உதிர்வெனும் தாழாப்பொழுது

எங்கோ இருக்கும்
மகனின்
பரிவு
கிழவியை
அவசர அறையில்
அன்பின் பொருட்டென
கிடத்தி இருக்கிறது.

முரணாச்சரியமாக
சேவைகள் செய்யும்
செவிலியர்கள்
யாவரும்
பிற மதக்காரர்களாக
இருந்தனர்.

அழைத்து வந்த
உறவினப் பெண்ணுக்கு
அந்தப்பக்கம்
விமோசனமடைய
கரிசனப் பார்வைகள்
விழுந்துவிடாதாவென்ற
கவலைகள் இருந்தது.

மருத்துவருக்கு வந்த
வெளிநாட்டு அழைப்பில்
கூடுதல்
கவனம் செய்தார்.
பணப் பரிவர்த்தனைகளுக்கு
பஞ்சமில்லாத
இந்த
உடல்நிலைப் பாடில்
கிழவி தான்
எதையும்
புரியத் தயாராக இல்லை.

வைரம் பாய்ந்த
முன்னனுபவ
மனிதர்கள்
விடுமுறை சொல்லி
விசா வாங்கி
வீட்டிற்கு வர
ஏற்பாடுகள் செய்வதென
யோசிக்கும்போதே.
மகனை
பணத்தை
அனுப்பிவிடு என்று
ஆலோசனைகள் சொன்னார்கள்.

இதுபோன்றதொரு
அசாதாரண
சூழலில்
வனப்பு கூடிய
வாழ்க்கையின்
இளமையை
எதிர்த்துப் போராட.
கிழவி
இந்த வாழ்க்கையும்
பிள்ளையும்
போதுமென
பொட்டு வைக்கவே
மறுத்துவிட்டாள்.

கடைசி மூச்சு
இருக்கும்வரை
வைராக்கியப் போக்கில்
கிழவி
கைபேசியின்
காணொளியை
கண்ணு தெரியல
காண முடியாதென்று
சொல்லிவிட்டாள்.

பண்டிகையின் விடுமுறையில்
யாருமற்ற
பின்னிரவில்
கிழவி
என் கால்களை
பிடித்து விட்டுக்கொண்டிருந்தார்.
என்னை அமைதிப்படுத்தி தலை கோதினார்.
எழச்சொல்லி
மடியில் சுருண்டு
சொன்னார்.

அவரு மாதிரியே இருப்பான்யா.
அவரைக் கடைசியா பார்க்கணும்ன்னு ஆசைப்பட்டேன் முடியலைய்யா.
உன்னைய
பார்த்ததுல
மன நிறைவா இருக்குய்யா.
நீ எங்க அய்யா மாதிரியே
அப்படியே இருக்கேய்யா என்றார்.
கண்ணீர் தொடையை நனைத்தாலும்
உள்ளம் கரித்தது.

கையிலிருந்த மோதிரத்தை
கழட்டிக்கொடுத்து.
வழி வழியாக
ஆண்
வாரிசுகளை
வாரிக் கொடுத்த மோதிரம்.
மருமகளை மாட்டிக்கச் சொல்லென்று
மனதுருகி கொடுத்தாள்.

என் இரத்தத்தில் எப்படியம்மா
பேதம் பார்ப்பதென்றேன்.
அன்றவர்
ஐயா
சொன்ன
அதே வார்த்தையென
கால் தொட்ட வரை
கட்டயணைத்துக்கொண்டேன்
கிழவியின் வாசனைகள் எனக்குள் சூழ்ந்தது.

நாலு விதமாக பேசும்
உறவினர்கள்
இப்பொழுதும்
கூடிவிட்டார்கள் விடியலைப்பற்றிய பிரக்ஞையற்று.
நாளை மாலை
அவர்கள் வந்துவிடுவார்கள்
நாம எல்லா ஏற்பாடுகளையும்
முடித்து வைத்திருப்போம்
உடனே
எடுத்துவிடலாமென
பேசிக்கொண்டார்கள்.

சிறுவயது போல
தற்போதும்
கிழவி
நூல் சுற்றி இருந்தார்.
மெலிந்ததன்
கழண்டிடாத அன்பிற்கு.
தலைமுறைகள்
தாண்டிய
செப்பு
பொக்கிசத்தை
காசாங்குளத்தில்
வீசிய பொழுது
கண்கள் கலங்கியது.

எனக்குத் தெரிந்த
ஏதாவதொரு உபாயத்தின்
சொற்ப கணங்களில்
துடைத்து
தூர எறியலாம்
கிழவியின்
இயலாமை எண்ணங்களை
வாடிய முகத்தை
பிரகாசிக்க வைப்பதற்கு.

வாரக்கடைசியின்
மகள்
வருகை வரை இருந்துவிட்டு போகட்டுமேயென
குறி பார்த்து
குதித்த இடத்தில்
மீண்டும்
கிடைத்த மோதிரம்
என் திறமையால்
வாய்த்ததல்ல.

அய்யாவாக
இருந்த
நீங்கள்
என்
அப்பாவாக
தெரிகிறீர்களென்று
வாரக் கடைசியில்
வந்த மகள் சொன்ன பொழுது
நான் அழுதுகொண்டிருந்தேன்.
அவரின் உதடுகள்
துடித்துக் கொண்டிருந்தது.

இடையில் கிடந்த
மோதிரத்தை
காக்கை கொத்திச்சென்றதை
நாங்கள்
எச்சலனமற்றும்
வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தோம்.
காக்கை…
காக்கையென
வானத்தில்
அது மறையும்வரை
கத்திக் கொண்டிருந்தார்கள்
பார்த்துக்கொண்டிருந்தவர்கள்
பரபரப்பாக.

சற்றைக்கு முன்பு
என்னிடமிருந்த
கிழவியின்
வாசனை
வருத்தம் தராமல்
வாஞ்சையான மகிழ்வில்
காணாமல் போயிருந்தது.

இப்பொழுதுவரை
எனக்கு
ஆச்சரியமாக இருப்பது.
மருத்துவ மனையின்
அவசர சிகிச்சைப்
பிரிவில்
அற்பக் காரணத்திற்காக
தங்கியது பற்றியதுதான்.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.