்துறை சீர்திருத்தங்கள் காலத்திற்கேற்றவாறு நடைபெறவில்லை என்றால், அந்தச் சீர்திருத்தத்தால் என்ன பயன் எனக் கேட்டார்
அவர். எவருக்கும் அஞ்சாமல் தன் கருத்தைச் சொல்லி வந்தார். இவைகள் வெறும் பரிந்துரைகளில்லை. எளிமை, சமச்சீர் வளர்ச்சி இவைகளுக்கான பொருளாதார மார்க்கங்கள்.
பொருளாதார சுதந்திரம் பற்றிய அவரின் ஆய்வு முன்னோடியான ஒன்று. அரசின் கொள்கைகள், எவ்வாறு வளர்ச்சிக்கோ, தேக்கத்திற்கோ, வீழ்ச்சிக்கோ காரணமாகின்றன என்பதை 2004ம் வருடத்திய, குஜராத் அரசு பற்றிய அவரது பகுப்பாய்வுகள் எடுத்துக் காட்டின. அப்போது அந்த மாநிலம் வளர்ச்சிப்பாதையில் நடை பயிலத் தொடங்கியிருந்தது. பரவலாக்கப்பட்ட அதிகாரம், வணிகத்திற்கான சூழலமைப்பு, இரண்டும் அந்த மா நிலத்தின் முன்னேறத்திற்கும், மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும், உதவின என்பதை அவர் தகுந்த ஆதாரங்களோடு எடுத்துச் சொன்னார். இன்றுவரை அந்த ஆய்வறிக்கை ஒரு உசாவியாக, திட்ட இயக்கங்களுக்கு உதவுகிறது.
மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர் எனவும் போற்றப்படுகிறார் இவர். வடமொழியிலும் ஆங்கிலத்திலும் நல்ல புலமை அவருக்கு இருந்தது. 18 புராணங்களையும் ஆங்கிலத்தில் கொண்டு வர ஆசை கொண்டிருந்தார். விரிவான மஹா பாரதம், இராமாயணம், பகவத் கீதை, ஹரிவம்சம், பாகவத புராணம், மார்க்கண்டேய புராணம், ப்ரும்ம புராணம், விஷ்ணு புராணம், சிவ புராணம், ப்ரும்மாண்ட புராணம் அனைத்தையும் அற்புதமாக மொழியாக்கம் செய்து ஆங்கில வாசகரிடத்தில் இந்தியாவின் இதிகாசப் புராணங்களைக் கொண்டு சேர்த்தார். விரிவாகவும், விளக்கமாகவும் எழுதப்பட்ட மூலங்களை அவ்வாறே மொழியாக்கம் செய்வது எளிதல்ல. செயலூக்கம், படைப்பூக்கம் மிக்க மனிதராக இருந்தார்,
இளம் எழுத்தாளர்களை சிறப்பாக அறிமுகப்படுத்தி ஊக்குவித்தார். வாதாபி போர் பற்றி முப்பாகமாக எழுதிய இளம் எழுத்தாளர், தன்னுடைய முதல் தொகுப்பின் சுருக்கத்தை அனுப்பி, நம்பிக்கையற்று காத்திருந்தார். உடனே பதில் எழுதியது மட்டுமின்றி, முழு நூலையும் அனுப்பச் சொல்லி படித்து அதில் சிற்சில ஆலோசனைகளையும் சொல்லி போற்றுதலுக்குரிய வாசகங்களையும் எழுதி அவரைக் கௌரவித்தார். அது மட்டுமல்ல, மீதி இரண்டு பாகங்களையும் முன்னுரையுடன் வெளியிட்டார். கோவிட் காலத்திலும் கூட நேரலையில் நூல்களை வெளியிட்டு இனிய சூழல்களை, நட்பைப் பேணி, தீ நுண்மியின் தாக்கம் படைப்பூக்கத்தைக் குறைக்காமல் பார்த்துக் கொண்டார்.
அபிநவ் அகர்வால் சொல்கிறார்: ‘அவருடன் தொடர்பில் இருப்பவரையும், புதிதாக இணைபவரையும் அவரால் நேர்மையாக அணுக முடிந்தது. நான் ஆர்வக் கோளாறில் எழுதிய ஒரு த்ரில்லர் நாவலை அவருக்கு அனுப்பினேன். அதன் போதாமைகளை அவர் சுட்டிக் காட்டினார். முதலில் ஏமாற்றமாகவும், மன உளைச்சலாகவும் உணர்ந்தேன். பின்னர் அந்தக் குறைகள் புலப்பட்டன. நான் சிறப்பாக எழுத அவர் தான் வழி காட்டினார். மஹாபாரதத்திலிருந்து எடுத்து நான் எழுதிய ‘உப கதைகளை’ அவர் பெரிதும் இரசித்துப் பாராட்டினார்.’
தொன்மையான இதிகாச, புராணங்களை மொழியாக்கம் செய்த அவர் தான், காலத்திற்கேற்ற பொருளாதார மாற்றங்களின் தேவையைப் பற்றி எழுதினார். வேதங்களை ஆங்கில மொழியாக்கம் செய்தவர் தான், இந்திய இறையாண்மை சட்டங்களை சீர்த்திருத்த வேண்டிய அவசியத்தைச் சொன்னார். பொருளாதார சுதந்திரம், எளிய சட்ட திட்டங்கள் கொண்ட உள்நாட்டு, வெளிநாட்டு வாணிக வர்த்தகத்தை முன்னெடுத்துப் பேசிய அவர்தான், குறிப்பிட்ட விவசாய வருமானத்திற்கு மேலே வருமானம் பெரும் விவசாயிகளும் வரி செலுத்த வேண்டும் என்ற நிதிக் கொள்கையைச் சொன்னார்.
தெளிந்த சிந்தனை, துணிவு, தொலை நோக்கு கொண்ட அவருக்கு இதய பூர்வ அஞ்சலி.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “பிபேக் தேபராய் (1955-2024)”